நான் பிறந்து, வளர்ந்து படித்ததெல்லாம் ஒரு கிராமம் சார்ந்த பகுதியில்.
பின் 70 களிலும்,முன் 80 களிலும் சிறுவனாகக் கழித்த என் காலங்கள்,இப்போதும் பசுமையான நினைவுகளையும் அனுபவங்களையும் மீள்கொண்டு வருகின்றன.
கண்டிப்பான பெற்றோர் கனிவுடனும் இருக்கக் கற்றுக் கொடுத்த காலங்களில்,எங்கள் விளையாட்டுக்கள் பெரும்பாலும் தெருவில்,புழுதியில் தெருவின் அனைத்து வீடுகளின் குழந்தைகளுடனும் நடக்கும்.
காலையில் சீக்கிரமே சீக்கிரமே எழ வைத்து-எழுப்பும் போது எழாமல் சிணுங்கி அப்படி இப்படி புரண்டு படுத்து,போர்வையைத் தலைக்கு மேல் இழுத்து தூங்கும் நேரங்களில்,குளிர்ந்த நீர் போர்வையின் வழி முகத்தில் ஊற்றப்பட்டு,உளறியடுத்து எழ வைக்கும் அம்மா....
அப்படி,இப்படி பல் துலக்கி,காலைக் கடன் முடித்து வந்தால் தயாராய் தானும் காத்திருந்து முதல் நாள் பள்ளியில் என்ன பாடங்கள் நடத்தினார்கள்,என்ன படித்தாய்,ஆங்கிலப் பாடமெனில் மீண்டும் ஒரு முறை வீட்டில் அதை வாசித்துக் காட்டி,தெரியாத,புரியாத வார்த்தைகளை தனியாக ஒரு எழுத்து நோட்டில் அகர வரிசைப்படி எழுதி,பின்னர் அவற்றிற்கெல்லாம் அகராதி-டிக்ஸனரி-யின் துணையுடன் பொருளையும்,ஆங்கிலம்,ஆங்கிலம்,தமிழ் என்ற வரிசையில் எழுதி,அந்த வார்த்தை பெயர்ச்சொல்லா,வினைச் சொல்லா,வி.சொ.எனில் என்ன காலம்,ஆகிய அனைத்தையும் எழுதி,அதாவது அந்த எழுத்து நோட்டு ஒரு மினி அகராதி போல இருக்கும்,படிக்க வைத்த அம்மா...
கணக்குப் பாடங்களிளை எடுத்து வைத்து கணக்குகளை செய்யச் சொல்லி-வகுப்பில் ஆசிரியர் அனைத்து கணக்குகளையும் செய்ய மாட்டார்,மாதிரிக் கணக்குகளை செய்து விட்டு,இது போல அனைத்தையும் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்,அவருக்கும் அனைத்தையும் வகுப்பில் போடவும் நேரமிருக்காது,என்ன செய்வார் பாவம்,-ஆனாலும் பாருங்கள்,இந்த கோளாறு பிடித்த கடினமான கணக்குகள் எல்லாம் அந்த மாதிரி பயிற்சிக் கேள்விக் கணக்குகளாகத்தான் இருக்கும்-அவற்றில்தான் நான் 5.30 மணிக் கால விடிகாலையில் அம்மாவிடம் மாட்டுவேன்.
ஆசிரியர் சொல்லித் தராவிட்டால் என்ன,நாம் போடுவோம்,நான் அந்தக் காலத்தில்-அதாவது 1950/60 களில்-வகுப்பின் அனைத்து மாணவர்களிலும் காம்போசிட் மாத்ஃஸ் எடுத்துப் படித்த சில மாண(வர்)விகளில் ஒருவளாக்கும்,வாத்தியார் கணக்கைச் சொன்னவுடன்,உட்கார்ந்திருக்கும் நாங்கள் விடையைச் சொல்வோமாக்கும்,வாத்தியார் பையில் வைத்திருக்கும் மிட்டாய் எடுத்துக் கொடுப்பாராக்கும் என்றெல்லாம் சொல்லி வயிற்றெரிச்சலைக் கிளப்பிய காலங்கள் அவை;
தொண்டையை விட்டு வெளிவராத குரலில்,’இப்போதும் கணக்கைச் சொல்கிறேன்,விடையை உடனே சொல்ல வேண்டியதுதானே,நான் ஏன் பல்லுறுப்புக் கோவை சமன்பாடுகளுடன் சண்டை போட வேண்டும்?’என முணுமுணுக்கும் காலங்கள்;ஆயினும் காதில் பாய்ந்து,பாய்ந்து,வெறியேற்றிய அந்த ‘காம்போஸிட் மாத்ஃஸ்......’ வாக்கியங்கள் தான் எனக்குக் கணிதத்தில் ஆர்வத்தையும்,பின்னாட்களில் அதேவிதமான, ‘டீச்சர் கணக்கைச் சொல்லவும்,நீ என்ன விடை சொல்ல வேண்டியிருக்கிறது?’ எனப் பின் பெஞ்சு சக(!) மாணவர்களால் ‘டீச்சர்’ அறியாமல் கிள்ளு வாங்கவைத்தது.
இவ்வளவு ‘டார்ச்சர்’களுடனான காலைப் பொழுதுகளுக்கு ஈடு செய்யும் மாலைப் பொழுதுகள்,தெருப் புழுதியில்,கிச்சு,கிச்சு தாம்பாளமும்,கபடியும்,கிட்டிப் புள்ளும்,திருடன்/போலீஸ் விளையாட்டுக்களுமாய்க் கழிந்து உற்சாகப் பந்தாய் மாறி,காலையில் தலையில் தண்ணீர் ஊற்றிய,முறைத்துக் கொண்ட அதே அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு,பக்கத்துத் தெரு மில்லரும்,நாடாரின் மகன் விஜயனும் கபடி விளையாடும் போது சண்டைக்கு வந்தார்கள்’ என்ற அன்றைய விளையாட்டு அனுபவங்களின் ‘Mintutes’ களைச் சொன்ன காலம் !
அன்றைய பள்ளிகளிலும் வாரத்துக்கு மூன்று நாட்கள் ‘விளையாட்டுப் பீரிடு’ இருக்கும் நாட்கள்,அதிலும் கடைசி நாளின் ‘விளையாட்டுப் பீரிடு’ இரண்டு வகுப்புகள் சேர்ந்தாற் போலிருக்கும்;எனவே மதியம் உணவுக்குப் பின்னர்,ஒரு வகுப்பு பாடம் படித்தவுடன்,பிறகு ஒன்றரை மணி நேரம் ஆட்டம்,பாட்டமாடி,தெருவின் மண் புழுதி அழுக்குகளுடன்தான் வீட்டுக்கே செல்வோம்.இந்த நேரங்களில் உடல் சார்ந்த இயக்கத்தைத் தூண்டும் ஓட்டம்,கால்பந்து,கோகோ,கபடி(யும் கூட சில நேரங்களில்) போன்றவை உடலினை உறுதி செய்வதுடன்,வரையறைக்குட்பட்ட,ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையைத் தூண்டி,மனவெழுச்சியும்,தன்னம்பிக்கையையும் வளர்க்கும் காரணிகளாகவும் அமைந்தன.
இப்போதைய நகரக் குழந்தைகளை நினைத்தால்,பெரிதும் வருத்தமாக இருக்கிறது.பெரும்பாலும் சிறார்களுக்கு குழந்தைகள் கூடி விளையாட்டுக்களே அற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன.போததற்கு,கணினி விளையாட்டுகள் எனச் சொல்லி,சிறிய கைக்கடக்கமான கருவிகளுடன்,தொலைக் காட்சிப் பெட்டியை இணைத்துவிட்டு அதன் முன் அம்ர்ந்துவிடும் குழந்தைகள்தான் அனேகம்.
ஒருமுறை ஒரு நண்பரின் மகன் விளையாடும் அந்த விளையாட்டைக் கண்ணுற்ற போது,குகைக்குள் நுழையும் ஒருவன்,நீண்ட பட்டாக் கத்தியுடன்,குகைக்குள்ளிருந்து எதிர்பாரா நேரம் மேலே பாயும் விபரீத வடிவம் கொண்ட மிருகங்களை வெட்டி வீழ்த்தி முன்னேறும் கதாநாயகன்’ கருத்துக் கொண்ட ஒரு விளையாட்டு,நாயகன் அப்படி ஒரு மிருகத்தை வெட்டி வீழ்த்தும் போதோ,அல்லது நாயகன் தவறும் போது ஏதேனும் ஒரு மிருகம் நாயகனை அடித்து வீழ்த்தும் போதோ,திரை முழுதும் தெறிக்கும் ரத்த சிதறல்கள் !
இவ்வகை விளையாட்டுக்கள்-முதலில் அவை விளையாட்டுக்கள்தானா என்ற கேள்வி எனக்கிருக்கிறது-சிறார்களின் மனதில் வன்மத்தையே விதைப்பதாக நான் நினைக்கிறேன்.அதுபோக ஓடியாடி விளையாடாத அந்தப் பருவம்,மேலும்,தொலைகாட்சி பார்த்துக் கொண்டே கொறிக்கும் வழக்கத்தை அப்பாவிடமும்,விளம்பரங்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளும் சிறார்கள்,அதையே தான் கணினி விளையாடும் போதும் செய்கிறார்கள்.
விளைவு,உடலியக்க விளையாட்டுக்கள் அற்றும்,கொரிக்கும் வழக்கம் அதிகரிப்பதுமான வாழ்க்கை,இள வயதிலேயே பொது ஆரோக்கியம் கெடுவதுடன்,அதிக எடை-Obesity- பிரச்னைகளையும் கொண்டு வருகிறது;தலைமுறைகள் உடல் ரீதியாக வலுவிழந்து போவதின் காரணிகளாக இவை மாறுகின்றன.
மேலும் தன் வயதொத்த குழந்தைகளுடன் கலந்து பழக இயலா அவர்களின் வாழ்க்கை முறை,அவர்களின் பின்னாட்களுக்கான சமூகப் பார்வவயிலும் பெரும் வேறுபாடுகளைக் கொண்டுவரும் வாய்ப்பிருக்கிறது;வளரும் பருவத்தில்,பலதரப் பட்ட,சமூகத்தின் பல நிலைகளிலான குழந்தைகளின் நட்பு,சிறுவதிலேயே இல்லாமையின் கொடுமைகளையும்,பகிர்ந்து நேசித்து வாழும் அன்பையும்,சமூகக் கடமைகளையும்,பொறுப்புணர்வையும் அதிகரிக்கும் காரணிகள்;அவை இல்லாமலேயே வளரும் குழந்தைகள் ஆரோக்கியமான சமூகத்தின் காரணிகளாக விளங்கமுடியா அவலம் அரங்கேறுகிறது.
நகர் சார்ந்த வாழ்க்கை முறை பெருகி வரும் இந்த நாட்களில்,சிறார்களின் சிறுவயது வாழ்க்கை முறைகள் பற்றி உரத்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது !
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
நல்லதொரு பதிவு அறிவன்..சிறுவர் உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது
ReplyDelete//மேலும் தன் வயதொத்த குழந்தைகளுடன் கலந்து பழக இயலா அவர்களின் வாழ்க்கை முறை//
ReplyDeleteஇது சரியான கூற்றுதானா என தெரியவில்லை. பள்ளியில் தன் வயது குழந்தைகளுடந்தானே கழிக்கிறார்கள். என்ன நாம் செய்ததை (தெருவில் விளையாடுவதை) அவர்கள் பள்ளி மைதானத்திலோ அல்லது வகுப்பறையிலோ செய்கிறார்கள்.
விடியோ கேம் குறித்த உங்கள் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அது மட்டுமில்லாமல் சின்னத்திரையில் வரும் வில்லன்களின் அட்டகாசங்கள் நேரடியாக நம் வீட்டு கூடத்துக்கே வரும் காலம் இது.
பெற்றோர்தான் சிறார்களின் பொழுதுபோக்கில் மிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மிக ஆழமான சமூக நோக்கு மிக்க பதிவு... பாராட்டுக்கள். இன்றைய பெற்றோர் பிள்ளைகள் வீட்டில் அசையாமல் இருப்பதையே விரும்புகிறார்கள்; அதற்கு விலையாக எதுவும் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். இவர்களில் பலர் மெகா சீரியலே கதியென வாழும் அம்மாக்கள் ஆகிவிட்டார்கள்.பிள்ளைகளைப் பற்றிச் சிந்திக்க இவர்களுக்கு எங்கே நேரம் இருக்கு...
ReplyDeleteபாசமலர்-வாங்க,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எங்கோ போகும் சிறுவர்கள் உலகத்தை நம்பக்கம் இழுப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.
புபட்டியன்,வாங்க.
ReplyDeleteநீங்கள் சொல்வதுசரி.
ஆனால் பள்ளிகளிலும் இப்போதைய காலங்களில் சிறார்களுக்கு வெளியிட விளையாட்டிக்கள் குறைந்தே வருகின்றன என நினைக்கிறேன்.நகர் சார்ந்த பள்ளிகளில் வெளியிட விளையாட்டுக்களுக்கான பெரிதான மைதானங்கள் அருகி வருவதாகவே நான் நினைக்கிறேன்.
மேலும் பள்ளியில் சிறார்கள் இருக்கும் போது இருப்பதை விட,விளையாட்டுகளில் நண்பர்களுடன் அளவளாவுவது அதிகப்படும்,வகுப்பறைக்குள் இந்த அளவு இறுகும் நட்பு,நகர் சார்ந்த சூழலில் கிடைக்கிறதா என்பதே என் வினா.
யோகன்,வாங்க.
ReplyDeleteநன்றி,வருகைக்கும் கருத்துக்கும்.
அம்மாக்களைக் கூட நாம் திருப்புவோம்,திருத்துவோம்.