குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label சினிமா உலகம். Show all posts
Showing posts with label சினிமா உலகம். Show all posts

Monday, October 12, 2009

106-கமலஹாசனின் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி.


கிடைத்த சிறு விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்று வந்தேன்.


முட்டாள் பெட்டியின் எந்த சானல் என்பது நினைவில் இல்லை,கமல் கலந்து கொண்ட உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சியைப் பெரும் விளம்பரத்துடன் வெளியிட்டார்கள்..


அது ஒரு போன்-இன் நிகழ்ச்சி.ரசிகர்கள் அழைத்துக் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.


கமல் மய்யம் நடத்திய நாட்களில் அவரின் எழுத்துக்கள் அவ்வப்போது கவரும்;மேலும் சுஜாதா போன்ற நபர்களின் நீடித்த நட்பு ஏற்படுத்திய பரந்த வாசிப்பனுபவம் அவருக்கு இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுத்திய ஆர்வத்தாலும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.


பார்த்தால் அனைத்து திரைப் பிரபலங்களும் ஒருவர் பின் ஒருவராக அவரை அழைத்துக் கொண்டிருந்தார்கள்;ரவிக்குமார்,எஸ்.பி.பி,கவிஞர் புவியரசு,நாசர் என்று நீண்டது பட்டியல்..நடிகர் சிவக்குமார் கூட வந்தார்..வராதது பாலசந்தரும்,ரஜினியும் மட்டும் தான் என்று நினைக்கிறேன்..


இரண்டு மூன்று அழைப்பாளர்களின் பெயரைப் பார்த்த வுடன் எனக்கே ஒரு சந்தேகம் ஏற்பட,இது போன்ற அபத்தக் காரியங்களில் எல்லாம் சாதாரணமாக ஈடுபடாத நான் கொடுக்கப்பட்ட எண்ணை முயற்சித்தேன்..


சுமார் அரைமணி நேரம் முயற்சித்தும் அந்த எண்ணை அழைக்க முடியாது என்ற பதிலே கிடைத்த போது,திரையில் பலர் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்..


ஒரு அப்பட்டமான செட்-அப் நிகழ்ச்சியாகவே அது தோன்றியது;அதிலும் ஓயாத புகழ்பாடல்..


தன்னைப் பற்றிய புகழுரைகளை அரங்கேற்றி விட்டு தானே அதை முன்னின்று ரசிப்பது ஒரு வெட்கப் படும் செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது.நமது அரசியல் பிரபலங்கள் இந்த அசிங்கத்தை அடிக்கடி அரங்கேற்றுவார்கள்.கமல் போன்ற ஒரு படிப்பாளியும் இந்த நோய்க்குழிக்குள் அடக்கம் என்று அறிந்த கணத்தில் வெறுப்பாக இருந்தது.


இந்த லட்சணத்தில் பாசாங்கான வியப்பை கமலகாசன் அடிக்கடி வெளிப்படுத்தினார்; ஓ,நீங்களா? என்ன சொல்லி வச்ச மாதிரி நண்பர்கள் எல்லாம் ஒரே நாளில் அழைக்கிறீர்கள்..வியப்பாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது..etc..etc..’ என்ற ரேஞ்சில் அளந்து கொண்டிருந்தார்..


ஒரே வார்த்தையில் சொல்வதானால் கன்றாவி..


கமல் போன்ற பிரபலங்களுக்கு,சமூகத்தில் ஏற்கனவே நல்ல மதிப்பையும் அங்கீகாரத்தையும் அடைந்தவர்களுக்கு எதற்கான இந்த விளம்பர மோகம் என்று தெரியவில்லை.


இடையில் ஒன்றோ,இரண்டோ பெயர் தெரியாத நபர்களுக்கும் வாய்ப்பு அளித்தார்கள்.


ஒரு பெண்மணி கேட்டார.. உன்னைப் போல் ஒருவனில் நீங்கள் நஸ்ருதீனை விட நன்றாக நடித்ததாக நினைக்கிறீர்களா என்ற கேள்வி கேட்டார்..


பணிவு வேஷம் காட்டிக் கொண்டிருந்த கமலகாசனின் ஆணவமுகம் அப்போது சட்டென்று தலைதூக்கியதைப் பார்க்க முடிந்தது.


ஒரு வினாடி கடினப்பட்ட அவர் முகத்தை சகஜ பாவத்திற்கு கொண்டுவர மிகவும் முயன்றார்..


அவர் அளித்த பதில்: நீங்கள்,நான் அவரை விட நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொல்வேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்(இத பார்றா..)நான் அப்படி சொல்ல மாட்டேன்.அவர் பாணியில் அவர் நடித்திருக்கிறார்,என் பாணியில் நான் நடித்திருக்கிறேன்..இதை எல்லாம் ஒப்பிட முடியாது..


ஏன் ஒப்பிட முடியாது என்று தோன்றவில்லை.


உபோஒ. ஒரு மொழிமாற்றுப் படம்.அதன் ஒரிஜினல் வெர்ஷன் வெட்னஸ்டே படம்.


அது ஒரு நல்ல விறுவிறுப்பான படமாக மாறியதற்குக் காரணம்,ஷாவின் டௌன் டு எர்த் பொது ஜனத்தைப் பிரதிபலித்த விதமும்,கெர்ரின் இயல்பான காவல்துறை கமிஷனர் பாத்திர பிரதிபலிப்பும்.


தமிழ் வெர்ஷனில் லால் கூட ஒரளவு நன்றாகச் செய்திருந்தார் என்று தோன்றுகிறது; சாதாரணமாக சென்னை பல்லவன் பேருந்தில் காணப்படும் ஒரு மனிதர்தான் உபோஒ நாயகர்;

ஆனால் கமல் செய்தது ஒரு மேட்டுக்குடி கனவானின் பிரதிபலிப்பான பாத்திரம்.


அந்தப் பாத்திரம் முழுதாக சொதப்பி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.


இதெல்லாம் ஒரு பக்கம் போக அந்த நிகழ்ச்சி நடந்த விதத்தில் என் மதிப்பில் கமல் பலபடி சறுக்கினார்..


உங்களைப் போன்ற புகழ்பெற்ற ஒரு நடிகருக்கு,படிப்பாளிக்கு,திறனாளர் என்று பரவலாக நம்பப் படும் ஒருவருக்கு இந்த வகை செட்-அப் நிகழ்ச்சி தேவைதானா நண்பரே????


நானும் கூட வழமைக்கு மாறாக அழைக்க முயன்றேன் என்று சொன்னேன் இல்லையா?

நானும் இரண்டு கேள்விகள் கேட்க எண்ணியிருந்தேன்..

அவை என்ன தெரியுமா?

முதல் கேள்வியை அந்தப் பெண்மணி கேட்டு விட்டார்..


இரண்டாம் கேள்வி நடிகர்களின் தமிழகத்தின் இந்தியாவின் சகல பிரச்னைகளுக்கும் தீர்வளிப்பவர்களாக,மீட்பர்களாக,தலைமைத்துவத்துக்குத் தேவையான முதல்நிலை நபர்களாகப் பார்க்கப்படும் 2000ங்களின் நிலை பற்றிய அவர் கருத்து என்ன?


ஒரு வேளை இணைப்பு கிடைத்து,ஒரு வேளை இந்தக் கேள்வி அனுமதிக்கப்பட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் ?????

Tuesday, February 24, 2009

95.தமிழன் : சாதனைச் சிகரமும்,வேதனை அவலமும்





தமிழனுக்கு ஒரு ஆஸ்கர் பரிசு கிடைப்பது எக்காலம் என்று பல காலம் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது போல இருந்த சூழல்தான் இதுவரை இருந்தது.





ஆஸ்கர் வெல்லப்பட்டால் கமலஹாசன்,மணிரத்னம் மற்றும் சங்கர் போன்றோர்தான் எப்போதாவது அதை சாதிக்க முடியும் என்று பரவலான ஒரு எண்ணமும் எதிர்பார்ப்பும் இருந்தது.ஆனால் இனிய ஒரு தென்றல் போல,மின்னும் மின்னல் வீச்சைப் போல,ஒளிர்ந்து மிளிரும் வாள்வீச்சின் கூர் போல சட சடவென கோல்டன் குளோப்,பாஃப்டா,ஆஸ்கர் என்று ஒரே வீச்சில் விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறார் ரகுமான் என்ற திலீப்குமார்.அதுவும் ஒன்றுக்கு இரண்டாக !



Slum dog Millionaire என்ற அந்தப் படத்தின் மையக்கருத்து ஒரு சாதாரணன் கோடீஸ்வர ஜாக்பாட் அடித்த சம்பவத்தை விவரிக்கும் விவரணத்தைச் சொல்லும் படமென்றாலும் அதன் பின்னணிக் கதை இந்தியாவின்,மும்பையின் ஏழ்மை வாழ்வின் அவலங்களை,அவற்றின் அவல மற்றும் கேவலப் பார்வையுடன் முன்வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.அந்தப் படம் சொன்ன உள்ளார்ந்த செய்தியை என்னால் சிலாகித்துப் பாராட்ட முடியவில்லை,அது உண்மையாக இருந்த போதிலும்! ஒரு பார்வையாளனின் பார்வையோடு சேர்க்கப்பட்ட ஏழமை வாழ்வு மற்றும் மும்பை வாழ்வின் கலவரங்கள் சார்ந்த ஒரு எள்ளலும் அந்தப் படத்தின் சம்பவங்களில் மறைந்திருந்தது.சொல்லப் போனால் அமெரிக்க நிலவரத்தில்,வாழ்வியலில் இந்தப் படத்திற்கு கிடைத்த அதீத வெளிச்சத்தின் பின்னணி,இந்தியாவின் அவலத்தின் மீது வெளிச்சமடிக்கும் வெள்ளைத் தோலின் ஆர்வமே காரணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.



இந்தப்படம் சார்ந்த தி சண்டே இந்தியன் பத்திரிகையின் ஆசிரியர் எழுதும் வலைப்பக்கத்தில்-Passionate About India- இந்தப் படம் சார்ந்த பதிவு, இந்த வெள்ளை மனோபாவத்தின் நீள அகல ஆழங்களை சரியான பார்வையில் முன் வைக்கிறது.அந்தப் பதிவின் பல பார்வைகளுடன் நான் ஒத்துப் போகிறேன்.



ஆனால் இவை எல்லாம் இந்தப் படத்தின் ஆன்மாவைப் பற்றியவை.



இந்த எல்லாவற்றின் மத்தியிலும் ஒரு படமாக சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் எடிட்டிங்,ஒளிக்கோர்வை,இயக்கம் ஆகியவற்றில் இந்தப்படத்தின் ஆக்க நேர்த்தி வியக்க வைத்த ஒன்று.நான் பார்க்கக் கிடைத்த இணையப் பிரதியிலும் கூட படத்தின் தெளிவும் மற்ற மேற்கூறிய நேர்த்தியும் பாராட்ட வைத்தது உண்மை.



ரகுமானைப் பொறுத்தவரை அவரது இசை subtle ஆக படத்தின் கதையோடு கூடவே இழைந்து சென்றது என்று தாராளமாகச்சொல்லலாம்.சிலர் இசை தனித்துக் கொண்டாடும் அளவுக்கு இல்லை என்று கருத்தளித்தார்கள்.தனித்துத் தெரியாத அந்த இசைதான் ரகுமான் இந்தக் கதைக்கு அளித்த பலம் என்று எனக்குப் படுகிறது.அந்தக் கடைசிப் பாட்டு ஒரு கொண்டாட்டம்.





எனவே எதிர் பார்த்த படி இசைக்கோர்வை மற்றும் அந்தக் கடைசிப்பாடல் இரண்டிலும் விருது வென்றிருக்கிறது.ரகுமான் பாராட்டப் படவும் கொண்டாடப்படவும் வேண்டியவர்.





பாராட்டுக்கள் சக தமிழா!





ஆனால் ஒரு படமாக அவருடைய ரங் தே பசந்தி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் மேலும் நெகிழ்வூட்டியவை என்பதையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.





மேலும் இந்த நேரத்தில் ஆஸ்கர் ஆஸ்கர் என்று சுமார் 10,20 ஆண்டுகளாகப் பீலா விட்டுக்கொண்டிருக்கும் கமலஹாசன் வகையறாக்கள் ஒரு படத்தின் ஆக்க நேர்த்தி சார்ந்த விதயங்களில் பார்த்து திருத்திக் கொள்ள வேண்டிய வகையான படம் Slum dog Millionaire.தசாவதாரம் போன்ற படங்களுக்கெல்லாம் ஆஸ்கர் கிடைக்கும் என்ற,அந்தப் படம் வெளிவந்த நேர ஊடகப் பீலாவை நினைக்கையில் சிரிப்பு பீரிடுகிறது.







0 0 0





ஹரனின் இந்தக் கருத்துப் படம் சொல்வதை விட இலங்கை நிகழ்வுகளை வார்த்தைகள் விவரித்து விட முடியாது.






அங்கு நிகழும் செயல்களைப் பார்த்தால் மனம் பதறுகிறது.மன அதிர்ச்சிக்கும் அவலத்திற்கும் விளிக்கப் படவேண்டிய எல்லா சொற்களையும் தாண்டிய அவலத்தைப் பிரதிபலிக்கிறது இலங்கைத் தமிழர்களின் நிலை.வாருங்கள்,பாதுகாப்பு தருகிறோம் என்று கூப்பிட்டு பாஸ்பரஸ் குண்டுகளை வீசி அவர்களை அழிக்கும் ஒரு அரசை என்னவென்று வகைப்படுத்துவது என்று தெரியவில்லை.








கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட எண்ணற்ற இளைஞர்களின் பிணங்கள் வன்னி,புதுக் குடியிருப்பு பகுதிகளில் கேட்பாரற்றுக் கிடப்பதாக ஐநா சார்ந்த ஊடகவியலாளர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.





விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்,ராஜீவைக் கொன்றார்கள் போன்ற பார்வைகளெல்லாம் நீர்த்துப் போகும் அளவுக்கு இருக்கிறது அப்பாவி மக்களின் அவல நிலை.இந்தியா பேசா மடந்தையாக இருப்பதுடன் இலங்கை அரசுக்கு தார்மீக ஆதரவு தருகிறது என்ற நிலைப்பாடு தந்த இறுமாப்பில் இந்த நிலையை முழுதும் உபயோகப்படுத்தி இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் முற்றாக அழித்து விடலாம் என்ற எண்ணத்துடன்தான் கோத்தபய மற்றும் ராஜபட்சேயின் கூட்டணி செயல்படுகிறது.புலிகளுடன்தான் சண்டையிடுகிறோம் என்று சொல்லும் இந்தக் கூட்டணியின் தாக்குதல்களுக்குப் பெருமளவு பலியாபவர்கள் அப்பாவிகளே!இவர்கள் அனைவரையும் கொன்ற பின்னால்தான் புலிகளை அழிக்க முடியும் என்பது ஒரு கேணவாதம்.அந்த நிலையிலும் புலிகள் பிடிபடவோ அழிபடவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.இன்னும் புலிகளைப் பிடிக்கவோ,அழிக்கவோ இலங்கை விரும்பினால்,அங்குள்ள தமிழர்களின் மனங்களை வென்றால்தான் அது சாத்தியம்;இலங்கையோ அவர்களின் பிணங்களை வெல்கிறது....





இந்தியாவின் மைய அரசு இந்த விவகாரத்தை அணுகுவது சோனியா என்ற தனி மனிதப் பெண்ணின் பார்வையில் தான் என்று கருதுவதற்கான சாத்தியங்கள் மிகவும் தெரிகின்றன.ஒரு அண்டைய தேசத்தின் அரசாக,தமிழர்களை குடிகளாகக் கொண்ட இந்திய அரசு இலங்கை விதயத்தில் மிகத்தவறான பார்வையில்,செயல்பாட்டில் இருக்கிறது.





அமெரிக்க அரசை தலையிட வைக்க வேண்டும் என்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரிதும் முயற்சிக்கும் இந்த வேளையில்,அமெரிக்கா அவல நிலையில் இருக்கும் முல்லைத்தீவு அப்பாவித் தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்கில் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.





இது நடந்தால் மிக நல்லது.அப்படி அமெரிக்கத் தலையீட்டிலாவது இலங்கைத் தமிழ் மக்களின் அவலம் குறைந்தால் இந்திய அரசு தன் அசட்டு முகத்தைத் எங்கே வைக்கும் என்று தெரியவில்லை!



Monday, February 2, 2009

93.ஒப்பனை உலகின் சில உண்மை முகங்கள்

முத்து எடுக்கலாம் என்று கடலில் மூழ்குபவன் செத்துப் போவதும் உண்டு;செத்துப் போகலாம் என்று கடலில் விழுபவன் கை நிறைய முத்துக்களை அள்ளிக் கொண்டு வருவதும் உண்டு.படித்ததுமே எனக்குப் பிடித்த வாசகம் இது.இதில் நான் இரண்டாவது ரகம்.எனக்கு முத்து எடுக்கத் தெரியாது என்பது மட்டுமல்ல;முத்து எடுக்க வராது என்று முழுமையாக நம்பிக் கொண்டிருந்தவன் நான்.கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளஞ்சல்களைக் கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொத்து.


இப்படித் தொடங்கும் அந்தப் புத்தகம் விவரிப்பது இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பிரபலத்தின் இளமைப் பருவம் முதல் சமீப காலம் வரையான கதை.


இன்றைய அவரது உயரத்திற்கும் அவரது இளமைப்பருவ பயங்களுக்கும் தோல்விகளுக்கம் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா என வியக்க வைக்கும் அளவுக்கு சிறுவயது பயங்கள்,தோல்விகளை கண் முன்னே விரித்துப் பரப்பிச் செல்லும் அவரின் மீது பெருமளவு மரியாதை வந்தது உண்மை.


படிக்க எடுக்கும் போது எந்த ஒரு முன் விருப்புகளுமின்றி ஒரு மேம்போக்கான பிதற்றல்களும் சுய பிரதாபங்களும் நிரம்பிய கதையாக இருக்கும் என்றுதான் நினைத்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.

ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்தில் தன்னைப் படிக்க வைத்தது அந்த 200 சொச்சம் பக்கப் புத்தகம்!


ஏழாம் வகுப்பில் உங்கள் மகன் தேர்ச்சி அடைவதற்கு வாய்ப்பில்லை;தொடர்ந்து எங்கள் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் நாங்கள் அவனை தேர்வாக்காமல் இருப்பதை விட வேறு வழியில்லை;இல்லை வேறு பள்ளிக்குக் கொண்டு சேர்ப்பதானால் தேர்ச்சி அளித்து பள்ளிமாற்று சான்றிதழ்-ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட்-தருகிறோம்.என்ன முடிவு சொல்லுகிறீர்கள்? என்று பள்ளித் தலைமையாசிரியர் தந்தையைக் கூப்பிட்டு சொல்லுமளவுக்கு தோல்வியியையும் தோல்வி மனப்பான்மையையும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் தன் துறையில் உச்சத்தை தொட்டது மட்டுமல்ல, தமிழகத்திலேயே அழகான பெண்ணின் காதலையும் வென்று வாழ்க்கையிலும் வெற்றி பெற்ற கதையை விவரிக்கும் அந்தப் புத்தகம் நடிகர் சூர்யா என்று அறியப்பட்ட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் தன்னுடைய வாழ்வின் அனுவங்களைச் சொன்ன இப்படிக்கு சூர்யா என்ற புத்தகம்!


0 0 0


ஒரு பிரபல நடிகர் அப்பா;வாழ்வின் அடிப்படையான வசதிகளுக்கு எந்த வித குறைகளும் இல்லை;நல்ல ஆரோக்கியமான சூழலில் அமைந்த வீடு....இப்படி இருந்தும் சிறுவயது சூர்யாவுக்கு தெனாலி கமல் மாதிரி பல பயங்கள் இருந்திருக்கின்றன;இன்னும் சொன்னால் எதில் ஈடுபட்டாலும் நாம் நிச்சயம் தோற்போம் என்று எந்த வித ஐயமும் இல்லாமல் நம்பும் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கிறார்.


வகுப்பில் ஹிந்தி மொழியோ அல்லது கணக்குக் கேள்விகளோ வரும்போது வரிசைப்படி கேள்வி வரும்போது கேள்வி வரும் முதல் வரிசையைத் தவிர்க்க இரண்டாவது வரிசைக்கு மாறியும்,கேள்வி இரண்டாவது வரிசைக்கு வரும் போது திரும்ப முதல்வரிசைக்கு மாறியும் தப்பிக்கும் மாணவனாக தான் இருந்ததை ஒளிவு மறைவின்றி ஒத்துக் கொள்கிறார் சூர்யா!

ஆனால் இந்தக் குறையுடைய குழைந்தைக்கு தான் ஒரு பிரபல நடிகராக இருந்தும் தனது மகனுக்க ஒரு அப்பாவாக அற்புதமான ஒரு கடமையாளராக சிவகுமார் தன் மகனுக்கான நல்ல வழிகாட்டியாகவே எப்போதும் இருந்திருக்கிறார்,குடும்பத்திற்கான அவரது குவாலிடி நேரம் மிகக் குறைவாகவே கிடைத்த போதிலும்!


மற்றுமொரு விதத்திலும் தனது பயங்களுக்கு உளவியல் ரீதியான வலுவான காரணத்தையும் ஒளிக்காமல் முன்வைக்கிறார் அவர்.


தான் இப்படித் தோல்வியின் இருட்டு மூலைகளுக்குள் முடங்கிய இளவயது சூர்யாவின் அடைக்கலம் பெரும்பாலும் அவரது அம்மா.எல்லாக் குழந்தைகளைப் போலவும் ஏம்மா எனக்கு மட்டும் இப்படி? என்று கேட்டிருக்கிறான் அந்தச் சிறுவன்;ஆனால் திரைப்படங்களில் போல சிறுவயது பாலகனாக இருக்கும்போதே அல்ல;பின்னர் வளர்ந்து வெற்றி வசப்படும் என்ற நம்பிக்கை வந்த காலங்களில்.


மகனின் கேள்விக்கான பதில் அம்மாவின் வார்த்தைகளில்...


மிகவும் கண்டிப்பான ஊர்க் கவுண்டர் எங்க அப்பா.எங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவற செய்தாலும் ஒரு சினிமாவுக்குப் போகனும்னாலும் தான் போய்ப் பார்த்து விட்டு வந்து அது நல்ல படம்,வன்முறை ஆபாசங்கள் இல்லை என்று தோன்றினால் மட்டுமே பிறகு குழந்தைகளை அழைத்துப் போகிற அப்பா.


இந்த சூழலில் வளர்ந்த எனக்கு ஒரு நாள் கல்லூரியில் இருந்து வந்ததும் ஒரு போட்டோவைக் காட்டினார்கள்,போட்டோவில் கோட் சூட் அணிந்து உன் அப்பா.இவர்தான் மாப்பிள்ளை என்றார்கள்,மனதில் ஒட்டவே இல்லை;போதாதற்கு பிரபல நடிகர் என்றார்கள்,நானோ அவர் நடித்த ஒரு படத்தையும் பார்த்திருக்கவில்லை.பெண்பார்க்கும் போது நேரிலாவது பார்க்கலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர் வரவில்லை,பெண் பார்த்துவிட்டுப் போனபிறகு ஜாதகம் சரி இல்லை போன்ற பிரச்னைகள் கிளர்ந்தால் பெண் மனதில் தேவையற்ற தாக்கங்கள் ஏற்படும்,பின்னர் பார்க்கிறேன் என்று விளக்கம் சொல்லி நண்பர்களை அனுப்பி வைத்தார் உன் அப்பா.


நேரில் பார்த்துக் கூட முடிவு செய்யாத அவருக்குப் பெண்கள் பற்றிய என்ன கண்ணோட்டம் இருக்கும் என்று நொந்த நான் வேதனையைத் தவிர ஒன்றும் வழி இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்


இப்படியான மன பயத்தில் இருந்த அவருடைய திருமண நிச்சயதார்த்தம் அன்றுதான் அவர் சிவகுமாரைப் பார்த்திருக்கிறார்.திருமணம் நிச்சயிக்கப் பட்ட அன்றே படப்பிடிப்புக்குச் சென்று விட்டிருக்கிறார் சிவக்குமார்.


திருமணத்தன்றும் படப்பிடிப்பில் இருந்து சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறார் சிவக்குமார்.திருமணமும் தொடர்ந்த வரவேற்பும் தமிழகத்தின் பல பிரபலங்கள் கூடிய கூட்டம்;சிலருக்கு இந்த வகையான பெரும் பிரபலஸ்தர்கள் கூடி நடந்த திருமணம் மிக்க மகிழ்வை அளித்திருக்கும்;ஆனால் சூர்யாவின் அம்மாவிற்கு ஒரு வகையான மிரட்சியையும் மனத் தயக்கத்தையும்,இவர் ஏதோ அவசரப்பட்டு தன்னைத் திருமணம் செய்திருக்கிறாரோ என்ற விதமான பயங்களையும் சூர்யாவின் அம்மாவுக்கு அளித்திருக்கிறது.


திருமணம் முடிந்த நேரம் சிவகுமார் துணைப்பாத்திரங்களை விட்டு தனி கதாநாயகனாக முன்னேற ஆரம்பித்திருந்த நேரம்;காலையில் படப்பிடிப்புகள் மதியத்திற்குப் பிறகு நாடக உலகம் என்று ஓடிக் கொண்டிருந்த அவர் நல்ல கணவனாக இருக்க பெரிதும் முயன்றும் அதை மனைவி புரிந்து கொள்ளும் அளவிற்கான கால அவகாசம் ஒதுக்கி அவருக்குப் புரியவைக்க இயலாத சூழலும்,பரபரப்பான சென்னை வாழ்க்கையும் ஒரு வித மிரட்சியைத் தந்திருக்கிறது அவரது மனைவிக்கு.


பெரியவர்கள் எல்லாவற்றையும் கருதி கோவையிலிருந்து உடன் துணையாக இருக்கட்டும் என்று அனுப்பி வைத்த சிவகுமாரின் சகோதரி மகளின் எதிர்பாராத வகையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாட்டி பலியாக,அந்த நேரத்தில் அவரது மாமியாருக்கும் பேத்தியின் மரணம் தந்த அதிர்ச்சி உடல் நலத்தை நலிய வைக்க,அந்த நிலையில் சரவணனை சூல் கொண்டிருக்கிறார் அவரது அம்மா.


கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து,ஒரளவு உலகம் புரிந்த பெண்ணாக வளர்ந்த எனக்கே முற்றிலும் புதிய சூழலில் அமைந்த மணவாழ்க்கை இறுக்கமாகவும் போராட்டமாகவும் இருந்தது.எனது தயக்கங்கள்,தவிப்புகள்,குழப்பங்கள் இவற்றோடு ஜானகியின் மரணமும் சேர்ந்து கொள்ள,கருவாக என் வயிற்றிலிருந்த உன்னையும் அது பாதித்திருக்கிறது.அதிலிருந்துதான் மீண்டு வந்திட்டியே கண்ணா.. என்று தலையைக் கோதிவிட்டார் அம்மா என பதிந்திருக்கிறார் சூர்யா.


0 0 0


இந்த வகையான மனத்தயக்கங்களுடைய சிறுவனாக வளர்ந்த சரவணனின் கூட்டப்புழு வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நியதிகளுடன் வாழ்ந்த தந்தையால் எப்படி செப்பம் பெற்று வண்ணத்துப் பூச்சியானது-


நடிகரின் குழந்தைகளாக இருந்தும் சரவணனும் கார்த்தியும் பொதுப் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் அளவிற்கு வாழ்வின் நிதர்சனங்களைக் கற்றுக் கொடுத்த அப்பாவின் நெறிப்படுத்துதல்-


மகனுக்குத் தேவைப்பட்ட நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தானே நேரில் தார்மீக ஆதரவு மற்றும் உதவிக்காக தயாராக இருந்த அப்பாவின் அன்பு-


பணியாளர்களுடன் எப்போதும் அன்புடனும் மரியாதையுடன் நடக்க வேண்டிய மனிதப்பண்புகளுடன் அமைந்த சிறுவயது வாழ்வைக் கற்றுக் கொடுத்த அப்பாவின் கவனம்-


எக்ஸ்போர்ட் கம்பெனியில் தன் பெயரைத் தெரிவிக்காது சுயமுயற்சியில் வேலை தேடிக் கொண்ட போது அவரின் மேல் திரைத்துறையைத் திணிக்காமல் அவர் போக்கில் விட்ட பாங்கு-


1200 ரூபாய் சம்பளம் தரும் அந்த வேலைக்காக ஒருநாளின் 20 மணி நேரங்கள் வரை உழைக்க வேண்டிய சூழலிலும் கித்தாப்பான,நடிகரின் மகனாக இல்லாது தொழிலாளர் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான ஒரு தொழிற்சாலை வேலையாளாகவே உயர்ந்த விதம்-


பின்னால் திரைப்பட உலகம் அழைத்த போது அப்போதும் நீதான் முடிவெடுக்க வேண்டும்.உனக்கு உதவி தேவைப்படும் போது நான் எப்போதும் உன் அருகில் என்ற வகையில் மகனை ஆதரித்த விதம்-


திரைத்துறையில் தொடர்ந்த தோல்வி மனப்பான்மையை உடைக்க உளவியல் ரீதியாகப் பயனளிக்கும் உடல் மற்றும் மனப்பயிற்சியில் தன்னை தந்தை திருப்பி விட்ட விதம்-


ஆரம்பகாலத் தோல்விகளுக்குப் பிறகு நந்தா மற்றும் காக்க காக்க படங்களில் அங்கீகாரம் பெற்ற விதம்-


நேருக்கு நேரில் தொடங்கிய பல தோல்விகளுக்கிடையிலும் கிடைத்த நல்ல மனிதர்களின் உதவிகள்,கற்பித்த பாடங்கள்-


ஜோதிகாவின் அன்பை வென்றது-


அனைத்திற்கும் மேல் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயற்சி செய்யக் கற்றுக் கொண்ட விதம்-


எனப் பொதுவாக ஒரு சினிமாக் காரனின் அனுபவங்களாக இல்லாமல் வாழ்வில் தோல்விகளின் நிழல்களுக்குள்ளிருந்து வெற்றிக்கான வெளிச்சப் புள்ளிகள் வரும் வாய்ப்புகளையும் அதற்கான ஆயத்தங்களையும் சுவையாக சொல்லிச் செல்கிறது புத்தகம்.


0 0 0


பொதுவாக நாம் எதிலாவது அடிக்கடி தோற்றோமெனில் ஒரளவு சுய அலசல் செய்யத் தெரிந்தவர்களுக்கு அதற்கான காரணத்தை அறிவது மிகவும் கடினமான செயலல்ல;அவ்வாறான அலசல்களுக்கப் பின்னர் நம் முயற்சிகளில் வெல்வோமோ தோற்போமோ என்ற ஐயப்பாடு இருக்கும்.


நம்முடைய சுய அலசல் திறன் மேலும் கூர்மையடைந்த பின்னர் செய்யும் முயற்சிகளில் நாம் ஒரளவு அறுதியிட்டு வெல்வோமா தோற்போமா என்பதை கணித்து விட முடியும்.


பின்னர் வருவது அதற்கு அடுத்த நிலை;அதாவது சொல்லி அடிக்கும் நிலை.இந்த வகையில் முயற்சி செய்யும் போதே உறுதியாகத் தெரிந்து விடும்,நாம் வெற்றியடையப் போகிறோம் என்பது. Nothing succeed like success என்று ஒரு சொலவடை உண்டு ஆங்கிலத்தில்! அது விவரிப்பது இந்த மூன்றாவது நிலைதான்.


இந்த மூன்று நிலைகளையும் தொட்டுச் செல்கிறது புத்தகம்.


இப்படிக்கு சூர்யா- ஒரு நல்ல வாசிப்புக்கு உத்தரவாதம் !

Friday, September 12, 2008

***** 76.ஒரு நடிகரின் பேட்டி

ஒரு பேட்டி :

''னக்கு விரோதிங்க அதிகம். துப்பாக்கியும் கத்தியும் இல்லாம நான் நாடகத்திற்குப் போகமாட் டேன். எல்லோரும் என்னைப் 'பொல்லாதவன், ரௌடி, அநாகரிகப் பயல்'னு நினைச்சுக் கிட்டிருக்காங்க. இருக்கட்டும். எனக்கு ஒரு விதத்திலே அது சௌகரியமாயிருக்கு. என்னைப் பார்க்கப் பயந்துகிட்டு ஒருத்தரும் எங்கிட்டே வர்றதில்லே. அதனால என்னைச் சுத்தி அநாவசியக் கும்பல் கிடையாது. நான் உண்டு, என் தொழில் உண்டு, என் தோட்டம் உண்டுன்னு நிம்மதியா இருக்கேன்.''


''தோட்டமா?''


''ஆமா... இங்கே திருப்போரூர் போற வழியிலே கொஞ்சம் நிலம் இருக்கு. அதுலே நெல் பயிராவுது. அப்புறம் கோடம்பாக்கத்துக்கு அந்தாண்டே, எம்.ஜி.ஆர். தோட்டத்துக்கு எதிர்லே கொஞ்சம் வாங்கியிருக்கேன். அங்கே காய்கறியெல்லாம் போடப் போறேன். மாடுங்க வேற வளர்க் கிறேன். காலையிலே, நாலரைக் கெல்லாம் எழுந்து அங்கே போயிடு வேன். கிணறு வெட்டறது, வரப்பு கட்டறது, வேலி போடறது... இந்த வேலையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏதோ... சம் பாதிச்சாச்சு. வயசோ ஐம்பத்தாறு ஆவுது. இனிமே குடும்பம், கொழந் தைங்கன்னு நினைக்கத் தோணுது. விவசாயத்திலே புத்தி போவுது.


இதுக்கு நடுவுல யாராவது வந்து கூப்பிட்டா, போயி நடிக்கிறேன். அவ்வளவுதான்! நான் ஒருத்த ரையும் போய்ப் பார்க்கிறதில்லே; சான்ஸ் கொடுன்னு கேட்கறதும் இல்லே. மத்தவங்க மாதிரி இவ னைப் போடாதே, அவளோட நடிக்கமாட்டேன்னு கண்டிஷ னெல்லாம் போடறதும் கிடை யாது!''



''அந்தக் காலத்திலே என்னை, 'டக்ளஸ் பார்ப்பாங்ஸ்'னு சொல்லு வாங்க. அவர் நடிக்கிற படங் களையெல்லாம் ஒண்ணு விடாம பார்ப்பேன். அவர் மாதிரி 'ஸ்டண்ட் வேலை' செய்யோ ணும்னு ஆசை. ராஜசேகரன்லே நடிக்கிறபோது, பூந்தமல்லி குருடர் பள்ளிக்கூடத்தின் மாடி யிலேருந்து கீழே குதிச்சேன். கால் முறிஞ்சு போச்சு! இப்போ 'ட்யூப்' (Dupe) வெச்சு 'ஸ்டண்ட்' செய்ய றாங்களே, அதெல்லாம் அப்போ தெரியாது. டைரக்டர் 'குதிடா'ன் னாரு. குதிச்சுட்டேன்!''


''அப்புறம் படத்தை எப்படி முடிச்சாங்க?''


'' அதெல்லாம் கெட்டிக்காரங்க, க்ளோஸப்பா எடுத்து ஒரு மாதிரி கதையை முடிச்சுட்டாங்க. கால் குணமாக நாலு வருஷம் ஆச்சு. அப்புறம், மாடர்ன் தியேட்டர்ஸ்லே சேர்ந்து நாலஞ்சு படம் நடிச்சேன். டி.ஆர்.சுந்தரத்திற்கும் எனக்கும் சின்ன தகராறு ஒண்ணு வந்தது. அங்கே சுயமரியாதையோடு வாழ முடியாதுன்னு தெரிஞ்சது. இந்தச் சினிமாத் தொழிலே வாணாம்னு முழுக்குப் போட்டுட்டு மறுபடியும் நாடகத்துக்கே வந்துட்டேன். அப்புறம் நான் திரும்பி வந்தது 'இரத்தக் கண்ணீர்' சினிமாவுக்குத்தான். பாண்டிச்சேரிலே நாடகம் போட்டுக்கிட்டிருக்கிறபோது என்னை வந்து கூப்பிட்டாங்க. லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தா நடிக்கிறேன்னு சொன் னேன். கொடுத்தாங்க. அவ்வளவு பணம் முதல்லே வாங்கின நடிகன் நான்தான்.''


''அரசியல்லே உங்களுக்கு எப்படிச் சம்பந்தம் ஏற்பட்டது?''


''நான் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது. திராவிடக் கட்சியிலும் நான் மெம்பர் இல்லே. ஆனா, ஐயாகிட்டே ஒரு மரியாதை. அவர் பேச்சைக் கேட்டு நான் ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்திலே நான் பகவத்சிங் ஆளு. அந்தத் தியாகியின் வீரம் என் ரத்தத்திலேயும் ஓடிச்சு. அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது! ஒரு சமயம், நான் கொட்டகை வாடகை கொடுக்கலேனு என் சாமானையெல்லாம் ஜப்தி பண்ணிட்டாரே! அப்புறம் அவரே டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து என் நாடகத்தைப் பார்த்தாரு. 'இவனும் நம்ம வேலையைத்தான் செய் யறான்'னு ஓப்பனா மேடை மேலே ஏறி ஒப்புக்கிட்டாரு.''


''தமிழ் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?''


''தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா. 'சப்ஜெக்ட்' தான் 'அட்வான்ஸ்' ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி, படத்தை ஓட்டப் பாக்கறாங்க. என்னங்க வெட்கக் கேடு இது? இதுவா முன்னேற்றம்? ஒண்ணு சொல்றேன் கேளுங்க... நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப்-பட உலகம் உருப்படும். அப்போதான் முதலாளிங்க புது ஆசாமிங்-களா போட்டு நல்ல கதைங் களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?''


''சினிமாவாலே சமூகத்திற்குத் தீமைதான், நன்மையே கிடை யாதுன்னு சமீபத்திலே நீங்க பேசினதுக்கு, 'இந்தத் தொழில்லே சம்பாதிச்சுக்கிட்டே அப்படிப் பேசு வது முறையா?'ன்னு சில பேர் ஆத்திரப்பட்டாங்களே..?''


''ஆமா, எங்கிட்டே கூடத்தான் சொன்னாங்க. உள்ளே இருக்கிற வனுக்குத்தான் அதிலுள்ள தீமை யெல்லாம் தெரியும். அவன்தான் 'அதாரிட்டி'யோட பேச முடியும் அதுலேயே இருந்துகிட்டு அதைத் திருத்தறவன்தான் தைரியசாலி!"

இப்போது மீண்டும் நான் :

மேற்கண்ட பேட்டி திரு.எம்.ஆர்.ராதா அவர்களிடமிருந்து 60 களில் எடுக்கப்பட்ட ஒன்று.

சென்னை, சிந்தாதிரிப்பேட் டையில் பிறந்து வளர்ந்து, ஏழு வயதில் ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பிறகு பல கம்பெனிகள் மாறி, தனி கம்பெனி ஏற்படுத்திக் கொன்டவர் எம்.ஆர். ராதா.


நடிகர்கள் தங்களை கடவுளர்களுக்கு அடுத்தபடியான மக்களை உய்விக்கும் அவதாரங்களாக எண்ணிக் கொள்ளாத காலத்தைச் சேர்ந்த நடிகர்ளில் ஒருவர் அவர்.


இத்தனைக்கும் satirism என்ற விமர்சன வகை நடிப்பு மூலமே நடித்து,திரையுலகில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சமமான புகழுடன் விளங்கியவர் ராதா.


திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைகின்றன என்ற எண்ணமெல்லாம் சிறிதுமின்றி நாடகங்களில் சக்கைப்போடு போட்டவர்.


மக்களுக்கு திரைப்படங்களுக்கு இணையாக நாடகங்கள் மேலும் தீராத காதல் இருந்தது;நாடக உலகமும் பெரும் ஜாம்பவான்களால் நிறைந்திருந்தது.


ஆர்.எஸ்.மனோகர்,சோ.ராமசாமி,ராதா,பாலசந்தர் ஆகியோர்கள் நாடக உலகில் பின்னி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.


70 களின் துவக்கத்தில் நாடக உலகம் சிறிது சிறிதான சரியத்தொடங்கியது;நாடகம் நடத்த ஒவ்வொரு ஊராக நாடகக் குழுவினர் பயணம் செய்யும் பாடுகளை விட,திரைப்படப்பெட்டி ஒரு ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டு காண்பிக்கப்படும் வசதி,திரைப்படங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவி செய்தது. இதற்கு திரைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களும் ஒரு காரணம் எனலாம்,இதனால் ஏகப்பட்ட படங்கள் 60 களின் இறுதியிலும்,70 களின் தொடக்கத்திலும் வெளிவர ஆரம்பித்தன.

இத்தகைய காலகட்டத்தில் நாடகம்,சினிமா ஆகிய இரண்டு துறைகளிலும் வெளுத்துக் கட்டியவர் எம்.ஆர்.ராதா.

இன்றைய நடிகர்கள் வீங்கிப்போன அவதார பிம்பங்களுடன் வலம் வந்து,அடுத்த முதல்வர் கனவுகளில் வலம்வரும் வேளையில்,ஒரு வெற்றிகரமான நடிகராக இருந்தும் எம்.ஆர்.ராதாவின் வெளிப்படையான் பேச்சும்,'என்னைப் போன்ற கிழடுகள் ஒதுங்க வேண்டும்' என்ற அவரின் கூற்று,மேலும் சினிமா தயாரிப்பு என்பது ஹீரோக்கள் கைக்குப் போகாமல் தயாரிப்பாளர்,இயக்குநர் கையில் இருக்க வேண்டும் என்பதிலும் அவருடைய தொழில் நேர்மை தெரிகிறது.

அவருடைய காரசாரமான இந்தவகை விமர்சனங்கள் இன்றைய சினிமா உலகுக்கும் பொருந்துவதுதான் வேடிக்கை !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...