இரு நாட்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி இந்திரனையும் லட்சுமி தேவியையும்-இந்திய தேவதைக் கடவுளர் உருவகங்கள்-தில்லியின் பாராளுமன்றத் தெருக்களில் காணக்கிடைப்பவர்கள் அல்லர்- வேண்டிக் கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே,பெங்காலிகளுக்கேயுரிய வித்தியாசஆங்கில உச்சரிப்புடன் ஒரு பட்ஜெட்டை வாசித்துத் துப்பிவிட்டுப் போயிருக்கிறார்.
பட்ஜெட் எனப்படும் நிதிநிலை அறிக்கை என்பது ஒரு வருடாந்திர சடங்கு..பெரும்பாலும் பம்பாயின் நிறுவன முதலைகள் கண்ணை விளக்கிக் கொண்டு பார்க்கும்,ஒரு சடங்கு.90 களில் நான் சிஏ படித்த ஆரம்ப நாட்களில் என்னுடைய முதல்வர்-அதாவது பிரின்சிபல்- பட்ஜெட் உரை முழுவதையும் கேட்கும் வழக்கத்தையும் மறுநாள் ஹிந்துவில் வரும் நிநி உரையையும் முழுக்கப் படித்து விவாதிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார்.அவருடனிருந்த நான்கு ஆண்டு காலமும் அந்த வழக்கம் தொடர்ந்தது;பின்னர் விவாதிக்க ஆட்கள் இல்லாமல் தனிமையில் நிநி அறிக்கையைப் முழுக்கப் பார்க்கும் வழக்கம் வந்தது.
சிதம்பரத்தின் அந்த 95 ஆ அல்லது 97 ஆ-கனவு நிநி அறிக்கையும் அதற்கு பங்கு உலகம் அளித்த எதிர்வினையும் மறக்க இயலாதன.பின்னர் வந்த திறக்கப்பட்ட பொருளாதார நாட்களில் பெரும் வணிக முதலைகள் நிநி அறிக்கை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வது இல்லையோ என்பது எனது சந்தேகம்.ஏனெனில் நிநி அறிக்கை தயாரிக்கும் ஆரம்ப முஸ்தீபுகள் நடக்கும் போதே இன்னொரு பக்கம் இந்திய நிறுவனங்கள் கூட்டமைப்பினருடன் நிதிச் செயலர் அல்லது திட்டக்குழுச் செயலர்கள் போன்ற பெருந்தலைகள் உட்கார்ந்து ஒருபாட்டம் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதை கோடி காட்ட வைத்துத் தெரிந்து கொள்கின்றனர் என்பது எனது அனுமானம்.
நிதி அமைச்சர் அழகிய தோல் பெட்டியை தூக்கிக் காட்டி ஆட்டியபடி பாராளுமன்றத்திற்குள் செல்லும் நிநி அறிக்கை நாளுக்கு முன்னரே, நிறுவனங்களின் பெருந்தலைகளுக்கு பெட்டிக்குள் இருக்கும் சரக்கு குன்சாகத் தெரிந்து விடும் சாத்தியங்கள் நவீன,பொருளாதார வளர்ச்சி நாட்களில் எளிதே.
எனவே இந்நாட்களில் நிநி அறிக்கை வாசிப்பு என்பது மூச்சிரைக்க ஓடும் வேலையாளர்கள் ஆயாசத்துடன் வருமான வரி விலக்குக்கான தொகை அதிகரிக்கப் படுமா என்று வாய் திறந்து பார்க்கவும், கலால் வரிக் குழப்பங்கள் எந்த அளவு மேலும் இடியாப்பக் குழப்பமாகின்றன அல்லது எவை தப்பிக்கின்றன என்று பார்க்கும் நிகழ்வாகச் சுருங்கி விட்டிருக்கின்றன.
இந்தியா அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் போன்று சிக்கலான கொள்கைகள்-401K அல்லது பேபி பூமர்ஸ் பயங்கள் இல்லாத நாடு;ஏனெனில் குடிமக்களுக்கான நல்வாழ்வுக்கு எந்தப் பொறுப்பையும் நமது அரசுகள் ஏற்றுக் கொள்வதில்லை; வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போ,இடையில் ஒட்டு மட்டும் போட்டு விடு;வேறு எந்த வகையிலும் உனக்கும் எனக்கும் தொடர்பில்லை' என்று வெட்கமின்றித் திகழும் அரசுகள் இருக்கும் நாடு.எனவே பெரும்பாரியான பொதுமக்கள் நிநி அறிக்கையில் ஆர்வம் காட்டுவது வரி விலக்கு உச்ச வரம்பை ஒட்டி மட்டும் தான் இருக்கும்.
இந்த வருடம் மேற்கண்ட நியதியைப் பின்பற்றி 20000 விலக்கத் தொகை அதிகரிப்பு,சில பல கலால் வரிக்குட்பட்ட பொருள்களில் மாற்றங்களோடு சப்பென்று முடிந்து போனது.
இரண்டு விதயங்கள் மட்டும் குறிப்பிடத் தகுந்தவை.
முதலாவது நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 4.6 சதமாக இருக்கும் என்று நி.அமைச்சர் நிநி அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது..இதை பெரும்பாலும் நிதிச் சந்தை அறிஞர்கள் நகைப்புக்கிடமான அறிவிப்பாகவே பார்க்கிறார்கள்.
ஏனெனில் கடந்த ஆண்டு பற்றாக்குறை கிட்டத்திட்ட 6 சதவிகிதத்திற்கும் அதிகம்;இத்தனைக்கும் கடந்த ஆண்டு 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய்-அதாவது எதிர்பாரா வருமானம்,ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான திட்டமிடா பிரிவில் அரசுக்கு வருமானம் வர வாய்ப்பில்லை-வந்தும் அரசின் நிதிப் பற்றாக்குறை 6 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் நிலையில்,அடுத்த ஆண்டு இவ்வாறான எதிர்பாரா வருமானம் எதுவும் இல்லாத பட்சத்தில் பற்றாக்குறை 4.6 சதவீதம் இருக்கும் என்று மதிப்பிடுவது நகைப்புக்கிடமாக இருப்பது ஆச்சரியமில்லை.
இரண்டாவது மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதி அலகுகளில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு.இதை பங்குச் சந்தை பெரும் ஆரவாரமாக வரவேற்றுள்ளது. நிநி அறிக்கை நாளன்று சந்தை 600 புள்ளிகள் ஏறி,இரண்டு மூன்று வாரச் சரிவுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது...ஆனால் நீண்ட நாள் நோக்கில் இது நல்லதா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.
பங்குச் சந்தையிலேயே அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிக விகிதத்தில் இருப்பதாலேயே கணக்கற்ற அளவில் வணிகக் குறியீடு எண் உயர்வதும் வீழ்வதும் நடக்கிறது.இப்போது ம்யூச்சுவல் பன்ட்டிலும் அன்னிய முதலீட்டின் பங்கு பெருவாரியாக மாறும் போது, வர்த்தக நிலவரம் எப்படி இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.
பிறகு 80 வயதான மூத்த குடிமக்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பு 5 லட்சம்,மற்றும் உயர்தர குளிரூட்டப்பட்ட மருத்துவ தனியார் நிறுவனங்களுக்கான சேவை வரி போன்றவை வாசிக்கக் கேட்ட போதே சிரிப்பை வரவழைத்தவை.
சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா போன்ற குடிமக்களுக்கான அடிப்படை மருத்துவ சேவைகள் தன்னிறைவோடு இருக்கும் நாடுகளில் இவ்வகை அறிவிப்புகள் வந்தால் அவை பாராட்டப்படலாம்.இந்தியா போன்ற அடிப்படை சுகாதாரம் இல்லாத நாடுகளில் கேசுபாய் படேல் அல்லது வாஜபேயி போன்ற அரசியல் பிரபலங்களோ அல்லது அம்பானிகள் போன்ற அதிர வைக்கும் பணக் காரர்களோதான் 80 வயதுக்கு மேல் வாழும் சாத்தியங்கள் உள்ளது.
முகவரிகள் இல்லாத சாதாரண மனிதர்கள் அறுபதுகளில் சராசரியாக இறந்து கொண்டிருக்கிறார்கள்,எனவே இந்த அறிவிப்பு பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
இரண்டாவதாக மருத்துவமனை சேவை வரி பற்றிய அறிவிப்பு வரும் போதே இது நிற்காது என்று தோன்றியது;ஏனெனில் இந்தியாவில் மருத்துவம் கல்வி கட்டுமானம் போன்ற அடிப்படை சாரந்த வணிகங்களில் பெரும் பணமுதலைகளும் அவர்களுக்கு அடிப்பொடியாக இருக்கும் அரசியல் வாதிகளும் தான் இருக்கிறார்கள்;அவற்றைப் பாதிக்கும் எந்தவித பாலிசி மேட்டர்களும் ஆள்வோரால் எடுக்கப்படாது..இன்றே நிநி அறிக்கையின் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படலாம் என்ற ஊகங்கள் மீடியாவில் அடிபடுகிறது..
இன்னொரு தேவையான சீர்திருத்தம் ஜி எஸ் டி எனப்படும் நாடளாவிய விற்பனை வரி. இந்த வருடமும் அதற்கு சங்கு ஊதப்பட்டு அடுத்த வருடம் என்று தள்ளி விடப்பட்டிருக்கிறது.இது எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் இந்திய சில்லரை வணிகத்திற்கு நல்லது.தற்போதைய மத்திய,மாநில அரசுகளின் வரிக்கொள்ளைகள் மற்றும் குழப்பங்கள் பெருமளவு ஜி எஸ் டி யினால் தீரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் மாநில அரசியல் கட்சிகள் அவ்வளவு எளிதில் இதை வர விட மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்.
இன்னும் ஒரு முக்கியமான வரத்தவறிய அறிவிப்பாக அனைவரும் பார்ப்பது காப்புறுதி மட்டும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடை ஊக்குவிக்கும் அறிவிப்புகள்;இவை எதுவும் வரவில்லை.
மீடியாவும் பங்குச் சந்தையும் இதை பெரிதும் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.ஆனால் ராமதாசு போன்ற ஆசாமிகள் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.உண்மையில் இவற்றால் பயன் உண்டா இல்லையா என்பது விவாதத்திற்குரிய ஒன்று.
என்னைக் கேட்டால் காப்புறுதி-இன்ஸ்யூரன்ஸ்-துறையை அன்னிய முதலீடுகளுக்குத் திறந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இத்துறையில் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்;காரணம் பலருக்கு எளிதில் தெரியாத ஒன்று. காப்புறுதித் துறையைப் போல் மக்களைக் கொள்ளையடிக்கும் துறை அதுவும் நோகாமல் கொள்ளையடிக்கும் துறை எதுவும் இல்லை.தனிநபர் காப்புறுதியில் வருடத்தின் ப்ரீமியம் தொகை வசூலில் 30 சதம் கூட காப்புறுதி சார்ந்த விநியோகமாகக் கொடுக்கப் படுவது இல்லை.(இது என்னுடைய அலுவல் சார்ந்த வகையில் அறிந்த உண்மை.காப்புறுதி நிறுவனங்களில் பலமுறை தணிக்கைக்காகச் சென்றிருக்கிறேன்).மீதமுள்ள 70 சதம் துறையினருக்கு சம்பளமாகவும் ஏஜெண்டுகளுக்கு கமிசனாகவும்,கிளப் மெம்பர் என்று பல வகை சலுகைகளாகவும் அமைப்பால் தின்று தீர்க்கப்படும் ஒரு துறை.எனவேதான் நமது மாமாக்கள் 60 லிருந்து 80 களின் இறுதி வரை பசை போட்டு ஒட்டிக்கொள்ளும் ஒரு வேலைத் துறையாக எல்.ஐ.சி இருந்தது !
இதில் நமது அரசுத்துறை தின்பது போதாது என்று அன்னிய முதலைகளை அனுமதிப்பது பகல் கொள்ளை.
பனா சினா எப்போதோ நன்றியுடன் அன்னிய நிறுவனங்களுக்கு இதைச் செய்திருப்பார்; ஆனால் ப்ரணாப் போன்ற சென்ற தலைமுறை ஆட்களிடம் நிதிப் பொறுப்பு மாற்றப்பட்டு விட்டதால் சிறிதுகாலம் அப்பாவிப் பொதுஜனம் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்த எனது கருத்துக்கள் நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலை சார்ந்த காப்புறுதிகளுக்கு வராது.அவற்றைத் தனியாகப் பிரித்து அவற்றிற்குத் தனியான கொள்கை முடிவை எடுப்பதாக இருந்தால்,அவற்றில் அன்னிய முதலீடுகளை வரவேற்கலாம்,ஆனால் அவர்கள் தொழில் துறை காப்புறுதிக்கு-இன்டஸ்ட்ரியல் இன்ஸ்யூரன்ஸ்-வரமாட்டார்கள் !
சில்லரை வணிகத் துறைக்கு அனுமதித்துப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது;இதனால் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்திய மக்களின் செலவுப் பொருளாதாரம் முழுவதும் அன்னியர்களுக்கு லாபமாகச் செல்லும் என்பது உண்மையெனினும், நமது பொருள்களின் தரம் கூடுவதற்கு இதைத் தவிர வேறு,நிர்ப்பந்திக்கும் உந்துதல்-கம்பெல்லிங் ப்ரஷர்-வர வாய்ப்பில்லை.
இதை சில எளிய உதாரணங்கள் விளக்கும்;சாதாரண ஒரு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். 80 களில் வின் ஸ்டார் என்ற ஒரு நிறுவனமும் கேம்லின் என்ற நிறுவனமும் மட்டும் தரமான பேனா தயாரிப்பாளர்களாக தென்னிந்தியாவில் இருந்தன.கேம்லினின் தரம்தான் உச்சத் தரம். மிகுந்த வசதி வாய்த்தவர்கள் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாட்டுத் தயாரிப்புகளை விற்கும் குருவிகளிடம் பைலட் அல்லது பார்க்கர் பேனாவை வாங்கி உபயோகிப்பார்கள். அல்லது ஹீரோ ! மறக்க முடியாத இன்னொரு மலேசிய,சிங்கப்பூர் தயாரிப்பு.(ஏன் மறக்க முடியாது என்று இன்னொரு பதிவில் தனியாக எழுதுகிறேன்,அது சுவையும், தாபமும்,கோபமும் நிரம்பிய ஒரு சிறுவயதுக் கதை!). சாதாரணப் பொது ஜனங்களுக்கு இரண்டு தயாரிப்புகளையும் விட்டால் தரமான எழுது பொருளுக்கு வாய்ப்பில்லை.புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு ரெய்னால்ட்ஸ் என்ற ஒரு எழுது பொருள் வந்து இந்த அத்தனை நிறுவனங்களின் பொருட்களையும் காற்றில் ஊதித் தள்ளியது;காரணம் வழுவழுவென்று வெண்ணெயில் எழுதுவது போன்ற அதன் தரம் !
தமது பொருட்களின் தர லட்சணத்தினால் கிட்டத் திட்ட மூடும் நிலைக்கு வந்து விட்ட இந்த நிறுவனங்கள் தர மேம்பாடு என்னும் கசப்பு மாத்திரையை வேறு வழியின்றி முழுங்கித்தான் தீரவேண்டும் என்ற நிலை.இல்லாவிட்டால் சங்குதான்...அப்போதும் கேம்லின் மட்டுமே தர மேம்பாடு என்னும் பாதைக்குத் திரும்பியது,வின் ஸ்டார் ஊற்றி மூடி விட்டார்கள்..
இத்தனைக்கும் ரெய்னால்ட் பேனா வந்த போது அது 3 ரூபாய்க்கு அறிமுகப் படுத்தப் பட்டது,அதாவது கூட்டுடன் விலை. ரீஃபிளின் விலை 1.75 ரூபாய்.
கேம்லின்-ரெய்னால்ட்ஸ்'க்கு முன்னர் நம்பர் 1 இதுதான்- பேனா 4 ரூபாயிலிருந்து 12,13 வரை இருந்தது,ரீஃபிளின் விலை 75 காசிலிருந்து 3.50 ரூபாய் வரை இருந்தது; ஃபௌண்டன் பேனா என்றால் 11 ரூபாயில் இருந்து 38 ரூபாய் வரை விலை.
புயல் போல ரெய்னால்ட்ஸ் தாக்கிய போது கேம்லின் எழுது பொருள்களில் கிட்டத்திட்ட 20 வகை ரீஃபிள் பேனா வகைகளும் 15 மைப் பேனா வகைகளும் இருந்தன.ஆனால் ரெய்னால்ட்ஸ் வந்ததோ ஒரே தயாரிப்பு,மூன்று நிறங்கள், ஊதா, கருப்பு, சிவப்பு..அவ்வளவுதான்.
உடனே விழிக்கத் தவறிய கேம்லின் எழுது பொருள் மார்க்கெட்டை இழந்தது,ரெய்னால்ட்ஸ் அறிமுகப் படுத்தப்பட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் விலை 10 ரூபாயாக மாறியது,ஆனால் போட்டி போட வேண்டிய இந்திய நிறுவனங்கள் மார்க்கெட்டிலேயே இல்லை..கிட்டத்திட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு கேம்லின் புதிய வகை எழுது பொருள்களுடன் திரும்ப வந்தும்,பழைய முதன்மை நிலைக்கு வர இயலவில்லை.
எதற்காக இவ்வளவு விரிவாக இந்த எளிய கதையைச் சொன்னேன் என்றால்,தரத்தை உயர்த்திக் கொள்ளாத எந்த இந்தியத் தயாரிப்பும் குப்பையாகத்தான் இருக்கும்,இப்போது பல தயாரிப்புகள் குப்பையாகத்தான் இருக்கின்றன.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு வரும் போது இவ்வாறு பல தரமற்ற பொருள்கள் காற்றில் அடிபட்டு மறையும்,தரத்தை உடனடியாக மேம்படுத்திக் கொள்ளும் நிறுவனமே நிற்கும். இந்த ரண சிகிச்சை இந்திய சில்லரை வணிகத்திற்கு அவசியம் என்பது என் கருத்து.
இந்திய மக்கள் நல்ல பொருள்களைத் நுகரும் வாய்ப்பும் வரும்.உள்ளூர் தயாரிப்புகளும் தரமானதாக மாறும்,வேறு வழியற்ற நிலையிலாவது !!
மற்றபடி இந்த நிநி அறிக்கை ஒரு சடங்குதான்!
Test
ReplyDelete//நிதி அமைச்சர் அழகிய தோல் பெட்டியை தூக்கிக் காட்டி ஆட்டியபடி பாராளுமன்றத்திற்குள் செல்லும் நிநி அறிக்கை நாளுக்கு முன்னரே, நிறுவனங்களின் பெருந்தலைகளுக்கு பெட்டிக்குள் இருக்கும் சரக்கு குன்சாகத் தெரிந்து விடும் சாத்தியங்கள் நவீன,பொருளாதார வளர்ச்சி நாட்களில் எளிதே. //
ReplyDeleteCan you explain the possibility & credibility of this statement?
Heard that even cellphones of the related employees & other gadgets are seized & they are kept in kind of house arrest till budget is read.
Regards
Venkatramanan
நண்பர் வெங்கிட்டு,
ReplyDeleteஎன்ன இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க?
தேர்தல் அப்போ கூட இந்தியாவுல் வாக்குச் சாவடி வெளியில ஸ்டென் கன் வச்சுகிட்டு விறைப்பா அதுவும் ஒரு வடக்கத்தி பாரா மிலிட்டரி ஆளு நிப்பாரு..ஆனா நம்ம ஆளுங்க எல்லாம் நல்ல ஓட்டு மட்டும் போட்டு கெலிக்கிறாங்களா என்ன?
ஜோக்ஸ் அபார்ட், என் பதிவுல நீங்க கோட் பண்ணியிருக்குற பத்திக்கு முன்னால உள்ள பத்தியப் படிக்கலியா நீங்க?
நிநி அறிக்கைக்கான ஆரம்ப வேலைகள் நடக்கும் போதே அதற்கான ப்ராட் கைட்லைன்ஸ் போன்ற விதயங்களை தொழில் நிறுவனங்கள் திட்டத் துறை அல்லது நிதிச் செயலர் அளவுல கலந்து பேசிடறாங்க...அதனால அவங்களுக்கு ஓரளவுக்கு எந்த இலக்குகள் நிநி அறிக்கையில் இருக்கும் என்பது தெரிந்து விடும்..
செல் போன் பறிமுதல், வைபை அணைப்பு போன்ற செயல்பாடுகள் எல்லாம் சும்மா லூல்லாயிக்கு..வடக்கத்தி ஸ்டென் கன் பார்ட்டி தேர்தல்ல நிக்கிற மாதிரி...
அஞ்சாநெஞ்ச ஆட்கள் அடிச்சு விளையாடற மாதிரி ரொம்ப முன்னாலயே,அய்யா, இது இது வேணும்,ஒழுங்கா பாத்து சேத்துக்க..என்று தொழில்முதலைகள் சொல்லிடறாங்க அப்படிங்குறதுதான் என்னோட பதிவுல சொல்றது...
நன்னி,வருகைக்கும்,கருத்துக்கும்..