குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Tuesday, February 14, 2023

199 - ஒரு நாடு, ஒரு கனவு, ஒரு தலைவன்

மெட்ராசுபேப்பர் (madraspaper.com)  (இணைய) வார இதழுக்காக எழுதிய கட்டுரை. 
சூன் 8' 2022 இதழில் ஒரு நாடு, ஒரு கனவு, ஒரு தலைவன் வெளிவந்தது. 

முக்கியக் குறிப்பு :  இதில் உள்ளது கட்டுரையின் முழுவடிவம். இதழில் வெளிவந்த போது, இதழ் தேவைகளுக்கேற்ப சிறிது சுருக்கப்பட்ட வடிவம் வெளிவந்தது. அது இதழின், இதழாசிரியரின் உரிமையும் கூட. 
கட்டுரை அதன் முழுவடிவில் இங்கு சேமிக்கப்படுகிறது, படிக்கக் கிடைக்கிறது.



சிங்கப்பூர் ! 
இந்தச் சொல்லைக் கேட்டவுடன் உங்களுக்குத் தோன்றுவது என்ன?
பெரும்பாலும் பலரும் சொல்லுவது, ஓ, பிரமாதமான நாடு, பிரமாதமான நகரம்! என்பது. இன்னும் சிலர், ஓ, லீ க்வான் யூ என்ற பிரமாதமான பிரதமர் இருந்தாரே, அவர் ஆண்ட நாடா' என்பார்கள். மேலும் விவரமறிந்த சிலர், ‘சுமார் 240 சதுர மைல்கள் பரப்பளவே கொண்ட நாடு அது; இப்போதைய மக்கள் தொகை சுமார் ஐந்தரை மில்லியன் (55 லட்சம்); தமிழ், மலாய், சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் தொடர்பு, நிருவாக, வணிக மொழியாகவும் கொண்டிருக்கிறது; சீன சிங்கப்பூரியர்கள் 74 சதம், மலாய் சிங்கப்பூரியர்கள் 14 சதவிகதம், தமிழ் சிங்கப்பூரியர்கள் 11 சதவிகிதம் கொண்டது; 95 சதவிகதம் படிப்பறிவு கொண்ட நாடு ; தேசிய உற்பத்தி (2103’ல் சுமார் 339 பில்லியன் டாலரும் ( சுமார் 3,39,000 * 75 = 25,42,000 கோடி ரூபாய்கள்!), தேசிய ஆண்டு தனிநபர் வருமானம் சுமார் 62,500 டாலர்கள் ( சுமார் நாற்பத்து ஏழு லட்சம் இந்திய ரூபாய்கள்); மக்களின் சராசரி ஆயுள் சுமார் 84.50 ஆண்டுகள்; ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமா் 4.1 சதவிகிதம் ; ஆண்டு பணவீக்கம் 5.2 சதவிகிதம் கொண்ட நாடு ' என்றெல்லாம் புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவார்கள். 

இந்தப்புள்ளி விவரங்களைச் சிறிது பாருங்கள், சுமார் 260 சதுர மைல்கள் பரப்பு மட்டுமே கொண்ட நாடு, ஆனால் ஆண்டு தனிநபர் வருமானம் சுமார் 47 லட்சம் ! ( இந்தியாவுக்கு 32.87 லட்சம் சதுர கிமீ பரப்பு, 140 கோடி மக்கள் தொகை, தனி நபர் வருமானம் சுமார் 2500 டாலர் ( சுமார் 1,75,000 ரூபாய்கள் )). 

சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் உலக அளவில் எத்தனையாவது தெரியுமா? நான்காவது அதிகம் உள்ள நாடு. அதனை விஞ்சிய தனிநபர் வருமானம் உள்ள நாடுகள்? அமெரிக்கா என்று நினைப்போம், அல்ல !. முதல் இடம் க்கடார் எனப்படும் அரபு நாடு, இரண்டாவது மக்காவ், மூன்றாவது லக்சம்பர்க், நான்காவது சிங்கப்பூர் !! 

வியப்பாக இல்லை ?! சின்னஞ்சிறு நாடு, நாடு கூட அல்ல, சென்னையை விடச் சிறிய ஒரு நகரம் ! ஆனால் உலகின் பல சக்தி வாய்ந்த நாடுகளை விடத் தனது மக்களை வளமாக வைத்திருக்கும் ஒரு நாடு. எப்படி இது சாத்தியம்?

ஒருவேளை நிறையச் செல்வங்களைச் சேர்த்து வைத்திருந்ததோ? இன்னும் சிறிது கிண்டிப் பார்க்கலாம். சிங்கை மாநில சுயாட்சி பெற்ற ஆண்டு 1959; மலேசியாவோடு சேர்ந்து ஒரு உள் மாநிலமாக பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற ஆண்டு 1963, தனி நாடாகப் பிரகடனம் செய்து கொண்டு இயங்கத் தொடங்கிய ஆண்டு 1965. அதாவது இந்தியா விடுதலை பெற்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு. விடுதலை பெற்ற 1965’ல் சிங்கையின் தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் 520 டாலர்கள் (இன்றைய ரூபாய் மதிப்பில் 36400 ரூபாய்கள்தான்), அப்போது இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் 120 டாலர்கள் ( இன்றைய ரூபாய் மதிப்பில் 7140 ரூபாய்கள்). விடுதலை பெற்ற இந்த 50-70 ஆண்டுகளில், சிங்கப்பூர் எப்படி இப்படி ஒரு சிங்கப் பாய்ச்சல் பாய்ந்தது? 

காரணத்தின் பெயர் ஒன்றே ஒன்றுதான். லீ க்வான் யூ !!!

சிங்கையின் முதல் மற்றும் நிருமாணப் பிரதமர் அவரே. இன்று வரை சிங்கப்பூரின் ஆளும் கட்சியாக, அவர் தோற்றுவித்த மக்கள் செயல் கட்சிதான் இருக்கிறது. இன்று வரை தொடர்ந்து கடந்த 57 ஆண்டுகளாக அந்த ஒரே கட்சியிடம்தான் மக்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். காரணம் மக்களுக்கு அவர் மீதிருந்த நம்பிக்கை! அவர் ஏற்படுத்திக் கொடுத்த நம்பிக்கை !!

ஆனால் வெறும் நம்பிக்கை மட்டும் மக்களை மாறாது ஒரு தலைவனை, ஒரு கட்சியை நம்பி 57 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பை வழங்க வைக்குமா? அல்ல, நம்பிக்கை அளித்த தலைவன் அதைச் செயலிலும் செய்து காட்டிய அருமையை மக்கள் உணர்ந்ததனால்.
சாதாரண ஒரு பன்றிகள் வளர்த்துக் கொண்டிருக்கும், சோம்பேறி மீன்பிடி நகராக இருந்த சிங்கப்பூரை, உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும், தென்கிழக்கு ஆசியாவின் இன்றியமையாத நாடுகளில் ஒன்றாகவும் மாற்றிக் காட்டிய வித்தையைச் செய்தவர் லீ. 

ஆனால் தனி ஒரு மனிதராக எவரும் அனைத்தையும் செய்து விடமுடியுமா? 1960’களில் லீ, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவைச் சந்தித்த கணங்களைப் பதிவு செய்திருக்கும் போது, லீ அவர்களும் நேரு அவர்களை மிகவும் சிலாகித்து, தலையுயர்ந்து பார்க்கும் உயரத்தில் இருந்தவர்தான் நேரு. ஆனால் லீயே வியந்து போற்றிய ஒரு நேருவால் சாதிக்க இயலாததை, லீ சிங்கப்பூரில் சாதித்தார். அது ஒரு மயிர்க்கூச்செறியும் சாகசத் தலைவனின் அரசியல் நிருமாணக் கதை ! அந்தத் தலைவன் சொற்படி நின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் ஒழுக்கமான உழைப்பின் கதை! சிங்கை என்னும் சிங்கநாடு சிலிர்த்து எழுந்து, இன்று வரை வெற்றி நடை போடும் வியப்புக் கதை. அரசியல், சமுதாய நிருவாகத்தில் ஆர்வம் இருக்கும் எவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உற்சாகக் கதை. நாமும் சிறிது தெரிந்து கொள்வோம், முன்னும் பின்னுமான சில காட்சிக் கோர்வைகளின் வாயிலாக.…

1965 ன் புகழ் பெற்ற லீ'யின் பிரகடனம் 
தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தையும் 17, 18, 19’ம் நூற்றாண்டுகளில் பிரித்தானிய பிடித்து வைத்து காலனிய ஆதிக்கம் செலுத்தி வந்தது. 19’ம் நூற்றாண்டின் முற்பகுதி மற்றும் மத்தியப் பகுதிகளில், ஒவ்வொரு நாடாக பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. சிங்கப்பூரும் அவ்வாறு எல்லா காலனி ஆதிக்க நாடுகள் போலவே, ஒரு பிரித்தானிய கவர்னர், அவருக்கு ஆள்வதில் ஆலோசனை சொல்லும் ஒரு சட்டமன்றக்குழு (லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்) என்ற ஒரு அமைப்பிலேயே ஆளப்பட்டு வந்தது. சொல்லத் தேவையன்றி இந்த ஆட்சிக் குழு மன்றத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் நியமன உறுப்பினர்கள் மட்டுமே.
இரண்டாம் உலகப்போர் முடிவு பெற்ற 50’களுக்குப் பின்னர் எல்லாக் காலனிய நாடுகளும் விடுதலை பெற்று தனித்தியங்கப் போராடிய நாட்களில், சிங்கையை உள்ளிட்ட மலாயன் (இன்றேய மலேசியா) வட்டாரத்திலும் இந்தப் போராட்டங்கள் தொடங்கின. எனவே பிரித்தானியா, இந்த ஆட்சிமன்றக் குழுவில் அதிக சுயாட்சி மற்றும் தேர்தல் மூலம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை அனுமதித்தது. இவ்வாறான சூழலிலேயே இளம் பாரிஸ்டராக, கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சட்டம் படித்து, சிறப்புத் தேர்வில் 1949'ல் தேறியிருந்த லீ, சிங்கை திரும்பி, சட்டத் தொழில் செய்யத் தொடங்கியிருந்தார். சிங்கப்பூர் தபால் ஊழியர்களுக்கான வழக்கை ஏற்று நடத்தி, தொழிலாளர்கள் சார்பாக வென்றதில், அவருக்குக் குறிப்பிடத்தக்க புகழ் கிடைத்திருத்தது. தனது தோழர்கள் கூட்டத்தினருடன், மக்கள் செயல் கட்சியைத் தொடங்கியிருந்தார். 

மேற்கண்ட ஆட்சி மன்றக் குழுவுக்கான தேர்தல் வந்தபோது, லீயும் தனது கட்சியுடன் அத்தேர்தலில் போட்டியிட்டார். அந்த 1955 தேர்தலில், சட்ட மன்றக் குழுவின் 32 உறுப்பினர்களில், 25 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் லீ'யின் கட்சி 3 உறுப்பினர்களை வென்றிருந்தது. அதற்கடுத்த 1959 தேர்தலில், தமது செயல்பாடுகள் மூலம், மொத்தமுள்ள 51 உறுப்பினர்களில், 43 உறுப்பினர்களை வென்று, 1959’ல் பிரதம அமைச்சரானார் லீ.
அவர் தேர்தலில் முன்வைத்த கொள்கை, மலாயாவோடு இணைந்து முன்னேறுவது, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிடியில் இருந்தும், பிரித்தானிய பிடியில் இருந்தும், வெளிவந்து மலாயன் சிங்கப்பூரை வென்று முன்னேற்றுவது. 1957’ல் உத்தேச சுதந்திரத்தைப் பெற்றிருந்த மலேசியா, 1963’ல் முழு மலேசியாவாக உருவான போது, மலேசியக் கூட்டமைப்பில் சிங்கப்பூரை இணைத்தார் லீ. இதன் மூலம் இரண்டு நாடுகளும் இணைந்து முன்னேறலாம் என்று நினைத்தார். தொடக்கத்தில் இயைந்து பணியாற்றிய மலேயா, தொடர்ந்து வந்த நாட்களில் லீ'யின் செயலூக்கம் மிகுந்த செயல்பாடுகள், மலேசியாவின் பாராளுமன்றத்திலும் லீ'யின் கட்சி செல்வாக்குப் பெற்று மலேயாவின் நிர்வாக விசயங்களிலும் தலையிடலாம் என்ற அச்சத்தை மனதில் கொண்டு, சிங்கப்பூரைப் பிரிந்து சென்று விடும்படி 1964’ல் வற்புறுத்தத் தொடங்கினர். இது உச்சம் பெற்று 1965, ஆகஸ்டு மாதத்தில், சிங்கை மலேயாக் கூட்டமைப்பில் இருந்து கழற்றி விடப் பட்டது. தங்களுடன் சமூதானமாகப் பேசி, இயைந்து சிங்கப்பூர் சிறிது அடங்கிய மாநிலமாக இருக்கும் என்று மலேசியா எதிர்பார்த்திருக்க, சிங்கப்பூர் ஒரு தனி நாடு என்ற பிரகடனத்தை சிங்கைப் பாராளுமன்றத்தில் லீ 1965'ல் துணிந்து அறிவித்தார். ஆயினும் அவர்மீது எத்தகைய அழுத்தம் இருந்தது என்பதை, சிங்கை வான 
ொலிக்கு அன்று அவர் அளித்த ஒரு பேட்டி வெளிக்காட்டியது. (இந்தக் காணொளியின் 1:25 ஆவது நிமிடம் அந்த உணர்ச்சிப் பெருக்கைக் காட்டும் https://www.youtube.com/watch?v=anAYPAmg0IM) 

அந்த ஆகத்து, 9’ம்நாள் 1965 ல் சிங்கை, எந்த ஒரு தன் வளமும் இல்லாத, பயிரிடுவதற்கான நீர்வளமோ, இடவளமோ இல்லாத, எந்த ஒரு தொழில் வளங்களும் இல்லாத, எந்த ஒரு உற்பத்தி வளங்களும் இல்லாத, வெறும் மக்கள் தொகை மட்டும் கொண்ட, பன்றி வளர்க்கும், மீன்பிடி மக்கள் நிரம்பிய, சீன மற்றும் இந்திய சிறுவணிகர்கள் சமூகம் கொண்ட ஒரு நாடு மட்டுமே.
அந்த நிலையிலிருந்து, இன்றைய, உலகின் நான்காவது பெரிய தனிநபர் வருமானமுள்ள நாடாக சிங்கையை மாற்றியது எது, எவ்வாறு?

லீ க்வான் யூ என்னும் மாமனிதன், மாபெரும் தலைவன்
1965’ல் தனிநாடாகப் பிரகடனம் செய்து கொண்டு விட்ட சிங்கையில் ஒரு வளமுமே இல்லை என்று பார்த்தோம். எத்தகைய புள்ளியில் இருந்து தொடங்கினாலும், தனது இலக்குகளில் லீ க்வான் யூ'வுக்குக் குழப்பங்களே இல்லை. அதை அடையும் வழிகளை அவர் எப்போதும் மாற்றியும், சீரமைத்தும், மேம்படுத்தியும் கொள்ளத் தயங்கியதே இல்லை. சில சிறிய காட்டுகளைப் பார்ப்போம். 

()
தம்மிடம் இருக்கும் ஒரே வளம் மனிதவளம் மட்டுமே என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தார் லீ. ஆனால் அந்த மனிதவளத்தைப் பயன்படுத்திக் கொள்வார் யார்? அதற்கு முதலீடு செய்வார் யார்? எப்போது முதலீட்டாளர்கள் வருவார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக சிங்கையை உருவாக்குவதில் கவனத்தைச் செலுத்தினார் லீ. முதலில் நாடு அமைதியாகவும், கவரும் தன்மை உடையதாகவும், நாட்டு மக்கள் உழைக்கத் தயங்காதவர்களாகவும், நேர்மையான உழைப்புத் திறன் கொண்டிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே,
- ஆரோக்கியமான, இதமான வாழும் சூழல்
- சிறிதும் ஊழலற்ற சட்டத்தின் தன்மையை உறுதி செய்தல்
- தொழிலாளர்கள் ஒன்று பட்டு உழைத்தாலே அவர்களும், அவர்கள் மூலம் நாடும் முன்னேற இயலும் என்பதை ஆணித்தரமாக அவர்ககுப் புரியவைத்தல்
- தொழில் முனைவோருக்கான உதவிகரமான தொழில் நடத்தும் சூழல்
இந்த ஐந்தையும் முதலில் உறுதி செய்தார்.

இன்றும் சிங்கைக்கு முதல் முதலில் வரும் எவரும், சிங்கை விமான நிலையத்தை விட்டு வெளிவந்து எந்த வாகனத்தில் நகருக்குள் பயணிக்கத் தொடங்கினாலும், அந்த சூழலைப் பார்த்து மயங்காமல் இருக்கவே இயலாது. சொல்லப்போனால் வேறு எந்த நாட்டு விமான நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லும் பாதையும் சூழலும் இத்தனை பசுமையாக இதமாக இருந்து விடவே இயலாது என்று சொல்லலாம். இதனை நினைத்துச் செயல்படுத்தியவர் லீ.
1968 வாக்கிலேயே சிங்கை முழுவதும் தூய்மையான, பசுமையான நகராக மாற வேண்டும் என்று லீ முதலில் முடிவெடுத்தார். ஆசுத்திரேலியாவின் பசும் புற்கன்றுகள் வரவழைக்கப் பட்டு சிங்கையில் நடப்பட்டன; ஆனால் சிங்கையின் அமிலத்தன்மை நிரம்பிய மண்ணால் அந்தப் புற்கள் இங்கு வளரவில்லை என்பதைக் கண்ட லீ, சிங்கையின் மண்ணை உலகின் திறமை வாய்ந்த சோதனைச் சாலைகளில் சோதித்து, எத்தகைய அபாயமற்ற வேதிப் பொருட்களால் சிங்கை மண் புல்வெளிகளுக்கு உகந்த மண்ணாக மாற இயலும் என்று கேட்டறிந்தார். தேவையான அப்பொருட்கள் வாங்கப்பட்டு, சிங்கைத் தீவின் மண்வெளி முழுவதும் அவை தூவப்பட்டு மண்வளம் மாற்றப் பட்டது. பின்னர் ஆசியின் படர்ந்து வளரும் புற்கள் மற்றும் அழகிய பூச்செடிகள் கொண்டு வரப்பட்டு தீவு முழுவதும் நடப்பட்டன. உள்ளூரிலேயே புல்வெளிக்கன்றுகள் உருவாக்கும் பண்ணைகளும் உருவாக்கபபட்டன. ஓரிரு ஆண்டுகளில் மாற்றம் வந்தது. மாயம் போல சிங்கை பசுமையானது.

இதே நேரத்தில் நகரெங்கும் இருந்த திறந்த வெளி வாய்க்கால்கள், சாக்கடைகள் இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு, நில அபிவிருத்திக் கழகம் மூலம் பெரும் நகருக்குண்டான கழிவு நீர், குடிநீர் வடிகால் வாய்க்கால்கள் தெளிவாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப் பட்டன. இந்த தூய்மையான சிங்கப்பூர் திட்டத்தில் தானே தனிப்பட்டும் முன்னிற்க லீ தயங்கியதே இல்லை. (படத்தைப் பாருங்கள்). 


()

60’களின் இறுதியில் பிரிட்டனுக்குப் பயணம் செய்கிறார் லீ. சுதந்திரம் பெற்ற நாடாக இருப்பினும், பிரிட்டனின் கப்பற்படையின் ஒரு படையணி சிங்கையில் இருந்தது. அது இருந்ததனால் அந்தப் படையணிக்கு ஆகும் செலவினங்கள் மூலம் சிங்கையின் தேசிய உற்பத்திக்கு ஒரு கணிசமான தொகை வந்து கொண்டிருந்தது. 70’களின் தொடக்கத்தில் இந்தப் படையணியையும் மீட்டுக்கொள்ளும் நோக்கில் இருந்தது. எனவே தொழில் முதலீடுகளை சிங்கப்பூருக்கு ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த லீ, உலகின் பல நாடுகளிலும் இருந்து தொழில் முனைவோரை வரவேற்பதற்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்தார் லீ. அத்தகைய ஒரு பிரித்தானிய பயணத்தில், ஒரு நண்பர், மீன்பிடிக்க உதவும் தூண்டிக் கொக்கிகளை உற்பத்தி செய்யும் எண்ணம் கொண்டிருப்பதாவும், லீ விரும்பினால் அவரைச் சந்தித்து இது பற்றிப் பேச விரும்பவுதாவும் சொன்னபோது, சிறிதும் தயங்காமல் அவரைச் சந்திக்கச் செல்கிறார் லீ. சிறிது யோசித்துப் பாருங்கள், ஒரு பெரிய நாட்டின் பொருளாதாரத்தில், ஒரு மீன்பிடிக்க உதவும் உலோகக் கொக்கிகளை உருவாக்கும் நிறுவனம் என்ன பங்களிப்பைச் செய்து விட முடியும்? ஆனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆக்க பூர்வமாக அணுகும் குணம் கொண்டிருந்தார் லீ. 

இதிலிருந்து தொடங்கிய லீ உலகின் பெரும் நிறுவனங்களை சிங்கப்பூர் நோக்க வர வைத்தார். முதலில் சிங்கைக்கு உள்ளே வந்த மாபெரும் தொழில் நிறுவனம் சோனி, பின்னர் ஐபிஎம் என்று உலக நிறுவனங்கள் தங்களது தென்கிழக்காசிய இயக்க மையமாக சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தன. இந்த நிறுவனங்களுக்கு நல்ல மனிதவளம், சிக்கலற்ற நிருவாக முறை, அமைதியான, ஆரோக்கியமான வசிப்பிட சூழல் என்ற மூன்றை உறுதி செய்தார் லீ. கட்டற்ற மனிதவளம் தொடர்ந்து கிடைக்க, உலகின் சிறந்த மூளைகள் கொண்டவர்களை, கல்வித் தகுதியாளர்களை சிங்கப்பூர் தொடர்ந்து வரவேற்று, நீண்டகால வசிப்பிட அனுமதி கொடுத்து தனது மனிதவளத்தை போட்டித் தன்மை குன்றாமல் பார்த்துக் கொண்டது சிங்கப்பூர். சிறந்த தகுதி கொண்ட தனி நபர்கள் உள்ளே வந்து, சிங்கையில் தங்கி, சிங்கப்பூரர்களாக மாறி, சிங்கைக் குடிமக்களாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது ஒட்டு மொத்தமாக சிங்கையின் மனிதவளம் பெருகும் என்ற கணக்கீட்டை மெய்ப்பித்தார் லீ. அரசின் கொள்கை முடிவுகள் இந்த திசைக்கு இணக்கமாக வகுக்கப் பட்டன. அனைத்து இன மக்களும் இயைந்து வாழும் சூழல், அரணாக பாரபட்சமின்ற நடக்கும் சட்டத்தின் ஆட்சி இவையும் உறுதி செய்யப்பட்டன. இவற்றால் சிங்கையின் வளர்ச்சி, வேகப்பாய்ச்சலில் மாறத் தொடங்கியது.

()
ஜடப் பொருட்களை மற்றும் மாற்றினால் போதுமா ? மனித மனங்கள் மாற வேண்டாமா? 
அது எப்படி மாறும்? இன்னொரு சம்பவம். சிங்கையின் வானூர்திச்சேவை உலகின் முதல்தரமான வானூர்திச் சேவை என்று, இன்றளவும் உலக அளவில் பலமுறை பரிசு வென்ற ஒன்று. இது எப்படி நிகழ்ந்தது? ஆரம்ப காலத்தில் இந்த பெருமை வாய்ந்த நிறுவனத்திலேயே வேலை நிறுத்தம் ஒன்று நடந்தது. அதை லீ எவ்வாறு எதிர் கொண்டார் என்பதை அவரது வாயிலாகக் கேட்பது ஒரு தனிப்பட்ட அனுபவம் ! போராடும் தொழிலாளர்கள் மத்தியில் அவரே நேரடியாகப் பேசினார், எத்தனை நிமிடம்? 65 நிமிடம் !!! (https://www.youtube.com/watch?v=veGZqyzyygY ). 

அவர் சொன்ன சுருக்கமான உறைப்பான செய்தி இதுவே... 'இது( சிங்கப்பூர் ) உங்களதும், என்னுடையுமான வாழ்க்கை; என்னுடைய முழு வாழ்க்கையையும் இதை உருவாக்குவதில் நான் செலவிட்டிருக்கிறேன்; நான் இதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் வரை, இதை எவராவது அழிக்க முயற்சிப்பதை, நான் அனுமதிக்க முடியாது' 

அதே நேரம் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தொழிலாளர்கள் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டது. தொழிலாளர்களின் நலன்கள் இந்த அமைப்பின் மூலம் பேணப்படுவதை அரசே உறுதி செய்தது. அந்த அமைப்பின் மூலமே, அத்தியாவசியத் தேவைகளுக்கான விற்பனை நிலையங்கள் நாடெங்கும் தொடங்கப்பட்டன. முறையற்ற போராட்டங்கள் நாட்டுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் தாழ்வையே அளிக்கும் என்பதும் தொழிலாளர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. 

இன்றளவும், பொதுவாக சிங்கப்பூரர்களது நேர்படப் பேசும் தன்மை, உண்மையாக இருத்தல், நேரம் தவறாமை, தன் வேலையில் சரியாக இருத்தல் ஆகிய அனைத்து குணங்களும் லீ'யின் மாறாத வழிகாட்டுதலின் மூலம் வந்தவை என்று சொன்னால் அது மிகையாகாது.

லீ முன்னெடுத்த அரசியல் 
லீ நல்ல கல்வித் தகுதி கொண்ட, திறமையான, நேர்மையான, அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களே அரசியலுக்க வரவேண்டும் என்ற ஒரு அளவுகோலில் சமரசமற்று இருந்தார். அப்படிப்பட்டவர்களைத் தேடித்தேடி மக்கள் செயல் கட்சி பொறுப்புகளுக்குக் கொண்டுவந்தது. சரியான, திறமையான, நேர்மையான மனிதர்கள் பொறுப்புக்கு வந்து விட்டால் அனைத்தும் ஒழுங்காக நடக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர் லீ. ஏனெனில் அவரே அப்படிப்பட்ட ஒரு உச்சபூர்வமான திறமையாளர், நேர்மையாளர். லீ'யின் மக்கள் செயல் கட்சிக்கான குடியிருப்புப்பகுதி அளவிலான வட்டார அலுவலர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை, அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு சலித்து உறுதி செய்யப்பட்ட முறை பின்பற்றப் படுகிறது. எப்படி? சிறிது விளக்கமாகப் பார்ப்போம்... 

சிங்கையின் சட்டம் மற்றும் வெளியுறவு என்ற இரு முக்கியமான துறைகளின் அமைச்சராக இருப்பவர் திரு சண்முகம். தமிழ்ச் சிங்கப்பூரர். பேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் பிரிட்டானிகா நிறுவனம் மூலம் உலக நாடுகளின் பொதுத் தேர்தல்களில் முறையற்ற ஊடுருவலை நிகழ்த்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, அது பற்றிய விசாரணைக்கு சிங்கை அரசு பேஸ்புக் நிறுவன மேலாளர்களை அழைத்தது. இணையத்தில் கிடைக்கும் அந்த விசாரணை தொடர்பான காணொளி மிகப் பிரசித்தி பெற்றது. அது சண்முகம் எத்தகைய ஒரு திறன்வாய்ந்த அரசியல்வாதி, நிருவாகி என்பதையும் தெற்றெனத் துலக்க வைக்கும். ஆர்வமிருப்பவர்கள் இதைக் காணலாம்.( https://www.youtube.com/watch?v=sY3VvWjIuYw ). 

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இத்தகைய திறன்வாய்ந்தவர்களை, திடமான, நேர்மையான, உச்சபட்ச அறிவுத் திறம் கொண்டவர்களை மக்கள் செயல்கட்சி எவ்வாறு கண்டு கொண்டு பொறுப்புகளை ஒப்படைக்கிறது என்பது. மக்கள் செயல்கட்சி நல்ல திறனுடனும், உயர்தகுதிகளுடனும் தேர்வு பெறும் பல்துறைத் திறனாள மாணவர்களை அடையாளம் கண்டு அவரகளை வரவேற்றுப் அவர்களோடு பேசுகிறது. மக்களுக்காகப் பணி செய்யும் மனநிலையும், நேர்மையும், திறமையும், மாறா உறுதியும் அவர்களிடம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கிறது. அவ்வாறு அடையாளம் காணப் படுபவர்களை அழைத்து அங்கத்தினர்களாக ஆக்கிக் கொள்கிறது. அவர்களைக் கண்காணிக்கிறது. செயல்படும் முறையை அலசுகிறது. அனைத்திலும் தேர்ச்சி பெறும் மிகச் சிறந்தவர்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டு உறுப்பினராகும், அமைச்சராகும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவர்களது செயல்பாடும் தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறது. நன்று செயல்படுபவர்கள் மேலும் பொறுப்புகளும், பதவிகளுப் வழங்கப்படுகிறார்கள். அத்தனை சிறப்பாகப் பணியாற்ற வில்லை யென்றால் அடுத்த பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. 
இந்த தேர்வு முறை எத்தனை சிறப்பானது என்பதை திரு சண்முகம் வாயிலாகவே தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு இன்னொரு காணொளியில் கிடைக்கிறது. நிமிடம் 12’ லிருந்து பாருங்கள்...ஆர்வமிருப்பவர்கள் முழுதுமே பார்க்கலாம். ( https://www.youtube.com/watch?v=aOoqpeYAZ7c ).

லீ'க்குப் பிறகான சிங்கை

லீ 2015, மார்ச்'சில் மறைந்தார்.

லீ அவர்கள் மறைந்து இன்று ஏழாண்டுகள் ஆகி விட்டது. அதன் பிறகு இரண்டு தேர்தல்கள் வந்து விட்டன. மூன்றாவது தேர்தல் வரப் போகிறது. ( சிங்கையில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும்).

2015’ல்தான் மறைந்தார் என்றாலும், அவரது மனைவி மறைந்த 2010’லிருந்தே, அவரது ஈடுபாடு சிங்கை நிருவாகத்தில் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. காரணம் சிங்கப்பூரை நிருவகிக்க ஒரு சரியான வழிமுறையை அவர் உருவாக்கி, கையளித்து விட்டிருந்தார். லீ பிரதமராக இருந்த காலத்தில், அவர் பிரதமர் பதவியிலிருந்து போய்விட்டால், நாடு அதே மாதிரி இருக்காது என்றார்கள். ஆனால் லீ தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்த அடுத்த பிரதமர் கோ சோ தாங் காலத்தில் சிங்கை இன்னும் வேகமாக வளர்ச்சி அடைவதை லீ உறுதி செய்தார். அப்போது லீ சீனியர்-மினிஸ்டர் என்ற ஒரு பதவியில் இருந்தார். கோ'வுக்குப் பிறகு லீ'யின் மகனான லீ ஜூனியரை கோ, தனக்குப் பின்னான தலைவராக தேர்ந்தெடுத்தார். அவரது காலத்தில் கோ சீனியர்-மினிஸ்டராகவும், லீ மினிஸ்டர்-மென்டார் என்ற பொறுப்பிலும் இருந்தார்கள். 2010’க்குப் பிறகு படிப்படியாக அரசு நிருவாகத்தில் இருந்து விலகிய லீ, 2013’க்குப் பிறகு முற்றிலும் அரசிலிருந்து விலகி விட்டார். ஆனால் அவர் உருவாக்கி வைத்த வழிமுறை மாறாது கடைபிடிக்கப்பட்டது, படுகிறது.
இவ்வாறு திறமையான, நேர்மையான, உண்மையானவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் முறையை மக்கள் செயல்கட்சியின் தேர்வு முறையாகவே லீ கட்டமைத்து வைத்ததனால் மட்டுமே, மிகச் சிறந்தவர்கள் மட்டுமே பெரும் பொறுப்புகளுக்கும், நாட்டை நிருவகிப்பதற்கும் வருகிறார்கள். அதனால் நாடு திறம்பட நிருவகிக்கப் படுகிறது. இதனை சமீபத்திய கோவிட் அச்சுறுத்தலை, சிங்கை எதிர் கொண்ட முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். உலக அளவில் கோவிட் பாதிப்பினால் மரணமடைந்தவர்கள் விகிதம் மிகச் சிறிதாக அமைந்த நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று. மிகச் சிறிய நிலப்பரப்பான 250 சதுர மைல்களுக்குள், 55 லட்சம் பேர் வாழ்ந்தாலும், கோவிட் பாதிப்பு பெருமளவில் நிகழாத வண்ணம் காப்பாற்றப்பட்டதற்கு, சிங்கை அரசின் சீரிய நிருவாக அணுகுமுறையே காரணம். 


கோவிட் கால நிருவாகத்திற்காக அரசின் அமைச்சர்களின் இளையர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினரில் சிறப்பாக ஒருங்கிணைத்து அருமையாகச் செயல்பட்ட தற்போதைய கல்வி அமைச்சராகப் பணிபுரியும், 49 வயது நிரம்பி திரு லாரன்ஸ் வாங், அடுத்த தலைமை அமைச்சராகத் தேர்வு பெறுவார் என்று மக்கள் செயல்கட்சி தற்போது தெளிவு படுத்தியிருக்கிறது.

லீ ஏற்படுத்திக் கொடுத்த பாதையில் மாறாது நடைபோடும் வரை, பிராந்தியத்தின் பெரு வளர்ச்சியடைந்த நாடாக சிங்கை தொடர்ந்து நிலைபெறும் என்று உறுதியாக நம்பலாம். 


No comments:

Post a Comment

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...