குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Tuesday, November 25, 2008

83.மறந்த பெயரும் மறக்காத சாதியும்

அண்மையில் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் பற்றிய புன்னகை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி உண்டு.

அவர் செய்தி வாசிப்பில் முத்திரை பதித்தவர் என்பதும் இந்திய சுதந்திரச் செய்தியைத் தமிழில் சொன்னது அவருடைய குரல் என்பதும் பலருக்குத் தெரிந்த செய்தியே.

ஆனால் அவர் முதலில் செய்தி வாசிக்க ஆரம்பித்தது ஒரு எதேச்சையான நிகழ்ச்சியால் என்பதும் அதில் நடந்த குளறுபடியுகளும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன நடந்தது என்பதை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம்:


ஆகாசவாணியின் தமிழ்ச் செய்தி அறை.
நேரம் - காலை ஏழு மணிக்கு மேல் எத்தனை
நிமிடமோ!
செய்தி அறிவிப்பு நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. தலைப்புச்
செய்திகள் மொழி பெயர்ப்பாகிக்கொண்டு இருந்தன. மற்ற செய்திகளையெல்லாம் உரிய
வரிசையில் அடுக்கியும் வைத்து விட்டோம். ஆனால், செய்தி அறிவிக்க வேண்டியவரைத்தான்
காணவில்லை. என்ன கோளாறோ? ஒருவேளை தூங்கிப்போய்விட்டாரோ, என்னவோ!
கடைசி நிமிடம்
வரை காத்திருந்து பார்ப்பது என்று ஒன்று உண்டே... அந்த அற்புத சித்தாந்தத்தின்படி,
நண்பருக்காகக் காத்திருந்தோம். ஆனால், கடைசி நிமிடம் வரை என்றால், எந்தக் கடைசி
நிமிடம் வரை? ஏழே காலுக்கு, 'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...' என்று
ஆரம்பித்தாகவேண்டுமே! மணி ஏழு பத்தாகிவிட்டது. 'இனிமேல் காத்திருப்பதில் பலன்
இல்லை' என்ற கட்டாய முடிவுக்கு நாங்கள் அதிக தாமதமின்றி வந்துவிட்டோம் என்பது
மகிழ்ச்சியுடன் அறிவிக்கவேண்டிய செய்தி!
நாங்கள் என்றால், யார் யார்? நான்,
என்னைப் போலவே மொழி பெயர்க்கவும், ஒலிபரப்பவும் லைசென்ஸ் பெற்ற இன்னொரு நண்பர்,
மொழி பெயர்க்க மட்டுமே ஒப்பந்தமாகியிருந்த 'குரலற்ற' நண்பர் ஒருவர் - ஆக மூன்று
பேர்!
கடைசியில் நான்தான் செய்தி வாசிப்பது என்று தீர்மானமாகி விட்டது. இனி,
ஒரு கணம் கூட 'வேஸ்ட்' பண்ணமுடியாது. மேஜையில் அநாதையாய்க் கிடந்த செய்தி அறிக்கையை
அள்ளிக்கொண்டு ஸ்டூடியோவுக்கு ஓடினேன். அப்போது மணி ஏழு பதினாலு. நல்லவேளை, ஏழு
பதினைந்தைத் தாண்டிவிடவில்லை.
படிப்பதற்காக 'மைக்'கின் ஃபேடரைத் திறந்து படிக்க
ஆரம்பித்தேன்.
''ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...''
அட பாவி! செய்தி
படிப்பது யார் என்பது கடைசி வரையில் நிச்சயமாகாமல் இருந்ததால், தலைப்புச் செய்திகளை
எழுதிக் கொடுத்த 'அனுகூலச் சத்ரு', வாசிப்பவரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில்
வெறும் புள்ளிகள் போட்டிருந்தார். நான் அந்தப் புள்ளிகளைப் பார்த்தவுடன் சரக்கென்று
பிரேக் போட்டேன். ''வாசிப்பது...'' என்று சொல்லியாகிவிட்டது; அடுத்தாற் போல் என்
பெயரைச் சொல்ல வேண்டியதுதானே? எதற்காக பிரேக்? ஆனால், பாழாய்ப்போன என் பெயர் ஞாபகம்
வந்து தொலைத்தால்தானே சொல்வதற்கு?
நம்பமுடியாதுதான்! சொந்தப் பெயர் எப்படி
மறக்கும்? ஆனால், மறந்துவிட்டதே! அதுவும் எப்படிப்பட்ட சமயத்தில்..!
நான் யார்?
காலம் தோன்றியது முதல், யோகியரும் ஞானியரும் அறிய முயன்று தோற்றுப்போன விஷயம்;
கல்ப கோடி காலம் தவம் செய்தும் அறியமுடியாத உண்மை... இப்போது ஆகாசவாணியின்
மைக்குக்கு எதிரே தலையைப் பிய்த்துக்கொண்டால் புலனாகிவிடுமா என்ன?
எதிரே
கடிகாரம் 'டிக்... டிக்...' என்று நேரத்தை விநாடி விநாடியாக என் கண்ணில் காட்டிக்
காட்டிப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.
நான் யார்..? நான் யார்..?
தவியாய்த் தவித்தேன். நினைவுக்கு வரவில்லை. ''நான் யார்?'' என வாய்விட்டே
கத்திவிடுவேனோ என்ற பயத்தில் ஃபேடரை' மூடி, மைக்கின் வாயை அடைத்தேன். மூளையைத்
துருவித் துருவி ஆராய்ந்தேன். என் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை என்ற கொடுமையோடு
அணி அணியாக வேறு எத்தனையோ பெயர்கள் போட்டி போட்டுக்கொண்டு என் நினைவில் வந்து
மோதின.
செய்தி அறிவிப்பில் என் உற்ற தோழர்களாயிருந்த நாகரத்தினம், பஞ்சாபகேசன்,
(அன்று வராமற்போன) நாராயணன், வேங்கடராமன், சாம்பசிவன், இசக்கி... இவர்கள் தவிர,
எங்கெங்கோ எப்போதோ சந்தித்த கணக்கற்ற நண்பர்களின் பெயர்களும்-தென்காசி ஆமல்
ராவுத்தர், அம்பாசமுத்திரம் சாமு வாத்தியார், பத்தமடை சுப்பய்யா இப்படிக்
கணக்கில்லாத நபர்களின் பெயர்களும் என் நினைவுக்கு வந்து குழப்பியடித்தன. இந்த
மாபெரும் பெயர்க் கூட்டத்துக்கு நடுவே, நான் என்னையே தேடித் தேடிக்
களைத்துப்போனேன்.
எதிரே கடிகாரம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தக் கடும் குளிர்
நாளில், என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்துக் கொட்டியது.
நான் அழ
ஆரம்பிப்பதற்குள் ஸ்டுடியோ கதவு திறந்தது. எஞ்சினீயர் பாலு பரபரப்புடன் உள்ளே
வந்தார். என்னைப் பெயர் சொல்லி அழைத்து, ''அரை நிமிஷ மாகக் குரலே வரலையே! மைக் கைத்
தவறுதலாக மூடிவிட்டீர் கள் போலிருக்கிறது. முதலிலிருந்தே படியுங்கள்'' என்று
சொல்லி, 'ஃபேடர்' பக்கம் கையைக் காட்டிவிட்டு, வந்த வேகத்திலேயே மறைந்தார்.
அரை
நிமிடம்தானா? எனக்கு அரையுகமாகப் பட்டதே! அது இருக்கட்டும்... பாலு என் பெயரைச்
சொன்னாரல்லவா? அப்பாடா! நான் யார் என்பதை எனக்குப் புரிய வைத்த பாலுவை மானசிகமாக
வாழ்த்திக்கொண்டு மறுபடியும் ''ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது பூர்ணம்
விசுவநாதன்'' என்று ஆரம்பித்தேன்.

சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த அவரது சக வானொலியாளர் சரோஜ் நாராயணஸ்வாமி,சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விஸ்வநாதனையே இந்த நிகழ்ச்சியை விவரித்து எழுத வேண்ட,அவர் ஆ.வி.யில் 1969 ல் எழுதிய பகுதிதான் மேலே நீங்கள் படித்த கட்டுரை.

()

சமீபத்தில் சட்டக் கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை பற்றியும் அதனுடைய நியாய,அநியாயங்கள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள்.மத்தியில் பல உண்மை அறியும்’ அறிக்கைகளும் வந்தன.


கல்வியறிவு இல்லாத சிந்திக்க இயலாத கிராம மக்கள் சாதீயத்தின் கூறுகளை விடாமல் பிடித்துக் கொண்டு சமுதாயத்தில் பல வேண்டத்தகாத நிகழ்வுகளை நடத்திக் கொண்டிடிருப்பது நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால் படித்த சிந்திக்க முடிந்த சட்டம் பயிலும் மாணவர்களும் சாதீயக் கூறுகளை முன்னெடுப்பதும் அதிகார,ஆட்சி,அரசியல் வர்க்கங்களின் கூறுகள் அவர்களைப் பின்னாலிருந்து இயக்கி சாதீயக் கூறுகள் முனை மழுங்கி விடாமல் கவனித்துக் கொள்வதும்,அரசியலில் பார்த்து,முதலில் பயந்து,பின்னர் சலித்து,இப்போது அரசியலின் கூறுதான் அது’என்ற சுரனை கெட்டத் தனத்துடன் நாம் ஏற்றுக் கொண்ட வன்முறை வன்மம் மாணவர்கள் அளவில் செயல்படுத்திக் காட்டப்படுவதும் எதிர்கால சமூகத்தைப் பற்றிய பயங்களை மனதில் விதைக்கின்றன.

இந்த சமுதாய சூழலில்தான் நமது குழந்தைகள் வளரப் போகின்றன என்பது திகில் தரக் கூடிய ஒரு நிதர்சனம் !

Wednesday, October 15, 2008

81.கடிபடுவது நகமா,விரலா ?

சமீபத்தில்,சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னிருந்து (ச்சே,பதிவுலகில் இது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டதோ?) இரண்டு மூன்று வாரங்களாக நிதிச் சந்தைகளில் நடந்துவரும் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஏதோ வாணவேடிக்கை நடந்துகொண்டு இருப்பதாக உணர்வார்கள்.

பங்குச் சந்தையிலும் ஊக வணிகத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் நகத்தைக் கடித்துக் கொண்டோ அல்லது விரலைத் தின்று கொண்டோ இருக்க வாய்ப்பிருக்கிறது;இரண்டாவது என்றால் பெரும் பணம் காற்றில் போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலைக்கு என்ன காரணம் அல்லது இது எப்படி நிகழந்தது என்பது பற்றி பல செய்தி பத்திரிகைகள் அல்லது ஊடகங்கள் அலசிவிட்டன.

கடந்த வாரத்தில் அமெரிக்க அரசு சுமார் 700 பில்லியன் டாலர்கள் (அல்லது சுமார் 3,20,000 கோடி ரூபாய்கள்) நிதியை புழக்கத்திற்கு விட அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பெர்னக்கி யோசனை வழங்கி,அதிபர் முன்மொழிந்த போது அமெரிக்க காங்கிரஸ் சபை அதை நிராகரித்து அரசுக்குப் பெரிய அதிர்ச்சியை வழங்கியது;பின்னர் புஷ் புஸ்ஸென்று கிளம்பி,அமெரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழுவிற்கு விளக்கம் அளிக்க பெர்னக்கியைப் பனித்தார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார்.

காணக் கிடைக்காத காட்சி அது !!!!

நம்மில் பலர் அமெரிக்கர்களைத் திட்டுகிறோமே,அவர்களுடைய சொந்தக் காரியங்களை அவர்கள் பார்த்துக் கொள்வது போல் நம்முடைய காரியங்களைப் பார்த்துக் கொண்டால் நாம் அவர்களைத் திட்டுவதில் அர்த்தமிருக்கிறது.

தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான அந்த கேள்வி நேரத்தில்’ ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுளுக்கெடுக்கும் கேள்விகளைக் கேட்டு பெர்னக்கியின் பதிலைப் பெற்றார்கள்.இது போன்ற காட்சிகள் இந்தியாவிலோ ஏன் ஆசிய நாடுகளிலோ நடக்கிறதா?

சிதம்பரமோ அல்லது ரிசர்வ் வங்கியின் தலைவரோ அவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகள் பற்றிய திறந்த விவாதத்திற்குத தயாராக இருக்கிறார்களா?

அறிந்த பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்குக் கூட அவர்கள் பதிலளிப்பதில்லை !

ஒருவழியாக பணத்தை சந்தையில் பாய்ச்சும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இந்த முடிவு ஆக்கம் பெற்ற போது,ஐரோப்பிய ஒன்றியங்களும் ஜோதியில் இணைந்து வாடிக்கையாளர்களின் பணத்திற்கும்,வங்கிகளின் நிதி சுழற்சிக்கும் உறுதி அளித்த பின்னர் அதளபாதாளம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த பங்குச் சந்தை கொஞ்சம் சரிவிலிருந்து மீளும் அறிகுறிகளைக் காண்பித்தது.

ஆனால் இது சரியான தீர்வுதானா என்ற கேள்விகள் இப்போது நிதிச் சந்தை அறிஞர்களிடம் எழுந்திருக்கிறது.

இந்த மொத்தக் குழப்பமும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த இயலாதவர்களுக்கு கடன்களை அள்ளி வழங்கிய காரணத்தால் நிகழ்ந்தது;இதைப் பற்றி ஒரு பதிவு தெளிவாக எழுதப் பட்டிருந்தது.

இவை திவாலான காரணம் கொடுத்த கடனில் சுமார் 80 சதத்திற்கு மேல் வராக் கடனாக மாறியதுதான்.கடனுக்கான அடமான சொத்துகளை வங்கிகளும்,நிதி நிறுவனங்களும் கையகப் படுத்தினதான்;ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்ய?அவற்றை மறுவிலை கொடுத்து வாங்க ஆளில்லை.

ஒரு கட்டடம் அல்லது ஒரு வீடு என்றால் வங்கி மேலாளர் தங்கவோ அல்லது விற்கவோ முனையலாம்.ஆனால் கொடுத்த கடனெல்லாம் இப்படி செத்த சொத்துக்களாக(Non Perporming assets) மாறவும் வங்கிகளின் கையிருப்பில் பணவரவு அறவே நின்று முதலீட்டாளர்கள் வரைவோலையோ அல்லது காசோலையோ கொடுத்தால் அவர்களுக்கு திருப்பிச் செலுத்த பணமில்லா நிலையை அடைந்தன.

இதற்குத்தான் மேற்சொன்ன நிதிச் சந்தையை மீட்கும் பணியை அரசு செய்ய முன்வந்தது.
இப்போது நிதிச் சந்தை சிறிது பெருமூச்சு விட்டாலும் நீண்ட கால நோக்கில் என்ன நடக்கும்?
மேற்சொன்ன மீட்பு முயற்சி(Bailout Plan) முன்வைக்கப்பட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சொத்துக்களை அல்லது பங்குகளை அரசு வாங்கிக் கொண்டு சுமார் 250 மில்லியன் டாலர்களை அவற்றில் இன்று முதலீடு செய்திருக்கிறது.

வங்கிகள்,நிதி நிறுவணங்களின் “கையாலாகாத் தனத்திற்கு” இது போல் அரசு அந்த வங்கிகளில் முதலீடு செய்தால் சுற்றிவளைத்து அரசு அந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை நாட்டுடமையாக்குகிறது;தனியார் வசம் இருக்கும் போதே இவ்வளவு ‘தான்தோன்றித்தனமாக’ செயல்பட்ட வங்கிகள் அரசின் வசம் போகும் போது எவ்வளவு திறனுடன் செயல்படும் என்ற கேள்வி சந்தையில் எழுந்திருக்கிறது.

இது நீண்ட கால நோக்கில் மேலும் கீழ்நோக்கிய வீழ்ச்சிக்கு சந்தையை செலுத்தும் முயற்சி என்பது சில தேர்-நிதியாளர்களின்(Financial Experts) எச்சரிக்கை.

பார்க்கலாம்,எத்தனை பேரின் விரல் முழுதும் கடிபடப் போகிறதென்று !!!!!!!

Monday, October 6, 2008

கில்லிகளின் ஆலோசனை வேண்டி !

நண்பர்களே,

நவீன மாடல் கைத்தொலைபேசிகள் எதிலாவது எம்.எஸ் ஆபீஸ் மென் பொருளில் தமிழை உள்ளிட முடியுமா?

கைத்தொலைபேசிகளில் தமிழை உள்ளிட உதவும் செயலி எதுவும் வழக்கத்தில் இருக்கிறதா?

எனில் செயலி தரவிறக்க இணைப்பு இருந்தால் அறியத்தரவும்.

இது சாத்தியம் எனில் எந்த மாடல்களில் சாத்தியம்?

விண்டோஸ் அல்லது சிம்பியான் மென் பொருள் செயலிகளிடையே ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

நன்றி.

Sunday, September 14, 2008

***** 80.பாரதியின் - கண்ணம்மாவும்,செல்லம்மாவும்

பாரதி என்ற கவிஞனுக்கு அறிமுகங்கள் தேவையில்லை.
தேசியக் கவி என்றும்,மகாகவி என்றும் கொண்டாடப்பட்ட பாரதி 20 ஆம் நூற்றாண்டின் நவகவிதையின் நாயகன்.
தொட்ட எந்த பொருள் பற்றியும் துலங்கும் இனிய கவிதைகளைப் பொழிந்த கவிஞன் அவன்.கம்பனுக்குப் பிறகு சொல்லழகும்,சந்த அழகும் நிரம்பிய கவிதைகள் பாரதியினுடையவை என்றால் அது ஒத்துக்கொள்ளக் கூடியதே.

பாரதியின் காலம் சுதந்திரப் போராட்டக் கனல் கனன்று கொண்டிருந்த காலம்.பாரதியின் கவிதைகள் அந்தக் கனலை மூட்டிப் பெருநெருப்பாக்கின.

அரசின் ஒடுக்கும் பார்வை பாரதியின் மீது விழுந்தது;அவர் பிறந்த பிராமண குலத்தின் பல மௌடீகங்களை வன்மையாக எதிர்த்த பாரதி கவிஞனுக்கேயுரிய கவிதைச் செருக்குடன்தான் வாழ்ந்தார்.

எவரிடமும் சென்று கையேந்தி,சோப்படித்து வளரும் இன்றைய கவியரசுகள் போல இல்லாது தனக்காகவும்,தேசத்துக்காகவும் மட்டும் பாடியவர் பாரதி.

அவரின் கவிதைகளில் குறிப்பிடத்தக்க இனிமை நிரம்பியவை கண்ணன் பாடல்கள்.பாரதி கண்ணன் பாடல்கள் என்று தனித் தொகுதியாக எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டு எழுதவில்லை;மாறாக அவ்வப்போது கண்ணன் மீதான சிந்தனைப் பிரவாகம் எழுந்த போதெல்லாம் எழுதிய்வை பின்னர் தொகுக்கப்பட்டன.

தேசியப் பாடல்களில் தெறிக்கும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஈடாக அன்பும்,காதலும் பொங்கிப் பிரவகிக்கும் பாடல்கள் கண்ணன் பாடல்கள்.

கண்ணனை தன் தந்தையாக,அரசனாக,குழந்தையாக,வேலைக்காரனாக என எல்லா பாத்திரங்களிலும் வரித்தார் பாரதி.
ஆனால் அதிலும் இனிமையும் அழகும் முழுமையடைவது அவரின் நாயக,நாயகி பாவக் கவிதைகளில்தான்.

எடுத்துக்காட்டாக,தீர்த்தக் கரையினிலே,சுட்டும் விழிச் சுடர்தான்,தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி,சின்னஞ்சிறுகிளியே,தூண்டிற்புழுவினைப்போல்,கண்டுவரவேணுமடி,ஆசைமுகம் மறந்துபோச்சே,பாயுமொளி நீஎனக்கு...போன்ற பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை.

இறுதிப்பாடலான ‘கண்ணம்மா எனது குல தெய்வம்- என்ற தலைப்பிலான பாடல் ஒரு சிகரப் பாடல்.

ஒரு கவிஞனின் கவிதைகளில் இந்த அளவு உணர்ச்சிப் பெருக்கு இருக்க வேண்டுமெனில் அவனுக்கு பாடுபொருளின் மீது உள்ள அன்பும் பிரேமையும் அந்த அளவு அழுத்தமானதாக இருக்க வேண்டும்.

இதற்கான சில உறுதி செய்யப்படாத பிண்ணனித் தகவல்களும் சொல்லப் படுகின்றன.

பாரதி வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; ஆனால் அவருடைய தந்தையாரது வற்புறுத்தல் காரணமாகவே செல்லம்மாவைக் கைப்பிடித்தார் என்பது ஒரு வதந்தி.

அந்தப் பெண்ணின் மீது பாரதிக்கு கரைகாணாக் காதல் இருந்தது;அப்பெண்ணையே பாரதி கண்ணம்மாவாக வரித்தார்;கண்ணன் பாடல்களிலும் இந்த கரைகாணாக் காதலே வெளிப்பட்டது. இதன் காரணமாகவே அவரின் கண்ணன் பாடல்களில் நாயகி நாயக பாவங்களில் மட்டும் அவ்வளவு உணர்ச்சி தெறித்திருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

இது உண்மையாக இருக்க முடியுமா? இவ்வாறான முடிவுக்கு வந்துவிட முடியுமா?


இவ்வாறு காதலில் கண்ணம்மாவிடமும்,வாழ்க்கையில் செல்லம்மாவிடமும் வாழ்ந்தாரா பாரதி????

அந்த அளவு லட்சியக் கவிஞனாக வாழ்ந்த பாரதியின் சொந்த வாழ்வு இவ்வாறு ஒரு பிறழ்ந்த வகையில் இருந்திருக்குமா???

இதற்குச் சரியான பதில் பாரதி மீண்டு வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் சூழ்நிலைகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன?

செல்லம்மா இதை எவ்வாறு பார்த்தார்? அல்லது செல்லம்மாவிடம் பாரதிக்கு இப்படி ஒரு மனவுலகில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க முடியுமா?

செல்லம்மா பாரதியுடன் வாழ்ந்த காலத்தில் புற உலகின் வாழ்க்கைத் தேவைகளுக்கு மிகுந்த சிரமப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்தி;ஆனால் பாரதி செல்லம்மாவின் துயரங்களை லட்சியம் செய்யாது வாழ்ந்தாரா?

பின்வரும் செய்திகள் செய்திகளில் விடை கிடைக்கலாம்.

செல்லம்மா வெளியுலகிற்கு வெளிப்பட்டது பாரதி மறைந்த பின்புதான்.பாரதியின் காலத்திற்குப் பிறகு ஒருகட்டத்தில் அவரைப்பற்றி வானொலியில் பேசிய செல்லம்மா இவ்வாறு கூறுகிறார்.

“எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!

என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.

நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்;அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம்,தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரை கடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்து கொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும் அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும், பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப்பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்து கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ,வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இனி மிஞ்ச விடலாமோ? என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஓரு புறம் ஏற்பட்டது. ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ? என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். செல்லம்மா, இங்கே வா என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள் என்றார். 'கரும்பு தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம்.

மறுநாள் அந்தப்பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது.அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப்பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார். “

ஒரு கணவரால் சரியாக நடத்தப்படாத,அன்பு காண்பிக்கப் படாத ஒரு மனைவியின் பேச்சா நாம் மேலே படித்தது??

மேலும் பாரதியின் கவிதைகளை அவருக்குப் பின் பிரசுரிக்க பெரிதும் முயற்சிகள் எடுக்கிறார் செல்லம்மா.இதற்காக பெரிதும் சிரமப்பட்ட செல்லம்மா,பொதுமக்களுக்கு வைக்கும் கோரிக்கை இவ்வாறு போகிறது....


‘‘தமிழ்நாட்டு மக்களே,
நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியும் இல்லை.

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார். நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச்சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும், சண்டைகளும் தீர்மானங்களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதிய கொள்கைகள் _ என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் பெறத் தயாராக இருக்கிறேன்.

அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட்டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன்.

நீங்கள் நீடூழி வாழ்க.

பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தேமாதரம்.’’

இதுதான் செல்லம்மா எழுதிய கடிதம்.

செல்லம்மாவைப் பற்றிக் குறிப்பிடும் பாரதியின் பேத்தி எழுதுகிறார்.

“பாரதி மறைந்த பிறகும் செல்லம்மாவின் போராட்டங்கள் தொடர்ந்தன. தம் கணவரின் எழுத்துகளை நூல்களாக வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு, என் பாட்டி யாரைச் சேர்ந்தது. முப்பத்திரண்டு வயதே நிரம்பிய இளம்பெண், புத்தகப் பிரசுரத் துறையில் சற்றும் அனுபவமோ பயிற்சியோ இல்லாத பெண், நாளைச் சோற்றுக்கு வழி தேடும் வகையறியாத பெண், திருமணம் செய்யக் காத்து நிற்கும் இளைய மகள், தோள்களில் சுமையாக அழுந்தி நிற்க, மைத்துனரையும் சகோதரரையும் நம்பி யிருக்கும் பெண், எல்லாவற்றுக்கும் மேலாகத் தான் விரும்பிய காரியங் களைச் செய்ய முடியாமல் சாதி, சமுதாயத்தின் வற்புறுத்துதலுக்கு அடங்கிப் பணியவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்ட பெண் - செல்லம்மா. .

காலம் செல்லச் செல்ல, செல்லம்மா வெளியுலகத்தைத் தன் கணவரின் நோக்கிலிருந்து பார்க்கத் தொடங்கினாள். தன் கணவர், பெண் மைக்கு வரையறுத்துக் காட்டிய சுதந்திரம், அவளது இலட்சியமாயிற்று.

அசாதாரணமாக தைரியம், நினைத் ததைச் சாதித்து முடிக்கும் திறம், தன் கணவர் அறிவுறுத்திய உயர்ந்த விஷயங் களில் நாட்டம், தெய்வ பக்தி - இவை அவளை வழிநடத்தின. வாழ்க்கையில் அவளுக்கேற்பட்ட சோதனைகள் பல. இந்தச் சோதனைகளையெல்லாம் வென்று புடமிட்ட தங்கமாக வெளி வந்தாள், செல்லம்மா. .

1957-ஆம் ஆண்டு. தம் பிறந்த ஊராகிய கடையத்தில் மரணப் படுக்கையில் தன்னினைவின்றிப் படுத் திருக்கிறார், செல்லம்மா. அந்த அறையில், பெரிய ரேழியில், அவருடைய மூத்த மகள் தங்கம்மா, இளைய மகள் சகுந்தலா, பேத்திகள், பேரன்கள், ஒன்றிரண்டு நண்பர்கள் - எல்லாரும் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

""திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத்
தேசம் போற்றத் தன் மந்திரி யாக்கினான்''.

என்று படுக்கையிலிருந்து மென்மையான பாட்டுச் சத்தம் வருகிறது. பாரதியின் கண்ணன் - என் அரசன் என்ற பாட்டிலிருந்து அடிகள் இந்த இரண்டு வரிகள் ஒரு தடவையல்ல, பல முறைகள் மீண்டும் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன. .
சிறிது நேரம் அமைதி..

""திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான்''

என்று செல்லம்மாவின் வாய் திரும்பப் திரும்பப் பாடுகிறது. .
ஆம்!

அன்னையின் நெஞ்சு நிறைய, இத்தனை காலமாகப் புகுந்து அவரை ஆட்கொண்டு வாழ வைத்தவர், பாரதி. அவர் செய்த காரியங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து, அவருக்கு அறிவுத் தெளிவும், கலங்காத உள்ளமும், எதற்கும் அஞ்சாத துணிவும் கொடுத்துக் கடைசிவரை அவரை வழிநடத்தியவர், பாரதி. .”

பாரதியின் மீது எத்தகைய ஒரு அன்பிருந்தால் செல்லம்மாவின் ஆத்மசக்தி பாரதியின் எழுத்துக்கள் வெளிவர வேண்டும் என்ற தளராத ஆசையுடன் இவ்வாறு செயல்பட்டிருக்க முடியும்!

இப்படி செயல்பட்ட செல்லம்மா,பாரதியின் எத்தகைய அன்பையும் மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும் !

அதனால்தான் பாரதி பாடினான்..

”உன்னைக் கரம் பிடித்தேன்,வாழ்வு ஒளிமயமானதடி
பொன்னை மணந்தனால் சபையில் புகழும் வளர்ந்ததடி”
என...

கண்ணம்மாவின் காதலால் அல்லது கண்ணன் ப்ரேமையால் பாரதியின் சாகா வரம் பெற்ற அமுதப்பாடல்கள் கிடைத்தன;செல்லம்மாவின் காதலால் அவை வெளியுலகிற்கு வந்து நமக்கு படிக்கக் கிடைத்தன....

கண்ணம்மாவும்,செல்லம்மாவும் பாரதியின் இரு கண்களானார்கள்!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...