குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Sunday, April 24, 2011

133.பெண் எழுத்து !


பெண் எழுத்து என்ற தலைப்பில் சங்கிலித் தொடர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.

தீவிபி-ஆர்விஎஸ் எனக்கு தொடுப்பு கொடுத்து என்னையும் இந்த தொடர் பதிவுக்கு எழுதச் சொல்லி இருக்கிறார்;பதிவுலகில் 3 வருடங்களுக்கு மேல் இயங்கினாலும் இவ்விதத் தொடுக்கும் பதிவுக்கான அழைப்பு இதுதான் முதல்.எதற்கும் ஒரு துவக்கம் இருக்க வேண்டுமல்லவா? அந்த வகையில் ஆர்விஎஸ்’க்கு நன்றி.

பெண் எழுத்து என்றால் பெண்கள் எழுதிய எழுத்துக்கள் என்று
நேரடியாகப் பொருள் வரும்.அவ்வகையில் மிகு நீண்ட வரலாறு கொண்ட தமிழில் சங்க காலத்திலேயே 33 பெண் புலவர்கள் இருந்ததாகப் பட்டியல் சொல்கிறது.

அள்ளூர் நன்முல்லையார்
ஆதி மந்தியார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஓரம் போகியார்
ஔவையார்
கச்சிப்பேட்டு நாகையார்
கழார்க்கீரன் எயிற்றியார்
காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்
காவற்பெண்டு
காமக்கணி பசலையார்
குறமகள் இளவெயினியார்
குறமகள் குறிஎயினியார்.
குமிழி ஞாழலார் நப்பசலையார்
நக்கண்ணையார்
நன்னாகையார்
நெடும்பல்லியத்தை
பக்குடுக்கை நன்கணியார்
பூங்கண் உத்திரையார்
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு
பெரெயில் முறுவலார்
பேயார்
பேய்மகள் இளவெயினியார்
பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
பொன்முடியார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மாரிப்பித்தியார்
மாறலோகத்து நப்பசலையார்
முள்ளியூர்ப் பூதியார்
வருமுலையாரித்தி
வெறியாடிய காமக் கண்ணியார்
வெள்ளி வீதியார்
வெண்ணிக் குயத்தியார்
வெண்மணிப் பூதியார்

இவர்களில் சங்க காலத்திலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழ்ந்தவர் அவ்வையார்.

அவ்வையார்கள் பலர் பல கால கட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.இதுவரை தெரிந்து 4 அவ்வையார்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது.நால்வருமே அற்புத எழுத்தாளர்கள்.

ஆயினும் அதியமானின் தோழியாக இருந்து அரசியலில் ஆலோசனைகள்,தூது போன்ற காரியங்கள் அளவிற்கு கூரிய அறிவுடன் தேர்ந்த மதி-அதாவது டிப்ளமசி-யுடன் கூடியவராக சங்க கால அவ்வையார் திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு பல ஆதாரங்கள் இருந்திருக்கின்றன.

இரண்டாவது அவ்வை பக்தி இலக்கிய காலத்தில் வாழ்ந்த விநாயகர் அகவல் எழுதிய அவ்வை.விநாயகர் அகவல் சைவத்தின் பக்தி இலக்கிய சாரம் முழுதும் அடங்கிய ஒரு சிறு நூல்.இதைப் பற்றிய பதிவு தனியே எழுதிஇருக்கிறேன்.

மூன்றாவது அவ்வை ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற குழந்தை இலக்கியங்கள் எழுதிய அவ்வை.இயல்பை அப்படியே எடுத்துக் கொண்டு இன்னொரு நூலாக புதிய ஆத்திசூடி இயற்றுமளவுக்கு பாரதி போன்ற கவிஞனையே ஆழ்ந்து கவர்ந்தது இந்த அவ்வையின் ஆக்கங்கள்.மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் என்று அறிவுரை சொன்ன கையோடு ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்று குழந்தைகளை அமைதிப் படுத்திய நல் எழுத்துக்கு சொந்தக் காரர் இந்த அவ்வை. குழந்தைகள் சமுதாயத்தின் நல்ல அங்கமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற அன்னையர்கள் இந்த அவ்வையின் நூல்களை உடனே தேடுங்கள்..

அவ்வைகள் போல வெள்ளி வீதியார் போன்ற புரட்சி மிகுந்த பெண்களும் சங்க காலத்தில் எழுதிக் கவர்ந்திருக்கிறார்கள். ஒரு பாடல் பாருங்கள்..

அளிதோ தானே நாணே, நும்மொடு
நனிநீ
டுழந்தைன்று மன்னே, இனியே
வான்பூங்கரும்பி
னோங்கு மணல்
சிறுசிறை
தீம்புன னெரிதர வீய்ந்துக்
காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காமம்
நெரிதரக் கைந்நில்லாதே
(குறுந் தொகை 149)

நடப் பட்டிருக்கும் கரும்பிற்கு நீர் பாய்ச்சுவதற்காக கட்டப் பட்டிருக்கும் சிறு மண் பாத்தி பெருகி வந்து நீர் அடிக்கும் போது உடைந்து விடுவது போல தாங்கும் அளவைத் தாண்டிய காதலின் வலி என்னைத் தாக்கும் போது எனது நாணம் என்னும் பாத்தி உடைந்து அழிந்து போய் விட்டது என்று இழந்த அன்பின்,காதலின் வலியைப் பதிவு செய்யும் பாடலுக்கு சொந்தக் காரர் வெள்ளிவீதி.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என்மாமைக் கவினே
( குறுந்தொகை, 27)

கன்றும் குடிக்காமல், பீய்ச்சி எடுக்கப்பட்டு மனிதர்க்கும் உபயோகப் படாமல்,நல்ல சுவை பொருந்திய பால் நிலத்தில் தானாக வழிந்த வீணாவது போல மாந்தளிர் போன்ற பரப்பினையும் அழகினையும் உடைய அழகிய அல்குல் அதன் அழகை இழக்கிறதே’ என்னுமளவுக்கு பாடிய காதல் போராளி வெள்ளி வீதியார்..இந்தக் கால லீனா மணிமேகலைகள் இவரின் சிறு துகள் என்று சொல்லலாம்…

இடைக்காலமான பக்தி இலக்கிய காலத்து பெண்களிலும் பலர் முத்திரை பதித்தவர்கள்.இறைவன் சிவபெருமானே என் அம்மையே என்றழைத்து பெருமைப்படுத்திய காரைக்காலம்மையாராகப் புகழ்பெற்ற புனிதவதியின் எழுத்துக்கள் அற்புதத் திருவந்தாதியோடு மேலும் இரு சிறு நூல்கள்.

சைவம் மட்டுமின்றி வைணவப் பக்தி இலக்கிய காலத்தின் பெண் சூப்பர் ஸ்டார் சந்தேகமின்றி ஆண்டாள்.

மானிடர்க்கென பேச்சுப்படில் வாழிகில்லேன் கண்டாய் என்று சூளுரைத்து கண்ணனை அடைந்தவர். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்றெல்லாம் போராடி நினைத்ததை முடித்த ஆற்றல் மிக்க பெண் எழுத்துக்கு சொந்தக் காரர்.

எழுத்து படிப்பவரை உளரீதியாகவும்,சிந்தனைப் பரப்பிலும் சிறிதாவது உலுக்கி முன்னேற்ற வேண்டும்.அவ்வகையில் மேற்கண்ட பெண் எழுத்தாளர்கள் தவிர்க்க இயலாதவர்கள்.

இது தவிர பெண்மையையும் அவர்களின் உளப் பாங்கையும்  தியாகங்களையும்,அன்பையும்,பக்தியையும் நெகிழ வைக்கும் வகையில் பதிவு செய்த அபிராம பட்டரில் தொடங்கும் வரிசை(நடுக்கடலுள் சென்றே விழினும் கரை ஏற்றுகை நின் திருவுளமே),தவிர்க்கவே இயலாத மீசைக் கவிஞன் பாரதி(எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்… வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி,சாதம் படைக்கவும் செய்திடுவோம்,தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்…) என்று தெய்வங்களையே படைக்க வல்லவர்கள் பெண்கள் என்றும் மேலும் பல எண்ணற்ற பாடல்கள் மூலம் புதுமைப் பெண்ணை முரசறைந்து படைத்த படைப்பாளி, சமகாலத்தின் திஜா(மோகமுள்,அம்மா வந்தாள்),லாசரா(சிந்தாநதி),சுஜாதா(எப்போதும் பெண்),ஆரம்ப கால பாலகுமாரன்(மெர்குரிப் பூக்கள்),கி.ரா.(பல கிராமம் சார்ந்த ஆக்கங்கள்) போன்ற பல ஆண் எழுத்தாளர்களுக்கும் இந்தப் பங்களிப்பில் தவிர்க்க இயலாத இடம் இருக்கிறது.

ஜெயமோகன்,எஸ்.ரா போன்றவர்கள் வேறு தளங்களில் இயங்குபவர்கள்,இந்தப் பெண் எழுத்துச் சிறப்பில் அவர்களுக்கு பங்களிக்க எனக்கு தயக்கங்கள் இருக்கிறது.(இலக்கணப் பிழையோ?! ஒவ்வொரு பூக்களுமே!?..)

பிற்காலத்திலும்,தற்காலத்திலும் எண்ணற்ற பெண்கள் எழுத்துலகில் சாதித்தும்,சாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.அவர்களின் எழுத்து மனதை,சிந்தனையை உயர்த்தும் எழுத்தாக இருக்கலாம் அல்லது அட,இப்படி ஒரு சிந்தனை இருக்கிறதா என்று ஒரு நிமிடமாவது யோசிக்க வைக்கும் எழுத்துக்களுக்கு உரிமை பெற்ற வகையாக இருக்கலாம்;அவ்வகையில்  லக்ஷ்மியிலிருந்து,திலகவதியிலிருந்து,இந்துமதி,வாஸந்தி,வித்யா சுப்ரமணியம்,சல்மா,லீனா  என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

சமகாலப் பதிவுலகில் ரேகுப்தி-நிவேதா, பாலைத்திணை-காயத்ரி(சித்தார்த்),துளசிதளம்-துளசிடீச்சர்,மங்கை-மங்கை, காற்றுவெளி-மதுமிதா தமிழ்நதி-பெயர் தெரியவில்லை,நிறங்கள்-செல்வநாயகி, போன்றவர்களும் இன்னும் பலரும் பல தளத்தில் எழுதும் காத்திரமான எழுத்துக்கு சொந்தக்காரர்கள், பின்னவர்கள் இருவரும் ஈழம் சார்ந்த தமிழ்ச் சமூக வலிகளையே பெருமளவில் பதிவு செய்திருப்பதால் சிறப்பு கவனம் பெற வேண்டியவர்கள்.

இவை தவிர,எழுத்து மற்றும் அதன் விளைவு சார்ந்த இன்னொரு கோணம் (என்னைப் பொறுத்த வரை) தென்படுகிறது. முன்னே சொன்னபடி எழுத்து படிப்பவரை உள அளவில்,சிந்தனை அளவில், எண்ண அளவில் ஒரு துளியாவது முன்னேற்ற வேண்டும் என்பது எனது பார்வை. அந்த விளைவை ஏற்படுத்தாத எழுத்து சிறந்த எழுத்தாக அறியப்படாது.

இந்த உள அளவில் உயர்த்தும் செயல் எழுத்தினாலன்றி வாழ்வினாலும்,வாழ்ந்து காட்டுவதாலும்,உருவாக்கத்தாலும் கூட விளையலாம்.

ஒஷோ ரஜனீஷ் ஒரு புத்தகத்தில் உலகம் இயங்குவதன் நோக்கம் பற்றி விளக்கியிருப்பார்.இந்த உலகத்தின் ஒவ்வொரு உயிரும்,ஒவ்வொரு தாவரமும்,ஒவ்வொரு விலங்கும்,கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் கூட தன்னைப் போன்ற வழித்தோன்றல்களை விளைவித்துச் செல்லும் இயக்கச் சக்கரத்திலேயே இயங்குகின்றன.
அந்த இயக்கத்தில் விளையும் விளைவு மேன்மை பொருந்தியதாக இருக்கும் போது நல்ல காய்கறிகளும்,சுவையான கனிகளும்,வலிமை பொருந்திய கால்நடைகளும் சமூகத்திற்கு நன்மை தரும் வகையில் விளைகின்றன.

மனித இனமும் தன் வாரிசுகள், தான் விட்டுச் செல்லும் உலகிற்கும் சமூகத்திற்கும் நன்மை தரத் தக்க,மேன்மை பொருந்திய, நல்லறிவும் நல்லறமும் மிக்கவர்களாக இருக்கும் வண்ணம் அவர்களை உருவாக்கி விட்டுச் செல்லுவது அவர்கள் தோற்றத்தின் உயர்ந்த,இறுதியான கடமை.அந்தக் கடமையை சிறந்த அளவில் தன் வாழ்க்கையால் விளைவித்துச் செல்பவர்கள் உலகத்தின் நல்லியக்கத்திற்கு இன்றியமையாதவர்கள்.


இவ்வாறான உருவாக்கத்தால் எழுத்தின் விளைவை விளைவிக்கும் மரபில் எண்ணற்ற பெண்ணரசிகள் திருநாவுக்கரசருக்கான திலகவதி தொடங்கி,அருணகிரியின் தமக்கை,சுந்தரருக்கான இசைஞானியார் போன்று பலர் திகழ்ந்து அழகு சேர்த்திருக்கிறார்கள்.

சமகால உலகில் இந்த மரபின் நீட்சியாக வீரம்மாக்களாவும், கண்ணாத்தாள்களாகவும், சின்னாத்தாள்களாகவும் தன் குடும்பத்தையும் தன் சந்ததியையும் சமகால உலகின் சமுதாயத்திற்கான ஒரு நல்ல அங்கமாக மாற்றும் முயற்சியில் வாழ்வெனும் கல்லில் அரைந்து(பட்டு) மணத்து(மணம் வீசி) மறையும் எண்ணற்றவர்களாக வாழ்ந்து மறைந்து பிறந்து வாழ்ந்து மறையும் காலச் சங்கிலியின் தவிர்க்க இயலாத கண்ணிகளாக இருக்கிறார்கள்.பெயர் தெரியாத கடைக் கோடிக் கிராமத்தின் அங்கமாக அவர்கள் இருக்கலாம்,ஆனால் தங்களின் உழைப்பினால்,தியாகத்தால்,வறுமையிலும் செம்மையாய் வாழும் வாழ்க்கையினால் சமுதாயத்தின் உயிர்ப்பை அவர்கள் ஜீவித்திருக்கச் செய்கிறார்கள்.

அவர்கள் எழுதாமல் எழுதிச் செல்லும் சிற்பிகள். அவர்களின் எழுத்துக்கள் அவரவர் எச்சமாக,எச்சங்களால்(வாரிசுகளால்) அவர்கள் தக்கவர்கள் என்று காலந்தோறும் அறிவிக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன(ர்).

அத்தகைய எண்ணற்ற எல்லாப் பெண்மணிகளுக்கும், அவர்களில் நான் அருகிலும் அனுக்கத்திலும் அறிந்த,  உருவாக்கத்தினாலும்,எழுத்தினாலும்(சுமார் 10 நூல்கள் எழுதி இருக்கிறார்) கூட அழகிய விளைவைத் தந்திருக்கும் தமிழின் செல்வியான எனது அன்னைக்கும்….

இந்தப் பெண்ணெழுத்துப் பதிவு சமர்ப்பணம் !

மேலும் தொடர,ஆர்வமிருக்கும் எவருக்கும் எனது அழைப்பு பொதுவானது.

குறிப்பாக மேற் கண்ட குறிப்பிட்ட பெண் பதிவர்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

Thursday, April 14, 2011

132.இலஞ்சம் தவிர்த்து,நெஞ்சை நிமிர்த்து !!! - சபாஷ் சகாயம்.


"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'

பொதுவாக கிராமப் புறங்களில் இருந்து வரும் நபர்களே தன்னூக்கம்,உளசுத்தி,சிறிது அதிகபட்ச நேர்மை,சிறிது அதிகபட்ச சுயமான திறன் கொண்டு இருக்கிறார்கள் என்பது எனது சிந்தனை முடிவு.இதற்கான  புள்ளி விவரங்கள் இல்லையெனினும் எனது அனுபவங்களின் முடிவு,நான் பார்த்த நபர்களின் பின்புலங்களை ஆராயும் போது அல்லது கேள்விப் படும் போது இது பலமுறை மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் கூட சமீபத்தில் சிறு நகரங்களில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பே இந்தியக் கிரிக்கெட்டுக்கு மகத்தானதாக இருந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு கிராமப் புறத்தான் என்ற வகையிலும்,எனது மாவட்டதைச் சேர்ந்தவர் என்ற வகையிலும் சகாயத்தை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.
சகாயம் எண்ணியது போலவே எனது சிறு வயதிலும் நானும் சில பிரதிஞ்கை அல்லது உறுதிப்பாடுகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்;அவற்றை பின்னாளில் எட்டியுமிருக்கிறேன். இப்போது எனது சிறுவயது ஆசைகள் சேவை சார்ந்த
பொதுநலன் சார்ந்த துறைகளில் இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மேற்கண்ட பத்தியைப் படிக்கும் போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வாழ்வில் ஏற்றங்களைக் காணும் போது ஒவ்வொரு நிலையிலும் அந்த நிலையின் நமது வயதைப் பொறுத்து நாம் உத்வேகங்களை இழப்பதும்,கிடை நிலைக்குப் போய் விடுவதும் நடக்கிறது என்பதை சிற்சில அனுபவங்கள் உணர்த்துகின்றன.

திரு.சகாயம் அவர்களது மனவெழுச்சி என்றென்றும் மங்காதிருக்க வேண்டும் என்றும், இந்திய அனைத்து மதங்களின் தெய்வ சக்திகள் அவருக்கு அளவில்லா ஆற்றலையும்,பாதுகாப்பையும்,இந்த நேர்மை என்றும் நிலைத்திருக்கவும் அருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.(மனித முதல்வர்களை நம்பிப் பயனொன்றும் இல்லை;ஏற்கனவே மணல் கொள்ளைத் தடுப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்படும் முயற்சியில் இருந்து தப்பித்திருக்கிறார் என்கிறது செய்தி.)
இந்த லட்சணத்தில் நல்லவர்கள்,நேர்மையானவர்கள் அரசியலில்,பொது வாழ்வில்  எப்படி  ஈடுபட முன்வருவார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!

தமிழக அரசியல் !


()


பாடகி சித்ராவின் 8 வயது மகள் ஒரு விபத்தில் நேற்று துபாயில் மரணமடைந்திருக்கிறார்.

இத்தனைக்கும் குழந்தையில்லாது கிட்டத்திட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை !!!!

மிகுந்த வருத்தமாக இருக்கிறது.

சித்ராவின் பல பாடல்கள் மனத்தை வருடுபவை;அவரது பல நிகழ்ச்சிகளிலும் அவரது வெளிப்பாடு மிகுந்த மென்மையும்,மேன்மையும் நிரம்பிய நபராகத்தான் அவரைக் காட்டியிருக்கிறது.தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னிலை மறந்து ரசிப்பில் தள்ளியிருக்கும் அவருக்கு இப்படி ஒரு  சோதனை சொந்த வாழ்வில் !

அவருக்கு ஏன் இப்படி ஏன் ஒரு சோகம்?!


சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதியிருந்தது போல், "சில ஏன்'களுக்கு வாழ்வில் கடைசி வரை பதில் கிடைப்பதேயில்லை" என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது.....

It's time of destiny for nightingale's most painful songs....

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  3 weeks ago
 • - *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...
  1 month ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  6 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  8 months ago