குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, June 18, 2008

66.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும் !

நண்பர் ரவி அவர்கள் சிவலிங்க வடிவம் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.

அந்த பதிவிற்கான பின்னூட்டங்களில் தமிழுக்கும்,சிவம் என்ற தத்துவத்திற்கும் உள்ள தொடர்பையும்,வடமொழியில் சிவம் என்ற தத்துவம் தோற்றுவாயாய் இல்லை;இயல்பாகப் போற்றப்படவில்லை என்ற குறிப்பும் கொடுக்கப் போக,சில பாராட்டுகளும், சில மறுப்புகளும், பல வாதப் பிரதி வாதங்களும் ஏற்பட்டன.

சிவம் என்ற தத்துவம் தமிழிலேயே போற்றி வளர்க்கப்பட்டது என்பதற்கான தரவுகளும்,இடைக்காலத்தில்,அதாவது கடல்கோளுக்குப் பின்னர் ஏன் தமிழகத்தில் சிவ வழிபாடு,போற்றுதல் இல்லாமல் போனது என்ற கேள்விகளும் எழுந்தன.

பிற்சேர்க்கையாக ருத்ர சாகையில் சிவம் பற்றிய சில மேற்கோள்களும் விளக்கங்களும்,மெய்ஞானம் வடமொழியிலேயே உள்ளது,தமிழில் இல்லை என்ற வாதங்களும் வைக்கப்பட்டன.

இந்த வகை சிவம் என்ற தத்துவம்,அறிவை நோக்கிய ஒரு வாசிப்பும் ஆய்வும் சுவையளிப்பதாகத் தோன்றியதால் விளைந்தது இந்தத் தொடர் பதிவு.
எச்சரிக்கை :( இது இரண்டு மூன்று பகுதிகளாக வர வாய்ப்பிருக்கிறது...

இனி....தமிழும்,சிவமும்,தொடர்பும்,வடமொழியும்,மெய்ஞானமும் இன்னபிறவும்..


இந்த விதயம் இரு தளங்களில் அணுகப்படவேண்டியது.

முதலாக தமிழ் என்ற மொழியின் காலம் என்ன என்பதை சிறிது ஆராய வேண்டும்;இந்த ஆய்வின் கூறுகளே பழந்தமிழ் மொழியில் நிலவிய கடவுள் கொள்கை மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் மற்றும் அறிவைத் தரும்.


தமிழ்,தமிழகம் எங்கிருந்து முகிழ்ந்தது?
தமிழ் என்ற மொழியைப் பற்றியும் தமிழகம் என்ற ஒரு நாட்டினைப் பற்றிய அறிவு வேண்டுமெனின் அந்த நாட்டின் வரலாறு ஆராயப்படவேண்டும்;வரலாற்றின் கூறுகள் நாடு,அதன் மக்கள்,அவர்களில் மொழி மற்றும் அவர்களின் நாகரிகம் ஆகியவை.

நாட்டின் வரலாறு என்பது இரு வகைப்படும்;ஒன்று எழுதப்பட்ட வரலாறு,மற்றது எழுதப்படா வரலாறு.பெரும்பாலும் கிருத்துவின்(Christ) காலத்துக்குப் பிற்பட்ட நாடாயின் பெரும்பாலும் எழுதப்பட்ட வரலாறு கிடைக்கும்;முற்பட்டதாயின் எழுதப்பட்டோ,படாததாகவோ இருக்கும்.

எழுதப்படா வரலாறு மேலும் இரு விதமாக,அறியப்படும் வரலாறு மற்றும் அறியப்படா வரலாறு என இருவிதமாக பகுக்கப்படும்.பழந்தமிழ் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு இருப்பினும் அவை மிகப் பெரும்பாலும் தமிழறிழர்களால் எழுதப்பட்டதை விட கார்டுவெல் பாதிரியார் போன்ற ஆங்கிலேயர்களுக்கிருந்த தமிழார்வத்தால் எழுதப்பட்டவை.அவர்களுக்கு தமிழின் தொன்மை,இயல்புத்தன்மை, nativity பற்றிய தெளிவு இருக்குமா என்பது மேலும் கேள்விக்குரிய ஒன்று.

அதிலும் இந்தியாவில் பலதிறப்பட்ட மக்கள் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள்,ஆண்டிருக்கிறார்கள்.இத்தகைய குடியேறியவர்களின் ஆதிக்கம் நூற்றாண்டுகளுக்கு உச்சத்தில் இருந்ததையும் வரலாறு பார்த்திருக்கிறது.(எடுத்துக்காட்டு முகம்மதியர்கள்,களப்பிரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்).இத்தகையோர் ஆட்சிப் பொறுப்பிலோ அதிகாரத்திலோ இருக்கும் போது அவர்களுக்கு ஆதரவான தரவுகள் வரலாற்றில் இடம் பெறுவது நிகழக்கூடிய தவறே.

எழுதப்பட்ட வரலாற்றில் இந்தவிதக் குழப்பங்கள் நேரும்போது எழுதப்படாத வரலாற்றாராய்ச்சிக்கு உதவும் காரணிகள் இலக்கியம்,வெட்டெழுத்துக்கள்/கல்வெட்டுக்கள்(inscriptions) மற்றும் பழம்பெரும் இலக்கிய/இலக்கண/மொழியியல் நூல்கள் ஆகியவை.பண்டைத்தமிழைப் பொறுத்தவரை தமிழர்கள் மேல் ஆரியக்கலப்பு நிகழ்ந்திருப்பதால் இந்த வித எழுதப்படா வரலாற்றை மேற்கூறிய காரணிகள் துணை கொண்டு ஆராயவேண்டிய நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன.


குமரிக்காண்டம்/லெமூரியா மற்றும் முச் சங்கங்கள்

தமிழ் மற்றும் தமிழனின் பிறந்தகம் எது என்ற கேள்வி ஆதாரமானது.

இது மூழ்கிப்போன,லெமூரியா என்ற குமரிக்கண்டம் என்பது உண்மை.இந்தக் கண்டம் இப்போதைய இந்துமாக்கடல் கொண்டுவிட்ட பரப்பு;இந்தநிலப்பகுதி ஆதிகாலத்தில் இன்றைய ஆஸ்திரேலியா,ஜாவா தீவுகளிலிருந்து இன்றைய ஆப்பிரிக்காவின் பகுதிகள் வரை பரந்த நிலப்பகுதியாக இருந்திருக்கிறது.

இந்த ஆய்வுக்கான சுட்டிகள்,சான்றுகள் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையிலும்,பி.டி.சீனிவாசையங்கார்,சேசையங்கார்,இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எழுதிய வரலாற்று நூல்களாலும் தெளிவாக அறிய வைக்கப் பட்டிருக்கின்றன.

இந்த குமரிக்காண்டத்தில் இன்றைய இமயம் போல ஒரு மலைத் தொடரும் அதன் தென்,வடப் பகுதி எல்லைகளாக இரு பேராறுகளும் இருந்திருக்கின்றன.அவை முறையே பஃருளியாறு மற்றும் குமரி ஆறு ஆகிய இரண்டும்.இந்த ஆற்றங்கரைகளுக்கிடையே இருந்த பெரு நகரே மதுரை.

இந்த மதுரை இன்றைய மதுரை அல்ல;கடல் கொண்டுவிட்ட தென்மதுரை;இந்த நகரே முதல் தமிழ்ச்சங்கம் கண்ட தென் மதுரை.

இறையனார் அகப் பொருளுரை

“தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம்
இரீஇயனார் பாண்டியர்கள்,அவருள் தலைச்சங்கமிருந்தார் தமிழாராய்ந்தது
கடல்கொள்ளப்பட்ட மதுரையென்ப;இடைசங்கமிருந்தார் தமிழாராய்ந்தது
கபாடபுரமென்ப;கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப,அவர் சங்கமிருந்தது உத்தர மதுரை என்ப ”
என்கிறது.இவற்றுள் கடைச்சங்கத்தில் குறிப்பிட்டதே இந்நாள் மதுரை.

மேலும் இந்நூல் குறிப்பிடும் விவரங்கள்

தலைச்சங்கம்

இலக்கியம் : முதுநாரை,முதுகுருகு,புறப்பொருள்
இலக்கணம் : அகத்தியம்
இசை : முறுவல்,சயந்தம்,குணநூல்,செயிற்றியம்
நாடகம் : பரிபாடல்,களரியாவிரை,அபிநயம்,நற்றந்தம்,வாமனம்
இடம் : குமரி நாட்டின் பழைய மதுரை அல்லது தென் மதுரை

இச்சங்கம் 4449 வருடங்கள் இருந்ததெனவும்,இரீயினோ காய்ச்சிய வழுதி முதலாக கடுங்கோனீறாக 89 பாண்டிய மன்னராவர்.சங்க உறுப்பினர் 549.இவர்களில் அகத்தியர்,குமரவேள், நிதியின் கிழவன்,முரஞ்சியூர் முடிநாகராயர்.

இடைச்சங்கம்:

இலக்கியம் : கலி,குரு,வெண்டாளி,வியாழமாலை,மாபுராணம்
இலக்கணம் : அகத்தியம்,ஐந்திரம்,தொல்காப்பியம்
இசை : இசை நுணுக்கம்,பூத புராணம்,அகவுள்
இடம் : லெமூரியாவின் கபாடபுரம்

இச்சங்கம் 3700 வருடங்கள் இருந்ததெனவும்,இரீயினோர் வெண்டூர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னராவர்.சங்க உறுப்பினர் 549.இவர்களில் தொல்காப்பியர்,மோசி,வெள்ளூர்க்காப்பியன்,திரையன்,மாறன்,கீரந்தை என்பவர் சிலர்.

இந்த குமரிக் காண்டமும்,பின்னர் கபாடபுரமும் கடல் கோள்களால் அழிக்கப்பட்டு விட்டன.

பண்டைத் தமிழிலக்கியத்தில் சொல்லப் படும் கடல் கோள்கள் மொத்தம் நான்கு;
முதலது தலைக்கழக இருக்கையாகிய தென் மதுரையைக் கொண்டது;
இரண்டாவது “நாக நன்னாடு நானூறியோசனை” கொண்டது (மணிமேகலை 9:21);
மூன்றாவது இடைக்கழக இருக்கையான கபாடபுரத்தைக் கொண்டது;
நான்காவது காவிரிப் பூம்பட்டினத்தையும்,குமரியாற்றையும் கொண்டது.

இந்தக் குமரிக் கண்டம் மற்றும் ஆறுகளுக்கான சான்றுகள் புறப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் காணக் கிடைக்கின்றன.

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நந்நீர் பஃருளி மணலினும் பலவே “ -புறம்.9


“அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசையாண்ட தென்னவன் வாழி”
-சிலம்பு 11:17-22


”தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
”குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” - புறம் 6:67
அடியில் தன்னளவு அரசர்க்குணர்த்தி என்பது முதல் சங்க காலத்து தமிழ்ப் பாண்டிய மன்னன் சாவம் என்றழைக்கப்பட்ட ஜாவா வரை வென்று,அவன் நிலப்பகுதியின் கடற்கரையில் கடலலை கழுவுமாறு தன் பாதத்தைப் பதித்து வைத்தான் என்ற குறிப்புக்கான விளக்கம் ஆகும்.

மேலும் இவ்வரசர் குடி குமரிக் கண்டத்தைக் கடல் கொண்டதனால்,வடதிசையில் பரவி இமயம் வரை இருந்த நிலப்பரப்பைச் சேர்த்து தென் திசை வரை பரந்த நிலத்தை ஆண்டவன் என்ற குறிப்பும் கிடைக்கிறது.

இந்தவாறு லெமூரியா ஆஸ்திரேலியாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை பரந்திருந்த நிலப்பகுதி என்பதற்கும்,அது பழந்தமிழர் நாடு என்பதிற்குமான மேலும் சில சான்றுகளானவை வருமாறு;

1.தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்ல திருந்தியும் சிறந்தும் இருப்பதும் முழுத் தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென்கோடியுள் வழங்குதலும்.

2.எட்டும்,பத்தும்,பன்னிரெண்டுமாக மெய்யெழுத்து ஒலிகள் கொண்ட மொழிகள் ஆஸ்திரேலியாவிலும் அதனையடுத்த நாடுகளிலும் வழங்குதல்.

3.முழுவளர்ச்சியடைந்த பின்னே ஒரு மொழியின் வள ஆராய்ச்சி நடைபெறும்;இத்தகைய மொழியாராய்ச்சிக்கான தலைச் சங்கம் குமரிக் கண்டத்தின் தென்கோடியான பஃருளியாற்றங்கரையில் இருந்தது

4.பண்டைத் தமிழ்ச் செய்யுள்களில் கூறப்படும் நீர்நாயும்,காரன்னம் என்னும் பறவையும் ஒத்த உயிரிகள் ஆஸ்திரேலியாவிற்குத் தெற்கில் உள்ள தாஸ்மேனியாத் தீவுகளில் காணப்படுவது.

5.தென்னாடு,தென்னவன்,தென்மொழி போன்ற பதங்கள் தெற்குத் திசையமைந்த பெருநிலப் பகுதியைக் குறிப்பதாக இலக்கியங்களில் காணக் கிடைப்பது.

1. ”குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” - புறம் 6.97

2. ”மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேல்சென்று மேவார் நாடிடம்படப்
புலியொடு வில்நீக்கிப்
புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன்
-கலித்தொகை.104

இந்த தரவுகளால் தமிழ்மொழி குமரிக் காண்டத்தில் இருந்ததும்,குமரிக் கண்டத்தமிழர் தென்னாடு-லெமூரியா- முழுதும் பரவி இருந்ததோடு வட இமயம் வரை சென்று,வென்று சிறந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்றும் அறியக் கிடைக்கிறது.


இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது
இந்த சிந்தனைக்கு வலு சேர்க்கும் மேலும் சில ஆய்வு நோக்கான தரவுகள்:

1.Early History of India என்ற ஆய்வு நூலின் ஆசிரியரான வின்செண்ட் ஸ்மித்(Vicent Smith) மற்றும் ப.சுந்தரம்பிள்ளை எழுதிய தமிழியத் தொன்மையாராய்ச்சி நூல்கள் சொல்வது,
“வட இந்தியாவின் சமஸ்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து இந்தியா(நாவலந்தேயம்) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வது,அந்த அறிவைப் பெறுவதற்கான முயற்சியை மிகக் கேடானதும்,மிகச் சிக்கலான இடத்திலிருந்தும் தொடங்குவதாகும்.விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள இந்தியப்பகுதியே இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகிறது;இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும்,மொழியையும்,குமுகாய(சமுதாய) ஏற்பாடுகளையும் இன்றும் தெளிவாகக் கொண்டிருக்கின்றனர்;எனவே அறிவியம் முறைப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் தனது ஆய்வை,இதுவரை சிறந்ததென்று கொள்ளப்பட்டிருந்த முறைப்படி சிந்து கங்கை சமவெளியினின்று தொடங்காமல்,கிருஷ்ணை,காவிரி,வைகையாற்று வெளிகளின்று தொடங்க வேண்டும்”

2.PT.சீனிவாசையங்காரும்,இராமச்சந்திர தீட்சிதரும் இந்த அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் விளவான தமிழர் வரலாறு மற்றும் தென்னாட்டு வரலாறு.

இந்த ஆய்வுகள் தமிழினமும்,தமிழ் மொழியும் அதன் உச்சநிலையில் குமரிக்காண்டத்தில் இருந்ததற்கான சான்றுகளைத் தருகின்றன.

இன்னும் அவை குமரிக் காண்டமே முதல் மனித இனம் தோன்றிய இடமாக இருக்கக்கூடும்;உலகின் முதல் மொழி தமிழாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாக நிறுவும் சுட்டிகளை வைக்கின்றன.

ஆயினும் இப்பதிவின் நோக்கம் சிவம் என்ற வழிபாட்டுத் தத்துவமும்,தமிழுக்கு அதனுடன் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு நோக்கில் அலசலுமே ஆதலால்,உலகின் முதல் மொழி’ ஆய்வுக்குள் செல்லாமல்,

தமிழினம் குமரிக் காண்டத்தில் சிறப்புற உச்சநிலைப் பண்பாடு,நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது;மொழியாராய்ச்சி செய்து இலக்கியம் வளர்க்கும் வண்ணம் பண்பட்டிருக்கிறது;நாவலந்தேயம்(இந்தியப் பகுதியும் குமரிக் காண்டமும் இணைந்த பகுதி) முழுதும் பரவி ஆண்ட வாழ்வியல் கொண்டது

என்ற அளவில் கொண்டு மேற்செல்வோம்.
-இன்னும் வரும்

இந்தப் பதிவின் தொடர்ச்சியான பகுதி இரண்டு: இங்கு.

14 comments:

  1. பாவாணர் குறிப்புகளில் இருந்தது போலவே இருக்கிறது செய்திகள்.

    பாராட்டுக்கள் !

    ReplyDelete
  2. வாங்க கண்ணன்.

    தேவநேயரின் சுமார் 25 க்கும் மேற்பட்ட நூல்களை சிங்கை நூலகத்திற்குப் பரிந்துரைத்தவன் அடியேன்.அதனால் அவரின் நூற் கருத்துக்கள் இல்லாதிருக்குமா?

    இந்த தொடர் பதிவின் இறுதியில் அனைத்து சுட்டிகள்,உசாத்துணைகளைக் கொடுக்க இருந்தேன்.

    நன்றிகள்.

    ReplyDelete
  3. புகைப்பேழை விஜய் அவர்களே..
    தங்கள் வருகைக்கு நன்றி,ஆனால் இந்த பதிவுக்கு தொடர்பற்று இருந்ததால் வெளியிட ஏதுவாகவில்லை.
    நன்றி.

    ReplyDelete
  4. So i understand that the tamils are the vandheri from lemooriya to the aryan land and drove them to further north, am I right?

    ReplyDelete
  5. முகமற்ற நண்பருக்கு,
    முழுதும் படித்த பின்,துணிவுடன்,தெளிவு கிடைக்க விவாதம் செய்ய முடிந்தால் செய்யுங்கள்;அதுவரை இவ்வாறான முகமற்ற பிதற்றல்கள் அர்த்தமற்றவை.

    ReplyDelete
  6. //தமிழினம் குமரிக் காண்டத்தில் சிறப்புற உச்சநிலைப் பண்பாடு,நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது//

    அறிவன் அய்யா,

    ஆ அப்படியா.ஆனாக்க இப்ப ஓசி பிரியாணிக்காக கழகங்களுக்கு கோவிந்தா போட்டபடி அலையும் பரக்காவட்டிகளாக ஆகிவிட்டனரே.தமிழர் நிலை இவ்வளவு கீழ்த்தரமா போகணுமா?எல்லாம் விதி.

    பாலா

    ReplyDelete
  7. விளக்கமான பதிவு :-)

    ReplyDelete
  8. முதலில் வருகைப்பதிவு அறிவன்!:-)

    இருங்க, முழுக்கப் படிச்சிட்டு வருகிறேன்!

    ReplyDelete
  9. அருமையாம தொடக்கம் அறிவன் சார்!

    //பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள//

    இந்தப் பஃருளி-ன்னு பேரைக் கேட்டே எம்புட்டு நாளாச்சு? ஆகா!
    குமரிக் கண்டம், அதன் வரலாறு பற்றி இன்னும் பரந்துபட்ட ஆய்வைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டும்!

    இதை வெறுமனே மொழியியலாகச் செய்யாமல் அறிவியல், geology என்று பலதரப்பட்ட கோணங்களில் செய்வது நல்லது! சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றுடன் சேர்ந்து ஆய்வு செய்தால் சார்புநிலை இல்லாத பல தமிழ்த் தொன்மங்கள் அறிய வரலாம்!

    தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதின் இயல்பான தொடர்ச்சியாக இதைச் செய்தால், ஒரு நூற்றாண்டு தமிழ்த் தொண்டாக இது அமையும்!

    ReplyDelete
  10. பரிபாடல் தலைச்சங்கமா?
    புதிய தகவல்!

    //மெய்ஞானம் வடமொழியிலேயே உள்ளது,தமிழில் இல்லை என்ற வாதங்களும் வைக்கப்பட்டன//

    இப்படிச் சொன்னது ஓரிருவர் தான்! அதை எளிதாகப் புறந்தள்ளி விடலாம்!

    பல அறிஞர்கள் தங்கள் தத்துவங்களை வடமொழியில் எழுதி விட்டுப் போய் இருக்கலாம்! அதை வைத்து பரத்துவ அறிவே சமஸ்கிருதம் தான் என்பதெல்லாம் டூ மச்!

    அப்படிப் பார்த்தா பக்தி அறிவு தமிழில் தான் உள்ளது-ன்னு நாமும் சொல்ல முடியும்!
    உள்ளத்தின் வடிகாலாக இறைவனைத் தேடித் தேடி உருகும், ஆபாசக் கதைகள் இல்லாத பக்திக் கருவூலம் எத்தனை இருக்கு சமஸ்கிருதத்தில்? விரல் விட்டு எண்ணி விடலாம்!

    அதனால் தான் ஆழ்வார்களின் பிரபந்த பக்தியைச் சமஸ்கிருதமும் தெரிஞ்சிக்கிட்டு "ஞானம்" பெறட்டும்மே-னு வேதாந்த தேசிகர் பிரபந்த சாரம் என்னும் நூலில், தமிழ்க் கருத்துக்களை வடமொழியில் எழுதி வைத்தார்.
    திருவாய்மொழி திராவிட வேதமாகியது! திருவாய்மொழி காட்டாத பரத்துவமா?

    சமஸ்கிருதத்தில் பரத்துவ அறிவு இருக்குன்னா...
    தெலுங்கில் தான் இசை இருக்கு! ஏன்னா தியாகராஜர் முதற்கொண்டு பல பேர் செஞ்ச அபூர்வ ராகங்கள் எல்லாம் தெலுங்கில் தானே?

    பரத்துவத்துக்கு சம்ஸ்கிருதம் மட்டுமே-ன்னு ஜல்லியடிச்சா, இசைக்குத் தெலுங்கு மட்டுமே, பக்திக்குத் தமிழ் மட்டுமேன்னு நானும் ஜல்லியடிப்பேன்! :-)))

    ReplyDelete
  11. நாம் பதிவின் நோக்கத்துக்கு மட்டும் வருவோம்!
    பண்டைத் தமிழர் நிலத்தைக் காட்டி விட்டீர்கள்!
    இனி அதில் இறைத் தொன்மம் பற்றிப் பேசுங்கள்!
    சிவம், அதன் சொற்பொருள், வழிபாடு, இலிங்க தோற்றம், கடல் கோள், நால் வகை நிலப் பகுப்பு, தொலைந்த சிவன் மீண்டும் தமிழ் நிலத்துக்குள் வருகை என்று பல தளங்கள்!

    அடுத்த பதிவுக்கும் ஆவலாய்க் காத்துள்ளேன்! ஒரு மின்னஞ்சலும் தட்டி விடுங்களேன்!

    ReplyDelete
  12. /////தமிழினம் குமரிக் காண்டத்தில் சிறப்புற உச்சநிலைப் பண்பாடு,நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது//

    அறிவன் அய்யா,

    ஆ அப்படியா.ஆனாக்க இப்ப ஓசி பிரியாணிக்காக கழகங்களுக்கு கோவிந்தா போட்டபடி அலையும் பரக்காவட்டிகளாக ஆகிவிட்டனரே.தமிழர் நிலை இவ்வளவு கீழ்த்தரமா போகணுமா?எல்லாம் விதி.

    பாலா

    ////

    பாலா ஐயா,வாங்க..
    இந்த ஓசி பிரியாணி குழுவில் எல்லோரும்-எல்லா தமிழரும் இருப்பதில்லையே?

    அப்படி இருந்தா நீங்களும் நானும் கூட ஓசி பிரியாணிக்குப் போயிருக்கனுமே?

    நான் போனதில்லைங்க...நீங்களும் போயிருக்க மாட்டீங்கன்னுதான்னு நம்பறேன்.

    :)

    ஒரு ஆய்வு நோக்கிலேயே விதயங்களை அணுகுவோமே...

    ReplyDelete
  13. கிரி....
    வாங்க.
    நன்றிங்க...

    ஏதோ தோன்றிய வரை விதயங்களைத் தெரிந்து கொள்ள முயல்வோமே?

    ReplyDelete
  14. நண்பர் ரவி,
    நீங்கள் சொல்வது சரி..

    \\\\\ஆய்வு செய்தால் சார்புநிலை இல்லாத பல தமிழ்த் தொன்மங்கள் அறிய வரலாம்!\\\\\

    எவ்வளவோ விதயங்களைத் தமிழ் உலகுக்கு அளிக்கும் வல்லமையும் மாண்பும் கொண்டது.
    அந்த திசையில் ஊக்கமளிக்க வேண்டிய அரசு வேறு ஏதோதோ செய்து கொண்டிருக்கிறார்கள்...


    \\\\\இப்படிச் சொன்னது ஓரிருவர் தான்! அதை எளிதாகப் புறந்தள்ளி விடலாம்!\\\\\\

    நீங்கள் அளித்த விளக்கங்களை ஏற்கனவே உங்கள் பதிவில் பாரத்துவிட்டேன்.
    எனினும் சில விதயங்களைச் சரியாகச் சொல்ல வேண்டியதிருக்கிறது...எனவே இவை பற்றியும் சிறிது தொட்டுச் செல்ல வேண்டியதிருக்கிறது..

    \\\\\நாம் பதிவின் நோக்கத்துக்கு மட்டும் வருவோம்!
    பண்டைத் தமிழர் நிலத்தைக் காட்டி விட்டீர்கள்!
    இனி அதில் இறைத் தொன்மம் பற்றிப் பேசுங்கள்!
    சிவம், அதன் சொற்பொருள், வழிபாடு, இலிங்க தோற்றம், கடல் கோள், நால் வகை நிலப் பகுப்பு, தொலைந்த சிவன் மீண்டும் தமிழ் நிலத்துக்குள் வருகை என்று பல தளங்கள்!\\\\\\\\

    மெத்தச் சரி.
    முழுக்க அந்த வழியிலேயே எழுத விழைவு.

    ஆனாலும் சில பல நண்பர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது.

    கடைசில உங்க பதிவுக்குப் பொழிப்புரை எழுதித்தான் என் பதிவுக்கு உங்களை இழுக்க வேண்டியதிருக்கிறது !

    :)

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...