தமிழே இந்திய மொழிகள் அனைத்துக்கும் மூலமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கும் சாத்தியங்களையும்,தென்னிந்திய மொழிகளான கன்னடம்,மலையாளம்,தெலுங்கு ஆகியவற்றிற்கு தமிழே மூலமொழி என்று உறுதியாகக் கருத இடமிருப்பதையும்
சென்ற பகுதியில் பார்த்தோம்.
இவற்றில் கன்னடமும்,தெலுங்கும் தமிழிலிருந்து அதிக வேறுபாடுகளையும்,மலையாளம் அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழோடு குறைந்த அளவு வேறுபாடுகளையும் கொண்டிருப்பது கண்கூடு;இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியானவை.
வட இந்தியாவில் நிலைபெற்ற ஆரியர்கள் (பிராமணர்களின் மூதாதைகள்) காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் குடியேறினார்கள்;இதனால் தமிழும் பிராகிருதமும் வடமொழியும் கலக்கும் நிலை கன்னட,தெலுங்கு தேசங்களில் ஏற்பட்டது.அந்தந்த வட்டாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப கன்னடமும்,தெலுங்கும் வட்டார மொழிகளாக தனிவடிவம் பெறத் தலைப்பட்டன.இதற்கேற்ப அங்கு சேர சோழ பாண்டிய ஆட்சியாளர்கள் அல்லாத வேறு வர்ணத்தவர்கள் ஆட்சியாளர்களாக இருந்ததும் இந்த வேறுபாடு மிகுந்ததற்கு ஒரு காரணம்.
ஆனால் கேரளத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு எட்டு நூற்றாண்டு முன்பு வரை(அதாவது கி.பி.1200 கள் வரை) கேரளத்தின் பகுதிகளிலும் தமிழே ஆட்சி மொழியாகவும்,கலைமொழியாகவும் இருந்தது.காரணம் சுமார் பதினைந்து நூற்றாண்டுக்கு முன் கேரளத்தை ஆண்ட மன்னர்கள் தமிழரசர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்;அவர்கள் பெருமான்கள்,பெருக்கன்மார்(சேரமான் பெருமான்) என்ற அபிடேகப் பெயர் கொண்டு கேரளப் பகுதியை ஆண்டு வந்தார்கள்.கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டபோது திருவிதாங்கூரைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர் தலைவராக இருந்ததற்கான் குறிப்புகள் கிடைக்கின்றன.மேலும் கிபி முதல் நூற்றாண்டு வரை கேரளப் பகுதிப் புலவர்கள் பலர் இயற்றிய பாடல்கள் தொகை நூல்களான புறநானூறு,அகநானூறு முதலியவற்றில் காணக் கிடைக்கின்றன.
சிலம்பு பாடிய இளங்கோவும் கேரளப் பகுதியைச் சேர்ந்தவரே;சேரமான் பெருமாள் நாயனார்,குலசேகர ஆழ்வார் போன்றவர்கள் கேரளப் பகுதியைச் சேர்ந்தவர்களே.இவ்வாறு கேரளம் தொன்மைமொழியான தமிழ் ஊடாடும் பகுதியாக நெடுங்காலம் இருந்ததால் மற்ற திராவிட(தென்னிந்திய) மொழிகளை விட தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒற்றுமை அதிகம் காணப்படுகிறது.
அதோடு தென்னிந்தியப் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் மிக வலுவானவர்களாகவும்,கடல் கடந்து இலங்கை,பர்மா,சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா,தெனாப்பிரிக்கா,பிஜித்தீவுகள்,மொரீஷியஸ் போன்ற பிரதேசங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியதாலும் அந்த இடங்களிலெல்லாம் தமிழும் தமிழர்களும் வாழத் தலைப்பட்டனர்.
இவற்றிற்கான குறிப்புகள் தென்னகம் மட்டுமல்லாமல் இந்த வெளிநாடுகளிலும் காணக் கிடைக்கின்றன.
கிமு 10 ஆம் நூற்றாண்டின் அரசனான சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயிற்தோகையும்,யானைத்தந்தமும்,வாசனைத் திரவியங்களையும் கொண்டு சென்றிருக்கின்றன;ஈப்ரு மொழியில் உள்ள துகி(மயில் இறகு),அஹலத்(வாசனைப் பொருள்) போன்ற சொற்கள் முறையே தோகை,அகில் ஆகிய தமிழ் வார்த்தைகளின் திரிபு.கிரேக்கத்திற்கு அக்காலத்தில்(கிமு 5’ம் நூற்றாண்டு) தமிழகம் அனுப்பிய இஞ்சியும்,பிப்பிலியுமே முறையே சிக்கிபெரஸ்,பெப்பரி(ஆங்கில ginger,pepper) போன்ற கிரேக்க சொற்களின் மூலங்கள்.அக்காலத்திய ரோமப் பேரரசின் நாணயங்கள் தமிழகப் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன;சீனத்திலிருந்து வந்த பட்டு நமது இலக்கியங்களில் கூட இடம் பெறுகிறது.
இவ்வாறு உலகின் பல பகுதிகளில் தனது மேலாண்மைத் திறத்தால் கோலோச்சிய தமிழ் இன்றைய திரிந்த திராவிட வர்க்கக் கூறுபாடுகளால்,தமிழகத்தில் கூட செழுமையான நிலையில் இல்லாத நிலை இருக்கிறது.
நமது குழந்தைகளில் பலர் தமிழை எழுதத் தெரியாமலேயே பள்ளிப் படிப்பை முடிக்கும் அவலம் நடைபெறுகிறது;இலக்கியங்களின் பரிச்சயம் இல்லாதே போகிறது;தமிழக வழிபாட்டுத் தலங்களில் கூட அருந்தமிழ்ப் பதிகங்கள் அரங்கேற மறுக்கின்றன.
ஆட்சியோ துவேஷத்தையும் வெறுப்பையும் விசிறி விடுவைதையே நிறைவேற்றியிருப்பது ஒன்றுதான் இன்றைய 'திராவிடம்' செய்திருக்கும் சாதனை என்பது எண்ணி வருந்த வேண்டிய ஒன்று.
-இன்னும் வரும்