கதாநாயகர் பிரவீண் குமார்
ஒரு வழியாகத் தேர்தல் முடிந்திருக்கிறது.
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் ஓட்டுப் போட வசதி செய்திருந்தோம்,ஆனால் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று பிரவீண் குமார் சொன்னதாக ஒரு செய்திக் குறிப்பு சொன்னது.அப்படி எதுவும் செய்திருந்தார்களா என்ன???
எனக்குத் தெரிந்து டிப்ளமேட்டிக் பெர்சானிலிட்டீஸ் எனப்படும் தூதரக அலுவலில் இருக்கும் தமிழர்கள்,இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் எனில் அவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் விதிகள் சொல்கின்றன.இந்த முறை சனநாயகக் கடமையிலிருந்து வழுவியாகி விட்டது.:(
வாக்குப் பதிவு சதவிகிதம் சுமார் 76 சதம் என்கிறது புள்ளி விவரங்கள்.1967 ல் கழகங்கள் கிளப்பிய இந்தி எதிர்ப்பு,மொழிப் போராட்டம் என்பன போன்ற கொதி நிலைக் கால ஒட்டுப் பதிவு(76%) இப்பொழுதும் நடந்திருக்கிறது. அந்த கால கட்டத்தில் நிலவுவது போன்ற மாற்றத்தை வேண்டி நின்ற தகிப்பு வாக்குகளாக மாறியிருக்கிறது என்று எண்ணிக் கொள்வதா அல்லது தேர்தல் ஆணையம் கிளப்பிய கறாரான தேர்தல் ஆயத்தங்கள் மக்களை உத்வேகப் படுத்தி இந்த அளவுக்கு வாக்களிக்க வைத்ததா அல்லது ஆணையத்தின் எல்லா கிடிக்கிப் பிடிக்கும் ஈடுகொடுத்து கழகம் இரவு 11 மணியிலிருந்து காலை 4 மணிக்குள் பணப் பிரயோகத்தை நடத்திக் காட்டியதற்கு நன்றி செலுத்தும் விதமாக வாக்கு விகிதம் இவ்வளவு அதிகமானதா என்பது தெரியவில்லை.
ஆனால் பொதுவாக ஒன்று உண்மையானது;இம்முறை நகரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்குச் சாவடிகளுக்கு வந்திருக்கிறார்கள் என்பதும் கிராமப் பகுதிகளில் கூட வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது அல்லது கள்ள ஓட்டுக் கூட்டம் போன்றவை பெருமளவில் நடைபெறவில்லை என்பதும் உண்மை.
கிராமப் புறங்களில் எப்போதும் வாக்களிக்கும் விகிதாசாரம் அதிகமாகவே இருக்கும்.நானும் இந்த தேர்தல் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் தவறாது சென்று வாக்களித்திருக்கிறேன்.படித்த,நகர்ப்புறங்களில் வாழும் மத்திய தர வர்க்கத்தினர் பெரும் பகுதிதான் வாக்களிக்கச் செல்வதில்லை,அது இம்முறை மாறியிருக்கிறது என்பது ஒரு இனிய ஆச்சரியம்.
காரணம் கழகத்தின் ‘குடும்ப சாதனை’யாக இருந்தாலும்,பண விநியோகமாக இருந்தாலும்,அல்லது ஆணையத்தின் சுறுசுறுப்பான நடவடிக்கையாக இருந்தாலும் வாக்களித்தது நல்லது !
கறை நல்லது !!!
கறை நல்லது !!!