1985’ம் வருடம் என நினைக்கிறேன்.
அப்பா அப்போது வைத்திருந்த வாகனம் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்.உங்களில் எத்தனை பேருக்கு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் பற்றி தெரியும் எனத் தெரியவில்லை.
இப்பொதைய காலங்களில் ஸ்கூட்டரே அருகி வருகிறது;பதிலாக ஸ்கூட்டிகளில் இளம்பெண்கள் சிறகடிக்கிறார்கள்,பார்க்க மகிழ்வாயிருக்கிறது என்றாலும் அவர்கள் கையில் லாம்ப்ரட்டா ஸ்கூட்டரைக் கொடுத்தால்,கதறி காலில் விழுந்து விடுவார்கள் என நினைக்கிறேன்.
காரணம் லாம்ப்ரட்டாவின் எடை மற்றும் கையாள்வதில் உள்ள சிரமங்கள் !
பொதுவாக 70 களில் இறுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் இந்திய இருசக்கர வாகன உலகில் வெகு சில வாகனங்களே உலவி வந்தன.வெகு கம்பீர வாகனப் பிரியர்கள் என்ஃபீல்ட் புல்லட் வைத்திருப்பார்கள்,அது பெரும்பாலும் தனிப்பட்ட சவாரிக்கு மகிழ்வைத்தரும் வாகனமாக இருக்குமே ஒழிய குடும்பவாகனமாக இருக்க வாய்ப்பில்லை,ஏனெனில் பெண்கள் புல்லட்டின் பின் இருக்கையில் அமர்வது ஒரு சௌகர்யக் குறைவான விதயம்.எனவே மனைவியுடன்-சிலசமயம் இரு குழந்தைகளுடன் கூடவும்-செல்ல நடுத்தர வாசிகள் பெரிதும் பயன்படுத்திய வாகனம் ஸ்கூட்டர் மட்டுமே.அதைவிட எளிதான சவாரிக்கு லூனா,சுவேகா என்ற இரு வாகனங்கள் இருந்தன.இவை இரண்டும் இன்றைய டிவிஎஸ் 50 ன் முன்னோடிகள்.
எங்கள் வீட்டுக்கு முதலில் வந்த வாகனம் ஸ்கூட்டர்.
அக்கால கட்டத்தில் இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் ஸ்கூட்டர் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தன.ஒன்று பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் மாடல்.இரண்டாவது எல்.எம்.எல் நிறுவனத்தின் லாம்ப்ரட்டா ஸ்கூட்டர்.இது தவிர வெஸ்பா என்ற ஸ்கூட்டரும் இருந்தது,ஆனால் வாங்குபவர்கள் குறைவு.
இதில் பஜாஜ் சேத்தக் தான் ஸ்கூட்டர்களின் ராணி;சொசுசான இஞ்சின் இயக்கம்,வெகு லாவகமான ஹாண்டில்பார் கையாள்கை,ஒருமுறை கூட முழுதாக அழுத்த வேண்டாத,சுமார் பாதி அளவு கிக்கரிலேயெ இயங்க ஆரம்பித்துவிடும் தயார்நிலை,லாம்ப்ரட்டாவுடன் ஒப்பிடுகையில் மிகுந்த எடை வித்தியாசம் ஆகிய காரணங்களால் ஸ்கூட்டர் காதலர்களின் முதல் கனவாக இருந்தது பஜாஜ் சேத்தக்.இதனுடன் ஒப்பிடுகையில் லாம்ப்ரட்டாவை இன்றைய அம்பாசடருக்கும்,சேத்தக்'கை மாருதி ஆல்டோ'வுக்கும் ஒப்பிடலாம்;லாம்ப்ரட்டாவின் எடை அதிகம்;நிறுத்த ஸ்டாண்ட் போட,பின்னிழுக்க நல்ல உடல் பலம் வேண்டும்;மேலும் இஞ்சினின் கமறல்,ஓடுவதன் லாவகம் எல்லாம் சேத்தக்குடன் ஒப்பிட்டால்,மடுவுக்கும்,மலைக்குமான வித்தியாசம்...
ஆயினும்....
பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் வாங்க வேண்டுமெனில் பதிந்து வைத்து விட்டு காத்திருக்க வேண்டும்,சுமார் 18 மாதங்களாகும்,நமக்கான வண்டி தயார் என்ற அறிவிப்பு வர !
இல்லையெனில் வெளிநாட்டில் இருந்து வரும் வரைவோலை-டிமாண்ட் ட்ராஃப்ட்- கொடுத்தால் ஓரிரு மாதங்களில் டெலிவரி கொடுப்பார்கள்;அன்னிய செலாவணியை ஊக்கப் படுத்தும் விதத்தில் அந்த விதிமுறை இருந்திருக்கலாம்.
இந்த இரண்டு வழிமுறைகளிலும் அப்பாவிற்கு சங்கடங்கள் இருந்திருக்க வேண்டும்.அவர் தனக்கான,குடும்பத்திற்கான பயன்பாட்டுக்கு ஏதாவது முதலீடு,வசதிகள் செய்ய வேண்டும் என நினைத்தால் சட்டென செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்,அதாவது அந்த முடிவுக்கு வர வெகுகாலம் யோசிக்கலாம்,ஆனால் முடிவெடுத்து விட்டால்,காரியங்கள் சட்டென் நடைபெற வேண்டும்,அதற்கான காத்திருப்புகள் சலிப்பேற்படுத்துபவை,நமக்கு செய்ய வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன....
எனவே எங்கள் வீட்டுக்கு 70 களின் இறுதியில் ஒரு நீல நிற லாம்ப்ரட்டா வந்து சேர்ந்தது.மதுரையில் வாங்கப்பட்டு,எங்கள் ஊருக்கு அப்பாவாலேயே ஓட்டிவரப்பட்டது அந்த லாம்ப்ரட்டா.கூடத்துணையாக பழக்கமான மெக்கானிக் ஒருவர் சென்றதாக நினைவு.
கிராமமும்,கிராமங்கள் சார்ந்த வாழ்வாதாரங்களாக இருந்த எங்கள் பகுதியில் ஓரளவு பெரிய ஊர் எங்கள் ஊர் தான்.நகரமுமல்லாத கிராமமுமல்லாத இது போன்ற ஊர்களில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு,தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பது போன்றது.
வியாபாரம்,வேலை விதயமாக அருகாமை ஊர்களுக்குப் போவதாக இருந்தாலும் சரி,அலுவலகம் சார்ந்த பணிக்கு எவரையும் பார்க்கப் போவதாக இருந்தாலும் சரி,வாரத்தின் இரு நாட்கள் கூடும் சந்தையில் காய்கறிகள் வாங்க அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டுமானாலும் சரி,அபூர்வமான ஞாயிறுகளில் திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் – அப்பா ஓட்ட,அம்மா பின் இருக்கையில்,நான் ஸ்கூட்டரின் முன்பாகம் இருக்கும் இடத்தில்-ஓட்டுபவருக்கும்,ஹாண்டில்பாருக்கும் இடைப்பட்ட மேடைபோன்ற கால் வைத்துக் கொள்ளும் இடம்-நின்று கொள்ள செல்லும் குடும்ப சவாரியாக இருப்பினும் சரி,ஸ்கூட்டர்களின் பயன்பாடு அவ்வளவு உபயோகமானது.
எனக்கு ஒன்பது வயதாக இருந்த போது எங்கள் வாகனமாக இருந்த அந்த லாம்ப்ரட்டா,எனக்கு 15 வயதாகும் வரைக்கும் உடனிருந்தது.இடைப்பட்ட காலங்களில் ஞாயிறுகளில் அதைக் கழுவும் பொழுதுகளில் அப்பாவுக்கு எடுபிடி வேலைகளை விருப்பத்துடன் செய்ய வைத்தது லாம்ப்ரட்டா;அப்போது அதன் உட்புறக் இயக்கக் கவர்ச்சி வெளிவரும் பொழுதுகளாய் அவை மாறுவதால்! மேலும் லாம்ப்ரட்டா ஏதாவது சண்டித்தனம் செய்யும் போது மெக்கானிக் சேகர் கடைக்கு அதை அழைத்துச்செல்வார்கள்,அப்போதும் அதன் துணைக்கும்,சேகர் ஏதாவது பாகத்தைக் கழற்றிவிட்டு பழைய பாகத்தைப் போட்டு விடுவாரோ என்று காவல் காக்கவும்,கடமை தவறாத காவலனாக உடன் சென்ற நாட்களின்,லாம்ப்ரட்டாவுக்கும் எனக்குமான நட்பு இறுக்கமாகி,ஸ்பார்க் பிளக் சுத்தம் செய்வது முதல்,டயர் மாற்றுவது வரை எல்லாம் எளிதாக அறிந்து கொண்டேன்.
இவை எல்லாம் அறிந்து கொண்ட போதும்,மேலும் சில பழுது நீக்கும் மெக்கானிக்குகளுக்கேயுரிய டெக்னிக்குக்களும்-வண்டி கிக்கரை உதைத்த உடன் உயிர் பெற வில்லையெனில் லேசாக வலதுபுறம் சாய்த்துப் பின் உதைப்பது போன்றவை-கைவரப் பெற்றாலும்,வண்டியை ஓட்டுவது என்பது சிறுவனான எனக்கு செய்யக்கூடாத செயலாகவே இருந்தது.அவ்வப்போது அப்பாவிடம் வைக்கும் ‘வண்டியோட்டும்’ கோரிக்கை நிராகரிக்கப்பட்டே வந்தது,’ஓட்டலாம்டா,இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியாளா வா,ஓட்டலாம்....’ என்ற பேச்சுடன்.இது போக பின்பாட்டாக,அவனையெல்லாம் ஓட்டச் சொல்லாதீங்க,சைக்கிளையே கண்மண் தெரியாமல் ஓட்டுறான்னு எல்லாரும் சொல்றாங்க,வேண்டாம்,எங்காவது விழுந்து வைப்பான்,வண்டிக்கும் செலவு,இவனையும் தூக்கிகிட்டு ஓடி அல்லாட முடியாது’ எனும் அம்மாவின் வ்சனத்தில்,என் கோரிக்கை நீரடிக் கல்லாக குளிர்ந்து,சமைந்து போகும்.
அப்பாவின் அலுவல் நிறுவனம் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்ததால்,வெளியே செல்ல எடுக்கப்படும் லாம்ப்ரட்டா எங்கள் நிறுவன வாசலிலிலேயே தான் நிற்கும்;அதை இரவுதான் மேலேற்றிப் பூட்டுவார்கள்.
ஆரம்ப காலங்களில் அப்பாவால் செய்யப்பட்டு வந்த இந்த வழக்கம்,பின்னர் எனக்கு 13 வயதான சமயங்களில் நிறுவன உதவியாளர் ஒருவர் உந்தித்தள்ள,நான் மேலேற்றி வைப்பதுமாக மாறியது,
அப்போது 14 வயதிருக்கும் என நினைக்கிறேன்....
இந்த வழமையில் நடந்து வந்த காரியம் ஒரு நாள் அனைவருக்குமான வேடிக்கையும் வியப்புமான நிகழ்வானது.லாம்ப்ரட்டாவை எடுத்து வைக்க இரவில் அதை எடுத்த நான் கிக்கரை ஒரு மிதி மிதித்தேன்,வண்டி சீரான உறுமலுடன் உயிர் பெற,சட்டென்று ஏறி அமர்ந்து முதல் கியரை மாற்றி வண்டியை தெருவில் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
ஸ்கூட்டர் ஓட்டப் பழகியவர்கள் அறிவார்கள்,ஆரம்ப காலப் பயிற்சியில் முதல் கியருக்குப் பிறகு கிளட்சை விடுவிக்கும் சூத்திரம் தான் ஸ்கூட்டர் ஓட்டப் பழகுவதிலேயே முக்கியமானது.சரியான வேகத்தில் அது ரிலீஸ் செய்யப் படாவிட்டால்,வண்டி ஒரு வேகமான குதிரைப் பாய்ச்சலுக்குப் பின் நிலைதடுமாறி இயக்கமற்று விழக் கூடியதற்கான சாத்தியங்கள் மிகவும் அதிகம்.எனது அன்றைய முதல் முயற்சியில் லாம்ப்ரட்டா ஒரு குபுக் குலுக்கல் பாய்ச்சலில் முன்னேறினாலும்,இஞ்சினின் இயக்கம் நிற்காமலும்,வண்டி நிலை பிறழாமலும் மெதுவான சீரான வேகத்தில்-சுமார் 20-30 கி,மீ.-வண்டியை செலுத்திக் கொண்டே சென்றேன்;வண்டியை தள்ளி மேலேற்ற உடன் வந்த அலுவலக உதவியாளர் ‘தம்பி வண்டியை ஓட்டிக் கொண்டு போகிறான்’ என பெரிதாக சப்தமெழுப்பி,அப்பா,அப்போது வீட்டிலிருந்த வந்திருந்த அம்மா,மற்றும் நிறுவன ஊழியர்கள் அனைவரையும் தெருவிற்கு கொண்டு வந்து விட்டார் ! பதறிப்போன அப்பா,ஒரு நிறுவன உதவியாளரை,சைக்கிளை எடுத்துக் கொண்டு என்னைப் பின்தொடர்ந்து போய் பார்க்கப் பணித்தார்.
நானோ சுமார் அரை கி.மீ-அந்த தெரு கண் பார்வையிலேயே அமைந்த நேரான தெரு- ஓட்டிக் கொண்டு போன பிறகு நானே,அரை வட்டமடித்துத் திருப்பி,திரும்பினேன்.
ஒரு மந்தகாசப் புன்னகையுடன் வந்த என்னை வரவேற்க(!) அனைவரும் தயாராக இருக்க,எனக்கு சிறிது உள்ளூர இருந்த பயத்தில் சிறிது துணுக்கத்துடன் லாம்ப்ரட்டாவை மெதுவாக்கி,சரியாக நியூட்ரலில் கியரைக் கொண்டு வந்து நிறுத்தினேன்;கால் சரியாக ஊன்ற முடியாமல் வண்டி சிறிது சாய்வாக மாற தாங்கி நிறுத்தினார் அப்பா.(சரியாக நியூட்ரலில் கொண்டு வந்து நிறுத்தியதை,'வெகு சிலருக்கே அந்த விதமான கட்டுப்பாடு வரும்' என்பதாக,அப்பா சிலாகித்ததாக அம்மா பின்னர் கூறினார்,அந்த பரபரப்புக் கணங்களிலும் அதனைக் அவதானித்திருக்கிறார் அப்பா!)
தலையில் ஒரு கொட்டாவது,இந்த எனது அத்துமீறலுக்குப் பரிசாகக் கிடைக்கக் கூடும் என்றெண்ணி,லேசான தொண்டையடைக்க வந்து நின்ற எனக்கு,முகத்தில் கோபக் குறியல்லாது,’என்னடா இது விளையாட்டு?’ என்ற ‘க்ரிப்டிக் கமெண்ட்’டுடனான அப்பாவின் எதிர்வினை உள்ளூர சிறிது மகிழ்வளித்தது.
அப்போதைய என்னுடைய மகிழ்ச்சி முதல் காதலை வென்ற மகிழ்ச்சியைப் போல இருந்தது! அன்றுதான் நானும் ‘பெரிய’மனிதனானேன் !!!
பிறகு நான் தினமும் லாம்ப்ரட்டாவை மேலேற்றி வைக்கும் முன் ஒரு குறுஞ்சவாரி செய்வது வழக்கமாயிற்று.எங்காவது வெளியே செல்ல வேண்டுமெனில் என்னை ஓட்டச்சொல்லி பின்னால் அப்பா அமர்வதும் அடிக்கடி நிகழ்ந்தது.அம்மாவுக்கு மட்டும் முதலில் நான் ஓட்ட,என் பின்னே வண்டியில் அமரப் பயம்,கொண்டு போய் எங்காவது தள்ளிட்டா?..எனது முறைப்பான பார்வைக்கு ஒரு இதழ்க்கடை சிரிப்புதான் பதிலாக இருக்கும்.
பின்னொரு நாள் முதல்முறை நான் வண்டியோட்ட அம்மா என் பின்னால் அமர்ந்து வர,அம்மாவின் அந்த பயமும் – பயல் உங்களை விட நல்லாத்தான் ஓட்டுரான்ங்க-என்ற குறிப்பு அப்பாவுக்கு சிரிப்பையும்,பெருமிதத்தையும் கொண்டுவரும் அந்த கணங்களுடன் – போய்விட்டது.பின்வந்த நாட்களில் அம்மா,எங்காவது செல்ல வேண்டுமெனில் அப்பாவை அழைப்பதை விட என்னை அழைப்பது அதிகமானது,அவ்வப்போது ‘மெதுவா போடா’ என்ற குறிப்புகள் மட்டும் காதருகில் வரும்.
தோளைப் பிடித்துக் கொண்டு அம்மா லாம்ப்ரட்டாவில் அமரும் அந்தக் கணங்களில் நான் மகிழ்வும்,பெருமிதமும் கொண்ட பெரிய மனிதனாக உணர்ந்திருக்கிறேன்.
பின்னர் அப்பா பெரிதும் விரும்பிய பஜாஜ் சேத்தக் வீட்டுக்கு வந்ததும்,அம்பாசடர் வந்ததும்,இப்போதைய பொழுதுகளில் தனியாக செல்கையில் அவர் டிவிஎஸ் 50’ஐயே பெரிதும் விரும்புவதும் பிற்சேர்க்க்கைகள்;ஆயினும் அந்த இரவின்,என் முதல் லாம்ப்ரட்டா சவாரி,என்னுள் கிளர்த்தும் எண்ணங்கள் அலாதியானவை !
//பின்னொரு நாள் முதல்முறை நான் வண்டியோட்ட அம்மா என் பின்னால் அமர்ந்து வர,அம்மாவின் அந்த பயமும் – பயல் உங்களை விட நல்லாத்தான் ஓட்டுரான்ங்க-என்ற குறிப்பு அப்பாவுக்கு சிரிப்பையும்,பெருமிதத்தையும் கொண்டுவரும் அந்த கணங்களுடன் – போய்விட்டது.பின்வந்த நாட்களில் அம்மா,எங்காவது செல்ல வேண்டுமெனில் அப்பாவை அழைப்பதை விட என்னை அழைப்பது அதிகமானது,அவ்வப்போது ‘மெதுவா போடா’ என்ற குறிப்புகள் மட்டும் காதருகில் வரும்.
ReplyDeleteதோளைப் பிடித்துக் கொண்டு அம்மா லாம்ப்ரட்டாவில் அமரும் அந்தக் கணங்களில் நான் மகிழ்வும்,பெருமிதமும் கொண்ட பெரிய மனிதனானேன்//
You have taken me to my old days .
நேர்த்தியான விவரணை. சற்று நேரம் சாய்ந்து கிளம்பும் சுகம். அவரவர் நினைவுகளைக் கிளறி விடும் மலரும் நினைவுகளின் தனித் தன்மை அது.
ReplyDeleteநேர்த்தியான விவரணை. சற்று நேரம் சாய்ந்து கிளம்பும் சுகம். அவரவர் நினைவுகளைக் கிளறி விடும் மலரும் நினைவுகளின் தனித் தன்மை அது.
ReplyDeleteசுவாரஸ்யமான பதிவு. ஒரு சிறு திருத்தம் செய்யட்டுமா?
ReplyDeleteபஜாஜ் சடக், செடக், சடாக் என்று பஜாஜ்ஜை பின்னி எடுத்திருக்கிறீர்கள்! அந்த வார்த்தை சேத்தக் (Chetak)என உச்சரிக்கப்பட வேண்டும். இது மஹாராஜா ராணா பிரதாப்பின் புகழ் பெற்ற குதிரையின் பெயர். ஹிந்தி வார்த்தை! ஆதலால் போகட்டும்!
அநாநி,வருகைக்கும்,ரசிப்புக்கும் நன்றி
ReplyDeleteமுகவை மைந்தன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
விஜய்,
ஒரு புதிய தகவலுக்கு நன்றி.
மேலும் பஜாஜ் 'சேத்தக்',இது போன்ற 'பின்னி' எடுத்தல்களை எல்லாம் சமாளித்தும் அருமையாக இயங்கும் ஒரு வண்டி..எனவே இருந்து விட்டுப் போகட்டும் !!!!!
:-)
எங்கள் ஊரில் லாம்ப்ரெட்டா க்ளப் உண்டு. லாம்ப்ரெட்டா ஓனர்ஸ் சன்டே அன்று பிக்னிக் ஆக 20- 30 வண்டிகளில் சென்று வருவார்கள். எனக்கு மிகப்பிடித்தது வெஸ்பா150தான். என் ஜின் வலது பக்கமாக அமைந்ததால் வண்டி சாய்ந்து விடும் என்ற தப்பான எண்ணத்தில் வெஸ்பா இங்கு நிறைய விற்க வில்லை. என் அண்ணன் ஒரு யூஸ்ட் வெஸ்பா வாங்கி, பிறகு புது வண்டி புக் செய்தார். அது வருமுன் அவர் கார் வாங்கி விட்டதால் புது வெஸ்பாவை எனக்கு தந்தார். அது அந்தக் காலம். பெட்ரோல் 5 லிட்டரும், 2டி ஆயிலும் போட்டு 5 ரூபாய் கொடுத்து மிச்சக்காசும் வாங்குவேன்.
ReplyDeleteசகாதேவன்
//ஆரம்ப காலப் பயிற்சியில் முதல் கியருக்குப் பிறகு கிளட்சை விடுவிக்கும் சூத்திரம் தான் ஸ்கூட்டர் ஓட்டப் பழகுவதிலேயே முக்கியமானது.சரியான வேகத்தில் அது ரிலீஸ் செய்யப் படாவிட்டால்,வண்டி ஒரு வேகமான குதிரைப் பாய்ச்சலுக்குப் பின் நிலைதடுமாறி இயக்கமற்று விழக் கூடியதற்கான சாத்தியங்கள் மிகவும் அதிகம்.//
ReplyDeleteThis is what excatly happend to me :)
அமர்க்களமான நடை. உங்கள் அந்த சாதித்த உணர்வு எப்படி இருந்திருக்கும் என உணர முடிகிறது.
ReplyDeleteஇந்த வார விகடனில் ஒரு கதை, லாம்ப்ரட்டாவுக்கும், மனிதனுக்குமான பிணைப்பை கூறும் ஒரு கதை. அதை படித்தீர்களா? அதுதான் இன்ஸ்பிரேஷனா?
சகாதேவன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteகுட் ஓல்ட் கோல்டன் டேஸ் கனவுகள் எக்காலத்திலும் உண்டு.
இன்னும் 50 வருடம் கழித்து,அக்காலத்தில் 100 ரூபாய் கொடுத்து பெட்ரொல் போட்டு 40 ரூபாய் மீதம் வாங்கினேன்...ம்ஹ்ம்ம்..இப்போது ஒரு லி பெட்ரொல் 1500ரூபாய் விற்கிறது என சொன்னாலும் ஆச்சரியம் இல்லை !!!!!
தியாகராஜன்,வாங்க..
வருத்தப்படாதீங்க,இப்படி புதையல் எடுக்கறவங்கதான் அதிகம் !அதனால மெஜாரிடி கிளப்'லாதானேஇருக்கீங்க
:-)
புபட்டியான்,வாங்க,
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி.
நடையெல்லாம் பலரைப் பார்த்து,படித்து வந்தது,அதில் என் பெருமை ஏதும் இல்லை.
ஆவி' கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நான் படிக்க வாய்ப்பில்லாத பத்திரிகை,சிங்கையில் வாங்க வேண்டுமெனினும் தேக்கா போய் வாங்க வேண்டும்,நான் ஆவி'இணைய உறுப்பினரும் இல்லை.
ஆனால் இதுவரை மூன்று முறை நான் பதிவில் தொட்ட விதயங்கள் அந்தப்ப் பதிவு வெளிவந்த வாரத்தில் தலையங்கமாகவோ,கட்டுரையாகவோ தொடப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறியதுண்டு.
இது எதேச்சையானதா,அல்லது வேறு விதமா எனத் தெரியவில்லை.
அப்புறம்,உங்களை ஒரு பதிவர் 'புதுப்பட்டியா' எனக் கேட்டிருந்தார்,நானும் மீள்வைக்கிறேன்,ஆம் எனில் எந்த புதுப்பட்டி?
நான் கூற எண்ணிய கருத்துக்களை எனக்கு முன்னதாகவே மற்ற நண்பர்கள் தெரிவித்து விட்டார்கள் (உ-ம்: சேதக் என்ற பெயர்க்காரணம்).
ReplyDeleteஒரு திருத்தம்: "இலாவகம்" என்ற பயன்பாடு தவறு. "இலாகவம்" என்ற பயன்பாடே சரி. "இலாகவம்" என்ற வார்த்தையின் மூல வார்த்தை "இலகு" (=எளிது) என்பதாகும். இந்தத் தவறான பயன்பாடு மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.
பிற்குறிப்பு: என்னுடைய சோகமான "லாம்பி" நினைவுகளை நினைவுறுத்தியது தகுமா? எனக்கு சுட்டுப்போட்டாலும் ஸ்கூட்டர் ஓட்ட வராமல், என் தம்பி எனக்கு முன் ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக்கொண்டு, எனக்கு அவன் கற்பித்த அவமானம் எவருக்கும் நேரக்கூடாது. எங்கள் வீட்டு "லாம்பியிடம்" நான் பட்ட அவஸ்தைகளை ஒரு திரைப்படமாக வெளியிட்டால், நகைச்சுவைக்கு நோபெல் விருதே கிடைக்கும்!
படிக்க நன்றாக இருந்தது. முதன் முதலில் இப்படியான வாகன சாதனைகள் ஹார்மோனைத் தூண்டி உடலிலும் மனதிலூம் ஏற்படுத்தும் கிளர்ச்ச்சிகள் குறிப்பிடத்தக்கவைதான்!
ReplyDeleteலக்ஷ்மி நரசிம்மன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteபார்க்கையில் பலருக்கும் சுவையான 'லாம்பி' அனுபவங்கள் இருந்திருக்கும் போலிருக்கிறது.
'லாகவம்' பற்றி அறிந்தேன்,நன்றி.
சேத்தக்'கை பலரும் சடக்,சடக் என்று சு(கு)ட்டியதால்,பெரும்பான்மைக் கருத்துக்கு தலைவணங்கி,மாற்றிவிட்டேன்.
நன்றி.
//அப்புறம்,உங்களை ஒரு பதிவர் 'புதுப்பட்டியா' எனக் கேட்டிருந்தார்,நானும் மீள்வைக்கிறேன்,ஆம் எனில் எந்த புதுப்பட்டி?//
ReplyDeleteபுதுப்பட்டி அல்ல.. புத்தனாம்பட்டி.. எனக்கு கல்வியையும், இனிமையான இளமைக்காலத்தையும் கொடுத்த கிராமம். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா என தெரியவில்லை...
தங்கமணி,மிகவும் உண்மை.இள வயதின் முதல் சாதித்தல்கள் சிறு விதயமாகத் (பின்னர்) தோன்றினாலும்,அப்போதைய ஒப்பீட்டில் மிகு மகிழ்வு தருவன...
ReplyDeleteஅழகா எழுதி இருக்கீங்க. சுவாரசியமா இருந்தது.
ReplyDeleteHi Arivan, excellent blog. This post has really brought out the memories of the good old days .. If that is the intention then it is very successful in doing that. Enjoyed it ..
ReplyDeleteSorry for posting in English – couldn’t work out how to post comment in Tamil.
இலவசம்,வாங்க.
ReplyDeleteபாராட்டுதல்களுக்கு நன்றி.
அனானி,
வாங்க,பதிவுப்பக்கத்தை ரசித்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி.
தமிழில் எழுத இ-கலப்பை என்று கூகிளாண்டவரை வேண்டினால் உதவி செய்வார்.
every think is correct but one correction is lamby/lamberatta is manufactured by API ie automobile products of india which is owened by our MCA chettier
ReplyDeleteஅனானி,
ReplyDeleteவாங்க..
சரிதான்,இப்போது நினைவுக்கு வருகிறது,லாம்ப்ரட்டாவில் API Lambreta என்றுதான் இருக்கும்.
நீங்கள் குறித்ததும்தான் நினைவுக்கு வருகிறது.
நன்றி.
அருமையன நினைவுகள் -
ReplyDeleteசுந்த்ர்- துபாய்
Sorry to give my comments in English.
ReplyDeleteLambretta is otherwise called "Rataham" because of its lengthy body.(Unlike Vespa or Bajaj Chetak).I was once the proud owner of Lambretta.Our family(2+3) used to travel in it without any difficulty.
You have kindled the forgotten thoughts of the last decade which is really refreshing. You have narrated in a way that make us all emtional.
Good feed. Thank you!.
கலக்கலா இருக்குங்க ..என்னோட அப்பா கூட இந்த வண்டி தான் வைத்து இருந்தார். என்னோட அப்பாவ தெரியுதோ இல்லையோ என் அப்பா வண்டிய எல்லோருக்கும் தெரியும். இந்த வண்டி இருந்தாலே என் அப்பா இருப்பதாக கூறுவார்கள்...பெரிதாக எந்த பிரச்சனையும் தராத வண்டி
ReplyDeleteதற்போது வயதாகி விட்டதால் (இருவருக்கும்) தற்போது அதை பயன்படுத்துவதில்லை :-)
நண்பர் கிரி,லாம்பி நினைவுகள் பலருக்கும் இருக்கும்..
ReplyDeleteஅதனாலேயே பலரும் இந்த பதிவை ரசித்தார்கள்.
நன்றி,உங்கள் கருத்துக்கு..
நன்றி Learn & More,
ReplyDeleteவருகைக்கும் கமெண்டுனதுக்கும்...
இளமைப்பருவ நினைவுகள் பெரும்பாலும் கிளர்த்துபவைதானே..
:)
நல்லது
Delete