குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label மானுடம். Show all posts
Showing posts with label மானுடம். Show all posts

Sunday, July 15, 2012

147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்




நீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் அந்த நிகழ்ச்சி துவக்கப் பட்ட போது வெளியான தொடர் விளம்பரங்கள்;குறிப்பாக கௌசல்யா சுப்ரஜா ஏகாம்பரம்!



சிங்கப்பூரில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளி வெளி வழியாக-லைவ் டெலிகாஸ்ட்- வருவதில்லை;இந்தியாவில் நடந்து ஓரிரு வாரங்கள் கழித்துத்தான் வருகிறது என்பது எனது அவதானம்.தொடங்கப்பட்ட போது நிகழ்ச்சி அவ்வளவு நன்றாக இல்லையெனினும் போகப்போக சூர்யா கொஞ்சம் தேறி ஓரளவு நன்றாகவே நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார்.இப்போது பருவத்தின் இறுதிப் பகுதி என்று சொல்லி நாம் அமைப்புக்கு உதவி செய்யும் செய்கையோடு நிகழ்ச்சி நிறுத்தப் பட்டிருக்கிறது.

இது ஒரு தற்காலிக நிறுத்தம் என்றும், சிறிது காலம் கழித்து வேறொரு நடிகர் மூலம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதும் என்னுடைய இப்போதைய அனுமானம். பெரும்பாலும் என்னுடைய அனுமானங்கள் சரியாக இருப்பதைப் பிற்காலத்தில் நானே உணர்ந்திருக்கிறேன்;இப்போதும் அந்த விருப்பம் இருக்கிறது.

ஏன், சூர்யா நன்றாகத்தானே நடத்தினார்,இளம் பெண்கள் வாயின் இருபுறமும் ஊற்றும் ஜொள்ளு தெரியாத அளவிற்குக் கூட நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்களே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்....சிறிது அலசலாம்.

ஊற்றும் ஜொள்ளு...

தமிழக ஊடக சூழலில் இந்த நிகழ்ச்சியை இன்றைய நிலையில், வேறு எந்த நடிகர் நடத்தியிருந்தாலும் இந்த அளவுக்குக் கூட வரவேற்பு இருந்திருக்காது என்பது நிச்சயம்.

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பொங்கி வந்து ஏன் இருக்காது, தல நடத்தியிருந்தால் பட்டை கிளப்பியிருப்பார்,தளபதி நடத்தியிருந்தால் சரவெடி என்றெல்லாம் உதார் விட்டாலும், இன்றைய நடிகர்களில் தமிழை ஓரளவு சரியாக,அழகாக இல்லாவிட்டாலும் அபத்தமாக இல்லாத அளவில் உச்சரிக்கும், பேசும் இயல்புடைய நடிகர்கள் தமிழக ஊடக சூழலில் கமலகாசன்,பிரகாஷ்ராஜ்,சூர்யா,ஜீவா ஆகிய நால்வர் மட்டுமே முதல் வரிசையில் வருகிறார்கள்.

கமலகாசன் அவருக்கே வெளிச்சமான காரணங்களுக்காக விளம்பரப் படங்களில் கூட நடிப்பவர் அல்ல, எனவே அவர் தொலைக்காட்சி தொடரை நடத்துவதெல்லாம் வாய்ப்பில்லாத ஒன்று. பிரகாஷ்ராஜ் நன்றாகவே செய்வார் என்றுதான் தோன்றுகிறது,ஆனால் இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நட்சத்திர மதிப்பு அவருக்கு இல்லை என்று தொகா கருதியிருக்கக் கூடும்.இதே காரணத்திற்காகவே ஜீவாவும் புறந்தள்ளப்பட்டு சூர்யா தெரிவு செய்யப்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம்.

ஏன் நடிகர்கள்தான் நடத்த வேண்டுமா,மற்ற புகழ் பெற்ற நபர்கள், பொதுச் சேவையில் இருப்பவர்கள் இல்லையா என்று கேட்டால்,நீங்கள் தமிழக சூழலில் வாழத் தகுதியற்றவர்கள்! இன்றைய தமிழகத்தில் நடிகர்கள் கு**வினால்தான் பொழுது விடியும் என்ற அளவில்தான் மாண்புமிக பொது சனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஊடகங்கள் இணைந்து தமிழகத்தின் மேல் திணித்திருக்கும் ஒரு மாயை.தகுதியில் இருந்து தலைவன் வரை அனைத்தும் திரைப்பட நடிகர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்று நோக்கில் ஊடகங்களின் செயல்பாடு இருக்கிறது.

எனவே இவற்றைத் தவிர்த்து விட்டு மெயின் மேட்டருக்கு வருவோம்.

டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தரவரிசைப் படியும் இந்த நிகழ்ச்சி முதல் நிலையில் இருந்ததாக செய்திகள் தெரிவிகின்றன.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியை ஏன் திடீரென்று நிறுத்துவானேன் என்பது கேள்வி..

எனக்குத் தோன்றும் பதில்கள்:

1. விஜய் தொலைக்காட்சிக்கு எதிர்பார்த்த டப்பு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்காது.டிஆர்பி எகிறினாலும் விளம்பரங்கள் எந்த அளவிற்கு வந்தன என்பது ஒரு புறமிருக்க நிகர லாபம் எவ்வளவு என்பது கணக்கீட்டுக்குரிய ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு மொத்த சம்பளமாக சூர்யாவிற்கு 20 கோடிகள் தருவதாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. பரிசுத் தொகை வழங்கிய பணம்,சூர்யாவின் சம்பளம், தயாரிப்பு செலவுகள் போக, விளம்பர வருமானம் மட்டுமே தொலைக்காட்சியின் நிகர வருமானமாக இருக்கும். குறைந்தது 100 சதவிகித மார்ஜின் ஆஃப் சேப்ஃடி இல்லாத ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகள் வழங்குவது அரிது என்று ஊடக வட்டாரங்களில் சொல்கிறார்கள்.(மார்ஜின் ஆஃப் சேஃப்டி என்றால் என்ன என்பவர்கள் இளங்கலை வணிகவியல் புத்தகங்களை நாடலாம்!)

2. இந்த 100 சதவிகிதப் பணமும்,சூர்யா நிகழ்ச்சியை நடத்திய விதத்தால் பயங்கரமாக அடி வாங்கியது. முடிவதற்கு மூன்று வாரங்கள் முன்னால் வரை,தவறான பதில் சொன்ன ஒருவரை சூர்யா, 'தேவைப்பட்டால் லைஃப் லைன் இருக்கு சார்' என்று சொல்லாமல் இருந்ததில்லை;அதே நேரம் சரியான பதிலைச் சொல்லிவிட்டால் சட்டென்று அவர் அந்த பதிலை உறுதி செய்து விடுவார்.(அவரது இந்த குணவிலாசம் பற்றிக் கடைசியாக விரிவாகப் பார்க்கலாம்!). இதனால் தொகா நிறுவனத்திற்கு வர வேண்டிய வருமானம் அடிவாங்கியிருக்கக் கூடும்.அதை வெளியில் அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்;ஆனால் சூர்யாவிடம் இது பற்றி நிச்சயம் பேசியிருப்பார்கள். இதன் விளைவு கடைசி மூன்று வாரங்களில் நன்கு தெரிந்தது. அந்த நேரங்களில்தான் சரியாக விடை சொன்ன மனிதர்களையும் சூர்யா குழப்ப முற்பட்டார்.
ஆனால் அமிதாப் இதை தவறாமல் எல்லோருக்கும் செய்தார் என்பதையும் சேர்த்துப் பாருங்கள்,ஏன் கேபிசி அவ்வளவு நாட்கள் ஓடியது என்றும் ஏன் நீவெஒகோ சட்டென்று நிறுத்தப் பட்டது என்றதற்குமான காரணம் புரியும்.

3. முர்டோக் போன்ற விற்பன்ன தொழில் முதலைகள், அவர்கள் வைத்திருக்கும் இலக்கில் லாபம் தராத எந்த ஒரு தொழிலையும் அல்லது தொழிலின் ஒரு கூறையும் தொடர மாட்டார்கள்.அவர்களுக்கு தொழிலில் லட்சியம்,தொலைநோக்கு,நேர்மை,கடமை என்பதெல்லாம் தனித்தனி வார்த்தைகளல்ல;அனைத்திற்கும் ஒரே பொருள்தான்-இலக்கு வைத்திருக்கும் அளவுக்குப் பணம்.

காட்டாக ரிலையன்ஸ் குழுமம் கூட்டு சதவிகித்ததில்-காம்பவுண்டிங் ரேட் பெர் ஆனம்- 35 சதவிகிதத்திற்குக் குறைவாக லாபம் தரும் எந்த ஒரு தொழிலையும் நடத்துவதில்லை என்பதை விதியாக வைத்திருக்கிறது.அப்பேர்ப்பட்ட ரிலையன்ஸ் குழுமம் கூட ஒன்லி விமல் என்ற, டெக்ஸ்டைல் பிரிவை,அது 15 சதவிகித லாபம் மட்டுமே தந்த போதிலும், சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.அதை 2012 ல் தூக்கிக் கடாசி விட்டார்கள்.ஒன்லி விமல் டெக்ஸ்டைல் பிரிவுத் தொழில் மட்டும் விற்கப் படப் போகிறது !

20 ஆண்டுகளுக்கும் மேலாக அதை முகேஷ் அம்பானி விடாது தொடர்ந்ததற்கு ஒரே காரணம்,அவரது தந்தை முதன்முதலில் பெரிதாக நிறுவிய தொழில் குழுமப் பிரிவு ஒன்லி விமல் என்பதால்.

ஒன்லி விமல் பிரிவு பிரசித்தமடைந்து கொண்டிருந்த நேரத்தில் அனில் அம்பானி நாடு முழுவதும் வியாபாரிகளைச் சந்திப்பதற்காகப் பயணப் பட்டார். அந்த நேரத்தில் அவரை மதுரையில் சந்தித்துப் பேசிய சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போது அவரை விட சில வருடங்கள் மட்டும் சிறியவனான(இப்போதும் தான் :) ) ஒரு மொட்டு விட்டுக் கொண்டிருந்த சிஏ வாக அவரைச் சந்தித்தேன். அவர்களது மூச்சும் பேச்சும் பிசினஸ் மயமாக இருப்பதை எளிதாக உணர வைத்தது அந்த சந்திப்பு.

அப்பேர்ப்பட்ட குஜராத்திகளுக்குக் கூட பிசினஸ் செண்டிமெண்ட் இருக்கிறது;தந்தையின் முதல் தொழில் என்பதால் இவ்வளவு காலம் அதை இழுத்து ஓட்டிய முகேஷ் போன்றவர் இல்லை முர்டோக். ஸ்டார் குழுமத்தில் ஒத்துவராத தொழில் அல்லது பிரிவை பட்டென்று வெட்டுவார்கள். இங்கிலாந்தில் முர்டோக் வைத்திருந்த ஒரு செய்தித்தாளுக்கு இது சமீபத்தில்(உண்மையிலேயே சமீபத்தில்!) நடந்தது.

அதேதான் நீவெஒகோ'க்கு இப்போது நடந்திருக்கிறது; ஆனால் திரும்பவும் துவக்குவார்கள்,வேறொரு நடிகரை வைத்து !

4. பின் ஏன் சூர்யாவை வைத்து துவக்கினார்கள் ? மேற்சொன்ன விதயங்களை முன்னரே யோசிக்காத அளவிற்கு விதொகா குழுமம் முட்டாள்தனமான மேலாண்மையைக்-மேனேஜ்மெண்ட்- கொண்டிருக்கிறதா?
நிச்சயமாக இல்லை !

இன்றைய நிலையில் ரஜினி அல்லது கமல் இந்த நிகழ்ச்சியைத் துவக்கியிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய முகவிலாசம் இந்த நிகழ்ச்சிக்கு சூர்யாவால் கிடைத்தது.இளையவர்கள்,முதியவர்கள்,இளம் பெண்கள்,குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமானவர்களையும் சூர்யா கவர்ந்திருக்கும் நிலையில்,சூர்யாவின் அந்த விளம்பரப் புகழ் பிம்பம், இந்த நிகழ்ச்சிக்கான சூப்பர் அடித்தளமாக அமைந்தது.

இந்த விளம்பர அனுகூலத்திற்கான அறுவடையை அடையாமல் தொகா இந்த நிகழ்ச்சியை விட்டு விடாது !

5.மேலே கண்டபடி சூர்யா அநியாயத்திற்கு நல்லவராக இருந்ததால் எளிய மனிதர்களை சந்தித்த போது அவர்களுக்காக உண்மையில் வருந்தி,உருகினார்;அவர்கள் இயன்ற அளவு வெற்றி பெற தன்னால் இயன்ற வரை அவர் உதவியதாகவே பட்டது.
இப்படியை நீடித்தால் கல்லா போண்டியாகி விடும் என்று தொகா'க்கு தெரிந்து விட்ட கணம் வந்தபோது, நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள் !


தொகா.யின் பார்வையில் மேலே கண்டவை நடந்திருந்தாலும் பொதுவான பார்வையில் இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்து என்ன?

சூர்யா என்னும் நடிகர் ஏற்கனவே நடிகராகப் புகழின் உச்சிக்கு சில அடிகள் தூரத்தில்தான் இருந்தார்; இந்த நிகழ்ச்சியில் அவரது நடத்தை,பங்களிப்பு,சாதாரண மக்களின் மீதான அவரது பார்வை ஒரு தமிழ்த் திரையுலகின் நடிகனது பார்வையாக இல்லாது,மனிதனின் பார்வையாக இருந்தது. திரையுலகின் வேறு எந்த ஒரு நடிகரும் இவரளவிற்கு மானுடத் தன்மையுடன் இருக்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நிதர்சனமாகத் தெரிந்தது.

ஒரு சாதாரண மனிதனாக அவர் எளிய மனிதர்களுடன் தன்னை எளிதில் இணைத்துக் கொள்ள முடிந்தது;அவர்களின் துக்கங்களும் துயரங்களும் அவரது கண்ணில் நீர் வர வைத்தன;அவரது திரையுலக நட்சத்திர அந்தஸ்து மற்றும் திகட்டும் அளவிற்கான பணம்  ஒரு மனிதனாக அவரது மனத்தையும்,இயல்பான இரக்க மனத்தையும் மாற்றிவிடவில்லை என்பதை இந்த நிகழ்ச்சி தெற்றென எடுத்துக்காட்டியது. எல்லோரும் பார்க்கிறார்கள்  என்ற காரணத்திற்காக ஒரு மனிதர் எப்போதும் நடித்துக் கொண்டிருக்க முடியாது.

இயல்பான அவரது நல்ல குணம் பல இடங்களில், நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.ஒரு சாதாரண பொது சனத்தின் வீட்டிற்கு அவரது அம்மா நடக்க இயலாத நிலையில் இருக்கிறார்;அவரது பெண் அவரைத் தனது மகள் போல்,தான் தாயாய் மாறிக் கவனிக்கிறார் என்ற அன்பை மதித்து அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த எளிய பண்பும்,அந்த பண்பின் வெளிப்பாடும் அவரை தமிழர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக்கும்.
சிகரங்களை நோக்கிய ஒரு பயணம்....

அதே போல் இந்த நிகழ்ச்சி எளிய துவக்கங்களில் தோன்றி, சாதிக்கும் மன உறுதியைத் துணைக் கொண்டு, மேல்நிலைக்கு வரும் வழியை முட்டித் திறந்து வரப் பலர் தயாராக இருக்கிறார்கள் என்பதை, சிஏ தேர்ச்சி அடையப் போகும் மீனவப் பெண்ணின் கதை மூலம் சொன்னது.அடிப்படை வசதிகள் இருந்தாலும் சாதாரண கிராமப் புறத்தில் இருந்து கிளம்பி, எந்த வழிகாட்டிகளும் இல்லாமல், 80 களின் இறுதியில் கல்வியின் மூலம் வாழ்வின் சிறிது மேல்நிலையை அடைந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பெண் வந்த எபிசோட் கண்ணில் நீர் வர வைத்திருக்கும்;எனக்கும் வந்தது.

கடைசி நாளன்று சிவகுமார் வந்து பங்கு பெற்று,இவன் தந்தை என்னோற்றான் கொல் என்று வியக்கும் படியான மகிழ்வை அனுபவித்தார்.


ஆனால் அவர் போகும் போது சொன்ன ஒரு வாக்கியம் என்னை நேற்று முழுவதும் சிந்திக்க வைத்தது.

பள்ளி வைத்து நடத்திய ஒரு மூதாட்டி, உங்கள் மகனை அற்புதமான மனிதனாக நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்று சொன்ன போது, அவர் திருத்தமாக ஒரு வாக்கியம் சொன்னார்...
" நான் அவனை நல்ல மனிதனாக வளர்த்தேன் என்பதை விட,நல்ல ஒரு ஆத்மா எனது மகனது உடல் வடிவத்தில் இந்த உலகில் வாழ எங்கள் மூலமாக வந்தது, அதுதான் உண்மை " என்றார் !!!

அந்தக் கணத்தின் கனத்த உண்மையை சூர்யா உணர்ந்திருப்பார் என்றே அவரது அந்தக் கணத்தின் தோற்றம் உணர்த்தியது.  இந்த நிமிடம் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நிமிடம் என்றே சூர்யாவும் சொன்னார். நல்ல ஒரு தகப்பனும், தகுதியான ஒரு மகனும் ஒரே கோட்டில் இணைந்த அழகிய ஒரு தருணம் அது !

அந்தக் கணம்....

ஒரு மனிதனாக உயர்ந்த சூர்யா என்னும் சரவணன்...


பளிச்சென்று திரை விலகியது போல சைவ சித்தாந்தத்தின் முற்றான உண்மையை அந்த ஒரு வாக்கியம் உணர்த்தியதாக எனக்குப் பட்டது ! 

எந்தரோ மகானுபாவு  அந்தகிரி வந்தனமு !!! 

Monday, July 2, 2012

145.அமெரிக்கா உடைத்தால் மண்குடம்;மற்றவர் உடைத்தால் பொன்குடம் !


போபாலில் நடந்த விஷ வாயுக் கசிவும் அதைத் தொடர்ந்த தலைமுறைகளைப் பாதிக்கும் சோக விளைவுகளும் நாம் அனைவரும் அறிந்தது.

அந்த விபத்து நடந்த போது முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் போபால் மக்களுக்கு என்ன நடந்தது,அவர்களுக்கான உடனடி உதவிகள் என்ன என்று பார்ப்பதை விட,யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சிஇஓ'வான அமெரிக்கர் வாரன் ஆண்டர்டனை தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்புவதில்தான் குறியாக இருந்தார்.

போபால் மக்கள் அடைந்த பாதிப்புகளுக்கும்,இரண்டு தலைமுறைகள் தாண்டியும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதும் நிலத்தடி நீர் விஷநீராக மாறி அதனால் வரும் நோய்த் தொற்றுகளும் கணக்கற்றவை.


இந்தியாவில் போபால் விபத்து நடந்த போது விஷவாயு வெடித்த நாளில் மட்டும் இறந்தவர்கள் 2259, இரண்டு மூன்று வாரங்களில் 3787 பேர் இறந்தார்கள். காயமடைந்தவர்கள் 5,58,127. அந்த பாதிப்பினால் பின்னர் இறந்தவர்கள் எண்ணிக்கை 8000 பேர்.இது தவிர ஊனம் மற்றும் மற்ற உபாதைகள் 38,478 பேரைப் பாதித்தன.

நொடியில் மறித்த குழந்தைகள் !

கால்நடைகள் கொத்துக் கொத்தாக இறந்தன !!

வரிசை வரிசையாக !! 
எண்ணற்ற குழந்தைகளின் பிணங்கள் எண்களால் மட்டுமே அறியப் பட்டன !
எண்களே அடையாளம் !
வீட்டுக்கொருவர் அல்லது இருவர் இறந்திருந்தார்கள் !! 

வீட்டிற்கொரு பிணம் !
















பிணங்கள் வரிசை வரிசையாக விழுந்து கொண்டிருந்தன !!!
தொடர்ந்த மரணங்கள் !












பிபிசி நிறுவனம் தொழிற்சாலைகள் சார்ந்த விபத்ததுகளில் உலக அளவில் மிக அதிகமான
உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்படுத்திய விபத்துகளில் ஒன்றாக இதை வகைப் படுத்தியது.




இந்த விபத்திற்கு அதிகபட்சமாக எடுக்கப் பட்ட சட்ட நடவடிக்கை என்ன தெரியுமா? யூனியன் கார்பைடு(டவ் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இது இயங்கியது;தோண்டினால் இதில் எவனாவது காங்கிரஸ் அரசியல் வியாதி-சொற்பிழை அல்ல- முக்கியப் பங்குதாரராக இருக்கக் கூடும்) இந்தியாவின் 7 அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு ஒரு லட்சரூபாய்...ஆம் ஜஸ்ட் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மத்தியப் பிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது !
அர்ஜூன் சிங்கும் ராசீவும் வழியனுப்பி வைத்த ஆண்டர்சன் !
அதுவே சட்டத்தின் படி அதிக பட்ச அபராதத் தொகை என்று சொன்னது நீதி மன்றம் !!

சிலருக்கு ஆயுள் தண்டனை அளித்தது;அவ்வாறு தண்டனை விதிக்கப் பட்டவர்கள் தீர்ப்பு வருமுன்னேயே இயல்பாக வாழ்ந்து இறந்து போனார்கள் !!!

அவ்வளவுதான் அரசு செய்து கிழித்தது.


இந்நிலையில் அரசு முன்னின்று எதுவும் கிழிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் மன்ஹாட்டன் மாநிலத்தில் யூனியன் கார்பைடின் மீது வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில் வந்திருக்கும் தீர்ப்பு அலாதியான அமெரிக்கத் தீர்ப்பு.போபால் விபத்தின் பின்னால் நடந்த உயிரிழப்பு,சுற்றுச்சூழல் மாசு,நிலத்தடி நீர் மாசு போன்ற எவற்றிற்கும் யூனியன் கார்பைடு நிறுவனம் பொறுப்பல்ல.மத்தியப் பிரதேச மாநில அரசுதான் அவற்றிற்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்க வேண்டும்'என்ற அதி அற்புதமான தீர்ப்பை வழக்கி,வாரன் ஆண்டர்சனோ,யூனியன் கார்பைடு நிறுவனமோ சல்லிக் காசு தரும் அளவுக்குக் கூடக் குற்றமற்றவை என்று சொல்லி விட்டார்கள்.

இது தொடர்பாக இன்றைய தினமணியின் தலையங்கத்தின் ஒரு பகுதி ... முழுத் தலையங்கம் இங்கே இருக்கிறது.

டைம்ஸ் இந்தியாவிலும் இது பற்றிய செய்தி வந்திருக்கிறது. ஒரு முறை இந்தச் செய்திகளைத் தேடிப் படித்து விடுங்கள்;பொறுமையற்றவர்கள் பின்வரும் சில பத்திகளையாவது படிக்கலாம் !

போபால் விஷவாயு விபத்தில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் வாரன் ஆண்டர்சன் அந்த சம்பவத்துக்குப் பொறுப்பல்ல என்று அமெரிக்காவின் மேன்ஹாட்டன் மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, போபால் மக்களுக்காக இழப்பீடு பெற்றுத்தரப் போராடும் அமைப்புகளுக்குப் பெரும் அதிர்ச்சி என்பதோடு, அன்னிய நேரடி முதலீடுகளில் இனிமேலாவது இந்திய அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.
 யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் விட்டுச்சென்ற சயனைடு கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து கடந்த இரு தலைமுறைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜானகிபாய் சாஷூ என்பவரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனுவை இரண்டுமுறை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மூன்றாவது மனுவை ஏற்று விசாரித்த நீதிபதி ஜான் கீனன் அளித்துள்ள தீர்ப்பு, இனிமேல் இந்த வழக்கில் எந்தவிதமான இழப்பீட்டையும், நியாயத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் எதிர்பார்க்க முடியாது என்பதைத் தெளிவாக்குகின்றது.

 ""....யூனியன் கார்பைடு வேறு, யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் வேறு. இந்தியாவில் பல ஆயிரம் பேர்களது மரணத்துக்குக் காரணமான போபால் விஷவாயு விபத்துக்கு யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்தான் பொறுப்பு. யூனியன் கார்பைடு நிறுவனமோ அல்லது அதற்கு அன்றைய தேதியில் தலைவராகப் பொறுப்பு வகித்த வாரன் ஆண்டர்சனோ பொறுப்பல்ல'' என்கிறது மேன்ஹாட்டன் மாகாண நீதிமன்றத் தீர்ப்பு.
 யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் எடுத்த முடிவுகள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு எடுத்த முடிவுகள்தான் என்று வழக்குத் தொடுத்தவர்கள் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

பரிசோதிக்கப்படாத புதிய தொழில்நுட்பத்தை போபால் ஆலையில் புகுத்திய வாரன் ஆண்டர்சன், கடும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுவிழக்கச் செய்ததுதான் விபத்துக்கு அடிப்படைக் காரணம் என்று கூறியதையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

 ""...யூனியன் கார்பைடு நிறுவனம், போபாலில் இருந்த யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்டின் தாய் நிறுவனம் என்பது உண்மையே. ஆனால், இந்திய நிறுவனத்தின் ஒவ்வொரு முடிவுகளிலும் யூனியன் கார்பைடு தலையிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இந்தத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தவர் ஆண்டர்சன் அல்ல. மத்தியப் பிரதேச மாநில அரசுதான் இடத்தை வழங்கியது. விபத்துக்குப் பின்னர் மூடப்பட்டுவிட்ட ஆலையில் ஏற்பட்ட நச்சு மாசினை அகற்ற வேண்டிய வேலையும் மாநில அரசையே சாரும்..'' என்கிறது தீர்ப்பு.
 ""யூனியன் கார்பைடு நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அமெரிக்காவில் இருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலையீடு இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லையா? அல்லது அதற்கான ஆவணங்களையும் தகவல் பரிமாற்றங்களையும் இல்லாமல் செய்துவிட்டார்களா? இந்த வழக்கில் இதற்கான ஆவணங்களைக் கைப்பற்ற இந்திய அரசு தவறியது ஏன்?'' - 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இப்போது ஒரு ஃப்ளாஷ் பேக்.


2010'ம் ஆண்டு அமெரிக்கக் கடற்கரையோரமான கல்ஃப் ஆப் மெக்சிகோ பகுதியில் இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் நிறுவனக் கிணறு ஒன்றில் நடந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் பதினொரு பேர் இறந்ததோடு 17 பேர் காயமடைந்தார்கள்.அதோடு எண்ணெய்கிணற்றிலிருந்து வெடிப்பினால் வெறியேறிய எண்ணெய் சுமார் 4200 சதுரமைல்களுக்கு கடல்நீரில் பரவியது.


இந்த விபத்தினால் கடல் உயிரினங்கள் மற்றும் கடல்நீர் மாசு ஏற்பட்டது.மனித இழப்பு என்று பார்த்தால் பதினொரு பேர் மற்றும் காயமடைந்தவர்கள் 18 பேர்,அவ்வளவுதான்.அவர்களும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஊழியர்கள் ! அவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து நிச்சயம் தனியான இழப்பீடு வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் அப்பகுதி கடல் வாழ் உயிரினங்களில் பல பாதிப்புகள் இருப்பதாகக் கூவினார்கள்.அமெரிக்க நிர்வாகமும் ஒபாமாவும் சேர்ந்து கூவினர்.மீன்களும் திமிங்கிலங்களும் பரிதவிப்பதாகவும் கடல்நீர் எண்ணெய் கலந்து அமெரிக்காவே பாதிக்கப் பட்ட ரேஞ்சில் நாசா விண்கலங்கள் எடுத்த படங்களைப் போட்டு அதகளம் செய்தது அமெரிக்கா.



பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்க செனட்டுக்கு வந்து மன்னிப்புக் கேட்க வைக்க வற்புறுத்தப் பட்டு மன்னிப்புக் கேட்டார்,

அதோடு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகுப்புநிதி உருவாக்கப்பட்டு அதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் பணம் கொடுத்தது. அந்த விபத்தின் காரணமாகப் கடற்கரையோரம் வசிப்பவர்கள் அல்லது கடல் சார்ந்த தொழில் முகவர்கள்,தங்களது தொழிலுக்கோ அல்லது உடமைகளுக்கோ அந்த எண்ணெய்க் கசிவின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கருதினால் அந்த நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போது 2012.

போபால் விஷ வாயு விபத்திற்கு அரசு முனைந்து நின்று அமெரிக்க நிறுவனங்கள்,அமைப்புகள்,நீதிமன்றங்களில் முறையீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் இழப்பீடு பெற வேண்டும் என்பது போக, ஒன்றும் நடக்காத விரக்தியில் தனிப்பட்டவர்கள் முயற்சித்து எடுத்த வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றம், போடா போக்கத்த பயல்களா.. என்று சொல்லி ஊற்றி மூடி விட்டது.

போபால் விஷ வாயு விபத்து வரலாற்றில் ஒரு வழியாக கல்லறைக்கு அனுப்பப் பட்டு விட்டது.


எனக்கு எழும் சில கேள்விகள் :

1.அமெரிக்கக் கடற்கரையோரத்தில் நடந்த விபத்தில் 30 பேருக்குள் காயமும் உயிரிழப்பும் நேர்ந்து ஒரு விபத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா குய்யோ முறையோ என்று கத்தி, பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் தலைவரை அமெரிக்காவிற்கு வரவழைத்து மன்னிப்பு வாங்க முடிகிறது. மீன்களும் திமிங்கிலங்களும் தவளைகளும் கடலில் இருந்து எழுந்து வந்து நஷ்ட ஈடு கேட்கும் என்று பிலாக்கணம் படித்து 20 பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வாங்க முடிகிறது. ஆனால் லட்சக் கணக்கில் மக்கள் மடிந்த ஒரு விபத்து நடந்ததற்கு ஒரு மயிரும் தர மாட்டோம் என்று அதே அமெரிக்கா சொல்கிறது.காங்கிரஸ் கட்சியின் சொம்பு நக்கிகள் அமெரிக்க அதிகாரிகளின் கால்களில் விழுந்து கிடக்கிறார்கள் !
லட்சக் கணக்கில் மடிந்த மக்களின் உயிரிழப்பு ஒரு பொருட்டே அல்ல. என்ன விதமான தலைவர்களை நாம் பெற்றிருக்கிறோம்????

2. அமெரிக்கக் கடற்கரையில் வாழும் மீன்களை விட இந்தியாவில் வாழும் எண்ணற்ற உழைக்கும் மக்கள் பொருட்டற்றவர்களாகப் போனார்களா?

3.நமது தலைவர்கள் இந்தியாவின் குடிமக்களா அல்லது இன்னும் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கக் குடிமக்களாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. இன்னும் நாம் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கக் காலனி நாடுகளில் ஒன்றாக அவர்களது வைஸ்ராய்களால் ஆளப்படும் மக்களாக இருக்கிறோமா?

4.சாதாரண மனிதனான எனக்கே இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒப்பு நோக்க, எரிச்சலும் கோபமும் மண்டுகிறதே. நமது ஆட்சியாளர்கள் இவற்றைப் பற்றிக் கிஞ்சித்தும் யோசிப்பார்களா மாட்டார்களா?

நாம் சுதந்திர நாட்டின் பிரஜைகளா ? அல்லது இன்னும் மேற்குலத்தின் அடிமை நாடுகளில் ஒன்றா??

நன்றி- தினமணி,சுலேகா,டுடே இதழ் 

Monday, February 2, 2009

93.ஒப்பனை உலகின் சில உண்மை முகங்கள்

முத்து எடுக்கலாம் என்று கடலில் மூழ்குபவன் செத்துப் போவதும் உண்டு;செத்துப் போகலாம் என்று கடலில் விழுபவன் கை நிறைய முத்துக்களை அள்ளிக் கொண்டு வருவதும் உண்டு.படித்ததுமே எனக்குப் பிடித்த வாசகம் இது.இதில் நான் இரண்டாவது ரகம்.எனக்கு முத்து எடுக்கத் தெரியாது என்பது மட்டுமல்ல;முத்து எடுக்க வராது என்று முழுமையாக நம்பிக் கொண்டிருந்தவன் நான்.கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளஞ்சல்களைக் கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொத்து.


இப்படித் தொடங்கும் அந்தப் புத்தகம் விவரிப்பது இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பிரபலத்தின் இளமைப் பருவம் முதல் சமீப காலம் வரையான கதை.


இன்றைய அவரது உயரத்திற்கும் அவரது இளமைப்பருவ பயங்களுக்கும் தோல்விகளுக்கம் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா என வியக்க வைக்கும் அளவுக்கு சிறுவயது பயங்கள்,தோல்விகளை கண் முன்னே விரித்துப் பரப்பிச் செல்லும் அவரின் மீது பெருமளவு மரியாதை வந்தது உண்மை.


படிக்க எடுக்கும் போது எந்த ஒரு முன் விருப்புகளுமின்றி ஒரு மேம்போக்கான பிதற்றல்களும் சுய பிரதாபங்களும் நிரம்பிய கதையாக இருக்கும் என்றுதான் நினைத்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.

ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்தில் தன்னைப் படிக்க வைத்தது அந்த 200 சொச்சம் பக்கப் புத்தகம்!


ஏழாம் வகுப்பில் உங்கள் மகன் தேர்ச்சி அடைவதற்கு வாய்ப்பில்லை;தொடர்ந்து எங்கள் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் நாங்கள் அவனை தேர்வாக்காமல் இருப்பதை விட வேறு வழியில்லை;இல்லை வேறு பள்ளிக்குக் கொண்டு சேர்ப்பதானால் தேர்ச்சி அளித்து பள்ளிமாற்று சான்றிதழ்-ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட்-தருகிறோம்.என்ன முடிவு சொல்லுகிறீர்கள்? என்று பள்ளித் தலைமையாசிரியர் தந்தையைக் கூப்பிட்டு சொல்லுமளவுக்கு தோல்வியியையும் தோல்வி மனப்பான்மையையும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் தன் துறையில் உச்சத்தை தொட்டது மட்டுமல்ல, தமிழகத்திலேயே அழகான பெண்ணின் காதலையும் வென்று வாழ்க்கையிலும் வெற்றி பெற்ற கதையை விவரிக்கும் அந்தப் புத்தகம் நடிகர் சூர்யா என்று அறியப்பட்ட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் தன்னுடைய வாழ்வின் அனுவங்களைச் சொன்ன இப்படிக்கு சூர்யா என்ற புத்தகம்!


0 0 0


ஒரு பிரபல நடிகர் அப்பா;வாழ்வின் அடிப்படையான வசதிகளுக்கு எந்த வித குறைகளும் இல்லை;நல்ல ஆரோக்கியமான சூழலில் அமைந்த வீடு....இப்படி இருந்தும் சிறுவயது சூர்யாவுக்கு தெனாலி கமல் மாதிரி பல பயங்கள் இருந்திருக்கின்றன;இன்னும் சொன்னால் எதில் ஈடுபட்டாலும் நாம் நிச்சயம் தோற்போம் என்று எந்த வித ஐயமும் இல்லாமல் நம்பும் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கிறார்.


வகுப்பில் ஹிந்தி மொழியோ அல்லது கணக்குக் கேள்விகளோ வரும்போது வரிசைப்படி கேள்வி வரும்போது கேள்வி வரும் முதல் வரிசையைத் தவிர்க்க இரண்டாவது வரிசைக்கு மாறியும்,கேள்வி இரண்டாவது வரிசைக்கு வரும் போது திரும்ப முதல்வரிசைக்கு மாறியும் தப்பிக்கும் மாணவனாக தான் இருந்ததை ஒளிவு மறைவின்றி ஒத்துக் கொள்கிறார் சூர்யா!

ஆனால் இந்தக் குறையுடைய குழைந்தைக்கு தான் ஒரு பிரபல நடிகராக இருந்தும் தனது மகனுக்க ஒரு அப்பாவாக அற்புதமான ஒரு கடமையாளராக சிவகுமார் தன் மகனுக்கான நல்ல வழிகாட்டியாகவே எப்போதும் இருந்திருக்கிறார்,குடும்பத்திற்கான அவரது குவாலிடி நேரம் மிகக் குறைவாகவே கிடைத்த போதிலும்!


மற்றுமொரு விதத்திலும் தனது பயங்களுக்கு உளவியல் ரீதியான வலுவான காரணத்தையும் ஒளிக்காமல் முன்வைக்கிறார் அவர்.


தான் இப்படித் தோல்வியின் இருட்டு மூலைகளுக்குள் முடங்கிய இளவயது சூர்யாவின் அடைக்கலம் பெரும்பாலும் அவரது அம்மா.எல்லாக் குழந்தைகளைப் போலவும் ஏம்மா எனக்கு மட்டும் இப்படி? என்று கேட்டிருக்கிறான் அந்தச் சிறுவன்;ஆனால் திரைப்படங்களில் போல சிறுவயது பாலகனாக இருக்கும்போதே அல்ல;பின்னர் வளர்ந்து வெற்றி வசப்படும் என்ற நம்பிக்கை வந்த காலங்களில்.


மகனின் கேள்விக்கான பதில் அம்மாவின் வார்த்தைகளில்...


மிகவும் கண்டிப்பான ஊர்க் கவுண்டர் எங்க அப்பா.எங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவற செய்தாலும் ஒரு சினிமாவுக்குப் போகனும்னாலும் தான் போய்ப் பார்த்து விட்டு வந்து அது நல்ல படம்,வன்முறை ஆபாசங்கள் இல்லை என்று தோன்றினால் மட்டுமே பிறகு குழந்தைகளை அழைத்துப் போகிற அப்பா.


இந்த சூழலில் வளர்ந்த எனக்கு ஒரு நாள் கல்லூரியில் இருந்து வந்ததும் ஒரு போட்டோவைக் காட்டினார்கள்,போட்டோவில் கோட் சூட் அணிந்து உன் அப்பா.இவர்தான் மாப்பிள்ளை என்றார்கள்,மனதில் ஒட்டவே இல்லை;போதாதற்கு பிரபல நடிகர் என்றார்கள்,நானோ அவர் நடித்த ஒரு படத்தையும் பார்த்திருக்கவில்லை.பெண்பார்க்கும் போது நேரிலாவது பார்க்கலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர் வரவில்லை,பெண் பார்த்துவிட்டுப் போனபிறகு ஜாதகம் சரி இல்லை போன்ற பிரச்னைகள் கிளர்ந்தால் பெண் மனதில் தேவையற்ற தாக்கங்கள் ஏற்படும்,பின்னர் பார்க்கிறேன் என்று விளக்கம் சொல்லி நண்பர்களை அனுப்பி வைத்தார் உன் அப்பா.


நேரில் பார்த்துக் கூட முடிவு செய்யாத அவருக்குப் பெண்கள் பற்றிய என்ன கண்ணோட்டம் இருக்கும் என்று நொந்த நான் வேதனையைத் தவிர ஒன்றும் வழி இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்


இப்படியான மன பயத்தில் இருந்த அவருடைய திருமண நிச்சயதார்த்தம் அன்றுதான் அவர் சிவகுமாரைப் பார்த்திருக்கிறார்.திருமணம் நிச்சயிக்கப் பட்ட அன்றே படப்பிடிப்புக்குச் சென்று விட்டிருக்கிறார் சிவக்குமார்.


திருமணத்தன்றும் படப்பிடிப்பில் இருந்து சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறார் சிவக்குமார்.திருமணமும் தொடர்ந்த வரவேற்பும் தமிழகத்தின் பல பிரபலங்கள் கூடிய கூட்டம்;சிலருக்கு இந்த வகையான பெரும் பிரபலஸ்தர்கள் கூடி நடந்த திருமணம் மிக்க மகிழ்வை அளித்திருக்கும்;ஆனால் சூர்யாவின் அம்மாவிற்கு ஒரு வகையான மிரட்சியையும் மனத் தயக்கத்தையும்,இவர் ஏதோ அவசரப்பட்டு தன்னைத் திருமணம் செய்திருக்கிறாரோ என்ற விதமான பயங்களையும் சூர்யாவின் அம்மாவுக்கு அளித்திருக்கிறது.


திருமணம் முடிந்த நேரம் சிவகுமார் துணைப்பாத்திரங்களை விட்டு தனி கதாநாயகனாக முன்னேற ஆரம்பித்திருந்த நேரம்;காலையில் படப்பிடிப்புகள் மதியத்திற்குப் பிறகு நாடக உலகம் என்று ஓடிக் கொண்டிருந்த அவர் நல்ல கணவனாக இருக்க பெரிதும் முயன்றும் அதை மனைவி புரிந்து கொள்ளும் அளவிற்கான கால அவகாசம் ஒதுக்கி அவருக்குப் புரியவைக்க இயலாத சூழலும்,பரபரப்பான சென்னை வாழ்க்கையும் ஒரு வித மிரட்சியைத் தந்திருக்கிறது அவரது மனைவிக்கு.


பெரியவர்கள் எல்லாவற்றையும் கருதி கோவையிலிருந்து உடன் துணையாக இருக்கட்டும் என்று அனுப்பி வைத்த சிவகுமாரின் சகோதரி மகளின் எதிர்பாராத வகையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாட்டி பலியாக,அந்த நேரத்தில் அவரது மாமியாருக்கும் பேத்தியின் மரணம் தந்த அதிர்ச்சி உடல் நலத்தை நலிய வைக்க,அந்த நிலையில் சரவணனை சூல் கொண்டிருக்கிறார் அவரது அம்மா.


கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து,ஒரளவு உலகம் புரிந்த பெண்ணாக வளர்ந்த எனக்கே முற்றிலும் புதிய சூழலில் அமைந்த மணவாழ்க்கை இறுக்கமாகவும் போராட்டமாகவும் இருந்தது.எனது தயக்கங்கள்,தவிப்புகள்,குழப்பங்கள் இவற்றோடு ஜானகியின் மரணமும் சேர்ந்து கொள்ள,கருவாக என் வயிற்றிலிருந்த உன்னையும் அது பாதித்திருக்கிறது.அதிலிருந்துதான் மீண்டு வந்திட்டியே கண்ணா.. என்று தலையைக் கோதிவிட்டார் அம்மா என பதிந்திருக்கிறார் சூர்யா.


0 0 0


இந்த வகையான மனத்தயக்கங்களுடைய சிறுவனாக வளர்ந்த சரவணனின் கூட்டப்புழு வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நியதிகளுடன் வாழ்ந்த தந்தையால் எப்படி செப்பம் பெற்று வண்ணத்துப் பூச்சியானது-


நடிகரின் குழந்தைகளாக இருந்தும் சரவணனும் கார்த்தியும் பொதுப் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் அளவிற்கு வாழ்வின் நிதர்சனங்களைக் கற்றுக் கொடுத்த அப்பாவின் நெறிப்படுத்துதல்-


மகனுக்குத் தேவைப்பட்ட நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தானே நேரில் தார்மீக ஆதரவு மற்றும் உதவிக்காக தயாராக இருந்த அப்பாவின் அன்பு-


பணியாளர்களுடன் எப்போதும் அன்புடனும் மரியாதையுடன் நடக்க வேண்டிய மனிதப்பண்புகளுடன் அமைந்த சிறுவயது வாழ்வைக் கற்றுக் கொடுத்த அப்பாவின் கவனம்-


எக்ஸ்போர்ட் கம்பெனியில் தன் பெயரைத் தெரிவிக்காது சுயமுயற்சியில் வேலை தேடிக் கொண்ட போது அவரின் மேல் திரைத்துறையைத் திணிக்காமல் அவர் போக்கில் விட்ட பாங்கு-


1200 ரூபாய் சம்பளம் தரும் அந்த வேலைக்காக ஒருநாளின் 20 மணி நேரங்கள் வரை உழைக்க வேண்டிய சூழலிலும் கித்தாப்பான,நடிகரின் மகனாக இல்லாது தொழிலாளர் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான ஒரு தொழிற்சாலை வேலையாளாகவே உயர்ந்த விதம்-


பின்னால் திரைப்பட உலகம் அழைத்த போது அப்போதும் நீதான் முடிவெடுக்க வேண்டும்.உனக்கு உதவி தேவைப்படும் போது நான் எப்போதும் உன் அருகில் என்ற வகையில் மகனை ஆதரித்த விதம்-


திரைத்துறையில் தொடர்ந்த தோல்வி மனப்பான்மையை உடைக்க உளவியல் ரீதியாகப் பயனளிக்கும் உடல் மற்றும் மனப்பயிற்சியில் தன்னை தந்தை திருப்பி விட்ட விதம்-


ஆரம்பகாலத் தோல்விகளுக்குப் பிறகு நந்தா மற்றும் காக்க காக்க படங்களில் அங்கீகாரம் பெற்ற விதம்-


நேருக்கு நேரில் தொடங்கிய பல தோல்விகளுக்கிடையிலும் கிடைத்த நல்ல மனிதர்களின் உதவிகள்,கற்பித்த பாடங்கள்-


ஜோதிகாவின் அன்பை வென்றது-


அனைத்திற்கும் மேல் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயற்சி செய்யக் கற்றுக் கொண்ட விதம்-


எனப் பொதுவாக ஒரு சினிமாக் காரனின் அனுபவங்களாக இல்லாமல் வாழ்வில் தோல்விகளின் நிழல்களுக்குள்ளிருந்து வெற்றிக்கான வெளிச்சப் புள்ளிகள் வரும் வாய்ப்புகளையும் அதற்கான ஆயத்தங்களையும் சுவையாக சொல்லிச் செல்கிறது புத்தகம்.


0 0 0


பொதுவாக நாம் எதிலாவது அடிக்கடி தோற்றோமெனில் ஒரளவு சுய அலசல் செய்யத் தெரிந்தவர்களுக்கு அதற்கான காரணத்தை அறிவது மிகவும் கடினமான செயலல்ல;அவ்வாறான அலசல்களுக்கப் பின்னர் நம் முயற்சிகளில் வெல்வோமோ தோற்போமோ என்ற ஐயப்பாடு இருக்கும்.


நம்முடைய சுய அலசல் திறன் மேலும் கூர்மையடைந்த பின்னர் செய்யும் முயற்சிகளில் நாம் ஒரளவு அறுதியிட்டு வெல்வோமா தோற்போமா என்பதை கணித்து விட முடியும்.


பின்னர் வருவது அதற்கு அடுத்த நிலை;அதாவது சொல்லி அடிக்கும் நிலை.இந்த வகையில் முயற்சி செய்யும் போதே உறுதியாகத் தெரிந்து விடும்,நாம் வெற்றியடையப் போகிறோம் என்பது. Nothing succeed like success என்று ஒரு சொலவடை உண்டு ஆங்கிலத்தில்! அது விவரிப்பது இந்த மூன்றாவது நிலைதான்.


இந்த மூன்று நிலைகளையும் தொட்டுச் செல்கிறது புத்தகம்.


இப்படிக்கு சூர்யா- ஒரு நல்ல வாசிப்புக்கு உத்தரவாதம் !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...