காதல்!
உலகத்தின் உன்னதமான உணர்வுகளில் ஒன்று.
காதல் காதல் காதல் அது போயின்
சாதல் சாதல் சாதல் என்றான் பாரதி.காதலிக்கும் பெண் அளிக்கும் உற்சாகம் விண்ணையும் வெல்லும் சக்தியை அளிக்கும் என்றும் முரசறைந்தவன் அவன்.
இளமைப்பருவத்தில் தோன்றும் உன்னத உணர்வுகளில் ஒன்றான இதில் சரியான இணையைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்களும் யுவதிகளும் காதலின் உத்வேகம் மற்றும் தாக்கம் ஏற்படுத்தும் வெற்றிகளை வாழ்வு முழுதும் அனுபவிக்கும் அளவிலும் காதல் அமைவது உண்டு.தவறான ஒரு இணையைத் தேர்ந்தெடுத்து விட்டால் வாழ்வை சீர் குலைக்கும் எமனாகவும் மாறக் கூடிய அளவு மோசமான வீர்யமும் கொண்டது காதல்.
பல காதல்களில் தன் தேர்வைப் பற்றிய சரியான மதிப்பீடுகள் காதலில் பழகத் துவங்கிய பிறகு பல இணைகளுக்குத் தெரியும் வாய்ப்புளும் உண்டு;இந்த சூழ்நிலைகளில் கூட தன் அறியாமையை நினைத்து நொந்து கொண்டு விலகித் தப்பிக்கும் பல இளையர்களும் உண்டு.
இப்படியான நிகழ்வுகள் நம்மில் பலருக்கு இருந்திருக்கலாம்;அல்லது நமது இளமைக்காலத்தில் நம் தோழர்களிடையே இந்த விதமான எடுத்துக் காட்டுகளையும் நாம் பார்த்திருப்போம்.
ஆனால் காதலித்து விட்டோம் என்ற ஒரு காரணத்திற்காக,தான் தேர்ந்தெடுத்த நபர் அல்லது பெண் தீய குணங்கள் கொண்டவர் என்ற நிலையில் கூட,அந்த விவரங்கள் நன்கு தெரிந்த நிலையிலும் கூட,காதலைத் திருமணத்திற்கு எடுத்துச் செல்லும் இளையர்கள் இருப்பார்களா?
அதாவது,தான் தேர்ந்தெடுத்த இணையைப் பற்றிய மோசமான குணாதிசயங்கள் தெரியாத நிலையில் திருமணத்திற்குப் பிறகு அவை தெரிய வரும் போது அதிர்ச்சி அடைந்து தாம் தவறு செய்து விட்டாதாக நொந்து கொள்வோர்களைப் பற்றி நான் சொல்லவில்லை;மாறாக திருமணத்திற்கு முன்பே தான் தேர்ந்தெடுத்த நபர் அல்லது பெண் முழுக்க தவறான குணநலன்கள் கொண்ட நபர் என்று தெரிந்த பின்பும் அவர்களிடமிருந்து விலக இயலாமல் தன்னை சூழ்நிலைக் கைதிகளாக்கிக் கொள்ளும் நபர்களைக் கேள்விப்பட்டிருக்கறீர்களா?(நான் இதில் காமம் பற்றிப் பேசவே இல்லை,அதாவது அவர்களிடையே ஏற்கனவே உடல் சேர்க்கை ஏற்பட்டு விட்டது அதனால் பிரிய இயலாத நிலையில் இருக்கிறார்கள்-என்ற ஒரு கோணம் பற்றிப் பேசவில்லை).
நவீன காலக் காதல்களில் பல இளம் பெண்கள் இந்த விதமான முட்டாள்தன முடிவுகளை எடுக்கிறார்கள் என்ற ஒரு செய்தியைப் படித்த போது எனக்கு வியப்பேற்பட்டது,இந்த அளவுக்கு முட்டாள் தனமாகக் கூட இன்றைய இளைஞிகள் சிந்தனை ஊனத்தில் இருப்பார்களா என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை.
குழம்புகிறீர்களா..பின்வரும் செய்தியைப் படியுங்கள்...இது அவள் விகடன் பத்திரிகையில் வந்த ஒரு கல்லூரி முதல்வரின் கடிதம் இது..
கடந்த இதழில், தாங்கள் வெளியிட்டிருந்த 'காதல் என்னும் அடிமை சாசனம்' கட்டுரை படித்தேன். இன்றைய கல்லூரி மாணவிகளின் மிக முக்கியமான பிரச்னையை அவசியமான தருணத்தில் வெளி உலக்குக்குச் சொல்லி அலாரம் அடித்திருக்கிறீர்கள்! (அபாயமணி என்றும் மாற்றலாம்!) கல்லூரிப் பேராசிரியையாக 15 ஆண்டுகள் வேலை பார்ப்பவள் என்கிற முறையில் சொல்கிறேன்.. அந்தக் கட்டுரையில் நீங்கள் எழுதியிருந்த வார்த்தைகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு நிஜம்!
காதல் என்கிற மாய விலங்கை விரும்பி அணிந்து கொண்டு, பின்னர் அதற்காக வருந்தும் எத்தனையோ மாணவிகளை நானே தினம் தினம் பார்க்கிறேன். காதலன் சொன்னதற்காக செமஸ்டரை எழுதாமல் விட்ட மாணவியைப் பற்றித்தான் நீங்கள் எழுதியிருந்தீர்கள்.. ஆனால், காதலனின் சந்தேக புத்தியினாலேயே ஒரு மாணவி, கோ-எட் கல்லூரியில் இருந்து மகளிர் கல்லூரியான எங்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள் என்றால் நம்புவீர்களா? இதைக் காட்டிலும் மோசமான அடிமை நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள் இளம் பெண்கள்!
எனக்குத் தெரிந்து பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் நிலைமை தலைகீழாக இருந்தது. அப்போதும் மாணவிகள் காதலித்தார்கள்.. ஆனால், பிடி அப்போது பெண்ணின் கைகளில்தான். ''போ.. உன்கூடப் பேச மாட்டேன்..'', ''உன் லெட்டரைப் பிரிச்சுக்கூடப் பார்க்க மாட்டேன்..'' போன்ற ஆயுதங்களுக்கு அப்படியே அடிபணிவார்கள் பையன்கள்.
அப்படி இருந்த நிலைமை, இன்று இப்படி மாறிப் போயிருக்கிறது என்றால், என்ன காரணம் தெரியுமா? இந்தக் காலத்தில் காதலின் தன்மையே மாறிப் போயிருக்கிறது. ஆம்.. நான் படித்த காலத்தில் கூட, ''நான் இவனைக் காதலிக்கிறேன்'' என்று எந்தப் பெண்ணும் தைரியமாக சொல்லிக் கொண்டதில்லை. மிக நெருங்கிய தோழிகளுக்குக்கூடத் தெரியாமல் பரம ரகசியமாக நடக்கும் அவர்களின் சந்திப்பு. கல்லூரிப் படிப்பு முடியும் வரை யாருக்குமே சந்தேகம் வராமல் சமிக்ஞைகளில் காதலித்த ஜோடிகள் எல்லாம் உண்டு. கல்யாணப் பத்திரிகை கொடுக்க வரும்போது, ''ஊமைக் கோட்டான்களே!'' என்று நானே பலரை செல்லமாகத் திட்டியிருக்கிறேன். ஆனால், அவர்களின் திருட்டுத்தனத்தை ரசித்திருக்கிறேன். சங்க இலக்கியத்திலேயே காதலை களவு என்று ஏன் குறிப்பிட்டார்கள்? இந்தக் கள்ளத்தனம் தேவை என்பதால்தானே!
ஆனால், இன்றைக்கு இளைஞர்களின் நிலைமை அப்படி இல்லை. ''இவன் என்னோட பாய் ஃப்ரெண்ட்'' என்று சொல்லிக்கொள்வதில் மாணவிகள் பெருமைப்படத்தான் செய்கிறார்கள். மாணவர்களோ, ''இவள் என் ஒய்ஃப்!'' என்று அறிமுகப்படுத்தும் அளவுக்குப் போய்விட்டார்கள். நான் ஒரு பேராசிரியை. எனக்கே மாணவ, மாணவிகளின் காதல் பற்றி இத்தனை தெரிகிறதென்றால், அவர்கள் எத்தனை வெளிப்படையாக நடந்துகொள்கிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள்!
எல்லோருக்கும் தங்கள் காதல் தெரிந்து விட்டது.. இனிமேல் அவனைப் பிரிந்தால் சக மாணவிகளே தன்னைத் தவறாகப் பேசுவார்கள் என்ற பயம் காதலிக்கும் மாணவிகள் எல்லோரிடமும் இருக்கிறது. அவன் சொற்படியெல்லாம் இவர்கள் ஆடுவதற்கும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். இப்படி என்னை சிந்திக்க வைத்தவள் என் மாணவி ஒருத்திதான். அவள் பெயர் தேவி! (பெயரை மாற்றி இருக்கிறேன்).
கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே துறுதுறுப்பான பேச்சாலும் அபாரமான ஓவியத் திறமையாலும் எங்களுக்கெல்லாம் 'பெட் மாணவி' ஆனவள் தேவி. ஓவியப் போட்டி என்று எங்கு சென்றாலும் அவள் பரிசு வாங்காமல் திரும்பியதே இல்லை.
அப்படிப்பட்ட பெண் ஒருநாள், தான் ஓவியம் வரைவதையே நிறுத்திவிட்டதாகச் சொன்னாள். மாநில அளவில் நடைபெறவிருந்த ஒரு போட்டிக்காக அவளைத்தான் நாங்கள் அனுப்பி வைக்க இருந்தோம். ஒரு மணி நேரம் அவளோடு பேசிப் பார்த்தும் பயனில்லை. பிறகுதான் அவள் தோழிகளின் மூலம் விபரம் அறிந்தேன்.. அவளுடைய காதலன்தான் இனி ஓவியமே வரையக் கூடாது என்று அவளிடம் சொல்லிவிட்டானாம். ''ஏன்?'' என்று அதிர்ச்சியோடு கேட்டேன். ''அது வந்து மேம்.. 'டிராயிங்ல அவ பெரிய ஆளா பேர் வாங்கிட்டா, தன்னை விட்டுப் பிரிஞ்சு போயிடுவாளோனு அவன் பயப்படுறானாம். 'நான் முக்கியமா.. டிராயிங் முக்கியமா?'னு கேட்டிருக்கான்.. இவ டிராயிங்கை விட்டுட்டா''
- அவள் தோழிகளே தலை யில் அடித்துக் கொண்டுதான் இதைச் சொல்கிறார்கள். ஆனால், அவளுக்கு அவன் மேல் வெறுப்பே வரவில் லையே.. ஏன்? - இந்தக் கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.
ஒருமுறை தேவியை தனியே அழைத்துப் பேசினேன். எனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லி ஆறுதலாகப் பேசினேன். ''அவன் சந்தேக புத்தியும் பொறாமையும் உனக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டேன். ''எல்லாமே புரியுது மேம்'' என்று சொல்லி அதிர்ச்சி தந்தாள் அவள். தாரை தாரையாக அவள் கன்னமெங்கும் கண்ணீர்!
''அவன் கூடப் பழகின புதுசுலதான் மேம் நான் சந்தோஷமா இருந்தேன். அதுக்கு அப்புறம், அவன் சொல்றவங்ககிட்டதான் பழகணும்.. அவன் சொல்ற டிரெஸ்ஸைத்தான் போடணும்னு என்னோட சுயத்தையே இழந்துட்டேன் மேம். ரவுடிங்க சிநேகிதம், சிகரெட் பழக்கம்னு அவனோட இன்னொரு முகமும் இப்போதான் தெரியுது. இதெல்லாம் தெரியாம ஊரே பார்க்குற மாதிரி அவனோட வெளிய சுத்தியிருக்கேன் மேம்.. அதுதான் இப்போ என்னோட பிரச்னை.
நம்ம கிளாஸ் பொண்ணுங்க எல்லாருக்கும் அவனைத் தெரியும். ஒரு நாள் தியேட்டர்ல வச்சு 'இன்ட்ரோ' கொடுத்திருக்கேன். அதெல்லாம் ஏன்.. அவனைத்தான் கட்டிக்கப் போறேன்னு ஒரு தடவை வீட்டுல சொல்லி, பெரிய பிரச்னையே பண்ணிட்டேன். அப்பாவும் ஒருநாள் அவனை வீட்டுக்கு வரச்சொன்னார். பேசினார். அப்புறம் கல்யாணத்துக்கு சம்மதமும் சொல்லிட்டார். அதுக்கப்புறம்தான் அவனோட மனசு இவ்வளவு குறுகினதுன்னே எனக்குத் தெரிய வந்தது. இப்போ எதையுமே மாத்த முடியாது மேம்'' என்றவள், அதற்கு மேல் பேசக்கூட வலுவில்லாமல் அழுதுவிட்டாள்.
இது நடந்தது சென்ற ஆண்டில். இப்போது.. இரண்டு வாரங்களுக்கு முன் தேவி கல்யாணப் பத்திரிகையோடு வந்தாள். அவள் முகத்தில் கொஞ்சமும் ஒளி இல்லை.
''அவருக்கு சரியான வேலை இல்லை மேம். நான் படிச்சு முடிச்ச உடனே நல்ல சம்பளத்துல வேலைக் குப் போனேன் இல்லையா? அது அவருக் குப் பிடிக்கலை. வேலையை விடச் சொல்லி மிரட்டிக் கிட்டே இருந்தார். நானும் ஏதேதோ சமாளிச்சுக் கிட்டிருந்தேன். கல்யாணத் துக்கு அப்புறம் கண்டிப்பா வேலை பார்க்கக் கூடாதுனு சொல்லிட்டார். இப்போ தான் ஆபீஸ்ல ராஜினாமா கொடுத்துட்டு வர்றேன். இனி என் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கும். நினைக் கவே பயமா இருக்கு.
முதல்ல என்னோட திறமையைக் கொன்னார். இப்போ என்னோட தன்னம்பிக்கையா இருந்த வேலையைப் பிடுங்கிட்டார். அவரைப் பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு. ஒருவேளை நான் அவரோட சேர்ந்து ஊர் சுத்தாம இருந்திருந்தா.. எங்க லவ் நாலு பேருக்குத் தெரிஞ்சு அசிங்கப்படாம இருந்திருந்தா.. சத்தியமா இப்படி ஒருத்தரை நான் கட்டிக்கிட்டிருக்க மாட்டேன் மேம். எல்லார்கிட்டயும் இதைக் காதல் கல்யாணம்னு சொல்லிக்கிட்டிருக்கேன். ஆனா, எனக்கு ஒரு சதவிகிதம் கூட பிடித்தம் இல்லாம இந்தக் கல்யாணம் நடக்குது. இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக் கூடாது மேம்..'' என்று சொல்லிவிட்டு கண்களைத் துடைத்தபடியே எழுந்தாள்.
கடைசியாக என் பக்கம் திரும்பி, ''மேம்.. இந்த வருஷ செட்டுலயும் என்னை மாதிரி நிறைய பொண்ணுங்க யாராவது பையன்களோட சுத்துவாங்கல்ல..? தினமும் காலேஜுக்கு அவனோட பைக்ல வந்து இறங்குவாங்கல்ல..?'' என்றாள். நான் 'ஆமாம்' என்று தலையாட்ட, அவள் இதழோரம் தெரிந்த அந்த விரக்தியான புன்னகைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.
அந்தப் புன்னகை தந்த வேதனையோடு....
ஒரு பேராசிரியை!
இவை போன்ற நிகழ்ச்சிகள் நிகழ்வது ஏன்?இது சமூக விமர்சனத்தின் மீதான பயமா அல்லது just முட்டாள்தனமா?
இதை காதலின் எந்த வரையறைக்குள்ளாவது ஏற்றுக் கொள்ளமுடியுமா???!!!!!!
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
சோதனை
ReplyDeleteஎனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.. எந்த காலத்து பெண்களைப்பற்றி இப்படி எழுதியிருக்கீங்க???? இப்பொழுதெல்லாம் பெண்கள் வருடம் ஒன்று அல்லது இரண்டு நன்பர்களை கவனிக்கவும் நன்பர்களை இனம் காட்டத்தவறுவதில்லை, அதுபோல் கலயாணம் என்று வந்ததும் எந்தவித எதிர்ப்பும் இன்றி தாய் தந்தையர் பார்த்து வைத்திருக்கும் யு.எஸ், அயல்நாட்டு, மற்றும் மேல்மட்ட மாப்பிள்ளைகளைத்திருமணம் செய்து கொள்ளவும் தயங்குவதில்லை... நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் ஒரு 10 வருடங்களுக்கு முன்பாக என்று சொன்னால் கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது....
ReplyDeleteபல இளைஞிகளும் படிக்க வேண்டிய கட்டுரை. இந்த கோளாறு திரைப்படங்களில் காதல் சித்தரிக்கப்படுவதை அனுசரித்து அதை உண்மையென நம்புவதால் வரும் மயக்கம். அந்த வயதில் வீட்டுப் பெரியவர்கள் புத்தி சொன்னாலும் ஏறாது. பிறர் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால்தான் உண்டு
ReplyDeleteஎந்த சமூகத்தில் பெண்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வார்களோ அந்த சமூகம் சிறப்பாக முன்னேறும்.
கிருத்திகா,வாங்க..
ReplyDeleteஎன்ன 50 வருடத்திற்கும் முன்னால் இருந்த பெண்களைப் பற்றிய நிலவரம்னு பயந்திட்டீங்களா என்ன?
இந்தப் பதிவு எழுதிய தேதிக்கு அதிக பட்சம் இரண்டு வாரங்களுக்குள்ளான அவள்விகடனில் வந்த அனுபவ நிகழ்வுதான் நான் சுட்டியது.
எனக்கும் படிக்கையில் ஆச்சரியமாகத்தான் இருந்தது,இப்படியும் பெண்கள்,அதுவும் இக்காலத்திலா என்று..
ஆனால் சமூகம் எப்போதும் நமக்கு ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது,இது போன்ற சம்பவங்களின் மூலம் !
கபீர்அன்பன்,
ReplyDeleteவாங்க.முதல் முறையாக வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.நன்னி.
பெண்கள் கட்டுப்பாடு உடையவர்களாக இருக்கனும்னு நான் நினைக்கலங்க..
ஆனால் விவேகத்துடன் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
காதலிக்க தைரியம் இருக்கும் பெண் அவன் தவறானவன் என்று தெரிந்தவுடன் தூக்கி எறிந்து விட்டு உருப்படியான வேலையைப் பார்க்கும் தைரியம் உள்ள பெண்ணாக இருக்க வேணும்.
சம்பவத்தில் சுட்டப்பட்டிருக்கும் பெண் இரண்டும் கெட்டானாக தடுமாறியிருக்கிறது...
///பெண்கள் கட்டுப்பாடு உடையவர்களாக இருக்கனும்னு நான் நினைக்கலங்க..//
ReplyDeleteநான் சொல்லவந்தது மனக்கட்டுபாடு :)
//ஆனால் விவேகத்துடன் கண்டிப்பாக இருக்க வேண்டும்.///
மனக்கட்டுபாடு இருந்தால்தான் விவேகம் இருக்கும். அது இல்லாமல் போனால் புத்திமதிகளும் ஆலோசனைகளும் உள்ளே போகாது
>>நான் சொல்லவந்தது மனக்கட்டுபாடு :)
ReplyDelete>>
உண்மை...ஒத்துக் கொள்கிறேன்..
:)))