குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Saturday, December 29, 2007

37.அந்தக் கணமும் , சில பொழுதுகளும்...விசிறிச் சிதறும் சக்கர வட்டம்,
பாதிப் பட்டுப் புடவையில் உன்னுடை;
சிலீர் சிலீரென சிதறும் புன்னகை,
சிரிக்கும் கண்கள் கலைந்து,கலைத்திட;
தோழிகள் நடுவே சுடரும் சுடர் நீ,
தோன்றும் இடமெலாம் சத்த வெடிச்சரம்;
ஏழிரு வயதின் உறைந்த நினைவு
ஆழ்ந்த மனதின் பெட்டகப் பதிவாய் !நெஞ்சம் அணைக்கும் புத்தகம்,கைகள்,
நெருங்கித் தணிந்த பேச்சில் தோழியர்;
வகுப்பறை நேரம் வன்மைக் கவனம்,
வதனம் நயணம் அறிவின் ஒளிச்சுடர்;
மின்னி மறையும் மின்மினியாய்,கணம்
மீண்டெனை மறையும் மின்னல் பார்வை;
ஷேக்ஸ்பியர் எழுதிய sonnets எல்லாம்,
சிந்தை முழுதும் உந்தன் வடிவினில் !பாதைகள் மறைந்த பாசிப் படித்துறை,
பன்னிப் பதியும் கொலுசின் நடையொலி,
தோள்கள் சாய்ந்து கைகள் கோர்த்து,
பேசிய கவிதையும் பாட்டும் ஆயிரம்;
தங்கச் சுடராய் மஞ்சள் வெயிலில்
அங்கம் எங்கும் பொங்கும் களியில்,
மெல்லிய த்வனியில் மீட்டிய வீணையாய்
சில்லெனச் சிதறிய 'ஸ்வர ராக சுதா' !!
சிற்றிடை அசைய சித்திர நடையில்
பொற்பதப் பூக்கள் போகும் பாதைகள்,
என்மன வானின் அகன்ற வெளியில்
பொன்னொளிச் சுடரின் புதிய வானவில்;
எதிரெதிர் பார்க்க ஏதும் பொழுதினில்
என்னுயிர் கலந்து மீளும் விழிகளில்
உலக முழுமையின் அன்பும் நேசமும்;
உவப்பின் உச்சியில் உயிரும்,உணர்வும் !
ஓடி மறையும் மேகத் திட்டாய்
ஒரு நாள் பிரிவாய் என்றறியாமல்,
பேசித் திரிந்த கதைகள் பற்பல;
பேச மறந்த கதைகள் பற்பல..
புறப்படும் பொழுதில் எழுப்பிய கேள்வி,
எப்படி உணர்வாய்,எந்தன் பிரிவை?
எப்படி உணர்வேன்,உறையும் கணங்கள்,
மௌனக் கடலின் புதைந்த பொக்கிஷம் !!

-அறிவன்.

Wednesday, December 26, 2007

^^^ 36.மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!

குறிப்பு : இக்கட்டுரை திண்ணை மின்னிதழிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.


மாற்றம் மட்டுமே உலகில் மாறாதது என்ற சொலவடை நினைந்து,நினைந்து ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று.
டெக்னாலஜி எனச் சொல்லப்படுகிற அறிவியலின் வளர்ச்சி,வாழ்வில் நமக்கு பல்வேறுவிதமான காரியங்களை எளிதாக்கியிருக்கிறது;
உதாரணமாக
கணினி,
கணிப்பான் – கால்குலேட்டர்-,
கைத்தொலைபேசி
போன்ற உபகரணங்கள் நமக்களித்த சௌகர்யங்கள்(இந்த வார்த்தை தமிழ்தானா???) ஏராளம்.

அதுவும் இப்போதைய,பால்காரர் முதல் பாரவண்டிக்காரர் வரை, நம் அனைவருக்கும் கைத்தொலைபேசியை மறந்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால்,கையொடிந்தது போலாகிவிடுகிறது.(இன்னும் கல்லூரிக் காளைகள்,கன்னிகள் கைத்தொலைபேசி இல்லாமல் வந்துவிடும் நாட்களில் தொடர் கை நடுக்கம் ஏற்பட்டு,கல்லூரியின் அன்றைய நாளில் நிறுத்தப் போராட்டம்-ஸ்ட்ரைக்- நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு சென்று விடுவதாகக் கேள்வி!)

இந்த உபகரண சௌகர்யங்கள் ஓசைப்படாமல்,நமது சிற்சில திறமைகளை,ரசனைகளை அழித்துக் கொண்டிருக்கிறது என்பது,நாம் அதிகம் சிந்திக்காத ஒரு கோணம்;

அழகாக எழுதும் கையெழுத்து,
மனக் கணக்காக கூட்டும் கணிதத் திறன்,
காதருகில் பேசுகின்ற சுகம் போன்ற கடிதங்கள்,
ஆகியவை இவற்றில் சில.

என்னுடைய மாமா,மற்றும் கல்லூரிக்காலத்திய நெருங்கிய சகதோழன் சுந்தரவடிவேல் (இன்றைய பதிவர் உலகிலும் அறியப்பட்ட அதே சுந்தரவடிவேல்தான்!) ஆகியோரின் அழகான கையெழுத்தைப் பார்த்து,அவர்களை விஞ்ச வேண்டும் என்ற உத்வேகமே என் கையெழுத்தைப் பெருமளவில் சீர்செய்தது.

ஆனால் இன்றைய நாட்களில் கையெழுத்துக்கள் மறைந்து,அருகி வரும் ஒரு விதயமாகின்றன....

சமீபத்தில் ஆவி.யில் ஒரு இளைஞர் ஒரு லட்சம் அஞ்சலட்டைகள் வாங்கி,மனதில் தோன்றுகின்ற நபர்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் அனுப்பிக் கொண்டிருகிறார்,கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டி!
அடுத்ததாக 10 லட்சம் அஞ்சலட்டைகள் அனுப்பப் போகிறாராம் !!!

சமீபத்திய நியூயர்க்கர் இதழில் மும்பை தலைமைதபால் நிலைய வாசலில் ‘கடிதம் எழுதி’யாக வாழ்க்கையைக் கழித்த ஜி.பி.சாவந்த்’ன் படக்காட்சிப் பேட்டி பார்க்க நெகிழ்ச்சியாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மும்பையின் பல அடித்தட்டு மக்களுக்காக 10000’க்கும் மேற்பட்ட கடிதங்களை அவர் எழுதி இருக்கிறாராம்;அவை தாங்கிச் செல்லும் அன்பு,பாசம்,மிரட்சி,வேதனை ஆகிய அனைத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார் அவர்.
அவர் பலருக்கு எழுதித் தரும் கடிதங்களில் பணம் வைத்து அனுப்ப நேரிடும்போது அரக்கு உருக்கி அவர் பெயரிட்ட உலோகஎழுத்துப் பதிப்பால் முத்திரை பதித்து அனுப்புவது வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்ட அவர்,காதல் கடிதங்களை மட்டும் என் தொழில் வாழ்க்கையில் யாருக்காகவும் எழுத மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

நான் சிறுவனாக பதின்ம வயதுகளில் இருந்த போது எங்கள் பெரியப்பா-அவர் கனரா வங்கியில் முதன்மை மேலாளராகப் பணி செய்தார்,வாழ்வின் சிறு ரசனைகளைப் பேணும் மனிதர்-எழுதும் கடிதங்கள் வரும்போது,சூடான பலகாரங்களுக்கு நடக்கும் சண்டையாய் வீட்டுக்குள்,அதை யார் முதலில் படிப்பது என்ற போட்டி நடக்கும.
அவ்வளவு ரசனையாகக் கடிதங்கள் எழுதும் ஒரு entertainer அவர்.

உதாரணமாக 80 களின் மத்தியில் சென்னையிலிருந்து,கல்கத்தா கிளைக்கு மாற்றலாகி,பிள்ளைகள் படிப்புக்காக குடும்பம் சென்னையிலேயே இருக்க,தனியாகக் கல்கத்தாவுக்குச் சென்ற பின் எழுதிய 15 பக்க முதல் கடிதம் “விமானம் 25000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது;பக்கத்தில் பெண்டாட்டி இல்லையாதலால் தைரியமாக ஏர்ஹோஸ்டஸ் பெண்ணுடன் சிரித்துப் பேச முடிந்தது...” என ஆரம்பித்து தெருவோரம் பீறிடும் தண்ணீர் குழாய்களில் குளிக்கும் மாநகர் வாசிகள்,சவரம் முதல்கொண்டு நடைபாதையில் நடக்கும் காட்சி என மொத்த கல்கத்தாவின் ஒரு ‘அவுட்லுக்கை’ அக்கடிதம் கொடுக்கும்.
ஆரம்ப நாட்களில் என்னுடைய அவதானிப்புகள் கூர்மையடைய அவரின் கடிதங்களும் ஒரு காரணம்.
அவரே நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற மன உந்துதல்கள்,எனது கடிதக் கலையின் நேர்த்திக்கு ஆரம்பக் காரணிகள்.(பின்னால் நான் எழுதிய கடிதங்கள் பல, பெரியப்பா உள்பட,என் உறவினர்கள்,நண்பர்களால் சிலாகிக்கப்பட்டதை இங்கே சொல்ல என் அவையடக்கம் தடுக்கிறது எனச் சொல்லிவைக்கிறேன்!)
இப்போது 2005’ல் கல்கத்தா செல்ல நேர்ந்த போது அவரின் கடிதமெழுதும் திறன் பற்றிய எனது எண்ணம் எனக்கு மேலும் வலுப்பட்டது.

சாவந்த் முத்தாய்ப்பாக சொன்ன செய்தி,கடைசியாக அவர் எழுதிய கடிதம் 3 ஆண்டுகளுக்கு முன் !

மின்மடல்கள்,குறுந்தகவல்கள் பெருகிவிட்ட இக்காலத்திலும்,10 மின்மடல்களுக்கிடையில் ஒரு கடிதமாவது எழுதப் பழகுவோம்....உறவுகளும்,ரசனைகளும் மேம்படும் !

Monday, December 24, 2007

35-மோடியின் தேர்தல் வெற்றி

மோடியின் வெற்றி குறித்ததான திணமணியின் பின்வரும் தலையங்கம் பெருமளவு ஒத்துக்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!2002 சம்பவங்களில் ஒரு முதல்வராக,அவரது குறைபாடுகளை இந்த வெற்றி வெளையில் அவர் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் மேலும் ஒரு பன்முகத் தலைவராக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

*******************************************

பிற்சேர்க்கை:ஒரு அர்த்தமுள்ள கேள்வியும்,பொருத்தமான பதிலும்.(இந்தியா டுடே இதழில் ஆசிரியர் கேள்விகளில் இருந்து)

How did the BJP win in Gujarat despite all the opposition from the media?
Prabhu answers: Unfortunately, for both the print and electronic media, the voters in Gujarat were Gujaratis and not mediapersons from outside.

Even the local media was running a campaign against Modi. I hate to admit but the fact is that some of us have lost touch with our own readers and viewers. It is a dangerous trend that voting intentions of media personalities are now being reflected more aggressively in their writing and opinions.

It poses a greater danger to the credibility of the media than that of the politician.

***************************************

Why is the media so anti-Modi when he has brought about development in Gujarat unseen in any other state in the last 60 years?

Prabhu answers: There seems to be a very wide communication gap between Narendra Modi and the English media. Since he doesn't speak English, he isn't in a position to put across his point of view to the English media because of its inherent biases.

Most of the English media, according to Modi, is dominated by those who have not visited a village or understand the real India. Once this communication gap is bridged, Modi may get a better deal from those who think he doesn't belong to their class.

Friday, December 21, 2007

34.கொஞ்சம் சிரிப்பு


நியூயார்க்கர் இதழின் கேலிச்சித்திரங்கள் மிகவும் பேசப்படுபவை.

அவற்றிலிருந்து சில,வாரவிடுமுறை புன்னகையுடன்.
1.On Internet,nobody knows you are a dog..
2.Never,ever think outside the box( Man to cat,near to litter box)
3....
4.Take my advice-Never let anybody talk you into joining the Tie of the Month' Club
5.You reckon,it might be time to start to think about a new nickname,Slim ?

Wednesday, December 19, 2007

33.சிந்திக்க சிறிது இலக்கியம்-தமிழின் தொண்மையும் அழகும் !

அறிந்த வெழுத்தம்முன் பன்னிரண்டாவிக ளான;கம் முன்
பிறந்த பதினெட்டு மெய் ;நடு வாய்தம் ; பெயர்த்திடையா
முறிந்தன யம்முத லாறும்;ஙஞண நமனவென்று
செறிந்தன மெல்லினம்; செப்பாத வல்லினம்; தேமொழியே.


பொருள்:அறிந்த எழுத்து அம்முன் பன்னிரண்டு ஆவிகளான- அறிந்து சொல்லப்பட்டு நின்ற எழுத்துக்களுக்குள்ளே அகரம் முதல் ஔகாரம் ஈறாக சொல்லப்பட்ட பன்னிரண்டு எழுத்தும் உயிரெழுத்து என்னும் பெயர் உடையன; கம்முன் பிறந்த பதினெட்டுமெய்- ககர ஒற்று முதல் னகர ஒற்று ஈறாக சொல்லப்பட்ட பதினெட்டும் மெய்ய்யெழுத்து என்னும் பெயரவாம்; நடுவாய்தம்- உயிரெழுதிற்கும் மெய்யெழுத்திற்கும் நடுவாந் தன்மையாய் இருக்கின்ற அஃகேதனம் என்னும் தனிநிலை எழுத்தானது ஆய்த எழுத்து என்னும் பெயரதாம்; பெயர்த்து இடையா முறிந்தன யமுதல் ஆறும்-முன் சொன்ன பதினெட்டு மெய்களுக்குள்ளே யரவலளழ வென்னும் ஆறெழுத்தும் இடையின எழுத்தென்னும் பெயரவாம்;செப்பாத வல்லினம்- இவற்றில் சொல்லாத கசடதபற என்னும் ஆறெழுத்தும் வல்லின எழுத்துக்களாம்.
மேற்சொன்ன பாடல் ஒரு தமிழ் நூலின் முதல் பாடல்.
தமிழ் மொழி காலத்தால் அறுதியிட்டுச் சொல்ல முடியாத முதல் மொழிகளுள் ஒன்று என்பதை நாளும் விளக்கி நிற்கும் நூல்களில் இது ஒன்று.
தமிழின் அடிப்படை இலக்கணமான ஐந்திலக்கணங்கள் எனச் சொல்லப்படுகின்ற எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி என்னும் அடிப்படை இலக்கணத்தைப் விளக்கும் பாடல்களால் ஆனது இந்நூல்.

எழுத்து-மொழியின் எழுத்துக்களைப் பற்றிய விளக்கம்
சொல்-சொற்கள் அமைவதற்கான விதி
பொருள்-சொற்களுக்கான பொருள் எவ்விதம் கொள்ளப்படவேண்டும்
யாப்பு-சொற்களைக் கொண்டு பாடல்கள் அமைக்கும் விதிகள்
அணி-பாடல்களில் அமையும் அழகுகள்-எ-டு-உவமை,உருவகம் போன்றவை

இந்நூலின் பெயர்:வீரசோழியம்.எழுதிய ஆசிரியர் பெயர்: புத்தமித்திரனார்.இவர் புத்தமதத்தைத் தழுவியவர்,ஆதலால் இப்பெயரைச் சூட்டிக் கொண்டவர்.
வீரசோழியத்திற்கு முதல் நல்ல உரை எழுதியவர் பெருந்தேவனார்.

இந்நூல் இடைச் சங்க காலத்து நூல்களில் ஒன்று.நூலின் பெயர்க் காரணம் நூலாசிரியருக்கு புரவலராய் இருந்து ஆதரித்த வீர ராசேந்திர சோழன் என்னும் மன்னன்;எனவே நன்றியறிதலாக மன்னனின் பெயரையே நூலுக்கு வைத்து விட்டார் ஆசிரியர்.

மூலைக்கு மூலை டிவி ரிப்பேர் செய்வது எப்படி என்பது போன்ற புத்தகங்கள் இருக்கக் காரணம் தொ.கா. என்னும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு பலகாலம் பயன்படுத்தப்பட்டு அதன் சிறப்புகள்,அமைப்புகள் அனைத்தும் முழுப் பயன்பாட்டில் இருக்கும் காலம்,ஆதாலால் எளிதில் அதன் ஆதார விதிகள் அனைத்தும் எல்லோருக்கும் புரியும் அளவிற்கு காணக்கிடைக்கின்றன.

அது போலவே ஒரு மொழி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து செம்மையடைந்திருந்தால் மட்டுமே,அதன் எழுத்துக்கள் முதல் பயன்பாடு வரைக்கும்,அனைத்து இலக்கணத்திற்கும் செறிவான பல விதி-நூல்கள்(Rule Structures) ஆக்கப்பட்டிருக்க முடியும்.

தமிழின் தொன்மையும் பெருமையும் நினைத்து நினைத்து மகிழ்வு கொள்ள வேண்டிய ஒன்று.

இப்படி ஒருநூல் இருப்பதே நம் தலைமுறையினர் பலருக்குத் தெரியாது என நினைக்கிறேன்.எனவே இந்த சிறிய அறிமுகம்.

அறிமுகங்கள் அவ்வப்போது தொடரும் !!!!!!

Sunday, December 16, 2007

32.புரியல்லை,தெரிந்தவர்கள் விளக்கவும்.......

ஒரு சரித்திரச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாக எல்லா ஊடகங்களும் வர்ணிக்கும் ஒரு நிகழ்ச்சி,நடக்கும் திமுக கட்சியின் நெல்லை மாநாடு.
இதற்கு சில நாட்களுக்கு முன் சரத்குமார் இது மாதிரி ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.அதற்கு முன் விஜயகாந்த் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.
இம்மாதிரிக் கூட்டங்கள் நடக்கும்போது வெளிவரும் ஏற்பாடுகளுக்கான செலவுகள் பற்றிய செய்திகள் கோடிகளில் இருக்கும்.
இவ்வகை மாநாடுகளுக்கு இயல்பான ஆர்வத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கை,மொத்த கூட்டத்தவரில் நாலில் ஒரு பங்கு கூட இருக்குமா என்பது சந்தேகமே.
இம்மாதிரிக் கூட்டங்களுக்கான் செலவுகள் நாட்டின் பல மாவட்ட்கங்களில் இருந்து நிதியாகப் பெறப் படுகிறது என ஒரு சாரரும்;அரசின் பல நிர்வாக நிலைகளில் முறையற்ற லஞ்சம்,கமிஷன் முதலான வழிகளில் ஈட்டப்படும் பணம் இவ்வகை நிதிவசூல்களாகக் காட்டப்பட்டு கட்சிகளின் அதிகாரப்பூர்வ சொத்துக்களாக (அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் வரி விதிப்புக்கு உட்பட்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்) மாற்றப்படுகின்றன என இன்னொருசாராரும் கூறுவது பொய்யென்று ஒதுக்கிவிட முடியாதது.
இவ்வகை மாநாடுகளினால் பொதுஜனங்களுக்கு என்ன நன்மை விளைகிறது என்று நானும் ரொம்பவும் சிந்தித்துப் பார்த்தேன்....
புரியல்லை,தெரிந்தவர்கள் விளக்கவும்.......

Friday, December 14, 2007

31- ^^^ ஐடி'யாளர்களின் பார்வை சரியா,தவறா?

குறிப்பு: இக்கட்டுரை திண்ணை இதழில் மீள்பதிவாக பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.


இன்றைய ஹைடெக் நகரங்கள் என சொல்லப்படும் இந்திய தகவல்தொழில்துறை சார்ந்த நகரங்களில் ஏற்பட்டிருக்கும் வேகமான மாற்றங்கள் மற்றவர்கள் பார்வையில் வெறுப்பையும்,அந்த நகரங்களில் வாழும் மற்ற துறைகளைச் சார்ந்த மக்களின் பார்வையில் ஐடி துறையாளர்களைப் பொறாமையுடனும்,விரோத மனப்பான்மையுடன் பார்க்கும் மனோபாவமும் வளர்ந்து வருகிறது எனச் சொல்கிறது அவுட்லுக் இதழின் ஒரு கட்டுரை.
அது அளிக்கும் புள்ளி விவரங்களின் படி பெருவாரியான தூண்டப்படாத தாக்குதல்கள்,அடிதடி சண்டைகளில்-சுமார் 65 % க்கும் அதிகமான,பதிவான வழக்குகளில்(Unprovoked assaults) ஐடி யாளர்களே இலக்காக இருந்திருக்கிறார்கள்.
இதற்கான காரணங்களாக அது பட்டியலிடுவது எட்டமுடியா நிலைக்குப் போய்விட்ட வீடு,வணிக இடத்துக்கான வாடகை நிலை,இதன் காரணமான நடுத்தர வாசியின் சிதைந்து விட்ட ‘அரையடி அகல சொந்தவீடு’ கனவு;எல்லாப் பொருள்களிலும் உள்ளாகியிருக்கும் விலை ஏற்றம்-இதற்கு ஐடி யாளர்கள் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது எனினும்,இந்தியா போன்ற ஒரு under developed தேசத்தில் ஒரு சாரார் எளிதாக சம்பாதிக்கும் 30000,40000 ஆன மாத சம்பளம்,நாட்டின் பொருளாதாரத்தில் பாய்ச்சப்படும் போது,சந்தையின் பண உள்வரவு அதிகமாகிறது,அது இயல்பான பணவீக்கத்திற்குக் காரணமாகிறது என்னும் நிலை;
இவை எல்லாமே ஓரளவு ஒத்துக் கொள்ளக் கூடிய வாதங்களாகவே இருக்கின்றன.
இன்போஃசிஸ் மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஒரு சமூக ஆர்வலர் என்பது நமக்குத் தெரியும்,அவர் விரித்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி இதற்கெல்லாம் ஒரு உரைகல்.அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே பெங்களூருவில் ஒரு பூ விற்கும் பெண்மணி ஒரு ஐடி’யாளருக்கு பூ விற்கையில் அப்போதைய நிலவும் விலையை விட சுமார் 35 சதம் அதிகம் விலை சொல்லி விற்றிருக்கிறார்,சுதா அப் பூப் பெண்மணியிடம் ‘ஏனம்மா இப்படி அதிகவிலை சொல்கிறாய்’ எனக் கேட்க, ‘நீ சும்மா இரு,அவர் ஐடி கம்பெனியில் இருக்கிறார்(அந்த இளைஞர் தன் அலுவலக கழுத்துப் பட்டையை அணிந்திருந்திருக்கிறார்,பெரும்பாலான ஐடி’யாளர்கள் இதை பெருமையுடன் செய்கிறார்கள்),இவ்வளவு சம்பாதிக்கும் போது அவர்கள் கொடுக்கலாம்,உன் வேலையப் பார்த்துக் கொண்டு போ’ என்ற பதில் கிடைத்திருக்கிறது.
இந்த நிலை வந்ததற்கு,பெருவாரியான இதர சக சமூக மக்கள் ஐடி’யாளர்களை எதிரி மனோபாவம் கொண்டு பார்க்கும் நிலைக்கு,யார் காரணம்? உடனே,அவர்களின் சம்பாதிக்க இயலாத,பொறாமைதான் காரணம் என்று buck passing முறையில் நம்மில்(நானும் ஐடி துறையில்தான் இருக்கிறேன்)பலர் பதில் கூறலாம் எனில்,அது இன்னும் பொது சமூகத்திலிருந்து நம்மை வேறுபடுத்துமோ என்ற எண்ணம் தோன்றுவது தவிர்க்க இயலாததாயிருக்கிறது.

நான் பிறந்தது ஒரு கிராமும் இல்லாத,டவுனும் இல்லாத ஒரு இரண்டும்கெட்டான் ஊரில்.பள்ளிப் படிப்பெல்லாம் ஊரில்தான்,கிராமம் சார்ந்த கல்வி,இளங்கலை கணிதம் மதுரை விவேகானந்தாவிலும்,பட்டயக் கணக்காளர்-Chartered Accountant-கல்வி கோவையிலும் படித்தேன்.
90 களின் ஆரம்பத்தில் சிஏ முடித்தவர்கள் அப்போதைய நிலவரத்தில் கம்பெனிகளில் நல்ல வேலை கிடைத்தால் வருடம் 5 லட்சம் அல்லது 6 லட்சம் ஆண்டு வருமான அளவில் கிடைக்கும்,இது இந்திய அளவில் முதன்மைத் தர வரிசைகளில் வந்தால்.இல்லாதவர்கள் ஆனாலும் நல்ல கல்வித் தகுதியுடன் இருப்பவர்கள் சுமார் 4.5 லட்சம் அளவில் கிடைக்கும்.
பொறியாளர்கள் போன்ற மற்ற துறையாளர்கள், 90 களின் ஆரம்பத்தில் ரூ.4000 மும் அதற்குக் குறைந்த சம்பளத்திலும் வேலை செய்ய தயாராய் இருந்தார்கள்.
ஆனால் இப்போது ஒரு பொறியியல் பட்டம் பெற்றவர்,சரியான முன்னேற்பாட்டுடன் முயற்சி செய்தால் ஐடி துறையில் ஆரம்ப சம்பளம் 30000 வாங்க முடிகிறது.இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் 4 கம்பெனிகள் தாண்டுவதன் மூலம் 8 லட்சம் அளவுக்கு வந்து விடுகிறார்கள்.ஆனால் இன்றும் கல்லூரி விரிவுரையாளர்,கணக்காளர்,மருத்துவர் என அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் இந்தவித வேகமான சம்பாத்திய வழிமுறை இல்லை.இன்னும் மெட்ரோ தவிர்த்த மற்ற ஊர்களில் நகர்களில் சாதாரண மக்களின் நித்த வருமானம் ரூ200 க்குள் இருப்பது சாதாரணம்.

இந்த வேகமான,எளிதான சம்பாத்தியமே ஐடி’யாளர்களின் சமூகம் சார்ந்த பார்வைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறதோ என்பதும் என் எண்ணம்.

இந்த எளிதான பணம் வாழ்க்கையின் சகல திக்குகளையும் உரசிப் பார்க்கும் சோதனை மனோபவத்தை அளிக்கிறது;பெரும்பாலான ஐடி’யாளர்கள் வேலையின் பொருட்டு பெற்றோரை விட்டு தள்ளி வசிக்கும் இன்றைய சூழ்நிலையில் ‘எதையும் ஒருமுறை’ முயற்சித்துப் பார்க்கும் இளமை மனோபாவம் எந்தவித கட்டுறுத்தல்களோ,தடுமாற்றமோ இன்றி Pub, Party சார்ந்த வாழ்க்கைச் சூழலுக்கு எளிதாக மாறிவிடுகிறது.
மத்திய 90 களில் நான் கணக்காளராக பணி புரிந்த நாட்களில் நான் தங்கியிருந்த மேன்சன் என்றழைக்கப்படுகிற விடுதிகளின் 20 அறைகளில் மிஞ்சினால் 2 அறைகாரர்கள் பீர் மட்டும் திரவ வகைக் காரர்களாக இருப்பார்கள்;ஆனால் இன்றைய நிலை அப்படியா என எண்ணினால் நமக்குக் கிடைப்பது ஆயாசமே.
அது அவரவர் உரிமை,அவர் சம்பாத்தியம் அவர் குடிக்கிறார்,அவரால் சமூகத் தொந்தரவு ஏதும் இல்லை என வாதிடலாம்; ஆயினும் வாழ்வின் விழுமியங்கள் எனக் கருதப்பட்ட விதயங்கள் இன்று எளிதாய் புறந்தள்ளப் படுகின்றன என்பது கண்கூடு;இதன் பிற் சேர்க்கையாக எவையெல்லாம் நல்லன என நாம் வாழ்ந்த சமூகம் சொன்னதோ அதையெல்லாம் ‘ஹெ’ என எள்ளும் ஒரு பார்வையும் வந்தாயிற்று,சமீபத்திய ஒரு பதிவின் பின்னூட்டங்களைப் பார்த்த போது திருமுறைகள் பற்றிய சில பதிவாளர்களின் எள்ளல் விமரிசனங்கள் கண்ணில் பட்டன;இந்தவகை விமர்சனங்கள், திருமுறைகள் பற்றிய முழுமையான அறிவும் அந்த காலகட்ட வரலாறு,சமூகப் நிலைகள் பற்றிய முழுமையான அறிவுக்கு அப்புறம் வந்தால் அது ஓரளவு புரிந்துகொள்ளப் பட வேண்டியதே;எதையுமே முழுக்க அறியாமல் வரும் இவ்வகை விமர்சனங்களின் காரணம் மேற்சொன்ன எள்ளல் மனோபாவமே,வாழ்வை-அதாவது பிழைக்கும் வழியை-வசப்படுத்திவிட்ட எனக்கு எல்லாம் எளிதானவையே என்ற ஒரு பார்வையின் விளைவு.
நம்மைச் சுற்றிய சமூகத்தில் இன்னும் ஒரு நாளில் 50 ரூபாய் சம்பாதிக்க நாள் முழுதும் மண் வெட்டும் தொழிலாளியும் இருக்கிறார்,அவரையும் உள்ளடக்கியதுதான் இந்த சமுதாயம்,நாமும் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கமே என்ற எண்ணம் நம்மில் வருவதையும் அந்த எள்ளல் மனோபாவமே தடுக்கிறது.
இதன் ஒட்டு மொத்த தாக்கம் நிச்சயம் சமூக வாழ்வில் இருக்கும்,நாம் நம்ப மறுத்தாலும் கூட !

Tuesday, December 11, 2007

30.ஸ்டெம்செல்கள் சிகிச்சையில் ஒரு புரட்சி

உங்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஸ்டெம் செல்கள் மனிதக் கருவின் உருவாகும் முதல் செல்கள் ஸ்டெம் செல்கள் என்றழைக்கப் படும்;இவையே மனித உயிரில்-கருவில் அனைத்து மனித உடலின் பாகங்களும் ஸ்டெம் செல்களில் இருந்தே வளருகின்றன.
சமீபத்தில் கூட ஆவி யில் ஒரு இரத்தப் புற்றுநோய் கண்ட ஒரு 29 வயது இளைஞனுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் உடலின் மொத்த ரத்த செல்களும் வெளியேற்றப்பட்டு புதிய ரத்த செல்களின் கூறுகள்,ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் செலுத்தப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டது செய்தியாக வந்தது.
எனவே ஸ்டெம் செல்களைப் பற்றி ஆராய வேண்டுமெனில் மனித கருமுட்டைகளிலிருந்துதான் ஆராய்ச்சி செய்ய முடியும்.
இதுபோன்ற சிக்கல்களின் காரணமாக ஸ்டெம் செல் பற்றிய ஆராய்ச்சிகள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஊக்குவிக்கப்படாமலோ,அரசின் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவோ இருந்தன.
ஆனால் இப்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டிருக்கிறது;மனித தோல் செல்களில் இருந்தே ஸ்டெம் செல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது மனிதகுலத்தின் பல தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கும் கட்டத்தின் முதல்படி.
இந்த சாதனை ஒரு ஜப்பானிய விஞ்ஞானியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மின்னனுவியல் உபகரனங்கள் மட்டுமே செய்ய முடிந்த ஒரு நாடு என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு நாட்டின் விஞ்ஞானி இந்த சாதனையை செய்தது ஒரு திருப்புமுனையே.
ஜப்பானின் யமானகா (Dr.Yamanaka) என்ற மருத்துவ விஞ்ஞானியே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.45 வயதாகும் இவர் எலிகளில் இந்த சோதனையை வெற்றிகரமாக முதலிலேயே நிகழ்த்தி இருக்கிறார்.
சாதாரண செல்களில் இருக்கும் சில க்ரோமோசோம்களில் மாஸ்டர் ரெகுலேட்டர் என்றழைக்கப்படும் சில ஜீன்களை இணைப்பதன் மூலம் சாதரண தோல் செல்கள்,ஸ்டெம் செல்களப் போலவே செயல்படுகின்றனவாம்.
ஆயினும் இன்னும் ஒரு கட்டம் பாக்கியிருக்கிறது,இப்போதைய முறையில் ரெட்ரோவைரஸ்(Retroviruses) என்றழைக்கப்படும் வைரஸ் கிருமிகளே ரெகுலேட்டர் ஜீன்களை,க்ரோமோசோம்களில் செலுத்தப் பயன்படுகின்றன;இந்த ரெட்ரோவைரஸ் தான் செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் கேன்சர் செல்களையும் தூண்டுகின்றன;எனவே இந்த ரெட்ரோவைரஸ்களின் துணையில்லாமல் ரெகுலேட்டர் ஜீன்களை க்ரோமோசோம்களில் செலுத்தும் கட்டம் வெற்றி பெரும் போது இந்த சோதனை முழுவெற்றியாகும்.

Saturday, December 8, 2007

29.ரூபாயின் மதிப்பு-ஒரு விஷுவல் ட்ரீட்-சி.ஐ.ஏ வின் பொய்கள்

பல வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 40 க்குக் கீழ் வந்திருப்பது இப்போதுதான்.
இது மேலெழுந்தவாரியாக மகிழ்வளிக்கும் செய்தி என்றாலும்,இந்திய ஏற்றுமதியாளர்கள் புலம்புகிறார்கள்;
அவர்கள் டாலர் செலாவணியில் விற்பனைக்கான தொகையை வாங்கும் போது ரூபாய் மதிப்பு அதிகமாகிவிடுவதால் நிகரத்மதிப்புத்தொகை குறைந்து அவர்களில் லாபம் அதிக பட்சம் 13 சதம் வரை குறைகிறதாம்.
உண்மையில் இது வருத்தும் செய்தி எனினும்,இவை எல்லாவற்றிற்கும் இடையிலும் ஏற்றுமதி வணிகம் மொத்தத்தொகை இந்த வருடம் 35 சதம் டாலர் மதிப்பில்(Quantum) அதிகரித்திருக்கிறது !
அனைத்திலும் புன்னகைக்க வைக்கும் செய்தி ஒன்றும் உள்ளது.தாஜ்மஹால் போன்ற இடங்களில் அரசு இதுவரை இந்தியர்களிடம்,இந்திய ரூபாயிலும்,சுற்றுலா வரும் வெளிநாட்டவரிடம் டாலரிலும் நுழைவுக் கட்டணம் நிர்ணயித்திருந்ததாம்;இப்போது வெளிநாட்டவர் உள்பட எல்லோரிடமும் ரூபாயிலேயே கட்டணம் வசூலிக்கப் படுகிறது....
கமான் இந்தியா,கமான் !

*************************************************************************************

தமிழ் சினிமாக்களில் பல அபத்தக் களஞ்சியமாக இருப்பது வாடிக்கை,நம்பி இருக்கலாம்,பார்க்க வேண்டாம் என்று!
ஆயினும் அவ்வப்போது சில பார்க்கலாம்-வகைப் படங்களும் வரும்.
காதலுக்கு மரியாதை அதில் ஒன்று.
பலமுறை பார்த்த படம்தான் எனிலும்,மற்ற சாதாரண படங்களைப் போலவே ஆட்டமும் பாடல்களும் உள்ள படம்தானெனினும்,இன்று தொலைக்காட்சியில் இப்படம் பார்த்தபோது இதன் இறுதிக்காட்சிகள் ரசிக்கவைத்தன.
நாயகனும்,நாயகியும் மற்றவரை மறுத்து குடும்பம்,பெற்றோரை புண்படுத்தக் கூடாதென்று வந்துவிட்ட பிறகு,நாயகனின் அப்பா(சிவகுமார்),மனைவியிடம் சொல்லுவார்,’அவன் எங்களுக்காகவெல்லாம் திரும்ப வரவில்லை,உன்மீது உள்ள அன்பினால்தான் வந்திருக்கிறான்,அந்த அன்புக்கு நம்பிக்கை செய்ய அப்பெண்ணை விட பல மடங்கு சிறந்த பெண்ணாக உன் மகனுக்குப் பார்க்க வேண்டியது உன் கடமை’ என..
சரி,அந்தப் பெண்ணை விட சிறந்த பெண்ணைத் தேடுவோம்,அதற்கு அப்பெண்ணை முதலில் பார்ப்போம் என அம்மா நாயகி வீட்டுக்குச் சென்று,பின்,நாயகியே மிகப் பொருத்தமான பெண் என முடிவு செய்ததும்,மகனை கிட்ட அழைத்து வாத்சல்யம் காட்டும் இடம், ‘உன்னை அருமையான முறையில் வளர்த்தேன்,அருமையாக நானே அனைத்தும் உனக்குச் செய்வேன் என நினைப்பதும்,பின் மகனின் தேர்வு தான் செய்வது போலவே நல்ல தேர்வு என உணர்வதும்,அப்படித் தெரிந்தும் என் மீது அன்பும்,நம்பிக்கையும் வைத்து,என்னிடமே பொறுப்பை ஒப்படைத்தாயே?’ எனக் கேட்பது போல ஸ்ரீவித்யாவிடம் மிக நல்ல பாவனைகளும்,காட்சி அமைப்பும்....
பிள்ளைகளை மதிக்கும் பெற்றோர்களும்,பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளும் எப்படி குணாதிசயிப்பார்கள் என்ற விஷுவல் ட்ரீட் ரசிக்கும்படியானது.

************************************************************************************

சி.ஐ.ஏ ( Central Intelligence Agency ) சில பயங்கரவாத விசாரணைக் கைதிகளை விசாரித்த காட்சிப் பதிவு ஆதாரத்தை அழித்து விட்டோம் என்று அறிவிக்க அமெரிக்க ஊடகங்களில் புயல் கிளம்பியுள்ளது.
அந்த ஆவனங்களுக்கு ஏதும் ‘புலனாய்வு மதிப்பு’(Intelligence Value) இல்லாததாலும்,அவை ரகசியமாக வெளிப்பட்டு விட்டால்,விசாரிப்பாளர்களின் சுதந்திர வாழ்வுக்கு தீவிரவாத சக்திகளால் அச்சம் உண்டாகும் என்ற காரணத்தாலேயே அவை அழிக்கப் பட்டன என்கிறார் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் ஹேடன்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து அப்படிப்பட்ட கட்டளை/வேண்டுகோள் செல்லவில்லை என்கிறது வெள்ளைமாளிகை.
தங்களை ஏவும் அரசியல் தலைமை,தங்களை அடைகாக்கும் கடமையிலிருந்து பின்வாங்குவதாக சி.ஐ.ஏ கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் புலனாய்வு அமைப்புகளை முடுக்கிவிட்டு தான் விரும்புவதை சாதிப்பதும்,பின்னர் கேள்விமுறை என வரும்போது வாளாவிருப்பதும்,எல்லா நாடுகளிலும் பொதுவான காட்சியாகிவருகிறது.

-Aknowledgements : Time Magzine

28.மருத்துவ மாணவர்-கிராமசேவை-ஒரு பார்வை

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊடகங்கள்,மருத்துவர் ராமதாசு உட்பட அரசியல் தலைவர்கள் மாற்றி மாற்றி கருத்துச் சொல்லும் அளவிற்கு பற்றியெரியும் ஒரு விஷயம்,மருத்துவ மாணவர்கள் கிராமப்புற சேவை ஆற்ற வேண்டும் என்ற அரசின் சட்டமுன் வரைவு பற்றியது.
மருத்துவ மாணவர்கள்/மாணவிகள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியைத் திருமணம் செய்து கொள்ள அழைக்கும் வினோதப் போராட்டங்களெல்லாம் நடத்துகிறார்கள்.
ஆதாரமாக இதில் வெளிப்படையாகத் தெரியும் இரண்டு விஷயங்கள் 1.மாணவர்கள் கிராமங்களைத் தவிர்க்க விரும்புகிறார்கள்,பெரும்பாலும் இது சுயநல நோக்கே.
2.அரசு ஆதாரமாகச் சீர் செய்யப்பட வேண்டிய விதயங்களை ஆராயாமல்,மாணவர்கள் மீது சட்டத்தைத் திணிக்க முயல்கிறது.
சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அரசின் கூற்று:
-அரசு மருத்துவ மாணவர்களுக்கு,அதாவது அவர்களின் கல்விக்கு,பெருமளவு பணம் செலவு செய்தும் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பறக்கவும்,மெட்ரோபாலிடன் நகரங்களிலும்தான் ‘தொழில்’ செய்ய விழைகிறார்கள்;
-எவ்வளவு வேண்டியும் கிராமங்களில் தங்கி வேலை செய்ய ஒப்புவதில்லை;
-எனவே இதை சட்டமாக்கித் திணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை;
-கிராம மக்களின் மருத்துவத் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாத கடமை அரசுக்கு இருக்கிறது.
மாணவர்கள் கூற்று
-மருத்துவம் ஒரு தொழில் சார் கல்வி(Professional course),அதை நாங்கள் கடினப்பட்டுத்தான் படித்துத் தேர்கிறோம்;எனவே நாங்கள் எங்கே வேலை செய்ய வேண்டும் என்று தீர்மாணிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.
-அரசு பொறியாளர்களையோ,தகவல் தொழில் நுட்ப திறனாளர்களையோ இவ்வாறு கட்டாயப் படுத்தாதபோது,மருத்துவ மாணவர்களைக் கட்டாயப் படுத்த என்ன யோக்கியதை இருக்கிறது?
-ஏற்கனவே ஐந்தரை ஆண்டு காலம் படிக்கிறோம்,மேலும் ஓராண்டை கல்விக்காக செலவு செய்ய முடியாது.
இரு தரப்பிலும் நியாயங்கள் இருப்பதாகத்தான் தோன்றுகிறது,எனில் தீர்வுக்கான களம்தான் என்ன?
1.அரசு பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் ஏராளம்.கிராமங்களுக்குச் செல்ல ஏன் எல்லோரும் மறுக்கிறார்கள்?ஏன் கிராமங்களுக்கும் நகர்களுக்கும் இடையில் இவ்வளவு வாய்ப்பு வேறுபாடுகள்?
குறைந்தபட்சம் அரசு சார்ந்த அமைப்புகளிலாவது இவை சரி செய்யப் பட வேண்டும்,உதாரணமாக செனையில் இருக்கும் அரசு மருத்துவ விடுதிக்கும்,பட்டிவீரன்பட்டியில் இருக்கும் அரசு மருத்துவ விடுதிக்கும் அமைப்பு,கருவிகள்,வசதிகள் நோக்கில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.எல்லா இடங்களில் வாழ்பவர்களும் மக்கள்தான்,சென்னையில் தேவ தூதர்களும்,கிராமங்களில் பாவப்பட்ட புழுக்களும் வாழ்வதில்லை.
இதை செயல்படுத்த அரசுக்கு வக்கில்லை,தெரியவில்லையெனில்,செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுக்களை அனுப்பி கற்றுக் கொள்ளலாம்,தப்பில்லை.
தகவல் தொழில் நுட்பத்துறையில் அரசின் ஆக்கம் இன்றியே இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன,மதுரை,திருச்சி,கோவை எனப் பல இடங்களை த.தொ.துறை நிறுவனங்கள் பார்க்க ஆரம்பிக்கின்றன,என்ன காரணம்? அவை செயல் படத் தேவையான மனிதவளம் எல்லா இடங்களிலும் கிடைப்பதும்,சென்னை தறிகெட்டுப் போய் மூச்சுமுட்டுவதும் இயல்பான காரணங்களாகி கிராமப் புறம் சார்ந்த வேறு இடங்கள் பார்க்கப் படுகின்றன.
இதைப் போண்ற இயல்பான மாற்றம் நிகழ கிராமங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும்;அவை நிகழும் போது இயல்பாகவே நகர்ப் புறக் கூட்டம் குறைந்து எல்லாத் துறைகளுமே கிராமம் சார்ந்த இடங்களில் முன்னேறும்.
2.மருத்துவ மாணவர்கள் மேற்படிப்பிற்கு,கிராமப் புற சேவை செய்தவர்களுக்கு முன்னுரிமை/உதவித் தொகை கொடுக்கலாம்.
3.நகர்ப்புறம்/டவுன் பஞ்சாயத்து/கிராமப் புறங்கள் வகைப்படுத்தப் பட்டு கிராம்ப் புற சேவைக்கு ஊதியங்களில் வேறுபாடு கொண்டுவரலாம்.
4.அரசுக் கல்லூரிகளில் தகுதி அடிப்படையில் ஒதுக்கப்படும் இடங்களில் படிக்கும் மாணவர்கள்,கிராமப் புற சேவையும் செய்த பிறகு அவர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை அளிக்கலாம்.
5.எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்கள்,மெற்றோர்கள் பார்வையில் நவீன காலங்களில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை பிறழ்வுகளில் நிகழ வேண்டிய மாற்றங்கள்-மருத்துவம் என்பது மாவட்ட ஆட்சித் துறை(Indian Administration Service),காவல்துறை (Indian Police Service) போன்ற ஒரு சேவை சார்ந்த துறை.அதை முழுக்க முழுக்க பணம் மற்றும் சம்பாதித்தல்/தொழில் சார்ந்த துறையாகப் பார்க்கும் நம் சமுதாயப் பார்வையின் நிறக்குருடு மாற வேண்டும்.மருத்துவம் தொழில் முறையாகி விட்டாலும் அதன் அடிப்படை சேவை சார்ந்தது என்பதை நாம் எல்லோரும் நம் நினைவுக்குக் மீள் கொண்டு வர வேண்டும்.
ஏனெனில்,நீங்களும்,நானும்,மற்றவர்களும் சேர்ந்ததுதான் சமூகமும் நாடும் !

Thursday, December 6, 2007

27-வாழ்க்கை,குடும்பம்,மகவு ??????????

குழந்தைகள் கோடை விடுப்பு எடுப்பது போல நான் ஆண்டுக்கு (குறைந்தபட்சம்) ஒருமுறை இந்தியா சென்று திரும்புவது வழக்கம்.இந்தமுறை சற்று நீண்ட விடுமுறை இடைவெளி,பதிவுகள் பக்கம் எட்டிப்பார்க்க வகை இல்லாமல் வலைஇணைப்பு சரிவர கிடைக்காத இரண்டும் கெட்டான் ஊர் எங்கள் ஊர்.அதற்கு மேலும் ஊரில் சென்று சந்திக்க வேண்டிய உறவுகள்,இந்தியா போகும் போது செய்து கொள்ளலாம் என்றே நம்மில் பலர் சேர்த்து வைக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கதம்ப வேலைகள் அனைத்திற்கும் மத்தியில் பதிவாவது,ஒன்றாவது !!!!
எனினும் சென்று திரும்பி வந்த பின் மனக்குளத்தில் திமிறும் பந்தாக பல நினைவுகள்.

நம்மில் பலருக்கு ஆட்டோக்ராஃப் நினைவுகள் வரும்;எனக்கும் வந்தது,ஆனால் அவை கிளறிய காயங்களில் சில வாழ்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.விரிவாகவே சொல்கிறேன்.

என் அம்மா அதிகம் வாசிப்பு நாட்டம் உடைய பெண்மணி;அவர் படித்த புத்தகங்களும் என்னை படிக்கத் தூண்டிய புத்தகங்களும் ஏராளம்.
சமையலறை,தொலைக்காட்சியுடன் முடங்கும் பல தமிழக பெண்களில் இருந்து வேறுபட்ட,
இந்த வயதிலும்(60 ஆரம்பம்) ஒரு நாளைக்கு குறைந்தது 50 பக்கங்கள் படிக்கவோ அல்லது 5 பக்கங்களாவது எழுதவோ மறக்காத ஒரு மனுஷி.
வீட்டு ஹாலின் நீண்ட நாற்காலியில் எப்போதும் இறைந்து கிடக்கும் (குறைந்தபட்சம்) 50 புத்தகங்களும் கையெழுத்துப் புத்தகங்களுமே அதற்குச் சாட்சி.

வீட்டு வரவேற்பறை சீராக இருக்க வேண்டும் என்று பிடிவாதமுள்ள நான் இதற்காகவே குரலெடுத்துக் கடிந்து கொள்வது வாடிக்கை.ஆயினும் இப்போதெல்லாம் அம்மாவின் அந்தப் போக்கும் நேசிப்பில் கலந்துவிட்டது,எனவே கத்துவதில்லை,மாறாக அடுக்கி வைப்போம் அல்லது கிண்டலடித்து சிரித்துவைப்போம்.

தமிழில் திருமுறைகள்,திருமந்திரம்,சைவசித்தாந்தம்,கம்பன்,பாரதிஆகியவற்றில் மாறாத ஈடுபாடும் ஈர்ப்பும் கொண்ட பெண்மணியாக எப்படி அம்மா இருக்கிறாள் என்பதற்கு விடை எங்கள் ஐயா.(அம்மாவின் தகப்பனார்).
எங்கள் ஊர்,அதாவது எங்கள் அப்பாவின் – அம்மா வாழ வந்த ஊரின் – அருகாமையில் சுமார் 10 கி.மீ தொலைவுதான் ஐயாவின்,அம்மாவின் பிறந்த ஊர்.வள்ளல் பாரி வாழ்ந்த பறம்புமலை என்றழைக்கப் படும் பிரான்மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம்.
1940 களில் கிராமங்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என சொல்லத் தேவையில்லை.

அந்த கிராமத்தில் சிறு பெட்டிக் கடையுடன்,விவசாயம் ஆகியவற்றுடன் திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.பெட்டிக் கடை துணிக்கடையாக உருமாறியதும்,கூடவே விவசாயமும் முன்னேற்றமும் திடமும் அளிக்க,கூடவே கல்வியிலும் ஆர்வம்.

பள்ளிக் மேற் கல்வியுடன் இருந்தவர் மதுரை தமிழ்ச்சங்கத்தில் சேர்ந்து புலவர்-அக்காலத்தில் வித்வான் என்றழைப்பார்களாம்- படிப்பில் பெரு விருப்புடன் சேர்ந்து படித்திருக்கிறார்,அந்நிலையில் அம்மா கருவானாள்.(ஐயா படித்து வித்வான் பட்டம் பெற்றவுடன் நான் பிறந்தேனாம்,அதனால்தான் அவரின் தமிழார்வம் என்னிடமும் தொற்றிக் கொண்டது,என அம்மா சொல்லி நானே கேட்டிருக்கிறேன்.)

ஆசையாய்ப் பிறந்த குழந்தைக்கு அவர் சூட்டிய பெயரும் தமிழ்ச்செல்வி என ஆளைப் போலவே,அழகான பெயர்.ஐயாவுக்கு அம்மாவின் மேல் எப்போதும் கூடுதல் வாஞ்சை;காதலுடன் பிறந்த குழந்தையாகவும்,முதல் குழந்தையாகவும்,எதிலும் தெளிவான பார்வையும் கருத்தும் கொண்டதாலும் இருக்கலாம்-அம்மாவைப் பற்றி விரிவாக பிறிதொருமுறை சொல்கிறேன்-ஆகையால் என்னையும்,என் தங்கையயும் சிறிது கூர்ந்து அவதானிப்பார்.
ஐயாவுக்கு நான்கு பெண்கள் கழித்து கடைசியாக ஒரே மகன்.அம்மாவின் திருமணப் புகைப்படத்தில் 6 வயது சிறுவனாக மாமா.எனக்கும் அவருக்கும் 8 வயது வித்தியாசம்தான்.

எங்கள் தாய்வழி உறவுக் குழந்தைகளில் முதல் ஆண் நானே;இரண்டு வயது குறைவாக முதல் சித்தி மகன் சொக்கன்;எங்கள் பதின்ம வயதில்-எனக்கு 12 வயதும்,சொக்கனுக்கு 10 வயதும்-பள்ளி விடுமுறை விட்டால் ஐயா வீட்டுக்கு சென்று அதகளம் பண்ணுவோம்;ஒரு சலிப்பு சலித்துக் கொள்ள மாட்டார்;மாறாக நடைமுறை வாழ்க்கயின் சிறு சிறு அற்புதங்களையும் நேர்த்திகளையும் கற்றுக் கொடுக்காமல் கற்றுக் கொடுப்பார்;நாங்கள் போனால் மாந்தோப்பில் மாங்காய் அடித்துக் கொண்டுவரச் செய்வார்;(எத்தனை என நினைக்கிறீர்கள்,சுமார் 200 லிருந்து 400 காய்கள் வந்து பழுக்க வைக்கப்படும்-பெரிய மாந்தோப்பு வைத்து சுமார் 50-100 மரங்கள் வளர்த்து வந்தார்);தேன் விற்கும் மலை கிராமத்தார்களிடம் சொல்லி தேன் கொண்டு வரச் செய்வார்;அதனை அளந்து வாங்கும் போது கூடவே இருத்திக் கொண்டு சிறு சிறு வேலைகள் சொல்வார்-போய் லிட்டர் உழக்கு அம்மணியிடம் வாங்கி வா,புனலை எடுத்துக் கொண்டு வா,கழுவித் துடைத்து வைத்திருக்கும் கண்ணாடிப் போத்தலை(பாட்டில்) எடுத்துக் கொண்டு வா,புனலைப் பிடித்துக் கொள் என்றெல்லாம் அவர் சொன்ன வேலைகள் வாழ்க்கையின் தேர்ந்த ரசனைகளை சொல்லித் தந்தன;தேன் அளந்து வாங்கியபின் தேன் ராட்டில் இருக்கும் சொற்பத் தேனையும்,பாட்டிலில் ஊற்றியது போக உழக்கில் இருக்கும் மீதத் தேனையும்,காகிதத்தில் கூம்பு செய்யச் சொல்லி,அதில்-கையில் விளையாட்டு அழுக்கிருக்கும்- ஊற்றி சாப்பிடச் சொல்லுவார்.பாட்டிலில் இருக்கும் தேன் சாப்பாடு சமயத்தில் பந்திக்கு வரும்!.

காலை வயலுக்கு அழைத்துச் சென்று,வேப்பங்குச்சியாலோ அல்லது கரிசாலை இலையாலோ பல் துலக்க வைத்து,காலைக் கடன் கழிக்க வைத்து பிறகு,பெரிய வயல் கேணியில் நீந்திக் குளிக்க வைத்து- என் இடுப்பில் அவரின் நீண்ட துண்டைக் கட்டி வயல் கேணியின் உள் வரந்தையில் சுற்றிச் சுற்றி நடந்து வந்து,என்னை நீந்த வைத்து- எனக்கு மட்டும் அவரே நீந்தக்கற்றுக் கொடுத்தார்-ஈர உடையுடன் வீட்டுக்கு வருவோம்,வரும்போதே பசி காதை அடைக்கும்...

ஐயாவுக்கு-தூய சைவ உணவாளியெனினும்-ஆறடிக்கும் மேற்பட்ட ஆஜானுகுபாகுவான முறுக்கேறிய உடல்,அந்நாட்களில் கர்லாக் கட்டை சுழற்றுவாராம்,வீட்டின் பின்னால் கிடந்து நானே பார்த்திருக்கிறேன்.
வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றி கோயில் வீட்டுக்கு சென்று(பூசனை செய்யும் அறைக்கு அப்பெயர்) தொழுது,நெற்றி,உடல்,கை,கால்களில் திருநீறு அணிந்து சாப்பிட வருவார்.

சாப்பிடும் வேளை இன்னொரு ரசவாத வேளை!

வாழை இலையில்(வயலில் இருந்து வரும்போதே அரிந்து கொண்டு வருவோம்)தான் சாப்பிடுவார்;உணவுகள் பரிமாறப்படும் போதே ‘உப்பை இடது மூலையில் தான் வைக்க வேண்டும்;ஊறுகாய் அதற்கடுத்து வை’ என்றெல்லாம் குறிப்புகள் வரும்; ‘பண்டிதம்(ன்)புள்ளை,பேசாமச் சாப்பிடுய்யா’ என்ற அம்மணியின் எள்ளல் கேலியைப் புறந்தள்ளி எங்களுக்கு ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்;ரசம் சாதம் உள்பட உணவு சாப்பிடும் போது கை விரல்கள் வாய்க்குள் நுழைக்காமல் சாப்பிடுவார்.
மதிய உணவெனில் பல ஆச்சரியங்கள் நிகழும்.சாதத்திற்கு நெய் அம்மணி ஊற்றுவது,சாம்பார் கரண்டியில்! இலையில் குறைந்தது 50 ml ஆவது நெய் விழும்;அதுவும் வீட்டிலேயே கடைந்த மோரின் நெய்!சாப்பிட்டபின் கடைந்த மோர் குடிக்க சொல்லுவார்.

கடையில் அவர் தரையில் பாயில்தான் உட்காருவார்.துணிகள் அடுக்கியிருக்கும் ராக்கையின் கீழ்ப்பகுதியில் தொடை உயரத்தில் இருக்கும் பகுதி கீழிருந்து மேலாக மூடும் மரக் கதவுகளால் தடுக்கப்பட்டு புத்தக அலமாரியாயிருக்கும்;அதில் திருமுறைகள்,சித்த,ஆயுர்வேத வைத்தியக் குறிப்பு புத்தகங்கள்,மாசிலாமணி முதலியார் எழுதிய வைத்தியக் குறிப்புப் புத்தகம் எனக் கலந்து கட்டிய புத்தகங்கள் இருக்கும்;அவற்றை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பார். கிராமத்தில் பலர் வந்து உடல் நலமின்மைக்கு சித்த,கடைச்சரக்கு மருந்துகள் வாங்கிப் போவார்கள்.

செந்தமிழ்ச்செல்வி என்னும் மாத இதழ் தபாலில் வருத்துவார்;அதனை எங்களைப் படிக்கச் சொல்லுவார். இரவில் சாப்பிட்டுப் படுக்கும் முன் உச்சந்தலையில் வில்வாதி தைலம்(அவரே தைலம் காய்ச்சுவார்!) சிறிது எடுத்து கரகரவெனெ தேய்த்துக் கொண்டு நமக்கும் தேய்த்துவிடுவார்;பின் சிறிது நேரம் சன்னமான குரலில்,ராகத்தில் திருமுறைப் பாடல்கள்...கேட்டுக் கொண்டே தூங்கி விடுவோம்!

இப்போது எண்ணிப் பார்த்தால் வாழ்வின் இளம்பருவத்து நுண்ணிய ரசனைகளில் பல-குளிப்பதில் இருந்து,சாப்பிடுவது வரை-அவரைப் பார்த்து வந்திருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.
அப்படியான ஐயா கடந்த 15 வருடங்களாக எங்கள்(தன் மூத்த மகள்) வீட்டுக்கு வராமல் மகனால் தடுக்கப்பட்டார்- அப்பச்சி ,உனக்கு நான் வேணுமா,மக வேணுமா,என்ற மகனின் உறுமலுக்கு அடங்கி-பல அற்பச் சண்டைக் காரணங்களுக்காக!

இந்த இடைப்பட்ட காலத்தில் மாமா தன் குடும்ப வாழ்வில் பல இடியாப்பச் சிக்கல்களை தானே உருவாக்கிக் கொள்ள-அவருக்கு ஒரு சித்தியின் பெண்,எனது ஒன்று விட்ட சகோதரிதான்,மனைவி- அவருக்கு எழுதினால் ஏறாது என எண்ணி என் சகோதரிக்கு,அதாவது மாமிக்கு,பாரதியின் ‘வீணையடி நீ எனக்கு’ஐ மேற்காண்பித்து எழுதிய கடிதத்தைப் படித்தவர்,'தமிழ் மகனா இப்படியெல்லாம் எழுதினா(ன்)'என மிகவும் பெருமிதத்தில்,மகிழ்ச்சியில் சிலாகித்தார் எனக் கேட்டபோது எனக்கு மனது கனத்தது!

இப்பருவத்தில் நாங்களும் கல்வி மேற்படிப்பு,வேலை என சிறகுகள் விரிக்க அவரைப் பார்க்கும் தருணங்களும் வெகுவாகக் குறைந்தன.ஆயினும் அவர் தன் மகளையோ,எங்களையோ சந்திக்கும் தருணங்கள் நெகிழ்வாகவே இருக்கும்.
கடைசியாக 5 வருடங்களுக்கு முன் என் திருமண அழைப்பைக் கொண்டு அவரை பார்க்கச் சென்றேன். ‘அப்பச்சி,தமிழ் வந்திருக்கேன்,மகனுக்கு(எனக்கு) கல்யாணம் வச்சிருக்கோம்’(பார்வை அவருக்கு போக்கடிக்கப் பட்டிருந்தது,கவனக் குறைவால்) எனக் கேட்டதும் பசுவைக் கண்ட கன்றாய் பரபரத்தார்.’உக்காரும்மா,உக்காரும்மா,பயலுக்கு கல்யாணமா,நல்லா,இருக்கானா,எங்க சிங்கப்பூர்லயா இருக்கா(ன்),நல்லாருக்கட்டும்,நல்லாருக்கட்டும்’ என்று நெகிழ்ந்த மனிதரின் உருவத்தில் ஏற்பட்டிருந்த பிம்ப மாறுதல்கள் அப்பொழுதே என் மனதைக் கிழித்தன.

தந்தைக்கும்,தன் பிம்பம் போன்றதேயான மகளுக்குமான அந்த சந்திப்பு,பிரிந்திருக்க வேண்டிய விதியின் துயரும்,மனதில் பொங்கும் அன்பின் நெகிழ்வும் நிறைந்து என்னையும் அழ வைத்தது.
இம்முறை போனபோது அம்மா,’ அவன்(மாமா) என்ன பண்ணாலும் சரி,வாடா,போய் பார்த்துட்டு வரலாம், நீ அடுத்தமுறை வரும் போது இருக்காரோ,இல்லையோ சொல்ல முடியாது..’ என்று சொல்ல,உறுதியாக மறுத்தேன்,சிங்கம் போன்ற அவரின் என் மனபிம்பம் துவண்டு மருகி,சிதையும்  நேரடிக் கணங்களை என்னால் சீரணிக்க இயலுவதில்லை என்பதால் !

பெட்டிக் கடையில் வாழ்க்கையை ஆரம்பித்து,நான்கு பெண்களை சீராகக் கரையேற்றி,நிலமும்,வயலும்,தோப்பும்,கடையுமாக செழித்த தன் அத்தனை உழைப்பையும் தாரைவார்த்துக் கொடுத்த தன் ஒரே அன்பு மகன் அவரின் கடைசிக் கால நிம்மதியான,நிறைவான வாழ்க்கைக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளாத நிலையில்,குடும்பம்,மக்கட்பேறு,வாழ்வு இவைகளின் நோக்கம்தான் என்ன??????????!!!!!!!!!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • - அன்புடையீர்! பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு
  1 month ago
 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  2 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  8 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  10 months ago