விசிறிச் சிதறும் சக்கர வட்டம்,
பாதிப் பட்டுப் புடவையில் உன்னுடை;
சிலீர் சிலீரென சிதறும் புன்னகை,
சிரிக்கும் கண்கள் கலைந்து,கலைத்திட;
தோழிகள் நடுவே சுடரும் சுடர் நீ,
தோன்றும் இடமெலாம் சத்த வெடிச்சரம்;
ஏழிரு வயதின் உறைந்த நினைவு
ஆழ்ந்த மனதின் பெட்டகப் பதிவாய் !
நெஞ்சம் அணைக்கும் புத்தகம்,கைகள்,
நெருங்கித் தணிந்த பேச்சில் தோழியர்;
வகுப்பறை நேரம் வன்மைக் கவனம்,
வதனம் நயணம் அறிவின் ஒளிச்சுடர்;
மின்னி மறையும் மின்மினியாய்,கணம்
மீண்டெனை மறையும் மின்னல் பார்வை;
ஷேக்ஸ்பியர் எழுதிய sonnets எல்லாம்,
சிந்தை முழுதும் உந்தன் வடிவினில் !
பாதைகள் மறைந்த பாசிப் படித்துறை,
பன்னிப் பதியும் கொலுசின் நடையொலி,
தோள்கள் சாய்ந்து கைகள் கோர்த்து,
பேசிய கவிதையும் பாட்டும் ஆயிரம்;
தங்கச் சுடராய் மஞ்சள் வெயிலில்
அங்கம் எங்கும் பொங்கும் களியில்,
மெல்லிய த்வனியில் மீட்டிய வீணையாய்
சில்லெனச் சிதறிய 'ஸ்வர ராக சுதா' !!
சிற்றிடை அசைய சித்திர நடையில்
பொற்பதப் பூக்கள் போகும் பாதைகள்,
என்மன வானின் அகன்ற வெளியில்
பொன்னொளிச் சுடரின் புதிய வானவில்;
எதிரெதிர் பார்க்க ஏதும் பொழுதினில்
என்னுயிர் கலந்து மீளும் விழிகளில்
உலக முழுமையின் அன்பும் நேசமும்;
உவப்பின் உச்சியில் உயிரும்,உணர்வும் !
ஓடி மறையும் மேகத் திட்டாய்
ஒரு நாள் பிரிவாய் என்றறியாமல்,
பேசித் திரிந்த கதைகள் பற்பல;
பேச மறந்த கதைகள் பற்பல..
புறப்படும் பொழுதில் எழுப்பிய கேள்வி,
எப்படி உணர்வாய்,எந்தன் பிரிவை?
எப்படி உணர்வேன்,உறையும் கணங்கள்,
மௌனக் கடலின் புதைந்த பொக்கிஷம் !!
-அறிவன்.
அழகிய கவிதை...
ReplyDeleteநல்ல சொல் தேர்வுகள்..
படங்களும் பொருத்தம்..
அநானி,நன்றி.
ReplyDeleteபெருமளவு நான் மரபு நேசன்,எனவே மரபின் வழியே இக்கவிதையை முயன்றேன்..
அதுவே சொல்லாடலின் அழகுக்கு காரணம்..
பாராட்டுவதற்கெதற்கு முகமூடி?