ஆயினும் சில விதயங்களில் நடைபெறும் விதயங்கள் மிகவும் சிந்தனைக்குரியதும்,கவலையளிப்பதுமாக இருக்கின்றன.
காட்டாக, உயர்கல்வித்துறையில் நடக்கும் பல விநோதமான நிகழ்வுகள்.பாமக’வின் மருத்துவர் ராமதாசு உயர்கல்வித்துறையைச் சுட்டி பல கனைகளை கடந்தகாலத்தில் எய்திருக்கிறார்;இப்போதும் எய்து கொண்டிருக்கிறார்.ஆனால் அரசுத் தரப்பிலிருந்தோ முதல்வர் தரப்பிலிருந்தோ சரியான,மக்களுக்குத் தெளிவளிக்கும் விதமான விளக்கங்கள் வந்ததாகத் தெரியவில்லை.
இப்போதைய விவகாரம் என்னவெனில்,இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பது 55 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமைச்சகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.
சென்ற கல்வியாண்டில் ஏறக்குறைய 16,000 இடங்கள் காலியாக இருந்த நிலையில், 5 மதிப்பெண்களைக் குறைப்பதால் மாணவர்களுக்கு லாபமில்லை எனவும்,அதிக நன்கொடை பெற்று மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்குத்தான் இது சாதகமானதாக அமையும் என்றும் மருத்துவர் ராமதாசு கூறினார்.
எப்போதும் போலவே அரசோ,முதல்வரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை!
இப்போது பொது கவுன்சலிங் ஜூலை 11-ல் தொடங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட்டு, மே 21-ம் தேதி மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், ஆகஸ்ட் 31 வரை கவுன்சலிங்கை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதாகிறது.
சரி,இதனால் என்ன நடந்து விடப் போகிறது,மாணவ்ர்களுக்கு நல்லதுதானே,நல்ல கால அவகாசம் இருப்பதால் மாணவர்கள்,பரிசீலித்து வேண்டிய கல்லூரிகளில் இடம் பெற்றுக் கொள்ளலாமே என்ற பதில் கிடைக்கலாம்.
ஆனால்,தனியார் கல்லூரிகள் கட்டண இடங்களை விநியோகிக்க ஆரம்பித்து,கிட்டத்திட்ட முடிக்கும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். விஐடி, எஸ்ஆர்எம், அமிர்தா போன்ற பல்கலைக்கழகங்கள் பல ஆயிரம் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை அறிவித்து, தற்போது மாணவர் சேர்க்கையையும் பெரும்பகுதி முடித்துவிட்டன.ஆகஸ்ட் மாதத்தில்,ஒரு வேளை அரசின் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லையானால்,உங்களுக்காக தனியார் கல்லூரிகள் காத்துக்கொண்டிருக்காது;அல்லது அப்போதைய ‘விற்பனை விலை' இப்போதையதைப் போல இரண்டு மடங்காகக் கூட இருக்கக்கூடும்.
இந்த நிலையில் ஏன் அண்ணா பல்கலையால் இதை நடத்தி முடிக்க இயலாது?
ஒன்றரை லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து கவுன்சலிங் செய்வது மிகவும் கடினமான செயல் என்று தமிழக அரசு அப்பாவிபோல நடிக்க முடியாது.
பிளஸ் 2 முடிவுகள் வெளியான மறுநாளே "கட்-ஆப்' மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் அல்லது மருத்துவத்துக்கான "ரேங்கிங்' வரிசை தனியார் கல்வி ஆலோசனை அமைப்புகள் உதவியுடன் இணையதளங்களில் வெளியிடப்பட்டன.
பதிவு எண்ணைக் குறிப்பிட்டாலே, ரேங்கிங் எண், அந்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு இணையாக எத்தனை மாணவர்கள் உள்ளனர் என்ற விவரத்தைப் பெற முடிந்தது. அந்த அளவுக்கு கணினி தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
மே 31 வரை விண்ணங்களைப் பெற்று, (விண்ணப்பத்துடன் கணினி வசதிக்காக கோட் ஷீட் இணைக்கப்படுகிறது) அவற்றை மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்த ஒரு நாள் என்பதே மிக அதிகம்.
இந்தப் பட்டியல் வரிசைப்படி முதலிடத்தில் உள்ள 31 சதவீத மாணவர்களை பொது ஒதுக்கீட்டுக்கு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள மாணவர்களை இடஒதுக்கீடு முறைப்படி பிரிக்க அதிகபட்சம் இன்னொரு நாள் ஆகலாம். கணிப்பொறி மூலம் எவ்வளவு வேகமாகவும் மாணவர் சேர்க்கையை நடத்துவது சாத்தியமே.
அப்படியானால், அண்ணா ஏன் இதை செய்ய மறுத்து அரசு இடத்துக்கான நேர்காணலை ஆகஸ்ட் வரைக்கும் இழுக்க வேண்டும் ?
இந்த இடத்தில் தமிழக உயர் கல்வி அமைச்சகத்தின் உள்நோக்கம் பற்றிய அச்சங்கள் வெளிப்படுகின்றன.
அரசு ஒதுக்கீடு விரும்பிய கல்லூரிக்கு கிடைக்குமா,கிடைக்காதா என்ற நிச்சயமற்ற தன்மையை இப்போதைக்கு மாணவர்களிடையே உருவாவதற்கு இந்த உத்தி வழிவகுக்கிறது,எனவே இந்த உறுதியற்ற நிலையை விரும்பாத பெரும்பாலானவர்கள்,தாங்கள் விரும்பும் கல்லூரிக்கு,கல்லூரித் தொகுப்பின் மூலம் இடத்தைப் பிடித்து தக்கவைக்க மறைமுக நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
எனவே நடுத்தரக் குடும்பங்களுக்கு,மாணவர்களுக்கு இரு வித வழிகளே திறக்கப் படுகின்றன.
ஒன்று,விரும்பிய தரமான தனியார் கல்லூரியில் பணம் கொடுத்து சேர்ந்து படிப்பது;
அல்லது ஒரு தற்காப்புக்கு,”திரும்பக் கிடைக்காத அட்வான்ஸ்” கொடுத்து இடத்தை தக்க வைத்து,பின்னர் அரசு நேர்முகத்தை எதிர்கொள்வது.
எப்படியிருப்பினும்,கொழிக்கப் போவது தனியார் கல்லூரிகளின் பணப்பெட்டியே!.
இரண்டுக்கும் வழியில்லாத நடுத்தரக் குடும்பங்கள் பீதியில், குழந்தைகளின் எதிர்காலம் புரியாமல் மனஇறுக்கத்தில் விழி பிதுங்குவார்கள்.
உயர்கல்வித்துறை இந்த விளையாட்டை விளையாடுவதின் பின்னணி,இதுவாக இருக்கும் பட்சத்தில்,மருத்துவர் ராமதாசுவின் கூச்சலில் அர்த்தமிருக்கிறது;
அல்லது அது, ‘பங்கு கிடைக்காத’ ஆதங்கக் கூச்சலாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
உயர்கல்வித் துறை அமைச்சர் மட்டுமின்றி,மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மேலும் எழுந்த வலுவான குற்றச்சாட்டுகளுக்கும்,ஆட்சித் தலைவரின்,கட்சித் தலைவரின் பதில்,இடி போன்ற மௌனம் தான்.
இந்த குழப்பங்களால் அவதியுறப் போவது எப்போதும் போல நடுத்தரமக்களே என்பது விசனிக்கப்பட வேண்டிய ஒன்று.
*************************************************************************************
கர்நாடகத்தில் பாஜக மாநில ஆட்சியை ஒரு வழியாகப் பிடித்திருக்கிறது.
இன்னும் காங்கிரஸ் கட்சி,பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கப்படக்கூடாத நிலைக்கு வேண்டிய ஏற்பாடுகளை மாநில கவர்னர் மூலமாக மேற்கொள்ளக்கூடும் என்ற நிலை பொய்யாகி,இன்று கவர்னர் பாஜக’வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து விட்டார்.
கடந்த சட்ட மன்றத்தில் கவுடாவின் ஜனதாதளம் நடத்திய ‘ஆட்சிப் பகிர்வு ஒப்பந்த' கேலிக் கூத்துகள்,ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் வரை ஒரு முகமும்,பாஜக’விற்கு ஆட்சியை ஒப்ப்டைக்க இருந்த நேரத்தில் மறுமுகமும் காண்பித்து மக்களின் முன்னிலையில் தங்களைக் கேவலப் படுத்திக் கொண்டார்கள்.இந்த அவல விளையாட்டு பாஜக மேல் ஒரு இரக்கத்தையும்,மேலும் தறிகெட்டுப் போய் ஏறியிருக்கும் விலைவாசிகளும்,பணவீக்கமும் காங்கிரஸுக்கு அவப்பெயரையே கொண்டுவரும் சூழலில்,பாஜக எளிதாக முந்திக் கொண்டது.
முதலில் இந்த விதமான ‘20 மாதங்கள் ஆட்சிப் பகிர்வு’ செயல்பாடே ஒரு கழைக்கூத்து போன்றது.ஆனால் ‘பெருமைக்குரிய ஜனநாயகம்’ எல்லாக் கூத்துகளையும் அனுமதிக்கிறது என்ற காரணத்தால்,அந்த விதமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கவுடவின் புதல்வர் முதல்வரானார்;அதிலும் தந்தைக்கும் மகனுக்குமிடையேயும் அசிங்க கவிழ்ப்பு நாடகங்கள் இடையில் நடந்தேறி,பின்னர் இருவரும் இணைந்து கொண்டு பாஜக’வுக்கு ஆப்படித்தார்கள்.
இந்த கோமளித்தனங்கள் பிடிக்காத மக்கள் இந்த முறை சற்றுத் தெளிவாக முடிவளித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே,எடியூரப்பா,ஆட்சியைப் பிடிக்கும் ஆசையில் ஒகேனக்கல் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கும் செயல்களில்,தேர்தல் நேரத்தில் இறங்கினார்.அப்படியும் ஒகேனக்கல் ஒப்பந்தம்,போடப்பட்ட 1984’லிருந்து இத்தனை காலம் நிறைவேற்றப்படாமல் இருந்ததற்குக் காரணம் தமிழகத்தின் கையாலாகாத முதர்வர்களேயன்றி கர்நாடக முதல்வர்களோ,அரசியல் கட்சிகளோ அல்ல;அவர்கள் ஒப்பந்தத்தின் மறுபாதியான பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை சரியாக நிறைவேற்றிவிட்டுத்தான் தமிழகத்துடன் முஷ்டி மடக்கினார்கள்.மேலும் மாறிவிட்ட தேர்தல் கணக்குகளுக்கு மத்தியில் காங்கிரஸின் நஞ்சேகவுடாவே இப்போது முழுக்க பல்டியடித்தாலும் அடிப்பார்;என்றால் நான் என் சென்ற பதிவின் தலைப்பை பைத்தியக் காரர்களுடன் சேர்ந்துவிட்ட இன்னொரு கூத்தாடி என்று மாற்ற வேண்டிவரும் !
இந்த நிலையில்,ஒகேனக்கல் திட்டத்தை முட்டுக்கட்டை போட்ட காரணிகளில் முக்கியமானவராக கருதப்படும் எடியூரப்பா முதல்வர் பதவியேற்கப் போகும் நேரத்தில் எந்த வகையில் இந்த பிரச்னை அணுகப்படும் என்ற கேள்வி எழுகிறது.
பாஜக’ தாங்கள் ஒரு தேசியக்கட்சி, தங்களுக்கு தேசநலனே முக்கியம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டதை மெய்ப்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.அது உண்மையெனின் அவர்கள் ஒகேனக்கல் திட்டத்துக்கு எந்தவிதமான முட்டுக் கட்டையும் போடாமல் ஆக்கபூர்வ ஒத்துழைப்பு நல்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே,அறுதிப் பெரும்பான்மை வருகின்ற நிலை தெரிந்த போதே இல.கணேசன் பாஜக ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற தேவையான ஒத்துழைப்பை நல்கும் என்று நேற்று அறிவித்தார்;இன்று வெங்கையா நாயுடுவும் சுமுகமான தீர்வு கிடைக்க பாஜக தேவையானதை செய்யும் என உறுதிப்படுத்தியிருக்கிறார்.இந்த பாஜக’வின் நிலைப்பாட்டை எந்த அளவிற்கு காங்கிரஸும்,கவுடாவின் ஜனதா தளமும் அரசியல் விளையாட்டுக்கு உபயோகப் படுத்தும் என்பது கேள்விக்குரியதும்,கவலைக்குரியதுமாகும்.
தானே முன்வந்து,தேர்தல் வரை குடிநீர்த்திட்டத்தை நிறுத்தி வைத்ததாக அறிவித்த தமிழக முதல்வர் கருணாநிதி எந்த விதமான நிலைப்பாடு எடுப்பார் என்பது இன்னொரு கவலையேற்படுத்தும் விதயங்களுள் ஒன்று.இது விதயத்தில் தமிழக முதல்வர் சாதுரியத்துடன் நடந்து திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்வாரா,அல்லது காங்கிரஸ்,பாஜக சார்ந்த அரசியல் ஆட்டத்துக்கு ஏற்ப தன் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வாரா என்ற கேள்வியும் இருக்கிறது.
முன்னர் ‘எலும்புகளை உடைத்தாலும்...’ என்ற நிலைப்பாடும்,பின்னர் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்புகளைக் கெடுக்கும் விதமான தர்மசங்கடங்களைத் தவிர்க்கும் காரணத்துக்காக திட்டத்தை தேர்தல் முடியும் வரை தள்ளி வைப்பதாகவும் அறிவித்தார்.முழுக்க அரசியல் காரணங்களுக்காக மேற்கொண்ட இந்தவிதமான நிலைப்பாடு,மீளவும் அரசியல் காரணங்களுக்காக வேறுவிதமான நிலைக்கு போய்விடக் கூடாது என்பதே இப்போது கவலைக்குரிய விதயம்.
கர்நாடகத்தில் ஆளப்போகும் பாஜக’வுக்கு தலைவலிகள் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் இத் திட்டத்தை எதிர்ப்பவர்களை கர்நாடகத்தில் தூண்டிவிடுமானால்,தமிழக முதல்வருக்கான செயல்தேர்வு-Choice-களில்,காங்கிரஸின் (பாஜக’வை கர்நாடகத்தில் வீழ்த்தும்) அரசியல் அபிலாஷைகளும் ஒரு காரணியாகும்.
காவிரிப்பிரச்னை இவ்விதமான காங்கிரஸின் இரட்டை நிலையால்தான் பங்காரப்பாவின் காலத்திலிருந்து சிந்துபாத் கதையைப் போல தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அல்லது திமுக தலைவர்,வரப்போகும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து,பாஜக’ பக்கம் ஒதுங்கலாம் என்ற நிலைப்பாடை எடுக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கலாம் என்ற சூழலில்,இந்த திட்டத்தை ஒரு ஆறு மாதத்திற்கு ஊறப்போட்டு விட்டு,பின்னர் முழு கதியில் முண்டா தட்டி இதைக் கையில் எடுத்தால்,அந்த நேரத்தேவைக்கு ஏற்ப ஒரு அரசியல் காரணியாக இது உபயோகப் படும் வாய்ப்பும் இருக்கிறது.
எப்படி சிந்தித்தாலும்,தமிழக மக்களுக்கு,ஒகேனக்கல் சார்ந்த தமிழக மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைகளுக்கு நன்மை கிடைக்கும் வண்ணம் ஏதாவது நடைபெறுமா என்ற நினைக்கையில் கவலையேற்படுவது நிஜம் !
நன்றி-எக்ஸ்பிரஸ் குழுமச் செய்திகள்
சோதனை
ReplyDeleteநன்று ! கட்டுரை அருமை ! நடுநிலையுடன் உள்ளது !
ReplyDeleteஅன்புடன்
அருவை பாஸ்கர்
நன்று ! கட்டுரை அருமை ! நடுநிலையுடன் உள்ளது !
ReplyDeleteஅன்புடன்
அருவை பாஸ்கர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருவை பாஸ்கர்
ReplyDelete(அருப்புக்கோட்டையை வேறுவழியில் குறிப்பிட முடியாதா என்ன?)
:)
நடுநிலை என்று ஒப்புக் கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி.
தமிழ் இணையப் பக்கங்களில் இருக்கும் ‘கழகச் சூழலில்' எனக்கே சிலசமயம் நாம்தான் தவறாக சிந்திக்கிறோமோ என்ற தடுமாற்றம் வரும்;பின்னர் நானே என்னை நிலைப்படுத்திக் கொள்வேன்.
:(