சட்டமன்றத் தேர்தல் 2016 - வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கும் இந்த தேர்தல் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும் தேர்தல். எவ்வகையில்?
-இந்த வெதும்பல் நேர்மையாகச் செயல்படும் அதிகாரி என்றறியப் பட்ட ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரான திரு.சகாயம் அவர்களை மாநிலத் தலைமை ஏற்க வரும்படி பெருவாரியானவர்கள் மன்றாடி அழைத்த சூழல்
இருந்த முதல் தேர்தல் இது! (அவர் இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வில்லை என்பது வேறு. அத்தகைய சூழல், நேர்மை என்னும் வஸ்து பொதுவாழ்க்கையில் மிக அரிதாகிப் போனது என்பதை இந்த அளவு வெளிச்சமிட்டது இந்த அழைப்பு.) எனது பழைய பதிவான தேவை, திறமையா, நேர்மையா என்பது இங்கே நினைவிலாடுகிறது.
-திராவிடக் கட்சிகளுக்கான இருப்பின் தேவையையும் மீறி, அவற்றின் சுயமோகம்,ஊழல், தான்தோன்றித்தனம், ஏதேச்சதிகாரம், ரௌடியிசம், குடி வியாபாரம் போன்ற பல காரணங்கள் இக்கட்சிகள் இனியும் ஆட்சியில் இருப்பது தகாது என்ற எண்ணத்தைப் பெருமளவு மக்கள் மனத்தில் விதைத்திருக்கும் கால கட்டத்தில் நடைபெறும் தேர்தல் இது.
-கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக திராவிடக் கட்சிகளை மீறிய ஒரு வாய்ப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது என்று உறுதியாக எண்ணும் நிலையில் நடைபெறும் முதல் தேர்தல் இது; இந்த மாற்று வலுவற்றதாகவோ,உள்ளீடற்றதாகவோ,சாரமற்றதாகவோ,சாதி அடிப்படையிலோ இருக்கலாம்,மறுக்கவில்லை. ஆனால் இந்த மாற்றுப் பிரதிநிதிகள், அவை மநக, அல்லது பாமக, அல்லது நாம்தமிழர் எதுவாக இருந்தாலும் அவற்றில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் 20 அல்லது 30 பேர்களாவது இந்தத் தேர்தலில் வென்றால் திராவிடக் கட்சிகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கிடைக்கும். இது நடக்கும் சாத்தியக் கூறை மறுக்கமுடியாததால் இது ஒரு வித்தியாசமான தேர்தல்.
-இரு பெரிய கட்சிகளும் ஊழல் செய்து அடித்த பணதைத இந்தத் தேர்தலில் வாரி இறைத்திருக்கின்றன என்ற ஊகம் பரவாலாக இருக்கிறது;தேர்தல் கமிஷன் இரு தொகுதிகளில் தேர்தலைத் தள்ளி வைத்திருக்கிறது. இடைத் தேர்தல்களில் பணத்தை வீசி சில தேர்தல்களில் வென்றிருந்தாலும், பொதுத்தேர்தலில் பரவலான முறையில் பண விநியோகம் நடைபெற்றிருக்கும் தேர்தல் இது.
-தேர்தலில் வாக்களிக்கப் பணம் பெறுவது குற்றம் என்ற முட்டாள்தனமாக விதியைத் தூக்கி விட்டு, தேர்தலில் வாக்குப் பெற பணம் கொடுப்பது நிறுவப் பட்டால் தொடர்பான வேட்பாளர் ஆயுட்காலத்திற்கும் எந்தத் தொகுதியிலும் எந்தத் தேர்தலிலும் நிற்கத் தடையும், எந்தக் கட்சியின் சார்பாகப் பணம் கொடுக்கப் படுகிறதோ, அந்தக் கட்சி அத் தொகுதியில் அத் தேர்தலிலும், அதற்கடுத்த தேர்தலிலும் போட்டியிடத் தடை விதிக்கப் படும் விதிகள் இரண்டும் கொண்டு வரப் படவேண்டும். இவை இரண்டும் மட்டுமே வாக்களிக்கப் பணம் கொடுக்கப் படுவதைக் குறிப்படத் தக்க அளவில் தடுக்கும்.
-தமிழகத்தைப் பொறுத்தவரை சட்ட மன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எந்தத் தாக்கத்தையும் 1967 க்குப் பின் ஏற்படுத்தியதில்லை. அவை பெரும்பாலும் ஏதாவது ஒரு திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறியே பயணம் செய்திருக்கின்றன. இத் தேர்தலில் முதல் முறையாக பாஜக சட்டமன்றத் தேர்தலில் (வேறு வழியின்றி!) தனித்துப் போட்டியிட்டிருக்கிறது. காங்கிரஸ் இன்னும் தனது ஊழல்
பங்காளியுடனான நட்பை இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. ஒரு தேசியக் கட்சி சட்ட மன்றத் தேர்தலைத் முற்றாக தனித்து எதிர்நோக்குவது நீண்ட நாட்களில் இதுவே என்று நினைக்கிறேன்.
-மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் இத்தேர்தலில் கூடியிருக்கும் அனைத்து அதிருப்தியாளர்களும் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று சொல்ல இயலவில்லை; இந்த முயற்சியை
முன்னெடுத்த வைகோ உறுதியுடனும், உள சுத்தியுடனும் இந்த முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது அதிமுகவின் இரண்டாவது அணியாக இந்த முயற்சியில் ஈடுபட்டாரா என்பது இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது.(அவரது சில நடவடிக்கைகள் மற்றும் சில அறிக்கைகளின் காரணங்களால்!) இந்தக் கூட்டணியில் ஏதாவது தொகுதியில் நல்லவர்கள் பொது நல நோக்குள்ளவர்கள் போட்டியிட்டு அவர்கள் ஒருவேளை வென்றால் அது இந்தத் தேர்தலின் குறிப்பிடத் தக்க மாற்றமாக இருக்கும்.
-இத்தேர்தலிலை மநகூ தவிர அடுத்து மிக முட்டாள்தனமாக அணுகிய கட்சி சந்தேகமின்றி பாஜக. தேசிய அளவில் மத்தியில் ஆட்சியில் இருந்தும், ஒரளவு நல்ல முறையில் ஊழலற்ற ஒரு ஆட்சியை இதுவரை நரேந்திர மோடி மத்தியில் அளித்தும் அந்த நிலையின் பயனையும், தமிழகத்தில் நிலவிய அசாதரணமான திராவிடக் கட்சிகளின் மீதான கடைந்தெடுத்த பொது வெறுப்பைப் பயன்படுத்திக் கொளளும் ஒரு நல்வாய்ப்பை இழந்து முட்டாள்தனத்திற்காகவும் அவர்கள் மிக வருந்துவார்கள். விசயகாந்தையும், வாசனையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்து காலத்தை வீண்டித்தது அக்கட்சி,
-முதலிலேயே பாஜக தனித்த அணியாகப் போட்டியிடுகிறது என்று அறிவித்து, தொகுதி அளவில் சிறந்த வேட்பாளர்களைத் தேடிச் சேர்த்து நல்ல பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தால் அது மாநில சட்ட மன்றத்தில் ஒரு நல்ல பங்கீட்டை வழங்கியிருக்கலாம். அதன் முட்டாள்தனமாக கடைசி நிமிடம் வரையிலான கூட்டணி முயற்சி அக்கட்சியின் நற்பெயரையும் நம்பகத் தன்மையையும் பெருமளவு
குறைத்துவிட்டது. இருந்தும் வானதி சீனீவாசன் போன்று சிலர் இத்தேர்தலில் வெல்வார்கள். அவர்கள் சட்ட மன்றத்தில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து அக்கட்சியின் மீதான பார்வை வளரலாம்.
-எல்லாவற்றையும் மீறி இத்தேர்தலிலும் இரண்டில் ஒரு திராவிடக் கட்சி மற்ற தரப்பில் வெல்லும் சிறுமான்மை உதிரிகளை இணைத்துக் கொண்டோ அல்லது வாங்கியோ அவர்களேதான் ஆட்சியமைப்புக் கோரும். ஆனால் அவர்களது அந்த முயற்சி இம்முறை அவ்வளவு எளிதானதாக இருக்காது என்பதும் கடந்த 50 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சூழல்!
25'ம் தேதி சஸ்பென்ஸ்'க்கான காத்திருப்பு இன்றைய வாக்களிப்பு நாளிலிருந்து ஆரம்பமாகிறது!
No comments:
Post a Comment