இன்று 65 ஆவது விடுதலை நாள்.
ஆங்கிலேயரின் அடிமைப் படுத்தலும் அதனைத் தொடர்ந்த விடுதலைப் போராட்டமும் ஒரு வகையில் சிதறிக் கிடந்த இந்திய சமஸ்தான அரசுகளை ஒன்று சேர்ந்து ஒரே நாடாக்கிய விளைவுடன் முடிந்தது.
இந்த 65 வருடங்களில் இந்தியா நம் தேசம் என்று பெருமிதப் படத்தக்க கணங்கள் அரிதாகவே இருக்கின்றன.எங்கும் பெருகி வரும் ஊழலின் விகிதாசார வளர்ச்சி ஆண்டுக்காண்டு பெருகுவதும்,அரசு என்பது ஊழல் வாதிகள் திருடர்கள்,பொறுக்கிகள்,வன்முறை சக்திகள் ஆகியவர்களின் கூட்டமைப்பு ஆதிக்கத்தில் இருப்பது என்று இந்திய அரசாண்மை நாள்தோறும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் தாய்நாடு என்று பெருமிதப் பட வைக்கும் காரணங்கள் நாளுக்கு நாள் சிறிதாகிக் கொண்டே வருகின்றன.

தனது பொறுப்புகளில் எதையும் சரிவர நிறைவேற்றத் துப்பில்லாத இந்த தேசத்தின் அரசாட்சி மீண்டும் மீண்டும் உலகின் பல பகுதிகளிலும்,இந்தியாவுக்கு உள்ளும் கூட தமது குடிமக்கள் கேள்வி முறையற்று வன்முறையின் மூலம் கொன்றழிக்கப் படும்போதோ-கணக்கற்ற முறை பாம்பேயில் நடந்த குண்டுவெடிப்புகளும் அவற்றிற்கு அரசின் எதிர்வினையும் போல வேடிக்கை மட்டும் பார்க்கவோ அல்லது துப்புக் கெட்ட தனத்துடன் அறிக்கைகள் விடவோ அல்லது ஈழத்தில் நடந்தது போல இணைந்து அழிக்கவோ மட்டுமே முயன்றிருக்கிறது.

இந்திய விடுதலைக்காக சொல்லொனாத துயர்களையும் வலிகளையும் பெரும் எண்ணிக்கையிலான போராட்டக் காரர்கள் அனுபவித்திருக்கிறார்கள்,தியாகங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதும் வாழ்வின் அற்புதக் தருணங்கள் மற்றும் பருவங்களில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் உயிரையும் விருப்புடன் விடுதலைப் போராட்டத்திற்காகத் தந்திருக்கிறார்கள் என்பதும் பெரும்பான்மை நினைவுகளில் மறைந்து போய்,இந்திய சுதந்திரத்தை காந்தியும் நேருவும் கவட்டுக்குள் இருந்து எடுத்துக் கொடுத்து விட்டார்கள் என்பது போன்ற ஒரு பொதுக்கருத்து பொதுவாக நிலவுகிறது.

அதை மறுதளித்து இந்திய நாட்டுக்கு விடுதலை ரத்தம்,வலி,உயிர்த்தியாகங்களால் தான் கிடைத்தது என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒரு தருணமாகத் திகழ்வதால் இந்த நாள் என்னைப் பொறுத்த வரை ஒரு முக்கிய நாளாகப்படுகிறது.

நல்ல தலைவர்கள் நிரம்பிய, ஊழலும் வன்முறையும் அற்ற, பொதுமக்களின் நலன் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் நாட்டம் கொண்ட ஒரு அரசு வரும் போது இந்தியா என்ற நாட்டின் மனித வளமும் கனிம வளமும் இந்தியப் பொருளாதாரத்தை மென்மெலும் உயர்த்தும்;அத்தகைய உயர்வு பொதுமக்கள் அனைவருக்குமான வாழ்க்கையில் பிரதிபலிக்கும் ஒரு தினத்தைக் காண வேண்டும் என்ற ஆசை இருக்கும் அனைவருக்கும் இந்த நாட்டின் ஒருங்கிணைப்பைக் காக்க வேண்டிய அவசியமும்,அதற்காக இந்த விடுதலை நாளின் பெருமித உணர்வை கணப்பைப் போல் தேக்கி வைத்திருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்தியாவும் ஒரு தேசமாக பெருமிதப் படத் தக்க வகையில் மாறும் என்ற நம்பிக்கையுடனும்,அந்த நம்பிக்கை வளரும் வகையில் பணியாற்றவும்,பங்களிக்கவும் இந்திய மக்களாகிய நம் அனைவருக்கும் தேவையும் கடமையும் இருக்கிறது என்ற கருத்துடனும்

உலகெங்கிலும் வாழும் இந்தியத் தோழர்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்.
