இன்றைய தினசரிகளில் இரு செய்திகள்.
-அண்ணா பல்கலை மாணவி தற்கொலை-காரணம் ஆங்கிலத்தில் பேச அல்லது எழுத வரவில்லை என்பதும்,கல்லூரிப் பருவத் தேர்வுகளில்-செமஸ்டர்- பல பாடத் தாள்களில் தேர்ச்சி பெறாமல் இருந்ததும் என்று முதலில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-இன்னொரு தினமணி தலையங்கச் செய்தியில் ஒரு பள்ளியின் பொதுத்தேர்வு நடக்கும் போது மாவட்ட ஆட்சியர் தானே மேற்கொண்ட சோதனையில் கல்வி அதிகாரிகளும் கல்வி நிறுவன ஆசிரியர்களும் இணைந்து செய்த தேர்வு மோசடி பற்றிய செய்தி.மாணவர்கள் படும் சிரமத்தைக் கண்டு மனம் நொந்து அவர்களது கேள்வித்தாள்களுக்கான விடைகளை கல்வி நிறுவனமே தயாரித்து தேர்வு அறையில் விநியோகித்து அவர்கள் தேர்ச்சிக்கும்,தங்கள் பிழைப்புக்கும் உதவி செய்து கொண்ட நிகழ்ச்சி;நமக்கு நாமே திட்டத்தின் தேர்ந்த வடிவம்!
இரண்டு செய்திகளிலும் பொதிந்திருக்கும் விதயம் செயலும் விளைவும் எனப்படும் காஸ் அன்ட் எஃபக்ட் தியரி'யின் சான்றுகள்தாம்.
இரண்டாவது செய்தி பற்றியே இன்றைய தினமணியின் தலையங்கம் பேசுகிறது. காலையில் படித்த போது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது;பள்ளியே முன்னின்று இவ்வாறு செய்யுமா என்ன? என்ற வியப்பால்.
என்னுடைய மனைவியிடம் மிகுந்த ஆச்சரியத்துடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட போது,அவர் என்னைப் பிராணியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு,'இதிலென்ன ஆச்சரியம்,இது பல காலமாக நடப்பது தானே? பின் எப்படி பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி விகிதம் காண்பிப்பது? எங்களுக்குக் கூட எஸ்எஸ்எல்சி தேர்வில் விடைத்தாள் கொடுத்தார்கள்-அதாவது விடைகளை எழுதி-,ஆனால் ப்ளஸ் டூவில் தான் கொடுக்காமல் விட்டு விட்டார்கள்'' என்று என் அறியாமை இருளை அகற்றும் ஞானபானு'வானார்.
அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிறது;பள்ளி இருந்த ஊர் ஒரு சாதாரண ஊராட்சி நிலையில் இருந்த ஊர்;தேர்வுநிலைப் பேரூராட்சி என்று பலகாலம் அறிவித்துக் கொண்டிருந்த ஊர்.
கடந்து பத்து,பணிரெண்டு ஆண்டுகளாய் வழக்கமாய் இருந்து வரும் விதயத்தை உடைத்துத் தெரிந்து கொள்ள அந்த மாவட்ட ஆட்சியருக்கும் எனக்கும் இன்றைக்குத்தான் வாய்த்திருக்கிறது! :)
இப்போது இந்த நிமிடத்தில் என்னுடைய தொடக்கக் கல்வி நிலையத்தையும்,தலைமை ஆசிரியர் மாணிக்க வாசகத்தையும் நன்றியுடன் நினைத்தும் மனத்தில் மீண்டும் நிறைத்தும் கொள்கிறேன்;மனித வாழ்வின் தொடக்கமான பள்ளிப் பருவத்தில் விழுமியங்களையும்,ஒழுங்கையும்,திருக்குறளையும்,நன்னெறியையும்,நல்வழியையும்,கொன்றை வேந்தனையும்,ஆத்திசூடியையும் அடித்துப் போதித்தவர்.நான்காகப் பிளந்த மூங்கில் மரச் சட்டத்தை அடிக்க உபயோகித்த மகானுபவர்;பள்ளி முடிந்தும் காலைப் பாடம்,மாலைப் பாடம் என்று பள்ளியிலேயே வைத்து ஆசிரியர்கள் கட்டாயம் அதை நடத்த வேண்டும் என்று வலியுறித்தியவர்;அதன் மூலம் ஆசிரியர்கள் தனியாக பாடவகுப்பு நடத்தி வியாபாரிகளாக மாறுவதைத் தடுத்தவர்;உண்மையான நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவரின் மகன்;பளபளவென்று துடைத்து வைத்திருக்கும் ராலே சைக்கிளில்தான் வருவார்;சைக்கிளை பள்ளிப் படிகளுக்குள் ஏற்றி வருவது கூடத் தெரியாமல் பூனை போன்று வந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் கண்காணித்தவர்;புகைபிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்திலோ, பள்ளி நேரத்திலோ மாணவர்கள் பார்க்கும் வண்ணத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அவரின் பகையை சம்பாதித்தவர்;நீதி போதனை வகுப்புகளைத் தவறாமல் தானே நடத்தியவர்;அந்த வகுப்புகளுக்கு மிகு முக்கியத்துவம் கொடுத்தவர்.
ஐந்து மகன்களைப் பெற்று ஐவரும் வெளிநாடுகளிலும் உள்நாட்டில் நல்ல நிலையில் இருந்தும் ஓய்வு பெற்று விட்ட பள்ளிக்கே செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு இன்னும் ராலே சைக்கிளில் பள்ளிக்கு ஓடுபவர்;மகன்கள் மற்றும் மனைவியின் அறிவுறுத்தல்களுக்குப் பின்னர் இப்போதுதான் டிவிஎஸ் 50 வாகனத்திற்கு மாறியிருப்பவர்.
படிக்கும் காலங்களில் அவரைப் பார்க்கப் பயமும் சிறிது பிடிக்காமையும் தான் மனதில் எழும்;ஆனால் பள்ளியை விட்டு வெளியேறப் போகும் எட்டாவது வகுப்பிலேயே அவரைப் பற்றிய பயம் மறைந்து மரியாதை தோன்றியது.
வேறு பள்ளி,பள்ளி முடித்து கல்லூரி என்று பல வித மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்ததும், கல்லூரி முடித்து தேசிய அளவிலான தேர்வுகள் என்று கற்றுக் கொள்ளுதலின் பரிமாணங்கள் விரிவடைந்த போது அவற்றை எதிர்கொள்ளும் திண்மை.நுண்ணறிவு,முயற்சி போன்றவற்றை திரு.மாணிக்க வாசகமும் அவரைப் பின்பற்றிய ஆசிரியர் குழாமும், எங்களது 14 வயதுக்குள் அவற்றை விதைத்து விட்டிருக்கிறார்கள் என்று அறிந்தபோதும் அவரது மீதான மரியாதை அன்பும் மதிப்பும் மிக்கதான மரியாதையாக மாறி விட்டிருக்கிறது.
மிகுந்த சுயமரியாதையும் எவருக்கும் நாம் இளைத்ததவரல்ல என்ற மனப்பாங்கும் உடைய நான்(அதை வளர்த்ததில் கூட அவருக்கு ஒரு பங்கிருக்கிறது! :) ),இன்று வரை அவரைப் பார்க்கும் தருணங்களில் அவரை அடிவீழ்ந்து வணங்கி ஆசி பெறுவதைத் மறப்பதில்லை.
மாணவர்களது கல்வி மட்டுமல்ல,கேரக்டர் எனப்படும் தனிமனிதத் தன்மையை செதுக்கி மனிதப் பண்புகளை வளர்ப்பவை கல்வி நிலையங்களும்,ஆசிரியர்களும் என்ற பார்வை தமிழக பள்ளிச் சூழலியலில் கடந்த புத்தாயிரப் பத்தாண்டுகளில் மாறி விட்டிருப்பது கைப் புண்ணாகத் தெரிகிறது.அதோடு ஒழுக்க மீறுதல்களையும் குறுக்கு வழிகளையும் கற்பிக்கும் இடங்களாவும் அவை மாறி விட்டிருக்கின்றன.
இவ்வித குறுக்கு வழிகளில் தேர்ந்து அவற்றைக் கடைசி வரை தீர்க்கமாகப் பயன்படுத்தி,குறுக்கு வழியாளர்களுடனேயே இணைந்து சமூகத்தின் பெரும்பகுதியான மக்கள் மாறி விட்ட சூழ்நிலையில் அவர்கள் சாமர்த்திய சாலிகளாக,வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப் படுகிறார்கள்.
இவ்வித 'சாமர்த்திய சாலிகளான' குறுக்கு வழி விற்பன்னர்கள் பெருகிய ஒரு சமூகத்தில் ஒரு டிஎஸ்பி பெண்ணென்றும் பாராமல் பொது இடத்தில் தான் காக்க வேண்டிய மனிதனைப் பெண்ணை அறைய முடிகிறது;எங்களது பிரதிநிதியாக சட்டசபைக்குப் போ என்று அனுப்பி வைத்த மக்களுக்கு நன்றியுடன் சட்டசபையில் பலான படம் பார்த்து விட்டு கூச்ச நாச்சமின்றி வாழ முடிகிறது; நாடு முன்னேறுவதற்கான தொழில்நுட்பங்களைப் புகுத்தும் செயல்களில் லட்சம் கோடி என்ற கணக்கில் கூசாமல் கையூட்டுப் பெற முடிகிறது;அந்தக் கொள்ளை வெளிப்படும் போது ஏதோ சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப் பட்டது போல சிறை மீண்ட வீரர்களாக திரிய முடிகிறது; ஊழல் பணத்தை உடலெங்கும் அணிகலனாய் மாட்டிக் கொண்டு திருமண ஊர்வலங்கள் நடத்த முடிகிறது;வாய்ப்பு இல்லாத இடத்தில் கூட லஞ்சம் வாங்க முயற்சித்தும்,வாய்ப்பு இருக்கும் இடங்களில் புகுந்து விளையாடியும் வாழ்வில் வெற்றி பெற்ற விற்பன்னர்களாய் வலம் வர முடிகிறது ! தலைவர்களாக அந்தக் கேவல சாமர்த்தியங்களை நிறுவன மயமாக்க முடிகிறது !!! அவர்கள்தான் தலைவர்கள் என்று சாதாரணர்களை நம்ப வைக்க முடிகிறது !!!
தற்கொலை செய்து கொண்ட மாணவி போன்ற சிலர்,அவ்விதக் குறுக்கு வழிகளை சரியாகப் பயன்படுத்த இயலாமலோ அல்லது குறுக்கு வழிகளைச் செயல் படுத்தும் வழியற்றவர்களாவோ இருக்கும் போது தற்கொலையாளர்களாக மாறுகிறார்கள்.
தீர்வு புரையோடிப் போன கல்வி முறைச் செயல்பாட்டிலும்,தனி மனித உன்னதப் பண்புகளை கருவறுத்துவிட்ட தற்காலக் கல்வி முறைகளிலும் இருக்கிறது.
அதை வழிமுறைப் படுத்த செயலூக்கமும்,நியாயப் பண்புகளில் உறுதியான நம்பிக்கை மிகுந்த தலைவரும் தேவை.
எனது முந்தைய பதிவொன்றில்(திறனற்ற செயலும்,செயலற்ற திறனும்) தலைவர்கள் திறனாளர்களாக இருக்க வேண்டுமா அல்லது நேர்மையாளராக இருக்க வேண்டுமா என்ற பொருளை நான் ஏற்கனவே தொட்டிருக்கிறேன்; அந்தக் கேள்வி அனைவருக்கம் வர வேண்டிய தருணம் இது.
தமிழக சூழலில் இன்னும் 20 ஆண்டுத் தூரத்தில் அப்படி எவரும் கண்ணில் தெரியவில்லை;தற்கொலைகளும் சீரழிவும் தொடரும் என்பதில் சந்தேகமும் இல்லை.
பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !
No comments:
Post a Comment