இதே பொருளில் சென்ற பதிவின் தொடர்ச்சி...
கச்சா எண்ணெய் சொக்கட்டான் யூக வியாபாரம் 2003 வாக்கில் துவங்கி, 2006ஆம் ஆண்டிலிருந்து விஸ்வரூபம் எடுத்து, இப்போது பேரல் ஒன்றுக்கு டாலர் 128க்கு மேல் என்று உயர்ந்து, இன்னும் உயரும் என்கிற நிலையில் இருக்கிறது. இன்றைக்கு உலகமே பெட்ரோல் விலை உயர்வால் தத்தளிக்கிற நிலைக்குக் கொண்டு தள்ளிவிட்டது.
இப்படி லட்சக்கணக்கான கோடி ரூபாய் பண பலம் படைத்த இந்த வால் ஸ்ட்ரீட் வங்கிகள், நிதி மற்றும் மூலதன நிறுவனங்கள் – எஃகு, அலுமினியம், தங்கம் போன்ற பொருள்களின் மீது சந்தையில் யூக வியாபாரம் செய்ய ஆரம்பித்ததால், கச்சா எண்ணெய்க்கு நேர்ந்த அதே கதிதான் உலோகங்களுக்கும் ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக எஃகும், தங்கமும், வெள்ளியும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர, பண பலம் படைத்த வங்கிகளும், மூலதன நிதி நிறுவனங்களும், வியாபாரிகளுக்குக் கடன் கொடுப்பதை விட தாங்களே வியாபாரிகளாக மாறியதுதான் காரணம். இதை அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளிலுள்ள நிதித்துறை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளும், பொருளாதார மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்ட அறிஞர்களும் வெளிப்படையாக எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
இதுவரை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும், உபயோகிக்கும் நுகர்வோருக்கும் இடையே தரகு செய்து கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள் – என்கிற அவப்பெயர் வியாபாரிகளுக்கு இருந்து வந்தது. ஆனால், இப்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் பண பலம் படைத்த வங்கிகளும், நிதி மற்றும் மூலதன நிறுவனங்களும் – தரகர்கள் மற்றும் வியாபாரிகள் எல்லோரையுமே ஓரம் கட்டிவிட்டனர். பொருள்கள் எல்லாவற்றையும் யூக வியாபாரம் மூலமாகத் தங்கள் கைக்குள் கொண்டு வந்து, விலையை உயர்த்தி, உற்பத்தி செய்தவர்களுக்கு ஒரு பலனில்லாமலும், உபயோகிப்பவர்களுக்குப் பெரும் பாரமாகவும் – கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
புலி ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, பின்பு மனிதனையே கடித்தது என்று கூறுவார்கள். அதுபோல இந்த வால் ஸ்ட்ரீட் பண முதலைகள் முதலில் கச்சா எண்ணெய், பிறகு உலோகங்கள் என்று தங்களுடைய பிரம்மாண்டமான பண பலத்தை சந்தைகளில் உபயோகித்த பிறகு, கடந்த ஆண்டிலிருந்து தங்களுடைய பண பலத்தை அரிசி, கோதுமை, சோயா போன்ற அத்தியாவசியப் பொருள்கள் மீதும் காட்ட ஆரம்பித்தனர். உடனேயே உலகம் முழுவதும் உணவுப்பொருள்கள் விலை, வானை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.
உலகிலேயே கோதுமை அதிகம் ஏற்றுமதி செய்கிற அமெரிக்காவில், கோதுமை விலை (கிட்டத்தட்ட 27 கிலோ கொண்ட) அமெரிக்க மூட்டை ஒன்றுக்கு, கடந்த ஆண்டு துவக்கத்தில் 3 டாலர் அல்லது 4 டாலர் விலை இருந்தது. பிப்ரவரி 2008ல் டாலர் 13.5 என்று நான்கு மடங்காக உயர்ந்தது. அதே போல, ஜனவரி முதல் ஏப்ரல் வரை அரிசி விலை 70 சதவிகிதம் – உயர்ந்தது.
ஹைடி (Haiti) என்கிற நாடு, 75 சதவிகிதம் உணவுப்பொருளை இறக்குமதி செய்து வாழ்கின்ற நாடு. ஏப்ரல் 2008, 4ஆம் தேதி கட்டுக்கடங்காத உணவு விலை உயர்வு காரணமாக அங்கு புரட்சி ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடு நடந்து, ஏப்ரல் 11ஆம் தேதி அரசாங்கம் பதவியிழந்தது.
எகிப்து நாட்டில் ஒரே நாளில் உணவுப்பொருள்கள் விலை 30 சதவிகிதம் உயர்ந்தது. உலகம் முழுவதும் இப்படிக் கிலி ஏற்பட காரணமாக இருந்தது – வால் ஸ்ட்ரீட் பண முதலைகள் கோதுமை, அரிசி யூக வியாபாரத்தில் பெருமளவில்இறங்கியதால்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
ஐ.நா. சபையிலிருந்து உலக வங்கி மற்றும் உலக நிதி நிறுவனம் வரை, எல்லோருக்கும் இந்தப் பண முதலைகளை எப்படிச் சமாளிப்பது என்கிற கவலை அதிகமாகியிருக்கிறது.
ஏப்ரல் 2008 முதல் வாரத்தில் உலக வங்கி மற்றும் ஐ.எம்.எஃப். பில் இந்தப் பிரச்சனையை விவாதித்தனர். ஆனால், எந்தப் பரிகாரமும் இல்லாமல் ஏப்ரல் 2008, 9ஆம் தேதி ஐ.நா. சபையின் தெற்கு அமெரிக்க, மேற்கு அமெரிக்கப் பிரதிநிதி, "இந்த உணவு நெருக்கடி சூதாட்ட வியாபாரத்தால்தான்; இது தொடரும். நிற்காது'' என்று மனமுடைந்து கூறினார்.
"சரி, இப்படி உணவுப்பொருள்கள் விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்லதுதானே' என்று தோன்றலாம். இப்படித்தான் உணவுப்பொருள்களில் யூக வியாபாரமே துவங்கியது. யூக வியாபாரம் மூலமாக விவசாயிகளுக்கு நல்ல விலை கிட்டும் என்றுதான் அமெரிக்காவில், சிகாகோ சந்தையில் 1959ஆம் ஆண்டு யூக வியாபாரம் உணவுப்பொருள்களில் துவங்கியது. அதே அமெரிக்காவில், இப்படி வால் ஸ்ட்ரீட் பண முதலைகள் உணவுப்பொருட்கள் யூக வியாபாரத்தில் இறங்கிய பிறகு, விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். ப்ளூம்பெர்க் டாட் காம் (http://www.bloomberg.com/) என்கிற நிதித்துறை சம்பந்தப்பட்ட வெப்சைட், உலகிலேயே ஐந்து பிரபலமான நிதி சம்பந்தப்பட்ட வெப்சைட்களில் ஒன்று.
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அது வெளியிட்ட ஆய்வுச் செய்தியின் தலையங்கம் என்ன தெரியுமா? "வால் ஸ்ட்ரீட் (உணவுப்பொருள்கள்) பதுக்கல் காரணமாக நாசமான விவசாயிகளும், நுகர்வோரும்'. ப்ளூம்பெர்க் ஆய்வின் சுருக்கம் இதுதான் :
"பொருள்கள் விலை ஏறுமா, இறங்குமா என்று பூவா, தலையா போட்டு வியாபாரம் செய்யும் பெரும் பணம் கொண்ட நிதி நிறுவனங்கள் (இவை மியூச்சுவல் ஃபண்ட் போல) அமெரிக்காவின் மொத்த உணவுப்பொருள்கள் கையிருப்பில் ஒரு பாதியைத் தங்கள் கைவசப்படுத்தி இருக்கின்றன. அவை கைப்பற்றியுள்ள அரிசி, கோதுமை போன்ற பண்டங்களின் அளவு 122 லட்சம் டன்கள்! இந்த நிலை விவசாயிகளுக்குப் பாதகமானது; லாபம் தேடி சொக்கட்டான் ஆட்டம் ஆடும், யூக வியாபாரத்தில் ஈடுபடும் வால் ஸ்ட்ரீட் பண முதலைகளுக்கு இது சாதகமானது – என்று கூறுகிறார்கள் விவசாயிகளுடைய பிரதிநிதிகள். விலை உயர்வின் காரணமாக, உற்பத்தியான உணவுப்பொருட்களை வாங்க வியாபாரிகள் தயாராக இல்லை. காரணம், வியாபாரிகளுக்குக் கடன் கொடுக்கும் வங்கிகளே, வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட்டு அதிக விலை தேடுவதால் இது சாத்தியமில்லை'.
இந்த நிலையிலிருந்து பரிகாரம் தேட அமெரிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றனர் – விவசாயிகள் சங்கங்களும் அதன் தலைவர்களும். இங்கு எப்படி, அரசு, பணம் படைத்த கம்பெனிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தலைசாய்த்து விவசாயிகளுக்குச் செவி சாய்க்காமல் இருக்கிறதோ, அதுபோலவேதான் அமெரிக்க அரசாங்கமும், அதிகாரிகளும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல விவசாயிகளின் வேண்டுதலைப் புறக்கணிக்கின்றனர். அதுமட்டுமல்ல, இங்கு எப்படி ப.சிதம்பரம் விலைவாசி உயர்வுக்கு உலகத்தின் மேல் பழிபோடுகிறாரோ அதுபோலவே, "உலகமே கெட்டுப்போயிருக்கிறது. உலக அளவில் விலைகள் ஏறிவிட்டன. அதனால்தான் அமெரிக்காவிலும் உணவு விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டிருக்கிறது' என்கிறது அமெரிக்க அரசாங்கம். எப்படி இங்கு நிதியமைச்சர் கூறுவது உண்மைக்குப் புறம்பானதோ, அதுபோலவேதான் அங்கும்.
அமெரிக்காவில் ஜனவரி 2008 முதல் ஏப்ரல் வரை அரிசி விலை 70 சதவிகிதம் உயர்ந்தபோது, கலிஃபோர்னியா அரிசி கமிஷனின் (விவசாயிகளையும் அரிசி மில்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட) தலைமை அதிகாரி, "வேண்டிய அளவு அரிசி சப்ளை இருக்கிறது. தட்டுப்பாடே இல்லை' என்று கூறுகிறார்.
அமெரிக்க அரசாங்கத்தின் உணவுத்துறை அதிகாரி நாதன் சில்டஸ் என்பவர், "உலகத்தில் உற்பத்தியாகும் அரிசி எல்லாமே, விளையும் இடத்திலிருந்து 60 மைல்களுக்குள் உபயோகப்படுத்தப்படுகிறது. மிகச்சிறிய அளவிலேயே உலக அளவில் அரிசி வியாபாரம் நடக்கிறது' என்கிறார். உலக அரிசி உற்பத்தியில் 5 சதவிகிதம்தான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால், உலக மக்களில் பாதிக்கு மேல் அரிசி உணவு உண்பவர்கள்தான். அரிசி என்பது, பட்டித்தொட்டி சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கிறதே தவிர, உலகமயமாகிய விஷயமல்ல.
இப்படி, அமெரிக்காவில் கிடங்குகளில் அரிசி நிரம்பி வழிகிறபோது, உலக அரிசி விலை எப்படி அமெரிக்காவைப் பாதிக்க முடியும்? வாய்ப்பே இல்லை. பின்பு எப்படி அரிசியின் விலை அமெரிக்கச் சந்தைகளில் உயருகிறது? காரணம், அரிசி பற்றாக்குறை இருப்பது போன்ற தோற்றத்தை, பெரும் கம்பெனிகள் ஏற்படுத்துகின்றன.
"வால் மார்ட்' என்கிற வியாபாரம் செய்யும் பன்னாட்டுக் கம்பெனி (இதுதான் உலகிலேயே மிகப்பெரிய கம்பெனி) "சாம்ஸ் க்ளப்' என்கிற பெயரில் மொத்த வியாபாரமும் செய்கிறது. இதற்கு 593 கிடங்குகள் இருக்கின்றன. அதே போல, காஸ்ட்கோ என்று இன்னொரு மொத்த வியாபாரக் கம்பெனி. இதற்கு 534 கிடங்குகள் இருக்கின்றன. இந்தக் கிடங்குகளில் அரிசியும் கோதுமையும் நிறைந்து வழிகின்றன. ஆனால், ஏப்ரல் 23ஆம் தேதி இந்த இரண்டு கம்பெனிகளும் மொத்தமாக அரிசி வாங்குபவர்களுக்கு "4 மூட்டைக்கு மேல் கொடுக்கமாட்டோம்' என்று அறிவிக்கின்றன. அதே நாளில் அமெரிக்க அரிசி ஃபெடரேஷன் பிரதிநிதி "வேண்டிய அரிசி ஸ்டாக் இருக்கிறது; தட்டுப்பாடு என்பது வெறும் பேச்சு' என்று அடித்துப் பேசுகிறார். இருந்தும் அங்கு அரிசி விலை இறங்கவில்லை.
அரிசியைக் கிடங்குக்காரர்கள் வெளியில் கொண்டு வந்தால்தானே? நம் நாட்டில் பதுக்கல் வியாபாரம் கள்ளத்தனமாக நடக்கிறது; அங்கு அது சட்டப்பூர்வமாக, வெளிப்படையாக நடக்கிறது. மறைக்க முடியாத உண்மை இதுதான். வால் ஸ்ட்ரீட் பண முதலைகளும், கிடங்குக்காரர்களும் சேர்ந்து சதி செய்து, யூக வியாபாரத்தில் ஈடுபட்டு செயற்கையாகத் தட்டுப்பாடு ஏற்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். இது அமெரிக்காவை மட்டுமல்லாமல், உலகையே பாதிக்கிறது. இதுதான் உண்மை.
அங்கு நடப்பதுபோல இங்கும் நடக்கப் பெருமுயற்சி நடந்து வருகிறது. அங்கு போலவே இங்கும் யூக வியாபாரம் பெருக, அங்கு போலவே இங்கும் பண முதலைகளையும், பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளையும் சிறு வியாபாரத்தில் ஈடுபட வைக்க அரசும், பொருளாதார நிபுணர்களும், நிதித்துறை பத்திரிகைகளும் பெரு முயற்சி செய்து வருகின்றன.
நன்றி-குருமூர்த்தி,துக்ளக் இதழ்
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
No comments:
Post a Comment