குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Wednesday, April 6, 2011

130.விநாயகர் அகவல்- ஃபார் டம்மீஸ்-1

சித்தாந்தக் கருத்துகளின் சாரமாக அமையப் பெற்றது விநாயகர் அகவல் என்பர் கற்றோர்.

சிறுவயதில்,ஏன் இன்றும் கூட அம்மா பல பாடல்களை வழிபடு சமயங்களில் பாடும்போது,பெரும்பாலும் விநாயகர் அகவலுடன் தான் வழிபாடு துவங்கும்.
எங்களை சிறுவயதில் இதை மனனம் செய்ய அம்மா பலமுறை வலியுறுத்தியும் டபாய்த்து விட்டிருக்கிறேன்.இத்தனைக்கும் பல திருமுறைப் பாடல்கள்,500 க்கும் மேற்பட்ட திருக்குறள் பாடல்களை யெல்லாம் மனனம் செய்து பல போட்டிகளில் 13 வயதுக்குள் பரிசுகள் வாங்கியிருந்தும்,விநாயகர் அகவலின் 72 வரிகள் மனனம் செய்வது அக்காலத்தில் பெரும்பாடாயிருந்தது.

ஆனால் பிற்பாடு எனக்கு இயல்பாகவே ஏற்பட்ட ஆர்வத்தினால் மனனம் செய்த போது நான் சிறுவயதில் மற்றைய பல பாடல்கள் போல இதனையும் மனனம் செய்யாதது எவ்வளவு தவறு என்று புரிந்தது.

காரணத்தை விளக்குகிறேன்.

20 வயதுக்கு மேல்தான் விநாயகர் அகவலைப் பொருளில் திளைத்து படிக்க ஆரம்பித்தேன்.சைவ சித்தாந்தத்தின் நுட்பப் பொருள்கள் பல விநாயகர் அகவலில் இருக்கிறது;முடிந்தால் படித்துத் தெரிந்து கொள் என்ற அம்மாவின் சவாலால்தான் அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

ஆயினும் சிறு வயதில்,அதாவது 13,14 வயதுக்குள் மனனம் செய்யும் பாடல்கள்  அல்லது மற்ற எதுவுமே நினைவின் அடித்தளத்தில் தங்கிப் போகும்.அவற்றை மீளக் கொண்டுவருவது-ரிட்ரைவிங்-மிக எளிது.ஆகையினால்தான் சிறு வயதில் படிப்பது என்பது பசு மரத்தாணி போல மனதில் பதியும் என்று சொல்லி வைத்தார்கள்.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்-4 ம் பாகம் என்று நினைக்கிறேன்-அவர் சோம்பிக் கழித்து விட்ட இளமைப் பருவத்தைப் பற்றி வருந்தி எழுதியிருப்பார்.அவர் மட்டும் சோம்பியிராமல் மேலும் சிறு வயதின் பொழுதுகளை பயன்படுத்தியிருந்தால் எதிர்காலத் தமிழன் சிலப்பதிகாரத்திற்கு அவரது உரையைத்தான் படித்திருந்திருப்பான் என்று சொல்லியிருப்பார்.

இளமையின் சக்தி கதிர் வீச்சுப் போன்றது.சிறுவயதில் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ நல்ல விதயங்களை மனதில் நுழைத்து விட்டால்,சிந்தனை முகிழும் நேரங்களில் அந்த மனனப் பகுதிகளை அசை போடும் அறிவு பல ஞான வாசல்களைத் திறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அர்த்தம் புரியாத போதும் நான் மனனம் செய்த 500 க்கும் மேற்பட்ட குறட்பாக்கள் இன்று வாழ்வியலை,மனிதர்களை,குணாதிசயங்களை மின்னல் கீற்றுப் போல வெளிச்சப்படுத்திக் காட்டுகின்றன.தமிழின் பொக்கிஷமான இது போன்ற செய்யுட்களை சிறார்களை வற்புறுத்தியாவது மனனம் செய்ய வைப்பது அவர்களின் எதிர்கால வாழ்வுக்கும்,அவர்களை நல்ல சிந்தனா வாதிகளாக உலவச்செய்யும் கடமையால் சமுதாயத்தின் நன்மைக்கும் பயன் செய்தவர்களாவோம்.

எனவே...இளமையில் கல்'வது நல்லது.

அந்த வகையில் சிறிது கடந்தாவது ஈடுபட்ட விநாயகர் அகவலின் பொருள் தத்துவ வாழ்வின் பல பக்கங்களைப் பரிச்சயம் செய்யும் பலன் மிக்கது.தமிழர்களுக்கு கணபதி என்னும் விநாயகர் எப்போது அறிமுகம் ஆனார் என்பது அறுதியிட்டுத் அறியப்படவில்லை,ஆயினும் நம்பியாண்டார் நம்பியின் காலத்திலேயே பொல்லாப் பிள்ளையார் அவருக்கு அருளிய கதை இருப்பதால் 5|6 ம் நூற்றாண்டு காலத்திலேயே கணபதி இருந்திருக்கிறார் என்பது உறுதி.

மேலும் தமிழர்களின் வாழ்வியலில் எளிதாக எங்கும் பிரசன்னமாகும் தகுதியும் எளிமையும் படைத்தவர் விநாயகர்தான்.சிறிது மஞ்சள் தூளை நீரூற்றி பிசைந்து முக்கோண வடிவில் பிடித்து வைத்தால் அன்புடன் வந்து விடும் எளியவர் விநாயகர்.இளம் பெண்கள் பலரின் கதாநாயகக் கடவுளும் விநாயகராக இருப்பதன் மனவோட்டம் பற்றிப் பலமுறை சிந்தித்தும் இருக்கிறேன்.

இவை எல்லாம் போக, தமிழ்ச் செய்யுளாகவும்,வழிபடு பாடலாகவும் விநாயகர் அகவல் அதன் பொருளுக்காகவும்,சந்த நயத்திற்காகவும் என்னை மிகவும் கவர்ந்ததில் ஒன்று.

எனவே பொருளுடன் விநாயகர் அகவலை வலையில் பதிந்து வைத்தால் இளைய தலைமுறையினர் பலருக்கு பயன்படலாம் என்பதால் இந்தப் பதிவு.


விநாயகர் அகவல்.
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் .
4


சீதம்-குளிர்ச்சி களபம்- வாசம் அரை-இடுப்பு மருங்கு-இடை\உடல்


தண்மையும் வாசமும் பொருந்திய செந்தாமரை போன்ற பாத்ததில் இருக்கும் சிலம்பு பல விதமான இசைகளை ஒலித்து சப்திக்க, பொன்னாலான அரைநாணும் மலர் போன்ற மென்மையான ஆடையை இடையில்,உடலில் என்றும் வளர்ந்து கொண்டிருக்கும் அழகு ததும்ப அணிந்து கொண்டு இருக்கின்ற...
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் .
8


பேழை- பெட்டி 
வேழம்-யானை 
அங்குசம்,பாசம்-இரண்டு கைகளில் வைத்திருக்கும் இரு வித ஆயுதங்கள்.


பெட்டி போன்ற பெரிய வயிறும் நீண்டு பெரிய எடையுடைய பெரிய தந்தமும் கொண்டு யாணை முகத்தையும் அதில் அழகாகத் துலங்குகின்ற சிந்தூரம் எனப்படும் குங்குமமும் கொண்டு, ஐந்து கரங்களையும் அதில் அங்குசம் மற்றும் பாசம் என்னும் இரண்டு கருவிகளையும் கொண்டு, எனது நெஞ்சில் குடிகொண்டு விளங்குகின்ற நீல வண்ண மேனியும்....


அங்குசம் என்பது பொதுவாக அடக்குவதற்கான கருவி.யானையை அடக்குவதற்காக அங்குசத்தை யானைப்பாகன் உபயோகிப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாசம் என்பது தளைப்பது,பிணைப்பது-உலகில் பலவித பொருள்கள் மற்றும் மனிதர்கள் உறவுகள் ஆகியவற்றின் மீது ஏற்படும் பாசத்தினாலும் ஆசையினாலும்தான் பல வித உலகியல் நடவடிக்கைகளுப் அவை சார்ந்த துன்பங்களும் நேர்கின்றன.விநாயகர் இவ்வாறாக தளைகளை ஏற்படுத்துகின்ற பாசத்தையும் அவற்றை கட்டுறுத்தி,மட்டுறுத்தி வைக்கின்ற அங்குசத்தையும் ஒருங்கே கொண்டு இலங்குகின்றார் என்பதைக் குறிப்பால் தெரிவிக்கின்றன இவ்வரிகள்.


நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும் .
12


நான்ற- அகன்ற,பெரிய.
புயம்-தோள்கள் . 
மும்மதம்-யானை வடிவில் இருப்பதால் மும்மதம் பொழிகின்றது எனக் கொள்ளலாம் 
முப்புரி-மூன்று நூல்களை முறுக்கிய நூல்


அகன்ற பெரிய வாயும்,நான்கு புயங்களும், மூன்று கண்களும்-இரண்டு கண்கள் முகத்திலும் தும்பிக்கையில் நடுவில் ஒரு கண்ணும்- மும்மதம் பொழிந்த சுவடான அடையாளமும், இரண்டு செவிகளும், பொன்னாலான கிரீடமும் அணிந்து, திரண்டு விளங்குகின்ற மூன்று நூல்களால் முறுக்கி அமையப்பெற்ற முப்புரி நூல் விளங்குளின்ற ஒளி பொருந்திய மார்பும்...
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் .
16


சொற்பதம்-சொற்களால் விளக்கப்படுகின்ற ;
துரியம் - இது மெய்ஞானத்தில் நிலைத்திருக்கும் ஒரு நிலை


விநாயகரான கணபதி, இவ்வாறான சொற்களால் விவரிக்கத் தக்க இயலாத வண்ணம் திகழ்கின்ற துரிய நிலையில் அற்புதமாக இலங்குகின்ற அனைத்தையும் வழங்கி மகிழ்கின்ற யானை முகத்தோனே,மா,பலா,வாழை என்ற முக்கனிகளையும் விரும்பி ஏற்கின்ற, மூசிகம் என்னும் மூஞ்சுறு என்னும் எலியை வாகனமாகக் கொண்டிருக்கின்றவனே, இன்று இந்தப் பொழுதில் என்னை கடைத்தேற்றி ஆட் கொண்டு அருள வேண்டி உன்னை விரும்புகின்றேன்...
சைவ சித்தாந்த மரபில் ஆத்மம்,உடலில் பால் செயல்படுகிறது. அந்த செயல்பாடு உலகில் இருக்கும் பலவித காரியங்களில் இருக்கும் போது விழிப்பு நிலையிலும்,மனவெளியில் கனவுலகில் செயல்படும் சொப்பன நிலையிலும் ஆழ்ந்த கனவுகளற்ற உறக்க நிலையிலும் ஆத்மா செயல் படும் நிலைகள் உள்ளன. இவற்றிலிருந்து வேறாக உடல் புற வெளியின் உலகியல் காரணிகளால் ஆளப்பட்டிருப்பினும் ஆன்மா அருள் உணர்வில் இறைத்தத்துவத்தில் ஒடுங்கி நிற்கும் நிலையில் விழிப்போ,மயக்கமோ அல்லது உறக்கமோ அல்லாத ஒரு நிலை கை கூடும்,அந்த நிலையை துரிய நிலை என்று அழைக்கிறது சைவ சித்தாந்தம்.
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து .
20


மாயாப் பிறவி- மாயை நிலையை அதிகரிக்கின்ற இவ்வுலக வாழ்வு
ஐந்தெழுத்து- நமசிவாய என்னும் ஐந்தெழுத்து
மாயாப் பிறவி- இவ்வுலகில் உயிர் உடலின் பால் செயல்பட்டு பலவித உலகியல் காரியங்களில் ஈடுபடும் போது மாயையின் பாற் பட்டு இயங்குகிறது என்று சொல்கிறது சைவசித்தாந்தம்.ஆகையினாலேயே இவ்வுலகம் ஒரு மாயை என்ற சொலவடை வந்தது. மாயா மாயா எல்லாம் மாயா.....!


உலகில் எந்த உயிருக்கும் தாயைப் போல நன்மை செய்யும் நபர் வேறு எவரும் இல்லை.ஒரு உயிரைப் பிறப்பிப்பதில் இருந்த அந்த உயிரும் உயிர் தாங்கிய உடலும் இயைந்து நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்கு தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் தந்து நம்மை வளர்ப்பவள் தாய்.எனவே தாய் போல ஆன்மாவிற்கு விளங்கி,மாயையின் பாற்பட்டு உழலும் உயிரைத் உலகவாழ்வின் மாயை என்னும் மயக்கும் பந்தத்தில் இருந்து அறுத்து, உயர்ந்ததும்,திருந்தியதும் உயிருக்கு நன்மை செய்விக்குமான  நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தை ஆன்மாவின் எண்ணத்திலும் சிந்தையிலும் பொருந்துமாறு உரைப்பதற்காகவே என்னுடைய சிந்தனையில் நுழைந்து இலங்குகின்றாய்....
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே.
24


குவலயம்-உலகம்
கோடாயுதம்-தந்தம்


என்னுடைய ஆன்மாவிற்கு குருவின் வடிவமாகி இவ்வுலகில் கிடந்து உழலும் எனக்கு உன்னுடைய திருவடிகளை எனக்கு அளித்து எது திறம் எது உண்மையான மெய்ப் பொருள் என்று விளக்கி, என்னை ஆட்கொண்டு, என்னை வாட்டத்திலிருந்த மீட்டு மெய்யான மகிழ்வு நிலையை எனக்கு அருள்வதற்காக உனது கையில் இருக்கும் தந்தத்தினால் அமைந்த கோடாயுதத்தால் எனது தீவினைகள்,கொடு வினைகள் அனைத்தையும் அகற்றி அருளும் பெருமானே...


- அடுத்த பாகத்தில் தொடர்கிறது

9 comments:

 1. விநாயகர் அகவலை என் தந்தையார் என் 10 வயதில் மனனம் செய்ய வைத்தார்,. சில் வருடங்களுக்கு முன் மீண்டும் படிக்க நேர்ந்த போது வியப்பின் உச்சத்திற்குப் போனேன். திருமந்திரத்தில் 3000 பாடல்களில் சொன்னதை அவ்வையார் ஒரு அகவலில் சொல்லிவிட்டார்.

  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ,தாங்கள் அடியவனின் அருட்கவி தளத்துக்கு அவசியம் வந்து ஆசீர்வதிக்க வேண்டும்

  ReplyDelete
 2. அகவலில் உவகை கொண்டேன். நன்றி அறிவன். அடுத்த பதிவு சீக்கிரம் இடவும். ;-))

  ReplyDelete
 3. நன்றி திரு சிவக் குமாரன்.

  நீங்கள் சொல்வது சரி.

  சைவ சித்தாந்தத்தின் சாரம் விநாயகர் அகவலில் இருக்கிறது என்பது உண்மை.

  தேவார திருவாசகப் பாக்களும்,விநாயகர் அகவலும் ,அபிராமி அந்தாதியும் மந்திரங்கள் போன்றவை என்பது அம்மாவின் நம்பிக்கை.

  பல சமயங்களில் நானும் அவ்வாறே உணர்ந்துமிருக்கிறேன்.

  அவசியம் உங்களது தளத்தைப் பார்க்கிறேன்..

  ஆசிர்வாதம் எல்லாம் பெரிய வார்த்தைகள்..நானும் கொஞ்சம் வாசித்திருக்கும் எளியவர்களில் ஒருவன் மட்டுமே..

  அடிக்கடி வருக.

  நன்றி.

  ReplyDelete
 4. ஆர் வி எஸ் சார்,
  உற்சாகமான வரவேற்புக்கு நன்றி...

  சமையல் ஆகிக் கொண்டிருக்கிறது :))

  சூடாக பரிமாற்றம் விரைவில்.

  ReplyDelete
 5. தங்களின் பதிவு என்னை விநாயகர் அகவலை உணர்ந்து பாட வைத்திருக்கிறது.மனம் நெகிழ்ந்த நன்றி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி செங்கமலன் கருப்பையா. தொடர்ந்த மனனம் பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது. நானே பயன்படுத்தி உணர்ந்திருக்கிறேன்.தங்களது அகவெழுச்சிக்கு எனது வாழ்த்து.

   Delete
 6. //இவற்றிலிருந்து வேறாக உடல் புற வெளியின் உலகியல் காரணிகளால் ஆளப்பட்டிருப்பினும் ஆன்மா அருள் உணர்வில் இறைத்தத்துவத்தில் ஒடுங்கி நிற்கும் நிலையில் விழிப்போ,மயக்கமோ அல்லது உறக்கமோ அல்லாத ஒரு நிலை கை கூடும்,அந்த நிலையை துரிய நிலை என்று அழைக்கிறது சைவ சித்தாந்தம்.//

  எல்லோருக்கும் ஏற்படும்னு நினைக்கிறேன். அருமையாகவும், எளிமையாகவும், என் போன்றோர் கூடப் புரிந்து கொள்ளும்படியும் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதாம்மா..சைவ சித்தாந்தம் பற்றியும் எளிய தமிழில் 10’ம் வகுப்பு படிக்கும் மாணவனும் படிக்கும் வகையிலும் எழுத வேண்டும் என்று ஒரு ஆர்வமிருக்கிறது. திருவருள் கூட்டிச் செலுத்த வேண்டும்.

   Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • - அன்புடையீர்! பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு
  1 month ago
 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  2 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  8 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  10 months ago