குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, September 14, 2008

***** 80.பாரதியின் - கண்ணம்மாவும்,செல்லம்மாவும்

பாரதி என்ற கவிஞனுக்கு அறிமுகங்கள் தேவையில்லை.
தேசியக் கவி என்றும்,மகாகவி என்றும் கொண்டாடப்பட்ட பாரதி 20 ஆம் நூற்றாண்டின் நவகவிதையின் நாயகன்.
தொட்ட எந்த பொருள் பற்றியும் துலங்கும் இனிய கவிதைகளைப் பொழிந்த கவிஞன் அவன்.கம்பனுக்குப் பிறகு சொல்லழகும்,சந்த அழகும் நிரம்பிய கவிதைகள் பாரதியினுடையவை என்றால் அது ஒத்துக்கொள்ளக் கூடியதே.

பாரதியின் காலம் சுதந்திரப் போராட்டக் கனல் கனன்று கொண்டிருந்த காலம்.பாரதியின் கவிதைகள் அந்தக் கனலை மூட்டிப் பெருநெருப்பாக்கின.

அரசின் ஒடுக்கும் பார்வை பாரதியின் மீது விழுந்தது;அவர் பிறந்த பிராமண குலத்தின் பல மௌடீகங்களை வன்மையாக எதிர்த்த பாரதி கவிஞனுக்கேயுரிய கவிதைச் செருக்குடன்தான் வாழ்ந்தார்.

எவரிடமும் சென்று கையேந்தி,சோப்படித்து வளரும் இன்றைய கவியரசுகள் போல இல்லாது தனக்காகவும்,தேசத்துக்காகவும் மட்டும் பாடியவர் பாரதி.

அவரின் கவிதைகளில் குறிப்பிடத்தக்க இனிமை நிரம்பியவை கண்ணன் பாடல்கள்.பாரதி கண்ணன் பாடல்கள் என்று தனித் தொகுதியாக எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டு எழுதவில்லை;மாறாக அவ்வப்போது கண்ணன் மீதான சிந்தனைப் பிரவாகம் எழுந்த போதெல்லாம் எழுதிய்வை பின்னர் தொகுக்கப்பட்டன.

தேசியப் பாடல்களில் தெறிக்கும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஈடாக அன்பும்,காதலும் பொங்கிப் பிரவகிக்கும் பாடல்கள் கண்ணன் பாடல்கள்.

கண்ணனை தன் தந்தையாக,அரசனாக,குழந்தையாக,வேலைக்காரனாக என எல்லா பாத்திரங்களிலும் வரித்தார் பாரதி.
ஆனால் அதிலும் இனிமையும் அழகும் முழுமையடைவது அவரின் நாயக,நாயகி பாவக் கவிதைகளில்தான்.

எடுத்துக்காட்டாக,தீர்த்தக் கரையினிலே,சுட்டும் விழிச் சுடர்தான்,தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி,சின்னஞ்சிறுகிளியே,தூண்டிற்புழுவினைப்போல்,கண்டுவரவேணுமடி,ஆசைமுகம் மறந்துபோச்சே,பாயுமொளி நீஎனக்கு...போன்ற பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை.

இறுதிப்பாடலான ‘கண்ணம்மா எனது குல தெய்வம்- என்ற தலைப்பிலான பாடல் ஒரு சிகரப் பாடல்.

ஒரு கவிஞனின் கவிதைகளில் இந்த அளவு உணர்ச்சிப் பெருக்கு இருக்க வேண்டுமெனில் அவனுக்கு பாடுபொருளின் மீது உள்ள அன்பும் பிரேமையும் அந்த அளவு அழுத்தமானதாக இருக்க வேண்டும்.

இதற்கான சில உறுதி செய்யப்படாத பிண்ணனித் தகவல்களும் சொல்லப் படுகின்றன.

பாரதி வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; ஆனால் அவருடைய தந்தையாரது வற்புறுத்தல் காரணமாகவே செல்லம்மாவைக் கைப்பிடித்தார் என்பது ஒரு வதந்தி.

அந்தப் பெண்ணின் மீது பாரதிக்கு கரைகாணாக் காதல் இருந்தது;அப்பெண்ணையே பாரதி கண்ணம்மாவாக வரித்தார்;கண்ணன் பாடல்களிலும் இந்த கரைகாணாக் காதலே வெளிப்பட்டது. இதன் காரணமாகவே அவரின் கண்ணன் பாடல்களில் நாயகி நாயக பாவங்களில் மட்டும் அவ்வளவு உணர்ச்சி தெறித்திருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

இது உண்மையாக இருக்க முடியுமா? இவ்வாறான முடிவுக்கு வந்துவிட முடியுமா?


இவ்வாறு காதலில் கண்ணம்மாவிடமும்,வாழ்க்கையில் செல்லம்மாவிடமும் வாழ்ந்தாரா பாரதி????

அந்த அளவு லட்சியக் கவிஞனாக வாழ்ந்த பாரதியின் சொந்த வாழ்வு இவ்வாறு ஒரு பிறழ்ந்த வகையில் இருந்திருக்குமா???

இதற்குச் சரியான பதில் பாரதி மீண்டு வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் சூழ்நிலைகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன?

செல்லம்மா இதை எவ்வாறு பார்த்தார்? அல்லது செல்லம்மாவிடம் பாரதிக்கு இப்படி ஒரு மனவுலகில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க முடியுமா?

செல்லம்மா பாரதியுடன் வாழ்ந்த காலத்தில் புற உலகின் வாழ்க்கைத் தேவைகளுக்கு மிகுந்த சிரமப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்தி;ஆனால் பாரதி செல்லம்மாவின் துயரங்களை லட்சியம் செய்யாது வாழ்ந்தாரா?

பின்வரும் செய்திகள் செய்திகளில் விடை கிடைக்கலாம்.

செல்லம்மா வெளியுலகிற்கு வெளிப்பட்டது பாரதி மறைந்த பின்புதான்.பாரதியின் காலத்திற்குப் பிறகு ஒருகட்டத்தில் அவரைப்பற்றி வானொலியில் பேசிய செல்லம்மா இவ்வாறு கூறுகிறார்.

“எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!

என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.

நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்;அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம்,தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரை கடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்து கொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும் அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும், பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப்பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்து கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ,வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இனி மிஞ்ச விடலாமோ? என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஓரு புறம் ஏற்பட்டது. ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ? என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். செல்லம்மா, இங்கே வா என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள் என்றார். 'கரும்பு தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம்.

மறுநாள் அந்தப்பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது.அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப்பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார். “

ஒரு கணவரால் சரியாக நடத்தப்படாத,அன்பு காண்பிக்கப் படாத ஒரு மனைவியின் பேச்சா நாம் மேலே படித்தது??

மேலும் பாரதியின் கவிதைகளை அவருக்குப் பின் பிரசுரிக்க பெரிதும் முயற்சிகள் எடுக்கிறார் செல்லம்மா.இதற்காக பெரிதும் சிரமப்பட்ட செல்லம்மா,பொதுமக்களுக்கு வைக்கும் கோரிக்கை இவ்வாறு போகிறது....


‘‘தமிழ்நாட்டு மக்களே,
நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியும் இல்லை.

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார். நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச்சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும், சண்டைகளும் தீர்மானங்களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதிய கொள்கைகள் _ என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் பெறத் தயாராக இருக்கிறேன்.

அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட்டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன்.

நீங்கள் நீடூழி வாழ்க.

பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தேமாதரம்.’’

இதுதான் செல்லம்மா எழுதிய கடிதம்.

செல்லம்மாவைப் பற்றிக் குறிப்பிடும் பாரதியின் பேத்தி எழுதுகிறார்.

“பாரதி மறைந்த பிறகும் செல்லம்மாவின் போராட்டங்கள் தொடர்ந்தன. தம் கணவரின் எழுத்துகளை நூல்களாக வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு, என் பாட்டி யாரைச் சேர்ந்தது. முப்பத்திரண்டு வயதே நிரம்பிய இளம்பெண், புத்தகப் பிரசுரத் துறையில் சற்றும் அனுபவமோ பயிற்சியோ இல்லாத பெண், நாளைச் சோற்றுக்கு வழி தேடும் வகையறியாத பெண், திருமணம் செய்யக் காத்து நிற்கும் இளைய மகள், தோள்களில் சுமையாக அழுந்தி நிற்க, மைத்துனரையும் சகோதரரையும் நம்பி யிருக்கும் பெண், எல்லாவற்றுக்கும் மேலாகத் தான் விரும்பிய காரியங் களைச் செய்ய முடியாமல் சாதி, சமுதாயத்தின் வற்புறுத்துதலுக்கு அடங்கிப் பணியவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்ட பெண் - செல்லம்மா. .

காலம் செல்லச் செல்ல, செல்லம்மா வெளியுலகத்தைத் தன் கணவரின் நோக்கிலிருந்து பார்க்கத் தொடங்கினாள். தன் கணவர், பெண் மைக்கு வரையறுத்துக் காட்டிய சுதந்திரம், அவளது இலட்சியமாயிற்று.

அசாதாரணமாக தைரியம், நினைத் ததைச் சாதித்து முடிக்கும் திறம், தன் கணவர் அறிவுறுத்திய உயர்ந்த விஷயங் களில் நாட்டம், தெய்வ பக்தி - இவை அவளை வழிநடத்தின. வாழ்க்கையில் அவளுக்கேற்பட்ட சோதனைகள் பல. இந்தச் சோதனைகளையெல்லாம் வென்று புடமிட்ட தங்கமாக வெளி வந்தாள், செல்லம்மா. .

1957-ஆம் ஆண்டு. தம் பிறந்த ஊராகிய கடையத்தில் மரணப் படுக்கையில் தன்னினைவின்றிப் படுத் திருக்கிறார், செல்லம்மா. அந்த அறையில், பெரிய ரேழியில், அவருடைய மூத்த மகள் தங்கம்மா, இளைய மகள் சகுந்தலா, பேத்திகள், பேரன்கள், ஒன்றிரண்டு நண்பர்கள் - எல்லாரும் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

""திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத்
தேசம் போற்றத் தன் மந்திரி யாக்கினான்''.

என்று படுக்கையிலிருந்து மென்மையான பாட்டுச் சத்தம் வருகிறது. பாரதியின் கண்ணன் - என் அரசன் என்ற பாட்டிலிருந்து அடிகள் இந்த இரண்டு வரிகள் ஒரு தடவையல்ல, பல முறைகள் மீண்டும் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன. .
சிறிது நேரம் அமைதி..

""திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான்''

என்று செல்லம்மாவின் வாய் திரும்பப் திரும்பப் பாடுகிறது. .
ஆம்!

அன்னையின் நெஞ்சு நிறைய, இத்தனை காலமாகப் புகுந்து அவரை ஆட்கொண்டு வாழ வைத்தவர், பாரதி. அவர் செய்த காரியங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து, அவருக்கு அறிவுத் தெளிவும், கலங்காத உள்ளமும், எதற்கும் அஞ்சாத துணிவும் கொடுத்துக் கடைசிவரை அவரை வழிநடத்தியவர், பாரதி. .”

பாரதியின் மீது எத்தகைய ஒரு அன்பிருந்தால் செல்லம்மாவின் ஆத்மசக்தி பாரதியின் எழுத்துக்கள் வெளிவர வேண்டும் என்ற தளராத ஆசையுடன் இவ்வாறு செயல்பட்டிருக்க முடியும்!

இப்படி செயல்பட்ட செல்லம்மா,பாரதியின் எத்தகைய அன்பையும் மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும் !

அதனால்தான் பாரதி பாடினான்..

”உன்னைக் கரம் பிடித்தேன்,வாழ்வு ஒளிமயமானதடி
பொன்னை மணந்தனால் சபையில் புகழும் வளர்ந்ததடி”
என...

கண்ணம்மாவின் காதலால் அல்லது கண்ணன் ப்ரேமையால் பாரதியின் சாகா வரம் பெற்ற அமுதப்பாடல்கள் கிடைத்தன;செல்லம்மாவின் காதலால் அவை வெளியுலகிற்கு வந்து நமக்கு படிக்கக் கிடைத்தன....

கண்ணம்மாவும்,செல்லம்மாவும் பாரதியின் இரு கண்களானார்கள்!

Saturday, September 13, 2008

***** 79.நட்சத்திர வாரத்துக்கான ஒரு பருந்துப்பார்வை

நட்சத்திர வாரத்தில் ஒரு மீள்பதிவு போடலாம் என்ற அறிவிக்கப்படாத விதிக்கு ஏதுவாக இந்த ஒரு பதிவு.என்ன ஒரு மீள்பதிவாக இல்லாமல் எனது இதுவரை எழுதிய பதிவுகளில்,எனக்கு திருப்தி அளித்த,அல்லது பரவலாக பாராட்டுப் பெற்ற சில பதிவுகளை அறிமுகப் படுத்தலாம் என விழைவு.

எனவே....அனுபவியுங்கள்,யாரு விட்டா????

1.பதிவுகள் எழுதலாம் என்பது திடீரென்று எடுத்த ஒரு முடிவு.எழுத்துப் பயிற்சி இருந்தாலும்,பதிவுகளின் வசதியும்,தமிழ்மணம் மற்றும் திரட்டி வசதிகளும் ஒரே நேரத்திலேயே அறிமுகம் ஆயின.எனவே முதல் பதிவுக்கென ஏதும் புதிதாக யோசித்து ஆரம்ப அமர்க்களங்கள் செய்து எழுதவில்லை, just like that எழுத ஆரம்பித்தேன்.ஆனால் எழுதிய விதயம் கொஞ்சம் ஆழமானதுதான், 1-நாம் என்ன செய்ய முடியும் ? என்ற தலைப்பில்..

2.சுதந்திர தினத்தன்று எழுதிய ஒரு பதிவு.பதிவிம் அடக்கம் என்னவோ முதல் பதிவின் தொடர்ச்சியே என எண்ணுகிறேன்.. 60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 2

3.இளமையின் நினைவுகள் எப்போதும் அழகானவை.அழகான எல்லாமே மகிழ்வானவை-A thing of Beauty is Joy forever ! எப்போதோ எழுதிய ஒரு கவிதை இந்தப் பதிவில் ! தேவதைகள் மறையும் பொழுது...

4.நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கான மன,மற்றும் சமூகக் காரணிகளை அலசிய இந்த இரு பதிவுகளும் சில நண்பர்களால் பெரிதும் பாராட்டப் பட்டன.
சரத்குமார விஜயகாந்தர்கள்,
சரத்குமார விஜயகாந்தர்கள் 2

5.பாலியல் கலிவியின் தேவை மற்றும் அல்லது பற்றி விவாதித்த இந்த பதிவு வந்த அல்லது அடுத்த வாரத்தில் விகடன் இதழிலும் இதே பொருள் தொடப்பட்டிருந்தது.இது திண்ணை இதழிலும் வந்தது.
^^^ பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை

6.என்னுடைய ஐயாவைக் குறித்து எழுதப்பட்ட இந்தப்பதிவு,எனக்கும் படித்த சிலருக்கும் பெரும் நெகிழ்வை ஏற்படுத்திய ஒன்று.என்னவோ இதை எழுத வேண்டும் எனத் தோன்றியது,இந்தப் பதிவு வெளியிட்ட சில மாதங்களில் அவர் மறைந்தார்... 27-வாழ்க்கை,குடும்பம்,மகவு ??????????

7.ஐடியாளர்களின் பார்வை குறித்த இந்தப்பதிவும் சில நல்ல விவாதங்களை ஏற்படுத்தியது,சில தூற்றல்களையும் கூட... 31- ^^^ ஐடி'யாளர்களின் பார்வை சரியா,தவறா?

8.புதுக்கவிதையையும் ரசிக்கப்பிடிக்கும் நான் ஒரு மரபு நேசன்.நன்றாக வந்திருக்கிறது என்று நான் நம்பும் ஒரு விருத்தம் இது... 37.அந்தக் கணமும் , சில பொழுதுகளும்...

9.தெகா எழுதிய ஒரு பதிவில் சில கருத்துக்கள் சொல்லப் போக,எழுந்த யோகாசனத்தைப் பற்றிய விளக்கப்பதிவு இது. 40.யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும்

10.சில சிறுவயது நினைவுகள் சுவாரசியம் கொண்டுவருபவை,அந்த வகையில் இது பரவலாக ரசிக்கப்பட்ட ஒரு பதிவு. 49.லாம்ப்ரட்டா ஸ்கூட்டரும்,ஆண்கள் வயதுக்கு வருவதும்

11.ஜப்பானின் 5S உற்பத்தி முறைகளைப் பற்றிய அலசிய இதுவும் நான் விரும்பும் பதிவுகளுல் ஒன்று. 58.^^^ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
12.பெ.நா.அப்புஸ்வாமி பற்றி எழுதிய,எனக்குத் திருப்தியளித்த,பலரின் பாராட்டுக்களைப் பெற்ற பதிவு. 59.^^^அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன்

13.தமிழுக்கும் சிவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசும் இப்பதிவு எழுதத் தூண்டிய விதயம் ரவிசங்கரின் பதிவில் ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களே.இது எழுதுவதற்காகவே நான் நிறையப் படிக்க வேண்டியிருந்தது.இன்னும் இந்தத் தொடர் பதிவை நான் முடிக்க இயலவில்லை.ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை இத் தொடர்பதிவு தரும் என நான் நம்புகிறேன். 66.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும் !

மற்றபடி நட்சத்திர வாரம் வந்தால் எழுத வேண்டும் என்றே குறித்து வைத்திருந்த பல தலைப்புகளில் எழுத இயலாது போயிற்று...காரணம் நேர மேலாண்மையில் ஏற்பட்ட சிக்கல்கள்.நட்சத்திர வாரம் தொடங்கிய நாள் அன்று பணி நிமித்தம் நான் அயல்நாட்டில் இருந்தேன்,அன்று நடு இரவுதான் சிங்கப்பூருக்கு வந்தேன்,தொடர்ந்த அவசர அலுவல்கள் காரணமாக நட்சட்திரமாக எழுத எண்ணியிருந்த பல விதயங்கள் எழுத இயலவில்லை..எனினும் அவை குறித்து சமயம் கிடைக்கும் போது எழுதுவேன்.

அவசரமாகத் தயாரித்த இன்னும் மூன்று தலைப்புகளில் பதிவுகள் முக்கால் வாசி முடிந்து நிற்கின்றன;இயன்றால் அடுத்த நட்சத்திரம் மேடையைப் பிடிக்கும் முன் நாளை அவற்றை அரங்கேற்ற முயற்சிக்கிறேன்.

ஒரு நல்ல வாசிப்பை அளிக்க வேண்டும் என்றெண்ணிய எனது முயற்சி,என் விழைவுக்கேற்ற வகையில் நிறைவேறாதது எனக்கு வருத்தமே..மற்றபடி வாய்ப்புக்கு தமிழ்மணத்திற்கும்,வாசித்த அனைவருக்கும் நன்றி !

***** 78.மறுபாலின நட்பும்,கார்த்திக் பட கிளைமாக்ஸும்

சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகுமார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்,அது அவரின் பள்ளித் தோழர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி.

அவருடன் எட்டாம் வகுப்பிலோ அதற்கும் கீழான வகுப்பிலோ படித்தவர்கள் சிலர் தொலைக்காட்சியில் தலை காட்டினார்கள்.அவர்களில் சில பெண்களும் அடக்கம்.சொல்லத்தேவையன்றி அவைவருன் அவர்களின் இறுதி 50 களின் வயதில் இருந்தார்கள்.

ஆயினும் அவர்களிடையே பெண்களுக்கு நடிகர் சிவகுமாருடன் பேசுவதற்கும்,அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் மிகவும் சங்கோஜப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

இத்தனைக்கும் சிவகுமார் ஒன்றும் இன்றைய கனவுக் கதாநாயகன் அல்ல;மேலும் அவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் பள்ளித் தோழர்கள்,எனினும் இவ்வளவு மனத்தடை அவர்களுக்கு இருக்கிறது,இந்த 2008 லும்.

இதே காட்சியை இன்றைய ஒரு கல்லூரிக்கோ அல்லது மெரீனா கடற்கரைக்கோ எடுத்துச் செல்லுங்கள்;இளைஞர்களும்,இளைஞிகளும் உல்லாசமாகப் பேசி சிரித்து விளையாடுவதைப் பார்க்கலாம்.

60 களில் இருந்த ஆண்,பெண்களுக்கிடையேயான மனத்தடைகள் இப்போது இல்லை-கல்லூரி அளவில்.

இதே மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று,திருமணம் ஆனபின் வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போது இந்த் நட்பும்,அன்பும் உரிமையும் அவர்களிடையே இருக்கிறதா???

60 களை ஒப்பிடும் போது நிச்சயமாக முன்னேற்ற மாறுதல் இருக்கத்தான் செய்கிறது;மறுக்க முடியாது.ஆனால் இந்த நட்பு திருமணத்திற்கு முன்னர் இருந்தது போல இரு பாலரிடமும்,திருமணத்திற்குப் பின்னர் நிலவுகிறதா?

அவர்கள் குறைந்தபட்சம் தினமோ அல்லது வாரம் ஒருமுறையோ தொலைபேசிக் கொள்வதாவது நடக்கிறதா?

சரி,அவர்கள் குடும்ப நண்பர்களாக நீடிக்கிறார்களா?

ஆய்வுக்குரிய ஒன்று !


நிச்சயம் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்க வாய்ப்பிருக்கிறது;இரண்டாம் நிலை நகர்கள் மற்றும் கிராமங்களில் ?????

வெளிநாடுகளில் நெடுங்காலமாக பணியின் பொருட்டோ,தொழிலின் பொருட்டோ தங்கும் நம் மக்களுக்கு இந்த விதமான எண்ணப்பாடுகள் இருக்கின்றனவா என்ற சிந்தனையில் எனக்குப் போதுமான மறுமொழி கிடைக்கவில்லை.ஏனெனின் வெளிநாட்களில் நமக்கு ஒரு சமூகச் சுற்றம் ஏற்படுவதற்கு சுமார் 5 வ்ருடங்களோ அல்லது அதற்கு மேலுமோ ஆகலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் பருவம் பெரும்பாலும் இளமைப்பருவம் முடிந்து 30 களின் துவக்கத்தில் அல்லது 20 களின் இறுதியில் தான் அமைய வாய்ப்பிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் மறுபாலின நட்பு ஏற்படுவதை விட காதல் ஏற்படவோ அல்லது திருமண நோக்கிலான அறிமுகங்களோதான் பெரும்பாலும் சாத்தியம்.

திருமணத்திற்குப் பின்னர் இந்த மாதிரி மறுபாலின நட்பு ஏற்படுவது சாதாரணமாக காணப்படுவதில்லை என்றே நினைக்கிறேன்...

இதற்கான விதி விலக்குகள் உண்டு;சொல்லப் போனால் விதி விலக்குகள் எங்கேயும் உண்டு.(Exceptions are prevalent everywhere at any scenario) என்பது ஒரு தங்க வாக்கியம்!

ஆக,மறு பாலின நட்பு,ஆரோக்கியமாக நிலவும் சூழல் கல்லூரி மற்றும் அது முடியும் காலம் சார்ந்த பருவத்திலேயே முகிழ்ந்து,முதிர சாத்தியம்.

இந்த சிந்தனையின் நீட்சி,இரு விதப்படும்.

இந்த ஆரோக்கிய நட்பு தொடர்ந்து,குடும்ப நட்பாக,அந்தந்த நண்பர்களின் குழந்தைகளுக்கிடையே வரை நிலவும் நட்பாகக் கிளைப்பது ஒன்று.

அவரவரின் திருமணத்திற்குப் பின்னர் சிலகாலம் தேயும் கால இடைவெளிகளில் சில தொலைபேச்சுக்கள்,பின்னர் எப்போதாவது எங்காவது சந்தித்தால் மட்டும் புன்சிரித்து அளவளாவிப் பின் பிரியும் அளவில் நிற்பது ஒன்று.

மூன்றாவது மோசமான ஒன்று-முற்றாக வெட்டப்படுவது,இதற்கு அவரவரின் சோடிகளிடை நிகழும் மனஅழுத்தங்களும் உளவியல் காரணிகளும் முக்கியக் காரணங்கள்.

முதலும் மூன்றாவது நிலையும் முற்றிலும் புரிந்து கொள்ளப்படக் கூடியவை.

பல திரைப்படங்கள் கூட இந்த நிலைகளை விவரித்து வந்து விட்டன.

கார்த்திக்,ரகுவரன்,ரேவதி நடித்து வெளிவந்த ஒரு படம்,பெயர் நினைவில்லை-இரண்டாவது நிலையைத் தொட்டுச்,பின் மூன்றாம் நிலையை எட்டி, பின்னர் முதல் நிலைக்குத் திரும்புவது போல சித்தரிக்கப்பட்டது.

அத்திரைப்படன் சொல்லும் காரணங்களான பரஸ்பர சந்தேகங்கள் தான் இவ்விதமான நல்ல நட்புகளும் சிதையக் காரணமா?

ஆம் எனில்,இவ்வித பூஞ்சையான(fragile) நம்பிக்கையற்ற ஒரு அடித்தளத்தில் தான் நமது திருமண பந்தங்கள் கட்டப்படுகின்றனவா?அல்லது மனிதனின் ஆதிகால பெண்கள் பொருட்டான உடைமை உணர்ச்சி(ownership) தான் இவற்றிற்கான காரணிகளா?

ஆண்களுக்கிடையான ஆண்பாலின நட்புகளோ,நண்பர் வட்டமோ,பெண்களுக்கிடையான் பெண்பாலின நட்பு,நண்பிகள் வட்டமோ திருமணத்திற்குப் பின்னர் பெருமளவு பாதிக்கப் படுவதில்லை;ஆனால் மறுபாலின நட்பு சிறிதோ,பெரிதான அளவிலோ மாறுதல் அடைகிறது,என்பது அனுபவங்களிலேயே கிடைக்கிறது.

நட்பின் மரியாதையையோ,நண்பர்/நண்பிகளை புண்படுத்தக் கூடாது-அதாவது நட்பினால் அவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படலாம் என்ற நோக்கில்-என்ற அளவில் நட்பை முறித்துக் கொள்வதுதான் நல்லாதா?

கார்த்திக் கூட அந்தப்படத்தில் அதைத்தான் செய்வார்.

ஆனால் திரைப்படங்கள் மூன்று மணி நேர முடிவில் ஒரு சுபம் போட வேண்டும் என்பதற்காக,கணவர்கள் மனைவிக்காக அவரது ஆண் நண்பரை மதிப்பதும்,மனைவிகள் கணவருக்காக அவரது பெண் நண்பர்களை ஏற்றுக் கொள்வதும் நடக்கலாம்.(இதில் கூட இரண்டாவது சூழலைத் திரைப்படங்கள் கூட காட்டியதாக நினைவில்லை !)

உண்மை,நடைமுறை வாழ்வு எத்தகைய தீர்வுகளை,கூறுகளை முன்வைக்கிறது ??????

***** 77.கூத்தாட்டு அவைக்குழாம்

கூத்தாட்டு அவைக்குழாம் என்ற சொல் எவ்வளவு அழகான சொல்!
யார் சொன்னார்கள்?
எங்கே?
எதற்காக?

கூத்தாட்டு அவைக்குழாம் என்றால்,கூத்தாட்டு அவையில் இருக்கும் குழு என்பது பொருள்;இது கூத்துக் குழு மற்றும் கூத்துப் பார்க்க வரும் குழு என இரண்டு குழுக்களையும் குறிப்பிடுகிறது.

பார்க்கலாம்.....



நாம் வாழ உலகில் பணம்,செல்வம் எவ்வளவு தேவையானது என்பதெல்லாம் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வள்ளுவமும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றே கூறுகிறது.

நாம் அனைவருமே பணம்,செல்வம் தேடியே ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

எவ்வளவு பணம் இருந்தாலும் இது வாழ்வை வளமாகக் கழிக்கப் போதுமான பணமா அல்லது இன்னும் வேண்டுமா என்ற கேள்வி ஆதாரமானது;இதற்கு நம்மிடம் விடையும் இருக்க முடியாது.

இப்படிப் பணத்தின் பின்னால் ஓடும் நம் வாழ்வில் பணம்,செல்வம் நம்மிடம் எவ்வாறு வருகிறது,நம்மிடம் எவ்வளவு காலம் இருக்கும் என்ற சிந்தனை எல்லாம் நமக்கு எப்போதும் வருவதும் இல்லை.

ராமகிருஷ்ணர் சொன்ன கதையில் வரும் விலைமாதின் வீட்டில் இருந்து கொண்டு சந்நியாசியையே நினைத்துக் கொண்டிருந்தவனும்,அவன் தாசி வீட்டில் இருப்பதையே நினைத்துக் கொண்டிருந்த சந்நியாசி அடைந்த கதியும் நாம் அறிந்ததே...

அந்த தாசி வீட்டு நபரைப் போல,பணம்,செல்வத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நாம் அதனூடையே அதிலிருந்து விலகி வாழும் இயல்பை அடைய முடியமா?

அப்படி வாழும் வாழ்வே ஆனந்த மயமானது;அதைத்தான் விட்டு விலகியிருப்பாய் இந்தச் சிட்டுக் குருவி போலே” என்றான் பாரதி.

எப்படி சாத்தியம்?


பணம்,செல்வம் எப்படி வருகிறது என்ற சிந்தனைக்குள் நாம் போனோமானால் இது சாத்தியம்.

எப்படி?

நாம் சினிமாவுக்குப் போகிறோம்,எப்படிப் போகிறோம்?
சினிமாக் அரங்கத்திற்குப் போகும் போது ஒவ்வொரு நபராக அல்லது ஒன்றிரண்டு நபர்களாகப் போகிறோம்,சினிமா அரங்கம்
நிரம்புகிறது.

சினிமா ஆரம்பித்து முடிந்த பின்னர்,எப்படி வெளியேறுகிறோம்,கூட்டமாகவும்,மொத்தமாகவும்.

செல்வமும் இப்படித்தான்..

வரும் போது சிறிது சிறிதாக வரும்;போகும் போது மொத்தமாகப் போய் விடும்.

எவ்வளவு அழகான உவமை பாருங்கள்...

என்ன,சினிமா அரங்கத்திற்குப் பதில்,கூத்துமேடை !

சிந்தித்தது நானல்ல...வள்ளுவர் !

மேலும் சினிமாவுக்கோ,கூத்து மேடைக்கோ செல்ல அனுமதிக்கும் வழி ஒன்றாகத்தான் இருக்கும்;கூத்து முடிந்து வெளியேறும் வழியோ பல வழிகளிலும் இருக்கும்.

அது போலவே செல்வம் வரும்போது சிறு வழியாக சிறிது சிறிதாக வரும். போகும்போதோ,பல வழிகளிலும் மொத்த மொத்தமாகவும் செல்லும்.

கூத்தோ,நாடகமோ,சினிமாவோ பார்க்கச் செல்லும் மக்கள் மகிழ்வான உற்சாகமான மனநிலையில் செல்வார்கள்;கூத்து முடிந்து திரும்பும்போதோ அயற்சியும்,சோர்வும் நிரம்பிய மனநிலையில் ஓய்வெடுக்க விரும்பி வெளியே ஓடுவோம்.

இதே போல செல்வம் வரும்போது மனதிற்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும்.போகும்போதோ சோர்வையும் அயற்சியையும் விட்டுச் செல்லும்.

எத்தனை அழகிய உவமை !!!!!!

குறள் இதுதான்.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.


போக்கும் என்ற சொல்லில் ஒரு ‘ம்’ விகுதி போட்டிருக்கிறார் பாருங்கள், போக்கு அது விளிந்தற்று என்று சொல்லவில்லை.போக்கும்’ என்கிறார்.

அதாவது போவதும் என்று சொல்வதன் மூலம் செல்வம் வருவதும்’ இருப்பதும்’ அப்படியே கூத்தாட்டத்தில் போது நடிகர்கள்,நாடக சம்பவங்கள் நடக்கும் செயல்களுக்கொப்பானவை என்பது நாயனாரின்(பழைய கேரள முதல்வர் அல்ல !) கூற்று.

கூத்து நடக்கையில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல;பார்க்கும் கதை பொய்,நடிக்கும் பாத்திரங்கள் பொய்,நிகழும் நிகழ்ச்சிகள் பொய்,கூத்து முடிந்த பின் பார்த்தால் வெண் திரை மட்டுமே மிச்சமிருக்கும்.

செல்வமும் வந்து நீங்கிய பின் இருப்பது வெறுமை மட்டுமே....
செல்வத்தின் தோற்றமும்,இருப்பும்,அழிவும் காணல் நீர் போலப் போய்விடுகிறது.

ஆக ஒரு கூத்தைப் பார்த்த வள்ளுவரின் சிந்தனையில் இத்தனை விதயங்களும் தோன்றியிருக்கின்றன.

கூத்தின் தன்மை,நடிகர்கள்,கதை முதலியவர்றில் நிகழ்வு,கூத்து முடிந்த பின் உள்ள வெறுமை ஆகிய அனைத்தையும் செல்வத்திற்கு ஏற்றிய சிந்தனைத்திறன்தான் வியப்படைய வைக்கும் ஒன்று.


இவ்வாறு போகாமல் செல்வம் பயனாக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது இல்லையா?

அதற்கும் இன்னோரிடத்தில் வள்ளுவர் யோசனை சொல்கிறார்.
என்ன என்பதை யாராவது பின்னூட்டத்தில் சொல்வார்கள்-விவாதிக்கலாம் !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...