குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Thursday, May 29, 2008

61.அத்தியாவசியப் பொருள்,பெட்ரோல் விலையேற்றம் ஊக வியாபாரத்தாலா ?

நம் நாட்டில் பேராசிரியர் அபிஜித் சென் தலைமையிலான ஆய்வுக் குழு, யூக
வியாபாரம் விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறதா என்கிற கேள்விக்கு விடை அளிக்காமலேயே
மழுப்பிவிட்டது. அமெரிக்காவிலும் அதே கேள்வி அமெரிக்க அரசு முதல், விவசாயிகள்,
வியாபாரிகள், மற்றும் நுகர்வோர் வரை எல்லோரையும் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.

ஆமாம்.

அமெரிக்காவிலும் யூக வியாபாரம் காரணமாகத்தான் பொருள்களின் விலைவாசி
கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது என்கிற கருத்து விச்வரூபம் எடுத்தது.
பத்திரிகைகளும், விவசாயிகளும், வியாபாரிகளும் ‘அரசு யூக வியாபாரத்தைக்
கட்டுப்படுத்த வேண்டும்’ என்று குரல் எழுப்ப ஆரம்பித்திருந்தனர்.

அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக அளவில் பல பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம்
யூக வியாபாரம்தான் என்ற ஆய்வுக் கட்டுரைகள் பெருமளவில் பத்திரிகைகளில் வந்த
வண்ணமிருந்தன. அமெரிக்காவில் பத்திரிகைகள் நடத்தி வரும் ‘யூக வியாபார விளைவு’ –
என்ற பட்டிமன்றத்தின் சாராம்சத்தை இப்போது பார்க்கலாம் :

யூக வியாபாரம் பற்றிய அமெரிக்கப் பொருளாதார விவாதம் முக்கியமாக, உணவுப்பொருள்
மற்றும் கச்சா எண்ணெய் (பெட்ரோல்) விலை இவற்றையும் சம்பந்தப்படுத்தி எழுகிறது.
முதலாவதாக உலக அளவிலான பெட்ரோல் விலை கடந்த ஐந்தாண்டுகளில் இவ்வாறு உயர்ந்தது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை (டாலர் கணக்கில்)
வருடம்– டாலர்
2003––– 28.93<>
www.finanacialnews.com என்கிற
வெப்சைட் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ‘கச்சா எண்ணெய் விலைகள் மேல் 12 டிரில்லியன்
டாலர் கேள்விக்குறி’ என்கிற தலைப்பில் ஒரு அதிரவைக்கும் ஆய்வை வெளியிட்டது.
அந்தச் செய்தி வெளிவந்தபோது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு டாலர் 115;
இன்று (இந்தக் கட்டுரை எழுதும்போது) டாலர் 128-க்கும் மேல்.

அதாவது ஜூலை 2008-ல் டெலிவரி கொடுக்க இன்றைய யூக விலை. 2007-ஆம் ஆண்டு உலக
கச்சா எண்ணெயின் தினசரி கொள்முதல் 860 லட்சம் பேரல். இந்த ஆண்டு (2008) தினசரி
கொள்முதல் 870 லட்சம் பேரல்களாக உயரும் என்று கணிக்கின்றனர் நிபுணர்கள்.

நம் நாட்டைச் சேர்ந்த அர்ஜுன் மூர்த்தி என்கிற ஆய்வாளர் (இவர் புகழ்பெற்ற
அமெரிக்க நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் அமைப்பில் பணிபுரிகிறார்.) வருகிற
இரண்டு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 முதல் 200 டாலர் வரை
உயரலாம் என்று கணித்திருக்கிறார்.

அவருடைய கணிப்பு உலகத்தையே அதிர வைத்திருக்கிறது. அவருடைய கணிப்பின்படி,
கொள்முதல் அதிகமாகி வருகிறது; ஆனால் அந்த அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி
பெருகவில்லை. ஆனால், மேலே கூறிய டௌஜோன்ஸ் ஃபைனான்சியல் நியூஸ் வெப்சைட் ஆய்வுப்படி,
இப்படி திடீரென்று கச்சா எண்ணெய் (பெட்ரோல்) விலை உயர, எதிர்பாராதவிதமாக கச்சா
எண்ணெய் கொள்முதலும் உபயோகமும் அதிகமானதால் அல்ல; யூக வியாபாரச் சந்தையில்
திடீரென்று கொள்முதல் அதிகமானதுதான் காரணம் என்று கூறுகிறது.

டௌ ஜோன்ஸ் அமைப்பின் கணிப்புப்படி பிரம்மாண்டமான வங்கிகளும், தனியார் நிதி
நிறுவனங்களும் யூக வியாபாரத்தில் 12 ட்ரில்லியன் டாலர் (இன்றைய ரூபாய் – டாலர்
கணக்கில் ரூ.504 லட்சம் கோடி) பெறுமான கொள்முதல் விற்பனை ஒப்பந்தங்கள்
செய்திருக்கின்றன. இந்த வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அமெரிக்காவில் புகழ் பெற்ற
‘வால் ஸ்ட்ரீட்’ என்கிற சாலையில்தான் தங்களுடைய தலைமை அலுவலகங்களை அமைத்து தங்கள்
நிதி; வங்கி; வியாபாரம் இவற்றை நடத்துகின்றன. அதனால் வால் ஸ்ட்ரீட் என்றாலே, பண
முதலைகள் என்று நாளடைவில் அர்த்தமாகியிருக்கிறது.
இந்த நிதி நிறுவனங்களோ,
வங்கிகளோ கச்சா எண்ணெயை உபயோகிப்பவர்கள் அல்லது (இந்தியன் ஆயில் போன்ற)
விநியோகிப்பவர்கள் அல்ல. இவர்கள் கச்சா எண்ணெயை உண்மையாக வாங்கப் போவதும் இல்லை,
விற்கப்போவதும் இல்லை. அதை வாங்குவதற்கும், விற்பதற்கும் செய்த ஒப்பந்தக்
காகிதங்களைத்தான் இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். ஏன் இப்படி வங்கிகளும், நிதி
நிறுவனங்களும் கச்சா எண்ணெய் யூக வியாபாரத்தில் இறங்கின?

காரணம் இதுதான் : பங்குச் சந்தையிலும், ரியல் எஸ்டேட் மற்றும் இதர பல
முதலீட்டுத்துறைகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது –
குறிப்பாக, அமெரிக்காவில். ரியல் எஸ்டேட்டிலும் பங்குச் சந்தையிலும் அதிக லாபம் பெற
வழியில்லை என்கிற நிலை வந்தவுடன், பிரம்மாண்டமான வால் ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்கள்
கச்சா எண்ணெய், எஃகு, மற்றும் பல உலோகங்கள், உணவுப்பொருள்கள், பஞ்சு போன்ற
பொருள்கள் வியாபாரமாகும் சந்தைகளில் புகுந்து யூக வியாபாரத்தில் பெருமளவுக்கு
ஈடுபட்டன. இதனால்தான் பலவிதமான பொருள்களின் விலை ‘கிடுகிடு’வென்று உலகம் முழுவதும்
உயர்ந்தது.

வால் ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்கள் செய்துள்ள ரூ.504 லட்சம் கோடி பெறுமான கச்சா
எண்ணெய் யூக வியாபாரம் ஒப்பந்தங்கள் (இதை ‘பெட்’ அல்லது ‘பந்தயப் பணம்’ என்று
கூறுகிறது டௌ ஜோன்ஸ் வெப்சைட்) வெற்றிபெற்றால் – அதாவது அந்த நிதி நிறுவனங்கள்
தங்களுடைய கச்சா எண்ணெய் பந்தயத்தில் வெற்றிபெற்றால், என்ன விளைவு என்று கேள்வி
கேட்டு, அதற்குப் பதிலும் அளித்திருக்கிறது அந்த வெப்சைட்.

அப்பாவி உலக மக்கள், வருகிற 5 ஆண்டுகளில் பேரல் ஒன்றுக்கு ஆயிரம் டாலர் –
ஆமாம் ஆயிரம் டாலர் – விலை கொடுக்க வேண்டிவரும் நிலை ஏற்படும் என்று
எச்சரித்திருக்கிறது.

அப்படியும் ஆகுமா? அல்லது ஆகாமல் இருக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படி ஆனாலும்
ஆபத்து. காரணம், அந்தக் கச்சா எண்ணெய் விலையை உலகம் ஜீரணிக்க முடியாது; அப்படி
ஆகாவிட்டாலும் ஆபத்து – காரணம், அப்படி ஆகும் என்று பந்தயம் கட்டிப் பணம்
போட்டிருப்பவர்களுக்கு, அப்படி ஆகாவிட்டால் பெரும் நஷ்டம்; பந்தயம் போட்ட
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் திவாலாகி, அதனால் கோடிக்கணக்கானவர்களின் பணம்
‘அம்போ’ ஆகும் வாய்ப்பும் இருக்கிறது. ஆக, கச்சா எண்ணெய் யூக வியாபார சூதாட்டம்
வெற்றிபெற்றாலும் ஆபத்து; தோற்றாலும் ஆபத்து என்கிற நிலையில் கச்சா எண்ணெய் சந்தை
தத்தளிக்கிறது.

டௌ நிறுவன வெப்சைட் மேலும் கூறுகிறது: சௌதி அரேபியாவின் எண்ணெய்
உற்பத்தித்துறை அமைச்சரான அலி அல்-நைமியிடம் இந்தப் பிரச்சனை பற்றிக் கேட்டபோது,
அவர் கூறியதன் சாராம்சம் இதோ:
“எங்களை எண்ணெய் உற்பத்தி அதிகம் செய்,
அப்போதுதான் விலை குறையும் என்று மேற்கத்திய நாடுகள் அரிக்கின்றன. ஆனால், இப்போதைய
விலை உயர்வுக்கு உற்பத்திக் குறைவு காரணமல்ல. இந்த விலை உயர்வுக்குக் காரணம் கச்சா
எண்ணெய் சந்தையில் யூக வியாபாரம் சுனாமி போல் பெருகியதுதான். பணயம் வைத்து வால்
ஸ்ட்ரீட் பண முதலைகள் விளையாடும் பந்தயங்களும், சூதாட்டங்களும் நடப்பதுதான்
முக்கியமான காரணம்”.

இப்படிக் கச்சா எண்ணெய் சந்தையில், யூக வியாபாரம் என்று, கண்ணியமான பெயரில்
நடக்கும் சூதாட்டம் பின்பு எஃகு, தாமிரம், அலுமினியம், தங்கம், வெள்ளி போன்ற உலோகச்
சந்தைகளில் புகுந்து அங்கும் விலைவாசி கிடுகிடுவென்று ஏறக் காரணமாகியது.

குறிப்பாக, 2007-ஆம் ஆண்டு யூக வியாபாரம் மூலமாக, வால் ஸ்ட்ரீட் பண முதலைகள்
விவசாய உணவுப்பொருள்கள் சந்தையில் பெருமளவு பிரவேசம் செய்ய, உலகம் முழுவதும்
உணவுப்பொருள்களின் விலை கூரையைப் பிய்த்துக்கொண்டு உயரே சென்றது .அது பற்றி அடுத்த வாரம்......

நன்றி- குருமூர்த்தி, துக்ளக் இதழ்


நண்பர்களே, அதீத உணவுப் பொருள்களின் விலையேற்றம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

மேற்கண்ட கட்டுரை இந்த வார துக்ளக் இதழில் வந்திருக்கிறது. கட்டுரையின் இரண்டாம் பகுதியின் விதயங்களும் வந்தவுடன் இங்கு அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இது தொடர்பான நல்ல விவாதங்கள்,கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, May 28, 2008

60. சில செய்திகள்;பல கவலைகள்

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி கூடியவரை அனைவரையும் அனுசரித்துச் சென்று ஆட்சி நடத்த வேண்டும் என்று முயல்கிறார் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.இது ஆட்சித் தலைவருக்கு இருக்க வேண்டிய,பாராட்டப்பட வேண்டிய ஒரு குணம்;இது நிலவுமெனில் எதிர்க் கட்சிகளோ,மற்ற அறிஞர்களோ,பத்திரிகைகளோ எழுப்பும் வினாக்களுக்கு,சரியான,விரிவான விளக்கங்கள் அளிப்பதும் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்.

ஆயினும் சில விதயங்களில் நடைபெறும் விதயங்கள் மிகவும் சிந்தனைக்குரியதும்,கவலையளிப்பதுமாக இருக்கின்றன.

காட்டாக, உயர்கல்வித்துறையில் நடக்கும் பல விநோதமான நிகழ்வுகள்.பாமக’வின் மருத்துவர் ராமதாசு உயர்கல்வித்துறையைச் சுட்டி பல கனைகளை கடந்தகாலத்தில் எய்திருக்கிறார்;இப்போதும் எய்து கொண்டிருக்கிறார்.ஆனால் அரசுத் தரப்பிலிருந்தோ முதல்வர் தரப்பிலிருந்தோ சரியான,மக்களுக்குத் தெளிவளிக்கும் விதமான விளக்கங்கள் வந்ததாகத் தெரியவில்லை.

இப்போதைய விவகாரம் என்னவெனில்,இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பது 55 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமைச்சகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.

சென்ற கல்வியாண்டில் ஏறக்குறைய 16,000 இடங்கள் காலியாக இருந்த நிலையில், 5 மதிப்பெண்களைக் குறைப்பதால் மாணவர்களுக்கு லாபமில்லை எனவும்,அதிக நன்கொடை பெற்று மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்குத்தான் இது சாதகமானதாக அமையும் என்றும் மருத்துவர் ராமதாசு கூறினார்.

எப்போதும் போலவே அரசோ,முதல்வரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை!

இப்போது பொது கவுன்சலிங் ஜூலை 11-ல் தொடங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட்டு, மே 21-ம் தேதி மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், ஆகஸ்ட் 31 வரை கவுன்சலிங்கை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதாகிறது.

சரி,இதனால் என்ன நடந்து விடப் போகிறது,மாணவ்ர்களுக்கு நல்லதுதானே,நல்ல கால அவகாசம் இருப்பதால் மாணவர்கள்,பரிசீலித்து வேண்டிய கல்லூரிகளில் இடம் பெற்றுக் கொள்ளலாமே என்ற பதில் கிடைக்கலாம்.

ஆனால்,தனியார் கல்லூரிகள் கட்டண இடங்களை விநியோகிக்க ஆரம்பித்து,கிட்டத்திட்ட முடிக்கும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். விஐடி, எஸ்ஆர்எம், அமிர்தா போன்ற பல்கலைக்கழகங்கள் பல ஆயிரம் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை அறிவித்து, தற்போது மாணவர் சேர்க்கையையும் பெரும்பகுதி முடித்துவிட்டன.ஆகஸ்ட் மாதத்தில்,ஒரு வேளை அரசின் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லையானால்,உங்களுக்காக தனியார் கல்லூரிகள் காத்துக்கொண்டிருக்காது;அல்லது அப்போதைய ‘விற்பனை விலை' இப்போதையதைப் போல இரண்டு மடங்காகக் கூட இருக்கக்கூடும்.

இந்த நிலையில் ஏன் அண்ணா பல்கலையால் இதை நடத்தி முடிக்க இயலாது?

ஒன்றரை லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து கவுன்சலிங் செய்வது மிகவும் கடினமான செயல் என்று தமிழக அரசு அப்பாவிபோல நடிக்க முடியாது.

பிளஸ் 2 முடிவுகள் வெளியான மறுநாளே "கட்-ஆப்' மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் அல்லது மருத்துவத்துக்கான "ரேங்கிங்' வரிசை தனியார் கல்வி ஆலோசனை அமைப்புகள் உதவியுடன் இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

பதிவு எண்ணைக் குறிப்பிட்டாலே, ரேங்கிங் எண், அந்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு இணையாக எத்தனை மாணவர்கள் உள்ளனர் என்ற விவரத்தைப் பெற முடிந்தது. அந்த அளவுக்கு கணினி தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

மே 31 வரை விண்ணங்களைப் பெற்று, (விண்ணப்பத்துடன் கணினி வசதிக்காக கோட் ஷீட் இணைக்கப்படுகிறது) அவற்றை மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்த ஒரு நாள் என்பதே மிக அதிகம்.

இந்தப் பட்டியல் வரிசைப்படி முதலிடத்தில் உள்ள 31 சதவீத மாணவர்களை பொது ஒதுக்கீட்டுக்கு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள மாணவர்களை இடஒதுக்கீடு முறைப்படி பிரிக்க அதிகபட்சம் இன்னொரு நாள் ஆகலாம். கணிப்பொறி மூலம் எவ்வளவு வேகமாகவும் மாணவர் சேர்க்கையை நடத்துவது சாத்தியமே.

அப்படியானால், அண்ணா ஏன் இதை செய்ய மறுத்து அரசு இடத்துக்கான நேர்காணலை ஆகஸ்ட் வரைக்கும் இழுக்க வேண்டும் ?

இந்த இடத்தில் தமிழக உயர் கல்வி அமைச்சகத்தின் உள்நோக்கம் பற்றிய அச்சங்கள் வெளிப்படுகின்றன.

அரசு ஒதுக்கீடு விரும்பிய கல்லூரிக்கு கிடைக்குமா,கிடைக்காதா என்ற நிச்சயமற்ற தன்மையை இப்போதைக்கு மாணவர்களிடையே உருவாவதற்கு இந்த உத்தி வழிவகுக்கிறது,எனவே இந்த உறுதியற்ற நிலையை விரும்பாத பெரும்பாலானவர்கள்,தாங்கள் விரும்பும் கல்லூரிக்கு,கல்லூரித் தொகுப்பின் மூலம் இடத்தைப் பிடித்து தக்கவைக்க மறைமுக நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
எனவே நடுத்தரக் குடும்பங்களுக்கு,மாணவர்களுக்கு இரு வித வழிகளே திறக்கப் படுகின்றன.
ஒன்று,விரும்பிய தரமான தனியார் கல்லூரியில் பணம் கொடுத்து சேர்ந்து படிப்பது;
அல்லது ஒரு தற்காப்புக்கு,”திரும்பக் கிடைக்காத அட்வான்ஸ்” கொடுத்து இடத்தை தக்க வைத்து,பின்னர் அரசு நேர்முகத்தை எதிர்கொள்வது.

எப்படியிருப்பினும்,கொழிக்கப் போவது தனியார் கல்லூரிகளின் பணப்பெட்டியே!.

இரண்டுக்கும் வழியில்லாத நடுத்தரக் குடும்பங்கள் பீதியில், குழந்தைகளின் எதிர்காலம் புரியாமல் மனஇறுக்கத்தில் விழி பிதுங்குவார்கள்.

உயர்கல்வித்துறை இந்த விளையாட்டை விளையாடுவதின் பின்னணி,இதுவாக இருக்கும் பட்சத்தில்,மருத்துவர் ராமதாசுவின் கூச்சலில் அர்த்தமிருக்கிறது;
அல்லது அது, ‘பங்கு கிடைக்காத’ ஆதங்கக் கூச்சலாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

உயர்கல்வித் துறை அமைச்சர் மட்டுமின்றி,மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மேலும் எழுந்த வலுவான குற்றச்சாட்டுகளுக்கும்,ஆட்சித் தலைவரின்,கட்சித் தலைவரின் பதில்,இடி போன்ற மௌனம் தான்.

இந்த குழப்பங்களால் அவதியுறப் போவது எப்போதும் போல நடுத்தரமக்களே என்பது விசனிக்கப்பட வேண்டிய ஒன்று.

*************************************************************************************

கர்நாடகத்தில் பாஜக மாநில ஆட்சியை ஒரு வழியாகப் பிடித்திருக்கிறது.

இன்னும் காங்கிரஸ் கட்சி,பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கப்படக்கூடாத நிலைக்கு வேண்டிய ஏற்பாடுகளை மாநில கவர்னர் மூலமாக மேற்கொள்ளக்கூடும் என்ற நிலை பொய்யாகி,இன்று கவர்னர் பாஜக’வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து விட்டார்.

கடந்த சட்ட மன்றத்தில் கவுடாவின் ஜனதாதளம் நடத்திய ‘ஆட்சிப் பகிர்வு ஒப்பந்த' கேலிக் கூத்துகள்,ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் வரை ஒரு முகமும்,பாஜக’விற்கு ஆட்சியை ஒப்ப்டைக்க இருந்த நேரத்தில் மறுமுகமும் காண்பித்து மக்களின் முன்னிலையில் தங்களைக் கேவலப் படுத்திக் கொண்டார்கள்.இந்த அவல விளையாட்டு பாஜக மேல் ஒரு இரக்கத்தையும்,மேலும் தறிகெட்டுப் போய் ஏறியிருக்கும் விலைவாசிகளும்,பணவீக்கமும் காங்கிரஸுக்கு அவப்பெயரையே கொண்டுவரும் சூழலில்,பாஜக எளிதாக முந்திக் கொண்டது.

முதலில் இந்த விதமான ‘20 மாதங்கள் ஆட்சிப் பகிர்வு’ செயல்பாடே ஒரு கழைக்கூத்து போன்றது.ஆனால் ‘பெருமைக்குரிய ஜனநாயகம்’ எல்லாக் கூத்துகளையும் அனுமதிக்கிறது என்ற காரணத்தால்,அந்த விதமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கவுடவின் புதல்வர் முதல்வரானார்;அதிலும் தந்தைக்கும் மகனுக்குமிடையேயும் அசிங்க கவிழ்ப்பு நாடகங்கள் இடையில் நடந்தேறி,பின்னர் இருவரும் இணைந்து கொண்டு பாஜக’வுக்கு ஆப்படித்தார்கள்.

இந்த கோமளித்தனங்கள் பிடிக்காத மக்கள் இந்த முறை சற்றுத் தெளிவாக முடிவளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே,எடியூரப்பா,ஆட்சியைப் பிடிக்கும் ஆசையில் ஒகேனக்கல் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கும் செயல்களில்,தேர்தல் நேரத்தில் இறங்கினார்.அப்படியும் ஒகேனக்கல் ஒப்பந்தம்,போடப்பட்ட 1984’லிருந்து இத்தனை காலம் நிறைவேற்றப்படாமல் இருந்ததற்குக் காரணம் தமிழகத்தின் கையாலாகாத முதர்வர்களேயன்றி கர்நாடக முதல்வர்களோ,அரசியல் கட்சிகளோ அல்ல;அவர்கள் ஒப்பந்தத்தின் மறுபாதியான பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை சரியாக நிறைவேற்றிவிட்டுத்தான் தமிழகத்துடன் முஷ்டி மடக்கினார்கள்.மேலும் மாறிவிட்ட தேர்தல் கணக்குகளுக்கு மத்தியில் காங்கிரஸின் நஞ்சேகவுடாவே இப்போது முழுக்க பல்டியடித்தாலும் அடிப்பார்;என்றால் நான் என் சென்ற பதிவின் தலைப்பை பைத்தியக் காரர்களுடன் சேர்ந்துவிட்ட இன்னொரு கூத்தாடி என்று மாற்ற வேண்டிவரும் !
இந்த நிலையில்,ஒகேனக்கல் திட்டத்தை முட்டுக்கட்டை போட்ட காரணிகளில் முக்கியமானவராக கருதப்படும் எடியூரப்பா முதல்வர் பதவியேற்கப் போகும் நேரத்தில் எந்த வகையில் இந்த பிரச்னை அணுகப்படும் என்ற கேள்வி எழுகிறது.

பாஜக’ தாங்கள் ஒரு தேசியக்கட்சி, தங்களுக்கு தேசநலனே முக்கியம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டதை மெய்ப்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.அது உண்மையெனின் அவர்கள் ஒகேனக்கல் திட்டத்துக்கு எந்தவிதமான முட்டுக் கட்டையும் போடாமல் ஆக்கபூர்வ ஒத்துழைப்பு நல்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே,அறுதிப் பெரும்பான்மை வருகின்ற நிலை தெரிந்த போதே இல.கணேசன் பாஜக ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற தேவையான ஒத்துழைப்பை நல்கும் என்று நேற்று அறிவித்தார்;இன்று வெங்கையா நாயுடுவும் சுமுகமான தீர்வு கிடைக்க பாஜக தேவையானதை செய்யும் என உறுதிப்படுத்தியிருக்கிறார்.இந்த பாஜக’வின் நிலைப்பாட்டை எந்த அளவிற்கு காங்கிரஸும்,கவுடாவின் ஜனதா தளமும் அரசியல் விளையாட்டுக்கு உபயோகப் படுத்தும் என்பது கேள்விக்குரியதும்,கவலைக்குரியதுமாகும்.

தானே முன்வந்து,தேர்தல் வரை குடிநீர்த்திட்டத்தை நிறுத்தி வைத்ததாக அறிவித்த தமிழக முதல்வர் கருணாநிதி எந்த விதமான நிலைப்பாடு எடுப்பார் என்பது இன்னொரு கவலையேற்படுத்தும் விதயங்களுள் ஒன்று.இது விதயத்தில் தமிழக முதல்வர் சாதுரியத்துடன் நடந்து திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்வாரா,அல்லது காங்கிரஸ்,பாஜக சார்ந்த அரசியல் ஆட்டத்துக்கு ஏற்ப தன் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வாரா என்ற கேள்வியும் இருக்கிறது.

முன்னர் ‘எலும்புகளை உடைத்தாலும்...’ என்ற நிலைப்பாடும்,பின்னர் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்புகளைக் கெடுக்கும் விதமான தர்மசங்கடங்களைத் தவிர்க்கும் காரணத்துக்காக திட்டத்தை தேர்தல் முடியும் வரை தள்ளி வைப்பதாகவும் அறிவித்தார்.முழுக்க அரசியல் காரணங்களுக்காக மேற்கொண்ட இந்தவிதமான நிலைப்பாடு,மீளவும் அரசியல் காரணங்களுக்காக வேறுவிதமான நிலைக்கு போய்விடக் கூடாது என்பதே இப்போது கவலைக்குரிய விதயம்.

கர்நாடகத்தில் ஆளப்போகும் பாஜக’வுக்கு தலைவலிகள் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் இத் திட்டத்தை எதிர்ப்பவர்களை கர்நாடகத்தில் தூண்டிவிடுமானால்,தமிழக முதல்வருக்கான செயல்தேர்வு-Choice-களில்,காங்கிரஸின் (பாஜக’வை கர்நாடகத்தில் வீழ்த்தும்) அரசியல் அபிலாஷைகளும் ஒரு காரணியாகும்.

காவிரிப்பிரச்னை இவ்விதமான காங்கிரஸின் இரட்டை நிலையால்தான் பங்காரப்பாவின் காலத்திலிருந்து சிந்துபாத் கதையைப் போல தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அல்லது திமுக தலைவர்,வரப்போகும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து,பாஜக’ பக்கம் ஒதுங்கலாம் என்ற நிலைப்பாடை எடுக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கலாம் என்ற சூழலில்,இந்த திட்டத்தை ஒரு ஆறு மாதத்திற்கு ஊறப்போட்டு விட்டு,பின்னர் முழு கதியில் முண்டா தட்டி இதைக் கையில் எடுத்தால்,அந்த நேரத்தேவைக்கு ஏற்ப ஒரு அரசியல் காரணியாக இது உபயோகப் படும் வாய்ப்பும் இருக்கிறது.

எப்படி சிந்தித்தாலும்,தமிழக மக்களுக்கு,ஒகேனக்கல் சார்ந்த தமிழக மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைகளுக்கு நன்மை கிடைக்கும் வண்ணம் ஏதாவது நடைபெறுமா என்ற நினைக்கையில் கவலையேற்படுவது நிஜம் !

நன்றி-எக்ஸ்பிரஸ் குழுமச் செய்திகள்

Friday, May 23, 2008

59.^^^அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன்

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் போது நான் அமரர் சுஜாதா என ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

பலரும் சுஜாதாவை நினைவு கூர்ந்து பதிவு போட்டிருந்தார்கள்.நான் அறிந்த வரை அவரின் சிறந்த விதயங்களாக நான் உணர்ந்தவற்றைப் பகிர்ந்திருந்தேன்.
அதற்கு எதிர்வினையாக நண்பர் சரவணன் பெ.நா.அப்புஸ்வாமி பற்றி குறிப்பிட்டு என்னை மறுதளித்திருந்தார்.

பொதுவாக மேலும் அறிதலுக்காக நான் அறிவுறுத்தப்பட்டால் அதை மகிழ்வுடனே எதிர்கொள்வேன்;அறிதலுக்கான வாய்ப்பாக அதைக் கருதுவேன்.

எனவே அது பற்றிய ஒரு சிந்தனை அடிமனதில் ஓடிக்கொண்டே இருந்தது.இந்த சூழலில் அப்புஸ்வாமி பற்றி மேலதிகத் தகவல்கள் படிக்கக் கிடைத்தன.

அப்புஸ்வாமி தகுதியால் ஒரு வழக்கறிஞர்;தமது 26’ம் வயதில் தன் உறவினர்,ஒரு பத்திரிக்கையாளர் அவரது பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதப் பணித்த போது, ‘நான் தமிழை பள்ளியில் முறையாகப் படிக்கவில்லை;என் மனைவிக்கு ஒரு காதல் கடிதம் கூட எழுதியதில்லை,நான் எப்படித் தமிழில் எழுதுவேன்’ என மலைத்த அவர்,எழுதிக் குவித்தவை என்னென்ன தெரியுமா?


சுமார் 5000 ம் மேலான கட்டுரைகள்,
100 க்கும் மேலான புத்தகங்கள்
10000 வரிகளுக்கும் மேலான மொழிபெயர்ப்புகள்-இந்த மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குமான இருவழி மொழிபெயர்ப்புகளும் அடங்கும்.26 வயது முதல் தமது 95 வயது வரை சுமார் 50 ஆண்டுக்கு மேல் எழுதியவர்;இறந்த அன்று கூட ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கட்டுரை(Bharat’s Vision of the Motherland)எழுதி தன் கையால் அஞ்சலில் அனுப்பிவிட்டு இறந்து போன அற்புத மனிதர்;அந்த கட்டுரை மறுநாள் ஹிந்து பதிப்பில் வெளிவந்திருக்கிறது !

இப்படிப்பட்ட மனிதரைப் பற்றி இன்று எத்தனை பேருக்குத் தெரியும் என எண்ணினால் வியப்பே ஏற்படும்.ஓரளவு பரந்த வாசிப்பு வழக்கம் நமக்கு இருக்கிறது என எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இதனால் வெட்கமேற்பட்டது உண்மை.

1891 ல் பெருங்குளம் நாராயணய்யருக்கும் அம்மாகுட்டி அம்மாவிற்கும் பிறந்த அப்புஸ்வாமி,சென்னை மாநிலக் கல்லூரியின் சட்டத் தேர்ச்சி மாணவர்.சென்னை உயர்நீதி மன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கறிஞராக-Appellate Side Advocate - சுமார் 50 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

1900 ங்களில் அறிஞர் சிலர்,மேல்நாடுகளில் முகிழ்ந்து வரும் நவீன அறிவியல் சிந்தனைகள் தமிழரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்றெண்ணி சென்னையில் தமிழர் கல்விச் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.இந்த அமைப்பின் சார்பாக தமிழ் நேசன் என்ற பத்திரிகையும் தொடங்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியரான அ.மாதவையர்,அப்புஸ்வாமியின் சித்தப்பா!
அவர்தான் மேற்சொன்னவாறு அப்புஸ்வாமியை கட்டுரை எழுதச் சொன்னது...

அப்போது மேற்சொன்னவாறு பதிலளித்த அப்புஸ்வாமியிடம்,அவர் ‘உங்கள் வீட்டில் தமிழ்ப் புத்தகங்களும் பத்திரிகைகளும் நிறைய உண்டு.தமிழில் புலமை வாய்ந்த பலர் உனக்கு நண்பர்கள்,எனவே டபாய்க்காமல் எழுது,தேவையெனில் நான் சுருக்கிக் கொள்வேன் என தைரியம் அளிக்க ‘பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?’ என்ற அந்தக் கட்டுரையுடன் எழுதத் தொடங்கினார் அப்புஸ்வாமி.

இவரின் கல்லூரிக்கால நண்பர்களின்-பிற்காலத் தமிழர்களின்-பட்டியல் நம்மைப் பொறாமைப்படவைக்கும் ஒன்று.கா.சுப்பிரமணியபிள்ளை,பி.க்ஷீ.ஆச்சார்யா,வையாபுரிப்பிள்ளை,க.அ.நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் உடன் படித்தவர்கள் என அவரே நினைவு கூர்கிறார்.
உ.வே.சா வுடனும் கல்லூரிக்காலத்திலேயே இவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது.

இந்தக் கட்டுரை அச்சில் வந்தபின் அந்த மகிழ்வான அனுபவத்தை பிரபஞ்சத்தில் மனிதன் என்ற ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

கிட்டத்திட்ட 5000 கட்டுரைகளுக்கும் மேல் அவரால் எழுத முடிந்த காரணம் அவரது நீண்ட நெடிய ஆயுள்,சுமாராக 26 வயதிலிந்து தமது 95 வயது(1986) வரை எழுத முடிந்த அவரது அயராத இயக்கத் தன்மை வியக்க வைக்கும் ஒன்று.

அவரின் அற்புத உலகம்,மின்சாரத்தின் கதை போன்ற நூல்களும்,சென்னை கிருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஜே.பி.மாணிக்கத்துடன் இணைந்து எழுதிய வானொலியும் ஒலிபரப்பும்,எக்ஸ்-ரே,அணுவின் கதை போன்ற நூல்களும் பல்கலைக் கழகங்களால் பாராட்டப் பட்ட சிறப்பைக் கொண்டவை.

இது மட்டுமின்றி,சிறுவர்களுக்கான புத்தகங்களில் மிகப் பரந்து இயங்கி இருக்கிறார் அப்புஸ்வாமி.பள்ளிச் சிறுவர்களுக்கான அவரது நூல்கள் சித்திர விஞ்ஞானம்,சித்திர வாசகம்,சித்திர கதைப்பாட்டு போன்ற புத்தகங்கள் அற்புதமானவை.தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் குழந்தை எழுத்தாளர் சங்கம் இரண்டாலும் பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் இவர் ஒருவரே என்று ஒரு குறிப்பு சொல்கிறது.

இவ்வளவு எழுதிக் குவித்த அப்புஸ்வாமி அதற்குரிய நியாயமான அங்கீகரிப்புகள் பெற்றாரா என்பது விவாதத்துக்குரிய ஒன்று.இதில் விநோதமான ஒரு விதயம் இதையும் அவர் உணர்ந்தே இருந்தார் என்பதும் இதில் பெரிய வருத்தங்கள் ஏதுமின்றி தன் கடன் எழுதிக் குவிப்பதே என்பது போல எழுதிக் கொண்டேயிருந்தார் என்பதும்தான்.

இன்னொரு சுட்டப் பட வேண்டிய விதயம் அவருடைய,அறிவியலுக்கான கலைச்சொல்லாக்க முயற்சியும்,பரவலாக தமிழில் கலைச்சொற்களை உபயோகித்ததும்.பின்வரும் ஒரு சிறிய பட்டியலைப் பாருங்கள்.

Atomic Fission - அணுப்பிளவு
Satellite - துணைக்கோள்
Electron - நுண்ணணு,மின்னணு
Invention - புத்தமைப்பு
Element - மூலகம்
Foundry - வார்ப்படச்சாலை(பொன்னியின் செல்வனில் கல்கியின் “நாணய வார்ப்படச்சாலை” நினைவுக்கு வருகிறதா?

Microscope - நுண்ணோக்கி
Radiation - கதிரியக்கம்
Elements - தனிமங்கள்
Rocket - உந்து கருவி
Organic Chemistry - அங்கக ரசாயணம்
Accelerator - துரிதகாரி
Pancreas - கணையம்

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.....இதில் சில அவரே புனைந்ததும்,சில அவரால் மாறாது கையாளப் பட்டவையும்.
கக்குவான் இருமல் என்ற காரணியுடன் கூடிய பெயரை அந்த நோய்க்குச் சூட்டியவர் அவரே.
மொழியை அறிவை வளர்க்க உதவும் ஒரு காரணியாகப் பார்க்க வேண்டுமேயல்லாது,அன்னைத் தமிழ்,கன்னித் தமிழ் என்றெல்லாம் பட்டமளித்து,மொழியை வளரவிடாத போக்கைச் சாடியவர்.
“மக்கள் அறிவியலைக் கற்று,அறிவியல் மனநிலையைப் பெற்று வாழ்வார்களேயானால் அவர்கள் இயல்பாகவே பகுத்தறியும் தன்மை பெறுவார்கள்,எனவே அறிவியல் சாதாரண மக்களிடம் எளிதாகச் சென்றடையும் வழி தமிழில் அறிவியல் அறிவு பரவும் வண்ணம் நிறைய எழுதப்பட வேண்டும்”என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு அதற்காகவே அறிவியல் கட்டுரைகள் நிறைய எழுதிக் குவித்தவர்.

1965 லேயே ரேடார் பற்றி
“ரேடார் அறிவிக்கும் நட்சத்திரங்கள்” என்ற கட்டுரையில் “ரேடார் கருவிகள் மின்காந்த அலைகளை வானில் வீசுகின்றன,அவை பிறபொருள்களில் மோதித் திரும்பி வருவதைத் திருத்தமாக ஏற்கின்றன,எனவே அவை வானில் பறக்கும் விமானங்களையும்,நீரினுள் இருக்கும் கப்பல்களையும் கண்ணுக்கு எட்டாத் தொலைவிலும்,இரவிலும் கூட கண்டுபிடிக்க துணை செய்கின்றன”
என எளிமையாக எழுதிய அதே நேரத்தில்,
“அறிவியலில் பொய்க்கும் ஏமாற்றத்திற்கும் சிறிதும் இடம் இல்லை;அறிவியலாளனுக்குப் புல்லும்,புழுவும்,மனிதனும் உயர்வு தாழ்வு இல்லாதவை;இதுவே விஞ்ஞான மனநிலை எனப்படுவது;விஞ்ஞானத்தால் கிடைக்கும் கருவிகளை விட இந்த விஞ்ஞான மனநிலையை அடைவதே பெரியது,மகத்தானது”
என அடர்ந்தும் எழுதியவர்.

அறிவியல் மட்டுமல்லாது மொழிபெயர்ப்பில் இலக்கியம் பற்றியும் எழுதி இருக்கிறார்;
நாடாகொன்றோ; காடாகொன்றோ;
அவலா கொன்றோ; மிசையாகொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை;வாழிய நிலனே ! (புறம்-187,ஔவையார்)
என்ற பாடலின்

“O Land!
You may be a flourishing kingdom
Or a wild jungle:
You may be a hollow depression,
Or a high table-land:
These matter not
Where ever the men are good
There you are good:
So, long may you live
O Land”
என்ற அழகான மொழிபெயர்ப்பு,அந்த அறிவியல் எழுத்தாளனுக்குள்ளிருந்த கவிஞனுக்கும்,ரசிகனுக்கும் சான்று.

அவரது மயிலை சித்திரக்குளக்கரை வீட்டில் அவருடன் அளவளாவ வரும் நண்பர்கள் பட்டியலைப் பாருங்கள்
டி.கே.சி
ராஜாஜி
கல்கி
பி.க்ஷீ
எஸ்.வையாபுரிப்பிள்ளை
டி.எல்.வெங்கட்ராமய்யர்
வாசன்
ஏ.என்.சிவராமன்
கி.வா.ஜ
ரா.பி.சேதுப்பிள்ளை...
எனப் பட்டியல் நீளுகிறது.
அவருடைய “தமிழ்த்” தளத்திறகுச் இதுவே சான்று.

அறிவியல் தமிழை சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றதில் சுஜாதாவுக்கும் முன்னோடியாகச் செயல்பட்டிருக்கும் ஒருவரைப் பற்றி,அறியக் கூடும் வாய்ப்பாக,எனக்குள் தேடலை விதைத்த அந்த நண்பருக்கு என் நன்றிகள் !!!!!!

சில சுவையான பிற்சேர்க்கைகள்:

1.சென்னையிலேயே பிறந்து வளர்ந்த அப்புஸ்வாமி 80 வயதுக்கும் மேல் குடும்ப சூழல் காரணமாக நெல்லைக்குச் சென்று தங்க நேர்ந்திருக்கிறது.அதை இயல்பாக எடுத்துக்கொண்டு வாழ்வையும்,எழுத்துப் பணியையும் தொடர்ந்திருக்கிறார்.

2.1960' களில் தனது ஒரே மகன் மருத்துவ தொழிலை முன்னிட்டு இங்கிலாந்து செல்ல முடிவெடுத்த போது,வருந்தாமல் "உன் எதிர்காலம் உன் முடிவால் நன்றாக இருக்கும் என நம்பினால் தாராளமாய் போய் வா" என்று வாழ்த்தி அனுப்பியவர் ! அந்த மகன் அவருக்கு முன்னாலேயே,இவரது 80'ஆவது வயதில் மறைந்த போது கலங்காமல் வாழ்ந்தவர்.

3.கலைமகள் பத்திரிகை தன் நண்பரால் தொடங்கப் பட்டபோது அதன் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்;அதிலேயே பல கட்டுரைகளும் எழுதினார்.

4.1986 'ல் தன்னுடைய நெருங்கிய நண்பரும்,பிரபல வழக்கறிஞருமான கே.வி.கிருஷ்ணசாமியின் நூற்றாண்டு விழாவுக்கு கலந்து கொள்ள சென்னை சென்றவர்,விழா ஒத்தி வைக்கப் பட்டதால் நெல்லை திரும்ப இரு வாரங்கள் ஆகும் சூழல் வந்த போது,அந்த இரு வாரங்களை வீணாக்காமல் பயனுள்ள வகையில் கழிக்க, நெல்லைக்குத் தகவல் அனுப்பி ஆங்கில மகாகவி டென்னிசனின் Complete works of Tennyson புத்தகத்தை படிக்க வரவழைத்திருக்கிறார்.

ஆனால்,வாழ்வின் விநோதம்,புத்தகம் வந்த இரு நாட்களில் மறைந்து விட்டார் !

Monday, May 19, 2008

58.^^^ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?

இன்றைய உலகில் ஜப்பான்,ஒரு தேசமாக,பல ஆச்சர்யங்களை உலகுக்கு அளித்துக் கொண்டிருக்கும் நாடு.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவினால் அணுகுண்டு வீசி சிதைக்கப்பட்ட பின்னும் ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து நிற்கும் நாடு.

எந்த ஒரு உற்பத்திப் பொருளுக்கும் Made in Japan என்ற ஒரு சிறிய பதிப்பால் அதற்கு,தனியொரு மதிப்பைப் பெற்றுத்தரும் நாடு.

மிகச் சிறிய குட்டி நாடாக இருப்பினும் பொருளாதார அளவில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கும் நாடு.


சிங்கப்பூர் ஒரு தேசமாகக் கட்டமைக்கப் பட்டபோது, சிங்கப்பூரின் சிற்பி,லீ-சீனியர் அவர்கள்,உற்பத்தி,தொழிற்சாலைகள் தொடர்பாகச் சென்று ஆலோசனை பெற்ற ஒரே நாடு ஜப்பான்.

இரு நாடுகளுக்குமான தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்குமான பல அமர்வுகள் மற்றும் இணைந்த செயல்பாடுகளுக்குப் பின்னும் லீ அவர்கள் திருப்தியுறாமல் காரணம் வினவியபோது ,ஜப்பானியர்கள் தவிர மற்ற நாட்டவர்கள் 100 சதம் ஜப்பானியர்களின் தொழில் மற்றும் உற்பத்தி சார்ந்த மனத்தேர்ச்சி பெறுவது எளிதான ஒன்றல்ல எனக் கூறியதாகவும்,அது உண்மையே என்றும் தனது புத்தகத்தில் பதிவு செய்கிறார் லீ.

கவனியுங்கள்,திறன் தேர்ச்சி அல்ல,மனத்தேர்ச்சி !

இதெல்லாம் எப்படி சாத்தியம் ?
மந்திரம் போல் ஓரிரவில் நடக்கவில்லை என்பது மட்டும் நிஜம்.

ஜப்பானியர்கள் இயலபாகவே எந்த செயல் செய்யவும் முழுமையான ஒரு செயல்முறை வைத்திருப்பார்கள்;தங்கள் செய்யும் எந்த செயலும் தீர்க்கமானதாக இருக்க வேண்டும் என்றும் மிகவும் முயற்சி எடுப்பார்கள்.

அதிலும் 1945 ல் அமெரிக்காவின் அனுகுண்டு தாக்குதலுக்குப் பின் ஜப்பான் மீண்டெழிந்த போது ஜப்பானியர்கள்,தங்கள் முன்னேற வேண்டுமெனில் உலக நாடுகள் எதற்கும்,எதையும் மீறிய ஒரு செயல் நேர்த்தி தங்கள் செயல்களில்,தயாரிப்பு முறைகளில்,தயாரிக்கும் பொருட்களில் இருக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே மேற்கொண்டார்கள்.

இந்த காலகட்டத்தில்,அதாவது 1950 களில், ஜப்பானின் புகழ் பெற்ற டொயோட்டா நிறுவனம் உருவாக்கிய செயல்முறைதான் 5 எஸ் எனப்படும் பணிச் செயல்பாடுகள் கோட்பாடு.

அதாவது

செய்ரி-Seiri
செய்டன்- Seiton
செய்சோ-Seiso
செய்கெட்சு-Seiketsu
சிட்சுகெ-Shitsuke

வட இந்தியாவில் கிடைக்கும் இனிப்புகளின் பெயர்களைப் போல இருப்பினும் இவற்றில் விதயம் இருக்கிறது.பார்ப்போம்.....
இந்த வார்த்தைகளின் முதல் ஐந்து எழுத்துக்களை எடுத்துக் கொண்டு இந்த முறைக்கு சுருக்கமாக 5 எஸ் எனப் பெயரிடப் பட்டிருக்கிறது.

இனி தனித்தனியாக இவை என்ன,எதைப்பற்றி சொல்கின்றன எனப் பார்ப்போம்.

நம்மில் பலருக்கும் சிறுவயதிலும்,கல்லூரிக்காலத்திலும்,நாம் வெளியே கிளம்பும் போது,அறிவிக்கப்படாத காரியதரிசியாக அம்மாவோ.அப்பாவோ செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.அம்மா,என் ஆபீஸ் ஃபைல் எங்கே,அப்பா கார் சாவி எங்கே,என அலம்பல் விட்டு,அவர்கள், ‘இவன் வெளியே கிளம்புறானா,நான் கிளம்புறேனான்னு தெரியல,எடுத்த பொருளை எடுத்த இடத்துல வச்சான்னா,இந்த கிளம்புற அவசரப்பாடு தேவையில்லைன்னு சொன்னா கேட்டாதானே’ என அலுத்துக் கொள்ள வைப்போம்.

எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது-அதுதான் விதயம்,இதைத்தான் எப்படி சிறப்பாக செய்வது என சொல்லித் தருகிறது செய்ரியும்,செய்டனும்.

அதாவது Sorting & Setting in Order.

நம்முடைய அறை மேசையை சிறிது பார்ப்போம்.

கணினி இருக்க வேண்டும்,படிக்கும் புத்தகங்களை வைத்துக் கொள்ள வேண்டும்,இடையில் பாடல்களும் கேட்டுக்கொண்டே வேலை செய்ய வேண்டும் என்பதற்காக வாங்கிய குட்டி MP3 ப்ளேயர்,ப்ளாக் எழுத வேண்டும் என பலவும் நினைத்து,இவை அனைத்துக்கும் வசதியாக இருக்க வேண்டும் வைக்க வேண்டும் என வாங்கிய மேசை.இப்போது எப்படி இருக்கிறது?

ஒரு பக்கம் மடிக்கணினி விரித்தபடி இருக்கிறது,பக்கத்தில் பாதி படித்து விட்டு,படித்த பக்கத்தோடு விரித்து கவிழ்த்து வைத்திருக்கும் நாலைந்து புத்தகங்கள்,அதனருகில் நேற்று வாங்கி வந்த ரெடிமேட் சட்டை-பேக்குடன்,மூன்று நாட்களுக்கு முன் குடித்து விட்டு வைத்த காபி கப்,காலிலிருந்து கழட்டிய சுருண்ட நிலையில் உள்ள ஒற்றை சாக்ஸ் ஒன்று,
அடுப்புக்கு பயன்படுத்தும் காஸ் லைட்டர்,டிவி ரிமோட்,இந்த களேபரங்களுக்கடியில் ஒளிந்து கொண்டிருக்கும் காரின் சாவி எல்லாம்,எல்லாமே மேசையின் மேல் !!!!

விளைவு,தேவைப்பட்ட பொருள் தேவைப்பட்ட நேரத்தில் கைக்கு கிடைப்பது இல்லை.இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

எந்த பொருள்கள்,எந்த இடத்தில் தேவை என முதலில் தீர்மானிக்க வேண்டும்,இது செய்ரி-அதாவது Sorting.

காட்டாக....

கழுவாத காபி கப்,
சுருட்டிய சாக்ஸ்,
புதிய சட்டை,
காஸ் லைட்டர்,
கார் சாவி,
டிவி ரிமோட்

இவை எல்லாம் மேசைக்குத் தேவை இல்லாத பொருட்கள்.என்ன செய்ய வேண்டும்?ஒழுங்குபடுத்த வேண்டும்,அதாவது செய்டன்.

இந்த செய்ரி-Sorting,முடிந்ததும் செய்டன்-அதாவது Set in Order- அவை,அவை இருக்க வேண்டிய இடத்துக்கு அந்தந்த பொருட்களைக் கடத்துவது.

இவை முடிந்த பின் வருவது செய்சோ,அதாவது Shining .அந்தந்த இடத்துக்குப் பொருட்களைக் கடத்திய பின் அவற்றை சுத்தமாக துடைத்து அழுக்கில்லாமல் ஒழுங்காக அடுக்கி வைப்பது.

இந்த அடுக்கிவைப்பதில்,சாவிக்குத் தேவையான தொங்க விடும் ஆணி மற்றும் ரிமோட்டுக்குத் தேவையான சிறு பெட்டி முதலியவற்றையும் தயார் செய்வதும் அவற்றை அனைவரும் எளிதாகப் பார்த்து எடுக்கும் வண்ணம் ஒரு இடத்தில் வைப்பதும் செய்கெட்சுவில் அடங்கும்,அதாவது Standardisation.

இந்த பொருள் இந்த இடத்தில்தான் இருக்கும்,அதை எடுத்தால் அங்குதான் வைக்க வேண்டும் என்ற மதிப்பீடு செய்து அதை உறுதியாகப் பின் பற்றுதல்,அதை எல்லோரும் எளிதாகப் பின்பற்றும் படி எளிதான கையேடுகள்,சுவரொட்டிகள் இவற்றைப் பயன்படுத்தி முறைப்படுத்துவது-இது Standardisation.

எல்லாம் சரி,இவை எல்லாம் எத்தனை நாளுக்கு?

திரும்பவும் 10 நாட்களுக்குள் நாம் மேலே பார்த்த நிலைக்கு மேசையை மாற்றும் திறமைசாலிகளாவே நம்மில் பெரும்பாலோர் இருப்போம்;இவ்வாறில்லாமல் ஒரு ஒழுங்கில் நிலைக்க வேண்டுமெனில் கைக்கொள்ள வேண்டிய சிட்சுகெ,அதாவது Sustaining.

சிட்சுகெயில் மேற்சொன்ன இந்த முறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு,அவை மேன்மேலும் அவை கூர்மைப்படுத்தப்படுத்தல் ஒரு தொடர் விளைவாக-Continouous Process –ஆக கைக்கொள்வதும் கூட சிட்சுகெயில் ஒரு பகுதிதான்.

மேற்சொன்ன மேசைப் பொருட்கள் சீரமைப்பை அப்படியே தொழிற்சாலைக்கும் தயாரிப்புக் கூடத்திற்கும் விரித்ததுதான் டொயோட்டா செய்தது.

இந்த முறைகளினால் ஏற்பட்ட முன்னேற்ற மாறுதல்கள் அளித்த பளிச் மாறுதல்கள் மற்றும் தயாரிப்பு மேன்மை,அவற்றினால் அடைந்த திறன் தேர்ச்சி,அனைத்தினுக்கும் மேலான,முக்கியமான,இந்த ‘ அனைத்திலும் மேலான‘ அதி தேர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் மனத் தேர்ச்சி-

நாளாவட்டத்தில் டொயோட்டா மட்டுமின்றி ஜப்பானிய நிறுவனங்கள் பலவும் இந்த 5 எஸ் கோட்பாடுகளைக் கைக்கொள்ளத் தொடங்கி,தமது உற்பத்தி முறைகளில் தனித்த நேர்த்தியையும் தேர்ச்சியையும் கொண்டு வந்தன.ஜப்பானியர்கள் மற்றவர்கள் எட்ட முடியா இடத்தை,இன்றைய உலகில் எட்டிய முயற்சியின் கதை இதுதான் !!!!!!!

Acknowledgments :
-----------------------
1. Toyota Web Page
2.5 எஸ்- சாலமன் சி.பி.கே.-கிழக்கு பதிப்பகம்

Tuesday, May 6, 2008

57.அரிசி,அரசியல்,அராஜகம்

உலகெங்கும் இப்போது உணவு தானியங்களுக்கான பற்றாக்குறை எங்கும் நிலவுவது அனைவரும் அறிந்ததே.இதற்கான காரணங்களாக பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

இந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் புஷ்(ஒரு பதிவர் அழகாக புஸ் என்று எழுதியிருந்தார் !!!)ஒரு தத்துவத்தை உதிர்த்திருந்தார்,இந்தியர்கள் அதிகம் உணவு உட்கொள்கிறார்கள்,எனவேதான் உலக அளவில் உணவுப்பொருள்கள் விலை ஏறியிருக்கிறது என! இவ்வளவு முட்டாளான ஒரு அமெரிக்க அதிபர் அமெரிக்காவுக்கு வாய்த்தது சமீபகாலங்களில் இவரால் மட்டுமே சாத்தியம்.

இந்தியாவைப் பொறுத்தவரை தானிய உற்பத்தி எப்போதையும் விட அதிகமாக இருப்பினும் தானியங்களின் வினியோகம் போதுமான அளவு இல்லை என்பது பொதுவாக நிலவும் குற்றச்சாட்டு.

உள்நாட்டு தேவைக்கேற்ற அளவு தானியங்கள் இல்லை என்ற காரணத்தால் தானிய ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது அரசு.மிகச் சரியான காரணம்,அரசு நேர்த்தியாக செயல்பட்டு உள்நாட்டு தானிய வினியோகத்தை சரி செய்து,உள்நாட்டில் விலையைக் குறைக்கப்போகிறது என எதிர்பார்ப்பில் அரசின் அந்த நடவடிக்கை சரியானதாகத் தோன்றியது.

அப்படி நம்பிய நாம்தான் முட்டாள்கள்!

இதன் மத்தியில் அரிசியை முக்கிய உணவாகக் கொண்ட தமிழர்கள்,இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளிலும் அரிசி கிடைத்தற்கரிய பண்டமாக மெதுவாக மாறியது.

காட்டாக சிங்கப்பூரில் இரு மாதத்துக்கு முன், 5 கி அரிசி சுமார் 5 டாலரில் இருந்து 7.50 ஆகி, பின் 9 ஆகி,பின் 10 ஆகி இப்போது 13 டாலருக்கு விற்கப்படுகிறது.அதுவும் தேவையான அளவு கிடைப்பதில்லை.

சிங்கையில் பொதுவாக எந்த ஒரு விற்பனைப் பொருளும் விற்பனை அளவைப் போல இரு மடங்கு இருப்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பொது விதி;எதிர்பாரா வகையில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் பயன்படுத்தி பதுக்கல் காரர்கள் பொதுமக்களுக்கு ஊறு விளைவித்து விடக்கூடாது என்பதற்காக அரசே வைத்திருக்கும் ஒரு விதி அது.

ஆயினும் இதை எல்லாம் மீறியே மேற்சொன்ன விலையேற்றம் நடந்தது.

என்ன காரணம்?? என்னதான் நடக்கிறது???


இதற்கு மத்தியில் தமிழகத்திலிருந்து பொதுவிநியோகத்துக்குரிய அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு நேற்று-மே 5’ம் தேதி-எழுந்திருக்கிறது.

இன்றைய செய்திகளில் பெஃசி நிறுவனத்தின் தூண்டுதலின் பேரில் வடமாநிலங்களில் பல விவசாயிகள் கோதுமை பயிரிடும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில்,மதுபானத் தயாரிப்புக்குதவும் பார்லி பயிரிட ஊக்குவிக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிப்பனவாக இருக்கின்றன.

இந்தப் பின்னணியில் எழும் கேள்விகள்:
1. உணவு தானிய உற்பத்தி அதிகமான அளவில் இருந்தும் ஏன் பற்றாக்குறை ஏற்படுகிறது?
2. உணவு தானியங்களுக்கு இந்த அளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதை ஏன் அரசு முன்னுணரவில்லை?
3. இந்த பற்றாக்குறையைத் தடுக்கிறேன் பேர்வழி என அரசு எடுக்கும்,ஏற்றுமதித் தடை போன்ற நடவடிக்கைகள்
பெரும்பாலும் பதுக்கலை ஊக்குவிக்கும் வண்ணமே இருப்பதன் காரணங்கள் என்ன?
4. பணப் பரிவர்த்தணைக் காரணிகள் மற்றும் பொருளாதாரக் காரணிகள்(Fiscal & Economic, Inflationary Measures)
ஆகியவற்றின் ஒட்டுமொத்த நோக்கிலான நடவடிக்கைகள் ஏன் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை?
5. மேதாவிகளான நமது பிரதமரும் நிதியமைச்சரும் என்னதான்
செய்கிறார்கள்?
6. விவசாயிகளுக்கு நன்னோக்கில் உதவி செய்யும்,ஆக்கபூர்வமான,உற்பத்தியைப் பெருக்கும் விதமான
நடவடிக்கைகளை அரசு எடுப்பதை எது தடுக்கிறது?


கேள்விகள்,கேள்விகள்?????? பதில்கள்தான் எவரிடமும் இல்லை !!!!!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  3 weeks ago
 • - *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...
  1 month ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  6 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  8 months ago