கூத்தாட்டு அவைக்குழாம் என்ற சொல் எவ்வளவு அழகான சொல்!
யார் சொன்னார்கள்?
எங்கே?
எதற்காக?
கூத்தாட்டு அவைக்குழாம் என்றால்,கூத்தாட்டு அவையில் இருக்கும் குழு என்பது பொருள்;இது கூத்துக் குழு மற்றும் கூத்துப் பார்க்க வரும் குழு என இரண்டு குழுக்களையும் குறிப்பிடுகிறது.
பார்க்கலாம்.....
நாம் வாழ உலகில் பணம்,செல்வம் எவ்வளவு தேவையானது என்பதெல்லாம் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வள்ளுவமும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றே கூறுகிறது.
நாம் அனைவருமே பணம்,செல்வம் தேடியே ஓடிக் கொண்டே இருக்கிறோம்.
எவ்வளவு பணம் இருந்தாலும் இது வாழ்வை வளமாகக் கழிக்கப் போதுமான பணமா அல்லது இன்னும் வேண்டுமா என்ற கேள்வி ஆதாரமானது;இதற்கு நம்மிடம் விடையும் இருக்க முடியாது.
இப்படிப் பணத்தின் பின்னால் ஓடும் நம் வாழ்வில் பணம்,செல்வம் நம்மிடம் எவ்வாறு வருகிறது,நம்மிடம் எவ்வளவு காலம் இருக்கும் என்ற சிந்தனை எல்லாம் நமக்கு எப்போதும் வருவதும் இல்லை.
ராமகிருஷ்ணர் சொன்ன கதையில் வரும் விலைமாதின் வீட்டில் இருந்து கொண்டு சந்நியாசியையே நினைத்துக் கொண்டிருந்தவனும்,அவன் தாசி வீட்டில் இருப்பதையே நினைத்துக் கொண்டிருந்த சந்நியாசி அடைந்த கதியும் நாம் அறிந்ததே...
அந்த தாசி வீட்டு நபரைப் போல,பணம்,செல்வத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நாம் அதனூடையே அதிலிருந்து விலகி வாழும் இயல்பை அடைய முடியமா?
அப்படி வாழும் வாழ்வே ஆனந்த மயமானது;அதைத்தான் விட்டு விலகியிருப்பாய் இந்தச் சிட்டுக் குருவி போலே” என்றான் பாரதி.
எப்படி சாத்தியம்?
பணம்,செல்வம் எப்படி வருகிறது என்ற சிந்தனைக்குள் நாம் போனோமானால் இது சாத்தியம்.
எப்படி?
நாம் சினிமாவுக்குப் போகிறோம்,எப்படிப் போகிறோம்?
சினிமாக் அரங்கத்திற்குப் போகும் போது ஒவ்வொரு நபராக அல்லது ஒன்றிரண்டு நபர்களாகப் போகிறோம்,சினிமா அரங்கம்
நிரம்புகிறது.
சினிமா ஆரம்பித்து முடிந்த பின்னர்,எப்படி வெளியேறுகிறோம்,கூட்டமாகவும்,மொத்தமாகவும்.
செல்வமும் இப்படித்தான்..
வரும் போது சிறிது சிறிதாக வரும்;போகும் போது மொத்தமாகப் போய் விடும்.
எவ்வளவு அழகான உவமை பாருங்கள்...
என்ன,சினிமா அரங்கத்திற்குப் பதில்,கூத்துமேடை !
சிந்தித்தது நானல்ல...வள்ளுவர் !
மேலும் சினிமாவுக்கோ,கூத்து மேடைக்கோ செல்ல அனுமதிக்கும் வழி ஒன்றாகத்தான் இருக்கும்;கூத்து முடிந்து வெளியேறும் வழியோ பல வழிகளிலும் இருக்கும்.
அது போலவே செல்வம் வரும்போது சிறு வழியாக சிறிது சிறிதாக வரும். போகும்போதோ,பல வழிகளிலும் மொத்த மொத்தமாகவும் செல்லும்.
கூத்தோ,நாடகமோ,சினிமாவோ பார்க்கச் செல்லும் மக்கள் மகிழ்வான உற்சாகமான மனநிலையில் செல்வார்கள்;கூத்து முடிந்து திரும்பும்போதோ அயற்சியும்,சோர்வும் நிரம்பிய மனநிலையில் ஓய்வெடுக்க விரும்பி வெளியே ஓடுவோம்.
இதே போல செல்வம் வரும்போது மனதிற்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும்.போகும்போதோ சோர்வையும் அயற்சியையும் விட்டுச் செல்லும்.
எத்தனை அழகிய உவமை !!!!!!
குறள் இதுதான்.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
போக்கும் என்ற சொல்லில் ஒரு ‘ம்’ விகுதி போட்டிருக்கிறார் பாருங்கள், போக்கு அது விளிந்தற்று என்று சொல்லவில்லை.போக்கும்’ என்கிறார்.
அதாவது போவதும் என்று சொல்வதன் மூலம் செல்வம் வருவதும்’ இருப்பதும்’ அப்படியே கூத்தாட்டத்தில் போது நடிகர்கள்,நாடக சம்பவங்கள் நடக்கும் செயல்களுக்கொப்பானவை என்பது நாயனாரின்(பழைய கேரள முதல்வர் அல்ல !) கூற்று.
கூத்து நடக்கையில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல;பார்க்கும் கதை பொய்,நடிக்கும் பாத்திரங்கள் பொய்,நிகழும் நிகழ்ச்சிகள் பொய்,கூத்து முடிந்த பின் பார்த்தால் வெண் திரை மட்டுமே மிச்சமிருக்கும்.
செல்வமும் வந்து நீங்கிய பின் இருப்பது வெறுமை மட்டுமே....
செல்வத்தின் தோற்றமும்,இருப்பும்,அழிவும் காணல் நீர் போலப் போய்விடுகிறது.
ஆக ஒரு கூத்தைப் பார்த்த வள்ளுவரின் சிந்தனையில் இத்தனை விதயங்களும் தோன்றியிருக்கின்றன.
கூத்தின் தன்மை,நடிகர்கள்,கதை முதலியவர்றில் நிகழ்வு,கூத்து முடிந்த பின் உள்ள வெறுமை ஆகிய அனைத்தையும் செல்வத்திற்கு ஏற்றிய சிந்தனைத்திறன்தான் வியப்படைய வைக்கும் ஒன்று.
இவ்வாறு போகாமல் செல்வம் பயனாக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது இல்லையா?
அதற்கும் இன்னோரிடத்தில் வள்ளுவர் யோசனை சொல்கிறார்.
என்ன என்பதை யாராவது பின்னூட்டத்தில் சொல்வார்கள்-விவாதிக்கலாம் !
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
ReplyDeleteஅற்குப ஆங்கே செயல்.
செல்வம் நிலை இல்லாதது, அப்படிபட்ட நிலையில்லாத செல்வத்தை பெறும் போது
நிலைத்து நிற்க்கக்கூடிய ந்ல்ல செயல்களை செய்ய வேண்டும்.
.............
அடுத்த குறள்ன்னு சொன்ன மக்கள் சுலபமா கண்டுபிடித்துவிடுவாங்கன்னு வேறு ஒரு இடமுன்னு சொன்னிங்களா? :):)
அருள்,நன்றி..வாங்க..
ReplyDeleteநல்ல குறள் தாங்க..
நான் கேட்டது நீங்காது பயனளிக்கும் செல்வம் சேர்ப்பது எப்படி என்ற பொருளில்..
பார்க்கலாம்,வேறு கருத்துக்கள் வருகிறதா என..
மீண்டும் நன்றிகள்.