குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, August 20, 2007

அங்கும்...இங்கும்...

பல சமயங்களில் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் எதிர்பாராதவற்றை சந்திக்க நேரிடும்;அவை சில சமயம் நல் முத்துக்களாய் அமைவதும் உண்டு.
சில சுவாரசியமான வாசிப்புகள் கூட அவ்வாறு எதிர்பாராமல் நிகழக் கூடும்;அப்படி சமீபத்தில் படித்தது நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படும் இராமலிங்கம் பிள்ளையின் சுய சரிதையான ‘என் வரலாறு’.
உ.வே.சா’வின் ‘என் சரித்திரம்’ அவருக்கு மனவெழுச்சியாக(inspiration) இருந்திருக்கலாம்...

காந்தியின் உளுத்த கோட்பாடுகளை உடும்புப்பிடியாய் பிடித்திருந்த போதிலும்,கவிஞரின் எளிய கவிதை வரிகளின் திறம் ரசிக்கத்தக்கது.

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது;
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’
போன்ற ‘மனப்பாடப் பகுதி’க் கவிதைகள்தான் நமக்குப் பரிச்சயம்.ஆனால் பாரதியை மிக நெருங்கும் தரத்தில் கவிஞரின் புதுமைப்பெண்’ணின் வடிவம் மிக ரசிக்கவேண்டிய ஒன்று !
அந்தக் கவிதையைப் பாருங்கள்...

“மான் என அவளைச் சொன்னால்
மருளுதல் அவளுக் கில்லை.
மீன்விழி உடையா ளென்றால்
மீனிலே கருமை இல்லை.
தேன்மொழிக் குவமை சொன்னால்
தெவிட்டுதல் தேனுக் குண்டு.
கூன்பிறை நெற்றி என்றால்
குறைமுகம் இருண்டு போகும்.
மறுமணம் மாதர்க்கில்லை
மதலையை விதவை யாக்கி
நறுமணப் பூ வு மின்றி
நல்லஓர் துணியும் இன்றி
உறுமணல் தேரை போல
ஒளர்ந்திருந் தொடுங்கச் செய்யும்
சிறுமனப் பான்மை யேநம்
தேசத்தின் நாசம் என்பாள்
கற்பெனப் பேசு வார்கள்
கற்பினைப் பெண்களே காக்கப்
பற்பல பெண்ணை நாடிப்
பசப்பலாம் ஆண்கள் மட்டும்
அற்புதம் ஆனதாகும்
அநியாயம் இந்த நாட்டின்
நற்பதம் கெடுத்த தென்று
நாளெல்லாம் நைவாள் நங்கை”

இத்தனை எளிய,இனிய கவித்திறம் படைத்திருந்த கவிஞர்
பெரிதும் முயன்றது ஒரு ஓவியனாக வர !
அவரின் சில ஓவிய முயற்சிகள் பெரிதும் பாராட்டப் பட்டதும்,பல சன்மானங்களும் அவருக்கு கிடைத்தன;ஒரு ஆங்கில அதிகாரியின் மகளின் படத்தை அவள் இறந்த பல காலத்திற்குப் பிறகு அப்பெண்ணின்,தேசலான சிறுவயதுப் புகைப்படத்தை வைத்து கவிஞர் வரைந்த ஜீவ ஒளியுடன் கூடிய ஒரு ஓவியம் தன் பெண்ணை உயிரோட்டமாக வர்ணித்ததாக அந்த அதிகாரி மகிழ்ந்து பெரும் பொருள் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

ஆனால் ‘என் வரலாறி’ல் நான் ரசித்த விஷயம் முற்றிலும் வேறானது.

நாமெல்லாம் திருக்குறளை அணுகும் போது உரை தேவைப்பட்டால்,ஓரளவிற்குத் தரமானதாகக் கருதுவது மு.வ’வின் உரை.(வலையபட்டி’யின் பழனியப்பா கல்லூரி’யில் த.ஆசிரியர் திரு.மாணிக்கவாசகம், ’அராஜகமாக’ என்னைப் திருக்குறள் போட்டியில் நுழைத்து,50 அதிகாரங்கள் படித்க வைத்தது மு.வ.வின் உரையை வைத்தே..கல்லூரி என்பதெல்லாம் ஒரு ‘ஜபர்தஸ்துக்கு’,உண்மையில் அங்கு இருந்தது எட்டாம் வகுப்பு வரைக்கும் தான்...ஆயினும் அது my sweet alma matter’களில் ஒன்று !)
மேலும் பண்டிதத்தனம் வேண்டுபவர்கள் என்றும்(இன்றும்) நாடுவது பரிமேலழகர்’ஐ...
கவிஞர் சிறைவாசம் அனுபவித்தபோது திருக்குறளுக்கு அவர் நோக்கில் ஒரு உரை காண முயற்சி செய்திருக்கிறார்.
(அதென்னவோ அக்காலத்தில் சிறைவாசம் இருந்தவர்களெல்லாம் சிறையில் ஏதேனும் உருப்படியாகச் செய்திருக்கிறார்கள்...இப்பொது trend’டே வேறு....’கொல்றாங்க...கொல்றாங்க’ தான்)
கவிஞர் சில குறள்’களுக்கு பரிமேலழகரின் உரையை,அவர் ஆக்கிய உரையோடு விளக்குகிறார். உதாரணமாக
பொருள்செயல் வகை-அதிகாரத்தில்

குன்றேறி யானைபோர் கண்டற்றாற் றன்கைத் தொன்

றுண்டாகச் செய்வான் வினை.


இதற்கு உரை எழுதியவர் யாவர்களும் ( பரிமேலழகர், மணக்குடவர், மு.வ., ஜி.யு.போப், முதல் இன்றைய கருணாநிதி வரை) “தன் காப்பொருளை வைத்து தொழில் செய்பவன் செயல்,குன்றின் மீது ஏறி நின்று யானைப் போரைக் ‘காண்பது’ போல எளிதானது” என்ற பொருளையே தருகின்றனர்.அதாவது செயலாகிய ‘தொழிலு’ம், செயலாகிய ‘காண்பதுவும்’ உவமை உருவகத்தில் வருகின்றன.சிறிது சிந்தித்தால் யானைப்போரைக் ‘காணும்’ செயலும்,தொழில் செய்யும் ‘செயலும்’ ஒன்றுக்கொன்று ஒவ்வாத உவமைகளாகத் தோன்றும்.(எனக்கே சிறுவயதில் ‘கடம்’ அடிக்கும் போது தோன்றியிருக்கிறது, யானைபோரைக் ‘காண்பதற்கும்’ தொழில் செய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று!)

கவிஞர் தரும் உரை வித்தியாசமானதும்,ஏற்றுக் கொள்ளத்தக்கதுமான உரை...அவர் ‘கண்டற்றால்’ என்பதை ‘காணுதல்’ என்ற செயலாக உருவகப்படுத்தவில்லை;மாறாக ‘அடைதல்’,’ஈடுபடுதல்’ என்று பொருள் கொள்கிறார்.
‘களம் பல கண்டு,படை பல வென்று..’ என்ற சொல்லாடலில் ‘கண்டு’,’காண்’ போன்ற விகுதிகள் ஈடுபடுதல்,அடைதல்,வெற்றி கொள்ளுதல் போன்ற பொருளையே தருகின்றன;அது போன்றே, யானைப் போர் கண்டற்றால் என்பது குன்றின் மீது நின்று யானைப்போரில் ஈடுபடுவது போன்றது,கைப்பொருளைக் கொண்டு தொழில் செய்வது என்பது உரை.
இந்தக் குறளுக்கு எனக்கு கவிஞரின் உரைதான் சரியெனப் படுகிறது !
இது போல சிற்சில முத்துக்கள் ஆங்காங்கே....

2 comments:

  1. நல்ல பதிவு. இது மாதிரி பதிவுகள் நிறைய எழுதுங்கள்; மனம் மகிழ, துவர்ப்பின்றி, தமிழில் ஒன்ற ஏதுவாக.

    ReplyDelete
  2. வருகைக்கும் ஊக்க வார்த்தைகளுக்கும் நன்றி முகவை மைந்தன்.
    தமிழிலக்கியத்தில் சிறிது தோய்ந்தாலும் ஆழ்ந்த மன மகிழ்வு ஏற்படுவது உண்மைதான்.
    இலக்கியப் பரிச்சயம் மிகுவும் இருப்பினும்,இது போன்ற திறனாய்வு எண்ணங்கள் அப்படியே சிந்தனையில் மறைந்து,மறந்து விடுதலே வழமையாயிருக்கிறது;ஏனோ ஆவணப்படுத்தத் தோன்றுவதில்லாமலேயே போய்விடுகிறது.
    உங்களைப் போன்றோரின் பாராட்டு இனி மன உந்துதல்களைத் தரக்கூடும்.நன்றி.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...