தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊடகங்கள்,மருத்துவர் ராமதாசு உட்பட அரசியல் தலைவர்கள் மாற்றி மாற்றி கருத்துச் சொல்லும் அளவிற்கு பற்றியெரியும் ஒரு விஷயம்,மருத்துவ மாணவர்கள் கிராமப்புற சேவை ஆற்ற வேண்டும் என்ற அரசின் சட்டமுன் வரைவு பற்றியது.
மருத்துவ மாணவர்கள்/மாணவிகள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியைத் திருமணம் செய்து கொள்ள அழைக்கும் வினோதப் போராட்டங்களெல்லாம் நடத்துகிறார்கள்.
ஆதாரமாக இதில் வெளிப்படையாகத் தெரியும் இரண்டு விஷயங்கள் 1.மாணவர்கள் கிராமங்களைத் தவிர்க்க விரும்புகிறார்கள்,பெரும்பாலும் இது சுயநல நோக்கே.
2.அரசு ஆதாரமாகச் சீர் செய்யப்பட வேண்டிய விதயங்களை ஆராயாமல்,மாணவர்கள் மீது சட்டத்தைத் திணிக்க முயல்கிறது.
சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அரசின் கூற்று:
-அரசு மருத்துவ மாணவர்களுக்கு,அதாவது அவர்களின் கல்விக்கு,பெருமளவு பணம் செலவு செய்தும் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பறக்கவும்,மெட்ரோபாலிடன் நகரங்களிலும்தான் ‘தொழில்’ செய்ய விழைகிறார்கள்;
-எவ்வளவு வேண்டியும் கிராமங்களில் தங்கி வேலை செய்ய ஒப்புவதில்லை;
-எனவே இதை சட்டமாக்கித் திணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை;
-கிராம மக்களின் மருத்துவத் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாத கடமை அரசுக்கு இருக்கிறது.
மாணவர்கள் கூற்று
-மருத்துவம் ஒரு தொழில் சார் கல்வி(Professional course),அதை நாங்கள் கடினப்பட்டுத்தான் படித்துத் தேர்கிறோம்;எனவே நாங்கள் எங்கே வேலை செய்ய வேண்டும் என்று தீர்மாணிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.
-அரசு பொறியாளர்களையோ,தகவல் தொழில் நுட்ப திறனாளர்களையோ இவ்வாறு கட்டாயப் படுத்தாதபோது,மருத்துவ மாணவர்களைக் கட்டாயப் படுத்த என்ன யோக்கியதை இருக்கிறது?
-ஏற்கனவே ஐந்தரை ஆண்டு காலம் படிக்கிறோம்,மேலும் ஓராண்டை கல்விக்காக செலவு செய்ய முடியாது.
இரு தரப்பிலும் நியாயங்கள் இருப்பதாகத்தான் தோன்றுகிறது,எனில் தீர்வுக்கான களம்தான் என்ன?
1.அரசு பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் ஏராளம்.கிராமங்களுக்குச் செல்ல ஏன் எல்லோரும் மறுக்கிறார்கள்?ஏன் கிராமங்களுக்கும் நகர்களுக்கும் இடையில் இவ்வளவு வாய்ப்பு வேறுபாடுகள்?
குறைந்தபட்சம் அரசு சார்ந்த அமைப்புகளிலாவது இவை சரி செய்யப் பட வேண்டும்,உதாரணமாக செனையில் இருக்கும் அரசு மருத்துவ விடுதிக்கும்,பட்டிவீரன்பட்டியில் இருக்கும் அரசு மருத்துவ விடுதிக்கும் அமைப்பு,கருவிகள்,வசதிகள் நோக்கில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.எல்லா இடங்களில் வாழ்பவர்களும் மக்கள்தான்,சென்னையில் தேவ தூதர்களும்,கிராமங்களில் பாவப்பட்ட புழுக்களும் வாழ்வதில்லை.
இதை செயல்படுத்த அரசுக்கு வக்கில்லை,தெரியவில்லையெனில்,செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுக்களை அனுப்பி கற்றுக் கொள்ளலாம்,தப்பில்லை.
தகவல் தொழில் நுட்பத்துறையில் அரசின் ஆக்கம் இன்றியே இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன,மதுரை,திருச்சி,கோவை எனப் பல இடங்களை த.தொ.துறை நிறுவனங்கள் பார்க்க ஆரம்பிக்கின்றன,என்ன காரணம்? அவை செயல் படத் தேவையான மனிதவளம் எல்லா இடங்களிலும் கிடைப்பதும்,சென்னை தறிகெட்டுப் போய் மூச்சுமுட்டுவதும் இயல்பான காரணங்களாகி கிராமப் புறம் சார்ந்த வேறு இடங்கள் பார்க்கப் படுகின்றன.
இதைப் போண்ற இயல்பான மாற்றம் நிகழ கிராமங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும்;அவை நிகழும் போது இயல்பாகவே நகர்ப் புறக் கூட்டம் குறைந்து எல்லாத் துறைகளுமே கிராமம் சார்ந்த இடங்களில் முன்னேறும்.
2.மருத்துவ மாணவர்கள் மேற்படிப்பிற்கு,கிராமப் புற சேவை செய்தவர்களுக்கு முன்னுரிமை/உதவித் தொகை கொடுக்கலாம்.
3.நகர்ப்புறம்/டவுன் பஞ்சாயத்து/கிராமப் புறங்கள் வகைப்படுத்தப் பட்டு கிராம்ப் புற சேவைக்கு ஊதியங்களில் வேறுபாடு கொண்டுவரலாம்.
4.அரசுக் கல்லூரிகளில் தகுதி அடிப்படையில் ஒதுக்கப்படும் இடங்களில் படிக்கும் மாணவர்கள்,கிராமப் புற சேவையும் செய்த பிறகு அவர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை அளிக்கலாம்.
5.எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்கள்,மெற்றோர்கள் பார்வையில் நவீன காலங்களில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை பிறழ்வுகளில் நிகழ வேண்டிய மாற்றங்கள்-மருத்துவம் என்பது மாவட்ட ஆட்சித் துறை(Indian Administration Service),காவல்துறை (Indian Police Service) போன்ற ஒரு சேவை சார்ந்த துறை.அதை முழுக்க முழுக்க பணம் மற்றும் சம்பாதித்தல்/தொழில் சார்ந்த துறையாகப் பார்க்கும் நம் சமுதாயப் பார்வையின் நிறக்குருடு மாற வேண்டும்.மருத்துவம் தொழில் முறையாகி விட்டாலும் அதன் அடிப்படை சேவை சார்ந்தது என்பதை நாம் எல்லோரும் நம் நினைவுக்குக் மீள் கொண்டு வர வேண்டும்.
ஏனெனில்,நீங்களும்,நானும்,மற்றவர்களும் சேர்ந்ததுதான் சமூகமும் நாடும் !
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
No comments:
Post a Comment