குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, March 27, 2008

50.டாடாவும்,சிதம்பரமும் - கமான் இந்தியா !!!!!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற லீ குவான் யூ கொள்கை அரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப.சி. நல்ல அடர் நீல நிறத்திலான ‘சூட்’ உடையில் காணப்பட்டார்.எப்போதும் வெள்ளை வேட்டி,சட்டையில் பார்த்துப் பழக்கமான கண்களுக்கு வித்தியாசமான உடையில் நேர்த்தியாகக் காணப்பட்டார்.

அவரின் பேச்சும் எப்போதும் போலவே நேர்த்தியுடன் அமைந்தது.

• இந்தியா இன்னும் குறைந்தது 20 ஆண்டுகளுக்காவது 9-10 சதவீத வளர்ச்சியில் இருந்தால் இந்தியாவில் ஏழ்மை என்பது ‘பொய்யாய்,பழங்கதையாய்' போகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.
• பின்னொரு நாள் இன்னொரு இந்திய நிதி அமைச்சர் சிங்கப்பூரில் இவ்விதமான இந்தியாவில் வறுமை என்பது வரலாற்றில் மட்டுமே’ என்னும் நற்செய்தியைச் சொல்வார் என்றார்.
• மக்களுக்கு அளிக்கப்படும் கவர்ச்சித்-விவசாயிகள் கடன் தள்ளூபடி போன்ற- திட்டங்கள்,வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றார்.
• பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து சமூகத்துக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டுவதன் அவசியத்தையும்,அவ்வாறு இருக்க கவர்ச்சித் திட்டங்களும் உதவக் கூடும் என்றும் சொன்னார்.
• வளர்ச்சி என்பது ஒரு முடிவல்ல,அது நாம் அடைய நினைக்கும் இலக்கை நோக்கிய ஒரு முயற்சியின் விளைவு என்றார்.
• Pro Americcan பார்வை உள்ளவர் என்றே பரவலாக அறியப்பட்ட ப.சி. அமெரிக்கா எரிபொருள் தேவைகளுக்காக பெருமளவு உணவுப் பொருள்களை-முக்கியமாக சோளம்- அமெரிக்கா வீணாக்குவதாகவும்,இதனால் உலக அளவில் உணவுப்பொருள் விலையேற்றம் தூண்டப்படுகிறது எனவும் குறை கண்டார்;மேலும் அமெரிக்க ஃபெடரல் வங்கி,நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வசூலில் இவ்வளவு நாள் மெத்தனமாக இருந்ததின் தாக்கத்தை இப்போது அனுபவிக்க்கிறது என்றும் கூறிய அவர்,அதற்கான தீர்வாக அவர் பார்வை என்ன எனக் கூறுவார் என்ற சுவாரசியமான எதிர்பார்ப்பை பொய்யாக்கினார்.
• ப.சி.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிக்கையில் ஒரு பத்தியாளராக இருந்து சுமார் இரண்டாண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான A view from outside- Why Good Economics Works for Everyone என்ற புத்தக வெளியீட்டுக்குத்தான் அவர் வந்திருந்தார்.
• அவர் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் எழுதிய இரண்டு ஆண்டுகளில் பத்திக்கான குறித்த நேரத்தை இரண்டு முறை மட்டுமே தவறியதாகக் குறிப்பிட்டார்.



அவரின் முன்பொரு முறை அமெரிக்கப் பயணத்தைப் பதிவு செய்த ஒரு பதிவர்,அமெரிக்காவில் ஊரை சுற்றிப் பார்க்க அழைத்த போது,புன்னகையுடன் மறுத்து,’எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு பத்தி கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது,அதை எழுத வேண்டும்’ என மறுத்துவிட்டதாக நினைவு கூர்ந்திருந்தார்;ஒருவேளை பதிவரின் அந்த விருந்தோம்பலை ஏற்றிருந்தால், ‘இதுவரை மூன்றுமுறை மட்டுமே...’ எனக் கூறியிருப்பார் என நினைக்கிறேன் !!!!


**************************************************************



இந்தியாவின் டாடா போட்டார்ஸ் நிறுவனம் போஃர்ட் நிறுவனத்தின் மேலாண்மையில் இருக்கும் லாண்ட்ரோவர் மற்றும் ஜாகுவார் கார் நிறுவனங்களை (JLR-Marquees) வாங்கி இருக்கிறது.இந்த பிரிட்டானிய நிறுவனங்கள் சுமார் 123 ஆண்டு கால வரலாற்றை உடையவை !

இரு நாடகளுக்கு முன்பே இந்த செய்தி ஊடகங்களில் வந்த போதும் போஃர்ட் நிறுவனம் இதனை உறுதி செய்வதை இன்றுவரை நிறுத்தி வைத்தது.இன்று செய்தி ஊடகங்கள் இதனை உறுதி செய்திருக்கின்றன.

சமீப காலங்களில் இந்திய கார்பொரேட் நிறுவனங்கள் உலக அளவில் பல பெயர் பெற்ற நிறுவனங்களை வாங்க ஆரம்பித்திருப்பது,உலக அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் ‘தவிர்க்க இயலா தன்மை’யை குறிப்பிடுவதாகக் கருதலாம்.இதற்கு முதல் சுழி போட்டவர் ஆர்சிலார்’ஐ வாங்கிய மித்தல்.பின்னர் டாடா நிறுவனமும் இந்த வகை Brand acquirement ல் இறங்கி கோரஸ்(ஸ்டீல்) மற்றும் டெட்லீ டீ(தேனீர்) நிறுவனங்களை வாங்கியது;கோவை மகாலிங்கம் குழும நிறுவனம் கூட ஒரு ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கியது.ரிலையன்ஸ் நிறுவனம் ஐரோப்பிய Giant ஆன கார்ஃபோர் சில்லரை விற்பனைக் குழுமத்தை வாங்கவோ அல்லது அதனுடன் கூட்டாக இந்திய சந்தையில் சில்லரை வணிகத்தை சந்தைப் படுத்தவோ முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.டாடாவின் ஜாகுவார் மற்றும் லாண்ட்ரோவர் நிறுவனங்களின் கைக்கொள்கை-acquirement-இந்த வரிசையில் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் மகிந்த்ரா நிறுவனமும் இருந்ததாகவும் கடைசி நேரத்தில் போஃர்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டமைப்பு டாடா நிறுவனத்தை முன்னிறுத்தியதால் டாடா நிறுவனம் இந்தப் போட்டியில் முந்தியதாகவும் பிற்சேர்க்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரிவர்த்தனை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலானது,சுமாராக 10000 கோடி ரூபாய்கள் ! (யாருப்பா அங்க பெருமூச்சு விட்றது !!!!!!????) ஆயினும் JLR என்றழைக்கப்படுகிற ஜாகுவார்,லாண்ட்ரோவர் நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தை போஃர்ட் நிறுவனத்துக்கு ஏற்படுத்துகின்றன,என்பதில் இதில் உள்ளமைந்த செய்தி.எனில் டாடா நிறுவனம் ஏன் இப்படி நஷ்டத்தில் இயங்கும் இரணடு பிராண்டுகளை வாங்குகிறது?

பதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பரவலாக்கத்தில் – Product Diversification – ல் இருக்கிறது.இப்போது டாடா நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள ‘நானோ’ வையும் விற்கும்; சுமார் ஒரு கோடி ரூபாய் விலையுள்ள ‘ஜாகுவார்’ ஐயும் விற்கும். இனி கார்கள் சந்தையில் டாடாவின் பெயர் தவிர்க்க இயலாத ஒரு பெயராக உலக அளவில் மாறலாம்,டாடா நிறுவனம் இந்த JLR-Marquees நிறுவனங்களையும் லாப நோக்கோடு நடத்திக் காட்ட முடிந்தால் !

இவ்விதமான கைக்கொள்ளும் நிகழ்வுகளால் இரண்டு விதமான நன்மைகள் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன.
உற்பத்தித் துறையின் இவ்விதமான உலகளாவிய நிறுவனங்களில் உத்திகள்,நேர்த்திகள் இந்திய நிறுவனங்களுள்ளும் நுழைய இது ஒரு வாய்ப்பு.

இரண்டாவது இவ்வகையான உலகளாவிய புகழ்வாய்ந்த பெயர்களுக்கான சந்தையில் இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையும் சந்தைப்படுத்தலாம்.
இரண்டுவிதமான அணுகுமுறைகளும் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரமிடுபவை.

Come on India !!!!!!!

Wednesday, March 19, 2008

49.லாம்ப்ரட்டா ஸ்கூட்டரும்,ஆண்கள் வயதுக்கு வருவதும்



1985’ம் வருடம் என நினைக்கிறேன்.

அப்பா அப்போது வைத்திருந்த வாகனம் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்.உங்களில் எத்தனை பேருக்கு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் பற்றி தெரியும் எனத் தெரியவில்லை.
இப்பொதைய காலங்களில் ஸ்கூட்டரே அருகி வருகிறது;பதிலாக ஸ்கூட்டிகளில் இளம்பெண்கள் சிறகடிக்கிறார்கள்,பார்க்க மகிழ்வாயிருக்கிறது என்றாலும் அவர்கள் கையில் லாம்ப்ரட்டா ஸ்கூட்டரைக் கொடுத்தால்,கதறி காலில் விழுந்து விடுவார்கள் என நினைக்கிறேன்.
Image result for lambretta scooter- image india
காரணம் லாம்ப்ரட்டாவின் எடை மற்றும் கையாள்வதில் உள்ள சிரமங்கள் !

பொதுவாக 70 களில் இறுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் இந்திய இருசக்கர வாகன உலகில் வெகு சில வாகனங்களே உலவி வந்தன.வெகு கம்பீர வாகனப் பிரியர்கள் என்ஃபீல்ட் புல்லட் வைத்திருப்பார்கள்,அது பெரும்பாலும் தனிப்பட்ட சவாரிக்கு மகிழ்வைத்தரும் வாகனமாக இருக்குமே ஒழிய குடும்பவாகனமாக இருக்க வாய்ப்பில்லை,ஏனெனில் பெண்கள் புல்லட்டின் பின் இருக்கையில் அமர்வது ஒரு சௌகர்யக் குறைவான விதயம்.எனவே மனைவியுடன்-சிலசமயம் இரு குழந்தைகளுடன் கூடவும்-செல்ல நடுத்தர வாசிகள் பெரிதும் பயன்படுத்திய வாகனம் ஸ்கூட்டர் மட்டுமே.அதைவிட எளிதான சவாரிக்கு லூனா,சுவேகா என்ற இரு வாகனங்கள் இருந்தன.இவை இரண்டும் இன்றைய டிவிஎஸ் 50 ன் முன்னோடிகள்.
எங்கள் வீட்டுக்கு முதலில் வந்த வாகனம் ஸ்கூட்டர்.

Sunday, March 16, 2008

48.மாநிலங்களவைத் தேர்தல்,சிவக்குமார் மற்றும் திருமந்திரம் - சில செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தலின் தமிழக சூழல் ஒரு ஒன் – டே மாட்ச் போன்றதாக ஊடகங்களால் ஆக்கப்பட்டது.அது மிகச் சாதாரணமாக முடிந்திருக்கிறது.
இந்த விதயத்தில் முதல்வரின் சாணக்கியத் தனமான செயல்பாடு பாமக’வை அதன் இடத்தில் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
ஐந்தாவது இடம் போட்டியிடப்படும்,அதற்கான வேட்பாளர் இ.க.கட்சியிலிருந்து நிறுத்தப் படுவார் என்று அறிவித்ததன் மூலம்,மருத்துவர் ராமதாசுவை அங்குமிங்கும் நகரவொட்டாது நிறுத்திவிட்டார் முதல்வர் முக.பாமக’வுக்கும் அதிமுக’வுக்கும் திரைமறைவு உடன்பாடு இருக்கின்றன என்பது போன்ற செய்திகளை விதைத்தும் ஒன்றும் பயன் இல்லை;இது போன்ற உறுதியை 90'களில் பாமக’வுக்கு முதன் முதலில் 25 இடங்கள் இதுக்கிய சமயத்தில் திமுக தலைவர் கைக்கொண்டிருந்தால் தமிழக அரசியலில் இவ்வளவு சாதிரீதியான அரசியல் கேடுகள் தலைதூக்கியிருந்திருக்காது,ஏதோ இப்போதாவது திமுக’வுக்கு அது புரிந்தால் எதிர்கால தமிழகத்துக்கு அது நல்லது.
ஜெ.யிடமிருந்து ஏதேனும் குறித்தல்கள் வரும் என்று எதிர்பார்த்த ராமதாசுவை ஜெ.கோமாளி போல உணர வைத்திருக்கிறார்;திமுக கூட்டணியிலேயே அடுத்த தேர்தலில் கழற்றி விடக் கூடக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் பாமகா’வை எதற்கு இப்போதே கொம்பு சீவி பெரிய ஆளாக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்;திமுக கூட்டணியிலிருந்து கழற்றி விடப் படும் சூழ்நிலையில் இன்னொரு மதிமுக போலத்தான் பாமக ஜெ’யால் பார்க்கப்படும்.வைகோவாவது சோதனை நேரத்தில் உடன் இருந்தார் என்று ஜெ’யின் good books’ல் இருக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன;ஆனால் பச்சோந்தி அரசியலில் சரித்திரம் படைக்கும் மருத்துவர் ஐயாவுக்கு ஜெ’யிடம் என்ன மரியாதை கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தன்னிலை தெளிவாகத் தெரிந்ததால் பாமக இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறது. ஆனால் மருத்துவரால் நெடுங்காலம் கத்தி எடுக்காமல் இருக்கமுடியாது,ஏதாவது ராக்கெட்டை சீக்கிரம் விடுவார் என எதிர்பார்க்கலாம் !

************************************

திருமுறை மற்றும் திருமந்திர மாநாடுகள் ஆண்டுதோறும் சில நன்மக்களால் நடத்தப்படுகின்றன.திருமுறைகளில் ஆழ்ந்த தமிழறிஞர்கள்,சான்றோர்கள் சுமார் 250 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டு தங்கள் கட்டுரைகளை வாசித்தளிக்கும்,மூன்று நாள் அமர்வில் நடக்கும் விழா இது.நம்மைப் போன்ற அரைவேக்காடுகள் முற்றிலும் அமர்ந்து கேட்கவே ஒரு தனியான மனப் பக்குவம் வேண்டும்.

இந்த மாநாடு கடந்த இரு வருடங்களாக வாரணாசியிலும்,இவ்வாண்டு சென்னையிலும் நடந்தது.அதைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என் அன்னையின் மூலம் எனக்குக் கிடைத்தது,அவரின் அமர்வும் மாநாடுகளில் இருந்ததால்!
இம்முறை நடந்த மாநாட்டில் சிவகுமார்-அவர் நடிகராகவும் பெரிதும் அறியப்பட்டவர்,இப்போதைய நடிகர் சூர்யாவின் தந்தை-ஒரு பார்வையாளராக வந்து உரையாற்றினார் என்றும்,ஒரு திரை நடிகராக தொழிலில் இருக்கும் அவரின் திருமந்திரம் பற்றிய ஈடுபாடு,அறிவு தன்னை வியக்க வைத்தது என்றும் என் அம்மா கூறினார்.
பொதுவாக உருவு கண்டு எள்ளும் நோக்கோ,முன் தீர்மானத்துடன் எதையும் அணுகும் வழக்கமோ இல்லாத எனக்கு இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையாதலால்,அது ஒரு செய்தி அளவில் என்னில் பதிந்தது.

அறியப்பட்ட ஒரு நடிகராக இருக்கும் அவரின் வாழ்வில் பணம் ஓரளவுக்கு அவரின் நிம்மதியான வாழ்க்கைக்கு எளிதாகக் கிடைத்திருக்கும்,அவருக்கான ஓய்வு நேரங்களிலும் ஏதும் குறை இருந்திருக்காது.ஒரு நடிகர் ஒரு மாதச் சம்பளக் காரனைப் போல் நாளின் குறிப்பிட்ட நேரத்தை ஒரு செயலுக்கு ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லாத்தால்,அவருக்கான நேர மேலாணமை ஒரு பிரச்சனையான விதயம் அல்ல;தேவை படிப்பதற்கான,தேடலுக்கான ஈடுபாடு மட்டுமே,அது அவரிடம் இருந்திருக்கிறது,என்ற நோக்கில் பாராட்டப் படவேண்டியவர்.

இந்த நோக்கில் அண்மையில் மறைந்த சுஜாதா,முதல்வர் முக,ஆகியோர் என்னை வியக்க வைப்பவர்கள்.

ஒரு மாதச் சம்பளக்காரனாக தன் கடமைகளைக் குறைவறச் செய்து,ஒரு பரபரப்பான எழுத்தாளராக அத்தளத்திலும் விரைவாக இயங்கிக் கொண்டும் சுஜாதாவுக்குப் தேடிப் படிக்க அவ்வளவு நேரம் கிடைத்தது என்பது வியப்பான ஒரு விதயம்,இந்த ஒரு பார்வையில் சுஜாதாவின் விதய ஞானம்,அவரது பரந்த வாசிப்பினாலேயே ஏற்பட்டது என்பதை நாம் நமக்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் ஒன்று !

திமுக அரசில் இல்லாத்போது முக’வுக்காவது நேரம் அதிகம் கிடைக்கலாம்,ஒரு அரசின் முதல்வராகவும் இருந்து கொண்டு அவர் அனைத்து ஏடுகளையும் மேய்ச்சல் பார்வை பார்க்கவும்,தனக்கான திருப்திக்கு எழுதவும் படிக்கவும் நேரம் ஒதுக்க முடிகிறதென்றால்,அவர்களை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

Thursday, March 6, 2008

47.நீதித்துறை,அரசியல் மற்றும் சான்றான்மை

சுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார்? அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.

காவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.

கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். "ஆள்கொணர் மனு'க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.

5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.

1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.

""கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது'' என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.

அதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். ""ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்'' என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.

எச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது னம் கடைப்பிடிப்போம்.

குறிப்பு: இது ஒரு மீள்பதிவுதான்,ஆயினும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு செய்தியாகத் தோன்றியது.

Acknowledgements: TJS.George,Columnist,Express Group.

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...