ப்ரகோலி என்ற ஒரு காய்-தவறு,காய் அல்ல பூ,இருக்கிறது.இந்தியாவில் பரவலாகத் தெனபடும் ஒரு பூ அல்ல இது.ஆனால் தற்போது ரிலையன்ஸ் ஃபரஷ் போன்ற கடைகளில் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்...

ப்ரகோலி-பார்க்க இப்படித்தான் இருக்கும்...
வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர் இதைப் பார்த்திருக்கலாம்,ஆனால் எத்தனை பேர் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று.
நானே சிங்கைக்கு வந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் இதை சுவைக்கத் தொடங்கினேன்.
இந்தக் பூ,பொரியலுக்கான காயாகப் பயன்படுத்த சிறந்த ஒன்று.
பார்ப்பதற்கு அடர் பச்சை நிறக் காலி ஃபளவர் போல் தோற்றமளிக்கும் இது,ஃபோலிக் அமிலம் மிக அதிகம் கொண்டள்ள மிகச் சில காய் வகைகளில் இதுவும் ஒன்று.ஆகையால் கருவுற்ற பெண்களுக்கு இந்தக் காய் அதிகம் பரிந்துரைக்கப் படும்.
இதைப் பயன்படுத்தி பல ரெசிபிகளை நான் முயற்சித்திருக்கிறேன்.சுவையான,எளிதான ஒன்று இங்கே..
ப்ரகோலி பொரியல்
தேவையான பொருள்கள்:
ப்ரகோலி(அஃப் கோர்ஸ்,அதில்தான் கறியே செய்கிறோம்!)-இரண்டு பூக்கள்,பெரிதெனில் ஒன்று
கடுகு,உ.பருப்பு-தாளிக்க
எண்ணெய்
மசாலாத் தூள் அல்லது சாம்பார்ப் பொடி
சிறிது மிளகுத் தூள்
செய்முறை:ப்ரகோலிப் பூவை சிறிது சிறிதாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்,காலி ஃபளவரை பகுப்பது போல் செய்தால் போதும்.பூ நல்லதாக இல்லையெனில் நிறையப் புழுக்கள் இருக்கும்,வெள்ளை நிறத்தில்,எனவே கவனம்.பரவாயில்லை இருந்தால் அது நான்வெஜ் ஐடமாக இருக்கும் என்பவர்களுக்கு வேலை எளிது !
பகுத்தவற்றை ஒரு பீங்கான் அல்லது அவனில்-ovan-உபயோகிக்கத் தகுந்த ஒரு கிண்ணத்தில் வைத்து அவனில் சுமார் 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
பின்னர் வாணலியில்-வானொலி அல்ல-இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு,உ.பருப்பு போட்டு வெடித்த பிறகு வேகவைத்த காயைப் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கிய பின் ஒரு தேக்கரண்டி சாம்பார்பொடி,சுமார் 15 மிளகைப் பொடித்த பொடி இரண்டையும் தூவி தொடர்ந்து வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.
அவ்வளவுதான் ! எளிதான சமையலில் சுவையான,சத்துக்கள் நிரம்பிய ப்ரகோலி பொரியல் தயார்!
சில முக்கிய குறிப்புகள்:1.ப்ரகோலி அதிக ஃபோலிக் அமிலம் மற்றும் சத்துக்கள் நிரம்பியதாக இருப்பினும் மேலிருக்கும் ஆயிரக் கணக்கான சிறு மொட்டுக்கள் போன்ற பகுதியில் அதிக வாயுவைத் தரக்கூடிய பொருள்களும் இருக்கும்;எனவே நுண்ணிய துண்டுகளாக்கப் பட்ட இஞ்சி அல்லது மிளகுத்தூள் கண்டிப்பாக இதனுடன் சேர்க்க வேண்டும்.
2.பூவை வாங்கும் போது அடர் பச்சை நிறத்திலும் எடை குறைவாக காற்றுப் போல இருப்பதையும் பார்த்து எடுக்கவும்;அவைதான் நல்ல பூக்கள் !