குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, April 16, 2008

54.இந்தியாவில் தொடரும் மன்னராட்சி முறை ????

பழந் தமிழ் இந்தியாவில் மன்னராட்சி முறை இருந்தது என்று வரலாற்றில் படித்திருக்கிறோம்.

ஆளும் மன்னர்,பின்னர் அவர்தம் குடும்பத்து வழித்தோன்றல்களே தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்வார்கள்;மந்திரி,பிரதாணிகளின் மகவுகள் தந்தைகளின் ஆயுளுக்குப் பிறகு புதிய மந்திரி பிரதாணிகளாக அவதாரம் எடுப்பார்கள்.

நெடுங்காலமாக இந்தியாவில் நிலவி வந்த இவ்வழக்கம்,சிற்சில மாறுதல்களோடு மீண்டும் புழக்கத்துக்கு வருகிறது.

சுதந்திரம் அடைந்த இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நேரு,பின்னர் சாஸ்திரிக்கு சிறிதுகாலம் விட்டுக் கொடுத்து விட்டு இந்திரா,அவரின் காலத்துக்குப் பின் ராஜீவ்,அவர் அகாலத்தில் மரணமடைந்துவிட்டதால்,வயதில் சிறிய அவர் மகனுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்தது காலம்.

இப்போது ராகுல்,பிரதமர் வேட்பாளராக காங்கிரஸின் தலைமைக்கு அடிவருடும்,அர்ஜூன் சிங்,மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஒருவர் பின் ஒருவராக முன் மொழியப் படுகின்றனர்.

ராகுல் அவரின் தகுதிகளாலும்,அனுபவ அறிவாலும்,நிரூபிக்கப்பட்ட திறனாலும் பிரதமர் வேட்பாளராக அறியப் பட்டால்,அது ஒத்துக் கொள்ளப் பட வேண்டியதே;ஆனால்,திணிக்கப் பட்ட கட்சிப் பொறுப்பைத் தவிர எந்த ஒரு பொதுப் பொறுப்பிலும் திறனாளராக செயல்பாடு காட்டாத அவர்,பிரதமராக தகுதி படைத்தவர்’என கூச்சமில்லாமல் காங்கிரஸ் கட்சியில் பல குரல்கள் கேட்கின்றன.

பின்னணியில் அமைதியாகப் புன்னகையுடன் வேடிக்கை பார்க்கிறார்,அவரின் அன்னை சோனியா.

இந்த காங்கிரஸ் அரசு அமையும் போதே சோனியா அரசுக் கட்டிலில் அமர முயன்ற அவர்,கலாம் (குடியரசுத் தலைவராக இருந்ததால்) சில அனுசிதமான கேள்விகளை எழுப்பியதால்,கடைசி நேரத்தில் பின்வாங்கி,தியாகி உருவம் எடுத்தார்.

இப்போது மைந்தனை சத்தமில்லாமல் முன்னிறுத்துகிறார்.
120 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸில் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு திறனாளர்களே முன்னிறுத்தப்படாதது,மிகப் பெரிய அவலங்களில் ஒன்று.

மாதவராவ் சிந்தியா,ராஜேஷ் பைலட் போன்ற இருந்த ஒரு சில திறனாளர்களும் அகாலமாக மரணித்ததும் அடுத்த அவலம்.

மாநில அளவில் மன்னராட்சிக் கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கின்ற கட்சிகளும்,தலைவர்களும் கூட ராகுலின்’முன்னிருத்தலை வரவேற்றிருக்கிறார்கள்;ஏனெனில் மாநில அளவில் அவர்களுக்கு இது போன்ற ‘எஜெண்டா’ இருக்கின்றது.

கம்யூனிசக் கொள்கைகளை கைக்கொள்ளும் சீனாவில் கூட அடுத்தடுத்த நிலையில் தகுதியான தலைவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள்;இன்னும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆளும் கட்சிகள்,ஆட்சியின் தலைவர் சரியான முறையில் செயல்படாத போது,சடுதியில் வேறு தலைவர்களை முன்னிறுத்துகின்றன.

இந்தகைய கால கட்டத்தில் உலக அளவில் மிகு வேக வளரும் பொருளாதாரமாக அறியப் பட்டிருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தலைமைத்துவத்துக்கான தகுதிகள், திறமைகளின் பாற்பட்டு செயல்படாத நிலை இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

Monday, April 14, 2008

53.எது தமிழ்ப் புத்தாண்டு ?

எது தமிழ்ப் புத்தாண்டு?


சித்திரை மாதம் முதல் தேதியை நாம் அனைவரும் இதுநாள் வரை தமிழ்புத்தாண்டு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
வழமை போல நான் இவ்வாண்டும் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்காக மின் மடல் அனுப்பினேன்;நண்பன் தங்கமணி’யிடமிருந்து இது சர்வதாரி ஆண்டு மட்டுமே,நமக்கு தமிழ்ப் புத்தாண்டு தை’யில்தான் என பதில்மடல் வந்தது.


இது சமயம் தமிழக சட்டமன்றம் ,தைத்திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட தீர்மாணித்து,இது தொடர்பான ஒரு சட்ட முன் வரைவை பேரவையில் வைத்திருப்பதும் செய்தியாக இருக்கிறது.
ஆக நம்மைப் போல சாதாரணர்கள் குழம்பி நிற்கும் சூழலையே இது உருவாக்கியிருக்கிறது.

இது தொடர்பான ஆவணங்கள் எதுவும் தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறதா என்பதும் தெரியவில்லை;ஒன்றும் படித்த்தாகவும் நினைவில்லை.

தமிழர்களைப் பொறுத்தவரை தைத்திங்கள் முதல்நாள்,பொங்கல் திருநாள்.உழைக்கும் தமிழர்கள் கொண்டாடும் திருநாள்.ஏர்ப்பின்னது உலகு என்றும் உழவே தலைப் பட்ட தொழில் எனக் கொண்டாடிய மண் தமிழ்மண்.
அத்தைய உழவர்கள் திருநாளாக மலர்ந்து,தமிழர் திருநாளாக உலகு முழுதும் கொண்டாடப் படும் தினம் தைத்திங்கள் முதல் நாள்.

ஆயினும்,தை முதல்நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடும் வழமை பழந் தமிழ் முன்னோர்களிடம் இருந்திருக்கிறதா என்பது ஆய்வுக்குரிய ஒன்று.

இது பொருளில் இரு விதமான சுட்டிகள் அறியக் கிடைத்தன,ஒன்று பேராசிரியரும் தொல்லியல் துறை நிபுணருமான திரு .ராமச்சந்திரன் அவர்களில் ஆய்வுக் கட்டுரை-தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டது,பின்வருமாறு:-



சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் "தைந்நீராடல்" எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ,புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.
அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது. கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும்,தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் (Spring) எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.
கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட "ஏரீஸ்" வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.
இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தெளஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி - சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது "மீன மேஷம் பார்த்தல்'' என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது
*தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா? *
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு.

பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். ("நாஞ்சிற்பனைக் கொடியோன்'' - புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை "புஜங்கம புரஸ்ஸர போகி" எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று.

இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே. பூம்புகாரில் இந்திர விழாவின்போது
"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து''
மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 - 69களில் குறிப்பிடப்படுகிறது.
*பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? *

இவை இரண்டிற்குமே தெளிவான விடை "அல்ல'' என்பதுதான். சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே. ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை. சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.
சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில்

"இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்''
என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12). தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.
பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி - பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும். வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.
"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்''
என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 - 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட "ஏரீஸ்" என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.
இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 - 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்'' என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் "பிரபவ'' தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை "வியாழ வட்டம்'' எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை. சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், "இனம் புரிந்த", இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின. இந்தியா "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற'' காலகட்டத்தில், "நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் "தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை.
சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர"மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை:
"சித்திரையில்தான் புத்தாண்டு''.
இக்கட்டுரையின் ஆசிரியர் ஐரோப்பிய ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் ‘கை காட்டியபடி’ தை மாதம் ஆண்டின் முதல் மாதம் என்ற வழக்கு வருகிறது என்கிறார்.

ஆயினும் வைணவ பக்தி இலக்கியங்கள் மார்கழி-தை மாதப் பகுதியை ஆண்டின் புனிதமான காலமாகக் கணக்கிடுவது நாம் காண்கின்ற ஒன்றுதான்.மேலும் உலகில் மிக அதிகமான மக்கள் பின்பற்றும் எல்லா மதக் கோட்பாடுகளின் படியும் மார்கழி-தை மாதக் காலகட்டம் புனிதமான ஒன்றாக(புனித ரமலான்,கிருத்துவின் பிறப்பு ) கொண்டாடப்படுகிற விதயத்தைப் பார்க்கிறோம்.

இன்னொரு மாறுபட்ட நோக்கில் ஏன் தை மாதம் தான் புத்தாண்டின் முதல் மாதமாக இருக்க வேண்டும் என பின்வரும் தெய்வத்தமிழ் இணையப்பக்கத்தின் ஆசிரியரின் கட்டுரை கூறுகிறது.

காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும், மாதத்தின் பெயரும், நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்கு அயலான மொழியில் இருக்கும். கிழமை ஒன்று தான் அவனுக்குப் புரிவதாக இருக்கும். அதிலும் ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் அந்த ஆண்டைப் பயமுறுத்துவது போல எழுத்தெழுத்தாக உச்சரிக்கும் போது அதற்குள் அந்த ஆண்டே ஓடிவிடும் போலத் தோன்றி அச்சத்தை விளைவிக்கும்.

ஆமாம், இந்த சக ஆண்டு என்பது என்ன? யாருக்குத் தெரியும் என்கிறீர்களா? நானே சொல்லி விடுகிறேன்.விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு. விக்கிர மாதித்தன் தமிழனா? இல்லை. அவன் ஒர் சாளுக்கிய மன்னன். அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏதாவது வேண்டுதலா?கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின் நிலைமை என்ன?

எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள். இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத் தெடங்கும். கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை. எனவே இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தொடங்கும்.
ஆகவே கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு, யாண்டு என்பது வேறு என்று தெளிவுபடுத்துகிறார்கள். ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை சரி. ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று கவலைப்படுவதில்லை. எனவே, எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப் பற்றித் தான் அது பேசும்.ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும். அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது.


அதனுடன் வடமொழிப் பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதுர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள்.இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை.

அதன்பின் தொடர்ந்து பல்லவரும், இசுலாமியரும், நாயக்கர்களும், மராட்டியர்களும், பிரஞ்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் சக ஆண்டே நிலைத்துப் போயிற்று.
ஒரு கேள்வி: பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆண்டை திடீரென மாற்றலாமா?ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. அப்படியானால் தமிழரசு ஒன்று தமிழாண்டுக்கு மீண்டும் மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா? அவனோடு தான் இந்த உலகம் பிறந்ததா? இல்லையே. அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக் கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன் இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க இயலும்?சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

இது பற்றி ஆரிய பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் கூறுவது:கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே குறிப்பிடுகிறார்?
காரும் மாலையும் முல்லை குறிஞ்சிகூதிர் யாமம் என்மனார் புலவர்
என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார்.


சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின் மூலம் அறிய முடிகிறது.
அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று.சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர் வைத்துத் தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுக்களில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று. இது தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை.இதை உணர்ந்து தான் ஏற்கெனவே தெய்வமுரசு இந்த ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றின் பெயர்களை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டிய நெறி முறையின் அடிப்படையில் தமிழ்ப் பெயர்களாக மாற்றிப் பட்டியலிட்டுக் காட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவை தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு ஏற்றுக் கொண்டு வரப்படுகின்றன.

இப்போது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள் தமிழகத்தில் நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழர்களின் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்? அதே போல் அந்தக் கணக்கைத் தமிழர்கள் சிந்தித்துத் தமக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி அநியாயம் ஆகும்? ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும்.
இனி இதை எப்படி அமைப்பது?போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள் இரண்டு.

இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும்.
இரண்டாவதாக ஆண்டுத் தொடக்கத்தைத் தை முதல் நாளிலிருந்து கணக்கிடுவது.இதில் முதலாவது ஏற்கெனவே தமிழக அரசின் நாட்காட்டிகளில் நடைமுறைக்கு வந்து விட்டது. அடுத்து அதை ஒட்டிய தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு எனக் கடைப்பிடிப்பது.
இதோ, இன்னும் சில நாளில் அரசு முத்திரை அதற்குக் கிடைத்துவிடும் என்பது இனிப்பான செய்தி.

அடுத்து இன்னொரு கேள்வி.
ஏன் நச்சினார்க்கினியர் தான் ஆவணியைச் சொல்லி இருக்கிறாரே. மாற்றுவது தான் மாற்றுகிறீர்களே ஆவணி மாதத்திற்கே போவது தானே! இப்போது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் ஒரே நாள் விடுமுறைக்கும் வேட்டு வைக்கிறீர்களே! இப்படி ஒரு கேள்வி எங்கோ ஒரு அரசு அலுவலக மூலையில் இருந்து கேட்கிறது.

விடுமுறையை விடுங்கள். பழைய ஆவணி மாதம் பற்றிய கேள்வி கவனிக்கப்பட வேண்டியதே!தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது உலகம் என்றார். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்துக் கிடப்பவன் தமிழன். ஆவணி பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை. அந்த மாதத்திற்குச் சற்று முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அடுத்த மாதம் அறுவடை செய்ய முடியுமா? இயற்கை அப்படி இல்லையே. எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே! அப்போது தானே ஆண்டு முழுவதும் அவனுக்கு நல்ல படியாக நடந்தேறும். இதையெல்லாம் சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் இந்த மாதத்தில் தான் இயற்கை கூட இனிமையான கரும்பைக் கொடுக்கிறது. தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன்.சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன.
தாயருகா நின்று தவத்தை நீராடுதல் என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு.
தையில் நீராடிய தவம்தலைப் படுவாயோ என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59-ஆவது பாடல்.
நறுவீ ஐம்பால் மகளிராடும் தைஇத் தண்கயம்
என்று பாடுகிறது ஐங்குறுநூற்றின் 84-ஆம் பாடல்.
எனவே தை தவ ஆற்றல் மிக்கது என்பது சங்க நூற்கள் கருத்து. அதனால் வள்ளலார் தமிழர்க்கு ஏற்ற மாதம் என்பதோடு தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால் தைம் மாதத்தைத் தேர்ந்தெடுத்து தைப்பூசத்தில் அருட்சோதி தரிசனம் காட்டினார்.
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என்று சம்பந்தரும் தைப்பூசத்தைப் போற்றிப் பாடுகிறார்.

ஆக உலகியலாலும் அருளியலாலும் இருவகையாலும் மிகச் சிறந்த மாதம் தை. இதுவே ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது.தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!
அப்தம் என்ற வடமொழிச் சொல்லுக்கு முடிவு என்று பொருள். சஷ்டி அப்தம் என்றால் அறுபது நிறைந்தது என்று பொருள். இனி சகம் அப்தமாவதால் சகாப்தத்திற்கு இது சகாப்தம். தொடங்கட்டும் புதிய தமிழ் வரலாறு!
இவ்வாறு தை முதல்நாளை புத்தாண்டின் முதல் நாளாக வரவேற்கும் கட்டியங்களும் காணக்கிடைக்கின்றன.


இந்நிலையில் அரசு என்ன செய்யலாம்?

தை முதல் நாளே புத்தாண்டு பிறக்கிறது என்று நிறுவ தேவையான காரணங்களை தமிழறிஞர் பலரைக் கூட்டி,அரசியலுக்கப்பால் ஆய்வு செய்து,பழந்தமிழ் இலக்கியங்களில் இச்செய்தியை நிறுவக் கிடைக்கும் செவ்விகளைத் எல்லோரும் அறியக் கிடைக்கச் செய்து,பின் அரசாணை மூலம் தமிழ்ப் புத்தாண்டை அதிகாரப் பூர்வமாகத் தைத் திங்களுக்கு மாற்றலாம்.
உலகத் தமிழர் அனைவரும் அப்போது அதனைக் கட்டியம் கூறி வரவேற்பர்.

ஒரு அவசியமான பி.கு: ஆழ்ந்த தமிழ் ஆர்வலர்கள்,அவரவர் அறிந்த செவ்விகளையோ,சுட்டிகளையோ,இலக்கிய,இலக்கண மேற்கோள்களையோ ஆக்கபூர்வ விவாதத்திற்கு வழிவரும் வகையில் சுட்டினால்,அது மிகவும் வரவேற்கப்படுகிறது.
கும்மி அடிப்பவர்களும், ‘கழக’ அடிப்பொடிகளும் தயவு செய்து விலகவும்.

Wednesday, April 9, 2008

52.ஒகேனக்கல்-பைத்தியக்காரக் கூச்சல்களுக்கு நடுவே ஒரு தெளிவின் குரல்

ஒகேனக்கல் தொடர்பாக இரு மாநிலங்களிளும் பைத்தியக்காரர்களைப் போல அரசியல்வாதிகளும்,பேட்டை ரவுடிகளும் உளறிக் கொண்டிருக்கையில்,கர்நாடகத்திலிருந்து ஒரு தெளிவான குரல் !!!!!!
*************************************************************************************
ஏற்கெனவே 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்ட ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தைத் தமிழக அரசு உடனே நிறைவேற்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இரு மாவட்ட மக்களுக்கும் குடிநீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகத்தில் முன்னாள் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.என். நஞ்சே கௌடா வலியுறுத்தியுள்ளார்.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக தேவையின்றி இரு மாநில மக்களும் மோதிக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இரு மாநிலங்களிலுமே போராட்டம் நடத்துகின்ற யாருக்கும் அத் திட்டத்தைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்கிறார் நஞ்சே கெüடா.

பெங்களூர் குடிநீர்த் திட்டம் மற்றும் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் ஆகிய இரண்டுக்கும் 1998-ல் அனுமதி அளிக்கப்பட்டபோது, இரண்டில் எந்த மாநிலமும் மற்றதன் குடிநீர்த் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டே அனுமதி அளிக்கப்பட்டது, ஏனென்றால் இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் ஆகும்.
குடிநீர்த் திட்டங்களை இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னையாகக் கருதக் கூடாது என்று தேசிய நதிநீர்க் கொள்கை திட்டவட்டமாக வரையறுத்துள்ளது.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால், குடிநீர்த் திட்டம் என்ற வரம்பை ஒகேனக்கல் திட்டம் மீறாத வரையில், அது பற்றி இரு மாநிலங்களிலுமே எந்த வகையிலும் கவலை கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நஞ்சே கெüடா கூறினார்.
இப் பிரச்னை குறித்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:

இரு மாநிலங்களையும் கலந்து ஆலோசித்த பிறகே, கர்நாடகம் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகே 1998-ல் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு மத்திய அரசு "ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்' வழங்கி இருக்கிறது என்கிறபோது, இப்போது எதற்காக கர்நாடக மக்கள் அத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர்?
நஞ்சே கெüடா: அத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்களுக்கு அத் திட்டத்தைப் பற்றி ஏதுவும் தெரியவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.
ஒரு நதியானது இரு நாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையிலான எல்லையாகப் பாய்கிறது என்றால், அந்த நதியின் நடுப்பகுதியே இரு நாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையிலான எல்லைக்கோடாகக் கருதப்படும் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும்.
நதிநீரைப் பொருத்தவரை குடிநீருக்கான பயன்பாட்டுக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விதியாகும். அதற்கு அடுத்த முக்கியத்துவம் பாசனத்துக்கும், அடுத்ததாக மின்னுற்பத்திக்கும், இறுதியாக போக்குவரத்துக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பது நியதி.
ஒகேனக்கல் திட்டம் குடிநீர்த் திட்டம் என்பதால் அதற்கு எந்த மாநிலமும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. இப்போதுள்ள நிலையில் அத் திட்டம் குறித்து நமக்கு (கர்நாடகத்துக்கு) கவலை ஏற்பட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, போராட்டம் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை.

ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைப் பயன்படுத்தி நீர்மின் திட்டத்தையும் செயல்படுத்த தமிழகம் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
எனக்குத் தெரிந்தவரை, 1998-ல் வழங்கப்பட்டுள்ள ""ஆட்சேபமில்லாச் சான்றிதழா''னது குடிநீர்த் திட்டத்துக்குத்தானே தவிர, நீர்மின் திட்டத்துக்கு அல்ல. எனவே நீர்மின் திட்டத்துக்காக அணையை தமிழ்நாடு கட்ட முடியாது.
அணை கட்டுவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்திருக்குமானால், கர்நாடக அரசுக்கும் ஓர் அறிக்கையை அது அனுப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், எனக்குத் தெரிந்த வரையில், அப்படி ஏதும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அணை கட்டுவதற்காக மண் தோண்டும் வேலைகளை தமிழ்நாடு மேற்கொண்டால், உச்ச நீதிமன்றத்துக்கு நாம் செல்ல முடியும்; ஏனென்றால் அத்தகைய திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தெரியவில்லை. அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு சமர்ப்பித்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால்தான் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்.
எனவே, நான் மீண்டும் கூறுகிறேன், இப்போதைய நிலையில் தமிழகமோ, கர்நாடகமோ கவலைப்பட்டு எந்த நடவடிக்கையிலும் இறங்க எந்த அவசியமும் இல்லை.

அப்படியானால், ஒகேனக்கல் விவகாரத்தில் நடந்துவரும் நாடகங்கள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?
முதலில், இந்தத் திட்டத்துக்கு எதிராக ஆவேசமாகக் குரல் எழுப்புவோரிடம் "அவர்கள் போராட்டம் நடத்துவதற்கான காரணம் என்ன?' என்று கேட்க வேண்டும். அவர்களுக்கே அது தெரியவில்லை என்பது அப்போது உங்களுக்குப் புரிந்துவிடும். தமிழக முதல்வர் பேசிய ஆத்திரமூட்டும் பேச்சுக்குத்தான் தமது எதிர்ப்பை அவர்கள் தெரிவிக்கின்றனர் என்பது விளங்கும்.
இந்த விவகாரத்தில் தண்ணீர்ப் பிரச்னை ஏதும் இல்லை. அப்படியே இதில் ஏதாவது இருக்குமானால், அது, ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றின் நடுவில் உள்ள 700 ஏக்கர் பரப்புள்ள தீவு யாருக்குச் சொந்தம் என்ற எல்லைப் பிரச்னையாக மட்டுமே அது இருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி இப்போது யாரும் பேசவில்லை.
இப்போதைய பிரச்னைக்கு கருணாநிதியும் கர்நாடக ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூருமே காரணம் என்றே நான் குற்றம் சாட்டுவேன். கருணாநிதி இந்த நாடகத்தைத் திட்டமிட்டு அரங்கேற்றி, வேண்டுமென்று பதற்றத்தை உருவாக்குகிறார். அவர் பொறுப்பில்லாமலும் ஆத்திரமூட்டும் வகையிலும் பேசிக்கொண்டிருக்கிறார்.


ராமேஸ்வர் தாக்கூரைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
"தண்ணீர் உயிர்ப் பிரச்னை. எனவே, கிருஷ்ணா, காவிரி அல்லது எந்த நதிநீர்ப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றைத் தீர்க்க, நிபுணர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத்தில் முக்கியமானவர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும்' என்று ஆளுநருக்கு இரு கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன். அப் பிரச்னைகள் தொடர்பாக அந்தக் கமிட்டியுடன் ஆளுநர் பேசி, அது தொடர்பாக விழிப்புணர்வை மக்களுக்கு அவர் ஏற்படுத்த வேண்டும். நானே அதைக் கூற முடியும். ஆனால், சொல்ல வேண்டியவர் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்தால்தான் அது பெரிய செய்தியாகும்; மக்களும் புரிந்துகொள்வார்கள்.
ஆனால், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதில்தான் ஆளுநர் ஆர்வமாக இருக்கிறார். அவர் ஒரு நிர்வாகியைப்போல செயல்பட வேண்டும்; வெளிப்படையாக பிரச்னைகளை அணுக வேண்டும். மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். அது அவரது கடமை.


கர்நாடகத்தில் தேர்தல் முடியும் வரை ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்திவைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதே, அதற்கு அர்த்தம் என்ன?
என்ன மடத்தனம் இது! 10 ஆண்டுகளுக்கு மேலாக அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது. இப்போதோ மேலும் ஒரு மாதம் நிறுத்திவைக்கப் போவதாக அவர் கூறுகிறார். அவர் என்ன நம்மை தாஜா செய்கிறாரா?
பத்து ஆண்டுகளில் செய்யாத எதை அவர் இந்த ஒரு மாதத்தில் செய்துவிடப் போகிறார்? உண்மையில், இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுமாறும், இரு மாவட்ட மக்களுக்கும் குடிநீரை வழங்குமாறும்தான் நாம் அவரைக் கேட்டுக்கொள்ள வேண்டும். தருமபுரியில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர்; அவர்கள் செல்வாக்கிழந்துவிட்டனர்; அதைப்போலத்தான் அவரும். எனவே, இந்த நடவடிக்கை மூலம் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற அவர் முயற்சி செய்கிறார் என்பது எனது எண்ணம்.
அதோடு, மக்களவை விரைவில் கலைக்கப்படக்கூடும் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, ஒருவேளை ஜெயலலிதாவை முந்திக்கொள்ள அவர் நினைக்கிறாரோ என்னவோ?


மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழக முதல்வர், கர்நாடக ஆளுநர் இருவரையும் பிரதமர் அழைத்து கண்டிக்க வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் மக்களின் நலன்களைக் காக்குமாறும் அறிவுறுத்த வேண்டும். உண்மையான விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுமாறு ஆளுநருக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்.

போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி.....
தவறாக வழிகாட்டுபவர்கள் பின்னால் செல்லாதீர்கள் என்று நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள்; சுயநலமிக்க எந்த அரசியல் கட்சியின் தவறான வழிகாட்டுதலையும் பின்பற்றிச் செல்லாதீர்கள். நாமெல்லாம் சகோதரர்கள். எனவே, சகோதரர்களைப் போல நாம் நடந்துகொள்ள வேண்டும் என்றார்
நஞ்சே கெüடா.

Aknowledgements: Express Press Groups

Friday, April 4, 2008

51.திறனற்ற செயலும்,செயலற்ற திறனும்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறோம்;நம்மைப் பற்றிய மதிப்பீடு எப்படி உருவாகிறது?
கொடுக்கப்பட்ட வேலையை எவ்வளவு நேர்த்தியாக செய்கிறோம் என்பதைப் பொறுத்து அது அமைகிறது.

நேர்த்தியாக’ என்பதற்கான பொருள் மிக விரிவானது.

ஒரு நாட்டின் வளர்ச்சி எதைப் பொறுத்து அமைகிறது? இதற்குப் பலவிதமான,ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை;ஆயினும் முதலில் முக்கியமாக கவனத்துக்கு வரும் ஒரு விதயம் நேர்த்தியான,நேர்மையான தலைவர்கள் நாட்டிற்கு அமைவது முக்கியம்.

தலைவர்கள் நேர்மையாக மட்டுமே இருந்தால் போதுமா,திறன் வேண்டாமா என்ற அடுத்த கேள்வி வரும்.இதற்கும் பலர் மாற்பட்ட கருத்துக்களை முன்வைப்பார்கள்;சிலர் திறன் மட்டுமே முக்கியம்,அவர் ‘அப்படி இப்படி’ இருந்தாலும் நாட்டிற்கோ அதன் வளர்ச்சிக்கோ பெரும் கேடு வந்துவிடாது என்பார்கள்;மற்று சிலர் தலைவர்கள் நேர்மையாளர்களாக இருப்பது முதலில் முக்கியம்,அவர்கள் திறனாளர்களை தேடிக் கொள்ளலாம் என்பார்கள்.

ஒரு தேர்ந்த அமைப்பில்,நேர்மையான திறனாளர்கள் மட்டுமே தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பது கண்கூடு.சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு.
திறனுடைய நேர்மையாளர்கள் தலைவர்களாக அமைந்துவிட்டால் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்துவிடும் என்ற முடிவு கிடைக்கிறது.

திறனின் அடுத்தகூறு,அவ்வகையான திறன் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதில்.

நமது நாட்டைப் பொறுத்தவரை நேர்மையான திறமையாளர்கள் த்லைவர்களாக அமைவது குதிரைக்கொம்பு;நாடு விடுதலை பெற்றதிலிருந்து வரிசைப்படுத்தினால் மிகச்சிலரே இந்த வகைக்குள் வருவார்கள்.அதுவும் தற்போதைய சூழலில் இத்தகு தலைவர்களை பெரிதாக்கிகளின்-லென்ஸ்- வழி தேடவேண்டியதிருக்கிறது.ஓரளவுக்கு பட்டியலிடலாம் என்றால் பிரதமர் மன்மோகன்,நிதி அமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் இந்த பட்டியலில் வரக்கூடும்.

சிதம்பரம் நல்ல திறனாளர் என கிட்டத்தட்ட அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்;நல்ல கல்வியும் தெளிந்த சிந்தனையும்,குழப்பமில்லாமல் எண்ணிய கருத்துக்களைப் பேசுவதிலும் வல்லவரென அறியப்படுவர்.பொருளாதார நிபுணர் என அனைவராலும் அறியப்படுபவர்.இந்தியாவில் மட்டுமல்ல,வெளிநாடுகளுக்குச் செல்கையிலும் மதிப்பையும் மரியாதையையும் தானாகப் பெறும்-Commanding respect, not demanding it- மிகச் சில த்லைவர்களில் ஒருவர்.எந்த ஒரு அரசின் தலைவரையும் அவரவரின் செயல்திறனை வைத்தே மதிக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட நல்மதிப்பைப் பெறுபவர்.

1997 குஜ்ரால்’ன் (என நினைக்கிறேன்..) அமைச்சரவையின் அங்கமாக இருந்து அவர் அளித்த நிதிநிலை அறிக்கையை ஒரு கனவின் அறிக்கை-Dream Budget – என்றே அனைவரும் அழைத்தார்கள்.அரசாக எப்படியிருப்பினும்,அவர் சிறப்பாக செயல்பட்டதாக அனைவருமே கருதினார்கள்.

இப்போது UPA அரசின் நிதி அமைச்சராக தனது ஐந்தாவது நிதிநிலை அறிக்கையை சென்ற ஃபெப்ரவரி 2008 ல் சமர்ப்பித்தார்;பலரும் பாராட்டினார்கள்;குறை சொல்ல இயலா நிதிநிலை அறிக்கை என அனைவரும் விமர்சித்தார்கள்;சென்ற 5 ஆண்டுகளாக சுமார் 9 சதவீதத்தில் இந்தியாவின் மொத்த உற்பத்தியின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாமே நன்றாக இருக்கின்றன;
அல்லது இருப்பனவாகத் தோன்றுகின்றனவா ?
திறனாளராக அறியப்பட்ட நமது நிதிமைச்சர் முழு அளவில் செயல்படுபவரா??

சில செய்திகளைப் பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டின் நிதிநிலை அறிக்கையுடன்,சென்ற ஆண்டின் செயல்பாட்டு அறிக்கையும் ( நிதிநிலை அறிக்கைக்கும்,செயல்பாட்டு அறிக்கைக்கும் வேறுபாடு அறியாதவர்கள் மேற்கொண்டு படிக்காதீர்கள்,தலைவலிக்கப் போகிறது !) ஒரு பகுதி அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்;இதையெல்லாம் நமது மேன்மை தங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அலசுகிறார்களா அல்லது குறைந்தபட்சம் முழுதும் படிப்பார்களா என்பது கேள்விக்குறி.உண்மையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பணி இதுவே,ஆனால் இவை எல்லாம் இந்தியாவில் நன்முறையில் நடக்கவேண்டும் என எண்ணுவதெல்லாம் சிறிது அதிகப்படியான ஆசைதான்...)

சென்ற மூன்று ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையில் முக்கியமான மூன்று விதயங்களாக அறிவிக்கப்பட்டவையும் அதற்கான மதிப்பீடுகளும் பின்வருமாறு:-
1.மும்பையின் மிதாய்(Mithi River) ஆறு சீர்செய்யப்படும் திட்டம்-ரூ.1260 கோடி
2.மும்பையை சீனாவின் ஷாங்காய் நகரைப் போல் மாற்றும் திட்டம்-ரூ 1000 கோடி
3.ஒரு சர்வதேச நிதி முனையமாக உருவாக்கும் திட்டம்-ரூ 1000 கோடி

இந்த மூன்று திட்டங்களுக்கும் மூன்று ஆண்டுகளில் உண்மையாக செயல்படுத்தும் நோக்கில் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 16 கோடியே 16 லட்சம் மட்டுமே...அதுவும் எதற்காக உபயோகிக்கப்பட்டது தெரியுமா?

-ஒரு அறிக்கை தயாரிக்கபட்டது
-அமைச்சகத்தின் வலைப்பக்கத்தில் இச்செய்தி போடப்பட்டது
-பிரதமருக்கு ஒரு காட்சி விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது
-திட்டப் பரிந்துரைகள் வேண்டி செய்தி பல ஏஜென்ஸிகளுக்கு அனுப்பப்பட்டது

அவ்வளவுதான்..

திட்டத்தின் கூறுகள் பற்றிக் கூட எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை; திட்டப் பகுதிகள் வரையறை செய்யப்படவில்லை; திட்டத்திற்கான செயல் திட்ட அறிக்கை கூட முழுதாக தயாரிக்கப்படவில்லை.

ஆனால் இம்மூன்று திட்டங்களும் ‘திட்ட செயல்பாட்டு அறிக்கையில்’ செயல்படுத்தி முடித்துவிட்ட திட்டங்களோடு சேர்க்கப்பட்டு விட்டன.அதாவது Action Completed Report ன் பகுதியாகி விட்டன....

கலாம் என்றொரு விவரமில்லாதவர் சிறிதுகாலம் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார்;அப்போது அவர் புரா,புரா என அவ்வப்போது புலம்பிக் கொண்டிருந்தார்.
புரா-PURA – என்றால் என்ன? Provision of Urban amenities in Rural Area என்பதின் சுருக்கம் தான் புரா.அதாவது கிராமப் புறங்கள் எவ்விதம் மேம்பாடு அடையலாம் என்பதற்கான் ஒரு ஆதாரத் திட்டம்.

இந்தியாவில் ஏன் நகரங்களில் இவ்வளவு நெருக்கடியும்,மக்கள் கிராமங்களை விட்டு நகர் நோக்கி ஓடுவதும் ஏன் நடக்கிறது,இதைத் தவிர்க்க அரசும்,அமைப்புகளும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கலாம் சிறிது சிந்தித்ததன் விளைவே இந்தத் திட்டம்.

(என்னுடைய வேறு இரு பதிவுகளில் இந்த ஆதார விதயத்தை நான் தொட்டிருக்கிறேன்,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அரசு எவ்விதம் ஒவ்வொரு பகுதியையும் வளர்ச்சிப் பகுதியாக மாற்றுகிறது என்பதை நேரில் பார்ப்பவர்கள் அறிவார்கள்.சிங்கையிலும் ஒரு காலத்தில்(1980 களில் கூட) காடு போல இருந்த ஜுராங் தீவு பத்து வருடங்களுக்கு முன் தொழில் நகராக மாறி,இப்போது சுமார் 7.50 மில்லியன் டாலர் முதலீட்டில் ஏரி சார்ந்த-Lake View Project- தொழில் மற்றும் குடியிருப்புத் தடமாக மாறப்போகிறது)

இந்த புரா’ விற்கான திட்டம் ஒன்று 2005-2006 நிதிநிலை அறிக்கையில் நமது நிதி அமைச்சரால் அறிவிக்கப் பட்டது(கலாமின் தொந்தரவு தாங்கவில்லை போல !!!!) இதற்கான மாதிரி திட்டங்கள்-Pilot Projects – நாட்டின் ஒரு பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2005-06 ல் செயல்படுத்தப் படும் என அறிவிக்கப் பட்டது.

அவ்வளவுதான் நடவடிக்கை; கலாம் போனார், புரா’வும் பறந்து விட்டது !

அடுத்தது 2004-2005ன் நிதிநிலை அறிக்கை-நமது பெரும்பாலான் ஏழை மக்களுக்கு பொருள்கள் சரியான விலையில் கிடைக்க நியாய விலைக்கடைகள் செயல்பாடு திறனுடன் அமைய வேண்டும்;அவற்றின் செயல்பாட்டை சீரமைப்பது ஏழை மக்களின் வாழ்வை சீரமைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் என அமைச்சர் கூறினார்.
இதற்கு உணவுச் சிட்டைகள்-Food Stamps – விளிம்புநிலை மக்களுக்கு வழங்கப்படும்,இந்த மாதிரித் திட்டத்திற்கு-Pilot Project – நாட்டின் இரு மாநிலங்கள் முன்வர வேண்டும் எனவும் கூறினார்.

பிறகு ????

2007-2008 நிதிநிலை அறிக்கை வரை ஒன்றும் நடைபெறவில்லை;ஆனால் இப்பொதும் நிதி அமைச்சர் நியாயவிலைக் கடைகள் சீராக செயல்பட வேண்டியதன் அவசியமும், அதன் மூலம் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் பயனடைவதும் வலியுறுத்தப்பட்டது;இம்முறை யோசனை-நியாயவிலைக் கடைகளைக் கணினி மயமாக்கலும்,அவ்ற்றை இந்திய உணவுக் கழகத்துடன் இணைப்பதும்,செயல் காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.
அத்துடன் சரி...

இந்த வருடம் நிதிநிலை அறிக்கையில் டெக்னாலஜி முன்னேற்றம் கண்ட விட்டது; இப்போது ஏழை பயனாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் திட்டம் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது !
இன்னும் நமது நியாய விலைக் கடைகள் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இருக்கின்றன.

1997 ல் 'கனவு' நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த போது,அடுத்த ஆண்டில் சுப்ரமணியன் சுவாமி இதே போன்று,அறிவிக்கப் பட்ட திட்டங்கள் செயல்படாது ஒதுக்கப்பட்ட 50000 கோடி ரூபாய்கள் அப்படியே கருவூலத்துக்குத் திரும்பிய செய்தியை சுட்டி எழுதி இருந்தார்;பெரும்பாலானவர்களின் கவனத்துக்கு அது வந்திருக்காது !!!

சிங்கப்பூர்,அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் என் டி யூ சி ,வால்மார்ட், கார்ஃபோர் போன்ற நிறுவனங்கள்-பின்னவை இரண்டும் தனியார் நிறுவனமாக இருப்பினும்- மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் எவ்விதம் முனைப்புடன் பங்காற்றுகின்றன என்பதை பார்த்தவர்கள் அறிவார்கள்.

ஆக வெறும் திட்டங்கள் காகிதத்தில்-இப்போது மடிக்கணினிகளில்-மட்டும் தயாரிக்கப்பட்டு,பாராளுமன்றத்தில் படிக்கப்பட்டு ஆளும்கட்சிக் காரர்கள் கைதட்டிவிட்டும்,எதிர்க்கட்சிக் காரர்கள் மைக்கால் தட்டி விட்டும் கலைய,தேசமும்,ஏழை இந்தியனின் நிலையும் அப்படியே தொடர்கின்றன..

இது எந்தவிதமான செயல்பாடு?????

திறனுக்கும், செயல்பாட்டுக்கும் தொடர்பில்லாத இந்நிலை நீடிப்பது யாருடைய குற்றம் ??????????


Aknowledgements to Arun Shourie,Express Press Holdings

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...