குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, March 21, 2011

127.2011 தேர்தல் 2 - வைகோ என்னும் அப்பாவி !


என்ன நடக்கிறது தமிழகத் தேர்தல் களத்தில்?

கடந்த வாரம் அதிமுக தன்னிச்சையாக 160 இடங்களுக்கு போட்டியிடும் ஆட்களை அறிவித்த போது, அதிமுக கட்சியுடன் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் விகாந்திடம் ஓடினார்கள்.

ஜெ.யின் வீட்டில் நடந்த குழப்படிகளால் அந்தப் பட்டியல் தவறாக வெளியிடப் பட்டது என்றும் கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக வினரை ஜெ.தொலைபேசியில் அழைத்து மீண்டும் பேசுகிறார் என்றும் சனி,ஞாயிறுகளில் செய்திகள் வந்தன.
ஆனால் கடைசிவரை மதிமுக தலைவர் வைகோ அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஜெ. தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்த போது ஏதோ ஒரு முடிவுடன்தான் அறிவித்திருக்கிறார் என்பது இப்போது நிச்சயமாகி விட்டது.வைகோ கழற்றி விடப்பட்டிருக்கிறார்.

வைகோ செயற்குழு என்று கூட்டி மேலும் ஏதாவது பட்டாசு விடப் போகிறாரா என்று பார்த்தால் அவர் கூத்தில் கோமாளி என்பது போல தேர்தல் புறக்கணிப்பு என்று முடிவெடுத்திருக்கிறார்.

ஜெ.யின் அந்த முடிவின் பின்னணியில் சோவும் ஸ்டெர்லைட் மற்றும் விஜய் மல்லையாவின் குழுமங்களும் இருக்கின்றன என்று ஒரு வதந்தி பத்திரிகைகளில் நிலவுகிறது.முதல் நிறுவனம் அவர் மீது தொழில் ரீதீயான போட்டியும் இரண்டாவது நிறுவனம் இலங்கையிலிருந்து இயக்கப்படுவதாகவும் மேலதிக செய்திகள் சொல்கின்றன.


கடைசி நேரம் வரை இழுக்கடிக்கப்பட்ட பின்னர் கழற்றி விடப் பட்டிருக்கும் வைகோ விற்கு வேறு சாத்தியங்களும் இல்லை;இவருக்காக சண்டை பிடித்து விகாந்து வெளியே வந்தால் அவர்,வைகோ மற்றும் கம்யுனிஸ்டுகள் சேர்ந்த மூன்றாவது அணி அமைந்திருக்கலாம்.ஆனால் அம்மா அதற்கெல்லாம் இடம் கொடுக்க வில்லை.

சரியான ப்ளேஸ்மெண்ட் ஷாட் ஆக அமைந்தது அவரது புறக்கணிப்பு.வைகோ வால் இதை முன்னரே ஊகித்திருக்க முடியவில்லை என்பது அவரது அரசியல் தெளிவின்மைக்கு இன்னொரு (சமீபத்திய)எடுத்துக்காட்டு.

தேர்தல் முடிந்தபிறகு அவரவர் பெறும் சீட்டுகளின் அடிப்படையில் மீண்டும் ஒரு கூட்டணிப் பேச்சு நடக்கும்;அப்போது இப்போதைய கூட்டணியிலிருந்து பலர் மாறும் சாத்தியங்களும் இருக்கின்றன.

அவ்வாறான ஒரு சாத்தியத்தை மனதில் இருந்தி தெலுங்கு பேசும் வைகோவும் விகாந்தும் ஏதாவது திரைமறைவு உடன்படிக்கைகளில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை;அப்படி இல்லாத பட்சத்தில் வைகோ வின் இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு என்பது….

மன்னிக்க முடியவில்லை..முட்டாள்தனமானதுதான் என்று சொல்லத்தான் தோன்றுகிறது.

ஆனால் அவருக்கு வேறெதுவும் வழி இருக்கவில்லை என்பதும் உண்மை ! தெளிவாகத் தெரிவது ஒன்று மட்டும்தான். எதுகாரணம் பற்றியும் திமுக மறுபடி வெல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் திமுக வின் தலைவர் மிகவும் தந்திரசாலி;வைகோ வுக்கான தூண்டில் இன்று கி.வீ மூலம் வீசப்பட்டிருக்கிறது..

இந்த அரிதார நாடகத்தில் இன்னும் என்னென்ன காட்சிகள் மாறும் என்று தெரியவில்லை.

()

இதற்கிடையில் திமுக வின் தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது,எதிர்பார்த்தபடி பல இலவசப் பொருள்களுக்கான அறிவிப்புகளுடன். இது போன்ற இலவசங்களுடன்,அதாவது அதிகாரப் பூர்வமாகவே அறிவத்து விட்டு நடைபெறும் தேர்தல்கள் சனநாயகத்தின் கேலிக்கூத்தாகத் தெரிகிறது.இவற்றை சட்டம் அனுமதிக்கிறதா என்ன?

இது பற்றிய தினமணியின் தலையங்கமும், இந்தப் பதிவும் வரிக்கு வரி ஒத்துக் கொள்ளப்படவேண்டியவை.

இந்தக் கார்ட்டூன் மற்றும் போட்டூன்களும் !








First Published : 21 Mar 2011 11:40:05 AM IST


ஹைய்யா... ஐய்யா... சத்தம் மூச் காட்டாதீங்க... மிக்ஸியில எதிரணி அரைபட்டுடிச்சி... கிரண்டர்ல எல்லாம் மாவாயிட்டாங்க. அரைச்ச மாவையே அரைக்கணுமான்னு அவங்க திண்டாடிட்டிருக்காங்க... இலவசங்கிற காத்துல அவங்க எல்லாம் இலவம்பஞ்சா பறக்கிறாங்க... அதுனால ஒண்ணு செய்யலமா...? எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கெல்லாம் இலவசம் ஏதாவது அறிவிச்சிட்டா என்ன..?!

()

தெகல்காவின் இந்தக் கட்டுரை திராவிட இயக்க வரலாறை தெளிவாக(!) சொல்கிறது.

தமிழ் வாரப் பத்திரிகைகளில் இது போன்ற ஒரு கட்டுரை வர வாய்ப்பிருக்கிறதா ?!

Wednesday, March 9, 2011

126. 2011-தேர்தல்-1


தேர்தல் நேரம் நெருங்கி விட்ட தமிழகத்தில் பல கட்சிகளும் பல நாடகக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இம்முறை முதலில் கூட்டணி முயற்சிகளை எடுத்து ஜெ. தேமுதிக வின் விசயகாந்தை உள்ளே கொண்டு வந்தார்.அவர் வி.காந்தை குடிகாரன் என்று விமர்சித்திருந்தார் என்பதெல்லாம் வி.காந்துக்கு மறந்து விட்டது;எப்படியாவது தனது மற்றும் தன் மச்சினர் சுதீஷ் ஆகியவர்களின் அரசியல் குறிக்கோள்கள்-அதாவது பதவி,மற்றும் சினிமாவில் பருப்பு வேகாமல் போகும் சூழலில் செய்ய ஏதாவது வேலை,பிழைப்பு வேண்டும் போன்ற காரணங்கள் உயிர் வாழ வேண்டுமெனில் அவர் அரசியலில் பிழைத்திருக்க வேண்டும;அதற்கு முதலில் செய்தியில் இருக்க வேண்டும்,செய்தியில் இருக்க வேண்டும் எனில் பதவி இருக்க வேண்டும்.

5mds14-small

பதவி இல்லா விட்டால் விகாந்தை ஊடக விபசாரக் குழுக்கள் கழற்றி விடும் அபாயமும் இருந்தது; தங்கள் பிழைப்புக்கு ரஜினியை கொம்பு சீவி சீவிப் பார்த்து கைசலித்துப் போன நேரத்தில் அவர்களுக்கு மாட்டியவர் விகாந்து. ஆரம்பத்தில் விகாந்து முழங்கியது சிறிது வித்தியாசமாக இருந்தது;கூட்டணி இல்லை என்று உறுதியாக நின்றது தமிழக அரசியல் அரங்கத்தில் எடுபட்டது.அதனாலேயே அவருக்கு 10 சதம் வரை ஓட்டுகளும் விழுந்தன.ஊடக வியாபாரம் அவரை வைத்து நன்றாக நடந்தது.அவரும் ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

தெளிவான ஒரு திட்டம் வைத்திருப்பதாக விகாந்து குறிப்புகள் காட்டினார்;தமிழக அரசியில் சூழலில் மாறுதலை எதிர்பார்த்திருந்த பெருவாரியான 'கழக' சார்பற்றவர்கள் அவரை வரவேற்கத் தயாராக இருந்தார்கள்.நானும் என்னுடைய முந்தைய பதிவுகளில் சரத்குமாரை விட விகாந்து வரவேற்புப் பெற வாய்ப்பிருக்கிறது என்றே கருதினேன்.

இந்த சூழல் 2006 தேர்தல் சூழல்.

ஆனால் 2011 ல் காட்சிகள் பெருமளவு மாறி விட்டிருக்கின்றன.ஊடக சார்பு, மற்றும் அரசியலில் மிதந்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் கூட்டணி முடிவுக்கு விகாந்து வந்திருக்கலாம்;ஜெயும் அவரை உள்ளே கொண்டு வருவதுதான் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு நல்லது என்று நினைத்து,கொடுத்து அவரை உள்ளிழுத்திருக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

விகாந்து பிழைப்பாரா அல்லது இன்னொரு ராமதாசு ஆவாரா என்பது இந்தத் தேர்தலில் தெரிந்து விடும் !


திமுக வைப் பொறுத்த வரை 2006 ல் இருந்த நிலை வேறு;அப்போது போல் இப்போது திமுக வட்டாரம் பலமாக இருப்பது போலத் தெரியவில்லை.மிகு வயதாகி விட்டிருக்கும் முக'வே இன்னும் கள முடிவுகள்-ஸ்ராட்ட்டஜி டெஷிசன்- எடுக்க வேண்டியவராக இருக்கிறார்.அலைக்கற்றை ஊழலில் அவரது மகள் மற்றும் மனைவி விசாரிக்கப் படலாம் என்ற சூழல் நிலவுகின்ற நேரத்தில்,காங்கிரசும் அவரது மிரட்டல்களுக்கு மசிய முடியாத நிலையில் இருப்பது போல் தோன்றுகிறது.தெஹல்கா வெளியிட்ட ஒரு கட்டுரை, திமுகவின் வல்லடிக் கோரிக்கையான 'விசாரணையிலிருந்து குடும்பத்திற்குப் பாதுகாப்பு' செல்லுபடியாக வில்லை என்று சொல்கிறது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் முன் தாமஸ் நியமனம்,காமன்வெல்த் ஊழல்,வீட்டுக் குடியிருப்பு கட்டிட ஊழல் போன்ற பல விதயங்களில் செருப்படி வாங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, முக'வின் குடும்பப் பாதுகாப்புக் கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

எனவேதான் பூச்சாண்டி காண்பித்துப் பார்த்தும் காங்கிரஸ் மசியாததால், 'காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்பது நியாயமா?' என்றெல்லாம் பஞ்சாயத்து வைத்த முக, திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று மிரட்டிப் பார்த்த முக, எதற்கும் காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒன்றும் சமிஞ்கைகள் வரவில்லையாதலால், எப்படியாவது கூட்டணியில் இருந்தால் போதும் என்ற நிலையில் கையைக் காலைப் பிடித்து,63 இடங்களைக் கொடுத்து கூட்டணியில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தினமணியின் இந்தத் தலையங்கம் உறுதிப்படுத்துகிறது.




என்ன விலை கொடுத்தாவது சமாதானம் என்று ஒருவழியாகத் தப்பி வந்திருக்கும் திமுக வை எந்த அளவுக்குக் காங்கிரசால் காப்பாற்ற முடியும் என்பதும் கேள்விக்குரியது.உச்ச நீதி மன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் சிபிஜ விசாரணையில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு குறிப்பிட்ட தேதியைக் குறித்திருக்கிறது உநீமன்றம்.சிபிஜ இன்னும் உநீமன்றத்தில் குட்டு வாங்கத் தயாராக இருக்கிறதா என்பதும்,உநீமன்றம் இதே அளவு கண்டிப்புடன் அலைக்கற்றை விசாரணை வழக்கைக் கொண்டு செல்லுமா என்பதும் தேர்தல் காலத்தில் பொறுத்திருந்து பார்க்க வேண்டியவை.

இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளிடையே ஒன்றையொன்று களத்தில் கவிழ்க்கும் உள் வல்லடி வேலைகள் பெறுமளவில் நடக்கும் என்பது கண்கூடு.எனவே அந்தந்தக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெற 'முடிந்ததை' செய்வார்கள்.தமிழக முட்டாள் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை இந்த முறை அதிக விலைக்கு விற்கலாம் !

* * * * *

இந்தத் தேர்தலின் கூத்துக்கள் முழுதாக தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகுதான் நடக்கும் என்பதும் என்னுடைய ஊகம்.அந்தந்தக் கட்சிகள் வென்ற இடங்களைப் பொறுத்து அணி மாற்றக் கூத்துகள் நடக்கும்.அது இப்போது நடக்கும் கூட்டணிக் காட்சிகளை விட மிகவும் தமாஷாக இருக்கும்.

* * * * *

திமுக,காங்கிரஸ் உறவு நிலைக்காது என்ற ஊகம் பரவலாக இருந்ததிலிருந்து இப்போதைய நிலை மாறியிருப்பதால் மாற்றணியில் சிறிது அமைதி நிலவுகிறது.ஜெ'யைப் பொறுத்த வரை பாமக போனால் போகட்டும் என்று விட்டு விட்டுத்தான் விகாந்தைப் பிடித்திருக்கிறார்.

விகாந்தின் அரசியில் நிலைப்பாடு என்னவென்று அவர் வாயால்தான் சொல்ல வேண்டும்;வாக்காளர்களிடம் சொல்ல அவர் என்ன வைத்திருக்கிறார் என்பதும்,அவரது நம்பகத் தன்மை எந்த அளவு மக்களிடம் இனி செல்லுபடியாகும் என்பதும் கவனிக்க வேண்டியவை.மக்களிடம் மட்டுமே என் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்த அவர்,ஆரம்ப காலத்தில் அதிகம் விமர்சித்த ஜெ.யைக் கூட்டணித் தலைவராக முன்னிறுத்த வேண்டிய சூழலில் எப்படி வாக்காளர்களை எதிர் கொள்வார் என்பதும், வாக்காளர்கள் அவரை எந்த நிலையில் வைப்பார்கள் என்பதும் கவனிக்க வேண்டியவை.

ஜெயைப் பொறுத்த வரை திமுக,காங்கிரஸ் இடையேயான உள்ளடி வேலைகள் அவருக்கு சாதகமாக இருக்கும் என்ற கணக்கீடும் இருக்கலாம்!

* * * * *


2011 சட்டசபைத் தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டிருக்கிறது.

* * * * *




Thursday, March 3, 2011

125.நிதி நிலை அறிக்கை 2011- ஒரு பார்வை

இரு நாட்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி இந்திரனையும் லட்சுமி தேவியையும்-இந்திய தேவதைக் கடவுளர் உருவகங்கள்-தில்லியின் பாராளுமன்றத் தெருக்களில் காணக்கிடைப்பவர்கள் அல்லர்- வேண்டிக் கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே,பெங்காலிகளுக்கேயுரிய வித்தியாசஆங்கில உச்சரிப்புடன் ஒரு பட்ஜெட்டை வாசித்துத் துப்பிவிட்டுப் போயிருக்கிறார்.


பட்ஜெட் எனப்படும் நிதிநிலை அறிக்கை என்பது ஒரு வருடாந்திர சடங்கு..பெரும்பாலும் பம்பாயின் நிறுவன முதலைகள் கண்ணை விளக்கிக் கொண்டு பார்க்கும்,ஒரு சடங்கு.90 களில் நான் சிஏ படித்த ஆரம்ப நாட்களில் என்னுடைய முதல்வர்-அதாவது பிரின்சிபல்- பட்ஜெட் உரை முழுவதையும் கேட்கும் வழக்கத்தையும் மறுநாள் ஹிந்துவில் வரும் நிநி உரையையும் முழுக்கப் படித்து விவாதிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார்.அவருடனிருந்த நான்கு ஆண்டு காலமும் அந்த வழக்கம் தொடர்ந்தது;பின்னர் விவாதிக்க ஆட்கள் இல்லாமல் தனிமையில் நிநி அறிக்கையைப் முழுக்கப் பார்க்கும் வழக்கம் வந்தது.


சிதம்பரத்தின் அந்த 95 ஆ அல்லது 97 -கனவு நிநி அறிக்கையும் அதற்கு பங்கு உலகம் அளித்த எதிர்வினையும் மறக்க இயலாதன.பின்னர் வந்த திறக்கப்பட்ட பொருளாதார நாட்களில் பெரும் வணிக முதலைகள் நிநி அறிக்கை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வது இல்லையோ என்பது எனது சந்தேகம்.ஏனெனில் நிநி அறிக்கை தயாரிக்கும் ஆரம்ப முஸ்தீபுகள் நடக்கும் போதே இன்னொரு பக்கம் இந்திய நிறுவனங்கள் கூட்டமைப்பினருடன் நிதிச் செயலர் அல்லது திட்டக்குழுச் செயலர்கள் போன்ற பெருந்தலைகள் உட்கார்ந்து ஒருபாட்டம் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதை கோடி காட்ட வைத்துத் தெரிந்து கொள்கின்றனர் என்பது எனது அனுமானம்.


நிதி அமைச்சர் அழகிய தோல் பெட்டியை தூக்கிக் காட்டி ஆட்டியபடி பாராளுமன்றத்திற்குள் செல்லும் நிநி அறிக்கை நாளுக்கு முன்னரே, நிறுவனங்களின் பெருந்தலைகளுக்கு பெட்டிக்குள் இருக்கும் சரக்கு குன்சாகத் தெரிந்து விடும் சாத்தியங்கள் நவீன,பொருளாதார வளர்ச்சி நாட்களில் எளிதே.


எனவே இந்நாட்களில் நிநி அறிக்கை வாசிப்பு என்பது மூச்சிரைக்க ஓடும் வேலையாளர்கள் ஆயாசத்துடன் வருமான வரி விலக்குக்கான தொகை அதிகரிக்கப் படுமா என்று வாய் திறந்து பார்க்கவும், கலால் வரிக் குழப்பங்கள் எந்த அளவு மேலும் இடியாப்பக் குழப்பமாகின்றன அல்லது எவை தப்பிக்கின்றன என்று பார்க்கும் நிகழ்வாகச் சுருங்கி விட்டிருக்கின்றன.

இந்தியா அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் போன்று சிக்கலான கொள்கைகள்-401K அல்லது பேபி பூமர்ஸ் பயங்கள் இல்லாத நாடு;ஏனெனில் குடிமக்களுக்கான நல்வாழ்வுக்கு எந்தப் பொறுப்பையும் நமது அரசுகள் ஏற்றுக் கொள்வதில்லை; வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போ,இடையில் ஒட்டு மட்டும் போட்டு விடு;வேறு எந்த வகையிலும் உனக்கும் எனக்கும் தொடர்பில்லை' என்று வெட்கமின்றித் திகழும் அரசுகள் இருக்கும் நாடு.எனவே பெரும்பாரியான பொதுமக்கள் நிநி அறிக்கையில் ஆர்வம் காட்டுவது வரி விலக்கு உச்ச வரம்பை ஒட்டி மட்டும் தான் இருக்கும்.


இந்த வருடம் மேற்கண்ட நியதியைப் பின்பற்றி 20000 விலக்கத் தொகை அதிகரிப்பு,சில பல கலால் வரிக்குட்பட்ட பொருள்களில் மாற்றங்களோடு சப்பென்று முடிந்து போனது.


இரண்டு விதயங்கள் மட்டும் குறிப்பிடத் தகுந்தவை.


முதலாவது நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 4.6 சதமாக இருக்கும் என்று நி.அமைச்சர் நிநி அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது..இதை பெரும்பாலும் நிதிச் சந்தை அறிஞர்கள் நகைப்புக்கிடமான அறிவிப்பாகவே பார்க்கிறார்கள்.


ஏனெனில் கடந்த ஆண்டு பற்றாக்குறை கிட்டத்திட்ட 6 சதவிகிதத்திற்கும் அதிகம்;இத்தனைக்கும் கடந்த ஆண்டு 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய்-அதாவது எதிர்பாரா வருமானம்,ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான திட்டமிடா பிரிவில் அரசுக்கு வருமானம் வர வாய்ப்பில்லை-வந்தும் அரசின் நிதிப் பற்றாக்குறை 6 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் நிலையில்,அடுத்த ஆண்டு இவ்வாறான எதிர்பாரா வருமானம் எதுவும் இல்லாத பட்சத்தில் பற்றாக்குறை 4.6 சதவீதம் இருக்கும் என்று மதிப்பிடுவது நகைப்புக்கிடமாக இருப்பது ஆச்சரியமில்லை.


இரண்டாவது மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதி அலகுகளில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு.இதை பங்குச் சந்தை பெரும் ஆரவாரமாக வரவேற்றுள்ளது. நிநி அறிக்கை நாளன்று சந்தை 600 புள்ளிகள் ஏறி,இரண்டு மூன்று வாரச் சரிவுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது...ஆனால் நீண்ட நாள் நோக்கில் இது நல்லதா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.


பங்குச் சந்தையிலேயே அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிக விகிதத்தில் இருப்பதாலேயே கணக்கற்ற அளவில் வணிகக் குறியீடு எண் உயர்வதும் வீழ்வதும் நடக்கிறது.இப்போது ம்யூச்சுவல் பன்ட்டிலும் அன்னிய முதலீட்டின் பங்கு பெருவாரியாக மாறும் போது, வர்த்தக நிலவரம் எப்படி இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.


பிறகு 80 வயதான மூத்த குடிமக்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பு 5 லட்சம்,மற்றும் உயர்தர குளிரூட்டப்பட்ட மருத்துவ தனியார் நிறுவனங்களுக்கான சேவை வரி போன்றவை வாசிக்கக் கேட்ட போதே சிரிப்பை வரவழைத்தவை.


சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா போன்ற குடிமக்களுக்கான அடிப்படை மருத்துவ சேவைகள் தன்னிறைவோடு இருக்கும் நாடுகளில் இவ்வகை அறிவிப்புகள் வந்தால் அவை பாராட்டப்படலாம்.இந்தியா போன்ற அடிப்படை சுகாதாரம் இல்லாத நாடுகளில் கேசுபாய் படேல் அல்லது வாஜபேயி போன்ற அரசியல் பிரபலங்களோ அல்லது அம்பானிகள் போன்ற அதிர வைக்கும் பணக் காரர்களோதான் 80 வயதுக்கு மேல் வாழும் சாத்தியங்கள் உள்ளது.


முகவரிகள் இல்லாத சாதாரண மனிதர்கள் அறுபதுகளில் சராசரியாக இறந்து கொண்டிருக்கிறார்கள்,எனவே இந்த அறிவிப்பு பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.


இரண்டாவதாக மருத்துவமனை சேவை வரி பற்றிய அறிவிப்பு வரும் போதே இது நிற்காது என்று தோன்றியது;ஏனெனில் இந்தியாவில் மருத்துவம் கல்வி கட்டுமானம் போன்ற அடிப்படை சாரந்த வணிகங்களில் பெரும் பணமுதலைகளும் அவர்களுக்கு அடிப்பொடியாக இருக்கும் அரசியல் வாதிகளும் தான் இருக்கிறார்கள்;அவற்றைப் பாதிக்கும் எந்தவித பாலிசி மேட்டர்களும் ஆள்வோரால் எடுக்கப்படாது..இன்றே நிநி அறிக்கையின் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படலாம் என்ற ஊகங்கள் மீடியாவில் அடிபடுகிறது..


இன்னொரு தேவையான சீர்திருத்தம் ஜி எஸ் டி எனப்படும் நாடளாவிய விற்பனை வரி. இந்த வருடமும் அதற்கு சங்கு ஊதப்பட்டு அடுத்த வருடம் என்று தள்ளி விடப்பட்டிருக்கிறது.இது எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் இந்திய சில்லரை வணிகத்திற்கு நல்லது.தற்போதைய மத்திய,மாநில அரசுகளின் வரிக்கொள்ளைகள் மற்றும் குழப்பங்கள் பெருமளவு ஜி எஸ் டி யினால் தீரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனால் மாநில அரசியல் கட்சிகள் அவ்வளவு எளிதில் இதை வர விட மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்.


இன்னும் ஒரு முக்கியமான வரத்தவறிய அறிவிப்பாக அனைவரும் பார்ப்பது காப்புறுதி மட்டும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடை ஊக்குவிக்கும் அறிவிப்புகள்;இவை எதுவும் வரவில்லை.


மீடியாவும் பங்குச் சந்தையும் இதை பெரிதும் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.ஆனால் ராமதாசு போன்ற ஆசாமிகள் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.உண்மையில் இவற்றால் பயன் உண்டா இல்லையா என்பது விவாதத்திற்குரிய ஒன்று.


என்னைக் கேட்டால் காப்புறுதி-இன்ஸ்யூரன்ஸ்-துறையை அன்னிய முதலீடுகளுக்குத் திறந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இத்துறையில் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்;காரணம் பலருக்கு எளிதில் தெரியாத ஒன்று. காப்புறுதித் துறையைப் போல் மக்களைக் கொள்ளையடிக்கும் துறை அதுவும் நோகாமல் கொள்ளையடிக்கும் துறை எதுவும் இல்லை.தனிநபர் காப்புறுதியில் வருடத்தின் ப்ரீமியம் தொகை வசூலில் 30 சதம் கூட காப்புறுதி சார்ந்த விநியோகமாகக் கொடுக்கப் படுவது இல்லை.(இது என்னுடைய அலுவல் சார்ந்த வகையில் அறிந்த உண்மை.காப்புறுதி நிறுவனங்களில் பலமுறை தணிக்கைக்காகச் சென்றிருக்கிறேன்).மீதமுள்ள 70 சதம் துறையினருக்கு சம்பளமாகவும் ஏஜெண்டுகளுக்கு கமிசனாகவும்,கிளப் மெம்பர் என்று பல வகை சலுகைகளாகவும் அமைப்பால் தின்று தீர்க்கப்படும் ஒரு துறை.எனவேதான் நமது மாமாக்கள் 60 லிருந்து 80 களின் இறுதி வரை பசை போட்டு ஒட்டிக்கொள்ளும் ஒரு வேலைத் துறையாக எல்..சி இருந்தது !


இதில் நமது அரசுத்துறை தின்பது போதாது என்று அன்னிய முதலைகளை அனுமதிப்பது பகல் கொள்ளை.


பனா சினா எப்போதோ நன்றியுடன் அன்னிய நிறுவனங்களுக்கு இதைச் செய்திருப்பார்; ஆனால் ப்ரணாப் போன்ற சென்ற தலைமுறை ஆட்களிடம் நிதிப் பொறுப்பு மாற்றப்பட்டு விட்டதால் சிறிதுகாலம் அப்பாவிப் பொதுஜனம் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.


இந்த எனது கருத்துக்கள் நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலை சார்ந்த காப்புறுதிகளுக்கு வராது.அவற்றைத் தனியாகப் பிரித்து அவற்றிற்குத் தனியான கொள்கை முடிவை எடுப்பதாக இருந்தால்,அவற்றில் அன்னிய முதலீடுகளை வரவேற்கலாம்,ஆனால் அவர்கள் தொழில் துறை காப்புறுதிக்கு-இன்டஸ்ட்ரியல் இன்ஸ்யூரன்ஸ்-வரமாட்டார்கள் !


சில்லரை வணிகத் துறைக்கு அனுமதித்துப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது;இதனால் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்திய மக்களின் செலவுப் பொருளாதாரம் முழுவதும் அன்னியர்களுக்கு லாபமாகச் செல்லும் என்பது உண்மையெனினும், நமது பொருள்களின் தரம் கூடுவதற்கு இதைத் தவிர வேறு,நிர்ப்பந்திக்கும் உந்துதல்-கம்பெல்லிங் ப்ரஷர்-வர வாய்ப்பில்லை.


இதை சில எளிய உதாரணங்கள் விளக்கும்;சாதாரண ஒரு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். 80 களில் வின் ஸ்டார் என்ற ஒரு நிறுவனமும் கேம்லின் என்ற நிறுவனமும் மட்டும் தரமான பேனா தயாரிப்பாளர்களாக தென்னிந்தியாவில் இருந்தன.கேம்லினின் தரம்தான் உச்சத் தரம். மிகுந்த வசதி வாய்த்தவர்கள் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாட்டுத் தயாரிப்புகளை விற்கும் குருவிகளிடம் பைலட் அல்லது பார்க்கர் பேனாவை வாங்கி உபயோகிப்பார்கள். அல்லது ஹீரோ ! மறக்க முடியாத இன்னொரு மலேசிய,சிங்கப்பூர் தயாரிப்பு.(ஏன் மறக்க முடியாது என்று இன்னொரு பதிவில் தனியாக எழுதுகிறேன்,அது சுவையும், தாபமும்,கோபமும் நிரம்பிய ஒரு சிறுவயதுக் கதை!). சாதாரணப் பொது ஜனங்களுக்கு இரண்டு தயாரிப்புகளையும் விட்டால் தரமான எழுது பொருளுக்கு வாய்ப்பில்லை.புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு ரெய்னால்ட்ஸ் என்ற ஒரு எழுது பொருள் வந்து இந்த அத்தனை நிறுவனங்களின் பொருட்களையும் காற்றில் ஊதித் தள்ளியது;காரணம் வழுவழுவென்று வெண்ணெயில் எழுதுவது போன்ற அதன் தரம் !


தமது பொருட்களின் தர லட்சணத்தினால் கிட்டத் திட்ட மூடும் நிலைக்கு வந்து விட்ட இந்த நிறுவனங்கள் தர மேம்பாடு என்னும் கசப்பு மாத்திரையை வேறு வழியின்றி முழுங்கித்தான் தீரவேண்டும் என்ற நிலை.இல்லாவிட்டால் சங்குதான்...அப்போதும் கேம்லின் மட்டுமே தர மேம்பாடு என்னும் பாதைக்குத் திரும்பியது,வின் ஸ்டார் ஊற்றி மூடி விட்டார்கள்..


இத்தனைக்கும் ரெய்னால்ட் பேனா வந்த போது அது 3 ரூபாய்க்கு அறிமுகப் படுத்தப் பட்டது,அதாவது கூட்டுடன் விலை. ரீஃபிளின் விலை 1.75 ரூபாய்.

கேம்லின்-ரெய்னால்ட்ஸ்'க்கு முன்னர் நம்பர் 1 இதுதான்- பேனா 4 ரூபாயிலிருந்து 12,13 வரை இருந்தது,ரீஃபிளின் விலை 75 காசிலிருந்து 3.50 ரூபாய் வரை இருந்தது; ஃபௌண்டன் பேனா என்றால் 11 ரூபாயில் இருந்து 38 ரூபாய் வரை விலை.


புயல் போல ரெய்னால்ட்ஸ் தாக்கிய போது கேம்லின் எழுது பொருள்களில் கிட்டத்திட்ட 20 வகை ரீஃபிள் பேனா வகைகளும் 15 மைப் பேனா வகைகளும் இருந்தன.ஆனால் ரெய்னால்ட்ஸ் வந்ததோ ஒரே தயாரிப்பு,மூன்று நிறங்கள், ஊதா, கருப்பு, சிவப்பு..அவ்வளவுதான்.


உடனே விழிக்கத் தவறிய கேம்லின் எழுது பொருள் மார்க்கெட்டை இழந்தது,ரெய்னால்ட்ஸ் அறிமுகப் படுத்தப்பட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் விலை 10 ரூபாயாக மாறியது,ஆனால் போட்டி போட வேண்டிய இந்திய நிறுவனங்கள் மார்க்கெட்டிலேயே இல்லை..கிட்டத்திட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு கேம்லின் புதிய வகை எழுது பொருள்களுடன் திரும்ப வந்தும்,பழைய முதன்மை நிலைக்கு வர இயலவில்லை.


எதற்காக இவ்வளவு விரிவாக இந்த எளிய கதையைச் சொன்னேன் என்றால்,தரத்தை உயர்த்திக் கொள்ளாத எந்த இந்தியத் தயாரிப்பும் குப்பையாகத்தான் இருக்கும்,இப்போது பல தயாரிப்புகள் குப்பையாகத்தான் இருக்கின்றன.


சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு வரும் போது இவ்வாறு பல தரமற்ற பொருள்கள் காற்றில் அடிபட்டு மறையும்,தரத்தை உடனடியாக மேம்படுத்திக் கொள்ளும் நிறுவனமே நிற்கும். இந்த ரண சிகிச்சை இந்திய சில்லரை வணிகத்திற்கு அவசியம் என்பது என் கருத்து.


இந்திய மக்கள் நல்ல பொருள்களைத் நுகரும் வாய்ப்பும் வரும்.உள்ளூர் தயாரிப்புகளும் தரமானதாக மாறும்,வேறு வழியற்ற நிலையிலாவது !!

மற்றபடி இந்த நிநி அறிக்கை ஒரு சடங்குதான்!



Saturday, February 5, 2011

124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை


பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே


இது சம்பந்தர் திருமுறையில் திருவலிவலப் பதிகத்திலிருந்து எடுக்கப் பட்ட ஒரு பாடல்.

பெரும்பாலும் விநாயகர் வணக்கதிற்கு திருமுறையில் தோய்ந்தவர்களுக்கு சட்டென்று நினைவில் வரும் பாடல்.


இதற்கான பொருள் விளக்க வேண்டி எனது தம்பியிடமிருந்து ஒரு மடல் வந்தது.அனைவருக்கும் பயன்படலாம் என்று நினைத்ததால் பதிவாகவும் வருகிறது...



முதலில் பாடலைப் பதம் பிரித்துப் பார்க்கலாம்..


பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது

வடி கொடு தனது அடி வழிபடும் அவர் இடர்

கடி கணபதி வர அருளினன், மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே



முக்கியமான சொற்களுக்கான பொருள்:


பிடி-பெண் யானை

கரி- ஆண் யானை

கடி-விரைவாக

வடிவு-தோற்றம்,அழகு

பயில்-வாழ்கின்ற,வழக்கமாக வைத்திருக்கின்ற



மொழி,இலக்கிய நயம்:


மிகு கொடை வடிவினர்:


மிகுந்த அளவில் கொடைத் தன்மை கொண்ட அழகிய மாந்தர்கள்

அல்லது மிகுந்த கொடைத் தன்மையையே தம்முடைய அழகை அதிகரிக்கும் என்ற வழக்கத்தை கொண்டிருக்கும்...


மிகு கொடை வடிவினர் பயில் என்பது மிகு கொடை பயில் வடிவினர் என்றும் மாற்றிப் பொருள் கொள்ளத் தக்கது.அதாவது மிகுந்த கொடையை பயில்கின்ற,வழக்கமாக வைத்தருக்கின்ற அழகிய தோற்றப் பொலிவு கொண்ட மக்கள் வாழ்கின்ற வலிவலம் என்றும் பொருள் கொள்ளலாம்.



கடி கணபதி


இடர்களைக் கடிகின்றவன் அதாவது இடர்களைப் பயமுறுத்தி வெருட்டி விரட்டுகின்றவன்.


சந்த நயம்:


இதுவல்லாமல் பாடலைப் படித்துப் பழகும் போதும் வேகமான சந்த நடையில் சொல்லிப் பார்க்கும் போதும் திருப்புகழைப் பாடும் உணர்வு வரலாம்.தமிழ் இலக்கியங்களில் சொற் சந்த நயத்தில் பலவற்றையும் விஞ்சி நிற்பது திருப்புகழ்.


சம்பந்தரின் தேவாரமும் திருப்புகழுடன் ஒப்பில் வைக்கத் தக்கது.


இந்தப் பாடலுக்கான பண் வியாழக் குறிஞ்சி என்கிறது திருமுறைத் தொகுப்பு.


திரண்ட பொருள்:


மிகுதியான வள்ளல் தன்மை பொருந்திய மக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் இருக்கின்ற இறைவன், இறைவி பெண் யானையின் உருவம் கொள்ளவும் தான் ஆண் யானையின் வடிவு கொண்டு,தமது அடியில் பக்தி கொண்டு வணங்கும் அடியவர்களின் இடர்களைக் விரைவாக,வெருட்டியும் களையும் இயல்பு படைத்த கணபதியைத் தோற்றுவித்து அருளினான்.


நன்றி..வாய்ப்புக்கு :))

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...