எழுத்தில் நான் புலியல்ல. ஆனால் தெளிவான மொழியறிவும், தமிழில், அதன் மொழி வளத்தில், தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடும், அவற்றில் ஓரளவு குறிப்பிடத்தக்க பயிற்சியும் உண்டு.
எழுத விரும்புபவர்களுக்கு, எழுதத் தொடங்குபவர்களுக்கு தெளிவான மொழி வேண்டும் என்பது அடிப்படை.
எனக்கு பதின்மத்திலிருந்தே மொழி கைவரப் பெற்றதுதான். பள்ளி, கல்லூரி என்று வாய்ப்பு கிடைத்த இடங்களிலெல்லாம் எழுத்து வாய்ப்புகளைத் தவற விட்டதில்லை. அந்த வாய்ப்புகளில் பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.
எனினும் அடிப்படையில் நான் கணிதன். நிதியாளன். எனவே செய்யும் எதிலும் கவனமும், நுணுக்கமும், தெளிவும் கொண்டுவர மெனக்கிடுவேன். அது எனது தொழிற்கல்வி அளித்த பயிற்சி. தெளிவான மொழியும், தமிழிலக்கிய ஆர்வமும், எனது கல்வியின் வழியாக வந்து நிபுணத்துவமும் ஒன்று சேர்ந்து கிடைத்த விளைவுதான் வரலாறு முக்கியம் நூல்.
எனது நண்பர்கள், முகநூலர்கள் பலர் இந்த நூலை வாங்கியிருக்கிறார்கள்; ஆனால் முழுதாகப் படித்தவர்கள் எனக்குத் தெரிந்து இருவர். ஒருவர் என்னை எழுத்தாளராக மாற்றிவைத்த அருமை நண்பரும், Madras Paper இணைய இதழின் ஆசிரியருமான பாரா. அவர் ஒவ்வொரு கட்டுரை வந்தபோதும் படித்திருப்பார் எனினும், நூலாக வந்த பிறகும் இன்னொரு முறை படித்ததாகவும், இன்றைய அளவு கோலில் மிகுந்த தரமான மொழி் மற்றும் உள்ளடக்கத்தில் இந்த நூல் வந்திருக்கிறது என்று பாராட்டினார். இந்த வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றிச்சொல்லியிருப்பது (நிமிடம் 3:00 - 6:00) என்னுடைய தகுதிகளோடு அவர் என்மீது வைத்திருக்கும் ஒரு சிட்டிகை அன்பும் சேர்ந்து வந்திருப்பது. நற்சொல் கேட்க எவருக்கு ருசிக்காது?! மனதார ருசித்தேன்.
இன்னொருவர் அருமை நண்பரும் பேச்சாளரும், எழுத்தாளருமான முனைவர் ஆறுமுகத்தமிழன். அவர் தனது மதிப்புரையில் அதை அருமையாக எழுதிவிட்டார்.
இதில் ஒன்றை உறுதியாகச் சொல்வேன். இந்தக் கட்டுரைகளை எழுதிய கணங்களை நான் மிகவும் நேசித்தேன். பல கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த நேரங்கள் வார இறுதியில் அமைந்தவை. அந்த நேரங்களில் எனது மூன்று பயல்களும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளால், சண்டைகளால், எனது மனைவி கொதிநிலைக்குப் போய்க் கத்துவார். எனது அலுவல் அறையில் எழுதிக்கொண்டிருக்கும் என்னை, அவ்வப்போது இந்தக் களேபரங்கள் இந்த உலகுக்கு இழுக்கும். ஆனால் மீண்டும் மறைந்து போய் விடுவேன். ஓரிரு மணி நேரங்களில் கட்டுரை அனுப்பப்பட்ட பின்னர்தான் தேர் நிலைக்கு வருவது போல நிலைக்கு வருவேன். அதற்குள் மனைவி கொதித்து எரிந்து அடங்கி மோனநிலைக்குப் போயிருப்பார். ஏதும் அறியாதவன் போல வெளிவரும் என்னை அவர் பார்க்கும் பார்வையில் தீப்பொறிகள் பறக்கும். ஆனால் வாயிலிருந்து ஏதும் வார்ததைகள் வராது. பின்னர் இந்த அவத்தைகளில் இருந்து அவரைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பை அவருக்கு அளித்தேன்; என்னுடைய எழுதும் நேரத்தை இரவு 11:30 க்கு மேல் அல்லது காலை 3:30 வாக்கில் என்று மாற்றிக்கொண்டேன்.
அதன் விளைவுதான் அந்த 24 கட்டுரைகளும் வரலாறு முக்கியம் நூலும். எல்லாவற்றையும் மீறி அந்த எழுத்துக்கணங்களை மிகவும் நேசித்திருக்கிறேன் என்பது சத்தியமான உண்மை.
இனி நான் நிறையும் வரை எதையாவது எழுதிக்கொண்டுதான் இருப்பேன் என்று இப்போது தோன்றுகிறது. இந்த என் பிரதியை என்னிலிருந்து கண்டறிந்து வெளிக் கொண்டுவந்ததுதான் அருமை நண்பர் பாராவின் சாதனை. நான் அவர் திட்டமிட்டுச் செயலாற்றி அளிக்கும் எழுத்துப் பயிற்சியில் சேர்ந்தவனில்லை. ஆனால் மிக நிச்சயமாய் அவரது பல எழுத்துக்களிலிருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடமிருந்து நானும் கற்றுக்கொண்டேதான் வந்திருக்கிறேன்.
அவரடமிருந்து மட்டுமல்ல சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், திஜா, ஆறுமுகத்தமிழன், அகரமுதல்வன் …என்று பலரிடமும் இருந்தும். இவர்களில் சிலர் அணுகத்தக்க தோழர்களாக இருப்பது கூடுதல் கொடை.
இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வு இத்தனை நினைவைத் தெளித்து நனைத்து விட்டது. இதே உணர்வு வேறு வேறு களங்களில், விதங்களில் இந்த வெளியீட்டில் பங்குகொண்ட இணை எழுத்தாள நண்பர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்தான். என்ன, அவர்கள் சொற்களை மட்டும் இங்குமங்கும் மாற்ற வேண்டியிருக்கும்; ஆனால் உணர்வு ஒன்றாக, இதே போல்தான் இருக்கும்.
இது போதும், என்ற கணமல்ல; இது தொடக்கம்தான் என்ற தெளிவோடு இந்தக் குறிப்பை நிறைவு செய்கிறேன்.
சிறப்புரை வழங்கிய, எழுத்தில் மூத்த, பெரியவர் திருப்பூர் கிருஷ்ணன், எங்களது முன்னோடி என்.சொக்கன், விழாவைத் தங்களது வருகையால் மலர்ச்சியுறச் செய்த நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், நிகழ்வின் சக தோழ எழுத்தாளர்கள் என அனைவருக்கும் அன்பு.
பாரா வுக்குப் பேரன்பு.
குறிப்பு : நூலை இந்த இணையச்சுட்டியில் வாங்கலாம்.
# வரலாறுமுக்கியம்
MadrasPaper
Zero Degree Publishing
No comments:
Post a Comment