இந்த வார ஓ பக்கங்களில் ஞாநி எழுதியது.இந்த கருத்துக்களுடன் 100 சதம் நான் ஒத்துப் போகிறேன்.
சிங்கையில் கூட கார் வாங்குபவர்கள் கிட்டத்திட்ட காரின் விலை அளவுக்கு 'மகிழ்வு வரி' - Certificate of Entitlement(COE) - கட்ட வேண்டும்.காட்டாக சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை இங்கு சுமார் 58000 டாலர்.இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 16,82,000 ரூபாய்.இதில் காரின் விலை சுமார் 7.5 லட்சம் மட்டுமே இருக்கும்;மீதி ‘மகிழ்வு வரி'.
இவை போன்ற வழிகள் தீவிரமாக யோசிக்கப் பட வேண்டிய நேரம் இது.
இதுவும்(மகிழ்வு வரி) 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாவது.10 ஆண்டுகளுக்குப் பின்னும் கார் வைத்திருக்க வேண்டுமெனில் இந்த COE ஐ திரும்ப விண்ணப்பித்து வாங்க வேண்டும்;காரும் அப்போதைய சுற்றுச் சூழல் வரையறைகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.ஆனால் இவற்றை செயல்படுத்த,தங்குதடையற்ற,அற்புதமான பொதுப் போக்குவரத்து இருப்பது துணை செய்கிறது.
இவை இந்தியாவில்,தமிழகத்தில் வர தொலைநோக்கும்,செயல்திறமும் கொண்ட,சுயநலம் அற்ற நல்ல தலைவர்கள் பொறுப்புக்கு வர வேண்டும்.
வெகு அருகில் அப்படிப்பட்ட சமிஞ்ஞைகள் தெரியவில்லை,அதுதான் மிகுந்த சோகம் !
இனி ஓவர் டு ஞாநி:
ஏற்கெனவே பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொருளாதார மேதைகள் மன்மோகன்&சிதம்பரம் கூட்டணிக்கு மரண அடியாக வந்திருக்கிறது பெட்ரோல் விலை உயர்வு.இதன் விளைவாகத் தேர்தல்களில் சோனியாவும்காங்கிரசும் தோல்வியைச் சந்திக்க வேண்டி வந்தால், மன்மோகன் சிங் பழையபடி உலக வங்கி வேலைக்கும் சிதம்பரம் வக்கீல் வேலைக்கும் போய்விட முடியும். பாவம் சோனியா. பாவம் ராகுல். பாவம் காங்கிரஸ்.
இந்தத் தருணத்திலாவது மன்மோகனும் சிதம்பரமும் மக்களிடம் உண்மைகளைப் பேசிவிடலாம்.பிரகாஷ் காரத்தும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ராஜ்நாத்தும் அத்வானியும் பரதனும் ராஜாவும் டெல்லியில் ஆட்சியில் இருந்தாலும் கூட பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது என்பதுதான் உண்மை. அதை விடக் கசப்பான உண்மை இன்னும் கொஞ்ச நாட்களில் மறுபடியும் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்ற வேண்டி வரும் என்பதாகும்.
பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கும் முதல் விஷயம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதாகும். அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், இந்தோனேஷியா, இரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரேட், வெனிசூலா ஆகிய 13 நாடுகள் வசம்தான் உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40 சதம் இருக்கிறது. சந்தையில் பெட்ரோலியத்தின் விலை குறையாமல் இருக்க, இவை அவ்வப்போது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைத்துவிடுகின்றன.
நவம்பர் 2006-ல் எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஐம்பது டாலருக்குக் கீழே போய்விடக் கூடாது என்பதற்காக தினசரி உற்பத்தியை 17 லட்சம் பீப்பாய்கள் வரை குறைத்தன.இப்போது 2008-ல் முதல் மூன்று மாதங்களில் தினசரி உற்பத்தி 3 கோடியே 23 லட்சம் பீப்பாய்களாக இருந்து வருகிறது.
விலையை பாதிக்கும் இன்னொரு அம்சம் அரசாங்கங்கள் போடும் வரி. எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, கல்வி வரி, டீலர் கமிஷன், வாட் வரி, போக்குவரத்துச் செலவு என்றெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 28 ரூபாய் வரை வந்து விடுகிறது. அடக்க விலை சுமார் 22 ரூபாய்தான். மொத்தம் 50 ரூபாயைத் தாண்டிவிடும்.
பெட்ரோல் வியாபாரத்தில் பெரும் லாபம் அடைவது சுத்திகரிப்பு செய்து விநியோகிக்கும் தொழிற்சாலைகள் மட்டும்தான். ரிலையன்ஸ் கம்பெனி சுத்திகரிப்புத் தொழிலில் மட்டும் 2005&06-ல் 5915 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது. அடுத்த இரண்டே வருடத்தில் 2007&08-ல் இந்த லாபம் 10,372 கோடியாகிவிட்டது. இந்த லாபத்துக்கு வரி போட்டு வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் திரட்டலாம். ஆனால், ரிலையன்ஸ் மீது வரி போட எந்த அரசும் முன்வராது. இந்தியாவில் ரிலையன்ஸ் தவிர மீதி எல்லா சுத்திகரிப்பு ஆலைகளும் பொதுத் துறையுடையவை.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இங்கேயும் விலையை உயர்த்தாவிட்டால், இந்த சுத்திகரிப்பு விநியோக கம்பெனிகள் எல்லாம் பெரும் நஷ்டத்தை அடையும் என்பதுதான் அரசு சொல்லும் வாதம். சந்தை விலைக்கேற்ப விலைகளை உயர்த்தினால், பெட்ரோலை லிட்டர் 100 ரூபாய்க்கு விற்க வேண்டி வரும். மக்கள் கொதித்துவிட மாட்டார்களா? எனவே, லிட்டர் 100 ரூபாய் ஆக்கவும் முடியாது.
எனவே எக்சைஸ், கஸ்டம்ஸ் வரிகளில் கொஞ்சத்தை மத்திய அரசும், விற்பனை வரியில் கொஞ்சத்தை மாநில அரசுகளும் குறைத்து பொது மக்களுக்கு அதிக விலையேற்றம் வராமல் சமாளிப்பதை வழக்கமாக செய்கின்றன.சுத்திகரிப்பு கம்பெனிகளுக்கு நஷ்டம் வராமல் தடுக்க அந்தத் தொகையை அரசு பல வடிவங்களில் ஈடு செய்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், எல்லாம் முழு முட்டாள்தனம்.
இப்போதைய விலை உயர்வுக்குப் பிறகும் அரசு நஷ்டமடையப்போகும் தொகை சுமார் இருபது ஆயிரம் கோடி ரூபாய்கள். எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்திய வரிப்பணம்தான் இது. கிராமப்புறங்களில் ஒருவருக்கு வருடம் முழுவதும் குறைந்தபட்ச வேலை வாய்ப்புத் தருவதற்காக அரசு உருவாக்கிய திட்டத்துக்காக ஒதுக்கும் தொகையே வருடத்துக்கு வெறும் 16 ஆயிரம் கோடிதான். அதை விட 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக பெட்ரோலை சலுகை விலையில் கொடுப்பதற்கு அரசு செலவிடுகிறது. ஏன் பெட்ரோலை சலுகை விலையில் எல்லா பொது மக்களுக்கும் தரவேண்டும் என்பதுதான் என் கேள்வி.
கார்,டூவீலர் முதலிய தனியார் சாதனங்களுக்கு எந்தச் சலுகையும் தரவேண்டியதில்லை. லிட்டர் விலையை 100 ரூபாயாக வைக்கலாம்.பஸ், ஆட்டோ முதலிய பொது போக்குவரத்து சாதனங்களுக்கு மட்டுமே சலுகை விலை தேவை. ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் அடிப்படைத் தேவையான சமையல் செய்வதற்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய், எரிவாயு-வுக்கு மட்டுமே சலுகை தரலாம். நகரத்தில் ஒரு பஸ்ஸுக்கு சாலையில் தேவைப்படும் இடத்தில் இரு கார்கள் ஓட முடியும். பத்து டூவீலர்கள் ஓட முடியும். ஆனால் ஒரு பஸ்ஸில் 100 பொது மக்கள் செல்கிறார்கள்.இரண்டு கார்களில் அதிகபட்சமாக பத்துப் பேர். பத்து டூவீலர்களில் அதிகபட்சம் இருபது பேர். பஸ் வசதியை அரசு அதிகரித்தால், பல பேர் டூவீலர்களை விட்டுவிட்டு அதற்கு வந்துவிடுவார்கள்.
பொதுவாகவே சாலைப் போக்குவரத்து என்பது தொடர்ந்து பெரும் செலவு பிடிக்கக்கூடியதாகும். பெட்ரோல், செலவை அதிகரிக்கிறது. கார் போன்ற தனியார் வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க நெரிசல் அதிகமாகி, கோடிக்கணக்கில் செலவு செய்து ஒவ்வொரு சந்திலும் மேம்பாலங்கள் கட்ட வேண்டி வருகிறது.
மாறாக,ரயில் போக்குவரத்து என்பது ஆரம்பத்தில் பெரும் செலவு பிடிப்பதாக இருந்தாலும், அன்றாட பராமரிப்புச் செலவு குறைவானது. மிக அதிகம் பேரை மிகக் குறைவான நேரத்தில் மிகக் குறைவான செலவில் போக்குவரத்து செய்யக்கூடியது ரயில்தான்.
ஆனால், சென்னை போன்ற நகரத்தை எடுத்துக் கொண்டால் கார், டூவீலர் நெரிசலை அதிகரித்துவிட்டு, மாதாமாதம் ஒரு புது மேம்பாலம் கட்டியாக வேண்டிய சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். திருவான்மியூரிலிருந்து பாரிமுனைக்குப் பறக்கும் ரயிலில் 20 நிமிடங்களில் செல்ல முடிகிறது. அதே ரூட்டில் பஸ்ஸில் 75 நிமிடங்கள் ஆகிறது.
ஆனால் பறக்கும் ரயிலைப் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரவில்லை. காரணம், நமது திட்டமிடுதலில் இருந்த கோளாறுதான். பறக்கும் ரயில் செல்லும் ரயில் நிலையங்களில் இறங்கி அடுத்த இடத்துக்குச் செல்ல ரயிலடியில் பஸ் நிறுத்தங்கள் கிடையாது. பல இடங்களில் ரயில் நிலையம் சந்துகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயம், மும்பையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் செல்லும் மேற்கு புறநகர் ரயில் பாதை நெடுக ஒவ்வொரு ரயிலடியிலும் இரு புறமும் பஸ் டெர்மினஸ்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுப் போக்குவரத்துப் பிரிவுகளான ரயிலும் பஸ்ஸும் மும்பையில் சிறப்பாக அமைக்கப்பட்டு இயங்குவதால், அங்கே சென்னையை விட டூவீலர்களின் விகிதம் மிகக் குறைவு. ஆட்டோக்கள் சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதால்,சூழல் மாசுபடுவது குறைவு. கட்டணமும் சென்னையை விடக் குறைவு.
நகரங்களில் போக்குவரத்தை பஸ், ரயில், ஆட்டோ முதலிய பொது போக்குவரத்துக்களைக் கொண்டே திறம்படச் செய்ய முடியும். அப்படிச் செய்தால், தனியார் கார்கள், டூவீலர்கள் எண்ணிக்கையையும் பெட்ரோல் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும்.இந்த அணுகுமுறையைத்தான் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்றன.
பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் முறையினால் பெட்ரோல் செலவைக் குறைக்க முடியும். இந்தியாவில் எத்தனால் கிடைப்பதில் எந்த சிரமமும் இல்லை. எத்தனால் தயாரிப்பதனால், உணவுப் பொருள் தட்டுப்பாடு வரும் சூழ்நிலையும் இங்கு இல்லை. ஏற்கெனவே இங்கே இருக்கும் சர்க்கரை ஆலைகளிலிருந்து ரசாயனத் தொழில் தேவைகளுக்குப் போக எஞ்சிய எத்தனால் அளவே வருடத்துக்கு 120 கோடி லிட்டர் வரை இருக்கிறது. ஆனால், இதில் கால் பாகத்தைத்தான் பெட்ரோலிய ஆலைகள் சென்ற வருடம் எடுத்துப் பயன்படுத்தின. பெட்ரோல் உபயோகத்தைக் குறைப்பதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு சரியான தீர்வு. அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள், போலீஸ், ராணுவம் முதலியோர் பொது மக்கள் செலவில் கார்களைப் பயன்படுத்தி வரும் விதம், சுருக்கமாகச் சொன்னால் அராஜகமானது. இந்தப் பயன்பாட்டை எளிதாக, சரிபாதியாகக் குறைக்க முடியும். அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் தினசரி அலுவலகத்துக்கு பஸ்ஸில் போகலாம்.எமர்ஜென்சி நிலைமைகளில் மட்டுமே காரைப் பயன்படுத்த வேண்டும்.தலைவர் படம் பார்க்கப் போனால் கூடவே அத்தனை எடுபிடிஅமைச்சர்களும் ஆளுக்கொரு காரில் கூடப் போகிறார்கள்.
பெட்ரோல் விலை இனியும் உயர்ந்துகொண்டுதான் போகும்.அதை சிக்கனமாக செலவழிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால், வீணே பொருளை அழிப்போம்.
சிக்கனத்துக்கு என் யோசனைகள் இதோ. இதை விட இன்னும் சிறப்பான யோசனைகளை எல்லாரும் யோசிக்கலாம்.
1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.
2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.
3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.
4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
5. எந்த நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
6. முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில்களுக்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.
7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதையெல்லாம் நிறைவேற்றும் எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்குக் கிடையாது. காரணம், இப்படிச் செய்தால் ஓட்டு கிடைக்காது என்று அவர்கள் பயப்படுவார்கள். இப்படிச் செய்யாவிட்டால்,ஓட்டுப் போடமாட்டோம் என்று பொது மக்கள் சொல்லும் நிலை வர வேண்டும்..
இந்த வாரப் பூச்செண்டு
டாஸ்மாக் மதுக்கடையை தங்கள் தெருவில் திறக்கக்கூடாது என்று பெரும் போராட்டம் நடத்திய சென்னை எல்லிஸ் சாலை குலாம் முர்த்தாசா தெருவாசிகளுக்கு இ.வா.பூ.
இந்த வாரப் சிரிப்பு
மக்களுக்கு சேவை செய்வதற்காக கட்சி தொடங்கி இருக்கிறேன்
- நடிகர் கார்த்திக்
இந்த வாரக் குட்டு
கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அவரைப் புகழ்வதற்காக உடலுறவுடன் அவர் படைப்புகள் தரும் இன்பத்தை ஒப்பிட்டுப் பேசியஜால்ரா பேரரசுகள் வாலிக்கும் அப்துல் ரகுமானுக்கும் இ.வா.குட்டு.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
Hello My Dear Friend, COE in Singapore is 'Certificate of Entitlement' and not 'Certificate of Enjoyment'. Are you competing with Wikipedia to give novel explanations to the existing terms?
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteCOE'க்கு சரியான வார்த்தையை அளித்ததற்கு நன்றி.
திருத்திவிட்டேன்...
பரவலாக COE என்றே அறியப்பட்ட பதத்திற்கு சரியான விரிவாக்கம் தெரிந்தே போட்டிருக்கவேண்டும்.