ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே
நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : இராமச் சந்திரக் கவிராயர்
காலம் : 19|20'ம் நூற்றாண்டு
முன்னோட்டம்:
நூலாசிரியர் இராமச் சந்திரக் கவிராயர் இராசு மண்டலம் என்னும் ஊரில் ( இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம்) பிறந்து சென்னப் பட்டனத்தில்(இன்றைய சென்னை) வாழ்ந்தவர்.
நாடகக் கவிதை நூல்கள் பல எழுதியிருக்கிறார். சித்திரக் கவி எழுதுவதிலும் வல்லவர்.சித்திரக் கவி என்பது கவிதையைச் சித்திர வடிவில் எழுதுவது.
சித்திரத்தின் எப்பக்கத்திலிருந்து படித்தாலும் கவிதை பொருள் தருமாறு எழுதப்பட்டிருக்கும்.
சித்திரக் கவிக்கு ஒரு எடுத்துக் காட்டு கீழே வருமாறு..இந்தப் பாடலுக்கான விளக்கத்தை இன்னொரு நாளொரு பாடல் பகுதியில் பார்க்கலாம்.
![]() |
| சித்திரக் கவி - நான்கு ஆரச் சக்கர பந்தம் |
இவ்விதமான சித்திரக் கவிகள் எழுதுவதில் திறமைசாலியான கவிராயராக இருப்பினும், இன்றைக்குப் பார்க்கப் போகும் பாடல் எளிய, சுவையான பாடல்.
கருத்து:
ஆசாமியின் வீட்டின் பசு கன்று ஈன்றிருக்கிறது;
வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கிறது;
பெய்த கடுமழையில் கூரையோ, ஓடோ போட்டிருக்கும் எளிய வீடு விழுந்து விட்டிருக்கிறது;
வீட்டில் மனைவிக்கோ சுகவீனம்;
வேலைக்காரன் இறந்துவிட்டான்;
பெய்த மழை ஈரத்தில் விதை நெல்லையாவது நிலத்தில் நட்டு விடலாம் என்று வயலுக்கு விதை நெல்லை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் ஆசாமி;
ஆனால் வழியிலே கடன் கொடுத்தவர் மறித்துக் கொண்டு,நெல்லைப் பிடிங்கிக் கொள்ள, சாவுச் செய்தியைக் கொண்டு எதிரே ஆசாமியைத் தேடிக் கொண்டு ஒருவர் வருகிறார்;
அந்த சமயத்தில் தவிர்க்க இயலாத விருந்தினர் ஒருவர் ஆசாமியின் வீட்டுக்கு வருவதற்காக வழியில் எதிரே வருகிறார்;
அவரைப் பார்த்த சமயத்தில் ஆசாமியைப் பாதையில் போகும் பாம்பு தீண்டி விடுகிறது;
நாட்டின் அரசர் பருவத்திற்கான உழுதுண்டு வாழ்வதற்கான வரியைக் கேட்டு அரசவையிலிருந்து ஆள் வருகிறது;
அதே நேரத்தில் குருக்கள் செய்து வைத்த காரியத்திற்கு ஆசாமியிடம் வந்து தட்சிணை-காணிக்கை கேட்கிறார்..
ஆசாமியின் நிலை எப்படி இருக்கும்..
அய்யோ...சாமி என்று உட்கார மாட்டாரா அய்யாசாமி !?
:))
டிட்பிட்ஸ்:
- பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் சிக்கலான வெண்பா வடிவங்கள் குறைந்து பெரும்பாலும் பாடல்கள் விருத்தங்களாகவே எழுதப் பெற்றன.
- விருத்தம் எழுதிய புலவர்கள் பெரும்பாலும் கவிராயர்களென அழைக்கப்ப்பட்டார்கள்.அதாவது அவர்கள் எந்த இனத்தில் பிறந்தவராக இருப்பினும் பொதுவாகக் கவிராயர் என்றே அழைக்கப் படுவார்.
- Chronic Pressure என்று சொல்லப் படுகிற நொய் நொய் அழுத்தம் வரும் சூழலை அழகாக எடுத்துக் காட்டும் ஒரு பாடல் இது.
- சுஜாதா எழுதிய நொய் நொய் அழுத்தத்திற்கான ஒரு எடுத்துக் காட்டு கற்றதும் பெற்றதுமில் எழுதியிருப்பார். அதைப் படிக்கும் போது எனக்கு இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும் ! :)
12 | 365
