உலகின் மிகப் பழமையான,இன்னும் உயிர்ப்புடன் இருக்கக்கூடிய,பெரும்பாலும் தடைபடாத தொடர்ச்சி கொண்ட மொழியும்,சமுதாயமும் உலகில் மிகச் சிலவே.
அவற்றில் தமிழ் மொழியும்,தமிழ்ச் சமுதாயமும் குறிப்பிடத்தக்க அளவில் முதன்மையானவை.
இன்னும் சொல்லப் போனால் உலகின் முதல் முழு நாகரிக மனிதன் தமிழ்ச் சமுதாய மனிதனே,உலகில் முதல் முழு வளர்ச்சியடைந்த மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.(இது பற்றிய தனியே ஒரு பதிவில் எழுத உத்தேசம் இருக்கிறது.)
தமிழ்ச் சமுதாயம் உலகில் தோன்றிய பகுதி சொல்லத் தேவையன்றி இந்திய தீபகற்பத்தின் கீழ்க்கொண்டைப்பகுதி;அது கடல் கொள்வதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவை இணைத்த மிகப் பரந்த நிலப்பரப்பரப்பில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான கூறுகளும் கிடைக்கின்றன.
இந்த தமிழ்ச் சமுதாயம் மிகுந்த நாகரிகத்துடன் வாழ்ந்து மனித வாழ்வுக்குப் பயந்தரக் கூடிய பல நுண்கலைகளை வளர்த்து,அனுபவித்து வாழ்ந்திருக்கிறது.
இந்த 64 கலைகளுக்கும் பல பண்பட்ட அடிப்படைக் கட்டுமான விதி நூல்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும்.அவை என்னவாயின,ஏன் வடமொழி ஆதிக்கம் இந்தியா முழுதும் பரவின என்பதற்கான சமூக,அரசியல் காரணங்கள் பெரும் ஆய்வுக்குட்பட்டவை.(இவை பற்றி சிறிது எனது ‘தமிழும்,சிவமும் இன்ன பிறவும்’ என்ற தொடரில் சிறிது தொட்டிருக்கிறேன்,இது இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.இந்த விண்மீண் வாரத்திலாவது அதை முடித்து விட உத்தேசித்திருக்கிறேன்.)
இப்போது தொடங்கிய விதயத்துக்கு வருவோம்.
64 கலைகள் என்ன என்று சிறிது ஆய்ந்தோமனால்,அவற்றின் பட்டியல் பின்வருமாறு:
அறுபத்து நாலு கலைகளாவன:
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
இந்த கலைகளுக்கான வடமொழிச் சொற்களும் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப் பட்டுள்ளன.
இவற்றில் சில இன்னும் பெருமளவு பயன்பாட்ட்டில் இருக்கின்றன,சில அருகிவிட்டன.
பயன்பாட்டில் இருக்கும் சில கலைகளில் நான் தொடப்போவடுது கணிதம்,கணியம் சார்ந்த சோதிடம்,எண்கணிதம் மற்றும் கைரேகை பற்றிய சில விதயங்கள்.
இவற்றைப் படிப்பதோ,கற்பதோ அல்லது நம்புவதோ இன்றைய ‘பகுத்தறிவு’க்கு ஒவ்வாதவை,இவற்றை முற்றிலும் ஓட்ட வேண்டும்,இவை நமக்குத் தேவையானவை அல்ல என்பது ‘பகுத்தறிவா’ளர்களின் வாதம்.
இது பற்றிய பெரும் ஒட்டு/வெட்டுப் பேச்சுகள் சமீபத்தில் பதிவுலகில் நடந்தது.
இந்த கலைகளில் ஒன்றைப்பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்.சுப்பையா அவர்கள் பெருமளவு கேள்விகளை எதிர்கொண்டு,அவரின் பதிவுத் தொடரில் அவர் ஒரு வேறுபடுகூற்று (டிஸ்கியை இப்படி சொல்லலாம்தானே !) போட்டு எழுத வேண்டிய நிலைக்கு ஆளானார்.
இவை பற்றிய சில அலசல்களை நான் முன்வைக்க விரும்பினேன்,எனவே இப்பதிவு.
முதலில் பகுத்தறிவு என்றால் என்ன?
கண்ணதாசன் அவர்கள் தன்னுடை அர்த்தமுள்ள இந்துமதத்தில்,பகுத்தறிவு என்ற சொல் பரவலாகவும்,பெருமிதமாகவம் உபயோகிக்கப்பட்ட கால கட்டத்தில்,பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு ஒரு ‘புள்ளிக்குறி’(Point Blank) விளக்கம் அளித்திருப்பார்,அதை அப்படியே கூறினால் சிலர் மனம் புண்படுமாதலால் அதைக் குறிப்பிட இயலவில்லை.
பகுத்தறிவு என்பது நமக்கு முன் உள்ள விதயங்களை அலசி,இவை நமக்கு நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா,இந்தக் காரியத்தை கைக்கொள்ளலாமா அல்லது தள்ளலாமா என முடிவெடுக்க உதவும் அறிவு.அந்த பகுத்தறிவின் பால் பார்த்தால் இந்தக் கலைகளை முதலில் அலசி ஆராய வேண்டும்,பின்னர் அது கொள்ளத்தக்கதா அல்லது தள்ளத்தக்கதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அலசி ஆராய வேண்டுமெனில்,முதலில் அந்தக் கலைகளைக் கற்க வேண்டும்;பின் அதில் உள்ள குறை நிறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்;அவ்வாறு யோசித்து அந்த அறிவை,தனக்கான வாழ்வுக்கான நன்மை தீமைக்குப் பயன்படுத்துதல்தான் பகுத்தறிவே தவிர,அந்தக் கலைகளைப் படிப்பவரை அல்லது பயிற்சி கொள்பவரை நிந்திப்பது பகுத்தறிவு அல்ல.
கடலில் பயணம் செய்கிறோம்;வானிலை மிக மோசமாக இருக்கிறது,பெரும்புயல் அடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது எனபதைச் சொல்வது ஒரு கலையில் தேர்ச்சி பெற்றவர் அளிக்கும் அறிவு;அதைப் பகுத்தறிந்து இந்தப் பயணத்தைக் கொள்ளலாமா அல்லது தள்ளலாமா என முடிவெடுப்பது,தன் சொந்த முடிவு;அது அந்த கலையாளரின் முடிவுக்குட்பட்டதல்ல.
இதை மறந்து அந்தக் கலை அல்லது கலையாளர் பகுத்தறிவுக்கப்பாற்பட்டு நடக்கிறார் என்பது,சொல்பவருக்கு உண்மையில் பகுத்து அறியும் அறிவு இருக்கிறதா அல்லது அவர் பிறர் சொல்வதைக் கேட்டு ஒப்பிக்கும் கிளிப்பிள்ளை போன்றவரா என்ற கேள்வியை எழுப்பக்கூடிய ஒன்று,உண்மையான பகுத்தறிவின் படி !
இதில் கலையாளரின் குறைபாடுகளுக்கு வாய்ப்புண்டு-உண்மையில் அதுதான் பெரிய குறை-இந்த சூழலில் இரண்டு வித வாய்ப்பு(Choice) பொதுவானவர்களுக்கு இருக்கிறது:
-ஒன்று இந்தக் கலையறிவு அளிக்கும் முடிவு வாய்ப்புகள் எனக்குத் தேவை அல்ல;நான் இவை அன்றியே முடிவெடுக்க முடியும் என்பது.
-அல்லது இக்கலையாளரின் கலைத் தேர்ச்சி குறைபாடுடையது,நல்ல தேர்ச்சியாளரை நாடுவேன்;அல்லது நானே இக்கலையை முடிந்த அளவு கற்று அதன் பயன்/அபயனை அறிய முயற்சிப்பேன் என்பது.
இந்த இரண்டிலும் இல்லாத மூன்றாவதான,இந்த குறைபாடுடைய கலையாளரை உதைப்பேன் என்பது வன்முறையின் பாற்பட்டதே தவிர பகுத்தறிவின் பாற் பட்டதல்ல.
அல்லது அப்படி உதைக்க முற்பட்டால்,அந்தக் கலையாளரின் தரப்பு அதை விட மிகுந்த வன்முறை காட்டக் கூடிய வாய்ப்பிருந்தால்,தானே உதைபட வாய்ப்பிருக்கிறது என்பதை வேண்டுமானால் பகுத்தறிவின் பாற்பட்ட முடிவாக கருத முடியும்.
:))))
எனவே இந்த வகையில் பார்க்கும் போது,இந்த ‘அலசி ஆராயும்’ பகுதிக்கு வெளியே நின்று கொண்டே,இவை மனித சமுதாயத்திற்குத் தேவை இல்லை,என முன் முடிவுக்கு வருவதுதான் பகுத்தறிவா என்பதில் எனக்கு மிகுந்த ஐயப்பாடு இருக்கிறது.
நான் மேற்சொன்ன இரண்டாம் வித வாய்ப்பை மேற்கொள்ளும் வகை.
கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை ஆதரிப்பதோ,விலக்குவதோ பொதுவாக நன்மை பயப்பதில்லை,அதற்கான அறிவிக்கப் பட்ட சான்று இருக்கும்வரை ! நெருப்பில் கை வைத்தால் சுடும் என்பது அறிவிக்கப் பட்ட சான்று,ஆனால் சோதிடக் கலையைப் படித்தால் செத்துப் போவாய் அல்லது உருப்படாமல் போவாய் என்பதற்கான அறிவிக்கப் பட்ட சான்று இருந்தால் அவற்றைத் தள்ளலாம் !
இனி,இவற்றை ஆய்வதால்(கவனிக்கவும்,நம்புவதால் அல்ல !) என்ன பயன் அல்லது அபயன்கள் விளையக் கூடும் ??
பொதுவாக மனிதர்களில் சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றன.நமது ப்ண்டைய அறிவு இந்த பொதுவான குணாதிசயங்களை வரிசைப்படுத்த முயன்று கிடைத்த வ்டிகட்டப்பட்ட(Trial & Error filteration) அறிவுதான் சோதிடம் போன்ற கலைகள் என்பது என் அறிந்த முடிவு.
இது கணித நிகழ்தகவின்(Probability) விதிகளுக்கு உட்பட்டது,ஏனெனில் இது மனித சமுதாயம் தோன்றிய காலத்தில் இருந்து,பல்வகைப்பட்ட மனிதர்களை அவ்ர்களின் வாழ்வை ஆய்ந்து,அந்த முடிவுகளை அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை வகைப்படுத்தி வந்த சில முடிவுகளின் தொகுப்பு.இந்த விதிகளின் கூறுபாடுகள் அல்லது விளைவுகள் நிகழ்தகவு வாய்ப்புக்கு வெளியே இருக்கும்,சூழலும் மறுக்கப்படக் கூடியதல்ல.(The decision arrived at based on these arts can still fall outside of the probable decision domain, in which case they prove to be false) ஆனால் இதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்பது,இந்தக் கோட்பாடுகள் எவ்வளவு முறை பயன்படுத்திப் பார்க்கப் பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அமையும்.
இந்தக் கோணத்தில் சிந்தித்தால்,மனித சமுதாயத்தின் காலம்,நாகரிக தமிழ்ச் சமுதாயத்தின் காலம் இரண்டும் பெருமளவு ஒத்துப் போகும் வாய்ப்புகள் இருப்பதால்,பயன்பாட்டுக் குறைபாடு (Error of Judgement ) பெருமளவு குறைந்தே இருக்கும் என்பது என் அறிந்த முடிவு.
சரி,இக்கலைகளினால் என்ன பயன்?
சில குறியீடுகள் இக்கலைகளால் கிடைக்கிறது என்பது என்னுடைய அனுபவ உண்மை.
காட்டாக, கைரேகை விதிகளின் படி மெல்லிய நீண்ட, நகங்களும் விரல்களின் கீழ்ப்பகுதியும் நேரான கோட்டில் இருக்கும் படி அமைந்த நேரான விரல்களும், தொடுதலுக்கு மென்மையான உள்ளங் கைகளும் கொண்ட நபர்கள் நுண்ணறிவும்,கலைகளின் மீதான ஈடுபாடு/தேர்ச்சி கொண்டவர்களாகவும்,எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பினராகவும் இருப்பார்கள் என்பது ஒரு விதி.
இது அனுபவத்தில் பெரும்பாலும் சரியாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
அதே போல் 2’ம் தேதி பிறந்த நபர்கள் பெரும்பாலும் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும்,எளிதில் திடமான முடிவெடுக்காத வழவழா நபர்களாகவும் இருப்பார்கள் என்பது எண்கணித விதி.
இதுவும் என் அனுபவத்தில் பெரும்பாலும் சரியாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.
இதே போல் இந்த வகையில் 2’ம் தேதி பிறந்த நபர்களின் சோதிடக் கட்ட அமைப்பில் சந்திரன் வலுவான இடத்தில் இருக்கும் பட்சத்தில் இந்த குணாதிசயங்கள் சோதிட ரீதியாகவும் மறு உறுதிப்படுத்தப்(Re-confirmed)படுகின்றன.
இதே போல் தேதி 4’ல் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனம் படைத்தவர்களாகவும்,எதிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் திறமை பெற்றவர்களாகவும்,பல்துறை அறிவைத் தேடிப் படிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது ஒரு விதி.
இவ்வகை நபர்கள் புதன் வலுவாக அமைந்த சாதக் கட்டத்தைக் கொண்டிருந்தால்,அது மறு-உறுதிப்படுத்தும் சுட்டியாக இருக்கும்.
எனவே,இந்தக் கலைகளை கண்ணை மூடிக் கொண்டு மறுப்பதுதான் பகுத்தறிவுக்கு மீறிய செயல்;இவற்றை ஆராய்ந்து அவை நமக்கு ஏதேனும் செய்திகள் சொல்கின்றனவா எனப் பார்ப்பது பகுத்தறிவின்பாற் பட்டது என்பதே நான் சொல்ல விழைவது....