முதல் இதழ் வெளிவந்த சூன் 1' 2022 இதழில் ஆதீனங்களின் கதை வெளிவந்தது.
முக்கியக் குறிப்பு : இதில் உள்ளது கட்டுரையின் முழுவடிவம். இதழில் வெளிவந்த போது, இதழ் தேவைகளுக்கேற்ப சிறிது சுருக்கப்பட்ட வடிவம் வெளிவந்தது. அது இதழின், இதழாசிரியரின் உரிமையும் கூட.
கட்டுரை அதன் முழுவடிவில் இங்கு சேமிக்கப்படுகிறது, படிக்கக் கிடைக்கிறது.
தமிழர் சமயம்
இந்தியாவெங்கும் காலங்காலமாக மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான தத்துவ வழிகாட்டல்கள் நெடுங்காலந்தொட்டே இருக்கின்றன. இவை பொதுவாக ஒவ்வொரு சமய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்த வழிகாட்டல்கள், வழிகாட்டிகளால் முன்னெடுக்கப் படுகின்றன. கிருத்துவம், இசுலாம் போன்ற பெரு மார்க்கங்களுக்கான வழிகாட்டல்கள் எவ்விதம் உள்ளன என்பது பெரும்பாலும் பரவலாக அறியப்பட்டது; இந்த பெருமதங்கள் அல்லாத மற்றவற்றைப் பொதுவாக இந்து என்று குறிப்பிடும் வழக்கம் இற்றை நாளில் நிலவுகிறது. கவனித்துப் பார்த்தோமானால் இந்த இந்து என்ற பதத்தை இந்து 'சமயம்' என்று தமிழில் குறிப்பிட விழைவார்கள்; இந்து 'மதம்' என்று குறிப்பிடுவது குறைவாக இருக்கும். ஆனால் பண்டைய இந்தியாவில் சமயங்கள் மட்டுமே நிலவின; மதங்கள் இல்லை என்பதையும், இன்று இந்து 'மதமாக' நிலவுவதை, இந்து 'சமயமாக' அறிமுகப் படுத்துவதன் உட்பொருள்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இது நிற்க.
ஆனால் இந்த இந்து என்ற சொல்லாக்கம் ஆங்கிலேயர் வழி வந்தது. அதற்கு முன்னால் இந்தியாவில் பற்பல சமயங்கள் நிலவின. தென்னாட்டைப் பொறுத்தவரை சைவம் என்ற சிவம், வைணவம் என்ற விண்ணவம், காணாதிபத்யம் என்ற கணபதியம், கௌமாரம் என்ற குமரம், சமணம் என்ற செயினம் (இதற்கு ஆசீவகம் என்ற முன்னோடியும் உண்டு) மற்றும் பௌத்தம் என்ற புத்தம் என்ற சமயங்களே நிலவின. இந்த சமயங்களில் சிவமும், குமாரமும் தமிழ்ச் சமயங்களாக பொ.உ.மு மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிலை பெற்று விட்டன என்பதற்கு தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை இவற்றிலேயே சான்றுகள் உள்ளன. மயில் மீது அமர்ந்த இளையனும் அழகனுமாக முருகன் குறிப்பிடப் படும் அதே நேரத்தில், சிவன் மிக உயர்ந்த நிலையில் வைத்தும் வழங்கப்படும் தெய்வமாகிறான். இந்த இரண்டு ஆரம்பகால இறை வடிவங்கள் பின்னர் நிலங்கள், தினைகள் மூலம் பிரிக்கப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களுக்கு முறையே வேலன், மாலன், இந்திரன், வருணன், கொற்றவை என்று நிலம் சார்ந்த பகுதிகளாகப் பாகுபாடு அடைந்தாலும் சிவன் என்ற தத்துவம் அனைத்திற்கும் உள்ளாய், அனைத்தினும் புறம்பாய் என்று சித்தாந்தம் குறிப்பிடுவது போல எல்லா இடங்களிலும் நிலை பெற்று வளர்ந்து விளங்கியது. இந்த நிலை பொ.உ. மு மூன்றிலிருந்து பொ.உ.பி இரண்டு வரை நிலவியதற்கான இலக்கியச் சான்றுகள் தமிழில் உள்ளன.
இவ்விரு இறையியல் தத்துவங்களும், பின்னர் வந்த களப்பிரர் காலம் கடந்து, பின்னர் பக்தி இலக்கிய காலம் தொடங்கி தமிழ் நிலத்தில் சமயக் குரவர்கள் தோன்றி நீடித்த, பொ.உ.பி பதினொன்றாம் நூற்றாண்டு வரை நிலைபெற்று வளர்ந்து கொண்டே வந்தன. சிவம், விண்ணவம் என்ற இரண்டு பெரும் சமயங்களிலும் பல பெரும் அருளாளர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள் (63) மற்றும் பன்னிரு ஆழ்வார்கள்(12) என்ற விளிப்பில் தோன்றி, இச்சமய இலக்கியங்கள், புராணங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஏராளமாக நிறவப் படவும் அல்லது புதுப்பிக்கப் படவும் பெரும் விசையாக விளங்கினார்கள். மன்னர்கள், பெரும் பொருளாளர்களின் ஆதரவுடன் இந்த பக்தி இயக்கம் சமூக ஒழுங்கமைவு இயக்கமாக பெரும் வலிவுடனும் விசையுடனும் இயங்கி நிலை பெற்றது.
இதே நேரத்தில் பல்வித சமயங்களின் பற்றாளர்கள் தத்தமது வழிபாடு, தத்துவக் கோட்பாட்டு வளர்ச்சிகளுக்காக நிறுவனங்களை ஏற்படுத்தியதும் நடந்தன. இவ்விதம் ஏற்பட்டவையே மடங்கள் என்னும் ஆதீனங்கள். இவை பெரும் சமயங்களான சிவம் மற்றும் விண்ணவம் இரண்டுக்கும் பற்பல இடங்களில் ஏற்பட்டன. இதில் சிவ மடங்களின் தோற்றம், வளர்ச்சி, இயக்கம் மற்றும் அவை ஏற்படுத்திய சமூகத் தாக்கம் பற்றிய ஒரு 360 பாகைப் பார்வையாக இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
சமயம் செயல்படும் முறை
பண்டைய இந்தியநிலப்பரப்பில் இருந்த அரசமைப்புகள் மற்றும் சமூகங்கள் சமயவழியான வழிகாட்டுகளிலேயே இயங்கின. இந்தியப் பண்பாட்டையே சமய ஒழுக்கத்தின் அடிப்படையிலான பண்பாடு என்றும் சொல்லலாம். சமயம் என்பது கடவுள் வழிபாடு; மற்றும் சமய நெறிகள் பற்றிய ஆழ்ந்த அறிவு, புழக்கம், தெளிவு ஆகிய இரண்டு இரு பெரும்பிரிவுகளை உள்ளடக்கியது. இந்த இரு பிரிவுகளில் கடவள் வழிபாடு என்பது கோவில்களை அமைத்து, நிருவகித்துப் பேணுவது என்னும் வழியிலும்; சமய நெறிகளைக் கடைப்படிப்பது மடங்கள், ஆதீனங்கள் வழியாகவும் வழிவழியாக நடைபெற்று நிலைபெற்றன. இந்த இரு பெரும்பிரிவுகளில் சிறுபிரிவுகளாக திருக்கோவில்கள் செயல்பாடுகளில் பூசனை முறைகள், கோவில் நிருவாகம், விழாக்கள் நடத்துதல் போன்றவையும் ; மடங்களின் செயல்பாடுகளில் சமயக்கல்விகளில், கவின்கலைகள் பிரிவிலான சிற்பம், ஓவியம், நாட்டியம், ஒப்பனை, இசை போன்றவற்றிலும் பயிற்சியும், சமய மெய்யியல் சார்ந்த தத்துவ விசாரணை ஆய்வுகள், நூலாக்கம் போன்ற முயற்சிகளும் ஒருங்கே ஒரே நேரத்தில் செழுமைச் செயல்பாடுகளாகத் திகழ்ந்தன. இவை அனைத்தின் பொதுவான பயன்பாடு சமயத்தைப் பின்பற்றும் பொதுமக்களின் இயைந்த நலம் சூழ்ந்த வாழ்வு என்னும் அடிப்படையில் ஒருங்கமைக்கப்பட்டன.
மடம் என்பது எது?
மடம் என்ற சொல்லுக்கு முனிவர்கள், ஆசாரியர்கள், நைட்டிக பிரம்மச்சாரிகள் வாழும் இடம் என்பது தமிழ்க் கலைக்களஞ்சியம்- லெக்சிகன், வழங்கும் பொருள். ஆன்மிகப் பயணங்கள் செய்வோர் தங்கிச் செல்லும் இடங்களுக்கும் மடம் என்ற பெயர் பொருந்தி வழங்கப்பெறுகிறது. ஆதீனம் என்ற சொல் உரிமை என்ற பொருளைக் குறிப்பது. பொதுவாக மடங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதீனம் என்று அழைக்கப் படுகிறார்கள். மடாதிபதி என்ற பொருளிலும் ஆதீனம் என்ற சொல்லைப் புரிந்து கொள்ளலாம். காலப்போக்கில் ஆதீனங்கள் இருக்கும் இடத்தைக் குறிக்கும் இடவாகு பெயரான ஆதீனம் என்பது அந்த மடங்களையும் குறிக்கும் சொல்லாகப் பழகி விட்டது.
எனவே மடம் என்பது இடமும், இடம் சார்ந்த கட்டடங்கள் சேர்ந்த அமைப்புக்குமான பெயரும், ஆதீனம் என்பது மடங்களின் தலைவரைக் குறிக்கும் சொல் என்றும் புரிந்து கொள்வது சரியானதாக இருக்கும்.
சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணம் சுமார் 50 இடங்களில் மடம் என்ற சொல்லுடன் திரு' என்ற முன்னொட்டைச் சேர்த்து, திருமடம் என்றே விளிக்கிறது; இரண்டே இடங்களில் மட்டும் பொது' என்ற முன்னொட்டுடன் பொதுமடம் என்று விளிக்கிறது. எனவே பொதுவாக இந்த ஆதீன மடங்கள் சமயம் சார்ந்த ஆழ்ந்த பயிற்சி, சிந்தனை போன்ற வற்றிற்கான களமான திருமடங்கள் இலங்கியிருக்கின்றன. வழிப்போக்கர்கள், தலயாத்திரை செய்யும் ஆன்மீக அன்பர்களுக்கு தங்குமிடம், உணவளிக்கும் சத்திரம் போன்ற நடவடிக்கைகளிலும் மடங்கள் உதவியிருக்கின்றன.
சிவ மடங்கள்
தமிழகத்தில் சிவ மடங்களில் குறிப்பிடத் தகுந்தவை பதினெட்டு. அவற்றின் பட்டியல் பின்வருமாறு.
01. திருவாவடுதுறை
02. காஞ்சிபுரம்
03. தருமபுரம்
04. சூரியனார் கோயில்
05. ஆகம சிவப்பிரகாசாதீனம் (சிதம்பரம்)
06. செங்கோல் ஆதீனம் (பெருங்குளம், திருநெல்வேலி)
07. திருஞானசம்பந்தர் ஆதீனம் (மதுரை)
08. திருவண்ணாமலை ஆதீனம் (குன்றக்குடி)
09. இராமேச்சுரம் ஆதீனம்
10. நீலப்பாடி ஆதீனம் (தஞ்சாவூர்)
11. தாயுமான சுவாமிகள் ஆதீனம்
12. சாரமாமுனி ஆதீனம் (திருச்சிராப்பள்ளி)
13. சொர்க்கபுர ஆதீனம் (அம்பர் மாகாளம்)
14. வேளக்குறிச்சி ஆதீனம் (திருவாரூர்)
15. வள்ளலார் ஆதீனம் (சீகாழி)
16. வருணை ஆதீனம் (வேதாரணியம்)
17. நாய்ச்சியார் கோவில் ஆதீனம் (கும்பகோணம்)
18. நிரம்ப அழகிய தேசிகர் ஆதீனம் (மதுரை — துழாவூர்)
காலத்தால் முந்தைய ஆதீனங்கள்
காலத்தால் முன்னர் தோன்றிய ஆதீனங்கள் என்றால் தமிழகத்தின் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஈழத்தில் உள்ள நல்லூர் ஆதீனம் மற்றும் ஈழத்தின் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் ஆகியவை என்று தெரிகிறது. மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியாரின் வேண்டுதலை ஏற்று கூன்பாண்டியனின் சூலை நோய் தீர்க்கவந்த காலத்திலேயே நிருமாணிக்கப் பட்டது என்றும்; ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானது என்றும் தெரிகிறது. இது அவர்களது ஆதீன குருவரிசையினாலும் ஒரளவு அறியப்படுகிறது. இப்போதைய ஆதீனம் அல்லது மடாலயத் தலைவர் (ஆதீனங்களில் இவர்களை மகா சந்நிதானம் என்ற விளியில் அழைக்கிறார்கள்) 293 ஆவது ஆதீனகர்த்தராக உள்ளவர்.
ஆதீனங்கள் தோன்றிய வரலாறு -
திருக்கயிலாய பரம்பரை - துறைசை ஆதீனம்
இந்த ஆதீனங்களில் திருக்கயிலாய பரம்பரை என்ற வரையறைக்குள் வரும் ஆதீனங்கள் பின்வரும் எட்டு மட்டுமே என்று சொல்கிறார்கள்.
1. துறைசை ஆதீனம் (திருவாவடுதுறை )
2 .தருமை ஆதீனம் (தருமபுரம்)
3 .தொண்டை மண்டல ஆதீனம் (காஞ்சிபுரம்)
4 .திருவண்ணாமலை ஆதீனம் (குன்றக்குடி)
5 .வேளாக்குறிச்சி ஆதீனம் (திருப்புகலூர்)
6 .செங்கோல் ஆதீனம் (நெல்லை)
7 .துலாவூர் ஆதீனம் (நெல்லை )
8 .சொர்க்கபுர ஆதீனம் (பூந்தோட்டம் )
திருவாவடுதுறைப் பதி, திருமந்திரம் இயற்றிய மூலன் வாழ்ந்திருந்தது; திருவிசைப்பா பாடியவர்களில் முதல்வராகிய திருமாளிகைத் தேவர் வாழ்ந்திருந்தது; பற்பல நவகோடிச் சித்தர்கள் மரபு வாழ்ந்திருந்த இடமாதலால் நவகோடிச் சித்தபுரம் என்ற பெயர் பெற்றது; திருஞான சம்பந்தர் இறைவரிடம் மூல பண்டாரமாக ஆயிரம் பொன் பெற்ற இடம் எனப் பல்வேறு சிறப்புகளையுடையது. இத்தலத்தில் தமிழ்ச் சைவ சித்தாந்ததின் மூலமான சிவஞான போதம் என்ற நூலை சிவனிடமிருந்து நந்தி உபதேசம் பெருவதாகவும், அவரிடமிருந்து அந்த உபதேசத்தைப் பெற்ற அகச்சந்தானக் குரவர் வரிசையில் திருநந்தி தேவர் --> சனத்குமாரர் --> சத்தியஞான தரிசினி --> பரஞ்சோதி முனிவர் என்றும்; அவர்களிடமிருந்து உபதேசத்தைப் பெற்ற புறச்சந்தானக் குரவர் வரிசையில் மெய்கண்ட தேவர் --> அருள்நந்திசிவம் --> மறைஞான சம்பந்தர் --> உமாபதிசிவம் என்றும் ; உமாபதி சிவத்தின் சீடரான அருணமச்சிவாயர், அவரிடமிருந்து சித்தர் சிவப்பிராகசர், பின்னர் அவரிடமிருந்து நமச்சிவாய மூர்த்தி என்றவர் வரைக்கும் வரும் சிவஞானபோத சீடர் மரபின் வழி வருவதால் இந்த சந்தான குரவர்களின் நேரடிச் சீடர்கள் வழி வந்தவர்கள் தோற்றுவித்த மடங்கள் திருக்கயிலாய பரம்பரை மடங்கள் என்றறியப்படுகின்றன. அதாவது இவை திருவாவடுதுறை ஆதீன வழிமுறையில் மெய்கண்டார் வழி தோன்றிய சீட பரம்பரையினர்கள் மூலம் தோன்றியதால் இந்த வழக்கு வந்திருக்கிறது. மற்ற ஆதீனங்களுக்கு கயிலாய பரம்பரை என்ற முன்னொட்டு கிடையாது. இதுவே திருக்கயிலாய பரம்பரை என்ற அழைப்பிற்கான விளக்கமாகும்.
நமச்சிவாய மூர்த்திகள் தமது குருநாதர் சித்தர் சிவப்பிரகாசர் திருவாவடுதுறையில் வகுத்த அறையில் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவினார் என்பது ஆதீன வரலாறு. இது நிகழ்ந்தது சுமார் 14 ம் நூற்றாண்டில். ஏறத்தாழ இன்றைக்கு 800 ஆண்டுகளாக திருவாவடுதுறை ஆதீனம் சமய, தமிழ் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இப்போதைய குரு மகா சந்நிதானம் 23 ஆவதாக மடாதிபதி | குருமகா சந்நிதானமாக இருப்பவர்.
குமரகுருபரர் மற்றும் திருப்பனந்தாள் காசி மடம் தோன்றிய வரலாறு
இன்னொரு திருக்கயிலாய பரம்பரை மடமான திருப்பனந்தாள் காசி மடம் குமரகுருபரரால் காசியில் நிறுவப்பட்டது; இந்த வரலாறு மிகச் சுவையானது.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் மற்றும் கந்தர் கலிவெண்பா போன்ற அருமையான நூல்களை இயற்றிய குமரகுருபரரைப் பற்றி நாம் அறிவோம். குமரகுருபரர் 17’ம் நூற்றாண்டில் தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் ஊரில் சிவ வெள்ளாளர் குலத்தில் பிறந்தவர். சிறுவயதில் பேசும் திறனில்லாது இருந்த இவரை, இவரது பெற்றோர் திருச்செந்தூர் வேலவன் கோயிலுக்குச் சென்று தங்களது மகனின் நிலைசொல்லி வழிபட்டு மனமுருகி வேண்ட, சிறிது காலத்தில் சிறுவன் பேசத் தொடங்கியதோடு, நல்ல தமிழில் கவிபாடும் திறனும் இயல்பாகக் கொண்டிருந்தான். அவ்வாறு திருச்செந்தூரில் வேலவன் கோயிலில் வேண்டிய போது, இந்தச் சிறுவன் தனது குருவைக் காணும் போது தன்னால் சரியாகப் பேச இயலாத நிலையை மீண்டும் அடைவான்' என்ற இறைக்குரல் (அசரீரி) கேட்டுத் திரும்பினர். ஐந்து பிராயத்தில் பேசும் சக்தியை அடைந்த குமரகுருபரர், வரகவியாக கவிபாடும் திறமையையும் சிறுவனாக இருக்கும் போதே அடைந்திருக்கிறார். இறைக்குரலின் செய்தியின் படி மீண்டுப் பேச இயலா நிலை வரும் என்ற அறிந்த அதனால் குமரகுருபரருக்கு இயல்பாக தனது குருவைத் தேடிக் கண்டடைய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, வீட்டை விட்டு வெளியேறி மதுரை வருகிறார். அப்போது மன்னனாக இருந்த திருமலை நாயக்கரைச் சந்திக்கின்றார். மன்னர் திருமலை வேண்ட, மதுரையில் அன்னை மீனாட்சியின் மீது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் இயற்றியளித்தார்.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அழகு தமிழில் அருமையான பாடல்கள் அமைந்தது. இதில் அம்மையின் சிறு குழந்தைப் பருவத்தை விளக்கும் வருகைப் பருவப் பாடல்களை இயற்றிக் கொண்டிருந்த போது, கோயில் சன்னதியிலிருந்து வெளிவந்த ஒரு அழகிய பெண் குழந்தை, குமரகுருபரரிடம் வந்து அவரது கழுத்தில் அழகிய முத்துச்சரம் ஒன்றை அணிவித்து விட்டுச் சென்று மறைந்ததாக வரலாறு இருக்கிறது. மகிழ்ந்து திகைத்த மன்னர் திருமலை நாயக்கர் குமரகுருபரரை மிக்க மரியாதைகள் செய்து அனுப்பி வைக்க, அங்கிருந்து திருவாரூர் சென்று தியாகேசப் பெருமான் மீது திருவாரூர் நான்மணிமாலை என்ற நூலை இயற்றியருளிய குமரகுருபரர், அங்கிருந்து கிளம்பி, தருமபுரத்திற்குச் செல்கிறார்.
தருமபுரத்தில் தருமையாதீனமாக இருந்த மாசிலாமணி தேசிகரைச் சந்திக்கின்றார். மாசிலாமணி தேசிகர் குமரகுருபரரிடம், பெரியபுராணத்தில் அமைந்த, சிவனின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நிலையைச் சொல்லும் 'ஐந்து பேரறிவம் கண்களே கொல்லா' என்ற பாடலை விளக்கிச் சொல்லுமாறு பணிக்க, குமரகுருபரர் பேசவியலா நிலையில் வாயடைத்து நிற்கின்றார்.
இறைக்குரலின் நினைவூட்டல் வர, மாசிலா மணி தேசிகரே தனது குருவென்று தெளிந்த குமரகுருபரர், துறவித் தீக்கை பெற்று, மாசிலாமணி தேசிகரின் சீடராக தருமபுரம் ஆதினத்தில் தம்பிரானாகின்றார். ஆனால் மாசிலாமணி தேசிகர், குமரகுருபரரால் நடைபெற வேண்டிய நிகழ்வுகளை உணர்ந்து, குமரகுருபரரைக் காசிக்குச் செல்லப் பணிக்கிறார். அந்தச் சமயத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் ஆட்சியில் காசியில் அமைந்த சிவன் கோவில்கள் முகலாய மன்னரது அடக்குமுறைகளால் கெடுநிலையிலிருந்தது. மன்னனைச் சந்தித்து வேண்டிய வசதிகளைக் கோர நினைத்த, குமரகுருபரருக்கு பலமுறை நினைவூட்டியும் மன்னனுடன் நேரடியாகப் பேசுவதற்கு அனுமதி வராத நிலையிருந்தது. இதை நினைத்து தனது தொழுதெய்வமாகிய தேவியை வணங்கி குமரகுருபரர் 'சகலகலாவல்லி மாலை' என்னும் நூலை இயற்றினார். தேவியருளால் அவருக்கு மறுநாள் மன்னனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தனது சித்து ஆற்றலால், குமரகுருபரர், ஒரு சிங்கத்தை வசப்படுத்தி அதனைத் தனது வாகனமாக்கி அதன் மீது ஏறிக்கொண்டு மறுநாள் மன்னனது அரசவைக்குச் செல்கிறார்; இறையாற்றலால் வடமொழி அறியாதிருந்த குமரகுருபரருக்கு, மன்னனோடு பேசும் வடமொழி ஆற்றலும் அப்போது அந்த நேரத்தில் வாய்க்கிறது. குமரகுருபரர் சிங்கத்தி்ன் மீது அமர்ந்து வரும் காட்சியைக் கண்டு அதிர்ந்து போன மன்னன், குமரகுருபரரை மரியாதையுடன் வரவேற்று, அவருக்கு வேண்டியதைக் கேட்க, கருட பறவை வானில் வட்டமிடும் எல்லை வரை அவருக்கு காசியில் மடங்களை நிருமானிக்க இடமும் பொருட்களும் தேவை எனக் கோர, அவரது கேட்புகள் அனைத்தையும் நிறைவேற்றி முகமதிய மன்னன் அவரை மரியாதைகளுடன் அனுப்பி வைத்தான் என்பது வரலாறு.
குமரகுருபரர் எழுதிய நூல்கள் 19. அவற்றில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், கந்தர் கலிவெண்பா, சகலாகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், மதுரைக் கலம்பகம் போன்றவை மிகு புகழ் பெற்றவை. அருமையானவை. ( எனது அன்னையார் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் அமைந்த சிலபாடல்களைப் பாடிய யூட்யூப் விழியங்கள் அவரது தமிழ்ச்செல்வி சண்முக அலங்காரன் என்ற யூட்யூப் விழியப் பக்கத்தில் உள்ளன.)
காசி மடம் அவ்வாறு குமரகுருபரால் காசியிலேயே நிறுவப்படுகிறது. அவருக்குப் பின்னர் வந்த ஆறாவது ஆதீனத்தால் , காசி மடம் இடமாற்றம் செய்யப்பட்டு திருப்பனந்தாளுக்கு மாற்றப்படுகிறது. காசியிலிருந்து இடமாற்றம் பெற்று வந்ததால் அது திருப்பனந்தாள் காசி மடம் என்ற பெயர் பெறுகிறது. தற்போது 20 ஆவது ஆதீனத்தால் நிருவகிக்கப் படுகிறது.
பிற ஆதீன மடங்கள் தோன்றிய வரலாறு
குன்றக்குடி மடம், திருவண்ணாமலையில் புறச்சந்தான குரவரான அருள்நந்தி சிவத்தின் சீடர் வரிசையில் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட பறம்புமலை (பிரான்மலை)க்கு இடம்பெயர்ந்து, அங்கிருந்து குன்றக்குடிக்கு இடம் பெயர்ந்ததாக வரலாறு சொல்கிறது.
தரும்புர ஆதீனமும் திருவாவடுதுறை ஆதீனம் நிறுவப்பட்ட காலத்திலேயே புறச்சந்தானக் குரவர்கள் வரிசையில் தோன்றிய சீட பரம்பரையினரான குருஞான சம்பந்தரால் பொ.உ.பி 16 ம் நூற்றாண்டில் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்போதைய ஆதீனம் 27 ஆவது ஆதீனம் ஆவார்.
காஞ்சி ஞானப்பிரகாசர் மடம் 14’ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாக வரலாறு உள்ளது.
ஆதீனகர்த்தரை நியமிக்கும் முறை
ஆதீனம் என்னும் மடாதிபதிகளை நியமிக்கும் முறை பொதுவாக சீட பரம்பரை வழியாக வருவது. இது குடிவழிப் பதவி அல்ல. ஒவ்வொரு ஆதீனம் தலைவராக ஆன பொழுதில் தமது சீடர்களில் திறனும், தமிழும், மாண்பும் அமைந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து தனது இளையவராக, இளைய ஆதீனாமாக நியமித்து விடும் முறை உண்டு. இது ஆதீன நிருவாகத்தில் உள்ளவர்களோடு இயைந்து நிகழும் நிகழ்வு. அவ்வாறு தேர்ந்தெடுத்த பின் பட்டம் கட்டுதல் என்ற நிகழ்வின் மூலம் நியமனம் ஆதீன வட்டாரங்களில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கப் படும். எதிர்பாரா நிகழ்வுகளில் வேறு ஆதீனங்களில் இருந்தும் சீடர்களை அழைத்து இளைய ஆதீனமாக நியமிக்கும் வழமையும் உண்டு. பொதுவாக இளைய வயதிலேயே மடங்களில் இணைந்து சமயப் பணிக்கு வந்து விடுபவர்களைத் துறவுத் தீக்கை( துறவு நிலைக்கு மாற்றுதலுக்கான உபதேச நிகழ்வு) கொடுத்த பிறகு அவர்கள் தம்பிரான்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். தற்போதைய மதுரை ஆதீன கர்த்தராக உள்ளவர், திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக நெடுங்காலம் இருந்தவர். சென்ற மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் தமது அடுத்த சந்நிதானமாக, சர்ச்சைக்குரிய பீடதி மட நித்தியானந்தரை நியமித்ததும், பின்னர் சைவ மடங்களின் ஆதீனங்களின் அறிவுரையின் பேரில் அவரை நீக்கியதும் சென்ற ஆண்டுகளின் செய்திகள். அதன்பிறகு தனக்கு இளையவரை 2019’ல் திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான்களில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டு பட்டமளித்தார்.
ஆதீனங்களின் நோக்கம், இயக்கம், செயல்பாடு
தமிழ்ச்சைவம், சித்தாந்தம், சமயக் கல்விப் பணி
ஆதீனங்கள் முக்கியமான மூன்று நோக்கில் இயங்கின. சமயப்பணி, தமிழ்ப்பணி, மக்கட் பணி என்ற மூன்று நோக்கில் அவை இயங்கின. சமயப்பணியில் வழிபாடு; தமிழ்|சமயக் கல்வியில் தமிழிலக்கியங்கள், கவின் கலைகள் சார்ந்த நூல்கள், மெய்யியல் நூல்களில் பயிற்சி, அவற்றைக் கற்றுக் கொள்வது என்ற நோக்கிலான பணிகள்; மற்றும் மக்கட் பணியில் பசிப்பிணி தீர்த்தல் என்ற நோக்கில் இயங்கின.
தமிழ்ச் சமய | சித்தாந்தக் கல்வி
ஆண்டு முழுதும் தகுந்த மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்து தமிழ்க் கல்வி, சமயக் கல்வி அளித்தல் போன்ற நிகழ்வுகள் ஆதீனங்கள் வழியாகவே நடந்தன. மேலும் அந்தந்த ஆதீனங்களின் நிருவாகத்தில் அந்த ஆதீனம் இருந்த பகுதிகளின் கோயில்களும் இருந்தன, சமயப்பண்பு என்பது கோயில் வழிபாடு மற்றும் சமயக் கல்வி என்ற இரு பெரும் நோக்கங்கள் கொண்டது என்ற கருதுகோளுக்கு ஏற்ப, கோயில் நிருவாகம், சமயக்கல்வி நிருவாகம் என்ற இரண்டு பெரும் விதயங்களும் ஆதீனங்களின் பொறுப்பில் இருந்தன. இவற்றை கடந்த 800 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதீனங்கள் குறைவறச் செய்ததன் பலனாகவே தமிழ்ச்சைவப் பண்பாடு, தமிழ்ச்சைவம் சார்ந்த சித்தாந்தக் கல்வி அனைத்து வழிவழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
துறைசை ஆதீனம் என்றழைக்கப் படும் திருவாவடுதுறை ஆதீனம் போல மேலும் முனைப்புடன் செயல்படும் சில ஆதீனங்கள், சித்தாந்தக் கல்வியைப் பொதுசமூகத்திலும் பரப்ப சித்தாந்தக் கல்வி மையங்களை ஏற்படுத்தி, அங்கு தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு நேரடி வகுப்புகளின் மூலம் சித்தாந்தக் கல்வி அளித்து, தேர்வு வைத்து, தேறியவர்களுக்கு சித்தாந்தக் கல்வித் தேர்வுப் பட்டயங்கள் அளிப்பது என்ற வகையில் சிறப்புறச் செயல்பட்டதுண்டு. இவ்வகையில் எண்ணற்ற பொதுமக்களுக்கு சைவசித்தாந்தக் கருத்துகள் மற்றும் கல்வியைக் கொண்டு சென்ற மாபெரும் சாதனையையும் துறைசை ஆதீனம் செய்தது. ( எங்களது ஊரில், இத்தகைய ஒரு சித்தாந்தக் கல்வி மையத்தின் அமைப்பாளர் மற்றும் நடத்துனராக எனது தாயார் செயல்பட்டார்; துறைசை ஆதீனத்தின் ஆதீனப் புலவர்களின் நேரடிக் கற்பித்தலில் இந்த வகுப்புகள் நடந்தன. வாரந்தோறும் இந்த வகுப்புகளுக்காக, ஆதீனப் புலவர்கள் பல ஊர்களுக்கு வார இறுதிகளில் பயணித்துக் கற்றுக் கொடுத்தார்கள்).
இக்கல்வியைக் கொடுப்பதற்காக தகுதியான மாணவர்களுக்கு வரவேற்பளித்து, உணவளித்துப் பராமரிக்கும் கடமையையும் ஆதீனங்கள் ஏற்றுக் கொண்டன. இதை எளிதான ஒரு காட்டு மூலம் புரிந்து கொள்ளலாம்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழ்பெற்ற மாணவர்களில் ஒருவர் தமிழ்த்தாத்தா என்றழைக்கப் பெற்ற உவே.சாமியாதய்யர் அவர்கள். இளைய உவேசா அவர்களை அவரது தந்தையார் துறைசையாதீனப் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் கல்வி கற்க வேண்டி அணுகும் போது நடந்த பின்வரும் அருமையான உரையாடலைக் கவனியுங்கள்…இது தமிழ்த்தாத்தா உவேசா என்ற தலைப்பில் நூலெழுதிய கிவாஜ கூற்றில் அமைந்த விவரணை...(இவர் என்பது கி.வா.ஜ'வின் ஆசிரியரான உ.வே.சா).இவருடைய தந்தையார், “பையனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார். புலவர் பெருமான் சிறிது யோசித்தார். “இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறை யாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை. நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை” என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே இவர் தந்தையார், “இவன் அவ்வாறு இருக்கமாட்டான். தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தமிழ்க் கல்வி கற்க எவ்வளவு காலம் ஆனாலும் தாங்கள் சொல்லிக் கொடுக்கலாம். வேறு எந்தவிதமான கவலையும் இவனுக்கு இல்லை” என்று சொன்னார். “இவரது உணவுக்கு என்ன செய்வது?” என்று அந்தப் புலவர் பெருமான் கேட்டார். “அதற்குத் தாங்களே ஏற்பாடு செய்தால் நல்லது” என்று தந்தையார் சொன்னர்.“திருவாவடுதுறையிலும், பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய உணவு விஷயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேனே!” என்றார். அப்போது தந்தையார்,“ இங்கே இருக்கும்போது இவன் உணவுச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று நான் அனுப்பிவிடுகிறேன்” என்றார். “அப்படியானால் ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க ஆரம்பிக்கலாம்” என்று புலவர் பெருமான் சொன்னார்.
உணவளித்துக் கல்வியும் அளிக்கும் உயர்ந்த தொண்டுகளை ஆதீனங்கள் பல நூறு ஆண்டுகளாகச் செய்து வருகின்றன.
ஏடு காத்த மாண்பு
நூல்கள் அச்சில் வராத காலங்களில் ஏடு என்று சொல்லப் படுகின்ற பனையோலை ஏடுகளிலேயே அனைத்து நூல்களும் எழுதி வைத்துப் பாதுகாக்கப்பட்டன. நன்கு பராமரித்தால் அந்த ஏடுகளின் ஆயுட்காலம் சுமார் 150 ஆண்டுகள் வரை இருக்கும். பின்னர் அந்த ஏடுகளுக்குப் படி எடுத்தல் என்ற செயல் மூலம் (பார்த்து எழுதி இன்னொரு ஏடை உருவாக்குதல்) ஏடுகளை மீள உருவாக்குவார்கள். இது மிகவும் கவனம் செலுத்த வேண்டிய பணி. ஏடுகளைப் பாதுகாப்பதும், அவற்றைக் கற்று, விவாதித்து, பிறருக்குக் கற்றுக் கொடுத்து என்று ஒரு பெரிய பல்கலைக்கழகம் நடக்கும் முறையில் இந்த மடங்கள் காலங்காலமாக இவ்வித சமயக் கல்வியையும், நியதிகளையும் பின்வரும் தலைமுறைகளுக்குக் கடத்தும் செயல்களைச் செய்தன. இவ்விதமாக திருவாவடுதுறை ஆதினம் பாதுகாத்துப் பேணிய தமிழ் நூல் ஏடுகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.
மக்களுக்கான உணவளிக்கும் பணி
தவிர எந்த ஆதீனத்திலும் மதிய உணவு அன்னதானமாகவே நடைபெறும். உணவு நேரத்தில் ஆதீனங்களுக்குச் செல்லும் எவரும் ஆதீன மதிய உணவை உண்ணலாம். இது பசிப்பிணி தீர்க்கும் நோக்கில் ஆதீனங்களில் நடைபெறும் உன்னதப் பணியாகும்.
துறைசார் நிபுணத்துவப் பணிகள்
1959’ம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக நவமணிகள் என்ற ஒரு நூல் வெளியிடப்படுகிறது. இது நவரத்தினங்கள் என்று சொல்லப்படுகின்ற நவமணிகளைப் பற்றிய ஒரு ஆய்வு நூல். ஆய்வு நூல் மட்டுமல்லாது, அவற்றைப் பரிசீலிக்கும் முறைகள், தரமறியும் வழிகள், நவமணிகளைப் பற்றிய விவரமான செய்திகள் அடங்கிய செய்திகளைத் தாங்கி வெளிவருகின்ற இந்த நூல் அந்தத் துறை சார்ந்த ஒரு அறிஞரால் ஆக்கப் பெற்றிருக்கிறது. அந்த நூலின் அணிந்துரைகளைக் கண்ணுற்றால் அநேகமாகத் தமிழில் முதன்முதலில் இவ்விதமாக நவமணிகளைப் பற்றிய; பொதுமக்களும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்த நூல் இதுவே என்று தெரிகிறது. திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக வந்த இதனை அந்நாளில் தம் கரங்களால் வெளியிட்டவர் சென்னையின் புகழ்பெற்ற பிரமுகரான சர்.சி.பி. இராமசாமி ஐயர். தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நூலின் பயன் நோக்கு கருதி ஆதினம் அவர்கள் இந்த நூலை இலவச வெளியீடாகவே வெளியிட்ட செய்தியும் இந்த வெளியீட்டு நிகழ்வு பற்றிய விளக்கத்தில், நூலில் பதிவு செய்யப் படுகிறது. இவ்வாறு பல துறைசார் அறிவு நூல்கள் திருவாவடுதுறை ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு சமயம் சார்ந்த அமைப்பு இவற்றிலெல்லாம் ஈடுபட்டிருக்கும் என்று நம்ப இயலாத அறிவியக்கத் துறைகள் இவை.
சித்தாந்த ஆய்வு மற்றும் மாநாடுகள்
திருமூலர் வாழ்ந்திருந்து திருமந்திரத்தை இயற்றித் தந்த புகழுடைய துறைசையில் திருமந்திர மாநாடுகள் பல சிறப்பாக நடைபெற்றுள்ளன. இத்தகைய ஒரு மாநாடு ஆதீனத்து 21 ஆவது மகா சந்நிதானம் சுப்பிரமணிய தேசிகர் அவர்களது தலைமைத்துவக் காலத்தில் நடைபெற்றிருக்கிறது. நான்கு நாள் நடைபெற்ற இந்த மாநாடு 31.01.1954’ல் தொடங்கி 03.02.1954’ல் முடிவடைகிறது.
இந்த மாநாடு அமர்வுகளையும் பேச்சாளர்களையும் சிறிது கவனிப்போம்.
தலைமை - ஆதீனப்புலவர் ஆறுமுக நாவலர்
முதல் நாள் நிகழ்வு
முதல் தந்திரம் - காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி ஆசிரியர் க.வச்சிரவேல் முதலியார்
இரண்டாம் தந்திரம் - அண்ணாமலைப் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் ஜி.சுப்பிரமணிய பிள்ளை
ஐந்தாம் தந்திரம் - அண்ணாமலைப் பல்கலை விரிவுரையாளர் இ.எஸ்.வரதராசையர்
இரண்டாம் நாள் நிகழ்வு
மூன்றாம் தந்திரம் - ஆதீனப் பல்கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ச.தண்டபாணி தேசிகர்
ஆறாம் தந்திரம் - தருமைப் பல்கலை தமிழ்க்கல்லூரிப் பேராசிரியர் முத்து சு.மாணிக்கவாசக முதலியார்
எட்டாம் தந்திரம் - காஞ்சி பச்சையப்பன் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் திரு. அருணை வடிவேல் முதலியார்
மூன்றாம் நாள் அமர்வு
ஒன்பதாம் தந்திரம் - மாம்பாக்கம் திருமந்திரப் பேராசிரியர் ஆ. இளவழகனார்
ஏழாம் தந்திரம் - கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன்
நாலாம் தந்திரம் - தருமை ஆதீனம் தமிழ்த்துறைத் தலைவர் வித்வான் ச. தண்டபாணி தேசிகர்
தமிழ்மொழி இலக்கியம், திருமந்திரப் பயிற்சி உள்ளவர்களுக்கு இந்த அமர்வுகளை நடத்திய பெரியார்களின் பெயரை அறிந்தாலே அவர்களது அறிவுத் திறமும் சொல்வன்மை, மொழிவன்மையும் எளிதில் விளங்கும். இத்தகைய அறிவு, ஆய்வு சார் நிகழ்வுகளை ஓயாது நிகழ்த்திக் கொண்டேயிருந்திருக்கிறது திருவாவடுதுறை ஆதீனம்.
இவ்வாறு சென்ற நூறாண்டுகளில் (ஏனெனில் பொதுமக்களின் நினைவு எப்போதும் மந்தம், சமீப நிகழ்வுகளையே நாம் நினைவில் வைத்திருப்போம்!) தமிழகம் கண்ட மாபெரும் மொழியியல், மெய்யியல் நிபுணர்கள், பேராசிரியர்களைக் கணக்கெடுத்தால் அவர்களுக்குத் திருவாவடுதுறை ஆதீனத்தோடு ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, அவரது செயற்கரிய மாணவர் உவேசா, அவரிடம் பாடம் கேட்ட கிவாஜ, சென்னிக் குளம் அருணாசலக் கவிராயர் என்று பட்டியல் போடத் தொடங்கினால் இது பெரிதாக நீளும்.
குருபூசை கால நிகழ்வுகள்
பெரும்பாலும் எல்லா ஆதீனங்களிலும் வருடாந்திர குருபூசை விழா என்ற ஒன்றையும் நடத்துவார்கள். இது அந்தந்த ஆதீனங்களின் குருபரம்பரையினரை சிந்தித்துப் போற்றும் ஒரு விழா. இது வெகு விமரிசையாக நடைபெறும். பெரும்பாலும் மூன்று நாள் முதல் சில இடங்களில் பத்து நாட்கள் வரை கூட நடக்கும் குருபூசை விழா சமயத்தில், நாள்தோறும் பல அமர்வுகள் அமைந்து பற்பல தலைப்புகளில் தமிழ்ச்சைவம், சித்தாந்தம், மெய்யியல், கலைக் கூறுகள் போன்ற பலவற்றில் தகுந்தவர் மூலம் சொற்பொழிவுகளும், நூல்கள் வெளியிடுவதும், கற்றோரைச் சிறந்தோர்களைக் கௌரவித்துப் பாராட்டி ஊக்கப் படுத்தி சிறப்புச் செய்வதும் நடக்கும்.
இவ்வாறு நிகழும் ஒரு குருபூசை நிகழ்வை, திருவாவடுதுறையின் புகழ்பெற்ற மாணவர் உவேசா அவர்கள் தனது என்சரித்திரம் நூலில் விவரிக்கும் அத்தியாயத்தைப் பார்க்கலாம்…
திருவாவடுதுறைக் காட்சிகள்
தை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் குருபூசை காலையில் நான் என் சிறிய தாயார் குமாரர் கோலாலையரென்பவருடன் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன். நான் முன்பு பார்த்த திருவாவடுதுறையாக அவ்வூர் அப்போது காணப்படவில்லை. குருபூஜை குருபூஜையென்று அயலிலுள்ள கிராமத்தினர் மிகவும் சிறப்பாகப் பேசிக் கொள்வதைக் கேட்ட எனக்கு அத்திருநாள் ஒரு பெரிய உத்ஸவமாக நடைபெறுமென்ற கருத்து மாத்திரம் இருந்தது. ஆனால் நான் கண்ட காட்சிகள் என் கருத்துக்கு எவ்வளவோ அதிகமாக விளங்கின.எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ்நாட்டில் உள்ள ஜனங்களில் ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வர்ணத்திணரும், பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும் வந்திருந்தனர். வித்துவான்களில் எத்தனை வகையினர்! சங்கீத வித்வான்களில் நூற்றுக்கணக்கானவர்களை கண்டேன். அவர்களில் கதை பண்ணுபவர்களும், வாய்ப்பாட்டுப் பாடுபவர்களும், வீணை, புல்லாங்குழல், கோட்டு வாத்தியம் முதலிய வாத்தியங்களில் கை தேர்ந்தவர்களும் இருந்தனர். சம்ஸ்கிருத வித்வான்களில் தனித்தனியே ஒவ்வொரு சாஸ்திரத்தையும் கரை கண்டவர்கள் அங்கங்கே தங்கியிருந்தனர். வேதாத்தியயனம் செய்தவர்கள் கோஷ்டி கோஷ்டியாக வேத பாராயணம் செய்தபடி ஆலயத்திலும் பிற இடங்களிலும் இருந்தனர். இன்னிசை பண்ணுடன் ஓதும் இசைவாணர்கள் விபூதி ருத்ராக்ஷ தாரணத்தோடு முகத்திலே ஒரு வகையான தேஜஸ் விளங்க மனத்தைக் கவரும் தேவாரம் முதலியவற்றை ஓதிக் கொண்டிருந்தனர்பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய சிஷ்யர்கள் ஆகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர். மற்ற சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைக் தரிசிக்க இயலாவிட்டாலும் வருஷத்துக்கு ஒருமுறை குருபூஜை தினத்தன்று தரிசித்து பிரசாதம் பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தை பிணித்து இழுத்தன. தமிழ்நாட்டின் தென்கோடியில் இருந்தவர்களுக்கும் இக்குழு பூஜையில் வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தன. குடும்ப சகிதம் ஆகவே பலர் வந்திருந்தனர்அன்னதானம்குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும். யார் வரினும் அளிக்கப்படும் என்பதற்கு அறிகுறியாக மடத்தில் உற்சவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பலவகையான பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாக காய்ந்து கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.தெருத்தெருவாக வீடுவீடாக குருபூஜையின் விமரிசை விளங்கியது. அவ்வூரில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் வீட்டில் விசேஷம் நடப்பது போன்று, மாவிலை தோரணங்களாலும் வீடுகளையும் கடைகளையும் அலங்கரித்திருந்தனர். விருந்தினர்களை வரவேற்று உண்பித்தனர். குருபூஜை மடத்தில் மாத்திரம் நிகழ்வதன்று; திருவாவடுதுறைக்கே சொந்தமான திருநாள். ஒருவகையில் தமிழ்நாட்டுக்கே உரியதென்றும் சொல்லலாம். தமிழ்நாட்டில் உள்ள பலரும் அத்திருநாளில் அங்கே ஒன்றுகூடி ஆனந்தம் உற்றார்கள்......சாப்பாடுநான் திருவாவதுதுறை வீதியில் நுழைந்தது முதல் அங்குள்ள ஆரவாரமும் நான் கண்டகாட்சிகளும் என்னைப் பிரமிக்கச் செய்தன, ஒவ்வொரிடத்திலும் உள்ளவற்றை நின்று நின்று பார்த்தேன். அக்கூட்டத்தில் பிள்ளையவர்கள் இருக்குமிடத்தை நான் எங்கே கண்டு பிடிப்பது? என்னுடன் வந்தவரையும் அழைத்துக் கொண்டு தெருத்தெருவாக அலைந்தேன். எங்கள் கண்களும் அலைந்தன. பன்னிரண்டு மணி வரையில் சுற்றிச சுற்றிக் கால் வலி கண்டது; வயிற்றிலும் பசி கிண்டியது. சாப்பிட்ட பிறகு பார்க்கலாமென்று எண்ணிப் போஜனசாலைக்குச் சென்றோம்.அடேயாப்பா ! எத்தனை கூட்டம் ! என்ன இரைச்சல் ! என்ன சாப்பாடு ! எங்களுக்கு அக்கூட்டத்தில் இடம் கிடைக்குமோ என்ற சந்தேகம் வந்து விட்டது. காலையில் ஒன்பது மணி முதல் அன்னதானம் நடந்து வருகிறது. நாங்கள் போனபோதும் கூட்டத்திற்குக் குறைவில்லை. மெல்ல இடம் பிடித்துச் சென்று சாப்பிடுவதற்குள் மிகவும் திண்டாடிப் போனோம். அவ்வுணவின் மிகுதியால் சாப்பிட்ட பிறகும் சிறிது சிரமப்பட்டோம்.மறுபடி ஆசிரியரைத் தேடும் வேலையைத் தொடங்கினோம். சாப்பிட்ட சிரமத்தால் காலையில் தேடியபோது இருந்த வேகம் எங்களுக்கு அப்போது இல்லை. மெல்ல ஒவ்வொரு தெருவாகச் சுற்றினோம். இடையிடையே காண்போரை, ‘பிள்ளையவர்கள் எங்கே தங்கியிருக்கின்றார்கள்?’ என்று கேட்போம். ‘அவர்கள் எங்கும் இருப்பார்கள்;பண்டார ஸந்நிதிகளோடு சல்லாபம் செய்து கொண்டிருப்பார்கள்; வித்துவான்கள் கூட்டத்தில் இருப்பார்கள்; இல்லாவிட்டால் மாணவர்களுக்குப் பாடம் சொல்லி வருவார்கள்' என்பதைக் கேட்கும் போது எனக்கு ஒரு விதமான வேதனை உண்டாகும். ‘அக்கூட்டத்தில் சேராமல் இப்படி நாம் தனியே திரிந்து கொண்டிருக்கிறோமே !’ என்ற நினைவு எழும். உடனே காலடியை வேகமாக எடுத்து வைப்பேன்......நான் பிள்ளையவர்களுடன் இருந்து அங்கே நிகழும் சம்பாஷனைகளைக் கவனித்து வந்தேன். பல கனவான்கள் வந்து வந்து பேசி விட்டுச் சென்றார்கள். ஐந்து மணியளவுக்கு ஆசிரியர் மடத்துக்குச் சென்றார். நானும் அவர் பின்னே சென்றேன். எதிரே வந்தவர்கள் யாவரும் அவரைக கண்டவுடன் ஒதுங்கி நின்று முகமலர்ச்சியால் தமது அன்பை வெளிப்படுத்தினர். உட்கார்ந்திருந்த தம்பிரான்கள் அவரைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்றார்கள். அங்கே குமாரசாமித் தம்பிரானும், பரமசிவத் தம்பிரானென்பவரும் இருந்தனர் அவர்கள் பிள்ளையவர்களோடு பேசிக் கொண்டே மடத்தின் கிழக்கே இருந்த குளத்தின் கரையிலுள்ள (இப்போது குளம் தூர்ந்து விட்டது) கீழைச் சவுகண்டிக்குச் சென்று அமர்ந்தனர். எல்லோரும் தமிழ் சம்பந்தமாகவும், மடத்தின் சம்பந்தமாகவும் பல விஷயங்களைப் பேசியிருந்தனர்.காசிக் கலம்பகம்‘இன்று நல்ல நாள்; ஐயாவிடம் நல்ல தமிழ் நூல் ஒன்றைப் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது' என்று குமாரசாமித் தம்பிரான் சொன்னார்.‘கேட்கலாமே' என்று சொல்லவே, அவரும் பரமசிவத் தம்பிரானும் காசிக் கலம்பகம் கேட்க வேண்டுமென்றார்கள்.‘காசிச் சாமிக்கு முன் காசிக் கலம்பகம் நடப்பது பொருத்தமே' என்று ஆசிரியர் கூறினார்.எனக்கு முதலில் விஷயம் விளங்கா விட்டாலும் பிறகு விசாரித்துத் தெரிந்து கொண்டேன். பரமசிவத் தம்பிரான் சில வருஷங்கள் காசியில் இருந்தவர். அத்தகையவர்களைக் காசிச்சாமியென்று அழைப்பது மடத்தின் சம்பிரதாயம்.காசிக் கலம்பகத்தை நானே படித்தேன்; அந்தப் பெரிய குருபூஜை விழாவில் ஆங்காங்கே வாத்தியக் கோஷ்டிகளும் கொண்டாட்டங்களும் ஸந்தோஷ ஆரவாரங்களும் நிரம்பியிருக்க, நாங்கள் ஒரு குளத்தங்கரையில் சிறிய சவுகண்டியில் காசி மாநகரச் சிறப்பையும், கங்கையின் பெருமையையும் ஸ்ரீ விசுவநாதரது கருணா விசேஷத்தையும் காசிக் கலம்பகத்தின் மூலம் அனுபவித்து வந்தோம். ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் வாக்காகிய அக்கலம்பகம் சொற்சுவை பொருட்சுவை நிரம்பியது. சில காலமாகப் பிள்ளையவர்களையும் தமிழ்ப் பாடத்தையும் விட்டுப் பிரிந்திருந்த எனக்கு அன்று பிள்ளையவர்களைக் கண்ட லாபத்தோடு பாடம் கேட்கும் லாபமும் சேர்ந்து கிடைத்தது.இரவு எட்டு மணி வரையில் அப்பிரபந்தத்தைக் கேட்டோம். ஐம்பது பாடல்கள் நடைபெற்றன. பிறகு அவரவர்கள் விடைபெற்றுப் சென்றார்கள். பிள்ளையவர்கள் தெற்கு வீதியில் தங்கியிருந்த விடுதியாகிய சின்னோதுவார் வீட்டுக்குச் சென்றார்...…
செய்யுள்தானம்
மாலை முன்னிரவு மகாலிங்கம் பிள்ளை பேசி விடைபெற்றுச் சென்ற பிறகு ஆசிரியர் அவ்வீட்டின் இடைகழித் திண்ணையில் சயனித்துக் கொண்டார். ஒரு நிமிஷங்கூட இராது; யாரோ ஒரு முதியவர் வந்தார். அவர் பெயர் பசுபதி பண்டாரமென்து. அவர் பழைய கதையையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். பிள்ளையவர்களை இளமையில் அவர் பரீஷை செய்தாராம். அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமாம். இன்னும் என்ன என்னவோ சுற்றி வளைத்து் பேசினார். கடைசியில் தமக்கு ஒரு செய்யுள் இயற்றித் தந்தால், சுப்பிரமணிய தேசிகரிடம் தாமே செய்ததாகச் சொல்லிச் சன்மானம் பெற அனுகூலமாகும் என்று சொன்னார். அக்கவிஞர் பிரான் உடனே சர்வ சாதாரணமாக ஒரு பாடலை எழுதச் செய்து அவரிடம் அளித்தார். அவர் அதை வாங்கிக் கொண்டு போனார். ஆசிரியர் மறுமடியும் கீழே படுத்தார். அடுத்த நிமிஷமே வேறொருவர் வந்தனர். அவரும் ஒரு செய்யுள் செய்து தரும்படி யாசித்தார்.இப்படியே ஒருவர் பின் ஒருவராக அன்று இரவு முழுவதும் பலர் பிள்ளையவர்ளிடம் பாடல் வாங்கிக் கொண்டு போய்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் ஸம்மானம் பெற்றுச் சென்றார்கள். இந்த ஆச்சரியமான நிகழ்ச்சிகளை நான் சிலநாழிகை பார்த்தேன். பிறகு கண்ணயர்ந்தேன். விடியற் காலையில் எழுந்த போதுதான் ஆசிரியர் இரவு முழுவதும் தூங்கவேயில்லை என்று தெரிந்தது.புலவரும் புரவலரும்பொழுது விடிந்தவுடன் அவர் அனுஷ்டானம் செய்து கொண்டு சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். நானும் உடன் போனேன். அவர் இரவு முழுவதும் கையோயாமல் கொடுத்தும் சலிப்பில்லாமல் காலையில் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு மறுபடியும் தம் திருக்கை வழக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பிள்ளையவர்களைக் கண்டவுடனே அவருக்கு முகமலர்ச்சியும் அதன்மேல் ஒரு சிரிப்பும் உண்டாயின. பிள்ளையவர்கள் அவரை வந்தனம் செய்து விட்டு திருநீரிடப்பெற்று ஓரிடத்தில் அமர்ந்தார்.‘இராத்திரிப் பலபேர் தங்களுக்குச் சிரமம் கொடுத்து விட்டார்கள் போல இருக்கிறதே!’ என்று தேசிகர் கேட்டார். ஆசிரியர் புன்னகை பூத்தார்.‘ஒவ்வொருவரும் பாடல் சொல்லும் போது நமக்குப் பரமானந்தமாகி விட்டது. என்ன பாட்டு! என்ன வாக்கு ! எங்கிருந்துதான் விளைகிறதோ !’ என்றார் தேசிகர்.‘எல்லாம் ஸந்நிதானத்தின் திருவருட் பலந்தான்' என்று பணிவோடு கூறினார் ஆசிரியர்.‘நாச்சலிக்காமல் பாடும் உங்கள் பெருமையை நேற்றிரவு நன்றாகத் தெரிந்து கொண்டோம்'‘கை சலிக்காமல் கொடுக்கும் ஸந்நிதானத்தின் கொடையினால் தான் எல்லாம் பிரகாசப் படுகின்றன'புலவரும் புரவலரும் பேசிக் கொள்ளும் வார்த்தைகளுக்கு அளவுண்டோ ?
இந்த திருவாவடுதுறைக் காட்சிகளை அத்தியாயத்தின் பகுதிகளைப் உவேசா அவர்களின் வாக்கில் பார்க்கும் போது திருவாவடுதுறை ஆதீனத்தின் குருபூசைக் கால நிகழ்வுகளின் குறுக்கு நெடுக்கான விவரணை நமக்கு ஓரளவு தெரியவரும். (1940-42 வாக்கில் எழுதப்பட்டு, 1950ல் நூலாக வெளிவந்தது என் சரித்திரம்! உவேசா 1942 ஏப்ரலில் மறைகிறார்- தகவலுக்கு).
இவ்வகையான மொழி, இலக்கியம், மெய்யியல்,சமய தத்துவங்கள் சார்ந்த ஆய்வுகள், பாடங்கள், கற்பித்தல் விழாக்காலங்களில் மட்டுமல்லாது எப்போதும் நிகழ்பெற்று வந்தவை.தமிழும், சமயமும், மெய்யியலும், கலைகளும், உணவிடுதலும் ஆகிய அனைத்து முகமைகளிலும் இவ்வாறு சிவ ஆதீனங்கள் பணி செய்து வந்தன.
சமூக நோக்கிலான நேரடி ஆதீனப் பணிகள்
பல ஆதீனங்கள் மொழி, சமய வழியிலான சமூகத் தொண்டைப் புரிந்து வந்த காலத்தில், நேரடியாகச் சமூகத் தொண்டில் இறங்கிய ஆதீனங்களும் உண்டு. இவ்விதத்தில் பல ஆதீனங்களின் எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம் என்றாலும் சமீப கால நினைவுகளைக் கருதி குன்றக்குடி ஆதீனம் மற்றும் தருமபுர ஆதீனம் போன்றவை செய்திருக்கும், செய்து வரும் அரும்பணிகள் அருமையானவை.
குன்றக்குடி அடிகளார் என்று அன்புடன் அழைக்கப்பெற்ற, தற்போதுள்ள ஆதீனமான குன்றக்குடி பொன்னம்பல தேசிகரின் குருவும், தெய்வசிகாமணி அருணாசல தேசிகர் என்ற பட்டப்பெயருடன் பட்டமேற்ற தவத்திரு குன்றக்குடி அடிகளார், 1960 களிலிருந்து 1990 கள் வரை இயற்றிய சமூக நோக்கிலான அரும்பணிகள் தேசிய அளவில் அவரது பெயரை உயர்த்தின. அடிகளார் 1952'ல் பட்டத்திற்கு வந்தபோது இருந்த குன்றக்குடி வேறு; 1995'ல் அடிகளார் இகவாழ்வை நீங்கிய போது இருந்த குன்றக் குடி வேறு.
குன்றக்குடி கிராமம் ஒரு மாதிரி கிராமம்' என்று சொல்லத்தக்க அளவில் அந்த ஊரின் உள்ளும் புறமுமான தோற்றம் இயக்கத்தையே மாற்றினார் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி அடிகளார் தொடாத துறை இல்லை. நாடு என்ற கருதுகோளில் அவர் பஞ்சாயத்து ராஜ் பற்றிப் பேசினார்; தொழிலாளர் நலம் பற்றிப் பேசினார்; சோஷலிசம், சர்வோதயம், கிராமப்புற வளர்ச்சி, சம உடைமைத் தத்துவம் என்ற அனைத்தும் பற்றிப் பேசியவர்; பேசியதோடு மட்டுமல்லாது விசையுடன் இத்துறைகளில் இயங்கியவரும் கூட. இவற்றையெல்லாம் பற்றிப் பேசிய மடாதிபதி குன்றக்குடி அடிகளார் ஒருவராகவே இருக்கவும் கூடும். சட்ட மேலவை உறுப்பினராகவும், பஞ்சாயத்துத் தலைவராகவும் தேர்வு பெற்றுப் பணி புரிந்தார் அடிகளார். கூட்டுறவு சங்க இயக்கங்கள் மற்றும் பஞ்சாயத்துகள் இயங்கும் முறைகள் பற்றிய அடிப்படையான தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தார் அவர். கிராமத்தின் எல்லா முயற்சிகளையும், வேளாண்மை முதல் வியாபாரம் வரை கூட்டுறவின் மூலம் செய்ய முயன்று வென்றும் காட்டினார். கூட்டுறவு முறையில் பல சிறுதொழில் நிறுவனங்களை குன்றக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் நிறுவத் துணை நின்றார் அவர். இதனால் அந்தப் பகுதியே முன்னேற்றம் பெற்றது. குன்றக்குடிக்கு அருகிலுள்ள காரைக்குடியில் மத்திய அரசின் மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று இருந்தது. அந்த நிறுவனமும், அடிகளாரும் ஒருவரையொருவர் நன்கு பயன்படுத்தி கொண்டனர். அதன் உதவியைக் கொண்டு சுதேசி அறிவியல் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தையே தோற்றுவித்தார் அடிகளார்.
1990 களில் இந்திய அரசின் திட்டக்குழு, குன்றக்குடி பேட்டர்ன் என்ற பெயரில் அவரது செயல்பாடை வியந்து பாராட்டியதோடு, அது செயல்படும் முறையைக் கவனிக்க மத்திய திட்டக்குழுப் பார்வையாளர்களை குன்றக்குடிக்கு அனுப்பியது இந்திய ஒன்றியத்தின் அரசு. அகில இந்தியப் புகழை அடைந்ததோடு, பல்கலைக் கழகங்களில் அவரது இயக்க முறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கற்பிக்கப்படும் நிலைக்கு உயர்வானதாக விளங்கியது.
இன்றைக்குப் பல சர்ச்சைகளைக் கிளப்பிய வரும் ஒரு நிகழ்வை எந்த உந்துதலும் இன்றித் தானாகவே நீக்கியமைத்த பெருந்தகைக் குணம் கொண்டவராக விளங்கினார் குன்றக்குடி ஆதீனமான அடிகளார் அவர்கள். 1952’ல் பட்டத்துக்கு வந்த குன்றக்குடி அடிகளார், 1953’லேயே பல்லக்கில் வரும் பட்டணப் பிரவேசம் நிகழ்வை நீக்கிவிட்ட சமூக விஞ்ஞானியானார்.
இதுதவிர
• திருக்குறள் பேரவை கண்டது ,
• தமிழில் வழிபாடு, அருச்சனைகளுக்கான முனைந்த செயல்பாடுகள்,
• கீழ்வெண்மணி, மண்டைக்காடு, புளியங்குடி போன்ற இடங்களில் இன, சாதிரீதியான இடர்கள் கலவரங்களின் போது முன்னணியில் சென்று அமைதிப் பணியை மேற்கொண்டது,
• 'கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயிலும்' என்ற கருதுகோளை நாடு அளவில் வைத்தது
போன்ற அருஞ்செயல்களைச் செய்தவர் குன்றக்குடி அடிகளார்.
இது போன்ற பல ஆதீனங்களும் காலத்திற்கேற்றவாறு பள்ளிகள் அமைத்து அனைத்து சமுதாயத்தினரும் எளிதாகக் கல்வி பயிலச் செய்தல், பள்ளிக் குழந்தைகளுக்கு, எளியவர்களுக்கு உணவளித்துக் காத்தல், சமூக அமைதி மற்றும் ஒழுங்குக்கான சமய ஒருங்கிணைவுக் கல்வி, சமூக, சமய ஏற்றத் தாழ்வுகளைச் சீர்செய்யும் முயற்சிகள் என்ற பல நோக்குகளிலும் பணிகளை முன்னின்று செய்து வருகின்றன.
நிறைவுக் கருது கோள் :
சுமார் 700 ஆண்டுகளில் ஆதீனங்கள் இயங்கி வந்த முறைகள் பற்றி ஒரளவு அறிந்து கொண்ட நாம், கடந்த 20 ஆண்டுகளில், சமூகம் தனது எண்ணம் செயல்பாட்டு முறைகளில் 200 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் மற்றும் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதை ஏற்கவும் வேண்டும். இந்த மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் அதே நேரத்தில் எந்த நோக்கங்களுக்காக ஆதீனங்கள் ஏற்படுத்தப் பட்டனவோ அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இனி ஆதீனங்கள் இருக்கும். அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகாது அதைச் சாதித்திருக்கும் அதே நேரத்தில், முன்னெப்போது இல்லாத அளவில் இந்தக் கல்வியை மென்மேலும் விசையுடன் தற்கால இளைய சமுதாயத்துக்கும் கொண்டு சென்றாக வேண்டும்; ஆனால் தற்காலத்துக்குரிய மாற்றங்கள், வடிவங்கள் மூலம். இவ்விதமான 'காலத்திற்கேற்ற மாற்றங்களைக்' கருதிய ஆதீனங்கள், ஆதின கர்த்தர்கள் தமது ஆதீனத்திற்கும் பொது சமூகத்திற்கும் மிகுபயன்களை அளித்தனர். மேலே கண்ட குன்றக்குடி அடிகளாரின் செயல்பாடு அதில் ஒன்று.மாறிவரும் சமூக ஊடக மற்றும் இணையச் சூழலில் புத்தாக்க முறைகள் மற்றும் நுட்பங்கள் வழியாகவும் இளையர்களையும் பொதுமக்களையும் மேலும் அணுக வேண்டிய சூழலும் ஆதீனங்களுக்கு உண்டு. இவற்றைக் கருதி, மக்களோடு நெருங்கி, இயைந்து பணி செய்ய முன்வரும் ஆதீனங்கள் மேன்மேலும் சமூகத்திற்குச் சிறப்புச் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை விதைகளை விதைத்து விடை பெறுவோம்.
நன்றி.
சான்றுகள், உசாத்துணைகள்
1. சைவ ஆதீனங்கள் - ஆசிரியர் ஊரன் அடிகள் (1933)
2. திருவாவடுதுறை திருமந்திர மாநாடு மலர் (1954)
3. நவமணிகள் - திருவாவடுதுறை வெளியீடு (1948)
4. குன்றக்குடி அடிகளார் எழுத்துக்கள் - வாழ்நாள் தொகுப்பு (16 தொகுதிகள்)
5. கௌமாரம் - இணையத் தளம்
6. தமிழ் விக்கிபீடியா - இணையத் தளம்
7.என் சரித்திரம் - மகோமகாபாத்தியாய உ.வே.சாமிநாதய்யர்
No comments:
Post a Comment