குறள் சிந்தனை
பிறவினை எல்லாம் தரும்-321
அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.
பகுப்பு
Thursday, June 19, 2008
ஒரு புதிய சிந்தனை-ஆர்வமிருப்பவர்கள் தொடரலாம்
வலைப்பதிவில் நமது எண்ணங்களை எழுதுகிறோம்;சிந்தனைகளைப் பகிர்கிறோம்;சில சமயம் மொக்கைக் கும்மிகளும் அடிக்கிறோம்;சின்னஞ்சிறு கதைகள் பேசுகிறோம்;மனம் வாடி வருந்துகிறோம்;பிறரை மகிழவும் வாடவும் வைக்கிறோம்...
சில சமயம் ஆக்கபூர்வமான நிகழ்வுகளும் நடக்கின்றன.(பாலா ஒரு முயற்சி எடுத்து இயற்கையின் உடலியல் சவாலுடன் இருந்த ஒரு வாலிபருக்கு மடிக்கணினி வழங்கிய நிகழ்ச்சிகள் செய்திகளாக வந்தன)
என்னுடைய நல்ல நண்பரும்,ஒத்த சிந்தனையுடையவரும்,பணி சகாவுமான ஒருவர் இப்போது தாயகம் திரும்பி பெங்களூருவில் ஒரு நிரந்தப்பணியில் அமர்ந்திருக்கிறார்.பிறப்பால தெலுங்கரான அவர் ஒரு நல்ல முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.
நல்ல கல்வித் திறம் கொண்ட,ஆனால் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கிய மாணவ,மாணவியருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஒரு அமைப்பை உருவாக்க விரும்பி,முன்னோடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.
90 % க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற,ஆண்டு வருமானம் 25000 க்குள் இருக்கும் சூழலில் இருக்கும் மாணவ மாணவியர் இந்த உதவித் திட்டத்தில் வருகிறார்கள்;இவர்கள் பொறியியல் படிப்பிற்கான நான்கு ஆண்டு கல்லூரிச் செலவை மேற்கொள்ளும் நீண்ட காலத் திட்டம் இது.
வெளிநாடுகளில் பணியாற்றும் மென்பொருளாளர்கள்,எனது நண்பரின் சொந்த ஊரைச் சார்ந்தவராக இருந்து,இந்த இணைப்புக் கண்ணியில் பங்கேற்கும் விருப்பம் இருப்பவர்கள்,அவரைத் தொடர்பு கொள்ளலாம்.விவரங்கள் இங்கே.
அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இல்லாவிட்டாலும்,இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்;தமது சொந்த ஊர் என்று வரும் போது ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பதால் மேற்சொன்னவாறு குறிப்பிட்டேன்;எவரும் இணையலாம்.
அவர் இந்த தொடர்பு உதவி பெரிய அளவில் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்.இதற்கான தனி வலை மனையும்,ஒரு ட்ரஸ்ட்டும் தொடங்கும் முயற்சிகளில் இருக்கிறார்.
வாழ்த்துவோம்;விருப்பமுள்ளவர்கள் கை கோர்ப்போம் !
Wednesday, June 18, 2008
66.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும் !
அந்த பதிவிற்கான பின்னூட்டங்களில் தமிழுக்கும்,சிவம் என்ற தத்துவத்திற்கும் உள்ள தொடர்பையும்,வடமொழியில் சிவம் என்ற தத்துவம் தோற்றுவாயாய் இல்லை;இயல்பாகப் போற்றப்படவில்லை என்ற குறிப்பும் கொடுக்கப் போக,சில பாராட்டுகளும், சில மறுப்புகளும், பல வாதப் பிரதி வாதங்களும் ஏற்பட்டன.
சிவம் என்ற தத்துவம் தமிழிலேயே போற்றி வளர்க்கப்பட்டது என்பதற்கான தரவுகளும்,இடைக்காலத்தில்,அதாவது கடல்கோளுக்குப் பின்னர் ஏன் தமிழகத்தில் சிவ வழிபாடு,போற்றுதல் இல்லாமல் போனது என்ற கேள்விகளும் எழுந்தன.
பிற்சேர்க்கையாக ருத்ர சாகையில் சிவம் பற்றிய சில மேற்கோள்களும் விளக்கங்களும்,மெய்ஞானம் வடமொழியிலேயே உள்ளது,தமிழில் இல்லை என்ற வாதங்களும் வைக்கப்பட்டன.
இந்த வகை சிவம் என்ற தத்துவம்,அறிவை நோக்கிய ஒரு வாசிப்பும் ஆய்வும் சுவையளிப்பதாகத் தோன்றியதால் விளைந்தது இந்தத் தொடர் பதிவு.
எச்சரிக்கை :( இது இரண்டு மூன்று பகுதிகளாக வர வாய்ப்பிருக்கிறது...
இனி....தமிழும்,சிவமும்,தொடர்பும்,வடமொழியும்,மெய்ஞானமும் இன்னபிறவும்..
இந்த விதயம் இரு தளங்களில் அணுகப்படவேண்டியது.
முதலாக தமிழ் என்ற மொழியின் காலம் என்ன என்பதை சிறிது ஆராய வேண்டும்;இந்த ஆய்வின் கூறுகளே பழந்தமிழ் மொழியில் நிலவிய கடவுள் கொள்கை மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் மற்றும் அறிவைத் தரும்.
தமிழ்,தமிழகம் எங்கிருந்து முகிழ்ந்தது?
தமிழ் என்ற மொழியைப் பற்றியும் தமிழகம் என்ற ஒரு நாட்டினைப் பற்றிய அறிவு வேண்டுமெனின் அந்த நாட்டின் வரலாறு ஆராயப்படவேண்டும்;வரலாற்றின் கூறுகள் நாடு,அதன் மக்கள்,அவர்களில் மொழி மற்றும் அவர்களின் நாகரிகம் ஆகியவை.
நாட்டின் வரலாறு என்பது இரு வகைப்படும்;ஒன்று எழுதப்பட்ட வரலாறு,மற்றது எழுதப்படா வரலாறு.பெரும்பாலும் கிருத்துவின்(Christ) காலத்துக்குப் பிற்பட்ட நாடாயின் பெரும்பாலும் எழுதப்பட்ட வரலாறு கிடைக்கும்;முற்பட்டதாயின் எழுதப்பட்டோ,படாததாகவோ இருக்கும்.
எழுதப்படா வரலாறு மேலும் இரு விதமாக,அறியப்படும் வரலாறு மற்றும் அறியப்படா வரலாறு என இருவிதமாக பகுக்கப்படும்.பழந்தமிழ் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு இருப்பினும் அவை மிகப் பெரும்பாலும் தமிழறிழர்களால் எழுதப்பட்டதை விட கார்டுவெல் பாதிரியார் போன்ற ஆங்கிலேயர்களுக்கிருந்த தமிழார்வத்தால் எழுதப்பட்டவை.அவர்களுக்கு தமிழின் தொன்மை,இயல்புத்தன்மை, nativity பற்றிய தெளிவு இருக்குமா என்பது மேலும் கேள்விக்குரிய ஒன்று.
அதிலும் இந்தியாவில் பலதிறப்பட்ட மக்கள் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள்,ஆண்டிருக்கிறார்கள்.இத்தகைய குடியேறியவர்களின் ஆதிக்கம் நூற்றாண்டுகளுக்கு உச்சத்தில் இருந்ததையும் வரலாறு பார்த்திருக்கிறது.(எடுத்துக்காட்டு முகம்மதியர்கள்,களப்பிரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்).இத்தகையோர் ஆட்சிப் பொறுப்பிலோ அதிகாரத்திலோ இருக்கும் போது அவர்களுக்கு ஆதரவான தரவுகள் வரலாற்றில் இடம் பெறுவது நிகழக்கூடிய தவறே.
எழுதப்பட்ட வரலாற்றில் இந்தவிதக் குழப்பங்கள் நேரும்போது எழுதப்படாத வரலாற்றாராய்ச்சிக்கு உதவும் காரணிகள் இலக்கியம்,வெட்டெழுத்துக்கள்/கல்வெட்டுக்கள்(inscriptions) மற்றும் பழம்பெரும் இலக்கிய/இலக்கண/மொழியியல் நூல்கள் ஆகியவை.பண்டைத்தமிழைப் பொறுத்தவரை தமிழர்கள் மேல் ஆரியக்கலப்பு நிகழ்ந்திருப்பதால் இந்த வித எழுதப்படா வரலாற்றை மேற்கூறிய காரணிகள் துணை கொண்டு ஆராயவேண்டிய நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன.
குமரிக்காண்டம்/லெமூரியா மற்றும் முச் சங்கங்கள்
தமிழ் மற்றும் தமிழனின் பிறந்தகம் எது என்ற கேள்வி ஆதாரமானது.
இது மூழ்கிப்போன,லெமூரியா என்ற குமரிக்கண்டம் என்பது உண்மை.இந்தக் கண்டம் இப்போதைய இந்துமாக்கடல் கொண்டுவிட்ட பரப்பு;இந்தநிலப்பகுதி ஆதிகாலத்தில் இன்றைய ஆஸ்திரேலியா,ஜாவா தீவுகளிலிருந்து இன்றைய ஆப்பிரிக்காவின் பகுதிகள் வரை பரந்த நிலப்பகுதியாக இருந்திருக்கிறது.
இந்த ஆய்வுக்கான சுட்டிகள்,சான்றுகள் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையிலும்,பி.டி.சீனிவாசையங்கார்,சேசையங்கார்,இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எழுதிய வரலாற்று நூல்களாலும் தெளிவாக அறிய வைக்கப் பட்டிருக்கின்றன.
இந்த குமரிக்காண்டத்தில் இன்றைய இமயம் போல ஒரு மலைத் தொடரும் அதன் தென்,வடப் பகுதி எல்லைகளாக இரு பேராறுகளும் இருந்திருக்கின்றன.அவை முறையே பஃருளியாறு மற்றும் குமரி ஆறு ஆகிய இரண்டும்.இந்த ஆற்றங்கரைகளுக்கிடையே இருந்த பெரு நகரே மதுரை.
இந்த மதுரை இன்றைய மதுரை அல்ல;கடல் கொண்டுவிட்ட தென்மதுரை;இந்த நகரே முதல் தமிழ்ச்சங்கம் கண்ட தென் மதுரை.
இறையனார் அகப் பொருளுரை
“தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம்
இரீஇயனார் பாண்டியர்கள்,அவருள் தலைச்சங்கமிருந்தார் தமிழாராய்ந்தது
கடல்கொள்ளப்பட்ட மதுரையென்ப;இடைசங்கமிருந்தார் தமிழாராய்ந்தது
கபாடபுரமென்ப;கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப,அவர் சங்கமிருந்தது உத்தர மதுரை என்ப ”என்கிறது.இவற்றுள் கடைச்சங்கத்தில் குறிப்பிட்டதே இந்நாள் மதுரை.
மேலும் இந்நூல் குறிப்பிடும் விவரங்கள்
தலைச்சங்கம்
இலக்கியம் : முதுநாரை,முதுகுருகு,புறப்பொருள்
இலக்கணம் : அகத்தியம்
இசை : முறுவல்,சயந்தம்,குணநூல்,செயிற்றியம்
நாடகம் : பரிபாடல்,களரியாவிரை,அபிநயம்,நற்றந்தம்,வாமனம்
இடம் : குமரி நாட்டின் பழைய மதுரை அல்லது தென் மதுரை
இச்சங்கம் 4449 வருடங்கள் இருந்ததெனவும்,இரீயினோ காய்ச்சிய வழுதி முதலாக கடுங்கோனீறாக 89 பாண்டிய மன்னராவர்.சங்க உறுப்பினர் 549.இவர்களில் அகத்தியர்,குமரவேள், நிதியின் கிழவன்,முரஞ்சியூர் முடிநாகராயர்.
இடைச்சங்கம்:
இலக்கியம் : கலி,குரு,வெண்டாளி,வியாழமாலை,மாபுராணம்
இலக்கணம் : அகத்தியம்,ஐந்திரம்,தொல்காப்பியம்
இசை : இசை நுணுக்கம்,பூத புராணம்,அகவுள்
இடம் : லெமூரியாவின் கபாடபுரம்
இச்சங்கம் 3700 வருடங்கள் இருந்ததெனவும்,இரீயினோர் வெண்டூர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னராவர்.சங்க உறுப்பினர் 549.இவர்களில் தொல்காப்பியர்,மோசி,வெள்ளூர்க்காப்பியன்,திரையன்,மாறன்,கீரந்தை என்பவர் சிலர்.
இந்த குமரிக் காண்டமும்,பின்னர் கபாடபுரமும் கடல் கோள்களால் அழிக்கப்பட்டு விட்டன.
பண்டைத் தமிழிலக்கியத்தில் சொல்லப் படும் கடல் கோள்கள் மொத்தம் நான்கு;
முதலது தலைக்கழக இருக்கையாகிய தென் மதுரையைக் கொண்டது;
இரண்டாவது “நாக நன்னாடு நானூறியோசனை” கொண்டது (மணிமேகலை 9:21);
மூன்றாவது இடைக்கழக இருக்கையான கபாடபுரத்தைக் கொண்டது;
நான்காவது காவிரிப் பூம்பட்டினத்தையும்,குமரியாற்றையும் கொண்டது.
இந்தக் குமரிக் கண்டம் மற்றும் ஆறுகளுக்கான சான்றுகள் புறப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் காணக் கிடைக்கின்றன.
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நந்நீர் பஃருளி மணலினும் பலவே “ -புறம்.9
“அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசையாண்ட தென்னவன் வாழி”-சிலம்பு 11:17-22
”தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
”குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” - புறம் 6:67
அடியில் தன்னளவு அரசர்க்குணர்த்தி என்பது முதல் சங்க காலத்து தமிழ்ப் பாண்டிய மன்னன் சாவம் என்றழைக்கப்பட்ட ஜாவா வரை வென்று,அவன் நிலப்பகுதியின் கடற்கரையில் கடலலை கழுவுமாறு தன் பாதத்தைப் பதித்து வைத்தான் என்ற குறிப்புக்கான விளக்கம் ஆகும்.
மேலும் இவ்வரசர் குடி குமரிக் கண்டத்தைக் கடல் கொண்டதனால்,வடதிசையில் பரவி இமயம் வரை இருந்த நிலப்பரப்பைச் சேர்த்து தென் திசை வரை பரந்த நிலத்தை ஆண்டவன் என்ற குறிப்பும் கிடைக்கிறது.
இந்தவாறு லெமூரியா ஆஸ்திரேலியாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை பரந்திருந்த நிலப்பகுதி என்பதற்கும்,அது பழந்தமிழர் நாடு என்பதிற்குமான மேலும் சில சான்றுகளானவை வருமாறு;
1.தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்ல திருந்தியும் சிறந்தும் இருப்பதும் முழுத் தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென்கோடியுள் வழங்குதலும்.
2.எட்டும்,பத்தும்,பன்னிரெண்டுமாக மெய்யெழுத்து ஒலிகள் கொண்ட மொழிகள் ஆஸ்திரேலியாவிலும் அதனையடுத்த நாடுகளிலும் வழங்குதல்.
3.முழுவளர்ச்சியடைந்த பின்னே ஒரு மொழியின் வள ஆராய்ச்சி நடைபெறும்;இத்தகைய மொழியாராய்ச்சிக்கான தலைச் சங்கம் குமரிக் கண்டத்தின் தென்கோடியான பஃருளியாற்றங்கரையில் இருந்தது
4.பண்டைத் தமிழ்ச் செய்யுள்களில் கூறப்படும் நீர்நாயும்,காரன்னம் என்னும் பறவையும் ஒத்த உயிரிகள் ஆஸ்திரேலியாவிற்குத் தெற்கில் உள்ள தாஸ்மேனியாத் தீவுகளில் காணப்படுவது.
5.தென்னாடு,தென்னவன்,தென்மொழி போன்ற பதங்கள் தெற்குத் திசையமைந்த பெருநிலப் பகுதியைக் குறிப்பதாக இலக்கியங்களில் காணக் கிடைப்பது.
1. ”குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” - புறம் 6.97
2. ”மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேல்சென்று மேவார் நாடிடம்படப்
புலியொடு வில்நீக்கிப்
புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன்” -கலித்தொகை.104
இந்த தரவுகளால் தமிழ்மொழி குமரிக் காண்டத்தில் இருந்ததும்,குமரிக் கண்டத்தமிழர் தென்னாடு-லெமூரியா- முழுதும் பரவி இருந்ததோடு வட இமயம் வரை சென்று,வென்று சிறந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்றும் அறியக் கிடைக்கிறது.
இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது
இந்த சிந்தனைக்கு வலு சேர்க்கும் மேலும் சில ஆய்வு நோக்கான தரவுகள்:
1.Early History of India என்ற ஆய்வு நூலின் ஆசிரியரான வின்செண்ட் ஸ்மித்(Vicent Smith) மற்றும் ப.சுந்தரம்பிள்ளை எழுதிய தமிழியத் தொன்மையாராய்ச்சி நூல்கள் சொல்வது,
“வட இந்தியாவின் சமஸ்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து இந்தியா(நாவலந்தேயம்) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வது,அந்த அறிவைப் பெறுவதற்கான முயற்சியை மிகக் கேடானதும்,மிகச் சிக்கலான இடத்திலிருந்தும் தொடங்குவதாகும்.விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள இந்தியப்பகுதியே இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகிறது;இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும்,மொழியையும்,குமுகாய(சமுதாய) ஏற்பாடுகளையும் இன்றும் தெளிவாகக் கொண்டிருக்கின்றனர்;எனவே அறிவியம் முறைப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் தனது ஆய்வை,இதுவரை சிறந்ததென்று கொள்ளப்பட்டிருந்த முறைப்படி சிந்து கங்கை சமவெளியினின்று தொடங்காமல்,கிருஷ்ணை,காவிரி,வைகையாற்று வெளிகளின்று தொடங்க வேண்டும்”
2.PT.சீனிவாசையங்காரும்,இராமச்சந்திர தீட்சிதரும் இந்த அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் விளவான தமிழர் வரலாறு மற்றும் தென்னாட்டு வரலாறு.
இந்த ஆய்வுகள் தமிழினமும்,தமிழ் மொழியும் அதன் உச்சநிலையில் குமரிக்காண்டத்தில் இருந்ததற்கான சான்றுகளைத் தருகின்றன.
இன்னும் அவை குமரிக் காண்டமே முதல் மனித இனம் தோன்றிய இடமாக இருக்கக்கூடும்;உலகின் முதல் மொழி தமிழாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாக நிறுவும் சுட்டிகளை வைக்கின்றன.
ஆயினும் இப்பதிவின் நோக்கம் சிவம் என்ற வழிபாட்டுத் தத்துவமும்,தமிழுக்கு அதனுடன் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு நோக்கில் அலசலுமே ஆதலால்,உலகின் முதல் மொழி’ ஆய்வுக்குள் செல்லாமல்,
தமிழினம் குமரிக் காண்டத்தில் சிறப்புற உச்சநிலைப் பண்பாடு,நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது;மொழியாராய்ச்சி செய்து இலக்கியம் வளர்க்கும் வண்ணம் பண்பட்டிருக்கிறது;நாவலந்தேயம்(இந்தியப் பகுதியும் குமரிக் காண்டமும் இணைந்த பகுதி) முழுதும் பரவி ஆண்ட வாழ்வியல் கொண்டது
என்ற அளவில் கொண்டு மேற்செல்வோம்.
-இன்னும் வரும்
இந்தப் பதிவின் தொடர்ச்சியான பகுதி இரண்டு: இங்கு.
Saturday, June 14, 2008
65.பெட்ரொல் பயன்பாட்டைக் குறைக்க ஞாநி'யின் யோசனைகள்
சிங்கையில் கூட கார் வாங்குபவர்கள் கிட்டத்திட்ட காரின் விலை அளவுக்கு 'மகிழ்வு வரி' - Certificate of Entitlement(COE) - கட்ட வேண்டும்.காட்டாக சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை இங்கு சுமார் 58000 டாலர்.இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 16,82,000 ரூபாய்.இதில் காரின் விலை சுமார் 7.5 லட்சம் மட்டுமே இருக்கும்;மீதி ‘மகிழ்வு வரி'.
இவை போன்ற வழிகள் தீவிரமாக யோசிக்கப் பட வேண்டிய நேரம் இது.
இதுவும்(மகிழ்வு வரி) 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாவது.10 ஆண்டுகளுக்குப் பின்னும் கார் வைத்திருக்க வேண்டுமெனில் இந்த COE ஐ திரும்ப விண்ணப்பித்து வாங்க வேண்டும்;காரும் அப்போதைய சுற்றுச் சூழல் வரையறைகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.ஆனால் இவற்றை செயல்படுத்த,தங்குதடையற்ற,அற்புதமான பொதுப் போக்குவரத்து இருப்பது துணை செய்கிறது.
இவை இந்தியாவில்,தமிழகத்தில் வர தொலைநோக்கும்,செயல்திறமும் கொண்ட,சுயநலம் அற்ற நல்ல தலைவர்கள் பொறுப்புக்கு வர வேண்டும்.
வெகு அருகில் அப்படிப்பட்ட சமிஞ்ஞைகள் தெரியவில்லை,அதுதான் மிகுந்த சோகம் !
இனி ஓவர் டு ஞாநி:
ஏற்கெனவே பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொருளாதார மேதைகள் மன்மோகன்&சிதம்பரம் கூட்டணிக்கு மரண அடியாக வந்திருக்கிறது பெட்ரோல் விலை உயர்வு.இதன் விளைவாகத் தேர்தல்களில் சோனியாவும்காங்கிரசும் தோல்வியைச் சந்திக்க வேண்டி வந்தால், மன்மோகன் சிங் பழையபடி உலக வங்கி வேலைக்கும் சிதம்பரம் வக்கீல் வேலைக்கும் போய்விட முடியும். பாவம் சோனியா. பாவம் ராகுல். பாவம் காங்கிரஸ்.
இந்தத் தருணத்திலாவது மன்மோகனும் சிதம்பரமும் மக்களிடம் உண்மைகளைப் பேசிவிடலாம்.பிரகாஷ் காரத்தும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ராஜ்நாத்தும் அத்வானியும் பரதனும் ராஜாவும் டெல்லியில் ஆட்சியில் இருந்தாலும் கூட பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது என்பதுதான் உண்மை. அதை விடக் கசப்பான உண்மை இன்னும் கொஞ்ச நாட்களில் மறுபடியும் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்ற வேண்டி வரும் என்பதாகும்.
பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கும் முதல் விஷயம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதாகும். அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், இந்தோனேஷியா, இரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரேட், வெனிசூலா ஆகிய 13 நாடுகள் வசம்தான் உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40 சதம் இருக்கிறது. சந்தையில் பெட்ரோலியத்தின் விலை குறையாமல் இருக்க, இவை அவ்வப்போது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைத்துவிடுகின்றன.
நவம்பர் 2006-ல் எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஐம்பது டாலருக்குக் கீழே போய்விடக் கூடாது என்பதற்காக தினசரி உற்பத்தியை 17 லட்சம் பீப்பாய்கள் வரை குறைத்தன.இப்போது 2008-ல் முதல் மூன்று மாதங்களில் தினசரி உற்பத்தி 3 கோடியே 23 லட்சம் பீப்பாய்களாக இருந்து வருகிறது.
விலையை பாதிக்கும் இன்னொரு அம்சம் அரசாங்கங்கள் போடும் வரி. எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, கல்வி வரி, டீலர் கமிஷன், வாட் வரி, போக்குவரத்துச் செலவு என்றெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 28 ரூபாய் வரை வந்து விடுகிறது. அடக்க விலை சுமார் 22 ரூபாய்தான். மொத்தம் 50 ரூபாயைத் தாண்டிவிடும்.
பெட்ரோல் வியாபாரத்தில் பெரும் லாபம் அடைவது சுத்திகரிப்பு செய்து விநியோகிக்கும் தொழிற்சாலைகள் மட்டும்தான். ரிலையன்ஸ் கம்பெனி சுத்திகரிப்புத் தொழிலில் மட்டும் 2005&06-ல் 5915 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது. அடுத்த இரண்டே வருடத்தில் 2007&08-ல் இந்த லாபம் 10,372 கோடியாகிவிட்டது. இந்த லாபத்துக்கு வரி போட்டு வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் திரட்டலாம். ஆனால், ரிலையன்ஸ் மீது வரி போட எந்த அரசும் முன்வராது. இந்தியாவில் ரிலையன்ஸ் தவிர மீதி எல்லா சுத்திகரிப்பு ஆலைகளும் பொதுத் துறையுடையவை.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இங்கேயும் விலையை உயர்த்தாவிட்டால், இந்த சுத்திகரிப்பு விநியோக கம்பெனிகள் எல்லாம் பெரும் நஷ்டத்தை அடையும் என்பதுதான் அரசு சொல்லும் வாதம். சந்தை விலைக்கேற்ப விலைகளை உயர்த்தினால், பெட்ரோலை லிட்டர் 100 ரூபாய்க்கு விற்க வேண்டி வரும். மக்கள் கொதித்துவிட மாட்டார்களா? எனவே, லிட்டர் 100 ரூபாய் ஆக்கவும் முடியாது.
எனவே எக்சைஸ், கஸ்டம்ஸ் வரிகளில் கொஞ்சத்தை மத்திய அரசும், விற்பனை வரியில் கொஞ்சத்தை மாநில அரசுகளும் குறைத்து பொது மக்களுக்கு அதிக விலையேற்றம் வராமல் சமாளிப்பதை வழக்கமாக செய்கின்றன.சுத்திகரிப்பு கம்பெனிகளுக்கு நஷ்டம் வராமல் தடுக்க அந்தத் தொகையை அரசு பல வடிவங்களில் ஈடு செய்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், எல்லாம் முழு முட்டாள்தனம்.
இப்போதைய விலை உயர்வுக்குப் பிறகும் அரசு நஷ்டமடையப்போகும் தொகை சுமார் இருபது ஆயிரம் கோடி ரூபாய்கள். எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்திய வரிப்பணம்தான் இது. கிராமப்புறங்களில் ஒருவருக்கு வருடம் முழுவதும் குறைந்தபட்ச வேலை வாய்ப்புத் தருவதற்காக அரசு உருவாக்கிய திட்டத்துக்காக ஒதுக்கும் தொகையே வருடத்துக்கு வெறும் 16 ஆயிரம் கோடிதான். அதை விட 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக பெட்ரோலை சலுகை விலையில் கொடுப்பதற்கு அரசு செலவிடுகிறது. ஏன் பெட்ரோலை சலுகை விலையில் எல்லா பொது மக்களுக்கும் தரவேண்டும் என்பதுதான் என் கேள்வி.
கார்,டூவீலர் முதலிய தனியார் சாதனங்களுக்கு எந்தச் சலுகையும் தரவேண்டியதில்லை. லிட்டர் விலையை 100 ரூபாயாக வைக்கலாம்.பஸ், ஆட்டோ முதலிய பொது போக்குவரத்து சாதனங்களுக்கு மட்டுமே சலுகை விலை தேவை. ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் அடிப்படைத் தேவையான சமையல் செய்வதற்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய், எரிவாயு-வுக்கு மட்டுமே சலுகை தரலாம். நகரத்தில் ஒரு பஸ்ஸுக்கு சாலையில் தேவைப்படும் இடத்தில் இரு கார்கள் ஓட முடியும். பத்து டூவீலர்கள் ஓட முடியும். ஆனால் ஒரு பஸ்ஸில் 100 பொது மக்கள் செல்கிறார்கள்.இரண்டு கார்களில் அதிகபட்சமாக பத்துப் பேர். பத்து டூவீலர்களில் அதிகபட்சம் இருபது பேர். பஸ் வசதியை அரசு அதிகரித்தால், பல பேர் டூவீலர்களை விட்டுவிட்டு அதற்கு வந்துவிடுவார்கள்.
பொதுவாகவே சாலைப் போக்குவரத்து என்பது தொடர்ந்து பெரும் செலவு பிடிக்கக்கூடியதாகும். பெட்ரோல், செலவை அதிகரிக்கிறது. கார் போன்ற தனியார் வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க நெரிசல் அதிகமாகி, கோடிக்கணக்கில் செலவு செய்து ஒவ்வொரு சந்திலும் மேம்பாலங்கள் கட்ட வேண்டி வருகிறது.
மாறாக,ரயில் போக்குவரத்து என்பது ஆரம்பத்தில் பெரும் செலவு பிடிப்பதாக இருந்தாலும், அன்றாட பராமரிப்புச் செலவு குறைவானது. மிக அதிகம் பேரை மிகக் குறைவான நேரத்தில் மிகக் குறைவான செலவில் போக்குவரத்து செய்யக்கூடியது ரயில்தான்.
ஆனால், சென்னை போன்ற நகரத்தை எடுத்துக் கொண்டால் கார், டூவீலர் நெரிசலை அதிகரித்துவிட்டு, மாதாமாதம் ஒரு புது மேம்பாலம் கட்டியாக வேண்டிய சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். திருவான்மியூரிலிருந்து பாரிமுனைக்குப் பறக்கும் ரயிலில் 20 நிமிடங்களில் செல்ல முடிகிறது. அதே ரூட்டில் பஸ்ஸில் 75 நிமிடங்கள் ஆகிறது.
ஆனால் பறக்கும் ரயிலைப் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரவில்லை. காரணம், நமது திட்டமிடுதலில் இருந்த கோளாறுதான். பறக்கும் ரயில் செல்லும் ரயில் நிலையங்களில் இறங்கி அடுத்த இடத்துக்குச் செல்ல ரயிலடியில் பஸ் நிறுத்தங்கள் கிடையாது. பல இடங்களில் ரயில் நிலையம் சந்துகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயம், மும்பையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் செல்லும் மேற்கு புறநகர் ரயில் பாதை நெடுக ஒவ்வொரு ரயிலடியிலும் இரு புறமும் பஸ் டெர்மினஸ்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுப் போக்குவரத்துப் பிரிவுகளான ரயிலும் பஸ்ஸும் மும்பையில் சிறப்பாக அமைக்கப்பட்டு இயங்குவதால், அங்கே சென்னையை விட டூவீலர்களின் விகிதம் மிகக் குறைவு. ஆட்டோக்கள் சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதால்,சூழல் மாசுபடுவது குறைவு. கட்டணமும் சென்னையை விடக் குறைவு.
நகரங்களில் போக்குவரத்தை பஸ், ரயில், ஆட்டோ முதலிய பொது போக்குவரத்துக்களைக் கொண்டே திறம்படச் செய்ய முடியும். அப்படிச் செய்தால், தனியார் கார்கள், டூவீலர்கள் எண்ணிக்கையையும் பெட்ரோல் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும்.இந்த அணுகுமுறையைத்தான் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்றன.
பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் முறையினால் பெட்ரோல் செலவைக் குறைக்க முடியும். இந்தியாவில் எத்தனால் கிடைப்பதில் எந்த சிரமமும் இல்லை. எத்தனால் தயாரிப்பதனால், உணவுப் பொருள் தட்டுப்பாடு வரும் சூழ்நிலையும் இங்கு இல்லை. ஏற்கெனவே இங்கே இருக்கும் சர்க்கரை ஆலைகளிலிருந்து ரசாயனத் தொழில் தேவைகளுக்குப் போக எஞ்சிய எத்தனால் அளவே வருடத்துக்கு 120 கோடி லிட்டர் வரை இருக்கிறது. ஆனால், இதில் கால் பாகத்தைத்தான் பெட்ரோலிய ஆலைகள் சென்ற வருடம் எடுத்துப் பயன்படுத்தின. பெட்ரோல் உபயோகத்தைக் குறைப்பதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு சரியான தீர்வு. அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள், போலீஸ், ராணுவம் முதலியோர் பொது மக்கள் செலவில் கார்களைப் பயன்படுத்தி வரும் விதம், சுருக்கமாகச் சொன்னால் அராஜகமானது. இந்தப் பயன்பாட்டை எளிதாக, சரிபாதியாகக் குறைக்க முடியும். அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் தினசரி அலுவலகத்துக்கு பஸ்ஸில் போகலாம்.எமர்ஜென்சி நிலைமைகளில் மட்டுமே காரைப் பயன்படுத்த வேண்டும்.தலைவர் படம் பார்க்கப் போனால் கூடவே அத்தனை எடுபிடிஅமைச்சர்களும் ஆளுக்கொரு காரில் கூடப் போகிறார்கள்.
பெட்ரோல் விலை இனியும் உயர்ந்துகொண்டுதான் போகும்.அதை சிக்கனமாக செலவழிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால், வீணே பொருளை அழிப்போம்.
சிக்கனத்துக்கு என் யோசனைகள் இதோ. இதை விட இன்னும் சிறப்பான யோசனைகளை எல்லாரும் யோசிக்கலாம்.
1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.
2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.
3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.
4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
5. எந்த நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
6. முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில்களுக்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.
7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதையெல்லாம் நிறைவேற்றும் எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்குக் கிடையாது. காரணம், இப்படிச் செய்தால் ஓட்டு கிடைக்காது என்று அவர்கள் பயப்படுவார்கள். இப்படிச் செய்யாவிட்டால்,ஓட்டுப் போடமாட்டோம் என்று பொது மக்கள் சொல்லும் நிலை வர வேண்டும்..
இந்த வாரப் பூச்செண்டு
டாஸ்மாக் மதுக்கடையை தங்கள் தெருவில் திறக்கக்கூடாது என்று பெரும் போராட்டம் நடத்திய சென்னை எல்லிஸ் சாலை குலாம் முர்த்தாசா தெருவாசிகளுக்கு இ.வா.பூ.
இந்த வாரப் சிரிப்பு
மக்களுக்கு சேவை செய்வதற்காக கட்சி தொடங்கி இருக்கிறேன்
- நடிகர் கார்த்திக்
இந்த வாரக் குட்டு
கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அவரைப் புகழ்வதற்காக உடலுறவுடன் அவர் படைப்புகள் தரும் இன்பத்தை ஒப்பிட்டுப் பேசியஜால்ரா பேரரசுகள் வாலிக்கும் அப்துல் ரகுமானுக்கும் இ.வா.குட்டு.
Friday, June 13, 2008
64.அமெரிக்க அதிபர் தேர்தல்:தோற்றும் கவரும் ஹிலாரி !
ஒருவழியாக ஒபாமா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுவதற்கான குறியீடுகள் தெளிவாக வந்துவிட்டன.
முன்னிறுத்தப்படுவதற்கான-nomination- தேர்தல் இவ்வளவு கடுமையான முறையில் நடந்தது அமெரிக்க அதிபர் தேர்தல்கள் வரலாற்றில் இது முதல்முறை என்று நினைக்கிறேன்.
காரணங்கள் இரண்டு.ஒன்று முதல் முறையாக ஒரு பெண் அதிபருக்குப் போட்டியிட்டார்;முதன்முறையாக வெள்ளையர் அல்லாத-முழுக்க கருப்பராக இல்லாவிட்டாலும்-கருப்பர் இனத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நபருக்குமான போட்டி.வியப்பூட்டும் வகையில் இந்த போட்டி ஒரே கட்சிக்குள் நடந்ததுதான் சிறிது விநோதம்.
ஒபாமா இளைஞர்களையும்,சமநோக்கு சிந்தனையாளர்களையும் பெரிதும் கவர்ந்த போது,ஹிலாரி வயதானவர்களையும்,சிந்தனையாளர்களையும்,பெண்களையும் பெரிதும் கவர்ந்தார்.ஆரம்பத்தில் ஊடகங்கள் அனைத்தும் ஒபாமா மிக எளிதாக முன்னேறிவிடுவார் என்ற கருத்தைப் பிரதிபலித்தபோது,ஹிலாரி அவரது(ஒபாமாவின்) நாமினேஷனை மிகுந்த கடினமுடன் அடைய வேண்டிய ஒரு வெற்றியாக மாற்றிக் காட்டினார்.கடைசிவரை ஒபாமாவுக்கு அவர் சரியான போட்டியாக விளங்கினார்.
ஆனால் என்னைக் கவர்ந்தது அவருடைய புயல் போன்ற,நன்கு தீர்மானிக்கப் பட்ட பிரச்சாரத்தை விட,ஒபாமா கிட்டத்தட்ட தேர்ந்தெடுக்கப் பட்டபின்,அவருடைய கடைசி நாள் கூட்டத்தில் அவருடைய உரையும்,நடத்தையும்..
அது முதிர்ச்சியும்,புத்திசாலியுமான ஒரு பெண்ணின் அணுகுமுறை எப்படி இருக்கும் என உலகுக்குக் காட்டிய ஒன்று.
தன் தோல்வியால் பெண்கள் அயர்ச்சியடையக் கூடாது என்று சொன்ன ஹிலாரி,இனிமேல் நாட்டின் முதல் பதவிக்குப் போட்டியிடுவதை ஒரு செயற்கரிய செயலாகக் கருதாமல்,ஒரு உரிமையாகக் கருத வேண்டிய நிலை வந்துவிட்டது என்று பிரகடனம் செய்தார்;அதிபர் நாமினேஷனுக்கான தேர்வில் தன் தோல்வி இளமைக்கும்,பெண்மைக்குமான உந்துதலை அழித்துவிடக் கூடாது என்றார்.
தாய்மொழியான ஆங்கிலத்தில் அற்புதமான வார்த்தைகளில் அவரது உரை பின்வருமாறு செல்கிறது..
She urged women who had supported her — who had turned out at her headquarters, flocked to her rallies and poured into the polls to vote for her — not to take the wrong lesson from her loss.
“You can be so proud that, from now on, it will be unremarkable for a woman to win primary state victories, unremarkable to have a woman in a close race to be our nominee, unremarkable to think that a woman can be the president of the United States,” she said. “To those who are disappointed that we couldn’t go all of the way, especially the young people who put so much into this campaign, it would break my heart if, in falling short of my goal, I in any way discouraged any of you from pursuing yours.”
At that point the cheers, mostly from women, swelled so loud that Mrs. Clinton’s remaining words could not be heard.
முன்னர் ஒபாமா ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்ப்டுத்துவது உறுதியான போது,துணை அதிபர் தேர்வுக்கு அவர் ஹிலாரியை முன் மொழியலாம் என்ற ஊகங்கள் இருந்தன.
ஆனால் இதைப்பற்றிப் பிறகு யோசிக்கலாம் என ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துவிட்ட போதும்,ஹிலாரி தன்னுடைய கடைசிப் பிரச்சார உரையில் எந்தவிதக் கசப்புகளும் மேலெழுந்துவிடாத சாக்கிரதை உணர்வில் பேசினார்;அதோடு முழுமூச்சாக ஒபாமாவை ஆதரிக்க வேண்டும் என தன் ஆதரவாளர்களை வேண்டினார்.
பிரச்சாரம் ஆரம்பித்தபோது ஒரு பெண் அதிபராகத் தேர்வு பெற முயற்சிக்க முடியுமா என்ற கெள்விகள் இருந்தன;நமது முயற்சி அது முடியும் எனக் காட்டியது.ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்கன் அதிபராக முயற்சிக்க இயலுமா என்பதில் கேள்விகள் இருந்தன;ஒபாமா அது முடியும் எனக் காட்டியிருக்கிறார்’ என்றார்.
“Now, think how much progress we’ve already made,” she said. “When we first started, people everywhere asked the same questions. Could a woman really serve as commander in chief? Well, I think we answered that one. Could an African-American really be our president? And Senator Obama has answered that one.”
Mrs. Clinton was as relaxed and expansive as she had been at any point on the campaign trail. In talking about all the reasons she thought Democrats should rally around Mr. Obama, she lapsed into a rushed preacher’s cadence, ending each refrain with “and that’s why we need to elect Barack Obama our president.”
She even embraced without any hesitation Mr. Obama’s campaign theme, grinning broadly as she said, “So today I am standing with Senator Obama to say: ‘Yes, we can!’ ”
தன் கணவர் கிளிண்டனோடு 1993,1997 களில் வெற்றி சமயத்தில் தானே நடனமாடிய மேடையில் அவரது கடைசி நாள் பிரச்சாரக் கூட்டம் நடந்தது எதேச்சையான ஒரு ‘நாடகபாணி’-dramatic- நிகழ்வு.
ஹிலாரி சொன்னார்-
‘“Together, Senator Obama and I achieved milestones essential to our progress as a nation, part of our perpetual duty to form a more perfect union,” she said. “Now, on a personal note, when I was asked what it means to be a woman running for president, I always gave the same answer, that I was proud to be running as a woman, but I was running because I thought I’d be the best president. But I am a woman and, like millions of women, I know there are still barriers and biases out there, often unconscious, and I want to build an America that respects and embraces the potential of every last one of us.”
நேஷனல் பில்டிங் மியூசியத்தில் நிகழ்ந்த நெகிழ்வான இந்த உரையைக் சிகாகோவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒபாமா இவ்வாறு கூறினாராம்,
“I honor her today for the valiant and historic campaign she has run,” he said. “She shattered barriers on behalf of my daughters and women everywhere, who now know that there are no limits to their dreams.”
அமெரிக்காவை விட்டு வந்து சுமார் 8 வருடங்களாகி விட்டதால்,அமெரிக்க மக்களின் துடிப்பை நேரடி உணரும் அனுபவம் இல்லாதிருக்கும் இந்த நேரங்களில்,ஊடகவழியிலேயே செய்திகளை அவதானிக்க வேண்டிய நிலையில் இருந்த நான்,ஹிலாரியை விட ஒபாமாவே சிறந்தவராக இருப்பார் என எண்ணினேன்.
ஹிலாரியின் கடைசிப் பிரச்சார தினப் பேச்சுகள்,தெளிவும்,தீர்மாணமும்,புத்திசாலித்தனமும் நிறைந்த பெண்களுக்கும் கூட இன்னும் பாலியல் சார்ந்த மனத் தடைகள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றன என் எண்ண வேண்டியதிருக்கிறது.இதை மீறிப் பரிமளிக்கும் பெண்களின் பிரதிநிதியாக இப்போது அவர் தெரிகிறார்.
மேலும் ஆசியாவைப் பற்றிய ஒபாமாவின் கணிப்புகளும்,மதிப்பீடுகளும் இந்தியாவுக்கு அவ்வளவு சிறந்தவையாக இருக்கப் போவதில்லை என்றும் சிலர் இப்போது மதிப்பிடுகிறார்கள்..
பார்க்கலாம்-இடையில் மெக்கைன் மொக்கை போட்டு விடவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்...
பி.கு: மிகுந்த சக்திமிகு ஆண்களின் மனைவிகளாக இருந்தும்,நேர்மையான காரணங்களுக்காக அவர்களை எதிர்த்த இந்தப் பெண்மணிகளும் என்னைக் கவர்கிறார்கள் !
Thursday, June 12, 2008
63.நாம் என்ன குப்பைத் தொட்டியா?
உலகமயம், தாராளமயம் என்கிற கொள்கைகளை நரசிம்மராவ் அரசு அறிவித்தபோது, அன்றைய மக்களவையில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் எச்சரித்தது இப்போதும் காதில் ரீங்காரமிடுகிறது~""உலகமயம் என்கிற பெயரில் இந்தியாவில் அன்னிய சக்திகள் எந்தவித வரைமுறையோ, கட்டுப்பாடோ இல்லாமல் வளையவர அனுமதிக்கப் போகிறீர்கள். இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். நமது கட்டுப்பாட்டில் நமது நாடும் சுதந்திரமும் இல்லாமல் போகும் அபாயம் எனக்குத் தெரிகிறது...''
உலகக் கோடீஸ்வரர்களில் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதும், இந்திய நிறுவனங்களான டாடா, பிர்லா, அம்பானி, எஸ்ஸôர் ஏன், நம்ம ஊர் டி .வி.எஸ். போன்றவை பன்னாட்டு நிறுவனங்களாகக் கடல் கடந்து செயல்படுகின்றன என்பதும் உண்மை. ஆனால், அதற்காக நாம் கொடுத்திருக்கும், கொடுத்துக் கொண்டிருக்கும் விலை என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்க மறுக்கிறோம்.
"ப்ளூ லேடி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல், இனிமேல் கடல் பயணத்துக்கு ஏற்றதல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. அதில் இருக்கும் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாஸ்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று அந்த சின்னஞ்சிறிய நாடு அதை உடைக்க மறுத்துவிட்டது. அங்கிருந்து அந்தக் கப்பல் மலேசியா சென்றது. அந்த நாடும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் அந்தக் கப்பல் நுழைய அனுமதி மறுத்துவிட்டது.
சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாஸýம், பாலிக்ளோரினேட்டட் பைபினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக் கொண்ட அந்தக் கப்பல், இந்தியாவைத் தஞ்சம் அடைந்து, நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளையும் பெற்று, குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் உடைத்துப் பிரிக்கப்பட்டது.
குறைந்தப்ட்சம் பங்களாதேஷ்க்கு இருக்கும் சுரணை,அக்கறை கூடவா நமக்கு நம் தேசத்தின் மேல் இல்லை?
இத்தனைக்கும், இந்தியா உள்பட சுமார் நாற்பது நாடுகள், புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கும் என்பதால் ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதியைத் தடை செய்திருக்கின்றன. மனிதாபிமான அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தையும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் அந்தக் கப்பலின் உரிமையாளர்கள் தங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டனர்.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு செப்டம்பர் 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஒரு கப்பல் வந்தடைகிறது. பன்னாட்டு புகையிலை நிறுவனமான ஐ.டி.சி.யின் காகிதத் தொழிற்சாலைப் பிரிவு இறக்குமதி செய்திருக்கும் 25,000 டன் பழைய பேப்பர் என்று சுங்க இலாகாவினரிடம் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 1,000 கன்டெய்னர்கள் எனப்படும் ராட்சதப் பெட்டிகளில் 960 கன்டெய்னர்கள் அவர்கள் கூறியதுபோல, பழைய பேப்பர்களும், காகிதக் குப்பைகளும் என்பதால் சுங்க இலாகாவினர் அவைகளை அனுமதித்தனர்.
மீதமுள்ள 40 கன்டெய்னர்களில் என்ன இருந்தது என்று கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள். அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி நகரத்தின் குப்பைக்கூளங்கள் இந்தக் கன்டெய்னர்களில் நிரப்பப்பட்டு இந்தியாவில் கழிவுகளாகக் கொட்டுவதற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவைகளில், பிளாஸ்டிக் பைகள், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள், உபயோகித்துத் தூக்கி எறிந்த பேட்டரிகள், கக்கூஸ் குப்பைகள், மிதியடிகள் என்று குத்தி அடைக்கப்பட்டிருந்தன.
இது கண்டுபிடிக்கப்பட்டதும் எதிர்பார்த்ததுபோல, ஐ.டி .சி. நிறுவனம் இதை இறக்குமதி செய்யத் தாங்கள் நியமித்த இடைத்தரகரைக் கையைக் காட்டியது. தூத்துக்குடியிலிருந்து அந்த 40 கன்டெய்னர்களும் துபாய்க்குச் சென்றன. அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் இப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் அனுமதிக்காகக் காத்திருக்கிறது அந்தக் கன்டெய்னர்களைத் தாங்கிய கப்பல்.
மத்திய மாசுக்கட்டுப்பாடு ஆணைய நிபுணர்கள் அந்த கன்டெய்னர்களை மீண்டும் நியூஜெர்சிக்கே அனுப்பிவிடும்படி அறிக்கை அளித்தபோது, அப்பன் குதிருக்குள் இல்லை என்று ஓடி வந்திருக்கிறது ஐ.டி .சி. நிறுவனம். எதற்குத் தெரியுமா? அதைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பதற்கு. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. அனுமதி வழங்கப்பட்ட 960 கன்டெய்னர்களில் எத்தனை கன்டெய்னர்களில் குப்பைக்கூளங்கள் இருந்தனவோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
இதுபோல, எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் இறக்குமதி என்கிற பெயரில் குப்பைக்கூளங்களை கன்டெய்னர்களில் அடைத்து இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுகிறார்களோ, யார் கண்டது?
நமது ஆட்சியாளர்களுக்கு தேசப்பற்று என்பதே கிடையாதா?
அவர்கள் யாருடைய நன்மைக்காக ஆட்சி செய்கிறார்கள்? ?
இந்தியா என்ன வல்லரசு நாடுகளின் குப்பைத் தொட்டியா???
நன்றி:எக்ஸ்ப்ரஸ் குழுமம்
Wednesday, June 4, 2008
62.அத்தியாவசியப் பொருள்,பெட்ரோல் விலையேற்றம் ஊக வியாபாரத்தாலா ? - II
கச்சா எண்ணெய் சொக்கட்டான் யூக வியாபாரம் 2003 வாக்கில் துவங்கி, 2006ஆம் ஆண்டிலிருந்து விஸ்வரூபம் எடுத்து, இப்போது பேரல் ஒன்றுக்கு டாலர் 128க்கு மேல் என்று உயர்ந்து, இன்னும் உயரும் என்கிற நிலையில் இருக்கிறது. இன்றைக்கு உலகமே பெட்ரோல் விலை உயர்வால் தத்தளிக்கிற நிலைக்குக் கொண்டு தள்ளிவிட்டது.
இப்படி லட்சக்கணக்கான கோடி ரூபாய் பண பலம் படைத்த இந்த வால் ஸ்ட்ரீட் வங்கிகள், நிதி மற்றும் மூலதன நிறுவனங்கள் – எஃகு, அலுமினியம், தங்கம் போன்ற பொருள்களின் மீது சந்தையில் யூக வியாபாரம் செய்ய ஆரம்பித்ததால், கச்சா எண்ணெய்க்கு நேர்ந்த அதே கதிதான் உலோகங்களுக்கும் ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக எஃகும், தங்கமும், வெள்ளியும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர, பண பலம் படைத்த வங்கிகளும், மூலதன நிதி நிறுவனங்களும், வியாபாரிகளுக்குக் கடன் கொடுப்பதை விட தாங்களே வியாபாரிகளாக மாறியதுதான் காரணம். இதை அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளிலுள்ள நிதித்துறை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளும், பொருளாதார மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்ட அறிஞர்களும் வெளிப்படையாக எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
இதுவரை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும், உபயோகிக்கும் நுகர்வோருக்கும் இடையே தரகு செய்து கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள் – என்கிற அவப்பெயர் வியாபாரிகளுக்கு இருந்து வந்தது. ஆனால், இப்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் பண பலம் படைத்த வங்கிகளும், நிதி மற்றும் மூலதன நிறுவனங்களும் – தரகர்கள் மற்றும் வியாபாரிகள் எல்லோரையுமே ஓரம் கட்டிவிட்டனர். பொருள்கள் எல்லாவற்றையும் யூக வியாபாரம் மூலமாகத் தங்கள் கைக்குள் கொண்டு வந்து, விலையை உயர்த்தி, உற்பத்தி செய்தவர்களுக்கு ஒரு பலனில்லாமலும், உபயோகிப்பவர்களுக்குப் பெரும் பாரமாகவும் – கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
புலி ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, பின்பு மனிதனையே கடித்தது என்று கூறுவார்கள். அதுபோல இந்த வால் ஸ்ட்ரீட் பண முதலைகள் முதலில் கச்சா எண்ணெய், பிறகு உலோகங்கள் என்று தங்களுடைய பிரம்மாண்டமான பண பலத்தை சந்தைகளில் உபயோகித்த பிறகு, கடந்த ஆண்டிலிருந்து தங்களுடைய பண பலத்தை அரிசி, கோதுமை, சோயா போன்ற அத்தியாவசியப் பொருள்கள் மீதும் காட்ட ஆரம்பித்தனர். உடனேயே உலகம் முழுவதும் உணவுப்பொருள்கள் விலை, வானை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.
உலகிலேயே கோதுமை அதிகம் ஏற்றுமதி செய்கிற அமெரிக்காவில், கோதுமை விலை (கிட்டத்தட்ட 27 கிலோ கொண்ட) அமெரிக்க மூட்டை ஒன்றுக்கு, கடந்த ஆண்டு துவக்கத்தில் 3 டாலர் அல்லது 4 டாலர் விலை இருந்தது. பிப்ரவரி 2008ல் டாலர் 13.5 என்று நான்கு மடங்காக உயர்ந்தது. அதே போல, ஜனவரி முதல் ஏப்ரல் வரை அரிசி விலை 70 சதவிகிதம் – உயர்ந்தது.
ஹைடி (Haiti) என்கிற நாடு, 75 சதவிகிதம் உணவுப்பொருளை இறக்குமதி செய்து வாழ்கின்ற நாடு. ஏப்ரல் 2008, 4ஆம் தேதி கட்டுக்கடங்காத உணவு விலை உயர்வு காரணமாக அங்கு புரட்சி ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடு நடந்து, ஏப்ரல் 11ஆம் தேதி அரசாங்கம் பதவியிழந்தது.
எகிப்து நாட்டில் ஒரே நாளில் உணவுப்பொருள்கள் விலை 30 சதவிகிதம் உயர்ந்தது. உலகம் முழுவதும் இப்படிக் கிலி ஏற்பட காரணமாக இருந்தது – வால் ஸ்ட்ரீட் பண முதலைகள் கோதுமை, அரிசி யூக வியாபாரத்தில் பெருமளவில்இறங்கியதால்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
ஐ.நா. சபையிலிருந்து உலக வங்கி மற்றும் உலக நிதி நிறுவனம் வரை, எல்லோருக்கும் இந்தப் பண முதலைகளை எப்படிச் சமாளிப்பது என்கிற கவலை அதிகமாகியிருக்கிறது.
ஏப்ரல் 2008 முதல் வாரத்தில் உலக வங்கி மற்றும் ஐ.எம்.எஃப். பில் இந்தப் பிரச்சனையை விவாதித்தனர். ஆனால், எந்தப் பரிகாரமும் இல்லாமல் ஏப்ரல் 2008, 9ஆம் தேதி ஐ.நா. சபையின் தெற்கு அமெரிக்க, மேற்கு அமெரிக்கப் பிரதிநிதி, "இந்த உணவு நெருக்கடி சூதாட்ட வியாபாரத்தால்தான்; இது தொடரும். நிற்காது'' என்று மனமுடைந்து கூறினார்.
"சரி, இப்படி உணவுப்பொருள்கள் விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்லதுதானே' என்று தோன்றலாம். இப்படித்தான் உணவுப்பொருள்களில் யூக வியாபாரமே துவங்கியது. யூக வியாபாரம் மூலமாக விவசாயிகளுக்கு நல்ல விலை கிட்டும் என்றுதான் அமெரிக்காவில், சிகாகோ சந்தையில் 1959ஆம் ஆண்டு யூக வியாபாரம் உணவுப்பொருள்களில் துவங்கியது. அதே அமெரிக்காவில், இப்படி வால் ஸ்ட்ரீட் பண முதலைகள் உணவுப்பொருட்கள் யூக வியாபாரத்தில் இறங்கிய பிறகு, விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். ப்ளூம்பெர்க் டாட் காம் (http://www.bloomberg.com/) என்கிற நிதித்துறை சம்பந்தப்பட்ட வெப்சைட், உலகிலேயே ஐந்து பிரபலமான நிதி சம்பந்தப்பட்ட வெப்சைட்களில் ஒன்று.
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அது வெளியிட்ட ஆய்வுச் செய்தியின் தலையங்கம் என்ன தெரியுமா? "வால் ஸ்ட்ரீட் (உணவுப்பொருள்கள்) பதுக்கல் காரணமாக நாசமான விவசாயிகளும், நுகர்வோரும்'. ப்ளூம்பெர்க் ஆய்வின் சுருக்கம் இதுதான் :
"பொருள்கள் விலை ஏறுமா, இறங்குமா என்று பூவா, தலையா போட்டு வியாபாரம் செய்யும் பெரும் பணம் கொண்ட நிதி நிறுவனங்கள் (இவை மியூச்சுவல் ஃபண்ட் போல) அமெரிக்காவின் மொத்த உணவுப்பொருள்கள் கையிருப்பில் ஒரு பாதியைத் தங்கள் கைவசப்படுத்தி இருக்கின்றன. அவை கைப்பற்றியுள்ள அரிசி, கோதுமை போன்ற பண்டங்களின் அளவு 122 லட்சம் டன்கள்! இந்த நிலை விவசாயிகளுக்குப் பாதகமானது; லாபம் தேடி சொக்கட்டான் ஆட்டம் ஆடும், யூக வியாபாரத்தில் ஈடுபடும் வால் ஸ்ட்ரீட் பண முதலைகளுக்கு இது சாதகமானது – என்று கூறுகிறார்கள் விவசாயிகளுடைய பிரதிநிதிகள். விலை உயர்வின் காரணமாக, உற்பத்தியான உணவுப்பொருட்களை வாங்க வியாபாரிகள் தயாராக இல்லை. காரணம், வியாபாரிகளுக்குக் கடன் கொடுக்கும் வங்கிகளே, வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட்டு அதிக விலை தேடுவதால் இது சாத்தியமில்லை'.
இந்த நிலையிலிருந்து பரிகாரம் தேட அமெரிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றனர் – விவசாயிகள் சங்கங்களும் அதன் தலைவர்களும். இங்கு எப்படி, அரசு, பணம் படைத்த கம்பெனிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தலைசாய்த்து விவசாயிகளுக்குச் செவி சாய்க்காமல் இருக்கிறதோ, அதுபோலவேதான் அமெரிக்க அரசாங்கமும், அதிகாரிகளும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல விவசாயிகளின் வேண்டுதலைப் புறக்கணிக்கின்றனர். அதுமட்டுமல்ல, இங்கு எப்படி ப.சிதம்பரம் விலைவாசி உயர்வுக்கு உலகத்தின் மேல் பழிபோடுகிறாரோ அதுபோலவே, "உலகமே கெட்டுப்போயிருக்கிறது. உலக அளவில் விலைகள் ஏறிவிட்டன. அதனால்தான் அமெரிக்காவிலும் உணவு விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டிருக்கிறது' என்கிறது அமெரிக்க அரசாங்கம். எப்படி இங்கு நிதியமைச்சர் கூறுவது உண்மைக்குப் புறம்பானதோ, அதுபோலவேதான் அங்கும்.
அமெரிக்காவில் ஜனவரி 2008 முதல் ஏப்ரல் வரை அரிசி விலை 70 சதவிகிதம் உயர்ந்தபோது, கலிஃபோர்னியா அரிசி கமிஷனின் (விவசாயிகளையும் அரிசி மில்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட) தலைமை அதிகாரி, "வேண்டிய அளவு அரிசி சப்ளை இருக்கிறது. தட்டுப்பாடே இல்லை' என்று கூறுகிறார்.
அமெரிக்க அரசாங்கத்தின் உணவுத்துறை அதிகாரி நாதன் சில்டஸ் என்பவர், "உலகத்தில் உற்பத்தியாகும் அரிசி எல்லாமே, விளையும் இடத்திலிருந்து 60 மைல்களுக்குள் உபயோகப்படுத்தப்படுகிறது. மிகச்சிறிய அளவிலேயே உலக அளவில் அரிசி வியாபாரம் நடக்கிறது' என்கிறார். உலக அரிசி உற்பத்தியில் 5 சதவிகிதம்தான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால், உலக மக்களில் பாதிக்கு மேல் அரிசி உணவு உண்பவர்கள்தான். அரிசி என்பது, பட்டித்தொட்டி சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கிறதே தவிர, உலகமயமாகிய விஷயமல்ல.
இப்படி, அமெரிக்காவில் கிடங்குகளில் அரிசி நிரம்பி வழிகிறபோது, உலக அரிசி விலை எப்படி அமெரிக்காவைப் பாதிக்க முடியும்? வாய்ப்பே இல்லை. பின்பு எப்படி அரிசியின் விலை அமெரிக்கச் சந்தைகளில் உயருகிறது? காரணம், அரிசி பற்றாக்குறை இருப்பது போன்ற தோற்றத்தை, பெரும் கம்பெனிகள் ஏற்படுத்துகின்றன.
"வால் மார்ட்' என்கிற வியாபாரம் செய்யும் பன்னாட்டுக் கம்பெனி (இதுதான் உலகிலேயே மிகப்பெரிய கம்பெனி) "சாம்ஸ் க்ளப்' என்கிற பெயரில் மொத்த வியாபாரமும் செய்கிறது. இதற்கு 593 கிடங்குகள் இருக்கின்றன. அதே போல, காஸ்ட்கோ என்று இன்னொரு மொத்த வியாபாரக் கம்பெனி. இதற்கு 534 கிடங்குகள் இருக்கின்றன. இந்தக் கிடங்குகளில் அரிசியும் கோதுமையும் நிறைந்து வழிகின்றன. ஆனால், ஏப்ரல் 23ஆம் தேதி இந்த இரண்டு கம்பெனிகளும் மொத்தமாக அரிசி வாங்குபவர்களுக்கு "4 மூட்டைக்கு மேல் கொடுக்கமாட்டோம்' என்று அறிவிக்கின்றன. அதே நாளில் அமெரிக்க அரிசி ஃபெடரேஷன் பிரதிநிதி "வேண்டிய அரிசி ஸ்டாக் இருக்கிறது; தட்டுப்பாடு என்பது வெறும் பேச்சு' என்று அடித்துப் பேசுகிறார். இருந்தும் அங்கு அரிசி விலை இறங்கவில்லை.
அரிசியைக் கிடங்குக்காரர்கள் வெளியில் கொண்டு வந்தால்தானே? நம் நாட்டில் பதுக்கல் வியாபாரம் கள்ளத்தனமாக நடக்கிறது; அங்கு அது சட்டப்பூர்வமாக, வெளிப்படையாக நடக்கிறது. மறைக்க முடியாத உண்மை இதுதான். வால் ஸ்ட்ரீட் பண முதலைகளும், கிடங்குக்காரர்களும் சேர்ந்து சதி செய்து, யூக வியாபாரத்தில் ஈடுபட்டு செயற்கையாகத் தட்டுப்பாடு ஏற்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். இது அமெரிக்காவை மட்டுமல்லாமல், உலகையே பாதிக்கிறது. இதுதான் உண்மை.
அங்கு நடப்பதுபோல இங்கும் நடக்கப் பெருமுயற்சி நடந்து வருகிறது. அங்கு போலவே இங்கும் யூக வியாபாரம் பெருக, அங்கு போலவே இங்கும் பண முதலைகளையும், பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளையும் சிறு வியாபாரத்தில் ஈடுபட வைக்க அரசும், பொருளாதார நிபுணர்களும், நிதித்துறை பத்திரிகைகளும் பெரு முயற்சி செய்து வருகின்றன.
நன்றி-குருமூர்த்தி,துக்ளக் இதழ்
உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !
பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites
-
வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...
-
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...
-
பெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...
-
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...
-
நீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...
-
பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்தர் த...
-
வர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...
-
சூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...
-
இந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...
-
ஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...
பார்வைப் புலம்...
-
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு - யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை படைத்த...4 years ago
-
மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பக...7 years ago
-
மீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூர...7 years ago
-
அப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் - டாக்டர் அப்துல் கலாம் (1931-2015) இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செ...9 years ago