குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)

Monday, September 13, 2010

123.குறுந்'தொகைகள்-13092010

தலையும் வாலும் ஒன்றா?
இன்றைய தினமணியின் தலையங்கத்தில் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.காஷ்மீரில் மாநில அரசு கலைக்கப்பட்டு மாநிலம் இராணுவத்தின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு மாநிலத்தின் வன்முறை நிகழ்த்தும் சக்திகள் துடைத்தெடுக்கப்படவேண்டும் என்பதுதான் அது.காட்டுத்தனமான கருத்தாகத் தோன்றும் இது விவாதமேடைக்கு உரியது.

ஆனால் என்னை யோசிக்கவும் விசனிக்கவும் வைத்த வரிகள் இரண்டு இந்தத் தலையங்கத்தில் இருந்தன.

தமிழர்களின் நியாயமான கோரிக்கையை மறுத்து ராசபட்சயவுக்கு ஈழத்தமிழர்களைக் கொன்றழிப்பதற்கு உறுதுணையாக முன்நின்ற இந்திய நடுவன் அரசு ஏன் அநியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் காஷ்மீரில் இருக்கும் பாக் தீவிரவாதிகளைக் கொன்றழிக்க ராணுவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தக் கூடாது என்று எழுப்பியிருக்கும் கேள்வி.

இந்த லட்சணத்தில் காஷ்மீரில் இருந்த 7 மாவட்டங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற ஃபரூக் அப்துல்லாவின் கோரிக்கையை மன்மோகனும்,ப.சிதம்பரமும் ஆதரித்து விட்டதாகவும் பிரணாப்பும் அந்தோனியும் தீவிரமாக எதிர்ப்பதாலும்தான் ராணுவம் இன்னும் காஷ்மீரில் இருக்கிறது என்ற செய்தியும் வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு தீவிரவாதிகளையும் மதவியலாளர்களையும் சரியாகத் தரம் பிரிப்பதில் காமைலைக் கண் சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தத் தலையங்கத்திற்கு வந்திருக்கும் சில கருத்துக்களில் மோடியை காஷ்மீரின் முதல்வராக நியமிக்கலாம் என்று வந்திருக்கும் அதிரடிக் கருத்தும் இருக்கிறது.

பரீட்சித்துப் பார்க்கலாமோ?!

()

உயர்சாதீயம்பிராமனீயம்

பதிவர் டோண்டு ராகவனின் இந்தப் பதிவில் எழுப்பியிருக்கும் அறிவார்ந்த கருத்துக்களை ஒட்டி சில கேள்விகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

அவர் கடையைக் கலகலப்பாக வைத்திருக்க அவ்வப்போது இவ்வித சாதீயபிராம்மணத் துவேஷம் பற்றிய பதிவுகள் எழுதுவது வழமை என்ற பரவலான கருத்தும் பதிவுலகில் இருப்பது ஒரு புறமிருக்க,எழுப்பியிருக்கும் கேள்விகளில் சில சாரமான கேள்விகள் இருக்கின்றன.

பஞ்சகச்சம் எனப்படும் ஆடையும் விபூதியோ அல்லது நாமதாரியாகவோ இருந்தால் வடமாநிலங்களில் பண்டிட்ஜி ஆயியே என்று மதிப்பார்கள் என்றும் சொல்லப்போனால் தமிழகத்தில் மட்டும்தான் முறையற்ற பிராமணர்களின் மீதான நிந்தனை இருக்கிறது என்பதும் ராகவனே குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள்.மேலும் இவற்றிற்கான காரணிகளாக பெரியார் மற்றும் திராவிட அரசியல் கட்சிகள் 40 ஆண்டுகளாக ஊதி வளர்த்த நிந்தனை நெருப்புமே காரணம் என்ற கருத்தும் வந்திருக்கிறது.

எனக்கு அவ்விதம் தோன்றவில்லை.

சாதியக் காரணங்களை முன்னிறுத்தி தன்னை மற்றவரிடமிருந்து உயர்ந்தவர்கள் என்று ஒரு சாரார் சொல்லும் போது அவர்களை அவர்களின் உண்மையான திறன் மற்றும் தகுதிகளுக்காக மட்டுமே மதிக்க முடியும்,பிறந்த சாதிக்காக அல்ல என்று மாமன்னன் இராசராசன் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருந்த சமூகச் சீர்திருந்தங்களுக்கு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

மேலும் 2000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் போதும் ஆரிய வடவர்களுக்கும் தென்னகத் தமிழர்களுக்கும் மூண்ட யுத்தம் பற்றியும் ஒருவர் மற்றொருவர் ஆதிக்க இடங்களுக்கு உரிமை கொண்டாடக் கூடாது என்று ஏற்பட்ட உடன்படிக்கை பற்றியும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளுக்குள் பிராமணர்களின் மீதான குறிவைத்த நிந்தனை பெரியார் மற்றும் திராவிடக் கட்சிகள் ஏற்படுத்தியதாக இருக்கலாம்;நமக்கு நினைவு மிகவும் மட்டு,வரலாற்றில் சமீபத்திய நிகழ்வுகள் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வரும்; எனவே பொதுப்புத்தியில் அந்த நிந்தனை உறைந்து போயிருக்கிறது.

மற்றபடி அவர் நுண்ணறிவியல் தொழில்கல்விக்குச் சேரும் போதே பிராமணர் என்பதை பெருமையுடன் ஒத்துக் கொண்டதாகச் சொல்லும் அதேநேரம், தான் சாதீயக் காரணத்திற்காக பெருமைப்படுபவன் அல்ல என்றும் சொதப்பலாக பதில் அளித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் வந்த லாவண்யா என்னும் பெண் உளறிக் கொட்டியதுதான் நினைவில் வருகிறது.

மற்றபடி பார்ப்பனீயம்உயர்சாதீயம் பற்றிய அவரது கருத்தை மாறிவிட்ட இன்றைய சமூக சூழலில் நோக்கும் போது நான் முழுமனதுடன் ஏற்கிறேன்.

மொத்தமாக எல்லா ஈயங்களும் தொலைந்து போகும் போதே சமூக அமைதி நிலவும். அல்லது எல்லா ஈயங்களும் வன்மை பெறும் போதும் கூட அமைதி நிலவலாம்...இப்போது இலங்கையில் நிலவும் 'அமைதி' போல...

()
வலையுலகம்-வரமா,சாபமா?

பதிவர்கள்-நர்சிம்,கேபிள் சங்கர்,அப்துல்லா,வேறு சிலரும் இருக்கலாம்,நினைவில்லை- கலந்து கொண்ட நீயா நானா நேற்றுத்தான் சிங்கையில் ஒளிபரப்பப்பட்டது.
-சாபம் என்று பேசிய ஒருவர் முன்வைத்த,'அதிகம் தேடப்பட்ட சொல் காமம்தான்' என்ற வாதம் எளிதில் செல்லுபடியானது,அதில் உண்மையிருந்ததால்!
-இதிலும் ஒரு பிராமணப் பெண் அவா,இவா என்ற பாஷாதி விதயங்களுடன் உளறிக் கொண்டிருந்தார்,கடைசியில் அவரது தாயும் கோபியும் மடக்கிய கேள்வியில் பரிதாபமாகத் தோன்றினார்.
-அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சுருக்கமான முடிவு;தேவைக்கு தேவையான அளவில் உபயோகிப்பது உபத்திரவம் இல்லாதது.
-நர்சிம் அவ்வப்போது-அல்லது எப்போதும்(!)-கால் மேல் கால் போட்டு நெளிந்தபடி அமர்ந்திருந்தார்,ஒரு வேளை இருக்கையின் மத்தியில் ஆணி இருந்ததோ? (நண்பரே,சும்மா கலாய்ப்பு..no peelings of india)
-இணையம் ஒரு வரம் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை எனது கருத்தாகவும் பதிவு செய்கிறேன்;பங்கு வர்த்தகம்,நிதிச் சந்தைகளில்(ஒரு நாளின் வணிகம் 3 ட்ரில்லியன் டாலர்கள்,அதாவது 1000 பில்லியன்,அதாவது பத்து லட்சம் மில்லியன்,அதாவது...போங்கப்பா,மயக்கம் வருது.. ) ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான சில்லரை வணிகம் போன்ற வாய்ப்புகளுக்கும்,டோண்டு ராகவன்பாடகி சின்மயி போன்றவர்கள் மொழிபெயர்ப்பு போன்ற துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருப்பதற்கும் இணையமே மூலம் என்பதை மறுக்கவியலாது.
-சுஜாதா இளமை பற்றி ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார் 'இளமை என்பது ஒளிக்கீற்று போலத் தோன்றி மறையும் அற்புதங்களில் ஒன்று,இதை காதலிக்காகக் காத்திருத்தல்கள் போன்ற அநாவசியமான விதயங்களில் விரயம் செய்ய வேண்டாம்' என்று. அதே போலவே இணையமும்..ஃபேஸ்புக்,மின்னரட்டை போன்ற நேரக் கொல்லிகளின் வழி இணையத்தையும் நேரத்தையும் வீண்டிப்பவர்கள் பாவத்திற்குரியவர்கள்..வேண்டாத பதிவுகளை எழுதி நிரப்பும் நம்மைப் போன்ற பதிவர்களும் இதில் அடங்குவார்களா என்று எவரும் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

Tuesday, September 7, 2010

122.இரு தேசங்களும்,அவற்றின் மொழிக் கொள்கையும்..

சில நாட்களுக்கு முன்னர் வந்த செய்திகளின் படி,தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்திருக்கிறது.
தமிழகத்தில் தங்கம் தென்னரசு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே மிகவும் பாராட்டத் தக்க வகையில் செயல் பட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அடைய வேண்டிய விதயம்.
-அரசுப்பள்ளிகளை முறைப்படுத்தியது-அரசுப்பாடநூல்களை இணையத்தில் அமைத்தது-ஆசிரியர் நியமணங்களில் கூடிய அளவு நேர்மையாகச் செயல்பட்டது-பல நிர்வாக அளவு சீர்திருத்தங்கள்-சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தின் துவக்கம்-தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை முறைப்படுத்துவதற்கான சட்டம்
போன்ற பல விதயங்களில் அருமையாகச் செயல்படும் அவரை பேசாமல் உயர்கல்வித்துறைக்கும் அமைச்சராக அதிகப் பொறுப்புகள் கொடுத்துப் பதவி உயர்வு அளிக்கலாம் தமிழக முதல்வர் திரு.கருணாநிதி.ராசா,பாலு,பூங்கோதை,பிகேபி ராசா போன்ற பல திமுக வைச் சேர்ந்த மத்திய மாநில அமைச்சர்கள் தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபடும் போது சரியான காரணங்களுக்காகக் கூட தங்கம் தென்னரசு செய்திகளில் வர மாட்டேனென்கிறார்.திரு.கருணாநிதி அமைச்சரவையில் வெகு காலத்திற்குப் பிறகு ஒரு திறனாளர் தென்பட்டிருக்கிறார்,வாழ்த்தி மகிழ்வோம்.
()
சமச்சீர் கல்வித்திட்டத்தை எதிர்த்தும் சில தனியார் பள்ளிகள் உச்சநீதி மன்றம் சென்றிருக்கின்றன.இந்த நேரத்தில் சிங்கையில் சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.சிங்கையில் இருக்கும் பள்ளிகளில் சீனமொழிக்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும்படி பாடத்திட்டங்கள் மாறும் என்ற பொருளில் கல்வித் துறை அமைச்சர் ஒரு பேட்டியில் சொல்லி வைத்தார்.(சிங்கையில் இருப்பவர்கள் பேசுவது இங்கிலீஷ் அல்ல சிங்கிளீஷ் என்று இந்தியர்கள் கிண்டலடிப்பார்கள்,காரணம் அந்த அளவிற்கு ஆங்கிலத்தை 'சீனப்படுத்தி'ப் பேசுபவர்கள் சிங்கப்பூரர்கள்,Speak Good English என்று ஒரு இயக்கத்தையும் அரசு நடத்துகிறது என்பது ஒரு கூடுதல் செய்தி!).
அமைச்சரின் பேச்சு பட்டாசுக்கடையில் வைத்த தீக்கங்கு மாதிரி ஆனது.
சிங்கப்பூர் பெற்றோர்கள் பொங்கி எழுந்து அமைச்சர் கருத்தை விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடைசியில் பிரதமர் முன்வந்து அமைச்சரின் கருத்து சரியானதல்ல;சீன மொழிக்கு இருக்கும் முக்கியதுதவம் எந்த வகையிலும் குறைவு படாது என்பதை விளக்கி உறுதி மொழியாகக் கொடுத்த பின்தான் ஒய்ந்தார்கள்..
கவனியுங்கள்,இது சிங்கை போன்ற ஒரு நாட்டில்,மக்கள் பொதுவாக அதிகம் கட்டுப்படுத்தப்ட்ட ஒரு சூழலில் வாழ்கிறாரகள் என்ற எண்ணம் நிலவும் ஒரு நாட்டில் கூட பொதுமக்களின் ஒருமித்த ஆவேசத்திற்கு விடயத்தின் முக்கியத்துவம் கருதி சரியான முடிவு எடுத்தது மட்டுமல்லாமல்,சரியான நடவடிக்கையும் உறுதிமொழியும் அளிக்கும் பிரதமரும் வாய்த்திருக்கிறார்கள் சிங்கைக்கு..
இந்த விதமான சிங்கை அரசின் அணுகுமுறை சீன மொழி சார்ந்ததால் இவ்வாறு இருந்தது என்று சார்பு முடிவுக்கு வந்து விடக் கூடாது;சிங்கை அரசும் நூலகக் குழுமமும் தமிழ் மொழி மற்றும் மொழி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் மிகுந்த ஆதரவும் ஊக்கமும் தந்து வருகின்றன என்பதை சிங்கைத் தமிழர்கள் அறியக் கூடும்.
பத்ரியின் சிங்கைப் பயணம் பற்றிய செய்திகளும் அவற்றில் சிங்கை அரசு மற்றும் ஆசிரியர்களின் ஈடுபாடு எந்த அளவு இருந்தது என்பதையும் இந்த இடத்தில் சுட்டி வைக்கிறேன்.
ஒப்பிடுகையில் தமிழகப் பள்ளிகளில் இருக்கும் தமிழின் நிலை,தமிழினி மெல்லச் சாகும் என்ற உறுதி மொழியைத் தருகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
()

Wednesday, August 25, 2010

121.குறுந்'தொகைகள்-25082010

வலைப்பக்கங்களிலிருந்து நீண்ட ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டதால் இப்போது புத்துணர்ச்சியுடன் மறு வருகை!

()

மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நாடு தழுவிய முறையில் நடத்தலாம் என்ற அரசின் கொள்கை முடிவும்,அதைத் தொடர்ந்த தமிழக அரசின்,நீதிமன்றத் தடையுத்தரவும் இப்போதைய செய்திகள்.இது பற்றிய தினமணியின் இன்றைய தலையங்கத்தில் தமிழகத்தின் தடை உத்தரவு முயற்சியை விமர்சித்து எழுதப்பட்ட தலையங்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் மூன்று.அரசு இதனை எதிர்ப்பதற்காக சொல்லப்படும் காரணங்கள் சொத்தையானதாக இருப்பதாகத் தோன்றுகிறது.
இது பற்றிய விவரமான பதிவை புரூனோ எழுதிக் கொண்டிருக்கக் கூடும்;பார்க்கலாம்.

()

ஒரு சிறு விடுமுறையில் இந்தியா சென்று வந்தேன்.காரணம் ஒரு விநாயகர் கோயில் குடமுழுக்கு.

நாத்திகம் பேசும் நல்லவர்கள் இந்தப் பத்தியை ஒதுக்கி விடலாம்;ஆனால் அவர்களின் விவாதத்திற்கும் ஒரு விடயம் இருப்பதை அவர்கள் இழந்து விடுவார்கள்!

கோயில்(கோயிலா,கோவிலா-கோ+இல்-தலைவன் அரசன் இருக்கும் இடம் என்று பொருள் தரும் கோயில் என்பதே சரி என்பது எனது எண்ணம்!) எனது மூதாதையர்கள் கட்டிய ஒன்று.எனது தாத்தா வழிநடையாகச் சென்ற போது வெள்ளிப் பணப் பை முடிச்சை, தங்கி இளைப்பாறிய கோயிலில் மறந்து விட்டு பயணத்தைத் தொடர்ந்து விட்டதாகவும்,இழந்த பணப்பையை உணர்ந்து மீண்டும் திரும்பி வந்த பார்த்த பொழுதில் பணப் பை முடிச்சு பசுவின் சாணத்தால் மூடப்பட்டு அங்கேயே இருந்ததாகவும்,அதனால் நெகிழந்த தாத்தா,அந்தப் பணம் முழுவதையும் அந்தக் கோயிலின் சீரமைப்புக்குச் செலவு செய்து கட்டியதாகவும் கேள்வி.இப்போது 40 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு குடமுழுக்கு.

விதயம் அதுவல்ல.இந்தக் குடமுழுக்கு எங்கள் குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளில் நடத்தும் இரண்டாவது கோயில் குடமுழுக்கு.முதல் சிவன் கோயில் குடமுழுக்கு ஆகம முறைப்படி சமத்கிருத வழியிலேயே நடந்தது.

பின்னர் எனது திருமணம் நடைபெற்ற போது,தமிழ் முறையில் திருமுறைத் திருமணமாக நடத்தினோம்;இப்போது இந்த விநாயகர் கோவிலின் குடமுழுக்கும் தமிழ்வேதவழி திருமுறைப் பாடல்களால் நிகழ்த்தப் பட்ட குடமுழுக்காக நடத்தப்படவேண்டும் என்ற உறுதி இருந்ததால் அப்படியே நடத்தினோம்.
ஆனால் இதற்காக பலத்த எதிர்ப்பை கோவில் குருக்கள் மற்றும் அவருடைய கூட்டத்தவரால் நாங்கள் சந்திக்க வேண்டி வந்தது;அந்த எதிர்ப்பின் கூர்ப்பு எங்களை எதுவும் செய்து விடுமளவுக்கு இல்லையெனினும்,கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தும்,கோவில் பூசை முறைகளைக் கவனியாதிருந்தும் தனது எதிர்ப்பை மேதமை மிகுந்த குருக்களவர்கள் காட்டி வருகிறார்.

இது தொடர்பாக நடந்த ஊர்க் கூட்டத்தில் எங்களது தரப்பை-அதாவது தமிழ் வழியிலேயே குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்பதற்கான அழகிய,வலுவான காரணங்களை எடுத்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்த அனுபவத்தில் நான் கண்டு மகிழ்ந்த ஒன்று-கிராம மக்கள் உள சுத்தியோடு வைக்கப் படும் கூற்றுக்களை செவிமடுத்ததோடு மட்டுமல்லாது,தோள் கொடுத்துப் பாராட்டியதும்,துணை நின்றதும் மறக்க இயலா நினைவுகள்.உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றானே, நமது தமிழ்த் தோழன்..அதுதான் பொருள் போலும்!

குருக்கள் தரப்பிலிருந்து அந்த வாதப் பிரதி வாதங்கள் நடந்த நேரங்களில்,நாங்கள் இறைவனின் விந்துவிலிருந்து பிறந்தவர்கள்,நாங்கள் என்ன செய்தாலும்(மது,மாது,மயக்கம்,கொலை...மற்றும் இன்ன பிற)நாங்களே பூசைக் காரியங்களுக்கு உகந்தவர்கள்,வேற்றுப் பிறப்பாளர்கள் இறை பிம்பத்தை அணுகுவதையோ,தமிழ் மொழியில் குடமுழுக்கு நடப்பதையோ அனுமதிக்க முடியாது என்று சண்டித்தனம் செய்தார்கள்.
எங்கள் உறுதியினாலும்,கிராமத்தவர்களின் உறுதுணையினாலும்,பின்னர் நாங்களே தமிழில் குடமுழுக்கு நடத்த ஆட்களை கொணர்கிறோம் என்று முன்வந்தார்கள்; அவர்கள் கொண்டு வரும் நபர்களோ மாலையானால் மயங்கி,சொப்பன வாழ்வை ரசிக்கும் பேர்வழிகள்..எனவே அனைத்தையும் புறந்தள்ளி, தமிழ் முறையில் திருமுறை பதிகங்களின் பிண்ணனியில் குடமுழுக்கு பெரும் எதிர்ப்புகளுக்கிடையில் இனிதாகவே நடந்தேறியது.

மிகுந்த நிம்மதியுடனும் உளத் திருப்தியுடனும் எங்கள் ஊருக்குத் திரும்பிய போது இரவு மணி 9.00.(கோவில் இருக்கும் ஊர் எங்களது ஊரிலிருந்த 20 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமம்).

மறுநாள் காலை எங்களை வந்து சந்தித்த ஊர்ப் பெரியவர்கள்,என் அம்மாவிடம் சொன்னார்கள்-'அம்மா, தனி ஒரு நபராக நின்று அரும் செயலைச் செய்து விட்டீர்கள்,நேற்றிரவு 10 மணிக்கு துவங்கிய மழை இரவு முழுவதும் அடித்துப் பெய்து அதிகாலைதான் நின்றது.எங்களுக்கு மெத்த மகிழ்ச்சி' !!!

சில விதயங்களில் மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் செயற்படுகின்றன என்பது உண்மைதானோ?

()

Sunday, July 18, 2010

120.அரசுக்கான தலையங்கம்:இலங்கை-இந்தியா

இலங்கை நிலவரம் பற்றிய இன்றைய தினமணியின் தலையங்கம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்த,தமிழக நலன் சார்ந்த ஏன்,இந்திய நலன் சார்ந்த முக்கிய விதயங்களில் எந்த விதத் தொலைநோக்குமின்றி, குதிரைக்குக் கொள்ளே குறி என்பது போல புறவியல் சார்ந்த எந்த வித நிகழ்வுகளையும் கவனிக்காது,ஒரு நான்கைந்து அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளுக்கு உலகின் பெரிய சனநாயக அரசு முடிவெடுப்பதும், அந்த முடிவுகளில் ஏற்படும் தவறுகளைச் சுட்டாது க்ளௌட் நைன்களில் வாழும் அரசத் தலைமையும் தமிழகத்தின் கேடு.

இனி,தினமணிக்கு நன்றியுடன்...

இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல,​​ இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் பிரச்னை என்று இந்தியா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.​

இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை என்பது இந்திய மீனவர்களைப் பாதிக்கக்கூடியது என்ற வகையில் மட்டுமல்லாமல்,​​ இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு பிரச்னை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும்,​​ இலங்கையில் முல்லைத் தீவு பகுதிகளில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை தயாராகி விட்டதாகத் தெரிகிறது.​ ​ இலங்கையின் வளர்ச்சிப் பணிகளில் துணைபுரிகிறோம் என்கிற சாக்கில்,​​ பெருமளவில் சீனா கால் பதித்திருப்பதுடன் இலங்கை ராணுவத்துக்கும் அதிக அளவில் உதவ முன்வந்திருப்பது,​​ இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் தகர்க்கப்பட்ட நிலையில்,​​ இப்போதைக்கு வட இலங்கையில் வசிக்கும் பெருவாரியான தமிழர்களின் ஒரே வாழ்வாதாரம் கடலில் மீன்பிடிப்பது மட்டுமே.​


விவசாயம் முழுமையாக அழிந்துவிட்ட நிலைமை.​ தொழில்வளம் என்பது பெயருக்குக்கூடக் கிடையாது.​ பழைய நிலைமைக்குத் திரும்பி இந்தப் பகுதிகளில் சகஜ வாழ்க்கை ஏற்பட வேண்டுமானால் குறைந்தது 20 ஆண்டுகளாவது தேவைப்படும் என்கிற சூழ்நிலையில்,​​ இவர்கள் மீன்பிடித்து வாழும் பிழைப்பிலும் மண் விழுந்து விடுமோ என்கிற நியாயமான அச்சம் எழுகிறது.

இலங்கையில் முல்லைத் தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்கிற அறிவிப்பு,​​ பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தேடிக் காத்திருந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல,​​ இந்திய மீனவர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.​ ஆனால்,​​ இந்த அறிவிப்பைத் தொடர்ந்து,​​ நந்திக்கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைக்க சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிப்பதாக வந்த தகவல்,​​ அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நந்திக்கடல் பகுதிகளில் 60.45 சதுர கி.மீ.​ சுற்றளவுக்குப் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.​ இந்தப் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதன் மூலமும்,​​ மீன் பிடிப்பதன் மூலமும் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியில் சீனர்கள் ஈடுபடுவர் என்று ​ கருத வாய்ப்பிருக்கிறது.​ இந்த இறால் பண்ணைத் திட்டத்தை சீன அரசின் உதவியுடன் இலங்கை அரசே மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

ஒருவேளை,​​ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் மரணமடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலியினரின் உடல்கள் இந்தப் பகுதியில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கலாம் என்றும்,​​ சீனர்களின் உதவியுடன் அந்த உடல்களை முறையாக அழிக்காவிட்டால்,​​ தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்படும் என்றும் சில இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.​

இறால் பண்ணை என்கிற பெயரில்,​​ சீன உதவியுடன் நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பிணங்களை அப்புறப்படுத்தித் துப்புரவு செய்யும் நோக்கத்தில்தான் இப்படி ஒரு முயற்சி நடைபெறுகிறது என்கிற ஐயமும் ஏற்படுகிறது.எது எப்படி இருந்தாலும்,​​ இலங்கையின் வடக்குப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை சீனர்களுக்குத் தரப்படுவதை இந்தியா அனுமதிப்பது என்பது,​​ தேவையில்லாத பாதுகாப்பு அச்சுறுத்தலை வலிய வரவழைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.​

ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு,​​ சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டி இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டிருப்பது போதாதென்று,​​ இன்று இல்லையென்றால் நாளை,​​ சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக அணிசேரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாகாது.

ஆப்கானிஸ்தான் பிரச்னையில் இந்தியாவுக்குக் கருத்துச் சொல்லும் உரிமையும்,​​ தனது பாதுகாப்புக் கருதித் தலையிடும் உரிமையும் உண்டு என்று இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் தெரிவிக்கிறார்.​ நேபாளம் இந்தியாவை ஒட்டிய தேசம் என்பதால் அந்த நாட்டு நிகழ்வுகளில் இந்தியாவுக்கு அக்கறை உண்டு என்று பிரதமர் உரிமை கொண்டாடுகிறார்.​ மியான்மரிலும்,​​ வங்க தேசத்திலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான சக்திகள் இயங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்.​


ஆனால்,​​ இலங்கை பற்றிய பேச்சு வரும்போது மட்டும்,​​ இவர்கள் அனைவருமே ஒத்த குரலில் "அது இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட விஷயம்' என்று கைகழுவி வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறார்களே,​​ ஏன்?

அறுபதுகளில் காமராஜ்,​​ பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் தமிழகத்தின் நலனிலும்,​​ இலங்கைத் தமிழர் நலனிலும்,​​ இந்தியாவின் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததுடன்,​​ தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருந்ததால் இலங்கைப் பிரச்னையில் அன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளித்து வந்தனர்.​ எழுபதுகளில்,​​ சி.​ சுப்பிரமணியம்,​​ பழ.​ நெடுமாறன் போன்றோர்,​​ தென்னிந்தியா அமைதிப் பூங்காவாக இருக்க இலங்கை இந்தியாவுக்கு அடங்கி இருப்பது அவசியம் என்பதை தில்லிக்கு உணர்த்திச் செயல்பட வைத்தனர்.எண்பதுகளில் எம்.ஜி.ஆர்.,​​ ஆர்.​ வெங்கட்ராமன்,​​ ஜி.கே.​ மூப்பனார் போன்றவர்களின் வார்த்தைக்கு தில்லி செவி சாய்த்தது.​ இலங்கை அரசு நமது கட்டுக்குள் அடங்கி இருந்தது.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையும்,​​ தமிழர்கள் மீதான தொடர் தாக்குதல்களும்,​​ வருங்காலத்தில் தென்னிந்தியாவின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து,​​ மத்திய அரசைப் புரிய வைத்து,​​ நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டதன் விளைவு,​​ இப்போது சீனா இலங்கையில் பலமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டிருக்கிறது.இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க,​​ அருணாசலப் பிரதேசமும்,​​ அந்தமான் நிக்கோபார் தீவுகளும் மட்டுமல்ல,​​ ஒட்டுமொத்த இந்தியாவே ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படப் போகிறது.​

ஒரு ராஜபட்சவை எதிர்கொள்ளும் ராஜதந்திரம்கூடத் தெரியாதவர்களின் கையில் நாடும்,​​ ஆட்சியும்,​​ அதிகாரமும் சிக்கிச் சீரழிகிறது.​ இந்தக் குழம்பிய குட்டையில் ஏன் சீனாவும்,​​ இலங்கையும் மீன் பிடிக்க முற்படாது?

Friday, April 2, 2010

119.குறுந்தொகை'கள்-02042010

பதிவர்களுக்கான சென்னை குழுமம் அல்லது சங்கம் அமைப்பதைப் பற்றிய பலரது பதிவுகள்-நண்பர் பைத்தியக்காரனின் கோபமான,வருத்தமான பதிவு,அதற்கு உ.த வின் எதிர்ப்பதிவு உள்பட-படித்த போது சில எண்ணங்கள் தோன்றியது.

உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்தானே புலவர் தொழில்!
ஆனால் உம்பேச்சு கா..வரைக்கும் போயிருக்கும் போல இருக்கிறது....

முதலில் அப்ஜெக்டிவ் என்ன என்பது முக்கியம்;என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் முக்கியம்.

அதைப்பற்றிய தெளிவு இல்லையென்றால் குழப்பம்தான் மிகும்;இரண்டாவதாக இது அதியமான் சுட்டியிருப்பது போல ஒரு சமூகக் குழுமம் மட்டுமே.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத போதே இந்த வித சந்திப்புகள் மகிழ்வைத் தரும்.

இந்தப் பின்னணி வெண்பூவின் பதிவு மிகவும் யோசிக்க வைத்தது.கேபிள் சங்கர் குழுமப் பதிவு தன்னுடைய ஐடியில் இருந்து உருவாக்கப் பட்டதால் அக்டோபர் 09 காட்டுகிறது என்று சொன்னாரே தவிர ஏன் இத்தனை காலம் ஒன்றும் முன்னெடுப்பு இல்லை;இப்போது என்ன அவசரம் என்பதற்கெல்லாம் பதில் இல்லை.

ஆக்டிவ் ஆன பதிவர்கள் சிலர் அமைப்பு வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்கள்;அவர்களுக்கான இருக்கும் இயல்பான exuberance காரணமாக இருந்தாலும்,தன் முனைப்பு|முன்னிறுத்தல் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமே.ஆனால் என்ன அப்ஜெக்டிவை மனதில் வைத்து நாம் முயற்சிகளைச் செய்கிறோம் என்பது நர்சிம் சொன்னதைப் போல முக்கியம்.

குறிக்கோள் இலாது கெட்டேன் என்பது வாசகர் வாக்கு!

இதற்கெல்லாம் மேல் ஒரு அமைப்புக்குள் பணப்புழக்கம் வரும் போது அது சார்ந்த பல பிரச்னைகளும் புழுக்கங்களும் கூடவே வரும்;இந்த புழுக்கங்கள் உண்மையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று முனைந்த தன்னுடைய நேரம் முயற்சிகளைத் தரும் சிலருக்கு ஆழ்ந்த மனவருத்தத்தைத் தரும்;இதை பல அமைப்புகளில் பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன்.மேலும் அமைப்புகளின் சொத்துக்களை|பணத்தைக் கையாள்வதற்கு சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அளவுக்கு தன் நேர்மை கொண்டவர்கள் அவசியம்;அவர்கள் கண்டறியப் பட்டு விட்டார்களா என்று சராசரி வலைப் பதிவனுக்கு இருக்கும் கேள்விக்கு பதில் வேண்டும்.
எவராவது அரசியல் சார்புரியவர்கள் இப்பொறுப்புக்க வந்தால்,அமைப்பு ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் கூட்டங்கள் சட்டசபை போன்ற அடிபிடிக் கூட்டங்களாக மாறும் சாத்தியங்கள் மிக அதிகம்.

இப்போதைய நிலையில் ரைட்டர்ஸ் கில்ட் போன்ற தரமாக வைக்கப்படும் வலைப்பதிவுக் கருத்துக்களுக்கு கருத்துச் சுதந்திரம் தரும் அல்லது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அளவுக்கான ஒரு அமைப்பு என்ற அளவில் அக்கருத்து வரவேற்கப்படவேண்டியது;அந்த அமைப்புக்குள் வரும் பதிவர்கள் நாகரிக எழுத்துக்கான உறுதிமொழியைத் தரவேண்டுவதும் அவசியம்.

புத்தகமெல்லாம் வெளியிட்ட ஒரு பிரபள(பிழை அல்ல) பதிவன் மாற்றுக் கருத்தை ஏற்க மனமின்றி,முக்காடு போட்டுக் கொண்டு முட்டுச் சந்தில் மூத்திரம் அடிப்பது போல என்னுடைய பதிவில் முகமற்றுக் கழிந்து விட்டுப் போயிருந்தான்.அவன் போன்ற நபர்கள் அமைப்புக்குள் அல்லது பொறுப்புக்குள் இருந்தால் கதை கந்தலாகி விடும்.

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சூழலை கற்பனை செய்யுங்கள்-நாளைக்கோ அல்லது அடுத்த மாதமோ கூகுள் குழுமம் பதிவு வைத்திருக்க விரும்புவோர் வருடத்திற்கு 100 அமெரிக்க வெள்ளி செலுத்த வேண்டும் என்று அறிவித்தால் 90 சதவிகிதப் பதிவர்கள்|பதிவுகள் காணாமல் போகும் நிலை வரலாம்!அப்போது இருக்கும் 10 பதிவர்கள் சங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதையும் கடைசி அஜண்டாவாக இப்போதே யோசித்து வைக்கலாம்!!

இப்போதைக்கு தோன்றுவது...போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்கப்பா!

()


ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போதுதான் பார்த்தேன்.

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல என்று ஒரு பதப் பிரயோகம் எங்கள் பக்கங்களில் சொல்வார்கள்,அதுதான் நினைவுக்கு வந்தது.காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிறது!

இதைப்பற்றிய கார்க்கியின் பதிவை 200 சதம் ஆதரிக்கிறேன்;வழி மொழிகிறேன்.

ரீமாவின் தொடையை மட்டும் நம்பி 32 கோடி வேஸ்ட்!
இதைப் பற்றி(மேல் வரியைப் பற்றி அல்ல,ஆ.ஒ.பற்றி !) விரிவான பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

()

ஐபிஎல் போட்டிகளைப் பற்றி எழுதாவிட்டால் சாமி கண்ணைக் குத்துமாமே..சச்சின் மற்றும் ஹர்பஜனின் சரவெடிகள் வாண வேடிக்கைகள்!தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளையும் பார்க்கவோ அல்லது செய்திகளைக் கவனிக்கவோ கூட முடியாத அளவுக்கு நேர மேலாண்மைக் குடைச்சல்கள் இருக்கின்றன!

()

சென்னை மயிலையில் ஒரு 1BHK முதல் தள வீடு நல்ல சூழலில் வாடகைக்கு இருக்கிறது-சித்திரக்குளம் அருகில்;கார் நிறுத்த வசதிகள் இல்லை;முற்றிலும் சைவ உணவுப் பழக்கம் உடையவர்கள்(மட்டும்) வரவேற்கப் படுகிறார்கள்.மின்மடலில் தொடர்பு கொண்டால் விவரங்கள் பெற்றுத் தருகிறேன்.


()

இப்போதைய புதிய வரிசை இண்டெல் ப்ராசசர்கள் ஐ வரிசையில் வருகின்றன.இத்தகைய மடிக்கணினிகள் 64 பைட் என்று வருவதாகச் சொல்கிறார்கள்(முந்தையவை 32 பைட் வகை).இந்த வகை கணினிகளில் மைக்ரோசாஃப்டின் 2003 நெட்வொர்க் இயக்கு மென்பொருள்(ஆபரேட்டிங் சிஸ்டம்) சரிவர வேலை செய்யாது என்று ஒரு கணிப்பு சொல்கிறார்கள்.நிபுணர்கள் எவராவது இருந்தால் சிறிது தெளிவித்தால் மகிழ்வேன்.

The requirement is to have MS 2003 network OS to be installed in machines with i-3/5/7 series Intel processors.

Any solution?


******

Tuesday, March 16, 2010

118.நித்யானந்த அனுபூதி !

பதிவுலகம் நித்தியானந்தர் விவகாரத்தை கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறது.இந்த விவகாரமும் 90 களுக்குப் பிறகான சாமியார்கள் இப்படி பொதுவில் மாட்டும் விவகாரங்கள் அதிகமாகி விட்டிருக்கின்றன என்ற நினைவும் சில யோசனைகளைத் தோற்றுவித்தது.

முதலில் இவ்வாறான கார்ப்பரேட் சாமியார்களின் தேவை சமூகத்திற்கு என்ன? இவர்களை யார் உருவாக்குகிறார்கள்?

புத்தாயிரம் ஆண்டுக்கு முன்னால் பரவலாக அறியப்பட்ட,பெரும் நிறுவனச் சாமியார்கள் புட்டபர்த்தி சாய்பாபா மட்டும் என நினைக்கிறேன்.70'களில் இதயம் பேசுகிறது என்ற பெயரில் பத்திரிக்கை நடத்திய மணியன் சாய் பாபா வின் பி.ஆர்.ஓ.ஆகச் செயல்பட்டவர்;இன்று சந்தியில் நிற்கும் ஒரு இணைய எழுத்தாளரை விட பயங்கரமாக சாயிபாபாவுக்கு ஜால்ரா அடித்தவர்;ஆனால் இந்தியா டுடேயில் புட்டபர்த்தியில் நடத்த கொலையைத் தொடர்ந்து விசாரணைச் செய்திகள் வெளிவந்து போதும் மணியன் இது போல்தான் பம்மினார்.

சந்திரா சாமி போன்ற அரசியல் சாமியார்கள் அவ்வப்போது அவரவர் சார்ந்த அரசியல் கட்சிகள் பதவியில் இருக்கும் போது தலைகாட்டி விட்டுப் பின்னர் மறைந்து விடுவார்கள்.

ஆனால் பக்தியின் பெயரால் நிறுவனமாகக் கிளைவிட்டு பரந்து விரிந்த ஹை டெக் சாமியார்கள் எல்லாம் புத்தாயிரம் ஆண்டு நெருக்கத்தில் அல்லது அதற்குப் பின் வந்தவர்களே என்பது எனது ஊகம்.பயன்பாட்டியல் தலைதூக்கிய சமூகம்தான் இத்தகைய சாமியார்களின் பெருக்கத்திற்குக் காரணமா?

இரண்டாவது இத்தகைய சாமியார்கள் முதலில் எதைக் கடைவிரித்து வெளிவருகிறார்கள்?

மூன்றாவது இவர்கள் எந்த நிலையில் சாயம் வெளுக்கிறார்கள்?

முதலில் காரணம்-
70 களின் இறுதியிலும் 80 களின் மத்தியிலும் 100 ரூபாய் என்பது உயர்ந்த தொகை;பர்சில் 100 ரூபாய் வைத்திருந்தால் என்னப்பா,பெரிய நோட்டா வச்சிருக்கே போலிருக்கு என்று வியந்த பொறாமையில் கேட்பார்கள்.இப்போது 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுக்கள் 10 ஆவது சராசரியாக அனைவரது பணப்பையிலும் இருக்கிறது.இல்லாவிட்டால் சென்னையில் முக மழிப்புக்குக் கூட பணம் தர முடியாத நிலை ஏற்படும் என்று பதிவுலக அனுபவமும் இருக்கிறது.:)

இவ்வாறான எளிமைப்படுத்தப்பட்ட அதிகப் பணம் சமூகத்திற்கு நிம்மதியைத் தர முடியவில்லையா?அல்லது எளிமையற்ற நேர்மையற்ற தகுதியற்ற வழிகளில் சேரும் பெரும்பணத்தினால் விளையும் குற்ற உணர்வும் அது தரும் நிம்மதியின்மையும்,எவரிடமிருந்தாவது ஏதாவது ஆறுதல் கிடைக்காதா என்ற ஏக்கத்திற்கு பெரும்பாலானாவர்களைத் தள்ளுகிறதா?இந்த சூழலை சரியாக கணிக்க முடிந்த சில குயுக்தி புத்திக்காரர்களின் மூளையில் உதித்த ஐடியாதான் கார்ப்பரேட் சாமியார்களின் தோற்றத்திற்கு வழிவகுத்ததா?

நமது கதாநாயகரும் ஒரு வாரப்பத்திரிகையின் விளைவாகவே வெளிச்சத்துக்கு வந்தார்;அவரது தொடர் வெளிவந்த ஆரம்ப நாட்களிலேயே-மிகுந்த விளம்பர வெளிச்சத்துக்கிடையில் அந்த தொடர் வெளிவந்தது-ஒரு நல்லெண்ணம்,என்னைப் பொறுத்த வரை அவர் மீதோ அல்லது அவரது தொடர் மீதோ வரவில்லை. இன்னொரு நபர் சுகபோதம் பற்றியும் இன்னொருவர் வாழும் கலை பற்றியும் இன்னொருவர் தியானம் பற்றியும் பெரும் பிரச்சாரங்களுடன் பொது அரங்கில் தோன்றுகிறார்கள்.

எளிதாக அல்லது தகுதியற்றுக் கிடைத்த பெரும்பணத்தின் உடன் பிறப்பாக வருகின்ற மன மற்றும் உடல் அழுத்தங்களால் உந்தப் படுகின்ற பெரும்பான்மை மக்கள் வந்து இது போன்ற ஆசாமிகளிடம் குவிய ஆரம்பிக்கிறார்கள்;இவர்கள் சமய உண்மைகளையோ அல்லது உயர்ந்த தத்துவ சித்தாந்தக் கருத்துக்களையோ பெரும்பாலும் உபதேசிப்பதில்லை;இவர்களின் உபதேசம் பெரும்பாலும் மிக எளிய மொழிகளில் அனைவரும் கடைப்பிடிக்கும் படியான இன்றைய வேக வாழ்க்கைக்கு எவ்வித இடையூறும் தராத சில சடங்கு அல்லது உடற்பயிற்சி முறைகளாக இருக்கும்;அவற்றை அறிமுகப்படுத்த ஆயிரக்கணக்கில் காணிக்கை விதிக்கும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள் குறுகிய காலத்தில் கோடீசுவரர்களாக மாறிப் பின் கேடிஸ்வரர்களாகவும் உள்ளுக்குள் மாறுகிறார்கள்.

இந்தக் கேடி முகம் வெளித்தெரியும் போது உச்ச அதிர்ச்சி நம்மைத் தாக்குகிறது.

இவ்விதப் பயிற்சிகளை,நிம்மதியை,மன அமைதியை பெரும்பாலான பொது மக்கள் அவர்களாகவே தேடி அடைந்து கொள்ள முடியாதா?அதற்கு ஒரு புறக் காரணி தேவையா?

பெரும்பான்மை மக்களுக்கான விஷய ஞானம் மிகவும் குறைந்து கொண்டு இருக்கிறது;மேலும் குடும்பங்களில் வழிநடத்தவோ,மாற்று வழியைச் சுட்டவோ பெரியவர்கள் இல்லாத நியுக்ளியஸ் குடும்பங்களாகவே பெரும்பாலும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் மாறி வருகின்றன;அவர்களின் வருமானம் கூடினாலும் கூட பெரும்பாலும் பல காரணங்களால் அவர்கள் தனிக் குடும்பங்களாக வாழ்வதையே விரும்புகின்றனர்.இதனால் சின்னஞ்சிறு உலகியல் கடினப்பாடுகளுக்கும் எவரிடமாவது தீர்வுகளை எதிர்பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டது;கேட்காமலேயே கிடைக்கும் தீர்வுகளை அளிக்கும் பெரியவர்கள் குடும்பத்துடன் இல்லாது போவதும் இவ்வித சாமியார்களிடம் மக்கள் போய் விழுவதற்கான ஒரு காரணம்.

இந்த சூழலில்தான் செய்தி ஊடக சதிகாரர்கள் நுழைகிறார்கள்;செய்தி ஊடகங்களுக்கான தார்மீகக் கடமைகள் இருக்கின்றன என்ற கொள்கைகள் எல்லாம் காற்றோடு போய் வெகுநாள் ஆகிவிட்டது.போட்டி ஊடகம் எவனைப்பற்றிய கதையையாவது அளந்து கொண்டிருக்கிறதா,நீயும் ஒருவனைப் பிடி என்ற அளவில் அவைகளின் செயல்பாடு இருக்கிறது;ஒரளவு வளர்த்து விட்ட பிறகு மேட் ஃபார் ஈச் அதர் என்று இருவரும் சேர்ந்து மக்களை முட்டாளடிப்பதும் நடக்கிறது.

சாதாரணமாக உடல்நலனைப் பேண உதவி செய்யும் யோகாப்பியாச உடற்பயிற்சி முறைகள் கூட ஏதோ பிரம்ம ரகசியம் போலவும்,அவற்றை குரு முகமாகவே நேரடியாக மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பயிற்சிப் பிழைப்பு நடத்தும் ஆசிரியர்களது செயலாலும் நித்தி போன்ற ஆட்களுக்கான தேவை பெரிதுபடுத்தப்படுகிறது.
காட்டாக நல்ல புத்தகங்களின் மூலம் ஆசனப் பயிற்சியின் அறிமுகம் கிடைத்து,அம்மா 30 வருடங்களுக்கும் மேலாக ஆசனப் பயிற்சி செய்தவர்;அதை புத்தகத்தைப் படித்தே நானும் ஆசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டேன்;இந்த யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொள்ள ஒருவர் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும் என்பது பாரம்பரிய மிக்க நமது தமிழகத்தில் ஒரு முரண்.அதுவம் இது போன்ற ப்ளே பை நைட் சாமியார்களின் பிரபலம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் வசூல் செய்யும் பணமும் அதிகரிக்கிறது.பெருமளவு முட்டாள்களாக இருக்கும் மக்களும் பணத்தைக் கொட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

கட்டுக்கடங்காத அளவு பணம் எளிதாக ஒரு இடத்தில் குவிகின்ற போது அவற்றின் உபயோகம் கேடு கெட்ட வழிகளுக்கு எளிதாக மாறுகிறது.

சிறிது நினைத்துப் பாருங்கள்,ஊடக சூழலல்லாத தமிழகம் அப்படியே நிலைநின்று போகும் கதியில் இன்று இருக்கிறது;குமுதம்,விகடன் மற்றும் சன் டீவி மூன்றும் நாளை முதல் செயல்படாது என்ற நிலை வந்தால்,தமிழகத்தில் பலர் போர்க்கொடி உயர்த்தினாலும் வியப்பதற்கில்லை.இவை மூன்றும் பிழைப்பது பெரும்பாலும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள்,செய்திகள் மற்றும் நித்யா விவகாரம் போன்றவைதான்..இவற்றின் பிடியில்தான் இன்றைய நடுத்தர வர்க்கப் பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்கள்.

இந்த ஊடக அடிமைத்தனத்திலிருந்து முதலில் வெளிவந்தால் புற உலக சிந்தனைத் தாக்கங்களில் வீழ்வதிலிருந்து சாதாரண மக்கள் பெருமளவு தப்பிக்கலாம்.பின்னரே மற்ற அறிவு சார்ந்த விவகாரங்களும் தேடல்களும் அவர்களின் கவனத்திற்கு வரும்;அந்த நிலையை அடைபவர்கள்தான் நித்யானந்த அனுபூதிகளில் இருந்து தப்பிக்கிறார்கள்.

மற்றவர்கள் இப்போது நாயடி படும் ஒரு எழுத்தாளர் ஆள் போல இருக்கும் புரோக்கர்கள் சொல்வதையெல்லாம் படித்து விட்டு தொண்டரடிகளாக இருந்து புளகாங்கிதம் அடையலாம்!

பி.கு:புரோக்கர் சிகாமணியின் அடிப் பொடிகளாக பதிவுலகில் வலம் வந்த சிலர் ரொம்பவும் வலிக்காத மாதிரி நடித்துக் கொண்டிருப்பது பார்க்கவும்,படிக்கவும் ரொம்பவும் தமாஷாக இருக்கிறது!எதைக் கொடுத்தாவது பிராபல்யம் மற்றும் அதனூடே கிடைக்கும் பலாபலன்கள் என்ற நோக்கில் செயல்படுவதால்தான் இவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் முழிக்க வேண்டியிருக்கிறது.இதற்காகத்தான் ஒரு கிழவன் சொல்லி வைத்தான்..

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்..

ஆனால் எதையாவது கொடுத்து எதையாவது பெறலாம் என்ற நோக்கில்தான் இந்த அடிப்பொடிகளின் பெரும்பான்மை நட்பு இருந்தது போல் எனக்குத் தோன்றுகிறது!இன்னொரு கூற்றும் நினைவில் வந்து தொலைக்கிறது..

உறுவது சீர் தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்!

Thursday, March 4, 2010

117.ட்ரீ டாப் வாக்-சிங்கையில் - 2

சென்ற பதிவில் விவரித்தபடியான சாகச' நடைக்குப் பின்னர் ட்.டா.வாக் பாலத்தில் நுழைந்தோம்.

இப்பாலம் கீழ்ப்புறம் மரச்சட்டங்கள் இணைத்த கம்பிகளால் இழுத்துக் கட்டப்பட்ட தொங்கு பாலம்.நடுவில் அமைக்கப் பட்ட உயரத் தூணும் இரண்டு பக்கமும் நிலப்பகுதியில் அமைந்த பிடிமானமும் உள்ள பால அமைப்பு;நடுப்புறம் சுமார் 150 மீட்டர் பள்ளமும் அடர்ந்த மரக்கூட்டமும் உள்ள நில அமைப்பு.பாலத்தின் அகலம் சுமார் 2 1\2 அடி மட்டுமே,இருவர் நெருக்கியடித்துக் கொண்டு அல்லது ஒருவர் சுகமாக நடக்கலாம்;அதிக எடை ஒரு இடத்தில் குவிவதைத் தடுக்க இவ்விதம் அமைக்கப்பட்டிருக்கலாம்...பாலத்தின் நடுவில் நிற்பது அற்புதமான அனுபவம்.காற்று ஆளைத்தூக்குகிறது,கீழ்ப்புறம் நெடு நெடு பள்ளமும் மரங்களும்;இயற்கையின் மடியில் நிற்பது போன்ற உணர்வு.கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மரங்கள்,மரங்கள்,செடிகொடிகள் மட்டுமே!********
சுமார் 20 நிமிடங்கள் நின்று அந்த இடத்தின் அமைதியான அழகை அனுபவித்தோம்.நடுவில் நின்று கீழ்ப்புறம் அமைந்த ஒரே தாங்கும் அமைப்புதான் படத்தில் காண்பது.
கீழேழேழேழேழேழ மரக்கூட்டங்களின் பார்வை.சிறிது நேரம் நின்று ரசித்து விட்டுக் கிளம்பினோம்.
***************திரும்பவும் பழனி மலையில் இருந்து இறங்குவது போல் சுமார் 1 கி.மீ.க்கு மரப்படிகள் மற்றும் பாதை.அதில் நடப்பதும் சுவாரசியமாக இருந்தது;இருபுறமும் செடிகொடிகள் உடலில் உரச நடக்க வேண்டிய நடை.ஆனால் நல்லவிதத்தில் பராமரிக்கப்படும் பாதை.*********எங்கள் கிராமத்தில் ஐயா வீட்டுக்குச் செல்லும் போது தினமும் நடந்து செல்லும் வயலுக்குச் செல்லும் பாதை போன்ற உணர்வு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எனக்கு ஏற்பட்டது;ஐயாவும்,வயல்களும் இப்போது அணுக்கத்தில் இல்லை,அனுபவங்கள் மட்டுமே இருக்கின்றன.இறங்கி வந்து திரும்பவும் ரேஞ்ச் நிலையம் என்றழைக்கப்பட்ட இளைப்பாறும் இடத்திற்குச் செல்ல மீண்டும் ஒரு 3 கி.மீ.நடக்க வேண்டும்;நடந்தோம்.தண்ணீர மற்றும் கழிப்பறை வசதிகளுடன் இருந்த அந்த இடத்தை அடைந்து சிரம பரிகாரம் செய்து கொண்டு தயிர் சாத மூட்டையை அவிழ்த்தோம்.குரங்குகள் தூரத்தில் அமர்ந்து எப்போது உணவுப் பாத்திரத்தைக் கவரலாம் என்னும் வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தன;அவற்றிற்கும் உணவைப் பகிர்ந்து விட்டு உண்ணலாம் என்று எண்ணிய போது பாத்திரம் பறி போகும் அபாயம் எழுந்தது.எனவே ஒரு குச்சியைத் தயார் செய்து கொண்டு-நல்ல வாகான தடிமனான சுமார் 1 மீ நீளம் உள்ள குச்சி,அனுபவம் தந்த பாடம்-வந்து பக்கத்தில் வைத்துக் கொண்டே உணவை முடித்துக் கொண்டோம்.நிச்சயம் மீதம் இருக்கும் என்ற அளவில் கொண்டு சென்ற உணவு உண்மையில் சரியாக இருந்தது.நடையும் களைப்பும் தந்த பசியில் உணவு போன இடம் தெரியவில்லை.பசித்தீ என்று சிலம்பு ஆதிரைக்காதையில் சொல்வதன் பரிமாணங்கள் புரிபட்டன.

உணவு முடித்ததும் சிறிது ஓய்வு கொண்டு விட்டு கிளம்பும் வழிவகைகளை ஆராய்ந்த போது திரும்பவும் ஒரு பகீர்..திரும்ப புறப்பட்ட இடத்திற்கே செல்ல வேண்டும் என்றால் 7 கி,மீ.நடக்க வேண்டும்.அல்லது 3 கி.மீ.நடந்து இன்னொரு வழியாகச் சென்று-அங்கு ஒரு கார் நிறுத்தும் இடம் இருக்கிறது,விளக்கம் முடிவில்-அப்பர் தாம்சன் தெருவைப் பிடிக்கலாம்;எனவே அந்த வழியைத் தேர்ந்தெடுத்து நடந்தோம்.

வழியில் சுமார் 75 வயதுக்கும் மேல் மதிக்கத்தக்க ஒரு பெற்றோரும் அவர்களது மகன் மற்றும் 2 வயதுக் குழந்தை-கை வண்டியில்,தள்ளப்பட்டு-சென்று கொண்டிருந்தார்கள்.இந்த வயோதிக நிலையிலும் அவர்களின் ஆர்வம் ஆச்சரியப்படுத்தியது;சொல்லத் தேவையன்றி அவர்களும் ஐரோப்பியர்களே!இத்தனைக்கும் அந்தப் பெண்மணிக்கு நடப்பது சிரமமாக இருந்தது பார்க்கையிலேயே தெரிந்தது;தாத்தா கட் கட்டென்று குழந்தை வண்டியையும் தள்ளிக் கொண்டு விடு விடு வென்று முன்னால் சென்று விட்டார்.நாங்கள் களைப்பிலும்,சொட்ட வியர்த்த வியர்வையிலும் உணவு உண்ட களைப்பாலும் மெல்ல மெல்ல நடந்து தெருவுக்கு வந்து இணைந்தோம்.

அங்கு இருந்த நிழலில் மேலும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு கொண்டு வந்த லெமன் டீ டின்களைக் காலி செய்து விட்டு வீடு திரும்பினோம்.

கிளம்புகையில் பயணம் எப்படி இருந்தது என்று ரங்ஸைக் கேட்டேன்.அவரின் பதிலை விட செயல்தான் மிகவும காமெடியாக இருந்தது...ஏதோ ஒரு படத்தில வடிவேலு அவரது விரலையே தன் புருவ மத்தியை நோக்கி நீட்டிக் கொண்டு சொல்வாரே 'உனக்குத் தேவையா இது?' என்று,அந்த வசனத்தை ரிபீட்டினார் ரங்ஸ்.கூடவே 'இனிமே வெளியில கூட்டிகிட்டுப் போன்னு கேப்பே?' என்ற அடிஷனல் டயலாக்கும் வந்தது.வெடித்துக் கிளம்பிய சிரிப்பில் சிறிது நேரம் கழிந்தது.

ஆனாலும் அடுத்த வாரம் மொண்ட் ஃபேபரில் இதே போல் இன்னொரு இடம் இருக்கிறது போகலாமா என்று கேட்டவுடன் உடனடி எஸ்,போகலாம் போகலாம் என்று வந்த பதில் திருப்தியைத் தந்தது.

இது போன்ற பயணங்கள் சிறிது ஆயாசமாக இருந்தாலும் மனத்திற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தருகின்றது என்றே நான் நம்புகிறேன்;மேலும் இயற்கைச் சூழலில் செல்லும் போது அது,நகரக் கட்டட மனித நெரிசல்களிடையே உளைந்து வருவதைக் காட்டிலும் தனியானதொரு மகிழ்வும் திருப்தியும் தருவதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
************
திரும்பும் வழியில் நடைபாதையிலேயே ஆங்காங்கே சில பொறிக்கப்பட்ட ஸ்டீல் தகடுகள் நடப்போருக்கான குறிப்புகளையும் சில வாக்கியங்களையும் தாங்கி நின்றன;அவற்றில் ஒன்றை நெருங்கி நோக்கினேன்;இப்படி எழுதி இருந்தது-'Nature is at work,building and pulling down,creating and destrying,keeping everything whirling and flowing,allowing no rest,but in rhythmical motion,chasing everything in an endless song out of one beautiful form into another'.ஜான் முய்ர்'ன் இந்த வாசகம் இயற்கைக்கு மட்டுமல்ல,வாழ்வுக்கும் பொருத்தமானது என்று தோன்றியது.

சில குறிப்புகள்:

1.இது போன்ற அனுபவத்தை விரும்பிச் செல்பவர்கள்,கூடிய வரை எளிய பருத்தி உடைகளில் செல்லுங்கள்;கூடுமானால் அரைக்கால் ட்ராயர் மற்றும் டி ஷர்ட் மிகவும் சிலாக்கியம்.

2.தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள்;உணவும் எடுத்துக் கொள்ளுங்கள்,நடந்து விட்டு வந்தவுடன் கொலைப்பசி என்றால் என்னவென்று உணர்வீர்கள். எளிய ஆனால் உடல் சக்தியைத் தரவல்ல உலர் பழங்கள்,பாதாம் போன்றவை நல்ல தேர்வு;சீஸ் கட்டிகளும்-உருகாத வண்ணம் பேக் செய்து கொள்ளுங்கள்-நன்று.நமது பாரம்பரிய இந்திய உணவுகள் வயிற்றை அடைத்து,நடக்க மேலும் களைப்பைத் தரலாம்.

3.கூடவே தாகத்தைத் தணிக்கும் ஏதாவது பாணங்கள் எடுத்துச் செல்லுங்கள்,கார்பனேட்டட் ட்ரிங்ஸ் வேண்டாம்.எலுமிச்சை பானம் அல்லது எலுமிச்சை டீ ஆகியவை மிகுந்த சிலாக்கியமானவை.

4.மேக் ரி(ட்)ச்சி நடைக்கு குறிப்பாகச் செல்வதென்றால் நாங்கள் சென்ற பாதை சிலாக்கியமானது,லோர்னி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்து ரேஞ்ச் ஸ்டேஷனை அடைந்து,திரும்பும் வழியில் வீனஸ் ட்ரைவ் நிறுத்ததை அடைவது சரியான வழி;அல்லது மிகவும் நடக்க முடியாதவர்கள் வீனஸ் ட்ரைவ் நிறுத்தம் வழியாகவே நுழைந்து சென்று திரும்பி விடலாம்.நீண்ட தூரம் நடக்க வேண்டியதில்லை.காரில் செல்பவர்களுக்கும் இதுவே சரியான,எளிதான வழி;ஆனால் நீர்த்தேக்கதை ஒட்டிய ஆரம்ப நடை அனுபவம் கிடைக்க வாய்ப்பில்லை.பேருந்து வழி செல்பவர்கள் எந்த இடத்திலிருந்து கிளம்புகிறீர்கள்,எந்த வழி வெளியேறப் போகிறீர்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டு கிளம்புங்கள்.உள்ளே எங்கும் பேருந்துகள் பற்றிய விவரங்கள் கிடைக்காது-ரேஞ்ச் நிலையம் உள்பட.

5.புகைப்படம் எடுக்க மறக்காதீர்கள்;அலுத்துக் களைத்திருந்தாலும் அவற்றை பின்னாட்களில் பார்க்கையில் உங்கள் அனுபவம் மீள் விரிவாக எண்ணத் திரையில் விரியும்.

Wednesday, March 3, 2010

116.ட்ரீ டாப் வாக்-சிங்கையில் !

கடந்த சில நாட்களாகவே வீட்டில் மக்கள் எங்காவது வெளியில் சென்று விட்டு வரலாம் என்றார்கள்.சரி,எங்கு செல்ல வேண்டும் சொல்லுங்கள் என்றால் வித்தியாசமாக எங்காவது செல்லலாம் என்று பதில்..

சிங்கையில் ஒரு வருடம் வாழ்ந்து,வார இறுதிகளில் மாதத்திற்கு இரண்டு முறை வெளியில் சென்று விட்டு வந்தாலே ஆறு மாதங்களுக்குள் பார்ப்பதற்கு புதிதாக ஏதும் இடம் இருக்காது..இந்த லட்சணத்தில் எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டு இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தேன்.சட்டென்று ஒரு இடம் நினைவுக்கு வந்தது..

Mac Ritchie Reservoir !

அலுவலகத்தில் இருந்து வரும் போது ஒருமுறை லோர்னி தெருவிலிருந்தவாறே வண்டியைத் திருப்பி நீர்த்தேக்கத்தை சடுதியாகப் பார்த்து திரும்பியிருந்ததால் இடம் அழகாகவும் ரசிக்கும் படியும் இருக்கும் என்று தோன்றியதில் மேலும் இணையத்தில் குடைந்தேன்.

Tree Top Walk என்று ஒரு சொல்லாடல் கண்ணில் பட்டது;உடனே ரங்ஸ்க்கு ஆர்வம் கண்ணா பின்னாவென்று எகிறியது.'ஆ,,,ட்ரீ டாப் மேலே எல்லாம் நான் நடந்ததில்லை;கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்,,போலாம் போலாம் எனவும்,சரி என்று கிளம்பினோம்.ஆனாலும் ஏதோ ஒரு சம்சயம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தாலும்,அவற்றை புறம்தள்ளி விட்டு கிளம்பினேன்.

சாப்பிட பூரி செய்து எடுத்துக் கொள்ளலாம் என்ற ரங்ஸின் யோசனையை (நல்ல வேளை !) மறுத்து தயிர் சாதமும் உ.கி.கறியும் செய்து எடுத்துக் கொண்டு,நிதானமாக விடுமுறை நாளில் சாவதானமாக கிளம்பினோம்.
நீர்த்தேக்கத்திற்கு நுழைவு வாயிலில் நுழைந்து சுமார் 100 மீட்டர் நடந்தவுடன் அற்புதமான பார்வைப்புலம் விரிந்தது..பின்னணியில் மலைச்சரிவில் பரந்த நீர்த்தேக்கமும் குளிரான நீரில் மேல் மிதந்து வரும் தென்றலும் சுகமாக இருந்தன.நீர்த்தேக்கத்தை ஒட்டிய பாதையில் நடக்க பாதை இரணடு பிரிவாகப் பிரிந்தது.ஒன்று ட்ரீ டாப் வாக்'க்குப் போகும் வழி..இன்னொன்று நீர்த்தேக்கத்தை ஒட்டிய மரப் படிகளூடே நடந்து பூங்காவுக்குச் செல்லும் வழி.முதலாவது 5 கி.மீ என்றும் இரண்டாவது 11 கிமீ என்றும் சொன்னது.


ட்ரீ டாப் என்ற சொல்லாக்கத்தில் சுத்தமாக மயங்கியிருந்த நாங்கள் முதல் வழியைத் தேர்ந்து எடுத்தோம்.மேலும் சுமார் 200 மீட்டர் நடக்கவம் இன்னொரு தகவல் பலகை மறித்து,'ஏய்,மக்கா,நிசமா நீ ட்ரீ டாப்தான் போகணுமா இல்லை இந்த மரப் பாலம் வழியா தண்ணீரை ஒட்டியே நடந்து போயிட்றியா? என்று கேட்டது.சே,சே..என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு,,இவ்வளவு தூரம் மெனக்கட்டு டைம் ஒதுக்கி சாப்பாட்டு மூட்டை தூக்கி வந்ததே மர உச்சி நடைக்குத் தானே..என்ன யோசிக்கறதுக்கு இருக்கு என்று சொல்லிவிட்டு முதல் பாதையையே தேர்ந்தெடுத்தோம்.
பாதை ஆரம்பிக்கும் இடமே மரங்களடர்ந்த குகைக்குள் நுழைவது போல் தோற்றமளித்தது;இந்த லட்சணத்தில் வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் மர உச்சிப் பாதையைத் தேரந்தெடுக்க வேண்டாம்'என்று எச்சரிக்கைப் பலகை வேறு பாதை ஆரம்பத்தில்(உள்ளேயும் பல இடங்களில்) இருந்தது;யேய்,நாங்களும் ரௌடிதான்லே என்று நினைத்து வீறு கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

(முன்னாலேயே சிங்கை வானிலை எச்சரிக்கை வலைத்தளத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் செல்ல இருந்த பகுதியில் நல்ல வானிலைதான் என்று உறுதிப்படுத்தியிருந்தேன்..ரங்ஸ் என்னை விட வீரமாக இன்னைக்கு மழை பெய்தாலும் போகிறோம் என்று சபதம் வேறு எடுத்திருந்தது வேறு விதயம்.)

நானும் மிகவும் மகிழ்ந்து-பின்ன சும்மாவா,நம்ம ஆளுக்கு என்னா வீரம்?-அழைத்துக் கொண்டு சென்றுவிட்டேன்..

சரி,நடைக்கு வருவோம்..முதல் பாதையைத் தேர்ந்தெடுத்தோமா,நடக்க ஆரம்பித்தோம்.


பாதை சமதளமாக இல்லாமல் சிறு சிறு கருங்கற்கள் நிறைந்து,மேடாகவும்,சரிவாகவும் சுமார் 3 பேர் கை கோர்த்துக் கொண்டு நடக்கும் அகலத்தில் இருந்தது.சுற்றியும் பார்த்த பொழுது அந்த மேடு மண்ணால் ஆன மேடு போலத்தான் தோன்றியது;சரி ஒரு கடினப்பாடான தோற்றம்-ரஃக்ட் லுக்-வர வேண்டும் என்றுதான் சிறு சிறு ஒழுங்கற்ற கூழாங்கற்கள் போன்ற கற்களைப் பாதை முழுதும் பரப்பி இருக்கிறார்கள் என்று நினைத்தேன்;அதைப் பகிர்ந்து கொண்ட போது ரங்ஸ்ம் ஆமோதித்தார்.இடையில்-எனது இடையில் அல்ல-நடந்த பாதையின்- பலர் நாங்கள் நடந்த திசையிலும் சிலர் எதிர்த் திசையிலும் நடந்தோம்;அவர்கள் பெரும்பாலும் மேற்கத்தியர்களாகவே-ஐரோப்பியர்-இருந்தார்கள்.பார்,வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி வந்து காடு போன்ற சூழலில் நடக்கிறார்கள் என்று சிலாகித்துக் கொண்டே தொடர்ந்தோம்.

இடையில் பல மரங்களுக்கும் அவற்றின் பெயர்,ஜாதி ஆகியவற்றை அழகாக ஒரு சிறு அட்டையில் பெயிண்டால் எழுதி தொங்க விட்டிருந்தார்கள்;சிங்கப்பூரர்களின் செய் நேர்த்திகளை வியந்து கொண்டு தொடரந்தோம்.எல்லாம் நன்றாகப் போன மாதிரித்தான் ஆரம்பத்தில் தோன்றியது.முதலில் சிறிது ஆயாசம் ஏற்பட்ட போது உட்கார எங்காவது இடம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே நடந்தோம்;இடையில் இளைப்பாறுவதற்கென்று ஒரு சிறிய இடம் இருக்கை வசதியுடன்-சாதாரண கல்லிருக்கைதான்- இருந்தது;அதில் அமர்ந்து கொண்டு சுற்றிலும் பார்த்த போது பாதையின் குறுக்காக மலைப்பகுதியின் கீழ்ப் புறத்திற்குச் செல்ல ஒரு பாதையும் இருந்தது;அதாவது அது நடக்க வேண்டாம்,போதும் என்று தோன்றுபவர்கள் மரியாதையாக கீழை இறங்கி பூங்காவை நோக்கி நடையைக் கட்ட உதவும் பாதை..

ஹே,இங்க பாரு,நடக்க முடியாத கிழடு கட்டை எதாவது வந்திருச்சுன்னா,வேண்டாம்னு தோனினா இறங்கிப் போயிடலாம் பாரு..மஞ்சத் தோல் காரன் முன் யோசனை முன் யோசனைதான்' என்று கமெண்டிக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தோம்;ஆங்காங்கு மூங்கில் மரங்கள் வளர்ந்து சுமார் 100 அடிக்கும் மேல் வளைந்து நின்றன;நன்கு முற்றிய மூங்கில்கள்,சுமார் 20 செ.மீ. விட்டம் கொண்ட மூங்கில்கள்..தட்டிப் பார்த்தால் கணீர் கணீர் என்று சப்தம் வந்த மரங்கள் கூட்டமாக நின்றன;லேசான காற்றுக்கு அவை ஒரு சப்தம் எழுப்பின;பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் இலங்கைக்குச் சென்று திரும்பி கோடிக்கரையில் கரேயேறி,ஒளிந்திருக்கும் ரவிதாசனைப் பயப்படுத்த முடிவு செய்யும் இடத்தில் கல்கி எழுதி இருக்கும் மூங்கில் மரங்களின் மர்,மர சப்தம் என்றால் என்ன என்று எனக்கு விளங்கியது.கல்கியின் காட்சிப்படுத்தலை வியந்து கொண்டே தொடர்ந்தோம்.

ட்ரீ டாப் என்று எங்களை மயக்கிய (மக்கா,அதுலதானே விழுந்தது !) வார்த்தைப் பிரயோகத்துக்குரிய ஒன்றையும் பாதையில் காணவில்லை;ரங்ஸ் வேறு எங்க ட்ரீ டாப் எங்க ட்ரீ டாப் என்று ஏகத்துக்கும் எகிறிக் கொண்டு வர,நான் மிகவும் சீரியசான தொனியில் மூங்கில் அல்லது 100 அடிக்கும் மேலாக வளர்ந்திருக்கும் ஏதாவது மரத்தில் ஏறிக் கொண்டால் ட்ரீ டாப்தான என்று சொல்லி மொத்து வாங்கினேன்.

நேரம் செல்லச் செல்ல ஒரே மாதிரிச் செல்லும் பாதை அயற்சியாகவும் உற்சாகமளிப்பதாகவும் இல்லை;இதில் 5 மணிக்கு ட்ரீ டாப் மூடி விடுவார்கள் என்று வேறு குறிப்பைப் படித்திருந்ததால்,நடையை எட்டிப் போட்டோம்;வியர்வையும் அயற்சியும் ஆளை அடித்தது.நான் எப்பொழுதும் ஒட்டத்திற்காகப் பயன்படுத்தும் முழுக்காலணியை-ஷூ-பயன்படுத்தினால் அது மழையில் நனைந்து பாழாகி விடக் கூடூம் என்றும் பூங்கா போன்றுதானே இருக்கும் என்ற நினைப்பில் தோலால் ஆன மு.கா.யையே அணிந்திருந்தேன்.பார்த்தால் இது கிட்டத்திட்ட ட்ரெக்கிங் போன்ற ஒரு நடை.அதில் தோல் ஷீ அணிந்து கொண்டு போன ஒரே பிரகிருதி நானாகத்தான் இருக்கும்!

இடையில் களைத்து,அமர்ந்து,களைத்து,அருந்தி 4.75 கிமீ ஐக் கடந்த போது தூரத்தில் வெளிச்ச வெளி தெரிந்தது;ஆகா ட்ரீ டாப்பு வந்து விட்டது என்று டாப் எகிறி விடும் உற்சாகத்துடன் சிறிது ஏற்றமாக இருந்த பாதையை மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏறினோம்;ஏறினால்....

டார்லிங் டாங் டாங் படம் பார்த்தீர்கள்தானே..அதில் தற்கொலை செய்யும் உத்வேகத்துடன் பாக்யராஜ் மலை ஏறிச் செல்ல பதைபதைத்து க,பெ.சிங்காரம் மற்றும் மற்றவர்கள் வர,மேலே ஏறிய பாக்யராஜ் அங்கு கண்ட காட்சியைப் பார்த்து விட்டு ஒரு தனியான உணர்ச்சி மற்றும் முழியுடன் நிற்பாரல்லவா,அப்படி நிற்கும் படியானது.ஆம்,தெளிவாக கார் வரும் பாதையாக நல்ல ரோடும் கால்ஃப் வெளியும் விரிந்தன.
இந்த ரோடு இருப்பது தெரிந்திருந்தால் வந்திருக்கவே வேண்டாமே,என்ன கரும்மடா இது என்று நொந்து கொண்டு சுற்றி முற்றும் பார்த்தோம்;இடப்பக்கமாக இன்னொரு பாதை மீண்டும் ட்.டா. பாதையைச் சுட்டியது,இம்முறை 3.5 கி,மீ.ஆஹா,சிக்குனாண்டா சிங்காரம் என்று நினைத்த படியே ரங்ஸ்ஐ நோக்க,அவர் ரொம்பவும் உற்சாகமாக இருப்பது போல ஒரு பாவனையை வெளிப்படுத்திக் கொண்டு,ஹூம் வாங்க,வாங்க நடக்கலாம் என்று சொல்லிக் கொண்டே,மூட்டைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தார்.இப்படியை முன்னர் பார்த்த பாவனையிலேயே மேலும் சுமார் 3 கி,மீ.சென்றது.

முடிவில் ஒரு கட்டடமும் கழிப்பறை,குளியலறை வசதிகளும்,குடிநீரும்-சிங்கையில் சாங்கி விமான நிலையம் தவிர பொது இடத்தில் குடிநீர் கிடைப்பது இது போன்ற அத்துவானக் காட்டில்தான் என்று நினைக்கிறேன்-இருந்தன.சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்து,இன்னும் 400 மீட்டர் தூரத்தில் ட்,டா.நடை இருக்கிறது என்று தெளிந்து மேலும் நடையைக் கட்டினோம்.
அழகர் கோவில் மலைக்கு ஏறும் பாதை போன்ற உயர் சாய்வுடன் கூடிய காங்கிரீட் தெருப்பாதை மேலேறியது;களைப்பும் வியர்வையிலும் அப்பாதையில் ஏறி முடிக்க மூச்சு வாங்கி உட்கார்ந்து விடலாம் என்று தோன்றிய இடத்தில் மரச்சட்டங்களால் ஆன படிகள் காணப்பட்டன.
சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதையில் இறங்கி நடக்க சுமார் 200 அடி நடக்க,ஒரு சிறிய காவல் கூண்டும் அங்கு ஒரு வனக்காவல் பணியர் கூண்டுக்குள் ஒரு குரங்குடன் அமர்ந்திருந்தார்;அதாவது குரங்கு கூண்டுக்குள் இல்லை,காவல் கூண்டுக்குள் அமர்ந்திருந்த அவருக்கு 3 அடி தள்ளி குரங்கு செல்லும் பாதையில் சரியாக அமர்ந்து கொண்டு எங்களை மிகவும் விரோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.காவலர்,யாரும் தின்பதற்கு-அவருக்கு அல்ல,குரங்குக்கு- எதுவும் தருவதில்லையாதலாலும்,காட்டில் தின்ன எதுவும் கிடைக்காததாலும் அவை சிறிது மூர்க்கத்துடன் இருக்கும் என்று பிட்டைப் போட்டு விட்டு,கூடவே ஒன்றும் செய்யாது நீங்கள் போங்க,என்று சொல்லி விட்டு விட்ட மோட்டு வளையைப் பார்க்கத் துவங்கினார்.நான் சிறிது பின் திரும்பி வந்து காய்ந்து கிடந்த ஒரு மரக் குச்சியை ஒடித்துக் கொண்டு-அதைப் பயமுறுத்தப் போகிறேனாம்-பாதையில் நுழைய எத்தனித்தேன்;நண்பர்-காவலர் அல்ல,குரங்கார்தான்-அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டு உடலை சிறிது முன்னால் நகர்த்தி உர்ர்ர் என்று மீண்டும் மூர்க்கம் காட்டினார்;நான் கையில் இருந்த தம்மாத்தூண்டு குச்சியை கதாயுதம் கணக்காக நினைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டு முன்னேற முனைய அன்பர் கிட்டத்தட்ட உறுமிக் கொண்டு மேலே பாய,நான் உளறிக் கொண்டு பின்னால் சாய்ந்து பின்வாங்க நண்பர் இருந்த இடத்தை மீண்டும் அடைந்து அதை போஸில் அமர்ந்து கொண்டார்.
எட்டிப் பார்த்தால் ட்.டா.வாக் பாதை! குறுக்கே குரங்கார்..என்னடா சோதனை என்று நினைத்துக் கொண்டு நிற்கையில் ஐரோப்பியர் கூட்டம் ஒன்று வந்தது.சில பெண்களும் தொடர்ந்த சில ஆண்களும்..கடைசியாக ஒரு கனத்த மனிதர்,ஆஹா,இந்தக் கனத்த மனிதர் மேல் நண்பர் பாய்ந்தால் அவர் உளறியடிப்பது எவ்வளவு தமாஷாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ஆவலுடன் காத்து(பார்த்து)க் கொண்டிருந்தேன்.ஐ,பெண்மணி சிறிது நடை வேகத்தைக் குறைத்து தயங்க,குண்டர் Just go as if it is not there,dont' stare at it or see at it,have straight look on the path என்று சொல்லிக் கொண்டே நடை வேகத்தைக் கூட மட்டுப் படுத்தாமல் நடந்தார்.
பெண்கள் முன்னால் செல்ல,ஆண்கள் பின்னால் செல்ல நமது நண்பர் எவ்வித சலனமும் இன்றி பாதையின் ஒரு பக்க மரக் கைப்பிடியில் அமர்ந்து கொண்டு என் வருகைக்கு மட்டும் காத்துக் கொண்டிருந்ததாகப் பட்டது;ஐரோப்பியர்கள் வந்தார்கள்,சென்றார்கள்..No reaction from our friend !

வாழ்வில் சில தத்துவப் பாடங்கள் இப்படித்தான் எதிர்பாரா இடங்களில் கிடைக்கின்றன என்று நினைத்துக் கொண்டு,கூண்டுக் காவலர் உதவியுடன் நண்பரைக் கடந்து ட்.டா.வாக் பாதையில் நுழைந்தோம்.

Sunday, February 28, 2010

இசைத்தமிழ் விழா-சிங்கையில் இன்று-280210

நாடகப் பெருந்தகை திரு அவ்வை சண்முகம் அவர்களின் புதல்வரின் தமிழ்இசைக் கச்சேரி நேற்று செராங்கூன் பெருமாள் கோவில் அரங்கத்தில் கேட்க நேர்ந்தது அற்புத அனுபவம்..விரிவான பதிவு பிறகு..

இன்று புதோங் பாசிர் சிவ துர்கா ஆலயத்தில் இராமலிங்கரின் பெரும்பாலான பாடல்களைப் பாடுவதாகச் சொல்லி இருக்கிறார்..

ஆர்வமிருப்பவர்கள் கணினியை மூடிவிட்டு புதாங் பாசிர் ஓடுங்கள்...

Sunday, February 21, 2010

115.முத்த யுத்தம்-ஒரு சர்ச்சை

மோகன் குமாரின் இந்தப் பதிவில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பாடகியும் அவர் கணவரும் முத்தமிட்டுக் கொண்ட நிகழ்வைக் கண்டித்து எழுதியிருந்தார்;அதில் நண்பர் வானம்பாடி சொன்ன ஒரு கருத்துக்கு அளித்த பதிலின் மூலம் புரிதல் இருந்தால் பிரச்னை இல்லை என்ற விதமான கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வந்தன,வானம்பாடி மற்றும் சின்ன அம்மிணி போன்றோரிடத்தில் இருந்து.

சிறிது விரிவாக ஆராயவே இந்தப் பதிவு.

சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெரியவர்கள் ஜோடி ஒன்று முத்தமிட்டுக் கொண்டது பொறுப்பற்ற செயல்;அதைத்தான் பதிவிலும் மோகன் சொல்லியிருந்தார்.

இதற்கு பின்னூட்டத்தில் பதில் அளித்த வானம்பாடி

'என்ன சார் இது. முத்தம்னா காதல்தானா? கத்துக் கொடுக்கணும்சார். முத்தம்னா என்னன்னு. அது எத்தனை வகை. எது அன்பு முத்தம். எது மரியாதை முத்தம். எது காதல் முத்தம்னு கத்துக் கொடுக்கணும்சார். இல்லாம டி.வி.ல யாரோ நடிகனும் நடிகையும் முத்தம் கொடுத்து கோண்டிண்டு ஓடுறத பார்க்கிரப்போ இது என்னமோன்னு புரிதல் இல்லாம பண்ணத் தோன்றும். :). ஹக் பண்றது ஹெல்தின்னு ஏன் தெரியல நமக்கு?'

என்று பதில் அளித்திருந்தார்.

அவருக்கு நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.

அவருடைய அல்லது அவரது மனைவி அல்லது வயது வந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் இவ்வகையான நட்பு ரீதியான 'ஹக் பண்றதை' அவர் எளிதாக எடுத்துக் கொள்வாரா? என்பது எனது நேரடியான கேள்வி.அவர் அதை எளிதாக எடுத்துக் கொள்வார் என்று நேர்மையாகப் பதில் அளித்தார் என்றால் என்றால அவருக்கு குழந்தைகளுக்கு முத்தம் பற்றி பாடம் எடுப்பதிலும் சங்கடங்கள் இருக்காது.

அதற்கு அவரிடமிருந்து நேரடியான பதில் இல்லாததோடு,எனக்குப் 'ஹக் பண்றது' பற்றிய புரிதல் இல்லை என்ற ரேஞ்சில் பதில் அளித்திருந்தார்.இதையே சின்ன அம்மணியும் சொல்லி இருந்தார்.

எனது பதிலாக நான் சொன்னது,எனக்கும் எல்லா 'ஹக்' பற்றியுமான பரிச்சயம் இருக்கிறது;எனது வாழ்வின் கடந்த 10 வருடங்களை பெரும்பாலும் மேற்கத்திய நாடு\நாகரிக முறைகளிடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்;இதில் புரிதல சொரிதல் என்று பாலகுமாரன் ரேஞசில் கருத்து அளிக்க வேண்டாம்.எனது நேரடிக் கேள்வி அவ்வித தழுவல்கள்உங்கள் குடும்பத்தில் உங்கள் மனைவி அல்லது கணவனுக்கு நடந்தால் நீங்கள் எளிதாக எடுத்துக் கொள்வீர்களா என்பதே.

இதை அப்பதிவை எழுதிய மோகன் குமார் மறுத்து அழித்துவிட்டார்.இதில் ஏதும் தனிமனித தாக்குதல் அல்லது ஆபாசமான சொற்கள் ஏதும் இல்லை;இது முழுக்க கருத்தால் அளித்த பதில் மட்டுமே..ஆனால் கொஞ்சம் காரமான பதில்.

ஆனால் இவை மறுக்கப்பட்டதால் எனது கமெண்டுகள் அனைத்தையும் அவரது பதிவில் இருந்து நானே எடுத்து விட்டேன்;ஒரு கருத்தை தெரிவிக்கும் அவர், அதை ஒட்டி வெட்டி வெளிப்படும் கருத்துக்களை அவை ஆபாசமோ,தனி மனித தாக்குதல்களோ இல்லாத பட்சத்தில் அனுமதிக்கும் தார்மீக தைரியத்தை நான் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்பது எனது நிலைப்பாடு.

இப்போது பதிவின் பொருளுக்கு வருவோம்.

உண்மை என்னவெனில் முற்போக்கு moron அவதாரம் அளிக்கும் பலரும் தனிப்பட்டு தன் குடும்பத்தில் அவற்றை ரசிக்க மாட்டார்கள்;காரணம் அவர்கள் உதடு சொல்வதை உள்ளம் ஏற்கும் நிலை இருக்காது !

குழந்தைகளுக்கு முத்தம் பாலியல் ரீதியான தகவல்கள் தேவையா என்பது விவாதத்துக்குரிய பொருள்.

இவற்றில் எனது நிலை பற்றி இந்த இரு பதிவுகளில் நான் முதலிலேயே சொல்லியிருக்கிறேன்.(இதில் ஒன்றிலேயே மருத்துவர் ஷாலினி கேஸ் பை கேஸ் தான் பதிலளிக்க முடியும்,கொள்கையளவில் முடிவாக சொல்ல முடியாது என்று சுற்றி வளைத்ததை டோண்டு ராகவன் சுட்டியிருக்கிறார்)

சுருக்கமாகச் சொன்னால் (சுமார் 20 வருடங்களுக்கு முன் 16 வயது) இப்போதைய காலத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடலியல் பற்றிய அறிவுதான் தேவையே தவிர பாலியல் பற்றிய அறிவு தேவை அல்ல என்பதுதான்.சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது ஒரு சொல்லாடல்.பாலியல் பற்றிய அறிவு ஒரளவு உரிய வயதில் தெரிவதுதான் நல்லதேயொழிய அவை சீக்கிரம் குழந்தைகளுக்கு தெரியவரும் போது குழந்தைகளுக்கு ஒரு பரிசோதனை மனோபாவம் வருகிறது என்பதும் ஒரு கருத்து.

அதுவரை நட்பை தெரிவிக்க முத்தம் எனபதெல்லாம் குழந்தைகளுக்குக் குழப்பத்தையும் பரிசோதனை மனோபாவம் அல்லது விவரமில்லாமல் எவரிடமாவது சிக்கும் நிலை இவைதான் நடக்கும்.

முத்தத்தையே எடுத்துக்கொள்வோம்,என்ன சொல்லி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவீர்கள்? நெற்றியில் முத்தமிடால் அன்பு,கன்னத்தில் முத்தமிட்டால் தோழமை,உதட்டில் முத்தமிட்டால் காதல் என்றா? அப்படிச் சொன்னால் காதல்னா என்னப்பா என்ற அடுத்த கேள்வி குழந்தையிடமிருந்து வரும்.

சரி வம்பு வேண்டாம் என்று நினைத்து,வெறுமனே முத்தம் தோழமைதான்;ஆண்டி,அங்கிளை தோழமையுடன்தான் முத்தமிடுகிறார் என்று சொன்னாலும் இன்றைய நகரநாகரிக அழுக்குச் சூழலில் குழந்தை எத்தனை பேர்களிடம் பாடுபடும் என்பதை எண்ணிப்பார்க்க முடியுமா?

சமீபத்தில் தன் மகனின் பள்ளிக்குச் சென்ற ஒரு பெண்பதிவர் பள்ளிக்கு வெளியில் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்புவதற்காக மற்ற குழந்தைகளுக்கு முன் சீக்கிரமாக வந்த ஒரு பெண் குழந்தையிடம் ஆட்டோ ஓட்டுனர் செய்த சில்மிஷங்களையும் அவற்றைப் பற்றிய பிரஞ்ஞை பெரிதும் இல்லாமல் அந்தக் குழந்தை தடுமாறியதையும்,சுற்றிலும் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்ததையும் விவரித்திருந்தார்..இத்தகைய நச்சு சூழலில்தான் நாம் வாழ்கிறோம்;இப்போது பதில் சொல்லுங்கள்..முத்தம் பற்றியும் தழுவல்கள் பற்றியும் குழந்தைகளுக்கு அறிவு தேவையா? அல்லது வெளியிடங்களில் வெளியாட்களால் உடல் ரீதீயான தீண்டல்கள் அனுமதிக்கப் படக் கூடாது என்பது நல்ல கற்றுக் கொடுக்கும் முறையா?

விஷயம் என்னவெனில் நாம் வேகமாக மேற்கத்திய சூழலுக்கு மாறிக் கொண்டிருக்கிறோம்;மேற்கத்திய நாகரித்தில் தழுவல்களும் முத்தமும் மிக எளிதாக இருப்பது போல பலதார மணம் அல்லது விரும்பியவருடன் வாழ்தல் போன்ற சித்தாந்தங்களும் எளிமையானவை.நட்பு ரீதீயான தழுவல்களும் முத்தங்களும் வேறானவை என்றாலும் அவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் அறிவு குழந்தைகளுக்கு இருக்குமா?அந்த வேறுபாடுகளை விவரித்து குழந்தைகள் அவற்றைப் புரிந்திருக்கின்றனவா இல்லையா என்று குழம்புவது எளிதா? அல்லது உடல் ரீதியாக வெளியார்கள் சீண்டலை அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்துவது நல்லதா?

தழுவல் அல்லது முத்தம் என்பது பெற்றோரிடம் மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும் எனபதுதான் சரியான புரிதலாக இருக்கும்.கண்ட வெளியாட்கள் முத்தமிடுகிறேன் பேர்வழி என்று குழந்தைகளை எச்சில் படுத்துவதில் இருந்தாவது குழந்தைகள் தப்பிப்பார்கள்.

இன்னொரு பார்வை இருக்கிறது,தழுவல் மற்றும் முத்தங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் அவற்றின் நீட்சியான மேற்கத்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் எளிதாக மாறும் சூழல் வரும்;அப்போது குழந்தைகளை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?விரைந்து மேற்கத்திய உடை,மேற்கத்திய உணவு,மேற்கத்திய நாகரிக,தோழமை எடிக்வட்ஸ்க்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் நமது தலைமுறை சீக்கிரம் மேற்கத்திய வாழ்வு முறைக்குள்ளும் சிக்கப் போகிறது.அதை வரவேற்கப் போகிறோமா அல்லது எதிர்க்கப் போகிறோமா?

எனது வாதம் பழமைவாதமாகத் தோன்றலாம்;ஆனால் பழமை வாதமல்ல.

நமது பண்டைய தமிழர்கள் வாழ்வு உலகில் எந்த சமூகத்தினரையும் விட அமைந்த நீண்ட நெடிய வாழ்வு முறை.அவர்கள் எல்லாவற்றையும் முயற்சித்திருக்கிறார்கள்.கிமு 2 ம் நூற்றாண்டிலேயே நமது அகப்பாடல்கள் களவுமணத்தைப் பற்றிப் பேசுகின்றன;பிடித்தவர்கள் பழகிப்பார்த்து மனம் இயைந்தால் அதை சட்டபூர்வப்படுத்தும் முகமாக கற்புமணம் கொண்டு வாழ்ந்த வாழ்வு முறை பேசப்படுகிறது.இவ்வாறு ஒவ்வொன்றாக முயற்சித்துப் பார்த்து சமூக வாழ்வுக்கு எது நல்லது எது அதிக குழப்பமில்லாத வாழ்வைத் தரும் என்று தீர்மாணித்துக் கொண்டு பலகாலப் பரிமாணங்களில் முகிழ்ந்ததுதான் இந்தியக் குடும்ப வாழ்வு முறை.


நமது வாழ்வு முறையில் அனைத்து காரணிகளும் முழுமையாக இருக்கின்றன.அவற்றை முதலில் நாம் தெளிவுற அறிகிறோமா நமது பண்பாட்டுக் கூறுகளை அவற்றின் சரியான நோக்கில் நம் குழந்தைகளுக்கும் கடத்துகிறோமா என்பதில்தான் அவர்களின் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது.

நமது வாழ்வியலுக்கு ஒவ்வாத வாழ்வு முறையின் கூறுகள் தானே காலத்தால் மாறுபடுகின்றன;அதில் மாற்றங்களை நாம் மேற்கத்திய முறையைப் பார்த்துக் கொண்டு வலிந்து கொண்டு வர முயற்சிக்கும் போது இரு வாழ்க்கை முறைக்குமான முரண்பாட்டுச் சிக்கல்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன;எந்தப் பண்பாட்டு,வாழ்வியல் முறையை நம் குழந்தைகளுக்கு நாம் வழங்க விரும்புகிறோம் என்பது இதற்கான தீர்வின் திசையைத் தீர்மானிக்கும் என்பது எனது கருத்து.

அதுவரை குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி !

Monday, January 25, 2010

114.பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்

இன்றைய உலகில் நாம் எந்த நாடுகளில் வாழ விரும்புகிறோம்?

பெரும்பாலும் மேற்குலக நாடுகள் அல்லது ஆசியாவில் மேற்குலக நாடுகளின் பாவனையில் இருக்கும் நாடுகள்;எடுத்துக்காட்டினால் ஆஸ்திரேலியா அல்லது சிங்கப்பூர்.இவை தவிரமத்திய கிழக்கு நாடுகளின் தேர்வில் துபை அல்லது அமீரக நாடுகள் வர வாய்ப்பிருக்கிறது.

இவற்றை விட்டால் மேற்குலக,ஐரோப்பிய,அமெரிக்க,பிரிட்டிஷ் நாடுகள் தான் நாம் பெரும்பாலும் செல்ல,தங்க,வாழ விரும்பும் நாடுகளாக இருக்கின்றன.இவையே உலகின் முதல் நிலைநாடுகள்.

மற்ற நாடுகள் வளரும் நாடுகள் என்றும் தேர்ட் வோர்ல்ட் என்றும் அழைக்கப்படுகின்றன.சிங்கையின் சீனியர் லீ எழுதிய புத்தகமான சிங்கையின் வளர்ச்சியை விவரிக்கும் இரண்டு புத்தகங்களில் இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே From Third World to First World என்பதுதான்.

என்ன காரணம்?

மேற்குறிப்பிட்ட நாடுகளில் நிலவும் கட்டமைப்பு வசதிகள் முதல் காரணம்.வீட்டிலிந்து,தண்ணீர்,மின்சாரம்,போக்குவரவு போன்ற எந்த தேவைகளுக்கும் சாமானிய மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக வேண்டிய நிலவரம் இந்த நாடுகளில் இல்லை.காசைக் கொடுத்தால் எல்லாம் சட்டென கிடைக்கும்;அதுவும் பொருளுக்கு அல்லது சேவைக்கு வேண்டிய அளவில்
கொடுத்தால் போதும்;இடைத்தரகாகவோ கையூட்டாகவோ பெரும்பணம் செலவு செய்ய வேண்டியது இல்லை.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அரசால் நிகழ்த்தப்படும்,அல்லது சமூகத்தால் நிகழ்த்தப்படும் அழுத்தங்கள் இல்லை.

இரண்டாவது காரணம் சாதாரண மனிதனின் சம்பாத்தியத்திற்கும் அவனது தினப்பாட்டின் செலவுகளுக்குமான விகிதாசர வேறுபாடு.அதாவது அமெரிக்காவில 5000 டாலர் சம்பாதித்தால் எளிதாக 2500 டாலர் செலவுக்குள் ஒரு மாத செலவுகளை சமாளிக்க முடியும்.சிங்கையிலும் இதே நிலைதான்(சமீப நாட்களான வீட்டு விலை,மட்டும் வாடகை நிலவரம்
தவிர்த்து!).இந்தியாவில் இருந்து பெருமளவில் வரும் தொழில் நுட்ப பணியாளர்கள் இந்த அளவில் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் இதே நிலை இந்தியாவில் பணியாற்றும் ஒருவருக்கான குடும்ப செலவுகள் சம்பாத்தியத்தில் 50 சதவீதத்திற்கள் அடங்குமா என்பது கேள்விக்குறி.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தன்னுடைய சம்பாத்தியத்தில் எளிதாக 50 அல்லது 40 சதம் சேமிக்க முடியும் என்பது இந்த நாடுகளில் சாத்தியம்;இந்தியாவில் இது சாத்தியம் இல்லை.அதிகப்படியான சமூக வாழ்வின் பத்திரம் மற்றும் ஒழுங்கு ஆகிய காரணங்கள்.

இவை பற்றிய காரணங்களே பெருமளவு வெளிநாட்டுக்கு செல்லும் நுட்பத் தொழிலாளர்கள் அந்தந்த நாடுகளிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்வதின் காரணம்.


அடுத்த முக்கியமான காரணம் நாணயப்பரிவர்த்தனையின் இந்தியாவில் கிடைக்கும் அதிக சேமிப்புத்திறன்.அதாவது மேற்கண்ட நாடுகளில் சம்பாதித்து இந்தியாவில் சேமித்தால் இந்திய ரூபாயின் மதிப்பில் குறுகிய காலத்தில் சேமிக்க முடிந்த அதிகப் பணம்.

இக்காரணங்களால் இன்றைய இந்தியாவில் வாழ ஒரளவு படித்த,வாழ்வை அனுபவிக்க விரும்பும் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதில்லை;மாறாக வெளிநாட்டு வாழ்வை விரும்புகிறோம்.

ஆனால் சென்ற ஆண்டில் நடந்த பொருளாதார,நிதிப் புயலில் முதலில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் மேற்குறிப்பிட்ட நாடுகளே முதலாவதாக இருந்தன.சொர்க்கம் போன்ற வாழ்வு என்று நினைத்த நாடுகளில் வாழும் நிலையைத் தேரந்தெடுத்த சில இந்தியர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் நிலை வரை சென்ற நிகழ்வுகள் நடந்தன.

முதல்நிலை அதாவது ஃபர்ஸ்ட் வேர்ல்ட் நாடுகள் என்றழைக்கப்பட்ட நாடுகளே நிதிச் சந்தை வீழ்ச்சியில் அதிகம் சிதைவுற்றன !

ஆசியாவின் 'வளரும் நாடுகளான'' இந்தியாவும் சீனமும் இந்த சுழிக்காற்றில் அதிகம் பாதிக்கப்படவில்லை.அங்கெல்லாம் சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் புரட்டிப்போடும் மாற்றங்கள் நிகழவில்லை;கண்ட சிறிய பின்னடவையும் மீறி முன்னேற்றம் காணத் துவங்கிய நாடுகளிலும் இந்த இரண்டு நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.பிரிட்டன்.ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் இன்னும் அடிவயிற்றில் நெருப்புடன் இருக்கின்றன.

இடைப்பட்ட சிங்கை மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளில் நடுவாந்திரமாக இருக்கின்றன,மதில் மேல் பூனை போல.

அதிலும் சிங்கையின் கதை முற்றிலும் மாறுபட்டது.லீ க்வான் யூ என்ற
அதி புத்தி சாலியான ஆட்சியாளரின் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் ஆலோசனையின் படியே பெரும்பாலும் சிங்கையின் பொருளகாதார,சமூகக் கொள்கைகள் கட்டமைக்கப்படுகின்றன;இவை ஒரு தனிப் பதிவில் விவாதிக்க வேண்டிய விவரங்கள்.

ஆக நிதிச்சந்தையில் அடித்த புயலில் அதிகம் ஆட்டம் கண்ட நாடுகள் முதல் நிலை நாடுகளே,மூன்றாம் நிலை நாடுகள் அல்ல.

என்ன காரணம்?

நமக்கெல்லாம் வரலாற்று நினைவு மிகவும் சமீப காலத்தியது.இந்திய வரலாறை எடுத்துக் கொண்டாலும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடு என்றும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்றும் பெரும்பாலும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகள் மேற்குலக நாடுகளாக இருப்பதுமாக ஒரு பரவலான எண்ணம் இருக்கிறது.

ஆனால் இந்தியா இப்படி மூன்றாம் உலக நாடாகவே இருந்ததா?

பாரதப் பொருளாதாரம்;அன்றும்,இன்றும் என்ற தலைப்பில் கிழக்கு வெளியீட்டில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது.அதன் உள்ளடக்கம் ஒரு தெளிவான பார்வையை முன் வைக்கிறது.இந்த புத்தகம் தரும் செய்தியைப் பற்றி நான் முன்பே அறிந்திருக்கிறேன் எனினும் ஒரு புத்தகவடிவில் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய இப்படி வரு பார்வையே எதிர்கொண்டது இப்போதுதான்.

ஆசிரியருக்கும்,அவரின் ஒரு உரையைக் கேட்டு அதனால் மிகவும் கவரப்பட்டு அதை ஒரு புத்தகவடிவில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பத்ரிக்கும் பாராட்டுக்கள்.

இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய சுமார் 2000 ஆண்டுப் பார்வையை முன்வைக்கிறது புத்தகம்.

17 ம் நூற்றாண்டு வரை உலகப் பொருளாதாரத்தின் சுமார் 65 சதவிகிதப் பங்கை சீனமும் இந்தியாவும் வைத்திருந்திருக்கின்றன.இந்தியாவின் பங்கு சுமார் 30
சதவிகிதம்.இந்தியா.பழங்கால தமிழகத்தின் வரலாறுகளில்,சோழர்கள் ஆட்சியில் பல வரலாற்றுக் குறிப்புகளில் இந்தியா உலக நாடுகள் பலவற்றுடனும் செய்த வணிகம் பற்றியும் இந்தியாவில் குவிந்திருந்த செல்வ நிலை பற்றியும் பல குறிப்புகள் கிடைக்கின்றன;அவற்றை இப்புத்தகம் குறிப்பிட வில்லையெனினும் முகலாய அரசர்களை முதன் முதலில் சந்திக்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதர்கள் அரண்மனையில் எங்கும் புழங்கிய தங்கப் பாத்திரங்களைப் பார்த்து மூச்சடைத்து நின்ற செய்தியும்,இந்தியாவை முழுமையாக காலணியாதிக்கதில் கொண்டு வர வேண்டும் என்று அவர்களுக்கு உதயமான உத்தியும் மறைக்கப்பட்ட வரலாற்றின் பகுதிகள்.

சுமார் 300 ஆண்டுகளாக பிரிட்டிஷ் சுரண்டிய இந்தியாவின் செல்வமே பிரிட்டன் முதல் உலகத்திற்கு முன்னேறிய செய்தியின் சுருக்கம்.இந்தியா என்னும் தங்கச் சுரங்கம் கையில் அகப்படும் வரை அமெரிக்காவுடன் ஆண்டு வரிக்காக போரிட்டுக்கொண்டு ரௌடித்தனம் செய்து கொண்டிருந்த நாடு பிரிட்டன்.இந்தியா பிரிட்டனின் நேரடி ஆதிக்கத்தில்,அதாவது விக்டோரியா மகாராணியின் ஆதிக்கத்திற்கு கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து மாறிய போது இங்கிலாந்து அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அளித்த பெரும்தொகையும் திரும்பவும் இங்கிலாந்து அரசால் இந்தியாவிலிருந்தே சுரண்டப்பட்டது,வரி விதிப்பின் மூலம்!இது போக வைசிராய்கள் போனபோதும் வந்த போதும் கப்பல் கப்பலாக இந்தியாவின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன.ஒரு கப்பலில் எவ்வளவு செல்வம் தங்கம்,வைரம்,கனிமப் பொருள்களாக ஏற்றப்பட முடியும்? 300 ஆண்டுகளில் எவ்வளவு செல்வம் சுரண்டப்படலாம்?

இவ்வளவு சுரண்டலுக்குப் பின்னும் சுமார் 60 ஆண்டுகளுக்குள்,எதிர்காலத்தின் வல்லரசாக மாறக் கூடிய சாத்தியம் இருக்கக் கூடும் நாடாக இந்தியா வலிமை பெற்றதற்குக் காரணம் என்ன?பலர் 90 களுக்குப் பிறகான புதிய பொருளாதாரக் கொள்கை காரணம் என்று எண்ணலாம்,அது ஒரு காரணியாக இருந்தாலும் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் நீண்ட கால நோக்கில் அதிகமாக இருக்க முடியும் என்ற ஒரு பார்வையையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

அந்தக் காரணம் என்ன என்பதைப் பற்றிய என் சிந்தனையின் அனுமாணங்களையே புத்தகமும் சுட்டியது எனக்கான இனிய ஆச்சரியம்.இங்கு விளக்கி விடலாம் என்றாலும் புத்தகத்தைப் படிக்கும் சுவை மாறாமல் இருக்க வேண்டும் என்பதால்,புத்தகத்தைப் பரந்துரைக்கிறேன்.

எனக்குத் தோன்றிய சில குறைகள்:

1.புத்தகத்தில் கூறியது கூறல் அதிகமாக இருப்பது போல இருக்கிறது.

2.செய்திகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் வடிவம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது;புத்தகத்தை ஒரு மூச்சில் படிக்கும் போது கருத்தாக்கம் அங்கங்கு அலைவது போல ஒரு தோற்றம் தருகிறது.அதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

3.சான்றுகளைக் குறிப்பிடும் போது அடிக்குறிப்புகளை அந்தந்தப் பக்கத்தில் அளித்திருந்தால் நம்பகத் தன்மை இன்னும் அதிகரித்திருக்கலாம்.

ஆனாலும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்!

பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்
ப.கனகசபாபதி
கிழக்கு வெளியீடு.
விலை:ரூ.125

Monday, January 11, 2010

113.தமிழில் பாடுவது கேவலமா?

தமிழின் தொன்மையில் இசைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு;இன்னும் சொல்லப் போனால் தமிழ் மொழியை இயல்,இசை,நாடகம் என்று அகன்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டு அந்தந்தப் பிரிவுகளில் மொழி வளம் வளர பல ஆக்கங்களை இயற்றி செழித்த மொழி தமிழ்.

உலகின் முதல் இசைக் கருவிகளில் ஒன்றாக முடியும் என்று எளிதாக வரலாற்றுச் சான்றுகளின் மூலம் நிலைநிறுத்தக் கூடிய சில இசைக் கருவிகள் தமிழ் நாட்டில் தமிழ் மொழியாளர்களால் உருவாக்கப்பட்டவை.(குழல்,யாழ்..)அது மட்டுமல்ல அவை தமிழுக்கே உரிய சிறப்பான இசைக்கருவிகள் என்று எத்தலைமுறைக்கும் புரியும் வண்ணம் அக்கருவிகளுக்கு மொழிக்கேயுரிய சிறப்பான ஓசையை நினைவுறுத்தும் பெயரை விளித்து மகிழ்ந்தவர்கள் தமிழின் இசை வாணர்கள்.

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு என்ன என்பதறியாமலோ அல்லது இன்று கர்நாடக இசை என்ற என்ற பெயரில் வழக்கப்படும் இசைக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்ற கருத்தாக்கதினாலோ பல இளைய தலைமுறையினர் இன்றைய சாஸ்திரீய சங்கீதமான 'கர்நாடக' சங்கீதம் தமிழர்களுக்குத் தொடர்பற்றது என்றும்,இன்று பெருமளவு அதைப் பாடுபவர்களின் மேலுள்ள வெறுப்பைக் காண்பிக்க இசையே எள்ளுவதுமாக தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுகள் வியர்த்தமாகிப் போயின;இன்றைய இளைய தலைமுறையிலும் பண்பட்ட இசையை வளர்ப்பவர்கள் அல்லது அதைக் கற்றுத் தெளிந்து பாவனையில் வைத்திருப்பவர்கள் எப்போதும் அதைப் பாடிக்கொண்டு வந்திருப்பவர்களே!

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு பற்றிய இரண்டு பத்திகளை முன்னரே நான் எழுதியிருக்கிறேன்;அதன் பின்னூட்டங்களில் கூட என் நண்பர்கள் நான் துவேஷம் கொண்டு சில கருத்துகளை எழுதி இருப்பதாக கருத்து அறிவித்தார்கள்.அது அப்படி அல்ல என்று நான் விளக்கம் அளித்தேன்;நான் ஏன் அவ்வாறு எழுதினேன் என்றும் விளக்கினேன்.அவற்றிற்கான காரணங்கள் இன்றும் இப்போதும் இருக்கின்றன என்பதை நிறுவுகிறது தினமணியின் தலையங்கம் ஒன்று.

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​


73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந ​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​

பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
-தினமணிக்கு நன்றியுடன்-

பொதுவான மக்கள் இன்னும் விழிப்படையவில்லை;சமூகத் துவேஷத்தை ஊக்குவிக்கும் அரசியலாளர்களோ இன்றும் வேறு ஏதும் காரணிகள் இல்லாத நேரத்தல் 'அரசியில் பிழைக்க' கையில் எடுக்கும் ஆயுதம் பழம் பஞ்சாங்கம்தான்!ஆனால் அவர்களின் குழந்தைகள் மணம் புரிவது அவர்கள் காலமுழுதும் நிந்திக்கும் வகுப்பினரையே என்பது சாதாரண மக்களுக்கு நினைவில் இருக்காது எனபதுதான் ஒரு முரண்.

இத்தகைய சூழலில் மேற்கண்ட தலையங்கத்தில் குறிக்கப்பட்ட தீர்வையே நான் என் முந்தைய பதிவுகளிலும் முன்வைத்தேன்;அதாவது பொது அரங்கங்களில் பாடும்போது தமிழிழ்தான் பாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் எந்தமொழிக் கீர்த்தனைகளை வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை வந்தாலொழிய பாடகர்களின் மனோபாவம் மாறுவது கடினம்.

இதற்கு நண்பர்கள் லக்ஷமி நரசிம்மன், கமகம் லலிதா ராம் ஆகியோர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Friday, January 1, 2010

112.குறுந்தொகை'கள்-01/01/2010

வலைப்பக்கங்களில் இப்போது அதிகம் எழுதித்

தள்ளப்படும் வஸ்துவாக மாறிக் கொண்டிருப்பது

கவிதை.கவிதைகள் என்று எழுதப்பட்டிருக்கும் பல

பத்திகளைப் படிக்கும் போது தொண்டை ஞமஞம

என்று ஒரு புதுவித அவஸ்தை உணர்ச்சி பீறிடும்

வகையான புதுக்கவிதைகள் அதிகம்

எழுதப்படுகின்றன.எந்தவிதமான கவிதை அனுபவமோ,நிகழ்வு

நெகிழ்ச்சியோ விவரிக்காத இவ்வகைப் பத்திகளை

மாய்ந்த மாய்ந்து எழுதும் அன்பர்கள் எல்லாம்

பேருந்து நிலையங்களில் விற்கப்படும் கவிதை

ஊக்கியான குஸ்கான் கவிதை லேகியம் மாதிரி

ஏதாவது வாங்கி மகிழ்ந்திருப்பார்களா என்று

தெரியவில்லை.இவ்வகைக் கவிதைப் பத்திகளை எழுதுவது ஒன்றும் சிரமமான காரியமல்ல;உங்களுக்குப் சிந்தையில் பீறிடும் எண்ணங்களை ஒரு பத்தியாக முதலில் எழுத வேண்டியது,பின்னர் இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு அப்பால் எலிக்குட்டியை வைத்து ஒரு எண்டர்'தட்டு தட்ட வேண்டியது...இவ்வகை முயற்சியை சளைக்காமல் முழுப்பத்திக்கும் நீட்டினால் தீர்ந்தது விஷயம்,கவிதை ரெடி!சமீபத்தில் வலையுலகில் எண்டர் கவிதைகள் என்று ஒரு பதம் வழக்கில் இருக்கிறது;அது இவ்வகைக் கவிதைகளைத்தான் சுட்டுகிறதோ என்று ஒரு சம்சயம் எனக்கிருக்கிறது.

()


விஜய் தொலைக்காட்சியில் வரும் சூப்பர் சிங்கர்/ஜூனியர் நிகழ்ச்சி தவற விடக் கூடாத ஒரு நிகழ்ச்சியாக சமீப காலங்களில் மாறிவருகிறது என்று நான் ஏற்கனவே சில பத்திகளில் சொல்லியிருக்கிறேன்;இந்த நிகழ்ச்சி சமீப நாட்களில் சேர நாட்டுப் பெரும்பான்மையினரால் ஆக்கிரமிக்கப் படுகிறதோ என்று ஒரு நினைவு வருவதை தவிர்க்க இயலவில்லை;நீதிபதிகளில் இருந்து தொகுப்பாளரிலிருந்து,பாடுபவர்கள் வரை பெரும்பான்மையினர்கள் மலையாள நண்பர்களாக இருப்பதன் ரகசியம் அல்லது அல்லது அது அல்லாத தன்மை என்ன என்பது விளங்கவில்லை.

ஆனாலும் சிறு குழந்தைகள் என்னமாய்ப் பாடுகிறார்கள் என்பதை பார்த்தால்தான் நம்ப இயலும் போலிருக்கிறது;ஒரு தொழில்முறை பாடகருக்கிருக்கும் பெர்பெஃக்ஷன் 12 வயது குழந்தைகளின் பாடல்களில் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது நமது தலைமுறைக்கும் அடுத்த இளைய தலைமுறைக்குமான திறன்/ஊக்கத்தில் இருக்கும் வேறுபாடு வியப்பான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அதிலும் ஒரு லட்ச ரூபாய்க்காக சிறுவர் சிறுமியர் போட்டியிட்ட சமீபத்திய-இது உண்மையிலேயே ஒரு வாரத்துக்குள்ளான சமீபத்திய'-எபிசோடில் அல்கா மற்றும் ரோஷன் ஆகியோர் பாடிய -அதிலும் கடைசி சுற்றை-சுற்றை பார்க்க/கேட்க வாய்ப்பில்லாதவர்கள் அபாக்கியவான்கள்!

()


சென்ற 2009 மற்றும் ஒரு வருடம் என்ற அளவில் பலருக்கு இருந்தாலும்,இலங்கையில் நடந்த நிகழ்வுகள் மாறாத வடுவாக தமிழர்களின் துயர நினைவில் பதித்துவிட்டுச் சென்ற ஆண்டு.அதிலும் புலிகளின் தலைவர் இறந்திருக்கலாம் எனில் அது எவ்வாறு நடந்தது என்பதை காட்டும் ஒரு ஒளித்துண்டு இணையத்தில் வந்தது.ஒரு மனிதனின் மீதான வன்முறை எவ்வளவு கோரமாக வெளிப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற எண்ணத்தின் எல்லைகளை மீறிய அந்தச் செயல்கள் எந்த ஒரு நாட்டின் ராணுவமும் செய்யக்கூடிய செயல்களல்ல.

ஒட்டியும் வெட்டியும் பல விவாதங்களும்,பல தியரிகளுக்கான புத்தகங்களும் வெளிவரும் இந்த நேரத்தில் ஒரு உண்மை மட்டும் முகத்தில் அறைகிறது;புலிகள் மற்றும் பிரபாகரனின் இருப்பு மறைந்த சூழலில் இலங்கையில் தமிழர்கள் நீரிலிருந்து எடுத்துப் போடப்பட்ட மீன்கள் போல!கழுகுகளோ அல்லது காக்கைகளோ கொத்துவதற்கு எந்த தடையும் இல்லை;அதைத் தட்டிக் கேட்கவும் எந்த நாதியும் இல்லை.

இந்திய தமிழக அரசுகள் ?

தூ வென காறித் துப்பினாலும் சுரணையற்ற பதவி வெறியர்களின் இருப்பு எங்கும் இருப்பது பற்றிய பொருட்படுத்தலில்லாத மக்களும்,மக்களுக்காக அரசு என்பதைப் காற்றில் பறக்க விட்டு விட்டு ஒட்டுக்களை பணத்தை எறிந்து வாங்கி விட முடியும் என்று நம்பும்,நடத்திக் காட்டும் அரசும் வழமையாகி விடுமோ என்ற பயம் வருகிறது.

2009 க்கான இனிமையான மீள்நினைவு எவருக்கும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.


()


ஜெமோ,மனுஷ்யபுத்திரன்,சாரு தொடர்பான சில நிந்தனை/எதிர் நிந்தனைகள் இணையத்தில் இறைத்து விடப்பட்டிருக்கின்றன.பெரிய மனிதர்களாக வேடம் போடுபவர்களின் சின்னத் தனங்கள் வெளிவரும் போது பொறுக்க முடியாத நாற்றத்தைக் கிளப்பும் என்பதற்கான சான்றுகளே இவை என்று சொல்வதைத் தவிர ஒன்றும் இல்லை.

ஆனால் கவிதைக்கான பார்வை பற்றிய ஜெமோவின் பார்வை பற்றிய ஒரு விளக்கப் பத்தி என்னைக் கவர்ந்தது.கொஞ்சம் புண்-நவீனத்துவமாக இருந்தாலும்!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

மின்மடலில் தொடர...

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...

 • - அன்புடையீர்! பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு
  1 month ago
 • சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...
  2 months ago
 • மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...
  8 months ago
 • மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...
  10 months ago