குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, January 28, 2009

91.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா???? - II


சென்ற பதிவு இதன் முதல் பகுதியாகும்.இப்போது இரண்டாம் பகுதி....

0 0 0

இராகங்களின் மேற்சொன்ன பகுப்புகளுக்கு மேலாக ஆண் இராகங்கள் எனவும் பெண் இராகங்கள் எனவும் பகுக்கப்பட்டிருந்தன.

இனி இசை நிகழ்ச்சி நடத்த தேவையான சூழல் பற்றிப் பார்க்கும் போது பக்கவாத்தியங்கள் எனப்படும் இசைக்கருவிகளுடன் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன.

பழந்தமிழ் நாட்டில் ஐந்து வகையான இசைக்கருவிகள் புழக்கத்தில் இருந்தன.அவை தோல் கருவி,துளைக்கருவி,நரம்புக்கருவி,கஞ்சக்கருவி மற்றும் மிடற்றுக் கருவி என்பன.

தோல்கருவிகள் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டு தோலால் கட்டப்பட்டவை.அவை பேரிகை,படகம்,இடக்கை,உடுக்கை,மத்தளம்,சல்லிகை,கரடிகை,திமிலை,குடமுழா,தக்கை,கணப்பறை,தமருகம்,தண்ணுமை,தடாரி,அந்தரி,முழவு,சந்திரவலையம்,மொந்தை,முரசு,கண்விடு தூம்பு,நிசாளம்,துடுமை,சிறுபாறை,அடக்கமு,தகுணிச்சம்,விரலேறு,பாகம்,உபாங்கம்,நாழிகைப்பறை,துடி,பெரும்பாறை ஆகியவை.

துளைக்கருவிகள்:புல்லாங்குழல்,நாகசுரம்,முகவீணை,மகுடி,தாரை,கொம்பு,எக்காளை ஆகியவை.இவை மரத்தாலும் உலோத்தாலும் செய்யப்பட்டவை.சங்கு மற்றொன்று,இது இயற்கையாகவே விளைவது.குழல் மூங்கிலில் செய்யப்படுவது.

நரம்புக்கருவிகள்:மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகளால் பூட்டப்பட்டவை;இவை யாழ்,வீணை,தம்பூரா,கோட்டு வாத்தியம்,பிடில் முதலியன.

யாழ் பற்றிச் சொல்ல சில சிறப்புச் செய்திகள் இருக்கின்றன.இந்தியாவின்,பழந்தமிழ் நாட்டின் மிகப் பழைய இசைக்கருவிகளில் ஒன்றான யாழ் தமிழகத்திலிருந்த உலகம் முழுக்கப் பரவிய இசைக்கருவிகளில் ஒன்று.

உருவ அமைப்பில் உண்மையான யாழ் வில் போன்ற வடிவு கொண்டது.இதன் மறுபெயர் வீணை என்பது ஆகும்.சிலம்பில் கூறப்படும் ‘நாரதவீணை நயந்தெரி பாடல்’ எனக் கூறப்படும் வரிகளால் சுட்டப்படுவதும் யாழ் என்னும் இசைக்கருவிதான்.ஆனால் இதில் சுட்டப்படுவது வில் வடிவில் இருக்கும் யாழ்தான்.இப்போதைய குடவீணை பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டது.

யாழ் வாசிப்பில் மிகுதிறமை பெற்ற ஒரு வகுப்பினரே பழந்தமிழகத்தில் இருந்தார்கள்;அவர்கள் யாழ்ப் பாணர் என்றழைக்கப்பட்டனர்.பாணர்களில் ஒருவருக்கு நாயன்மார் வரிசைகளில் இடம்கொடுத்து அழகு செய்தது பழந்தமிழகம்.தேவாரப்பண்களுக்கு பண்ணும் இசையும் செய்வித்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் என்று வரலாறு கூறுகிறது.

மேலும் இலங்கையின் யாழ்ப்பாணம் என்னும் ஊர் ஒரு யாழ் வாசிப்பில் நல்ல திறன் பெற்ற ஒரு பாணருக்கு இலங்கை அரசனால் பரிசளிக்கப்பட்ட ஊராதலின் அந்த ஊருக்க யாழ்ப்பாணம் என்று பெயர் ஏற்பட்டது என்ற ஒரு செய்தியும் படிக்கக் கிடைத்தது.

வள்ளுவப் பெருந்தகை இசையின் இனிமையைக் குறிக்க முற்பட்ட போது கையாண்ட சொல்லாடல் “குழலினிது,யாழினிது என்பர்” என்பதுதான்.புல்லாங்குழலும் வீணையும் குழலுக்கும் யாழுக்கும் எடுத்துக்காட்டுகாளாக விளங்கும் இசைக்கருவிகள்.


இவ்வளவு அகன்ற கருத்துக்கள் இசைக்கருவிகள் பற்றியே தமிழில் இருக்கையில் தமிழ் எந்த அளவு இசையில் செறிவு கொண்டிருக்க வேண்டும்?
மேலும் ஒரு செய்தி ஆராயத் தக்கது.சிறந்த இசைக்கருவிகள் என அறியப் படும் காலத்தால் முற்பட்ட கருவிகள் மூன்று.அவற்றின் பெயர்கள்

குழல்
யாழ்
முழவு அல்லது முழவம்

இந்த மூன்று இசைக்கருவிகளின் பெயர்களிலும் தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பான ‘ழ’ என்னும் எழுத்து இருக்கிறது.எனவே இன்றைய இராகங்கள் சுரங்கள் முதலியவற்றின் தோற்றுவாய் தமிழ் மொழியிலையே இருந்திருக்க வேண்டும்.தமிழின் இசைச் செறிவுக்கு இது மேலும் ஒரு வலிய சான்றாக இருக்கிறது.

இவ்வளவு நீண்ட விளக்கங்கள் இசைக்கருவிகள் பற்றி தமிழில் இலக்கியங்களில் இருக்கும் செய்திகளைப் பட்டியலிட்ட நோக்கம் இசைக்கும் தமிழுக்குமான ஆழ்ந்த செறிந்த தொடர்பு 2000 வருடத்திற்கும் முற்பட்டது என்பதை சுட்டவே.2 ம் நூற்றாண்டின் திருக்குறள் காலத்திலேயே குழல்,யாழ் போன்ற கருவிகள் செறிவாகப் பயன்பட்டிருக்கம் போது அதற்குப்பல காலம் முன்பே இசை,இராக விதிகள் பற்றிய தெளிவு தமிழில் இருந்திருக்க வேண்டும்.


தமிழில் பாரம்பரிய இசை தேய்ந்த காரணம்:
இந்த நிலையில் தெலுங்கும் வடமொழியும் பாரம்பரிய இசைக்கு உரிமை கொண்டாடியதும் தமிழில் இசை நம் காலத்தில் தேய்ந்த நிலைக்குச் சென்றதற்குமான காரணம் என்ன?

கால வரிசையின் படிப்பார்க்கையில் தொல்காப்பிய காலத்திலிருந்து அல்லது அதற்கு முன்பான காலத்திலிருந்தோ இசைக்கான தனி நூல்கள் இருந்தது(பரிபாடல் போன்ற) பற்றிய செய்திகள் இருக்கின்றன.அதாவது சுமார் கிமு 2 லிருந்து கிபி 5 வரை.

பின்னர் வந்த பக்தி இலக்கிய காலத்தில்-கிபி 7 ல் இருந்து கிபி 12 வரை திருமுறைகள் மற்ற தமிழ்ப்பாடல்களில் இசையும் பண்ணும் சார்ந்த குறிப்புகள் இருக்கின்றன.

இக்கால கட்டத்தில் சங்கீத ரத்நாகரம் என்ற ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டது.எழுதியவர் நிசங்க சார்ங்க தேவர் என்பவர்.இந்த நூல் இன்று கர்நாடக சங்கீதத்துக்கமான ஒரு முக்கிய தொடர்பாக குறிக்கப்படுகிறது.ஆனால் இந்த நூலில் தேவாரப்பதிகங்களில் அமைந்திருக்கும் பல பண்களும் அவற்றின் பெயர்களும் கையாளப்பட்டிருக்கின்றன.எனவே இந்த நிசங்கர் தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்று தமிழில் நிலவிய இசை பற்றிய அறிவை வடமொழியில் எழுதினார் என்பது கண்கூடு.


பின்னர் வந்த கால கட்டங்களில் பல இனத்தவர்கள் சார்ந்த ஆட்சிக் குழப்பங்கள் தமிழகத்தில் ஏற்பட்டன;மராத்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,முகம்மதியர்,சுல்தான்கள்,நிஜாம்கள் என்ற குழப்பக் கூட்டங்கள் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் ஆட்சிப்பொறுப்பில் வந்தனர்.எனவே இக்கால கட்டங்களில் தமிழின் சிறப்பியல்புகள் குறித்து பெருமிதப்படவோ,தகுதிகளைக் கொண்டாடவோ எவரும் இல்லாது போயினர்.

இந்தக் காலகட்டத்தில்தான் அருந்தமிழ் நூல்கள் பலவும் அழிந்து பட்டிருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் ஞானசம்பந்தர் போன்ற பெரியவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு நினைவு கூறத்தக்கது;கிபி 2-4 ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு கிபி 6 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் வரையிலும் கூட தமிழ் மொழி இவ்வாறு அழிந்து பாழ்பட்ட நிலையில்தான் இருந்தது.இக்காலகட்டத்தில்தான் பக்தியின் பாற்பட்டு முகிழ்ந்த ஞானசம்பந்தர்,நாவுக்கரசர் போன்றவர்கள் தமிழுக்கு இருந்த வாடிய நிலை கண்டு பல அமரத்துவம் வாய்ந்த திருமுறைப் பாடல்களை இயற்றி தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

சம்பந்தர் தேவாரத்தின் 3000 பாடல்களில் சுமார் 10,20 பாடல்களுக்கு ஒருமுறை தன் பெயரை விளிக்கும் நிலை வந்த போதெல்லாம் தமிழையும் சேர்த்து தமிழ் ஞானசம்பந்தன் என்றே விளித்துச் செல்கிறார் சம்பந்தர்.
இது மட்டுமின்றி தாழ்ந்த குலம் எனக் கருதப்பட்டிருந்த பாணர் குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வாருக்கு,தனக்குக் கிடைத்த மரியாதைக்குச் சரியான மரியாதையை எல்லா இடங்களிலும் வழங்கவைத்த பெரியார் அவர்.அவரைக் குறிக்குப் பல இடங்களிலும் பாணரை ஐயர் என்றே குறிப்பிட்டு பெருமைப்படுத்திய சமூகப் போராளி அவர்.

15ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவர் போன்ற அருந்தமிழ்த் தொண்டர்கள் இல்லாது போயின காலம்தான் தமிழ் தாழ்ந்துபட்டது.

இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயருக்குக் கீழ் அதிகாரத்தில் இருந்த பலருக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லாதிருந்தது.
இந்த கால கட்டத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகள் கட்டமைப்பு ஏற்பட்டது.அவர்கள் தெலுங்கிலும் வடமொழியிலும் கீர்த்தனைகளைப் பொழிந்து தள்ளினார்கள்,அவை பெருமைப்படுத்தப் பட்டு எங்கும் பாடப் பட்டன;காரணம் அன்றைய அரசர்கள் அல்லது சமஸ்தானாதிபதிகள் அனைவரும் தெலுங்கர்கள்.அவர்களை மகிழ்ச்சிப்படுத்த தெலுங்கு கீர்த்தனைகளாலேயே முடிந்தது.

இசை என்பதன் ஆன்மா ஒன்றுதான்;அது வெளிப்படும் வடிவங்கள் தான் பாடல்கள் அல்லது கீர்த்தனைகள்.இவை எந்த மொழியில் அமைந்தாலும் இசையை ரசிக்கலாம்.ஆனால் இசையின் ஆன்மா எப்போது தங்குதடையின்றி உணரப் படும் என்றால்,அது உயிரைத் தொடும் போது ! அதற்கு கேட்பவர்களுக்குப் புரியும்படி இருக்க வேண்டும் பாட்டு;இல்லையெனில் நாம் துணிந்து சொல்ல வேண்டும் நிப்பாட்டு என !

சரி,இக்காலத்திலும் ஏன் அந்த வேற்று மொழிப்பாடல்களே நிலை பெற்றுப் போயின? பாடுபவர்களின் அறியாமை மற்றும் கேட்கும் நம் மூடத்தனம்.

‘ப்ரோவ பாரமா,ரகுராமா’ என்று அழைக்கும் காகுந்தனை ‘அலைபாயுதே,கண்ணா’ என்றும் விளித்துக் கொஞ்சலாம்.பின்னதின் நெருக்கமும் அன்பும் முன்னதில் இல்லை என்பதை பாடுபவர்கள் புரிந்து கொள்ளாத அறியாமை;’ப்ரோவ பாரமா’ நமக்கானது அல்ல என அந்த வேற்றுமொழிக் கீர்த்தனைக்காக நமது சங்கீதத்தையே தூக்கியெறிந்து விட்டு ‘நாக்குமுக்குவில்’ நம்மைத் தொலைத்து விட்டு நிற்கும் கேட்பவர்களான நம் மூடத்தனம்.

மிகப்பிற்காலத்திலே தோன்றிய இக்கீர்த்தனைகளின் வரவு பற்றிய பெரியவர் திருவிக அவர்களின் கூற்று பின்வருமாறு:

“தமிழ்நாடு விருந்தோம்புவதில் பேர் பெற்றது;எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது.தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது;அதனால் நாட்டுக்கு விழைந்த நலன் சிறிது,தீங்கோ பெரிது.

கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது.தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன.அந்நாளில் பெரும் பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன.முத்துத்தாண்டவர்,கோபாலகிருஷ்ண பாரதியார்,அருணாசலக் கவிராயர் முதலியோர் சிங்க ஏறுகள் அல்லவா?அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறிவதாயின.இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர்.அவைகள் ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன.அவ்வணியைத் தாங்க அவைகளால் இயலவில்லை.கலையற்ற கீர்த்தணைகளின் ஒலி காதின் தோலில் சிறிது நேரம் நின்று அரங்கம் கலைந்ததும் சிதறிவிடுகிறது,இதுவோ இசைப்பாட்டின் முடிவு?

இசைப்பாட்டு இயற்கையில் எற்றுக்கு அமைந்தது?புலன்களின் வழிப்புகுந்து,கோளுக்குரிய புறமனத்தை வீழ்த்திக்,குணத்துக்குரிய அகக்கண்ணைத் திறந்து,அமைதி இன்பத்தை நிலைபெறுத்துதற்கென்று இசைப்பாட்டு இயற்கையில் அமைந்தது,இது இசைப்பாட்டின் உள்ளக் கிடக்கை;இதற்கு மாறுபட்டது இசைப்பாட்டாகாது!”

நான் மேலே சொன்னவற்றை செறிந்த தமிழில் கூறியிருக்கிறார் திருவிக அவர்கள்.

அதெல்லாம் சரி,இப்போது என்ன செய்யச் சொல்கிறாய் எனக் கேட்கிறீர்களா?

முதலில்:எங்கெல்லாம் இசைக் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நாக்குமுக்கா நாறத்தனங்களைத் தவிர்த்து விட்டு நல்ல இசைக் கச்சேரிகளை நடத்துங்கள்,பாடுவோருக்கு முக்கியமான குறிப்பு அல்லது வேண்டுகோள் அல்லது அறுவுறுத்தலுடன்;அது தமிழ்ப் பாடல்கள் மட்டும் பாடுங்கள் என்பது.அவர்கள் மறுக்க மாட்டார்கள்,ஏனெனில் பணம் கிடைக்கிறது.அதாவது பிறமொழிப் பாடல்கள் பாடினால் பணம் கிடைக்காது என்ற நிலை வரவேண்டும்.பிறமொழிப்பாடல்களே மட்டுமே ரசிப்போம் என்பவர்கள் கூட்டத்தில் அவர்கள் அந்த மொழிகளில் பாடிக் கொள்ளட்டும்.

பிறகு:உங்கள் குழந்தைளுக்கு பாரம்பரிய இசை என்னும் கர்நாடக சங்கீதப் பயிற்சி அளியுங்கள்.சரியான நேரத்தில் அவர்களைத் தமிழ்ப்பாடல்கள் பக்கம் திருப்பி விடுங்கள்.தமிழில் பாடல்கள் இல்லை என்ற நிலையிலா இருக்கிறது? போதும் போதும் என்ற அளவில் கொட்டிக் கிடக்கிறது.திருமுறைகளில் தொடங்கி இந்த,சென்ற நூற்றாண்டுக் கால அருணாசலக் கவிராயர்,அநந்த பாரதிகள்,கவி குஞ்சர பாரதி,கனம் கிருஷ்ணய்யர்,இராமலிங்க அடிகள்,கோபாலகிருஷ்ண பாரதி,கோடீசுவர ஐயர்,பட்டனம் சுப்பிரமணிய அய்யர்,மாரிமுத்துப் பிள்ளை,மாயவரம் வேதநாயகம் பிள்ளை,முத்துத்தாண்டவர்,மாம்பழக் கவிராயர்,அண்ணாமலை ரெட்டியார் போன்று அடுக்கிக் கொண்டே போகலாம்.ரெட்டியாரின் காவடிச்சிந்து பாடல்கள் எல்லாம் அவ்வளவு இனிமை வாய்ந்தவை.


சென்னிக் குளநகர் வாசன்,தமிழ் தேறும் அண்ணாமலை
தாசன்


என்னும் பாடலை அதன் இசை மற்றும் தாளக் கோர்வையில் கேட்டுப் பாருங்கள்;சொக்க வைக்கும் பாட்டு அது !

அந்தத் துறையிலேயே நுழையாது இசை மற்றும் சங்கீதத்தை ஒரு சாதியாருக்கு சொத்தாக இருக்க அனுமதித்துவிட்டு பார்ப்பனர்களின் அட்டூழியம் என்று ஜல்லியடிப்பதில் அர்த்தமில்லை !

இசைத்தமிழை மீட்டெடுப்பது நம் கையில்தான் இருக்கிறது,மற்றெவர் கையிலும் இல்லை !!!


ஒரு அவசியப் பிற்சேர்க்கை:
இந்தப் பதிவுத் தொடரில் நான் சாஸ்திரிய சங்கீதம் என்று சொல்லப்படுவது இன்றைய வடிவில் கர்நாடக சங்கீதம் மட்டும்தானா என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு அதற்கு விடை காண முயன்றிருக்கிறேன்.தமிழில் உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் நாட்டுப் புறப்பாடல்களும் நல்ல மெட்டில் அமைந்த பாடல்களே.
அவை பெரும்பாலும் சங்கீதக்கட்டுகளுக்குள் அகப்படாமல் உணர்வுகளை மேலெடுத்துச் செல்லும் பாடல்கள்;அவற்றின் முதல் நோக்கம் உணர்வுகள் நல்ல சந்த மெட்டுக்களில் கேட்பவர் உள்ளத்தைத் தைக்க வேண்டும் என்ற நோக்கம் பற்றி எழுந்தவை.
சாஸ்திரிய சங்கீதம் என்பது சங்கீத நுணுக்கங்களை அறிந்து பிரயோகித்துப் பாடுபவர் பாடும்
பாடல்கள்.
இனிப்பு பொதுவாக சுவையுடையது எனினும் வெல்லப்பாகு நேரடியான பாசாங்குகள்,அலங்காரங்கள் இல்லாத இனிப்பு;ஆனால் பாதாம் அல்வா செய்ய ஏகப்பட்ட
பக்குவங்கள் வேண்டும்;இந்த வித்தியாசம்தான் இரண்டு இசைக்கும்.

இன்னொரு பிற்சேர்க்கை:


நண்பர் ஜீவா அவர்கள் தமிழிசை என்ற தலைப்பில் ஐந்து பதிவுகள் எழுதி இருக்கிறார்.

பாடகி சௌம்யா அவர்கள் அகநாநூற்றுக் காலத்தில் இருந்து பாபநாசம் சிவன் வரை தமிழ்ப்பாடல்களூடாகச் சென்ற இசைப்பயணம் பற்றிய ஐந்து பதிவுகள் அவை.அவற்றைக் கேட்கும் போது இசைப்பயிற்சி இருந்தால் தமிழின் காப்பியங்கள் அனைத்திலும் பாரம்பரிய இசைக்கான் வடிவத்துடன் கூடிய ஆயிரமாயிரம் பாடல்களைத் தேர்ந்து எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

அந்த பாடல்களை வழங்கிய சௌம்யா அவர்களுக்கும் தேடிப் பதிவிட்ட நண்பர் ஜீவா அவர்களுக்கும் நன்றிகள் பல!

7 comments:

  1. mika aZhakaana nadaiyil thelivu pirakkum vannam vantha katturai. Bharathi muthal kondu melum periyAor tamil isai vendum enru vendiyavargal.

    naamum karpoam tamil isai.

    ReplyDelete
  2. உங்கள் பாராட்டுதலுக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள் பல அநாநி அவர்களே..

    இன்றைய தமிழினம் ஆக்கபூர்வமான திசைகளில் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

    அவற்றை சுட்ட வேண்டிய அவசியம் பற்றியே இதே எழுத வேண்டியிருந்தது.

    ReplyDelete
  3. தமிழிசையின் தொன்மையை ஆராய்ந்து விளக்கியமைக்குப் பாராட்டுக்கள். மேலும் இப்பணித் தொடர வாழ்த்துக்கள்.

    ஆனால், இசைக்கு சாதிச் சாயமும், மொழிச் சாயமும் பூசி, வேற்றுமொழியில் இசையை நேசிப்பதை மூடத்தனம் என்று எழுதியிருப்பதைத் தவிர்த்து இருக்கலாம். மொழி/சமூக பேதங்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு இந்திய மொழிகளில் கீர்த்தனைகளையும் ஒன்றிக் கேட்டு வருகிறேன்; ஒரு வார்த்தை கூடப் புரியாமல் இஸ்லாமிய இசையையும், ஆப்கனிஸ்தான், எகிப்தியப் பாடல்களையும், மனம் லயித்து ரசித்திருக்கிறேன். வேற்று மாநிலத்தவர்கள் நம் தமிழ் கீர்த்தனைகளை அக்கு வேறு ஆணிவேராக அலசி உரையாடியதில் ஆனந்த அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கிறேன்.

    இது செய், இதனால் தமிழுக்கும், தமிழ் இசைக்கும் நல்லது என்று எழுதுங்கள், நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    தங்கள் ஆய்வு மனப்பான்மைக்கு என் தொடர்ந்த மரியாதையும், மதிப்பும் என்றுமே உண்டு.

    மொழிப் புறக்கணிப்பு நடத்த நிறையப் பெரியவர்கள் இருக்கிறார்கள் - மராட்டியத்துக்கு தாக்கரேக்களும், கர்நாடகத்துக்கு வட்டாள் நாகராஜும் போல. நமக்கு எதற்கு divisive வேலை?

    ReplyDelete
  4. >>தமிழிசையின் தொன்மையை ஆராய்ந்து விளக்கியமைக்குப் பாராட்டுக்கள். மேலும் இப்பணித் தொடர வாழ்த்துக்கள்.>>

    நன்றி,இயன்ற அளவு அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.உங்களேப் போன்றவர்களின் ஊக்க மொழிகள் எம்மை உற்சாகப்படுத்தும்.



    >>ஆனால், இசைக்கு சாதிச் சாயமும், மொழிச் சாயமும் பூசி, வேற்றுமொழியில் இசையை நேசிப்பதை மூடத்தனம் என்று எழுதியிருப்பதைத் தவிர்த்து இருக்கலாம். மொழி/சமூக பேதங்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு இந்திய மொழிகளில் கீர்த்தனைகளையும் ஒன்றிக் கேட்டு வருகிறேன்; ஒரு வார்த்தை கூடப் புரியாமல் இஸ்லாமிய இசையையும், ஆப்கனிஸ்தான், எகிப்தியப் பாடல்களையும், மனம் லயித்து ரசித்திருக்கிறேன். வேற்று மாநிலத்தவர்கள் நம் தமிழ் கீர்த்தனைகளை அக்கு வேறு ஆணிவேராக அலசி உரையாடியதில் ஆனந்த அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கிறேன்.>>
    இதில் ஒரு கவனமாக அவதானிக்க வேண்டிய கருத்துப் பிழை ஒன்று இருக்கிறது.நான் வேற்று மொழியில் பாடுவதற்கோ அல்லது இசை வேற்றுமொழிப்பாடல்களின் மூலம் வெளிப்படுவதற்கோ எதிரி அல்ல.
    நல்ல பண்பட்ட சங்கீதத்தை தமிழன் ஒருவன் அனுபவிக்க வேண்டும் எனில் அவன் தெலுங்கு கீர்த்தனைகளைப் புரிந்து கொண்டால்தான் இயலும் என்றால் அந்த நிலையை உடைக்க வேண்டும் என்பது என் நிலை.
    நானும் நல்ல பல இனிமையான தெலுங்கு கீர்த்தனைகளை ரசிப்பவனே!



    >>இது செய், இதனால் தமிழுக்கும், தமிழ் இசைக்கும் நல்லது என்று எழுதுங்கள், நெஞ்சார வாழ்த்துகிறேன்.>>

    நன்றி.இதற்கான வழிமுறைகள் -பாரம்பரிய சங்கீதத்தின் பரிச்சயம் நம்முடைய குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விதயங்களை நானும் சொல்லியிருக்கிறேன்.



    >>மொழிப் புறக்கணிப்பு நடத்த நிறையப் பெரியவர்கள் இருக்கிறார்கள் - மராட்டியத்துக்கு தாக்கரேக்களும், கர்நாடகத்துக்கு வட்டாள் நாகராஜும் போல. நமக்கு எதற்கு divisive வேலை?>>

    மன்னிக்க வேண்டும்.என்னைக் குறித்த அங்கதமாக நான் இதை எடுத்துக் கொள்ள வில்லை.என் மீதான உங்களின் அன்பை நான் அறிந்தவன்;நான் என்றுமே பிரிவினை வாதத்தை ஆதரிப்பவன் அல்லன்;என்னுடைய அனைத்துப் பதிவுகளையும் படிப்பவர்கள் இதை அறிவார்கள்,ஆனால் தமிழ் என்னும் மொழியில் இருக்கும் விதய ஞானம் எந்த மொழியிலுமே இல்லாத நிலை என்பது உண்மையாக இருக்கும் நிலையில் ஞானமும் திறமும் தமிழில் இல்லை எனவும்,பல ஆதார கலைகளுக்கான மூலம் பிற மொழிகளிலிருந்துதான் தமிழுக்கு வந்திருக்கிறது என்பது போன்ற பரப்புரைகள் நிலவிக் கொண்டிருக்கும் இன்றைய தமிழக சூழலில்,இன்றைய நம் இளைஞர்கள் திரைப்படக் கனவுலகத்தை விட்டு வெளிவராத சூழலில்,இன்றைய ஊடகங்கள் கூட தலைவர்களை திரைப்பட உலகத்தில் மட்டும்தான் தேட வேண்டும் என்ற கேடுகெட்ட விதியில் உழன்று கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழனை அவனுக்கே அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆணித்தரமான உண்மை.
    அந்த நோக்கமே மேற்கண்டது போன்ற என் பதிவுகளுக்கான தூண்டுகோள்.

    ReplyDelete
  5. அருமையான வரிகள் மிக அவசியமான கட்டுரை.

    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    ReplyDelete
  6. I read your old blogs Paramparia Isayin Vadivam Karnataka Sangeethama parts I & II yesterday.

    Its very well written and I agree with the points 100%. The science of music is common across the world and its all based on 7 swarams any where in the world. The term Tamil music is like saying Tamil Maths or Tamil Astronomy.

    The use of Tamil in Karnatic/Sastreeya music is low simply because the last rule by Tamil kings in Tamil Nadu was probably 1000 years before. So naturally Tamil has been pushed behind Telugu, Urdu, English, etc. Ultimately the artists are also human and have to feed their family at the end of the day, so it makes sense for them to perform in whatever is the ruling language of the day.

    In my opinion, the best way to increase the use of Tamil in Karnatic music is to create demand for it. For that to happen we should educate ourselves, our future generation in karnatic music and start demanding/performing music in Tamil. You've already mentioned this point. I would also stress that music is beyond language and to enjoy music language is not a barrier. Some of the best performers in India are in the Hindustani tradition so limiting ourselves to one tradition/language would simply deprive us of these performances. So it would be nice to listen and enjoy music from all the best sources and learn/perform in our own language. This way we can enrich ourselves and our language with the best elements from all over the world.

    I couldn't put this comment in your blog so sending it as a mail ..

    Regards,

    Chocka
    UK

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள சொக்கு,
      நீ கூறிய காரணங்களோடு தமிழில் இருந்த அறிவுச் சொத்துகள் அனைத்தும் வரலாற்றின் சில கால கட்டத்தில் திட்டமிட்டு அழிக்கப்ட்டன என்ற உண்மையையும் சேர்ந்து நினைவில் நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

      இல்லாவிடில் அந்த அழிவுக்கான சமூக அரசியல் காரணங்களை உணர்ந்து கொள்ளாமலேயே நாம் நமது ஆயுளைக் கழித்து விடுவோம் !

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...