குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Thursday, March 27, 2008

50.டாடாவும்,சிதம்பரமும் - கமான் இந்தியா !!!!!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற லீ குவான் யூ கொள்கை அரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப.சி. நல்ல அடர் நீல நிறத்திலான ‘சூட்’ உடையில் காணப்பட்டார்.எப்போதும் வெள்ளை வேட்டி,சட்டையில் பார்த்துப் பழக்கமான கண்களுக்கு வித்தியாசமான உடையில் நேர்த்தியாகக் காணப்பட்டார்.

அவரின் பேச்சும் எப்போதும் போலவே நேர்த்தியுடன் அமைந்தது.

• இந்தியா இன்னும் குறைந்தது 20 ஆண்டுகளுக்காவது 9-10 சதவீத வளர்ச்சியில் இருந்தால் இந்தியாவில் ஏழ்மை என்பது ‘பொய்யாய்,பழங்கதையாய்' போகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.
• பின்னொரு நாள் இன்னொரு இந்திய நிதி அமைச்சர் சிங்கப்பூரில் இவ்விதமான இந்தியாவில் வறுமை என்பது வரலாற்றில் மட்டுமே’ என்னும் நற்செய்தியைச் சொல்வார் என்றார்.
• மக்களுக்கு அளிக்கப்படும் கவர்ச்சித்-விவசாயிகள் கடன் தள்ளூபடி போன்ற- திட்டங்கள்,வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றார்.
• பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து சமூகத்துக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டுவதன் அவசியத்தையும்,அவ்வாறு இருக்க கவர்ச்சித் திட்டங்களும் உதவக் கூடும் என்றும் சொன்னார்.
• வளர்ச்சி என்பது ஒரு முடிவல்ல,அது நாம் அடைய நினைக்கும் இலக்கை நோக்கிய ஒரு முயற்சியின் விளைவு என்றார்.
• Pro Americcan பார்வை உள்ளவர் என்றே பரவலாக அறியப்பட்ட ப.சி. அமெரிக்கா எரிபொருள் தேவைகளுக்காக பெருமளவு உணவுப் பொருள்களை-முக்கியமாக சோளம்- அமெரிக்கா வீணாக்குவதாகவும்,இதனால் உலக அளவில் உணவுப்பொருள் விலையேற்றம் தூண்டப்படுகிறது எனவும் குறை கண்டார்;மேலும் அமெரிக்க ஃபெடரல் வங்கி,நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வசூலில் இவ்வளவு நாள் மெத்தனமாக இருந்ததின் தாக்கத்தை இப்போது அனுபவிக்க்கிறது என்றும் கூறிய அவர்,அதற்கான தீர்வாக அவர் பார்வை என்ன எனக் கூறுவார் என்ற சுவாரசியமான எதிர்பார்ப்பை பொய்யாக்கினார்.
• ப.சி.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிக்கையில் ஒரு பத்தியாளராக இருந்து சுமார் இரண்டாண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான A view from outside- Why Good Economics Works for Everyone என்ற புத்தக வெளியீட்டுக்குத்தான் அவர் வந்திருந்தார்.
• அவர் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் எழுதிய இரண்டு ஆண்டுகளில் பத்திக்கான குறித்த நேரத்தை இரண்டு முறை மட்டுமே தவறியதாகக் குறிப்பிட்டார்.அவரின் முன்பொரு முறை அமெரிக்கப் பயணத்தைப் பதிவு செய்த ஒரு பதிவர்,அமெரிக்காவில் ஊரை சுற்றிப் பார்க்க அழைத்த போது,புன்னகையுடன் மறுத்து,’எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு பத்தி கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது,அதை எழுத வேண்டும்’ என மறுத்துவிட்டதாக நினைவு கூர்ந்திருந்தார்;ஒருவேளை பதிவரின் அந்த விருந்தோம்பலை ஏற்றிருந்தால், ‘இதுவரை மூன்றுமுறை மட்டுமே...’ எனக் கூறியிருப்பார் என நினைக்கிறேன் !!!!


**************************************************************இந்தியாவின் டாடா போட்டார்ஸ் நிறுவனம் போஃர்ட் நிறுவனத்தின் மேலாண்மையில் இருக்கும் லாண்ட்ரோவர் மற்றும் ஜாகுவார் கார் நிறுவனங்களை (JLR-Marquees) வாங்கி இருக்கிறது.இந்த பிரிட்டானிய நிறுவனங்கள் சுமார் 123 ஆண்டு கால வரலாற்றை உடையவை !

இரு நாடகளுக்கு முன்பே இந்த செய்தி ஊடகங்களில் வந்த போதும் போஃர்ட் நிறுவனம் இதனை உறுதி செய்வதை இன்றுவரை நிறுத்தி வைத்தது.இன்று செய்தி ஊடகங்கள் இதனை உறுதி செய்திருக்கின்றன.

சமீப காலங்களில் இந்திய கார்பொரேட் நிறுவனங்கள் உலக அளவில் பல பெயர் பெற்ற நிறுவனங்களை வாங்க ஆரம்பித்திருப்பது,உலக அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் ‘தவிர்க்க இயலா தன்மை’யை குறிப்பிடுவதாகக் கருதலாம்.இதற்கு முதல் சுழி போட்டவர் ஆர்சிலார்’ஐ வாங்கிய மித்தல்.பின்னர் டாடா நிறுவனமும் இந்த வகை Brand acquirement ல் இறங்கி கோரஸ்(ஸ்டீல்) மற்றும் டெட்லீ டீ(தேனீர்) நிறுவனங்களை வாங்கியது;கோவை மகாலிங்கம் குழும நிறுவனம் கூட ஒரு ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கியது.ரிலையன்ஸ் நிறுவனம் ஐரோப்பிய Giant ஆன கார்ஃபோர் சில்லரை விற்பனைக் குழுமத்தை வாங்கவோ அல்லது அதனுடன் கூட்டாக இந்திய சந்தையில் சில்லரை வணிகத்தை சந்தைப் படுத்தவோ முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.டாடாவின் ஜாகுவார் மற்றும் லாண்ட்ரோவர் நிறுவனங்களின் கைக்கொள்கை-acquirement-இந்த வரிசையில் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் மகிந்த்ரா நிறுவனமும் இருந்ததாகவும் கடைசி நேரத்தில் போஃர்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டமைப்பு டாடா நிறுவனத்தை முன்னிறுத்தியதால் டாடா நிறுவனம் இந்தப் போட்டியில் முந்தியதாகவும் பிற்சேர்க்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரிவர்த்தனை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலானது,சுமாராக 10000 கோடி ரூபாய்கள் ! (யாருப்பா அங்க பெருமூச்சு விட்றது !!!!!!????) ஆயினும் JLR என்றழைக்கப்படுகிற ஜாகுவார்,லாண்ட்ரோவர் நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தை போஃர்ட் நிறுவனத்துக்கு ஏற்படுத்துகின்றன,என்பதில் இதில் உள்ளமைந்த செய்தி.எனில் டாடா நிறுவனம் ஏன் இப்படி நஷ்டத்தில் இயங்கும் இரணடு பிராண்டுகளை வாங்குகிறது?

பதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பரவலாக்கத்தில் – Product Diversification – ல் இருக்கிறது.இப்போது டாடா நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள ‘நானோ’ வையும் விற்கும்; சுமார் ஒரு கோடி ரூபாய் விலையுள்ள ‘ஜாகுவார்’ ஐயும் விற்கும். இனி கார்கள் சந்தையில் டாடாவின் பெயர் தவிர்க்க இயலாத ஒரு பெயராக உலக அளவில் மாறலாம்,டாடா நிறுவனம் இந்த JLR-Marquees நிறுவனங்களையும் லாப நோக்கோடு நடத்திக் காட்ட முடிந்தால் !

இவ்விதமான கைக்கொள்ளும் நிகழ்வுகளால் இரண்டு விதமான நன்மைகள் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன.
உற்பத்தித் துறையின் இவ்விதமான உலகளாவிய நிறுவனங்களில் உத்திகள்,நேர்த்திகள் இந்திய நிறுவனங்களுள்ளும் நுழைய இது ஒரு வாய்ப்பு.

இரண்டாவது இவ்வகையான உலகளாவிய புகழ்வாய்ந்த பெயர்களுக்கான சந்தையில் இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையும் சந்தைப்படுத்தலாம்.
இரண்டுவிதமான அணுகுமுறைகளும் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரமிடுபவை.

Come on India !!!!!!!

Wednesday, March 19, 2008

49.லாம்ப்ரட்டா ஸ்கூட்டரும்,ஆண்கள் வயதுக்கு வருவதும்1985’ம் வருடம் என நினைக்கிறேன்.

அப்பா அப்போது வைத்திருந்த வாகனம் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்.உங்களில் எத்தனை பேருக்கு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் பற்றி தெரியும் எனத் தெரியவில்லை.
இப்பொதைய காலங்களில் ஸ்கூட்டரே அருகி வருகிறது;பதிலாக ஸ்கூட்டிகளில் இளம்பெண்கள் சிறகடிக்கிறார்கள்,பார்க்க மகிழ்வாயிருக்கிறது என்றாலும் அவர்கள் கையில் லாம்ப்ரட்டா ஸ்கூட்டரைக் கொடுத்தால்,கதறி காலில் விழுந்து விடுவார்கள் என நினைக்கிறேன்.
Image result for lambretta scooter- image india
காரணம் லாம்ப்ரட்டாவின் எடை மற்றும் கையாள்வதில் உள்ள சிரமங்கள் !

பொதுவாக 70 களில் இறுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் இந்திய இருசக்கர வாகன உலகில் வெகு சில வாகனங்களே உலவி வந்தன.வெகு கம்பீர வாகனப் பிரியர்கள் என்ஃபீல்ட் புல்லட் வைத்திருப்பார்கள்,அது பெரும்பாலும் தனிப்பட்ட சவாரிக்கு மகிழ்வைத்தரும் வாகனமாக இருக்குமே ஒழிய குடும்பவாகனமாக இருக்க வாய்ப்பில்லை,ஏனெனில் பெண்கள் புல்லட்டின் பின் இருக்கையில் அமர்வது ஒரு சௌகர்யக் குறைவான விதயம்.எனவே மனைவியுடன்-சிலசமயம் இரு குழந்தைகளுடன் கூடவும்-செல்ல நடுத்தர வாசிகள் பெரிதும் பயன்படுத்திய வாகனம் ஸ்கூட்டர் மட்டுமே.அதைவிட எளிதான சவாரிக்கு லூனா,சுவேகா என்ற இரு வாகனங்கள் இருந்தன.இவை இரண்டும் இன்றைய டிவிஎஸ் 50 ன் முன்னோடிகள்.
எங்கள் வீட்டுக்கு முதலில் வந்த வாகனம் ஸ்கூட்டர்.

Sunday, March 16, 2008

48.மாநிலங்களவைத் தேர்தல்,சிவக்குமார் மற்றும் திருமந்திரம் - சில செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தலின் தமிழக சூழல் ஒரு ஒன் – டே மாட்ச் போன்றதாக ஊடகங்களால் ஆக்கப்பட்டது.அது மிகச் சாதாரணமாக முடிந்திருக்கிறது.
இந்த விதயத்தில் முதல்வரின் சாணக்கியத் தனமான செயல்பாடு பாமக’வை அதன் இடத்தில் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
ஐந்தாவது இடம் போட்டியிடப்படும்,அதற்கான வேட்பாளர் இ.க.கட்சியிலிருந்து நிறுத்தப் படுவார் என்று அறிவித்ததன் மூலம்,மருத்துவர் ராமதாசுவை அங்குமிங்கும் நகரவொட்டாது நிறுத்திவிட்டார் முதல்வர் முக.பாமக’வுக்கும் அதிமுக’வுக்கும் திரைமறைவு உடன்பாடு இருக்கின்றன என்பது போன்ற செய்திகளை விதைத்தும் ஒன்றும் பயன் இல்லை;இது போன்ற உறுதியை 90'களில் பாமக’வுக்கு முதன் முதலில் 25 இடங்கள் இதுக்கிய சமயத்தில் திமுக தலைவர் கைக்கொண்டிருந்தால் தமிழக அரசியலில் இவ்வளவு சாதிரீதியான அரசியல் கேடுகள் தலைதூக்கியிருந்திருக்காது,ஏதோ இப்போதாவது திமுக’வுக்கு அது புரிந்தால் எதிர்கால தமிழகத்துக்கு அது நல்லது.
ஜெ.யிடமிருந்து ஏதேனும் குறித்தல்கள் வரும் என்று எதிர்பார்த்த ராமதாசுவை ஜெ.கோமாளி போல உணர வைத்திருக்கிறார்;திமுக கூட்டணியிலேயே அடுத்த தேர்தலில் கழற்றி விடக் கூடக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் பாமகா’வை எதற்கு இப்போதே கொம்பு சீவி பெரிய ஆளாக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்;திமுக கூட்டணியிலிருந்து கழற்றி விடப் படும் சூழ்நிலையில் இன்னொரு மதிமுக போலத்தான் பாமக ஜெ’யால் பார்க்கப்படும்.வைகோவாவது சோதனை நேரத்தில் உடன் இருந்தார் என்று ஜெ’யின் good books’ல் இருக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன;ஆனால் பச்சோந்தி அரசியலில் சரித்திரம் படைக்கும் மருத்துவர் ஐயாவுக்கு ஜெ’யிடம் என்ன மரியாதை கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தன்னிலை தெளிவாகத் தெரிந்ததால் பாமக இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறது. ஆனால் மருத்துவரால் நெடுங்காலம் கத்தி எடுக்காமல் இருக்கமுடியாது,ஏதாவது ராக்கெட்டை சீக்கிரம் விடுவார் என எதிர்பார்க்கலாம் !

************************************

திருமுறை மற்றும் திருமந்திர மாநாடுகள் ஆண்டுதோறும் சில நன்மக்களால் நடத்தப்படுகின்றன.திருமுறைகளில் ஆழ்ந்த தமிழறிஞர்கள்,சான்றோர்கள் சுமார் 250 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டு தங்கள் கட்டுரைகளை வாசித்தளிக்கும்,மூன்று நாள் அமர்வில் நடக்கும் விழா இது.நம்மைப் போன்ற அரைவேக்காடுகள் முற்றிலும் அமர்ந்து கேட்கவே ஒரு தனியான மனப் பக்குவம் வேண்டும்.

இந்த மாநாடு கடந்த இரு வருடங்களாக வாரணாசியிலும்,இவ்வாண்டு சென்னையிலும் நடந்தது.அதைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என் அன்னையின் மூலம் எனக்குக் கிடைத்தது,அவரின் அமர்வும் மாநாடுகளில் இருந்ததால்!
இம்முறை நடந்த மாநாட்டில் சிவகுமார்-அவர் நடிகராகவும் பெரிதும் அறியப்பட்டவர்,இப்போதைய நடிகர் சூர்யாவின் தந்தை-ஒரு பார்வையாளராக வந்து உரையாற்றினார் என்றும்,ஒரு திரை நடிகராக தொழிலில் இருக்கும் அவரின் திருமந்திரம் பற்றிய ஈடுபாடு,அறிவு தன்னை வியக்க வைத்தது என்றும் என் அம்மா கூறினார்.
பொதுவாக உருவு கண்டு எள்ளும் நோக்கோ,முன் தீர்மானத்துடன் எதையும் அணுகும் வழக்கமோ இல்லாத எனக்கு இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையாதலால்,அது ஒரு செய்தி அளவில் என்னில் பதிந்தது.

அறியப்பட்ட ஒரு நடிகராக இருக்கும் அவரின் வாழ்வில் பணம் ஓரளவுக்கு அவரின் நிம்மதியான வாழ்க்கைக்கு எளிதாகக் கிடைத்திருக்கும்,அவருக்கான ஓய்வு நேரங்களிலும் ஏதும் குறை இருந்திருக்காது.ஒரு நடிகர் ஒரு மாதச் சம்பளக் காரனைப் போல் நாளின் குறிப்பிட்ட நேரத்தை ஒரு செயலுக்கு ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லாத்தால்,அவருக்கான நேர மேலாணமை ஒரு பிரச்சனையான விதயம் அல்ல;தேவை படிப்பதற்கான,தேடலுக்கான ஈடுபாடு மட்டுமே,அது அவரிடம் இருந்திருக்கிறது,என்ற நோக்கில் பாராட்டப் படவேண்டியவர்.

இந்த நோக்கில் அண்மையில் மறைந்த சுஜாதா,முதல்வர் முக,ஆகியோர் என்னை வியக்க வைப்பவர்கள்.

ஒரு மாதச் சம்பளக்காரனாக தன் கடமைகளைக் குறைவறச் செய்து,ஒரு பரபரப்பான எழுத்தாளராக அத்தளத்திலும் விரைவாக இயங்கிக் கொண்டும் சுஜாதாவுக்குப் தேடிப் படிக்க அவ்வளவு நேரம் கிடைத்தது என்பது வியப்பான ஒரு விதயம்,இந்த ஒரு பார்வையில் சுஜாதாவின் விதய ஞானம்,அவரது பரந்த வாசிப்பினாலேயே ஏற்பட்டது என்பதை நாம் நமக்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் ஒன்று !

திமுக அரசில் இல்லாத்போது முக’வுக்காவது நேரம் அதிகம் கிடைக்கலாம்,ஒரு அரசின் முதல்வராகவும் இருந்து கொண்டு அவர் அனைத்து ஏடுகளையும் மேய்ச்சல் பார்வை பார்க்கவும்,தனக்கான திருப்திக்கு எழுதவும் படிக்கவும் நேரம் ஒதுக்க முடிகிறதென்றால்,அவர்களை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

Thursday, March 6, 2008

47.நீதித்துறை,அரசியல் மற்றும் சான்றான்மை

சுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார்? அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.

காவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.

கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். "ஆள்கொணர் மனு'க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.

5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.

1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.

""கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது'' என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.

அதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். ""ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்'' என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.

எச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது னம் கடைப்பிடிப்போம்.

குறிப்பு: இது ஒரு மீள்பதிவுதான்,ஆயினும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு செய்தியாகத் தோன்றியது.

Acknowledgements: TJS.George,Columnist,Express Group.

Sunday, March 2, 2008

46.கீதா சாம்பசிவம் அவர்களே ! சிதம்பரம் கோவில் பற்றி !

சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் திருமுறை பாட தீட்சிதர்கள் தடை விதிப்பது பற்றி பல பதிவுகளில் நான் சுட்டியபோது,தீர்மானமாக பலமுறையும்,வருந்தி சிலமுறையும் அதனை மறுத்தார்.
இன்றைய தினமணியின் பின்வரும் செய்தியை அவருக்கு சுட்டுகிறேன்.

சிதம்பரம், மார்ச் 1: சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைச் செயலர் கோ.சந்தானம் பிப்.29ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி கடந்த 852005ல் தமிழில் தேவாரம் பாடச் சென்றபோது அவர் தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். பின்னர் தீட்சிதர்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை இணை ஆணையர் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். பின்னர் சிவனடியார் ஆறுமுகசாமி அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார்.

அதன்மீது விசாரணை முடிவுற்று திருச்சிற்றம்பல மேடையில் நின்று பூஜை காலங்களை தவிர பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என 3042007ல் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி தீர்ப்பு அளித்தார்.

அத்தீர்ப்பை எதிர்த்து பாட அனுமதியளிக்கக் கூடாது என ஆலய பொதுதீட்சிதர்கள் அறநிலையத்துறைச் செயலரிடம் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவுற்று அறநிலையத்துறைச் செயலர் சந்தானம் பிப்.29ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

"தீட்சிதர்கள் நடத்தும் காலபூஜையின் அங்கமாகவே தேவாரம் பாடப்பட வேண்டும். பூஜை முடிந்தவுடன் திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தமிழில் தேவாரம் பாடி வழிபடலாம். அவ்வாறு பாடக்கூடாது எனக் கூறுவது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும். மேலும் சிற்றம்பலமேடையில் நின்று வழிபடுவர்களிடம் தீட்சிதர்கள் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது' என அந்த அரசாணையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு விவகாரமாகி,திருமுறை விரும்பிகள் தாக்கப்பட்டு,சில ஆணையர்கள் ஒரு சார்பாக தீட்சிதர்களுக்கு மௌன ஆதரவாக இருந்ததும்,வழக்குமன்றத்துக்கு விவகாரம் சென்றதும் உண்மை.
இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது ! இனியும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் !!!!!!!

45.இந்தியாவின் 2008-09 ன் நிதிநிலை அறிக்கை

சமீப இந்தியா அரசியல் சரித்திரத்தின் நிதிநிலை அறிக்கைகளில் சமீப காலங்களாக 1984,1991,1997 வருடங்களுக்கானவை குறிப்பிடப்பட வேண்டியவை.இவற்றை அளித்தவர்கள் வி.பி.சிங்,மன்மோஹன் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர்.
பின்னோக்கிப் பார்க்கையில் சுதந்திர இந்தியாவின் நிதி அமைச்சர்களில் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார்,டி.டி.கே.,போன்றோர் மிகவும் சிலாகிக்கப்பட்டவர்கள்.பின்னர் வந்தவர்களில் ஆர்.வி. சிறிது நன்றாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடுவார்கள்.
சமீப காலங்களின் அறியப்பட்ட பொருளாதார நிபுணர்கள் மன்மோஹன்,ப.சிதம்பரம் மற்றும் சுப்ரமண்யன் சுவாமி.
சுப்ரமணியன் சுவாமி இருந்தது ஒரு வருடம் மட்டும்தான் என நினைக்கிறேன்.சில அவசர ஆனால் நீண்டகாலப் பயன்களுக்கான முடிவுகளை அவரும்,சந்திர சேகரும் செய்தார்கள்,பெரிதும் விமர்சிக்கப் பட்டபோதும்.
மன்மோகன் வந்தபிறகு 5 வருடங்கள் நிர்ணயிக்கப் பட்ட பாதையில் சென்றபோதும் இருப்பொர்,இல்லாதொருக்கான இடைவெளி அதிகமானது என்பதும் உண்மை.
நவீன பொருளாதார சிந்தனை Inclusive Growth என்ற வார்த்தைப் பிரயோகத்தை அடிக்கடி உபயோகப் படுத்துகிறது;இதன் பொருள் சமூகத்தின் அனைத்து வகுப்பினரும் ஒன்றாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்று சொல்லப்படுவது.ஆனால் வேடிக்கையாக,இன்குளூசிவ் குரோத் என்பதை அடைய வேண்டுமெனில் ஒரு பத்தாண்டுக்காவது நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது நியதி.இது Sustained Growth எனச் சொல்லப்படுவது.
இன்றைய உலக அளவில் 8 சதவீதத்துக்கும் அதற்கும் மேலான குறியீடில் வளர்ச்சி இருப்பது மிகச் சில நாடுகளில்தான்,அதில் இந்தியாவும் சீனாவும் முக்கிய நாடுகள்.
எனவேதான் இந்திய ,சீனச் சந்தைகளை நோக்கி மேற்கத்திய நாடுகள் பாசக்கரம் நீட்டுகின்றன.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக 8 சதவீத அளவில் வளர்ச்சி நிலையாக இருக்கிறது;இது 2014 வரை இந்த நிலையிலேயே இருக்குமெனில்,பெருகும் பொருளாதார வளம் எல்லா வகுப்பையும் அடைந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
முக்கியமாக இந்த வளர் நிலையில் அவ்வப்போது சமூகத்தின்,நாட்டின் பொருளாதாரக் கூறுகளில் நிலவும் கடும் வேறுபாடுகளை அவ்வப்போது நீக்கினால்தான்,எதிர்பார்க்கப் படும் ஒரு ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படும்.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அதனையும்,சொல்லவேண்டாது வரப்போகும் தேர்தலையும் மனதில் வைத்து வரையப்பட்டது எனலாம்.
இந்த அறிக்கையில் முக்கியமான இரண்டு விதயங்கள் முக்கியமானாவை:
-சிறு,குறு விவசாயிகளுக்கான கடன்கள் தள்ளுபடி,சுமார் 60000 கோடி ரூபாய்க்கு.
-தனிநபர் வருமான வரி விகிதங்களில் செய்யப்பட்டிருக்கும் bold ஆன முடிவுகள்.

சென்ற ஆண்டில் ப.சி. வரி விகிதங்களைக் குறைத்தபோது நேரடி வரிவசூல் குறியீடை அடையமுடியாது என்றே பார்வையாளர்கள் கருதினார்கள்;ஆனால் நேரடி வரிவசூல் இலக்கை மீறி வசூலானது.ப.சிதம்பரம் இதைப் பற்றிக் கருத்துரைக்கும் போது நியாயமான வரி விகிதங்கள் நிலவினால்,வரி ஏய்ப்பு மெருமளவு குறையும்;tax compliance மேம்படும் என்று கூறினார்.
அவர் கருத்து இந்த வருட வரிவசூலில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதன் விளைவே சிதம்பரம் அவர்களின் தைரியமான வரி விகிதக் குறைப்பு முடிவுகள்.

அவர் கருத்து வென்றால்,இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என நம்பலாம் !

Saturday, March 1, 2008

44.அமரர் சுஜாதா !!!!!

அமரர் சுஜாதா!

எனக்கு(மட்டுமல்ல,இன்றைய தமிழர்களில் சுமார் 16-17 வயதிலிருந்து 70 வயது வரைக்குமான தமிழர்களில் பெரும்பான்மையோருக்கு) மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர் !

அமரர் என்ற அடைமொழி கல்கிக்குப் பிறகு வேறு யாருக்காணும் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டுமென்றால் அது சுஜாதாவுக்கு மட்டும்தான் பொருந்துமென நினைக்கிறேன்.
சிறிது யோசித்துப் பாருங்கள்,ஏன் அமரர் கல்கி என்றே கல்கி அறியப்படுகிறார்?அவரது எழுத்துக்களைப் படிக்கும் எவருக்கும்,அந்த எழுத்துப் படிமம் இதோ இரண்டு நாளைக்கு முன்னால்தான் எழுதப் பட்டு,நேற்று அச்சுக்குப் போய் இன்று நம் கைகளில் படிக்கத் தவழ்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை;இல்லை,இவை உண்மையில் ஜீவிதம் முடிந்து போன ஒரு எழுத்தாளனின்-எப்போதும் வசீகரிக்கும் -எழுத்துக்கள் என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்லவே
கல்கி,பெரும்பாலும் ‘அமரர்’ கல்கி’யாக விளிக்கப் படுகிறார்.

இது சுஜாதாவுக்கும் முழுதும் பொருந்தும்.

இரண்டு எழுத்தாளர்களுமே அவர்களின் பங்களிப்பு இருப்பதால் மட்டுமே பத்திரிகைகளின் விற்பனையை எகிற வைத்தவர்கள்/வைப்பவர்கள்.(கல்கி பொன்னியின் செல்வன் ஆரம்பித்தவுடன்,வார அச்சுக்காப்பிகள் 35000 லிருந்து 72000 க்கு எகிறியதும்;சுஜாதா பிரிவோம் சந்திப்போம் எழுத ஆரம்பித்தபோது விகடன் அவருக்கு சினிமாவுக்குப் போல அண்ணாசாலையில் கட் அவுட் வைத்ததும்,சுஜாதாவின் ஆசிரியக் காலத்தில் குமுதம் சுமார் 800000 பிரதிகளை எட்டியதும்,அவர்களின் வியாபார வீச்சுக்கும்,ரசனைத் தாக்கத்துக்கும் சான்று)

எழுத்தின் சகல பரிமாணங்களிலும் சுஜாதாவுக்கிருந்த காதலும்,தேர்ச்சியும் வியப்பூட்டுவன.லாசரா,தி.ஜா,ஜெ.கா,போன்றோர்கள் உணர்வில் கொண்டு வந்த தாக்கத்தை தனது மொழிநடையின் மூலமே வாசகனுக்குக் கொண்டு வந்த அற்புத,கத்தி வீச்சுப் போன்ற கூர்மையான வசீகரிக்கும் மொழிநடை அவருடையது.ஜெயமோகன் சொல்கையில்
சுஜாதாவைப்பற்றிய இலக்கிய உரையாடல் அவரது நடையில் இருந்து தொடங்கபப்ட்டு நடையிலேயே முடித்துக்கொள்ளப்பட்டலாம். அதைப்பற்றி விரிவாகவே ஆராய வேண்டும்.அவரது சமகால படைப்பாளிகள் மட்டுமல்ல அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் கூட பழமை கொண்டபோதும் சுஜாதா புதியவராகவே இருந்தார். சுஜாதாவின் மூன்று அடிப்படை இயல்புகளே அதற்குக் காரணம்.

பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். ஒன்று, புறவாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை அவரது புனைவுலகில் காண்பதுபோல தமிழில் அதிகம்பேரின் ஆக்கங்களில் காண முடியாது. உதாரணமாக ஒரு தொலைதூரப்பேருந்தில் லுங்கிகட்டிய ஓட்டுநர் அந்த சுதந்திரத்தால் கால்களை நன்றாக அகற்றிவைத்திருக்கிற காட்சி ஒரேவரியில் கடந்துசெல்கிறது ஒரு கதையில்.

இரண்டு, மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது. மொழிமீது அவருக்கு இருந்த மோகமே அவரது பெரும் வலிமை. கடைசிக்காலக் கதைகளில் ஒன்றில் இன்றைய இளைஞர்களின் எஸ்.எம்.எஸ் மொழியை அப்படியே எழுதியிருந்தார். முழுக்கமுழுக்க விளம்பர தேய்வழக்குகளினாலான ஒரு கட்டுரையை ஒருமுறை எழுதியிருக்கிறார்.

மூன்றாவதாக அவரது கூரிய மூளைத்திறன். எழுதும் ஒவ்வொரு வரியிலும் அவரது ‘சவரநுனி’க் கூர்மை கொண்ட மூளையின் பங்களிப்பு இருக்கும்.


என்கிறார்.
அதற்கு மின்னல் நடைக்கு வலுவூட்டிய அவரின் பரந்த வாசிப்பனுவமும்,

ஒவ்வொரு முறை சுஜாதாவைச் சந்திக்கும் போது ஏதாவது ஒரு புதிய துறை சார்ந்து அவர் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மனிதன் இவ்வளவும் படிக்கிறார்-எஸ்.ராமகிருஷ்ணன்
,

அபார புத்திக் கூர்மையும்,விதய ஞானமும்,நிறைந்த நகைச்சுவை, வாசகனின் தோள் மீது கைபோட்டு அவனை எழுத்துக்குள் இழுக்கும் லாவகமும்,
கணிதமேதை ராமானுஜனையும்,ஐஸ்வர்யா ராயை(பச்சனை)யும் ஒரேகட்டுரையில் எழுதும் விஷயக் கோர்ப்பும் இருந்தன.

பாலகுமாரனுக்கு(ம்,சுப்ரமணிய ராஜூவுக்கும்) எப்படி எழுதவேண்டும் என விவரித்த ஒரு அரைமணி நேரப் பேச்சின் போது-இரண்டாவது வரியில் வாசகன் கதையில் முழுமையாக நுழைந்திருக்க வேண்டும் என்பதை அவர் மிகவும் வலியுறுத்தினார் என்று பா.கு. சொல்வார்-அதை தனது அத்தனை படைப்புகளிலும் செயல்படுத்திக் காண்பித்தவர்.

கணினி,அறிவியல் சார்ந்த தமிழ் எழுத்துகளின் ஆக்கத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு பெரியது,ராஜீவ்காந்திக்கு இந்திய தகவல் தொழில் நுட்பாளர்கள் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டியவர்களோ,அவ்வளவு நன்றியுடன் இன்றைய த.தொ.நுட்ப தமிழர்கள் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர் அவர்.70’களின் இறுதியிலும்,80’களின் ஆரம்பங்களிலும் கணினி பற்றிய அவரின் எழுத்துக்கள் சிறுவனாக முதன்முதலில் அவரின் எழுத்துக்களுக்குப் பரிச்சயமான பலருக்கு உத்வேகம் தந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.
s.ராமகிருஷ்ணன் எழுதிய அவருக்கான அஞ்சலியின் இப்பகுதி இதற்கான ஒரு உரைகல் !
எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.

படிப்பது, ஊர்சுற்றுவது, பெண்கள் பற்றிய உரையாடல்கள் என்று நீண்ட கல்லூரிவயதின் பிரிக்க முடியாத நண்பனைப் போலிருந்தார் சுஜாதா. புதுமைபித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் மீது மரியாதையும் வியப்புமே மேலோங்கியிருந்தது. ஆனால் சுஜாதாவிடம் மட்டுமே இணக்கமான நட்பும் ஒருமையில் அழைக்கும் உரிமையும் ஏற்பட்டிருந்தது. அநேகமாக தினமும் சுஜாதாவைப் பற்றி பேச்சு கட்டாயம் வந்துவிடும். அவருக்காக மட்டுமே புத்தகம் படித்தார்கள் நண்பர்கள்.

இன்று கம்ப்யூட்டர் பற்றி எல்கேஜி குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் கம்ப்யூட்டர் என்பது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி. அதைப்பற்றி விருதுநகர் போன்ற சிறுநகரங்களில் இருந்த எங்களுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது.

ஆனால் விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு ஒரே துணையாக இருந்தது சுஜாதாவின் அறிவியல்கட்டுரைகள். குறிப்பாக கணிப்பொறி பற்றி அவர் எழுதிய அறிமுகங்கள் மற்றும் விரிவான அலசல்கள். என்னோடு படித்தவனை இன்று அமெரிக்காவின் மென்பொருள் விற்பன்னராக மாற்றியிருக்கிறது.


சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகின் அசைக்க முடியாத ஒரு சாதனையாளர் ;சிறுகதை(பார்வை,எல்டரோடா போன்றவை இன்றும் சிலாகிக்கப்படுபவைகளில் சில),நாவல்,கட்டுரைகள்,கவிதை,நாடகம்,வலை ஊடகம்,சினிமா என்று எழுத்தின் அனைத்துத் துறைகளிலும் தன் அழுத்த முத்திரையைப் பதித்தவர்;அவர் எழுதிய வீட்டின் துணி சலவைக் கணக்குக் கூட பிரசுரமானது ஒருமுறை!

அவரின் எழுத்தின் ஆளுமை பற்றிச் சொல்ல வரும் s.ராமகிருஷ்ணன் சொல்லும் போது

எப்படியாவது சுஜாதா மாதிரி கம்ப்யூட்டர்ல வந்துறணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இன்று நிஜமாகவும் ஆக்கியிருக்கிறது. பின்னாளில் ஒரு முறை அவன் சுஜாதாவைப் பார்க்க விரும்பி நான் நேரில் அழைத்துக் கொண்டு போனபோது சட்டென அவர் காலில் விழுந்ததோடு அழுதும் விட்டான். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டு எனக்கு தெரிஞ்சதை ஏதோ எழுதினேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

அவன் சுஜாதாவிடம் அதிகம் பேசவில்லை. அவரை பார்த்துக் கொண்டேயிருந்தான். சொற்களற்ற நிர்கதியை அவன் அடைந்திருந்தான். பிறகு என்னிடம் போய்விடலாம் என்னமோ போலிருக்கு என்று சொன்னான். அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே வாத்தியார் ரொம்ப பெரிய ஆளுடா என்றபடியே அவன் அறியாமல் கண்ணீர் பெருகியது. அதை அவன் துடைத்துக் கொள்ளவேயில்லை. அது தான் சுஜாதாவின் ஆளுமை.


என்கிறார்.அதுதான் அவரின் வெற்றி !!!

திரைத்துறையின் அவரிடமிருந்து வந்திருக்கக் கூடாத சில பங்களிப்புகளுக்கான காரணங்களை நடிகர் கமலஹாசன் அழகாகச் சொல்லிவிட்டார்.

பெருமளவு புனைவுலகத்திலேயே அவரது ஆக்கங்கள் அமைந்தன,அதனால் அவர் அவ்வளவு சிறந்தவரல்லர் என்பது,கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் தவிர வெறும் திரைப்பாடல்கள் மட்டும்தான் எழுதினார்,அதனால் புறக்கணிக்கப் பட வேண்டியவர் என்பது போன்ற முரண் வாதத்தைச் சேர்ந்தது.

இலக்கியம் படைக்கிறேன் என்ற கூரைக் கூவலுடன் அவர் எழுதவில்லை என்பது ஒத்துக் கொள்ளவேண்டிய ஒன்றே;ஆயினும் அவரது கட்டுரை ஆக்கங்கள் நல்ல வாசிப்பனுபவத்துக்கு உத்தரவாதமளிப்பவை;ஆழ்வார்கள்-ஒரு எளிய அறிமுகம்,குறளுக்கான எளிய உரை-குறிப்பாக அதற்கான முன்னுரை, பிரம்மசூத்திரத்திற்கான எளிய உரை போன்றவை முக்கிய ஆக்கங்களில் சில;ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்,கடவுள்களின் பள்ளத்தாக்கு,கனையாழியின் கடைசிப்பக்கம்,ஏன் – எதற்கு – எப்படி , தலைமைச் செயலகம் போன்றவை மறக்கவியலாதவை !

தமிழிலக்கியத்தில் ஆழ்ந்து தோய்ந்த அவர் அகம்,புறம்,தொல்காப்பியம் போன்றவற்றை எளிமையான,அவருக்கேயுரித்தான வசீகர நடையில், பணி ஓய்வுக்குப் பின்னர்,எழுதக் கொண்டிருந்த ஆர்வத்தை தமிழின் வணிக சினிமா முழுதுமாக விழுங்கியது,ஒருவகையில் நமது துரதிருஷ்டமே.கற்றதும் பெற்றதும்’ன் அவ்வப்போதைய பின்வருவன போன்ற

அம்பலத்தில் குறுந்தொகையின் எளிய அறிமுகம் எழுதிவருகிறேன்.சில பாடல்கள் பிரமிக்க வைக்கின்றன.உதாரணம் 130ம் பாடலின் எளிய வடிவம் இது.
நிலம் தோண்டிப் புகுந்து கொள்ளவில்லை
வானில் ஏற்ச் செல்லவில்லை
கடல்மேல் நடந்து செல்லவில்லை
நாடு,நாடாக,ஊர் ஊராக
வீடு வீடாகத்
தேடினால் கிடைக்காமலா போவார் காதலர் ?
வெள்ளிவீதியாரின் இப்பாடல் இரண்டாம் நூற்றாண்டில் இல்லாமல் நேற்று எழுதப்பட்டது என்று சொன்னாலும் நம்பலாம்


சுஜாதாவின் இலக்கியப் பூக்கள்,அவர் இன்னும் சிறிது காலம் இருந்திருக்கலாமே என்ற ஆயாச ஆதங்கத்தை அளிப்பது நிஜம்.

ஒரு தனிமனிதராக, நேர்படப் பேசுதல்,இனியகுணம்,எவரையும் வெறுக்காதிருத்தல், (பா.கு.க்கு எழுத பெரும் ஊன்றுகோலாகவும்,அறிவுரைகள் கொடுத்த அவரையே,சாவி அளித்த ஒரு விருந்தின் போது போதையின் தாக்கத்தில் உன்னை விட நான் சாதிக்கிறேன் பார்க்கிறாயா? என்று சவால் விட்ட பா.கு.னை பற்றிச் சாவியிடம்,பெரிதுபடுத்தாதீர்கள் என்று சொன்ன பண்பை பா.குமாரனே எழுதி இருக்கிறார் !) பணத்தை விட நட்பையும் மனிதர்களையும் மதிக்கும் பாங்கு போன்ற அவரின் பண்புகளை
அவருடன் பழகிய அனுபவம் பெற்றவர்கள் சிலாகிக்கிறார்கள்;இவற்றை நம் நண்பர்கள் சிலரிடம் நாமே பார்க்க முடியும்.அவர்கள் மேன்மக்களானவர்களின் குணாதிசயங்களை தேடி அடைபவர்கள். ராமகிருஷ்ணன்,சுஜாதாவை நினைவு கூர்ந்து,

நாலைந்து முறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். அவரது தனித்துவம் அவரிடமிருந்த இயல்பான நகைச்சுவை. எதையும் நட்போடு எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு. நான் அறிந்தவரை இதுவரை அவர் எவரையும் பற்றி கடுமையாகப் பேசியோ, எழுதியோ அறிந்ததேயில்லை. எழுத்தாளர்களில் பலருக்கும் இல்லாத அரிய மனப்பக்குவம் அது.

அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவருக்கும் எல்லோரையும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவரிடமிருந்த எளிமை மற்றும் நேர்பட பேசுதல். அத்தோடு குறைகாணாத பெரிய மனது.

எழுத்தாளர்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட முதல் எழுத்தாளர் இவர் மட்டுமே. இவரை இலக்கியாவதிகளும் வாசித்தார்கள். எளிய மனிதனும் வாசித்தான். இருவருக்கும் அவர் நெருக்கமாகவே இருந்தார். அதைப்பற்றி ஒரு போதும் அவர் பெருமிதம் கொண்டதில்லை மாறாக எளிய புன்னகை மட்டுமே கொண்டிருந்தார்.


பணம் சம்பாதிப்பது பற்றிய மிகுவான மன உந்துதல்கள் இல்லாத அவரின் எளிய மன குணத்தை ஹரன் பிரசன்னா அழகாக சொல்கிறார்.

ஒருசமயம், AnyIndian.comல் அவரது பூக்குட்டி புத்தகத்தை விற்பது தொடர்பாகப் பேச அவர் அழைத்தார். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தின் விலையை, விற்பனையாளர்களுக்குத் தரவேண்டிய கழிவு பற்றிய எண்ணமில்லாமல் வைத்துவிட்டதாகச் சொன்னார். இத்தனை நாள் எழுத்துலகில் இருக்கும் சுஜாதாவிற்கு இதுபோன்ற விஷயங்கள் புரியவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் அவர் AnyIndian செயல்பாடுகளைக் கேட்டுக்கொண்டார். தமிழில் எல்லாப் புத்தகங்களையும் ஓரிடத்தில் தேடலாம் என்கிற எண்ணமே அவருக்கு நிறைய மகிழ்ச்சியைத் தந்தது. எங்களது கஸ்டமர் சர்வீஸ் பற்றிச் சொன்னபோது, அது ரொம்ப முக்கியம் என்றார். பின்னர் பூக்குட்டி புத்தகம் பற்றி பேச்சு வந்தபோது, எப்படியாது தள்ளிடணும் என்றார். உண்மையில் வயது முதிர்ந்த குழந்தையுடன் பேசுவது போன்ற சித்திரத்தைத்தான் என்னால் யோசிக்கமுடிந்தது.


இப்படியான ஒரு குணாதிசயம் கொண்ட ஒரு அற்புத அறிவுஜீவியான ஒரு எழுத்தாளனைத் தொலைத்திருக்கிறோம் என்பதுதான் கனத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது;
ஆயினும் காலம் அனைத்தையும் கடந்து போகும் என்பதுதான் உண்மை.

அவர் தன் அப்பா மறைந்த போது ‘அப்பா,அன்புள்ள அப்பா’ என்ற ஒரு கட்டுரை எழுதினார்.அதில் அவரின் தந்தையாரின் பல பண்புகளுடன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்காத நேர்மனம்,தன் மகனுக்காக என்று கூட,அண்ணாமலை(யா,அல்லது அண்ணா'வா என நினைவில்லை)ப் பல்கலையில் முக்கியப் பொறுப்பில் இருந்த தன் நண்பரிடம் தொழில்கல்விக்கான(Engineering) கல்லூரி இடத்துக்காக வேண்டாத தன்மை-இச் சம்பவம் பின்னால் அவரின் ஒரு சிறுகதையிலும் ஒரு knot ஆக வந்தது- போன்றவற்றை நினைவுகூர்ந்து எழுதிய பல விதயங்கள்,அவருக்கும் பொருத்தமானவை !

அவரின் 70 ஆவது பிறந்த தினக் கற்றதும் பெற்றதுமை பலர் நினைவு கூர்ந்து விட்டார்கள்.அதில்

அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!


என்ற அவரின் பதிவு நெகிழ்வூட்டுவது !

ஹரண் சுஜாதாவுடனான தன் அனுபவத்தை,நினைவஞ்சலியை இவ்வாறு முடிக்கிறார்..

இன்று எத்தனையோ பேர் சுஜாதாவின் மரணத்துக்காக வருத்தப்படுகிறார்கள். சுஜாதாவைத் தவிர எதையும் படிக்காத தலைமுறைகூட ஒன்றிருக்கிறது. 'ஏன் இன்னும் கணேஷ் வசந்தெல்லாம் எழுதுறீங்க' என்று நான் கேட்டபோது, அதன் வழியாக நல்ல இலக்கியத்திற்கு அதன் வாசகர்களைக் கூட்டி வரலாம் என்று சுஜாதா சொன்னது இதுபோன்ற தலைமுறை ஒன்றை எண்ணியே. இந்தத் தலைமுறையெல்லாம் இன்று தன் வீட்டில் துக்கம் நிகழ்ந்ததாகவே கருதும். இது ஒரு எழுத்தாளனுக்கு அளிக்கப்படும் உச்சகட்ட கௌரவம்.

புத்தகக் காட்சியில் திருமகள் நிலையத்துக்கு வந்த சுஜாதா திரும்பிச் செல்லும்போது மெல்ல நடந்து சென்றார். அவரால் தனியாக நடந்து செல்லமுடியாது. திருமகள் நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர் அவரை அழைத்துச் சென்றார். அவரும் உடல் நிலை சரியில்லாமல் வேகமாக நடக்கமுடியாத நிலையில் இருப்பவர். அவர் சுஜாதாவை ஆதரவாகப் பிடித்திருக்க, சுஜாதா அவரை ஆதரவாகப் பிடித்திருக்க, இரண்டு பேரும் மெல்ல நடந்து என்னைக் கடந்து சென்றார்கள். என் கண்ணின் வழியே விரிந்த அந்தக் காட்சி என்றும் என் நினைவில் நின்றிருக்கும் என்று அப்போதே தோன்றியது. இரண்டு முதிய குழந்தைகள் தவழ்வதைப் போன்ற சித்திரம் என் கண்ணை இப்போதும் நிறைக்கிறது. அன்புள்ள சுஜாதா, வருத்ததுடன், நெஞ்ச நிறைவுடன் உங்களுக்கு ஒரு good-bye


நானும் வழிமொழிகிறேன்...
சுஜாதா,எங்களின் வாழ்நாளின் சில,பல நாட்களை உங்கள் எழுத்தால் மகிழ்வுறவும்,அறிவுறவும் செய்தீர்கள்,உங்களிடம் கற்றதையும்,உங்களால் பெற்றதையும் நிறைவுடன் நினைந்து,மேலும் சிறிது பெற்றிருக்கலாமே என்று வருந்தி,
அன்புடன்,நெகிழ்வுடன் உங்களுக்கு ஒரு Good Bye !!!!!


-ஹரன்,ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் ஆகியோருக்கு நன்றியுடன்.

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  3 weeks ago
 • - *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...
  1 month ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  6 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  8 months ago