குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label இலங்கைத்தமிழர். Show all posts
Showing posts with label இலங்கைத்தமிழர். Show all posts

Sunday, July 18, 2010

120.அரசுக்கான தலையங்கம்:இலங்கை-இந்தியா

இலங்கை நிலவரம் பற்றிய இன்றைய தினமணியின் தலையங்கம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்த,தமிழக நலன் சார்ந்த ஏன்,இந்திய நலன் சார்ந்த முக்கிய விதயங்களில் எந்த விதத் தொலைநோக்குமின்றி, குதிரைக்குக் கொள்ளே குறி என்பது போல புறவியல் சார்ந்த எந்த வித நிகழ்வுகளையும் கவனிக்காது,ஒரு நான்கைந்து அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளுக்கு உலகின் பெரிய சனநாயக அரசு முடிவெடுப்பதும், அந்த முடிவுகளில் ஏற்படும் தவறுகளைச் சுட்டாது க்ளௌட் நைன்களில் வாழும் அரசத் தலைமையும் தமிழகத்தின் கேடு.

இனி,தினமணிக்கு நன்றியுடன்...

இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல,​​ இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் பிரச்னை என்று இந்தியா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.​

இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை என்பது இந்திய மீனவர்களைப் பாதிக்கக்கூடியது என்ற வகையில் மட்டுமல்லாமல்,​​ இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு பிரச்னை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும்,​​ இலங்கையில் முல்லைத் தீவு பகுதிகளில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை தயாராகி விட்டதாகத் தெரிகிறது.​ ​ இலங்கையின் வளர்ச்சிப் பணிகளில் துணைபுரிகிறோம் என்கிற சாக்கில்,​​ பெருமளவில் சீனா கால் பதித்திருப்பதுடன் இலங்கை ராணுவத்துக்கும் அதிக அளவில் உதவ முன்வந்திருப்பது,​​ இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் தகர்க்கப்பட்ட நிலையில்,​​ இப்போதைக்கு வட இலங்கையில் வசிக்கும் பெருவாரியான தமிழர்களின் ஒரே வாழ்வாதாரம் கடலில் மீன்பிடிப்பது மட்டுமே.​


விவசாயம் முழுமையாக அழிந்துவிட்ட நிலைமை.​ தொழில்வளம் என்பது பெயருக்குக்கூடக் கிடையாது.​ பழைய நிலைமைக்குத் திரும்பி இந்தப் பகுதிகளில் சகஜ வாழ்க்கை ஏற்பட வேண்டுமானால் குறைந்தது 20 ஆண்டுகளாவது தேவைப்படும் என்கிற சூழ்நிலையில்,​​ இவர்கள் மீன்பிடித்து வாழும் பிழைப்பிலும் மண் விழுந்து விடுமோ என்கிற நியாயமான அச்சம் எழுகிறது.

இலங்கையில் முல்லைத் தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்கிற அறிவிப்பு,​​ பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தேடிக் காத்திருந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல,​​ இந்திய மீனவர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.​ ஆனால்,​​ இந்த அறிவிப்பைத் தொடர்ந்து,​​ நந்திக்கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைக்க சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிப்பதாக வந்த தகவல்,​​ அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நந்திக்கடல் பகுதிகளில் 60.45 சதுர கி.மீ.​ சுற்றளவுக்குப் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.​ இந்தப் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதன் மூலமும்,​​ மீன் பிடிப்பதன் மூலமும் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியில் சீனர்கள் ஈடுபடுவர் என்று ​ கருத வாய்ப்பிருக்கிறது.​ இந்த இறால் பண்ணைத் திட்டத்தை சீன அரசின் உதவியுடன் இலங்கை அரசே மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

ஒருவேளை,​​ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் மரணமடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலியினரின் உடல்கள் இந்தப் பகுதியில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கலாம் என்றும்,​​ சீனர்களின் உதவியுடன் அந்த உடல்களை முறையாக அழிக்காவிட்டால்,​​ தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்படும் என்றும் சில இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.​

இறால் பண்ணை என்கிற பெயரில்,​​ சீன உதவியுடன் நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பிணங்களை அப்புறப்படுத்தித் துப்புரவு செய்யும் நோக்கத்தில்தான் இப்படி ஒரு முயற்சி நடைபெறுகிறது என்கிற ஐயமும் ஏற்படுகிறது.எது எப்படி இருந்தாலும்,​​ இலங்கையின் வடக்குப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை சீனர்களுக்குத் தரப்படுவதை இந்தியா அனுமதிப்பது என்பது,​​ தேவையில்லாத பாதுகாப்பு அச்சுறுத்தலை வலிய வரவழைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.​

ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு,​​ சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டி இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டிருப்பது போதாதென்று,​​ இன்று இல்லையென்றால் நாளை,​​ சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக அணிசேரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாகாது.

ஆப்கானிஸ்தான் பிரச்னையில் இந்தியாவுக்குக் கருத்துச் சொல்லும் உரிமையும்,​​ தனது பாதுகாப்புக் கருதித் தலையிடும் உரிமையும் உண்டு என்று இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் தெரிவிக்கிறார்.​ நேபாளம் இந்தியாவை ஒட்டிய தேசம் என்பதால் அந்த நாட்டு நிகழ்வுகளில் இந்தியாவுக்கு அக்கறை உண்டு என்று பிரதமர் உரிமை கொண்டாடுகிறார்.​ மியான்மரிலும்,​​ வங்க தேசத்திலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான சக்திகள் இயங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்.​


ஆனால்,​​ இலங்கை பற்றிய பேச்சு வரும்போது மட்டும்,​​ இவர்கள் அனைவருமே ஒத்த குரலில் "அது இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட விஷயம்' என்று கைகழுவி வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறார்களே,​​ ஏன்?

அறுபதுகளில் காமராஜ்,​​ பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் தமிழகத்தின் நலனிலும்,​​ இலங்கைத் தமிழர் நலனிலும்,​​ இந்தியாவின் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததுடன்,​​ தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருந்ததால் இலங்கைப் பிரச்னையில் அன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளித்து வந்தனர்.​ எழுபதுகளில்,​​ சி.​ சுப்பிரமணியம்,​​ பழ.​ நெடுமாறன் போன்றோர்,​​ தென்னிந்தியா அமைதிப் பூங்காவாக இருக்க இலங்கை இந்தியாவுக்கு அடங்கி இருப்பது அவசியம் என்பதை தில்லிக்கு உணர்த்திச் செயல்பட வைத்தனர்.எண்பதுகளில் எம்.ஜி.ஆர்.,​​ ஆர்.​ வெங்கட்ராமன்,​​ ஜி.கே.​ மூப்பனார் போன்றவர்களின் வார்த்தைக்கு தில்லி செவி சாய்த்தது.​ இலங்கை அரசு நமது கட்டுக்குள் அடங்கி இருந்தது.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையும்,​​ தமிழர்கள் மீதான தொடர் தாக்குதல்களும்,​​ வருங்காலத்தில் தென்னிந்தியாவின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து,​​ மத்திய அரசைப் புரிய வைத்து,​​ நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டதன் விளைவு,​​ இப்போது சீனா இலங்கையில் பலமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டிருக்கிறது.இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க,​​ அருணாசலப் பிரதேசமும்,​​ அந்தமான் நிக்கோபார் தீவுகளும் மட்டுமல்ல,​​ ஒட்டுமொத்த இந்தியாவே ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படப் போகிறது.​

ஒரு ராஜபட்சவை எதிர்கொள்ளும் ராஜதந்திரம்கூடத் தெரியாதவர்களின் கையில் நாடும்,​​ ஆட்சியும்,​​ அதிகாரமும் சிக்கிச் சீரழிகிறது.​ இந்தக் குழம்பிய குட்டையில் ஏன் சீனாவும்,​​ இலங்கையும் மீன் பிடிக்க முற்படாது?

Tuesday, February 24, 2009

95.தமிழன் : சாதனைச் சிகரமும்,வேதனை அவலமும்





தமிழனுக்கு ஒரு ஆஸ்கர் பரிசு கிடைப்பது எக்காலம் என்று பல காலம் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது போல இருந்த சூழல்தான் இதுவரை இருந்தது.





ஆஸ்கர் வெல்லப்பட்டால் கமலஹாசன்,மணிரத்னம் மற்றும் சங்கர் போன்றோர்தான் எப்போதாவது அதை சாதிக்க முடியும் என்று பரவலான ஒரு எண்ணமும் எதிர்பார்ப்பும் இருந்தது.ஆனால் இனிய ஒரு தென்றல் போல,மின்னும் மின்னல் வீச்சைப் போல,ஒளிர்ந்து மிளிரும் வாள்வீச்சின் கூர் போல சட சடவென கோல்டன் குளோப்,பாஃப்டா,ஆஸ்கர் என்று ஒரே வீச்சில் விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறார் ரகுமான் என்ற திலீப்குமார்.அதுவும் ஒன்றுக்கு இரண்டாக !



Slum dog Millionaire என்ற அந்தப் படத்தின் மையக்கருத்து ஒரு சாதாரணன் கோடீஸ்வர ஜாக்பாட் அடித்த சம்பவத்தை விவரிக்கும் விவரணத்தைச் சொல்லும் படமென்றாலும் அதன் பின்னணிக் கதை இந்தியாவின்,மும்பையின் ஏழ்மை வாழ்வின் அவலங்களை,அவற்றின் அவல மற்றும் கேவலப் பார்வையுடன் முன்வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.அந்தப் படம் சொன்ன உள்ளார்ந்த செய்தியை என்னால் சிலாகித்துப் பாராட்ட முடியவில்லை,அது உண்மையாக இருந்த போதிலும்! ஒரு பார்வையாளனின் பார்வையோடு சேர்க்கப்பட்ட ஏழமை வாழ்வு மற்றும் மும்பை வாழ்வின் கலவரங்கள் சார்ந்த ஒரு எள்ளலும் அந்தப் படத்தின் சம்பவங்களில் மறைந்திருந்தது.சொல்லப் போனால் அமெரிக்க நிலவரத்தில்,வாழ்வியலில் இந்தப் படத்திற்கு கிடைத்த அதீத வெளிச்சத்தின் பின்னணி,இந்தியாவின் அவலத்தின் மீது வெளிச்சமடிக்கும் வெள்ளைத் தோலின் ஆர்வமே காரணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.



இந்தப்படம் சார்ந்த தி சண்டே இந்தியன் பத்திரிகையின் ஆசிரியர் எழுதும் வலைப்பக்கத்தில்-Passionate About India- இந்தப் படம் சார்ந்த பதிவு, இந்த வெள்ளை மனோபாவத்தின் நீள அகல ஆழங்களை சரியான பார்வையில் முன் வைக்கிறது.அந்தப் பதிவின் பல பார்வைகளுடன் நான் ஒத்துப் போகிறேன்.



ஆனால் இவை எல்லாம் இந்தப் படத்தின் ஆன்மாவைப் பற்றியவை.



இந்த எல்லாவற்றின் மத்தியிலும் ஒரு படமாக சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் எடிட்டிங்,ஒளிக்கோர்வை,இயக்கம் ஆகியவற்றில் இந்தப்படத்தின் ஆக்க நேர்த்தி வியக்க வைத்த ஒன்று.நான் பார்க்கக் கிடைத்த இணையப் பிரதியிலும் கூட படத்தின் தெளிவும் மற்ற மேற்கூறிய நேர்த்தியும் பாராட்ட வைத்தது உண்மை.



ரகுமானைப் பொறுத்தவரை அவரது இசை subtle ஆக படத்தின் கதையோடு கூடவே இழைந்து சென்றது என்று தாராளமாகச்சொல்லலாம்.சிலர் இசை தனித்துக் கொண்டாடும் அளவுக்கு இல்லை என்று கருத்தளித்தார்கள்.தனித்துத் தெரியாத அந்த இசைதான் ரகுமான் இந்தக் கதைக்கு அளித்த பலம் என்று எனக்குப் படுகிறது.அந்தக் கடைசிப் பாட்டு ஒரு கொண்டாட்டம்.





எனவே எதிர் பார்த்த படி இசைக்கோர்வை மற்றும் அந்தக் கடைசிப்பாடல் இரண்டிலும் விருது வென்றிருக்கிறது.ரகுமான் பாராட்டப் படவும் கொண்டாடப்படவும் வேண்டியவர்.





பாராட்டுக்கள் சக தமிழா!





ஆனால் ஒரு படமாக அவருடைய ரங் தே பசந்தி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் மேலும் நெகிழ்வூட்டியவை என்பதையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.





மேலும் இந்த நேரத்தில் ஆஸ்கர் ஆஸ்கர் என்று சுமார் 10,20 ஆண்டுகளாகப் பீலா விட்டுக்கொண்டிருக்கும் கமலஹாசன் வகையறாக்கள் ஒரு படத்தின் ஆக்க நேர்த்தி சார்ந்த விதயங்களில் பார்த்து திருத்திக் கொள்ள வேண்டிய வகையான படம் Slum dog Millionaire.தசாவதாரம் போன்ற படங்களுக்கெல்லாம் ஆஸ்கர் கிடைக்கும் என்ற,அந்தப் படம் வெளிவந்த நேர ஊடகப் பீலாவை நினைக்கையில் சிரிப்பு பீரிடுகிறது.







0 0 0





ஹரனின் இந்தக் கருத்துப் படம் சொல்வதை விட இலங்கை நிகழ்வுகளை வார்த்தைகள் விவரித்து விட முடியாது.






அங்கு நிகழும் செயல்களைப் பார்த்தால் மனம் பதறுகிறது.மன அதிர்ச்சிக்கும் அவலத்திற்கும் விளிக்கப் படவேண்டிய எல்லா சொற்களையும் தாண்டிய அவலத்தைப் பிரதிபலிக்கிறது இலங்கைத் தமிழர்களின் நிலை.வாருங்கள்,பாதுகாப்பு தருகிறோம் என்று கூப்பிட்டு பாஸ்பரஸ் குண்டுகளை வீசி அவர்களை அழிக்கும் ஒரு அரசை என்னவென்று வகைப்படுத்துவது என்று தெரியவில்லை.








கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட எண்ணற்ற இளைஞர்களின் பிணங்கள் வன்னி,புதுக் குடியிருப்பு பகுதிகளில் கேட்பாரற்றுக் கிடப்பதாக ஐநா சார்ந்த ஊடகவியலாளர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.





விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்,ராஜீவைக் கொன்றார்கள் போன்ற பார்வைகளெல்லாம் நீர்த்துப் போகும் அளவுக்கு இருக்கிறது அப்பாவி மக்களின் அவல நிலை.இந்தியா பேசா மடந்தையாக இருப்பதுடன் இலங்கை அரசுக்கு தார்மீக ஆதரவு தருகிறது என்ற நிலைப்பாடு தந்த இறுமாப்பில் இந்த நிலையை முழுதும் உபயோகப்படுத்தி இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் முற்றாக அழித்து விடலாம் என்ற எண்ணத்துடன்தான் கோத்தபய மற்றும் ராஜபட்சேயின் கூட்டணி செயல்படுகிறது.புலிகளுடன்தான் சண்டையிடுகிறோம் என்று சொல்லும் இந்தக் கூட்டணியின் தாக்குதல்களுக்குப் பெருமளவு பலியாபவர்கள் அப்பாவிகளே!இவர்கள் அனைவரையும் கொன்ற பின்னால்தான் புலிகளை அழிக்க முடியும் என்பது ஒரு கேணவாதம்.அந்த நிலையிலும் புலிகள் பிடிபடவோ அழிபடவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.இன்னும் புலிகளைப் பிடிக்கவோ,அழிக்கவோ இலங்கை விரும்பினால்,அங்குள்ள தமிழர்களின் மனங்களை வென்றால்தான் அது சாத்தியம்;இலங்கையோ அவர்களின் பிணங்களை வெல்கிறது....





இந்தியாவின் மைய அரசு இந்த விவகாரத்தை அணுகுவது சோனியா என்ற தனி மனிதப் பெண்ணின் பார்வையில் தான் என்று கருதுவதற்கான சாத்தியங்கள் மிகவும் தெரிகின்றன.ஒரு அண்டைய தேசத்தின் அரசாக,தமிழர்களை குடிகளாகக் கொண்ட இந்திய அரசு இலங்கை விதயத்தில் மிகத்தவறான பார்வையில்,செயல்பாட்டில் இருக்கிறது.





அமெரிக்க அரசை தலையிட வைக்க வேண்டும் என்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரிதும் முயற்சிக்கும் இந்த வேளையில்,அமெரிக்கா அவல நிலையில் இருக்கும் முல்லைத்தீவு அப்பாவித் தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்கில் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.





இது நடந்தால் மிக நல்லது.அப்படி அமெரிக்கத் தலையீட்டிலாவது இலங்கைத் தமிழ் மக்களின் அவலம் குறைந்தால் இந்திய அரசு தன் அசட்டு முகத்தைத் எங்கே வைக்கும் என்று தெரியவில்லை!



Monday, January 26, 2009

92.ஒரு நேர்மறை பத்திரிகையாளரின் வாக்குமூலம்

இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் போர்நடவடிக்கைகள் புலிகளுக்கு எதிராக இருப்பதை விட அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதைத்தான் முக்கியமாகச் செய்து வருகிறது என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளக் கூடியது.

இதே சமயத்தில் புலிகளைப் பற்றிய வன்மையான கண்டனங்ளும் ஆங்காங்கே எழுகின்றதையும் பார்க்கிறோம்.

இது போன்ற சூழலில் சமீபத்தில் இலங்கையின் ஒரு பத்திரிக்கையாளர்(லசந்த விக்ரமசிங்க) படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.அவர் இறக்கும் முன் எழுதி வைத்திருந்த பத்திரிகைக்கான தலையங்கம் இன்றைய இலங்கை நிலையை முற்றாக முன்வைக்கிறது எனத் தோன்றுகிறது.

சண்டே லீடரில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர் மகிந்தவின் இளமைக்கால நண்பராகத் தன்னை சுட்டிக்கொண்டிருக்கும் நேரத்திலும் அவரின் தலையங்க வரிகள் மகிந்த செய்யும் அராஜகங்களை முன்வைக்கின்றன.

தமிழக சூழலில் கூட இது போன்ற தார்மீக தைரியத்துடன் செயல் படும் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை முன் வைக்கிறது இவருடைய எழுத்து !


(இலங்கையிலிருந்து வெளியாகும் 'சண்டே லீடர்' என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க, 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக கடந்த ஜனவரி 7-ம் தேதி எழுதிய தலையங்கம் இது. இதை எழுதி முடித்த மறுநாளே அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தனது மரணத்தின் பாதையை அறிந்திருந்த அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் அமைந்துள்ளது.)

ராணுவத்தைத் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் - தொழில் நிமித்தமாக - அந்த தொழில்புரிபவர்களின் உயிரை பலியாக கேட்பதில்லை: இலங்கையில் இந்த வகையில் பத்திரிகைத் தொழிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்படுவது, வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவது, மூடப்படுவது, பலவந்தமாக நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எண்ணற்ற செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அனைத்தும் - கடைசி அம்சம் உட்பட - எனக்கும் பொருந்தும் என்பது எனக்கு மிகவும் சிறப்பு செய்வதாக உள்ளது.

பத்திரிகைத் தொழிலில் மிக நீண்ட காலமாக நான் இருந்து வருகிறேன். உண்மையில், இந்த 2009ம் ஆண்டு, சண்டே லீடர் பத்திரிகையின் 15ம் ஆண்டாகும். இந்த காலக்கட்டத்தில் இலங்கையில் பல மாறுதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் விரும்பத்தக்கவை அல்ல என்பதை நான் உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எல்லையில்லா ரத்த தாகம் கொண்டவர்களால் இரக்கமற்று தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். பயங்கரவாதிகளாலோ, அரசாங்கத்தாலோ ஏவப்படும் பயங்கரவாதம் என்பது நமது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. சுதந்திரத்தை முடக்கவிரும்பும் அரசு முக்கிய நடவடிக்கையாக படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது. இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். நாளை நீதிபதிகள் கொல்லப்படுவார்கள். இந்த இரு தரப்பினருக்கும் ஆபத்துகள் அதிகரிக்கின்றன. நம்பிக்கைதான் குறைந்து வருகிறது.

இருந்தபோதிலும் ஏன் இந்த தொழிலை தொடர்ந்து செய்கிறோம் என்று நான் அவ்வபோது ஆச்சரியப்படுவதுண்டு. நானும் ஒரு கணவன்தான். எனக்கும் மூன்று அருமையான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன, நான் சட்டம் அல்லது பத்திரிகை ஆகிய எந்தத் துறையில் இருந்தாலும். ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவது தேவைதானா? தேவையில்லை! என்றே பலரும் கூறுகின்றனர். நண்பர்கள் என்னை வழக்குரைஞர் தொழிலுக்கு திரும்புமாறு கூறுகின்றனர். அத்தொழில் எனக்கு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான வாழ்வை தரும் என்று அவர்கள் நம்புகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு வருமாறு என்னை அழைக்கின்றனர், நான் விரும்பும் துறைக்கு என்னை அமைச்சராக்குவதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் ஆபத்துகளை உணர்ந்த வெளிநாட்டுத்தூதர்கள், என்னை இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் - அவர்கள் நாட்டில் பாதுகாப்பாக வசிக்குமாறும் அழைக்கின்றனர். எனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் ஒன்றைக்கூட நான் செய்வதாக இல்லை.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது.

நாங்கள் என்ன பார்க்கிறோமோ அதை, அவ்வாறே மண்வெட்டி என்றோ, திருடன் என்றோ, கொலைகாரன் என்றோ அப்படியே எழுதுவதால் சண்டே லீடர் பத்திரிகை சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. நாங்கள் வார்த்தை விளையாட்டுகளுக்கு பின்னே பதுங்குவதில்லை. நாங்கள் வெளியிடும் புலனாய்வு செய்திகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படுகின்றன. அதற்காக ஆபத்து வரும் வாய்ப்புகள் இருப்பது தெரிந்தும் எங்களுக்கு ஆதாரங்களை வெளிப்படுத்தும் சமூகப்பொறுப்புள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்துவிட்டதாக யாரும் நிரூபித்தது இல்லை. அதேபோல எங்களுக்கு எதிரான எந்த வழக்குகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும் இல்லை.

சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்கு காட்டும். பத்திரிகைகளின் மூலமாகத்தான் நாட்டின் நிலை குறித்தும், நாட்டை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள முடியும். இந்த தலைவர்கள்தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சில நேரங்களில் இந்த கண்ணாடியின் மூலம் நீங்கள் பார்க்கும் உருவம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலைக்காக நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்காக அந்த கண்ணாடியை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றனர். இதுதான் எங்களுக்கான அழைப்பு - நாங்கள் புறக்கணிக்க முடியாத அழைப்பு.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எங்கள் பார்வையை நாங்கள் மறைத்ததில்லை. இலங்கையை ஒரு வெளிப்படையான, மதசார்பற்ற, சுதந்திர ஜனநாயக நாடாக நாங்கள் பார்க்க விரும்பினோம். இந்த வார்த்தைகளுக்கு உள்ளே இருக்கும் பொருளை கவனியுங்கள். வெளிப்படையாக என்றால் அரசு என்பது மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக, அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாததாக இருக்க வேண்டும். மதசார்பின்மை என்பது, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட - பல கலாசாரங்களை கொண்ட நம்முடைய சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான முக்கியமான கருத்தாகும். சுதந்திரம் என்பது, மனிதர்கள் பலவிதங்களில் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இருக்கும் முரண்பட்ட விதங்களிலேயே ஏற்றுக்கொள்வதுமாகும். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுவதல்ல. மேலும் ஜனநாயகம் என்பது… இது ஏன் முக்கியமானது? என்பதையும் நான் விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், மன்னிக்கவும்! நீங்கள் இந்த பத்திரிகையை வாங்குவதை நிறுத்திவிடுவதே நல்லது.

பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு கருத்தை கேள்விகேட்காமல் எழுதுவதன் மூலம் - பிரதிபலிப்பதன்மூலம் சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு தேடியதில்லை. கருத்து முரண்பாடுகளை எதிர்கொள்வதன் மூலமாகவே இதுவரை பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் கூறிய கருத்துகள் மக்களில் பலருக்கும் சுவை அளிப்பதாக இல்லை என்பது தெரியும். உதாரணமாக, தனிநாடு கேட்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கான மூல காரணங்களை கண்டறிந்து அவற்றையும் களைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இலங்கை இனப்பிரசினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்காமல், வரலாற்று நோக்கிலும் இந்த பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறோம். பயங்கவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நாடு உலகிலேயே இலங்கை ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கூறி அதை எதிர்த்து வருகிறோம். இத்தகைய கருத்துகளுக்காக நாங்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே தேசவிரோதம் என்றால் அதை பெருமிதத்துடன் ஏற்கிறோம்.

சண்டே லீடர் பத்திரிகைக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்: எதிர்கட்சிகள் மீதல்ல. கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆட்சியின் அத்துமீறல்களை, ஊழல்களை வெளிக்கொணர்ந்து அன்றைய ஆட்சியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக நாங்கள் இருந்தோம். இத்தகைய எங்களின் போக்கும் அந்த ஆட்சி வீழ காரணமாக இருந்தது.

போரை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதற்காக நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. உலகில் உள்ள மிகவும் இரக்கமற்ற - ரத்தவேட்கை கொண்ட இயக்கங்களில் ஒன்றாக அந்த இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு கூறுவதால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதையும், அவர்கள் மீது இரக்கமற்று துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுமழை பொழிவதையும் ஏற்க முடியாது. ஏனெனில் அது தவறானது மட்டுமல்ல, புத்தரின் தம்மத்தை பாதுகாப்பதாக கூறும் நாம் வெட்கப்படவேண்டியதும் ஆகும். இத்தகைய அத்துமீறிய தாக்குதல்கள், செய்தித்தணிக்கை காரணமாக பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்று சேர்வதில்லை.

இதைவிட நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களின் சுயமரியாதையை இழந்து, நிரந்தரமாக இரண்டாம்தர குடிமக்களாக வசிக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பின்னர், அப்பகுதியில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதன்மூலம் சீற்றத்தை தணிக்கமுடியும் என்று கனவு காணக்கூடாது. இந்தப்போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக தமிழ் மக்களிடம் மேலும் கசப்புணர்வும், வெறுப்புணர்வுமே ஏற்படும். அதை சமாளிப்பது எளிதல்ல. அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை, அனைத்து தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்ப்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். நான் கோபமடைந்தும், சலிப்புற்றும் இருக்கிறேன் என்றால், எனது நாட்டு பெரும்பான்மை மக்களும் - முழு அரசும் - வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மையை பார்க்கத்தவறுவதால்தான்.

நான் இரண்டு முறை தாக்கப்பட்டதும், எனது வீடு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டாலும், இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடத்தி, இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அனைத்து சம்பவங்களும் அரசின் தூண்டுதல் காரணமாகவே நடந்தது என்று நான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இறுதியில் நான் கொல்லப்பட்டால், அரசுதான் என்னை கொன்றிருக்க வேண்டும்.

இதில் துயரமான வேடிக்கை என்னவென்றால், நானும் மஹிந்தாவும் கடந்த கால்நூற்றாண்டாக நண்பர்களாக இருப்பது பொதுமக்களில் பலருக்கும் தெரியாது. அவரை அவரது முதல் பெயரான 'மஹிந்தா' என்ற பெயரிலும், சிங்கள மொழியில் அழைக்கும் 'ஓயா' என்று அவரை இன்றும் அழைக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன். அதிபர் மாதத்திற்கு ஒருமுறை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கும் கூட்டத்திற்கு நான் செல்வதில்லை. எனினும் சில பின்னிரவு நேரங்களில் தனியாகவோ, நெருங்கிய நண்பர்கள் சிலருடனோ அதிபரின் இல்லத்திலேயே சந்தித்து அரசியலைப்பற்றியும், பழைய இனிமையான நாட்களைப் பற்றியும் பேசுவதுண்டு. இந்த இடத்தில் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.

நண்பர் மஹிந்தா! கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நீங்கள் உருவெடுத்தபோது, எங்கள் பத்திரிகையைப்போல இதமான வரவேற்பு உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை. உண்மையில் உங்கள் முதல் பெயரை குறிப்பிடுவதன்மூலம் பல்லாண்டாக நடைமுறையில் இருந்த சம்பிரதாயங்களை உடைத்தோம். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீது அப்போது நீங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக உங்களை நாங்கள் வரவேற்றோம். ஆனால் 'ஹம்பன்டோடா'வுக்கு உதவும் முறைகேட்டில் நீங்கள் முட்டாள்தனமாக ஈடுபட்டபோது நாங்கள் கனத்த இதயத்தோடு அதை வெளியிட்டோம். மேலும் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்கும்படியும் வலியுறுத்தினோம். அதை நீங்கள் பல வாரங்கள் கடந்து செய்தீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பில் மிகப்பெரும் தீயவிளைவை அது ஏற்படுத்தியது. அது உங்களை இன்றளவும் துரத்தி வருகிறது.

அதிபர் பதவி மீது உங்களுக்கு ஆர்வமில்லை என்று நீங்களே என்னிடம் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் அதிபர் பதவியைத்தேடி செல்லவில்லை: அப்பதவி தங்கள் மடியில் விழுந்தது. உங்கள் மகன்களே உங்களின் மகிழ்ச்சி என்றும், அரசு நிர்வாகத்தை உங்கள் சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் மகன்களோடு நேரத்தை செலவிடுவதே உங்களுக்கு விருப்பமானது என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் தந்தை இல்லாது போகும் சூழலில் அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது.

எனக்கு மரணம் ஏற்படும்போது, நீங்கள் வழக்கமான சடங்குச் சொற்களை கூறுவதோடு, முழுமையான விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் இதே போன்ற மற்ற சம்பவங்களில் நடந்ததைப்போல இந்த விசாரணையிலும் எந்த உண்மையும் வெளிவராது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உண்மையை சொன்னால், எனது மரணத்திற்கு பின்னால் யார் இருப்பார்கள் என்பது நாம் இருவருக்கும் தெரியும், அந்த பெயரை சொல்லும் துணிவு உங்களுக்கு இல்லாவிட்டாலும்கூட. ஏனெனில் என் வாழ்க்கையோடு, உங்கள் வாழ்க்கையும் அந்த உண்மையில் சிக்கியிருக்கிறது.

இலங்கை தேசம் குறித்து நீங்கள் இளமையில் கண்ட கனவுகள், நீங்கள் அதிபராக பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உடைந்த செங்கற்களைப்போல தூள்தூளாகி விட்டது. தேசபக்தி என்ற பெயரில் மனித உரிமைகளை பறிப்பதிலும், ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதிலும், பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடியதிலும் மற்றெந்த அதிபரையும்விட நீங்களே மிஞ்சி இருக்கிறீர்கள். உண்மையை சொல்லப்போனால், பொம்மை கடையில் இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதாரணம்கூட உங்களுக்கு பொருந்தாது. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணில் ஏற்படுத்திய ரத்தக்கறையையும், குடிமக்களின் மனித உரிமைகளை பறித்ததையும்போல எந்த குழந்தையாலும் செய்ய முடியாது. நீங்கள் பதவி போதையில் மூழ்கி இருப்பதை உங்களால் உணரமுடியாது: இந்த போதை தலைக்கேறிய நிலையில் உங்கள் மகன்கள் இருப்பதை பார்த்து நீங்கள் வருந்தும் நிலை ஏற்படலாம். அது துயரத்தையை கொண்டுவரும். என்னைப் பொறுத்தவரை, தெளிவான மனநிலையில் என்னை படைத்தவனிடம் நான் செல்கிறேன். உங்களுக்கான நேரம் இறுதியாக வரும்போது, நீங்களும் அதையேசெய்வீர்கள் என்று நம்புகிறேன். அதை விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் எந்த தனிமனிதனுக்கும் பணியாமல், தலை நிமிர்ந்து வாழ்ந்த நிறைவு இருக்கிறது. நான் இந்தப்பாதையில் தனியே பயணம் செய்யவில்லை. சக பத்திரிகையாளர்களும் என்னோடு பயணம் செய்துள்ளனர். அவர்களில் பலர் கொல்லப் பட்டுள்ளனர்: விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்: தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதிபரான நீங்கள் முன்னொரு காலத்தில் எந்த பத்திரிகை சுதந்திரத்துக்காக பாடுபட்டீர்களோ, அதே பத்திரிகை சுதந்திரத்திற்காக தற்போது பாடுபடும் மேலும் சில பத்திரிகையாளர்கள் மரணத்தின் நிழலில் உள்ளனர். எனது மரணம் தங்கள் கண்காணிப்பின் கீழ் நிகழ்வதை நீங்கள் மறக்கவே முடியாது. எனது கொலையாளிகளை நீங்கள் பாதுகாப்பதைத்தவிர வேறு வாய்ப்பில்லாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படாதவகையில் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன். உங்களை பதவியில் அமர்த்தியுள்ள உங்கள் குடும்பத்தினர், உங்கள் பாவங்களுக்காகவும் கடவுளிடம் நீண்ட நேரம் முழந்தாளிட்டு பாவமன்னிப்பு கேட்பார்கள்.

சண்டே லீடர் பத்திரிகையின் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்கள் பணியில் துணை நின்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினரின் நலன்களுக்காக, குரல் எழுப்பக்கூட நாதியற்றவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறோம். வேர்களை மறந்துவிட்டு தலை கொழுத்து திரிபவர்களின் ஊழல்களை வெளிப்படுத்தி உங்கள் வரிப்பணம் விரயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தி இருக்கிறோம். அரசுத்தரப்பில் கூறப்படும் பிரச்சாரங்களுக்கு மாற்றாக உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறோம். இதற்கான விலையை ஒரு நாள் கொடுக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும். அதனை நானும் - என் குடும்பத்தினரும் தற்போது கொடுக்கிறோம். நான் அதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இதனை தடுக்க நான் எதையும் செய்யவில்லை: முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ இல்லை. ஆயிரக்கணக்கான படுகொலைகளை கண்டிக்கும்போது மனித கேடயங்களின் பின் பதுங்கிக்கொள்ளும், எனது கொலையாளியைப்போல நான் கோழை இல்லை என்பதை அவன் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உயிர் யாரால் எப்படி கவரப்படும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது எப்போது நடைபெறும் என்பதுதான் மீதமுள்ள கேள்வி.

சண்டே லீடர் பத்திரிகை தனது அறம் சார்ந்த யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் என்பதும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நான் இந்தப்பணியில் தனித்து செயல்படவில்லை. இந்த பத்திரிகை வீழ்த்தப்படுவதற்கு முன்னர் எங்களில் பலர் கொல்லப்படவேண்டும் - கொல்லப்படுவார்கள். அதுவரை சண்டே லீடர் பத்திரிகை மக்களுக்காக போராடும். எனது கொலை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படாமல், கருத்துரிமைக்காக தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கான தூண்டுதலாக செயல்படும் என்று நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கொலை, இலங்கையில் மனித விடுதலைக்கான புதிய யுகத்தை படைப்பதற்காக போராடும் சக்திகளை இணைக்க உதவி செய்யும் என்றும் நம்புகிறேன். தேசபக்தியின் பெயரால் பல படுகொலைகள் நடந்தாலும், மனிதநேயம் மேலும் செழித்து வளரும் என்றும் அது அதிபரின் கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன். எத்தனை ராஜபக்சேக்கள் சேர்ந்தாலும் மனிதநேயத்தை அழித்துவிட முடியாது.

நான் இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் இறங்க வேண்டுமா என்று பொதுமக்கள் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காலம் மாறும்போது இந்த அநீதிகளும் மாறிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனக்கும் அது தெரியும்: அது தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால் இப்போது நாம் பேசாவிட்டால், பின்னர் பேசுவதற்கு யாரும் மிஞ்சாமலே போய்விடக்கூடும். அவர்கள் சிறுபான்மையினராக, ஒடுக்கப்பட்டவர்களாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஜெர்மானிய மதத் தத்துவாதியாகிய மார்ட்டீன் நீய் மொல்லர் என்பவரின் வாழ்க்கை அனுபவமே எனது பத்திரிகை வாழ்க்கை முழுக்க எனது உந்து சக்தியாக செயல்பட்டு வந்தது. யூதர்களுக்கு எதிரான கருத்து கொண்ட இவர், இளமைக்காலத்தில் ஹிட்லரின் ஆதரவாளராக இருந்தார். ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் ஜெர்மனியை கைப்பற்றியவுடன், ஹிட்லரின் கொள்கை நாஜிக்களை மட்டுமே அழிப்பதல்ல என்பதையும், ஹிட்லருக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் அழிப்பதே ஹிட்லரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டார். ஹிட்லருக்கு எதிரான கருத்துகளைக்கூறிய மார்ட்டீன் நீய் மொல்லரும் நாஜிப்படையால் பிடிக்கப்பட்டு1937 முதல் 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்குமுன் எழுதிய கவிதையை நான் என் இளம்பருவத்தில் படித்தேன். என் நெஞ்சில் நிலைத்த அந்த கவிதை இதோ:

முதலில் அவர்கள் யூதர்களை பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளை பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னை பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் - அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல: அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப்பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...