குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label நாளொரு பாடல். Show all posts
Showing posts with label நாளொரு பாடல். Show all posts

Monday, August 20, 2012

* * * * * 171.நோயில்லா யோகநிலை-நாளொரு பாடல்-16



சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ 
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் 
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.


நூல் : சித்தர் பாடல்கள் திரட்டு

Sunday, August 19, 2012

* * * * * 169.உளத் தீர்த்தம்-நாளொரு பாடல்-15



உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.


நூல் : பத்தாம் திருமுறை | திருமந்திரம்

Saturday, August 18, 2012

* * * * * 168.நட்பும் குணமும்-நாளொரு பாடல்-14


நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா [போல்
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.


நூல்: மூதுரை

Thursday, August 16, 2012

* * * * * 165.அடி சேருமே-நாளொரு பாடல்-13


மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே


நூல் : தனிப்பாடல் திரட்டு

Monday, August 13, 2012

* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11



வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன
இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை
மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே.

நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : பலர், இப்பாடலுக்கு காளமேகப் புலவர்
முக்கியக் குறிப்பு : சிலேடைப் பாடல் வகையைச் சேர்ந்தது.

பதம் பிரித்த பாடல்:
வெம் காயம் சுக்கு ஆனால், வெந்த அயத்தால் ஆவதென்ன
இங்கு யார் சுமந்து இருப்பார் இச் சரக்கை
மங்காத சீர் அகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெரும் காயம் ஏரகத்துச் செட்டியாரே

முக்கிய சொற்கள்:
வெம் காயம்- வெங்காயம் மற்றும் உடல்; வெந்த அயம்- வெந்தயம் மற்றும்  இரும்பைச் சேர்த்துச் செய்த சக்தி வாய்ந்த மருந்துகள் ; சரக்கு- கடைச் சரக்கு மற்றும் உடல் ; சீர் அகம்- சீரகம் மற்றும் ஆன்மாவின் உய்வு ; ஏரகத்துச் செட்டியார் - கடைச் செட்டியார் மற்றும் முருகப் பெருமான்

கருத்து:
கடைச் சரக்கு நோக்கில் -
கடைச் சரக்கை விற்கும் ஏரகத்துச் செட்டியாரே,
வெங்காயம், வெந்தயம் போன்ற பொருள்கள் வாங்கி வைத்திருக்கையில், வெங்காயம் வாடி வதங்கிப் போய் விட்டால், அந்த இரண்டு சரக்கினாலும் பயன் இல்லை, எனவே யாரும் அவற்றைச் சுமந்திருக்க மாட்டார்கள். எப்போதும் கெட்டுப் போகாத சீரகத்தைத் தந்தால், பெருங்காயம் கூடத் தேவை இல்லை...


உள்ளார்ந்த நோக்கில் -
ஏரகம் என்னும் சுவாமிமலை நாதனான முருகப் பெருமானே,
வெம்மை பொருந்திய தன்மையுடைய உடலானது, தளர்ந்து சுக்கைப் போல வற்றிய காலத்தில், அந்த உடலுக்கு (அயக்காந்த செந்தூரம் போன்ற) நல்ல மருந்துகளால், உடலானது மேலும் பழுது பட்டுச் சிதையாமல், காக்க முடிந்தாலும், அதனால் விளையும் பயன் ஒன்றும் இல்லை; உடலில் உலவும் உயிரானது நன்மை நிலையை அடைந்து, வீடு பேறு கிடைக்கும் எனில், இவ்வாறு சுக்காக வற்றிய உடலைத் மேலும் நிலைநிறுத்தும் வண்ணம் தேடாது, உன் கருணையால் உய்வேன்..


டிட் பிட்ஸ்:

  • முருகன் வள்ளியைத் தேடி வந்த காலத்தில் வளையல் விற்கும் செட்டியார் உருவில் வந்ததாகப் புராணக் கதைகள் இருக்கின்றன. எனவே முருகனைச் செட்டியாரே என்று அழைக்கிறார் புலவர்.
  • மங்காத சீரகம் என்ற சொலவடை உயிர் மீண்டும் உலகியலில் பிறந்து இழைந்து மங்காத நிலையான வீடுபேற்றை அடைவதைக் குறிக்கிறது.
  • வீடுபேறு கிடைக்கும் நிலையில், நிலையற்ற உடலைப் பேணும் தேவை இருக்காது, எனவே பெருங்காயத்தைத் தேட மாட்டேன் என்கிறார்.
  • உடல் வற்றித் தளர்ந்து செல்லும் காலத்து, உடலை நிலைநிறுத்த பல காயகல்ப மருந்துகள் தேவைப் படுகின்றன. ஆன்ம உயர்நிலையை அடைய உடல் வடிவம் தேவைப் படுகிறது. எனவே உடல் நல்ல நிலையில் இருக்கும் போதே, ஆன்ம நிலையிலும் தேர்ச்சி அடைய முயல வேண்டும் என்பது உள்ளார்ந்த கருத்து.
  • பட்டியலிடப் பட்ட கடைச் சரக்குகளில் சீரகம் கெடாமல் இருக்கும் என்பதும், அகம்(உயிர்) சீர் பெற்றால், பிறவிக்குப் பயன் கிடைக்கும் என்பதும் சுட்டிய பொருள்.

11  | 365

Sunday, August 12, 2012

159.திருவெண்காடு-நாளொரு பாடல்-10



பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.




நூல் : இரண்டாம் திருமுறை
ஆசிரியர் : திருஞானசம்பந்தர்
பதிகம் : திருவெண்காட்டுப் பதிகம்(048)
பாடல் எண் : 08

பதம் பிரித்த பாடல்:

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்து அன்று அருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

முக்கிய சொற்கள்:
பண் - இசை ; இன்மொழியாள்-இனிய மொழியை உடையவள் ; உன்மத்தம்- பித்துக்குளித்தனம் ; உரம்-மார்பு ; கண்-கண்கள் ; கருமஞ்ஞை-நீல மயில் ; பொழில் - நீர்ப் பொய்கை,வீழ்ச்சி ; வரி வண்டு - நீர்ச் சோலைகளில் திகழும் ஒரு வகை வண்டு ; முரல் - இசை பாடுவது

கருத்து:
இசையுடன் கூடிய பண்கள் போன்ற பேச்சை உடைய இனிய மொழியினளாகிய தேவி, அச்சப் படத்தக்க வகையில், கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த, பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்து அடக்கிய பின், அவனுக்கே அருள் செய்தவனாகிய சிவபெருமான் இருந்து அருள் பாலிக்கும் கோவிலைக் கொண்டும்; பல கண்கள் நிரம்பிய தோகைகளை உடைய நீல மயில்கள் நடனமாடும் இடமாகவும்;(கடற்கரைக்கு அருகில் இருக்கும் காரணத்தால்) கடல் முழங்கவும், வானளவிற்கு பொங்கிப் பெருகும் பொழிலில், வரி வண்டுகள் இசைபாடவும் திருவெண்காடு விளங்குகின்றது.

டிட்பிட்ஸ்:

  • இந்தப் பாடல் அமைந்த பதிகம் திருவெண்காட்டுப் பதிகம்
  • இப்பதிகத்தை பக்தியோடு ஓதி அம்மையப்பனை வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் தவறாது கிடைக்கும் என்பது நம்பிக்கை
  • பேயடையா பிரிவு எய்தும் என்று ஒரு பாடல் இந்தப் பதிகத்தில் இருக்கிறது.அதில் மகப்பேறும், மற்ற எல்லா செல்வங்களும் தவறாது வாய்க்கும்,சிறிதும் ஐயம் வேண்டாம்' என்று டிக்ளேர் செய்கிறார் சம்பந்தர்.




10 | 365

Thursday, August 9, 2012

158.இனிது வாழ-நாளொரு பாடல்-9


தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.



நூல் : திரிகடுகம்
ஆசிரியர் : நல்லாதனார்
பாடல் எண் : 12

பதம் பிரித்த பாடல்:

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.


முக்கிய சொற்கள்:
தாளாளன்-முயற்சியைக் கொண்டிருப்பவன் ; வேளாளன் - உதவி செய்பவன், பயிர்த்தொழில் புரியும் ஒருவன் ; கோளாளன் - ஒற்றாடல் திறனில் வல்லவன்,பிறரின் காரியங்களை மனதில் கொண்டவன் ; கேள் - நட்பு

கருத்து:
முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் தான் பிறருக்கு கடன்படாது வாழ்பவன்; பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் வந்து காத்திருக்க, தான் மட்டும் தனியே உண்ணாதவன்; ஒற்றாடலில் சிறந்தவன்,பிறரின் காரியங்களை,கருத்துக்களை அறிந்து சொல்பவன், சிறிது கூட மறதிக் குணம் இல்லாதவனாக இருப்பான்; ஆகிய இம்மூன்று இயல்புடையவர்களும் தனக்கு நண்பர்களாக கிடைக்கப்பெற்று வாழும் ஒருவன் இனிமையான வாழ்வைப் பெற்றிருப்பான்.


டிட் பிட்ஸ்:

  • திரிகடுகம் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • திரிகடுகம் என்பது தமிழ்நாட்டில் மக்கள் எளியமுறையில் தயாரித்து,பயன்படுத்தும் ஒரு நல்ல மருந்து.
  • சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படுவது திரிகடுகம்.உடலுக்கு வல்லமையும்,முத்தோஷத்தையும் நீக்கும் வல்லமையும் உடைய மருந்து
  • அதுபோலவே மூன்று ஒத்த அல்லது ஒரே நியதியில் அமைந்த கருத்துக்களைக் கூறி, அதனுடம் தொடர்புடைய அறிவுரை அல்லது வாழ்க்கையைப் பற்றி அறிவுறுத்துவதால்,இந்தூல் திரிகடுகம் என்று பெயர்பெற்றது.
  • ஆசிரியர் ஆதனார், தொல்காப்பியரின் பரிச்சயம் உடையவர் என்பது தொல்காப்பியத்தின் சில எழுத்ததிகாரச் செய்யுள்களில் ஆதனாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. 
  • வேளாளன் என்ற சொல்லுக்கு உதவி செய்பவன் என்ற பொருளும் அகராதியில் கிடைக்கிறது; உலகம் அனைத்திற்கும் தேவையான உணவுப்பொருளை விளைவித்து, அனைவருக்கும் உதவி செய்யும் தொழிலைக் கொண்டிருப்பதால், வேளாளருக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது !
  • நல்ல முயற்சி என்பது கடன்படாது வாழ்வதும்,சிறந்த உதவி என்பது வீட்டுக்கு வந்த விருந்தினரைப் உபசரித்துப் பராமரிப்பதும்,ஒருவர் தனக்குச் சொன்ன செய்திகளை மறவாது சிந்தையில் வைத்திருப்பதே நல்ல சிந்தை என்பதும் கூற வந்த கருத்து.




9  | 365

Wednesday, August 8, 2012

157.காசு நல்குவீர்-நாளொரு பாடல்-8


வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.

இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.

செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.

காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.

பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.

பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.

காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.


நூல் : முதலாம் திருமுறை
ஆசிரியர் : திருஞானசம்பந்தர்
பதிகம் : திருவிழிமிழலைப் பதிகம்(92)
பாடல்கள் : 1-11

முன்னோட்டம்:
ஞானசம்பந்தப்பெருமானும்,திருநாவுக்கரசு சுவாமிகளும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்.நாவுக்கரசர் முதிய பிராயத்தில் 60 வயது அளவில் இருந்தபோது,பிள்ளையாருக்கு பால வயது.
பிள்ளையாரின் அருமை பெருமைகளை உணர்ந்த வாகீசர்,அவரைத் தேடி வந்து அளவளாவி, இருவரும் சில காலம் பல தலங்களுக்குச் சேர்ந்து சென்று வழிபட்டனர்.அக்கால கட்டத்தில் திருவிழிமிழலைப் பகுதியில் இருவரும் தங்கியிருந்த போது ஊரில் பஞ்சம் நிலவியதால்,அடியார்களுக்கு உணவிடும் பொருட்டு,சிவபெருமான் பிள்ளையாருக்கும் வாகீசருக்கும் தினமும் ஒவ்வொரு பொன் படிக்காசு,கோவிலின் கிழக்கு, மேற்கில் அமைந்த விருட்சப் படியில் வழங்குவதாக கனவில் அருளி,தினமும் காசு வழங்கலானார்.
இதில் பிள்ளையாருக்கு வழங்கிய காசு சிறிது மாற்று குறைவாக இருந்ததால்,அவருக்குப் பொற்காசின் மூலம் கிடைத்த பொருள் சிறிது குறைவாகக் கிடைத்தது.
பிள்ளையார் இறைவரிடம் வருந்தி வேண்டி,இந்தப் பதிகம் பாட இருவருக்கும் நல்ல மாற்றில் பொற்காசு கிடைக்கப் பெறலானது.

மாசிலாக் காசு !

பொருள்:

1
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே.

வாசி- உயர்வு தாழ்வு, மாசு- குற்றம், ஏசல்-ஏசுவது,நிந்திப்பது

குற்றமில்லாத மிழலையில் எழுந்தருளியிருக்கும் ஈசரே, நான் கூறுவது பழிப்போ,குற்றமோ,நிந்தனையோ அல்ல;ஆனால் எனக்கு வழங்கும் காசில் உயர்வு,தாழ்வு நீங்குமாறு,குற்றமற்ற காசை கொடுப்பீராக..

2
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.

கறை கொள்- குற்றமுள்ள, முறைமை- ஒழுங்கு செய்தல்

நீரே இறைவராக இருக்கின்றீர்,வேதநெறிகளோடு இருக்கும் மிழலையில் நீரே இறைவராக இருக்கிறீர்..குற்றமுடன் அளிக்கப் படும் காசை,சரி செய்து முறைப்படுத்தி,தூய பொற்காசாக வழங்குவீர்..


3
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.

செய்ய-சிவந்த ; மெய்கொள்- உண்மை நிரம்பிய ; பை - படம் ; அரவு - பாம்பு ; உய்ய- உயர,மேல்நிலையடைய,

படம் எடுத்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு,சிவந்த மேனியைக் கொண்டு,உண்மை நிரம்பிய மக்கள் வாழும் மிழலையின் இறைவரே, நான் உய்யுமாறு குறைவற்ற காசை வழங்குவீர் !


4
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.

நீறு- திருநீறு ; ஏறு- எருது(ஆநேறு); கூறு- கூறப்படும்,புகழப்படும்; பேறு- பெரும் செல்வம், வீடுபேறு என்னும் முக்தி

திருநீறு அணிந்து எருதின் மேலேறித் திகழ்கின்ற, பெரும் புகழ் படைத்த, மிழலையின் இறைவரே, (குறைவற்ற காசை நல்குவதோடு) எனக்கு வீடுபேறையும் அருளிச் செய்வீர்.


5
காமன் வேவ ஓர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.

காமன்- மன்மதன்; தூமம்- புகை; தூமக்கண்- புகையுடைய தீக்கண்ணான நெற்றிக்கண் ; நாமம்-பெயர்,புகழ் ; சேமம்-பாதுகாவல், ஷேமம் என்பதன் திரிபு என்றும் ஒரு பாடபேதம் இருக்கிறது

மன்மதனை எரித்த, தீஞ்சுடரை உடைய நெற்றிக்கண்ணை உடைய, புகழ் பொருந்திய மிழலையின் இறைவரே, (குற்றமற்ற காசை வழங்குவதோடு) எமக்குப் பாதுகாவலும்,அரணும் வழங்கி எம்மைப் பாதுகாத்தருள்க..



6
பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே.

பிணிகொள்- கட்டப்பெற்ற,பிணித்தல் என்றால் கட்டுவது என்பதும் ஒரு பொருள்; மிடறு- தொண்டை, கண்டம் ; அணி- அழகிய ஆபரணம்

கட்டப்பட்ட சடையும், கண்டத்தில் மணியும் கொண்டவரே, அழகிய அணிகலண்களை அணிந்த, மிழலையின் இறைவரே, எம்மை ஆட்கொண்டு, பணி கொண்டு அருளுவீர்..


7
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

பங்கு- பகுதி ; துங்கம்- உயர்வு ; சங்கை - சந்தேகம் ; தவிர்- நீக்கு

அம்மையை ஒரு பாகமாக உடைய, உயர்வுடைய மிழலையின் இறைவரே, கங்கையை முடிமேல் கொண்டிருப்பவரே, எங்களது ஐயத்தைத் தவிர்க்க, (குறைவற்ற காசை வழங்கி அருள்க..)


8
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே.

நெரிதர- அகப்பட்டு நெரிய ; பரக்கும்- எங்கும் புகழ் பரவிய ; கரக்கை- வஞ்சம்

இராவணன் மலைக்கு அடியில் அகப்பட்ட நெரிபடும் போது அவனுக்கு இரக்கம் காண்பித்தீர், எங்கும் புகழ் பரவிய மிழலையின் இறைவரே, எமக்கு வஞ்சம் செய்வதைத் தவிர்த்து (குறைவற்ற காசை நல்குவீர்).


9
அயனும்  மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே.

அயன்-நான்முகன் ; மால்-திருமால் ; முயலும்-முயற்சித்த ; முடி - அடியும்,முடியும்(குறிப்பால் அமைந்த சொல்) ; இயலும்- அனைவருக்கும் இயலும் நிலையில் ; பயன் - பிறவியின் பயனான வீடுபேறு

திருமாலும் நான்முகனும் தேடி அடைய முயன்றாலும் முடியாத அடியையும் முடியையும் கொண்டிருந்தாலும், (உனது அடியவர்களுக்கு) எளிதில் அடையத்தக்க நிலையில், மிழலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரே, எமக்கு பிறவியின் பயனான வீடுபேறை அருளுவீர் !


10
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவது அரியதே.


பறிகொள் - முடியைப் பறித்துக் கொண்ட நிலையில் ; அறிவது- அறிய வேண்டிய ; அறிகிலார் - அறிய மாட்டார் ; வெறி - மணம் ; பிறிவது-பிறவாக இருப்பது, பிரிவது ; அரியது- கடினமானது

தலைமுடியைப் பறித்து கொண்ட நிலையில் தலைகளையுடைய சமணர்கள், அறிய வேண்டிய உண்மைகளை அறிய மாட்டார்; மணம் பொருந்திய மிழலையின் இறைவரே, உம்மைப் பிரிந்து இருப்பது இனி மிகக் கடினமானது.


11
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே.

காழி-சீர்காழி ; வாழி- வாழ்கின்ற வீழி மிழலை- திருவிழீ மழலை; தாழும் - தாழ்ந்து போற்றி

சீர்காழியில் தோன்றி வாழ்ந்த சம்பந்தனான அடியேன், திரு விழீமிழலையில் வீற்றிருக்கும் இறைவரைத் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகள் இவை.




டிட் பிட்ஸ்:

  • திருவீழிமிழலையில் திருமால் சக்கரம் வேண்டி ஈசனைப் பூசிக்கும் போது,ஒரு மலர் குறைந்தால்,தன் கண்ணை மலராக ஈசனுக்கு சமர்ப்பித்ததால், திருவிழிமிழலை என்ற பெயர் பெற்றது.
  • பிள்ளையார் அம்மையின் அருளைப் பெற்றுத் திகழ்ந்ததால், ஈசனுக்கு மகவு போன்ற உரிமையும், திண்மையும்,வலிமையும் உடையப் பெற்றவராக விளங்கினார். அவரது பாடல்களிலும் அந்த உரிமையும், சக்தியும் திகழ்ந்ததாக அறிஞர் போற்றுவர்
  • நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிறந்த மறைமொழிதானே மந்திரம் என்ப என்பது தொல்காப்பிய வாக்கு.இறைவனின் அருள் பெற்ற குற்றமற்ற சொற்களையுடைய மனிதர்களின் வாக்கு, மந்திரத்திற்கு ஒப்பானதாகும் என்பது விளக்கம்.
  • இன்றைய நாளில் வழக்கு மன்றங்கள் அல்லது அரசிடம் ஒரு தனிமனிதர்,தமது உண்மை நிலையை அறிவிக்க நேரும் போது,பிரமாணப் பத்திரம்-affidavit - தாக்கல் செய்வது சட்டப்படி தேவையான ஒன்று.அதில் நான் கூறுவனவற்றை நாமே, உண்மை என்று சான்று அளிக்க வேண்டும்; அவ்வாறு சான்று அளித்தபின், சான்று அளித்தவர் அவரது கூற்றிலிருந்து பின்வாங்க அரசோ, சட்டமோ அனுமதிப்பதில்லை. அது போலவே  பிள்ளையாரின் பதிகங்களில் கடைசிப் பாடலான பதினொராவது பாடல், பதிகத்தின் பலனை உறுதியாக அறிவிக்கும் படியான டிக்ளரேஷன்  பதிகங்களாகவை அமையப் பெற்றிருக்கும். இதனை சம்பந்தப் பெருமானின் அனைத்துப் பதிகங்களிலும் பார்க்கலாம்.
  • இறைவனின் பூரண அன்பும், சொல்லும் வாக்கெல்லாம் மந்திரமாகவும் திகழ முடிந்ததனாலேயே அவரால் அவ்வாறு உறுதி கொடுக்க முடிந்தது என்பதும் முடிந்த முடிவு-டிரைவ்ட் ட்ரூத்.
  • அதனாலேயே பிள்ளையாரின் பதிகங்கள் மந்திரமொழிகள் என்றே அறியப் படும்
  • இந்தப் பதிகத்தை பக்தியும் அன்பும் கொண்டு ஓதி வழிபடுவோருக்கு செல்வச் செழிப்பு ஏற்படுவதோடு, உலக வாழ்வில் சேர்த்த பொருள் அழியாது வளரும் வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.


அருளும் செல்வமும் வளர்க எந்நாளும் !

இந்தப் பதிகம் பாடல் வடிவில். பாடல் அடியேன்..அவ்வப்போது இவ்வித பயங்கரவாத செயல்கள் பதிவில் நடக்கலாம் என்ற எச்சரிக்கையையும் இப்போதே வைக்கிறேன். :)






8 | 365

Tuesday, August 7, 2012

156.கொன்றை வேந்தன்-நாளொரு பாடல்-7






அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லற மல்லது நல்லற மன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஏவா மக்கண் மூவா மருந்து
ஐயம் புகினுஞ் செய்வன செய்
ஒருவனைப் பற்றி யோரகத் திரு
ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்
ஔவியம் பேசுத லாக்கதிற் கழிவு

பாடல்: கொன்றை வேந்தன்(உயிர் வரிசை)
ஆசிரியர்:ஔவை
எண்-1-12 (உயிர் வரிசை)

முன்னோட்டம்:
இந்த வரிகளில் சிலவற்றை அவ்வப்போது எங்காவது நீங்கள் கேட்டிருக்கலாம்;இவற்றில் சில சொற்றொடர்களைப் பொருள் தெரியாமலேயே இன்றைய மேடைப் பேச்சுகளில் பலர் அள்ளி விடுவார்கள்.

இந்தப் ஒரு வரிக் கவிதை வடிவப் பாடல்களை எழுதியவர் ஔவையார்.
நமக்குத் தெரிந்த ஔவைப் பாட்டி... :))

இப்போது பாடல் வரிகளும் பொருளும்:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னை-தாய்,பிதா-தந்தை
ஒருவருக்கு தாயும் தந்தையும்தான் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய,அறிவிக்கப் பட வேண்டிய தெய்வங்கள்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஆலயம்-கோவில், சாலவும்- மிகவும்
கோவிலுக்குச் சென்று தொழுவது மிகவும் நல்லது. இறை சித்தமும்,ஆன்மிகமும் பண்புகளும் வளர்வதோடு, நடைப் பயிற்சியாகவும்,மனிதர்களைச் சந்திப்பதற்காகவும்,சமூக்கதின் அங்கமாக இழைவதனாலும் கூட ஆலயம் தொழுவது மிக நல்லது !

இல்லற மல்லது நல்லற மன்று
இல்லறம்- அறவழியிலான குடும்ப வாழ்வு
அற வழியில் அமைத்துக் கொள்ளப் படும் இல்ல வாழ்வு,திருமண வாழ்வு, அல்லாதது எதுவும் நல்ல அறமாக அறியப் படாது.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் அழகிய குறள் ஒன்றும் இருக்கிறது.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிப்
போஒய்ப் பெறுவது என்

துளசி டீச்சரின் 38 வது திருமண நாளப் பதிவில் கூட இந்தக் குறளை எழுதியே வாழ்த்தினேன். நாவலருக்கு நன்றியுடன் ! [ நெடுஞ்செழியனுக்கு என்று அன்பர்கள் நினைத்து விடாதிருப்பார்களாக :)) ]


ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ஈயார்- கொடுக்காதவர்,ஈகை இல்லாதவர், தேடு|தேட்டை-செல்வத்தை
பிறருக்குக் கொடுக்காமல் சேர்த்து வைக்கும் செல்வமானது சேர்த்து வைத்தவர்களுக்குப் பயனளிக்காமல்,தீயவர்கள் கைக்கே செல்லும்.

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு
உண்டி-உணவு, சுருங்குதல்- குறைத்தல்
உணவைத் தேவையான அளவிற்கு மட்டும் உண்டு,குறைந்த அளவில் உண்பது,பெண்களுக்கு அழகை அதிகரிக்கும்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊருடன்- வாழும் சமூகம்,சுற்றம்   பகை-எதிர்ப்பு
தாம் வாழும் சமூகத்தையும் சுற்றத்தையும் பகைத்துக் கொண்டு வாழ்வது வாழ்வின் அடிப்படையையே கெடுத்து விடும்,

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
எண்- எண்கின் மூலம் கிடைக்கும் கணித அறிவு,எழுத்து- எழுத்துக்களை அறிவதால் கிடைக்கும் மொழி அறிவு
கணித அறிவும் மொழி அறிவும் ஒருவருக்கு இரண்டு கண்கள் போன்றவை. சமூகம்,வரலாறு,அறிவியல் போன்ற துறைகளில் அறிவும் பயிற்சியும் இருந்தால் நல்லது.ஆனால் இன்றியமையாது அவசியம் இருக்க வேண்டியது மொழியறிவும்,கணித அறிவும் ஆகும்.

ஏவா மக்கண் மூவா மருந்து
ஏவா- ஏவுதல் இல்லாத, அறிவுறுத்தல் இல்லாத, மூவா- மூப்பு இல்லாத அமிர்தம் உண்டது போல
தம் பிள்ளைகளுக்கு, இதைச் செய்,அதைச் செய் என்று அறிவுறுத்த வேண்டிய தேவை இல்லாத அளவில் வளரும் பிள்ளைகள் இருப்பது, பெற்றோர்களுக்கு அமிர்தம் உண்டு வாழ்வது போன்ற மருந்தாகும்

ஐயம் புகினுஞ் செய்வன செய்
ஐயம்-பிச்சை
பிச்சை எடுத்து வாழும் நிலை வந்தாலும் செய்யத் தகுந்த காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்;செய்யத் தகாத செயல்களைச் செய்யக் கூடாது.


ஒருவனைப் பற்றி யோரகத் திரு
ஒருவனை-நல்லவனான,அறிவாளியான,திறமைசாலியான ஒருவன், பற்றி- துணையாகக் கொண்டு, ஓரகத்து- ஓரிடத்தில்

அறிவும் திறமையும் முதிர்ச்சியும் கொண்ட ஒருவனைத் துணையாகக் கொண்டு ஒரு இடத்தில் வசிக்க வேண்டும்.


ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்
ஓதலின்- படிப்பதும்,வேதம் ஓதுவதும், அன்றே- காட்டிலும், வேதியர்- அந்தணர்,வேதங்களின் வழி நிற்பவர்

அந்தணர்கள்,வேதத்தின் வழி நிற்பவர்கள் என்று அறியப்பட்டவர்கள் வேதங்களைப் படித்து அறிதலினும் முக்கியமானது, ஒழுக்கமான வழியில் வாழ்வது.
படிப்பதை விடப் பயிற்சி செய் என்ற சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். Better pratice than preaching !


ஔவியம் பேசுத லாக்கதிற் கழிவு
ஔவியன்-பொறாமை பேசுதல், ஆக்கம்- உயர்வு, செல்வம், முன்னேற்றம்

மற்றவர்களைப் பற்றிப் பொறாமை பேசும் குணமானது, பேசுபவர்களின் செல்வம்,முன்னேற்றம்,உயர்வு ஆகியவற்றை அழித்து விடும்.

முருகப் பெருமான் வித் ஔவை..


டிட் பிட்ஸ்:
  • ஒரு காலகட்டத்தில் வாழும் கற்றறிருந்தவர் அனைவரிலும் சிலர் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள்.அத்தகைய சிறந்தவர்களுக்கு ஒரு பொதுவான குணம் உண்டு.அது அவர்கள் காலத்திய,இனி வரப்போகும் காலத்தில குழந்தைகளைப் பற்றிய அக்கறை.

  • அக்குழந்தைகள் நல்ல அறிவை,நல்ல பழக்க வழக்கங்களை,நல்ல அறிவுரைகளை,நல்ல குணங்களைப் பெற்று,வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஓயாத அக்கறை அவர்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

  • தன்னுடைய அடுத்த தலைமுறையை,அவர்கள் வாழும் சமூகத்திற்கான ஒரு சிறந்த பரிசாகத் திகழும் அளவில் தயாரித்து விட்டு விட்டுச் செல்பவர்கள்தான் எப்போதும் உலகத்தை,வாழ்க்கையை மேன்மைப் படுத்தியிருக்கிறார்கள்.

  • அந்த வகையில் குழந்தைகளின் குண நலன்களை மனதில் வைத்து அவர்களுக்கான அறிவுரை வடிவமாகப் பல அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார்.இவற்றில் சில எங்களுக்கு சிறுவயதில் இரண்டு,மூன்றாம் வகுப்புகளில் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இருந்தன.பாடத்திட்டத்தில் இல்லாதவை சிலவற்றையும் அம்மா,முதலில் அடித்தும் படிக்கவும்,பின்னர் பிடித்ததால் படிக்கவும் வைத்தார்.

  • நான் மனிதனாகப் பிறப்பெடுத்தது முதற்காரணம் முதல்,பலப்பல காரணங்களுக்காக நன்றியுடன் தொழுது வழுத்த வேண்டிய அம்மாவுக்கு, இந்தக் கொன்றை வேந்தனைச் சிறுவயதிலேயே படிக்க வைத்ததற்காகவும் கூடுதலாக கடப்பாடு சேர்ந்திருக்கிறது.

  • இந்தக் கடப்பாடுகளைத் தீர்க்க எத்தனை பிறப்புகள் வேண்டும் என்று தெரியவில்லை!!!
  • குழந்தைகள் படிப்பதற்கு அவர்களுக்கும் ,குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு பெரியவர்களுக்கும் பயன்படலாம் என்பதால் கொன்றை வேந்தனையும் இப்பகுதியில் இணைத்திருக்கிறேன்.


7 | 365

Monday, August 6, 2012

155.உயிர் வளர்த்தேனே-நாளொரு பாடல்-6





உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.


நூல் : திருமுறை(பத்தாம் திருமுறை-திருமந்திரம்)
ஆசிரியர் : திருமூலர்
பதிகம் : மூன்றாம் தந்திரம்( காரிய சித்தி)
பாடல் எண்-13

பதம் பிரித்த பாடல்:

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

முன்கதைச் சுருக்கம்:

திருமந்திரம் திருமுறைகளின் தொகுப்பில் பத்தாம் திருமுறையாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.
திருமுறைகளின் மற்றைய ஆசிரியர்களின் காலம் நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகே வருகிறது.ஆனால் திருமந்திரம் திருக்குறளின் காலத்திற்கு முந்தையதாகவே இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

காரணம் திருமந்திரக் கருத்துக்களில் இருக்கும் ஆழமும், திருமூலர் ஒரு சித்தராகவும் அறியப்படுவதால். திருமூலர் நரை,மூப்பு,திரை( தலை நரைத்தல்,உடம்பு மூப்படைதல்,கண் பார்வையிர் திரை விழுந்து பார்வை குறைதல்) ஆகியவை இல்லாமல் பல நூற்றாண்டுகள் வாழ்ந்ததாகவும், ஆண்டுக்கொரு பாடலாக 3000 பாடல்கள் இயற்றியதாகவும் ஒரு கூற்று உண்டு.

இன்றைய கருத்தில் இவற்றை மறுதளிப்பார்கள் இருப்பினும்,திருமூலர் பல பாடல்களில் காலத்தை வென்று வாழும் முறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.இது அவ்வகைப் பாடல்களில் ஒன்று.

பொருள்:
உடம்பு அழியும் போது,அந்த உடம்பைப் பற்றி நின்ற உயிரும் இறந்து அழிந்து செயலின்றி நிற்கிறது.
எனவே உடம்பு அழியும் போது,உயிர் இயங்கி அடைய வேண்டிய குறிக்கோள்களான தவமாகிய துணையைப் பெறுதல்,மற்றும் இறையுணர்வை அடைதல் ஆகியவை இயலாத காரியமாகி விடுகின்றன.
எனவே நான் உடம்பு அழியாது நிலைபெற்று நிற்பதற்கான வழிகளை அறிந்து,உடலை வளர்ந்து அழியாது நிலைபெறச் செய்வதன் மூலம்,உயிர் அல்லது ஆன்மாவினை வளர்த்து நிலைபெறச் செய்து,ஆன்மாவின் குறிக்கோள்களை அடைய எத்தனிக்கிறேன்.

டிட் பிட்ஸ்:

  • ஒரு மனிதன் முதலில் அடையாளப் படுத்தப் படுவது அவனது தோற்றம் மற்றும் உடம்பால்.பின்னர் அவரது குணநலன்கள்,அறிவு,திறமை போன்றவை அந்த நபரின் இயல்பு,குணநலன்களாக அறியப்படுகின்றன.
  • அந்த மனிதரின் உடம்பு அழியும் போது,அந்த நபர் இறந்ததாக|அழிந்ததாக அறியப்படுகிறார்.
  • அவரின் அறிவு,திறமை,குண இயல்புகள் அந்த நபரது உடம்பில் இயங்கிய உயிர் அல்லது ஆன்மாவுடன் இணைகிறது.இவற்றில் கல்வி மட்டுமே ஏழு பிறப்புகளுக்கு அந்த ஆன்மாவுடன் பயணம் செய்கிறது என்கிறது தத்துவ நூல்கள்.
  • மற்ற அனைத்து குண நலன்களும் உடம்பு அழியும் போது,அந்த உடம்புடன் சேர்ந்து அழிகின்றன.
  • உடம்பு அழியும் போது ஆன்மாவின் இலக்கான மெய்ஞானத்தை அடையும் குறிக்கோள்-task- தடைபடுகிறது.அவ்வாறு தடைபெறாமல்-திடம்பட என்று கூறுகிறார்-உறுதியாக ஆன்மா அதன் இலக்கில் நிலைத்திருக்க,உடம்பு நிலைத்திருத்தல் அவசியம்.
  • உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் என்பதன் மூலம்,உடம்பை அழியாது நிலைநிறுத்தும் உபாயத்தை,தந்திரத்தை அறிந்து விட்டதாகவும்,அதை செயல்படுத்தி விட்டதாகவும் திருமூலரே கூறுகிறார்.
  • உடம்பை வளர்த்தேன்-உயிர் வளர்த்தேன் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஒரு candid statement ஆக, உறுதியாக,ஒப்புக் கொள்கிறார் திருமூலர்




6 | 365

Sunday, August 5, 2012

154.கல்வியா,காமமா-நாளொரு பாடல்-5



தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்
முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்
பின் பயக்கும் பீழை பெரிது


நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல் எண்: 3

முக்கிய சொற்கள்:
தொடங்கும் கால- தொடங்கும் பொழுது
மடம்-அறியாமை
நெடுங்காமம்- நெடிது காமத்தில் திளைத்திருத்தல்
பீழை-துன்பம்
முற்றிழாய் - முடிந்த தொழில்களையுடைய நகைகளை அணிந்திருக்கும் பெண்(அழைப்பு விகுதி)

பாடல் பொருள் :
நகைகளை அணிந்த, வினைகளை முடித்திருக்கும் பெண்ணே, கல்வியானது கற்கத் தொடங்கும் போது துன்பமாக இருப்பது போல் தோன்றினும் பின்பு இன்பம் கொடுக்கும்;அதுவல்லாமலும் அறியாமையை அகற்றி அறிவைக் கொடுக்கும்; ஆனால் காமம் தொடக்கத்தில் தரக் கூடிய சிறிதளவே நிலவும் இன்பத்தைக் கொடுப்பினும்,இன்ப நுகர்ச்சிக்குப் பின்னால் தரக் கூடிய துன்பம் மிகப்  பெரிது.

டிட் பிட்ஸ்:

  • கல்வி கற்காது,காதல்,காமம் என்று பொழுதைப் போக்கும் வழக்கம் எக்காலத்திலும் இருந்திருப்பதை இப்பாடல் சொல்கிறது. :)
  • காமத்திலும் காதலிலும் இன்புற்று கல்வியை மறப்பவர்களுக்கு,காமத்தை எடுத்துக் காட்டி கல்வியை வலியுறுத்தும் விதமாக உள்ள பாடல்.
  • கல்வி கல்லாது,திருமணத்தை நாடும் பெண் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது இந்தப் பாடலின் விளிப்பு.
  • அறியாமை(மடம்) நீங்கவே அதுனுள்ளிருந்து அறிவு வெளிப்பட்டு ஒளிவீசும் என்ற குறிப்பையும் தருகிறது.




5  |  365

Saturday, August 4, 2012

153.நன்றி - நாளொரு பாடல்-4


சுட்ட பழம்...

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்

நூல்:மூதுரை
ஆசிரியர்:ஔவையார்
பாடல் எண்:1

பதம் பிரித்த பாடல்:
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கொல் என வேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்



முக்கிய சொற்கள்:
நன்றி-உதவி,நன்றி
செய்தக்கால்- செய்வதால்,செய்யும் பொழுது
தருங்கொல்-திரும்பக் கிடைப்பது,தருவது
தளரா-சோர்வில்லாது
தெங்கு-தென்னை
தாள்-அடி
கே.பி.எஸ்...ஔவையாக


கருத்து:
ஒருவருக்கு ஒரு உதவி செய்யும் போது,அந்த உதவிக்குக் கைம்மாறாக,பதிலாக,உதவி பெறுபவர் எப்போது திரும்ப உதவி செய்வார் என்ற எண்ணத்திலேயே,சந்தேகத்திலேயே நாம் அந்த உதவியை அவருக்குச் செய்யக் கூடாது; எப்போதும் நின்று,சோர்வில்லாது வளரும் தென்னை மரமானது,தன் வேர்களின் மூலம் தான் எடுத்துக் கொண்டு வளர்ந்த நீரை,தன்னுடைய தலை வழியாக இனிமையான இளநீராக தான் தருவதைப் போல,உதவி செய்ய வேண்டும்.

டிட் பிட்ஸ்:
தென்னை தளராது பிறருக்கு பயனாய் தன்னுடைய இருப்பை அமைத்துக் கொள்வதைப் போல,நாமும் பிறருக்கு உதவிகரமாய் வாழ வேண்டும் என்பது குறிப்பால் சொல்லும் பொருள்.

ஒருவற்கு என்ற சொல்,நற்குணமுடைய ஒருவருக்கு என்ற குறிப்பையும் தருகிறது;நற்குணம் என்பது பெற்ற உதவியை மறக்காதிருப்பதும்,செய்தவருக்கு உதவி தேவைப்படும் காலத்தில்,அவர் கேட்காத நிலையிலும் தானே முன்வந்து அவர்களுக்கு உதவி செய்வது என்பதும் குறிப்பால் விளக்கப்படுகிறது.




4  |   365

Friday, August 3, 2012

152.ஆள்வினை - நாளொரு பாடல்-3



காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம்
சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும்

நூல்: நீதி நெறி விளக்கம்
ஆசிரியர்:குமரகுருபரர்
பாடல் எண்:52


பதம் பிரித்த பாடல்:
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின்
மூலம் அறிந்து விளைவு அறிந்து- மேலும் தாம்
சூழ்வன சூழாது துணைமை வலி தெரிந்து
ஆள்வினை ஆளப்படும்


முக்கிய சொற்கள்:
மூலம்- வேர்,காரணம்,நோக்கம்
வலி-வலிமை,திறமை
ஆள்வினை-முயற்சி
ஆளப்படும்-செய்யப்படும்


கருத்துரை:
நாம் ஒரு காரியத்தை முயற்சிக்கையில்,அக் காரியத்தின் நோக்கம் மற்றும் பயன் ஆகிய இரண்டையும் ஆராய்து,அக் காரியத்தை முடிக்க ஏதுவான நேரம் எது என்று ஆராய்ந்து, அதனை செய்து முடிக்க வல்ல இடம் எது என்பதையும் ஆய்ந்து தேர்ந்து, அவ்வினையைச் செய்வதற்கான துணையாக வருபவர்களின் திறமையும் வலிமையையும் ஆராய்ந்து, அக்காரியம் செய்ய முயற்சிக்கையில் நிகழக் கூடிய சுற்றுப் புற சூழலையும்,மக்களையும் ஆராய்ந்து, பிறகு முயற்சி  செய்தால்,அந்த முயற்சியானது தடைகளின்றி நிறைவேறும்.


டிட் பிட்ஸ்:
பொதுவாக விணை செய்யும் முறைக்கு இந்தப் பாடல் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப் பட்டாலும், போர் செய்யும் சூழலில் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய விதயங்களைக் குறிப்பிடும் பாடல் இது.

காலம் அறிந்து என்ற பொருள்,தனக்கு உகந்த காலம் என்பதோடு,அவ்வினையை எவரிடம் அல்லது எவரை வைத்து முடிக்கப் போகிறோமோ அவருடைய சூழல் என்ன என்பதையும் ஆராய வேண்டும்.

இடம்-வினை முடிக்க வேண்டிய இடத்தை முடிவு செய்வது இரண்டாவதாக முக்கியமான செயல்.

சூழ்வன சூழாது- நமது வினைக்கு ஊறு விளைவுக்கும் காரணிகள் ஏதும் சூழ நேருமா என்பதை ஆராய வேண்டுவதும் இன்றியமையாதது.

துணைமை வலி- தமது துணைவர்கள் மற்றும் தனது எதிரில் நிற்பவர்களின் வலிமையும் எடை போட்டுப் பார்க்க வேண்டிய தேவையை வலியுறுத்துவது.

மூலம்- அவ்வினை செய்வதற்குரிய நோக்கம் சரியானதா என்பதை ஆராய வேண்டும் என்ற கருத்து

ஆகிய அனைத்தையும் ஒரு வினை செய்யப் புகுமுன் ஆராய வேண்டும் என்பது விளக்கம்.


3 | 365

Thursday, August 2, 2012

151.சாலத் தலை - நாளொரு பாடல்-2




தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆய பொழுதாற்றும் ஆற்றலும்-காயவிடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையு மிம்மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை.





நூல்: அறநெறிச்சாரம்
பாடல் எண்:107
ஆசிரியர்:முனைப்பாடியார்

பதம் பிரித்த பாடல் :
தூயவாய்ச் சொல் ஆடல் வன்மையும்,துன்பங்கள்
ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும்-காய இடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்மையும் இம் மூன்றும்
சாற்றும் கால் சாலத் தலை.

முக்கிய சொற்கள்:
வன்மை - குணம்
வண்மை என்றும் சில நூல்களில் காணப்படுகிறது. வண்மை-திறம்
ஆய பொழுது- வரும் பொழுது
ஆற்றும் ஆற்றல்- தளர்வடையாமல் செயல் படும் திறம்
காய- வெறுப்பு
வேற்றுமை- பகை,வெறுப்பு,வேறுபாடு
சாற்றும்-கூறும் பொழுது

கருத்து:
நல்ல கருத்துக்களை,குற்றமில்லாமல் சொல்லும் திறமும்,வாக்கு வன்மையும்; துன்பங்கள் நேரும் போது தளர்வடைந்து மயங்கி நிற்காமல்,ஊக்கமுடன் செயலாற்றும் திறமும்;தம் மீது வெறுப்பும்,பகையும் கொண்டு வருபவர்களிடமும் வேறுபாடோ,வெறுப்போ,கோபமோ இல்லாத நிலையும்; ஆன இவை மூன்றும்,சொல்வதெனில்,மிக உயர்ந்த குணங்களாகும்.

டிட் பிட்ஸ்:
நல்ல கருத்துக்களை அறிதல் மட்டும் அறிவன்று;அவற்றைத் திறம்பட குற்றமில்லாமல் எடுத்துச் சொல்லும் ஆற்றலும் வேண்டும்.அதுவே அறிவின் விளைவு.

நீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம்- என்பது தமிழ்க் கூற்று. அக்காலத்தில் ஓலையில் எழுயிருக்கப் படும் ஒரு பத்தியை அல்லது செய்யுளை,இக்காலத்தில் புத்தகத்தை வாசிப்பது போல எளிதில் வாசித்து விட முடியாது.ஓலைகளில் எழுதிய எழுத்துக்களில் சில காலம் ஒற்றெழுத்துக்கள் தனியாகக் புள்ளி வைத்து எழுதாத காலமும் உண்டு. அப்போது எழுதி இருக்கும் கருத்தை சந்தேகமின்றிப் புரிந்து கொள்ள, நல்ல மொழி அறிவும்,கருத்துத் தெளிவும் அவசியம்.

அவ்வளவு தெளிவு கொண்டவர்கள் எந்த ஓலையில் எழுதியிருக்கும் பாடலையும் தெளிவாக,அப்பாடல் என்ன சொல்கிறது என்ற கருத்தை,பிழையில்லாமல் வாசித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.

இதை கருத்தில் கொண்டே, அப்படி வாசிக்கத் தெரியாதவர்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள் என்ற சொல்லாடல் எழுந்தது.(இந்த வரிகள் ஔவைப் பாட்டியின் பாடலில் இருந்து வந்தது என்று நினைவு)

சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' என்பது குறள் வாக்கு. துன்பங்கள் வரும் போது தளர்வடையாமல் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தையே அந்தக் குறளும் குறிப்பிடுகிறது.(பெருக்கத்து வேண்டும் பணிதல்..)


2 | 365

Wednesday, August 1, 2012

150.அகரம் - நாளொரு பாடல்-1

ஒரு அவசிய முன்னுரையும்,எச்சரிக்கையும்(!?) :
இந்தப் பதிவுத் தொடரை என்னுடைய இன்னொரு வலைமனையான மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற பக்கத்தில் எழுதுவேன் என்றே முதலில் அறிவித்திருந்தேன்.
ஆனால் அதில் சில தொழில்நுட்பப் பிரச்னைகளால் திரட்டிகளில் இணைப்பதில் சங்கடங்கள் தோன்றின.
எனவே எனது முக்கிய வலைப் பக்கமான சங்கப்பலகையிலேயே தினமொரு பாடல் வெளிவருகிறது.
ரசிப்பதோ,தவிர்ப்பதோ உங்கள் கைகளில் ! 
:))
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
_________________________________________________________________________________







அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.  - திருக்குறள் 1-1

நூல்: திருக்குறள்
அதிகாரம்-கடவுள் வாழ்த்து
பாடல் எண்-1

சொற் பொருள்:
அகரம்- தமிழ் மொழியின் எழுத்துக்களின் முதல் எழுத்தான 'அ'
ஆதி பகவன்-முழுமுதற் கடவுள்

பொருள்: 
எழுத்துகளுக்கெல்லாம் அ'கரம் எவ்வாறு முதலாக விளங்குகிறதோ,அது போல இந்த உலகம் கடவுளை முதலாகவும் அடிப்படையாகவும் கொண்டிருக்கிறது.

டிட் பிட்ஸ்:
தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்று.சொல்லப்போனால் உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே என்பதற்கான புறச்சான்றுகளையும்,விவாதச் சான்றுகளையும் எளிதாகக் காண இயலும். இது பற்றி விளக்கமாக கந்தையா,பாவாணர்,மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் பலர் பல நூல்களில் விளக்கி எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் மொழியின் மொழி அமைப்புக் கட்டு வியக்க வைப்பது.
தமிழின் இன்றைக்குக் கிடைத்த முதல் நூலாகக் கருதப் படும் தொல்காப்பியமே ஒரு மொழிக்கான இலக்கண நூல்.

எழுத்து,சொல்,பொருள் என மொழியின் அடிப்படைகளுக்கான விதிகளை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கும் ஒரு நூல்,இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் காலத்தால் மிக முந்தைய நூல்.

அத்தகைய எழுத்துக்களுள் முதன்மையான, உயிர் எழுத்துக்களில்,இன்னும் முதன்மையாக,முதல் எழுத்தாக வருவது அ' என்ன அகரம்.

அகரம் என்ற சொல்லே வியந்து பார்த்து ஆய்வுக்குட்படுத்த வேண்டியது. மெதுவாக இச்சொல்லை எழுத்து எழுத்தாக உச்சரித்துப் பார்த்தால்,சில ஆழ்ந்த பொருள் உங்களுக்கு விளங்கும்.

மனிதன் ஓசை எழுப்பும் விதம் வாய்,நாக்கு,தொண்டையில் உள்ள குரல்நாண் போன்ற உடற்கருகவிகளின் மூலமே.இதில் அ என்ற எழுத்து, மிகுந்த முயற்சியன்றி, தொண்டைக்கு அருகில்,குரல்நாணில் இருந்து எழுப்பப் படும் சப்தம்;அடுத்ததாக உள்ள க' மூக்கின் அடிப்பாகமான உள்நாக்குக் கருகில் உள்ள இடத்திலிருந்த எழுப்பப் படும் சப்தக் குறியுடன் விளங்குவது.அ என்ற எழுத்தை  நோக்க இன்னும் சிறிது அதிக முயற்சி தேவைப் படும் உச்சரிப்பு,க' எழுத்துக்கு வேண்டும். அடுத்த எழுத்தான ர' வாய்க்குள் இன்னும் சிறிது முன்வந்து,நாக்கின் மேலண்ணத்தில் மேல் பற்கள் வரிசைக்கு சிறிது மேல் புறத்திலிருந்து எழும் ஓசைக்குரியது.க'வை உச்சரிப்பதை விட இன்னும் சிறிது முயற்சி ர'வை உச்சரிப்பதற்கு வேண்டும். கடைசி எழுத்தான ம்' வாயின் வெளிப்புறமான உதடுகள் மூடிய நிலையில் வெளிப்படும் ஓசை.

ஒரு மொழியின் எழுத்துகளின் வரிசையைப் பொதுவாகக் குறிக்கும் அகரம் என்ற சொல்லின் உச்சரிப்பிலேயே, தொண்டையின் குரல் நாண்,உள்நாக்கு,மேலண்ணம், நுனி நாக்கு மற்றும் உதடுகள் என ஓசை எழுப்பும் கருவிகள் அனைத்தும் சிறிது சிறிதாக, ஒத்திசைந்து எழுப்பப்படும் ஓசைகளைக் கொண்டதாக அமைந்திருப்பது எவ்வளவு விந்தை?!

இன்னும் அகரம் என்ற சொல்லின் எழுத்துக்களான
அ-உயிர் எழுத்து
க-மெய்-வல்லினம்
ர-மெய்-இடையினம்
ம்-மெய்-மெல்லினம்

என்றும் அழகாக எழுத்துகளின் வகைப்படுத்தல்களில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு எழுத்தைச் சேர்த்துக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சொல் அகரம்.

இவ்வளவு நுணுகிய அமைப்புச் சிறப்புடன் கூடிய மொழி உலகில் எங்காவது உண்டா??

இது போன்ற பல ஆய்வு விளக்கங்கள், தமிழே, பேசத் தெரிந்த மனிதன் ஆக்கிய உலகின் முதல் மொழி, என்று நிறுவப் போதுமானவையும் துணையானவையும் ஆகும்.

1 | 365

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...