சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.
நூல் : சித்தர் பாடல்கள் திரட்டு
ஆசிரியர் : சிவவாக்கியர்
பாடல் எண் : 14
விளக்கம் : யோகநிலை
பதம் பிரித்த பாடல்:
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப் போதும் உளே மறிந்து நோக்கவில்லிரேல்
சாத்திரப் பை நோய்கள் ஏது சக்தி முத்தி சித்தியே
முக்கிய சொற்கள்:
மாத்திரை- கால அளவைக் குறிப்பதற்கான ஒரு சொல். ஒரு சொடக்குப் போட ஆகும் நேரம் ஒரு மாத்திரை அளவாகும். தொல்காப்பிய எழுத்ததிகாரம், குறில் மற்றும் நெடில் எழுத்துக்களை சரியாக உச்சரிக்கத் தேவையான கால அளவைப் பற்றிக் குறிக்கும் போது, மாத்திரை அளவைப் பற்றிப் பேசுகிறது
சித்தி - அடைவது, சித்திப்பது, எட்டுவது
சாத்திரப் பை- சாத்திரப் புத்தகங்களை நிரப்பிய பை, சாத்திரங்களை முக்கியமாகக் கருதும் நிலை
முத்தி - இறைவனை அடைந்த நிலை, பிறவியை ஒழித்த நிலை
முன்னோட்டம்:
சிவ்வாக்கியர் முக்கிய சித்தர்களில் ஒருவர்.
சைவ மரபினராக அறிவித்துக் கொண்டாலும் ராம அவதாரத்தைப் பற்றியும் தொழுது பாடியவர்.சமூகத்தின் மூடப் பழக்கங்கள் பலவற்றைச் சாடியவர்.
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்' என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் இவரே.
இந்தப் பாடலில் சித்தாந்த வழக்கில்,யோகநிலையின் மேலான நிலையை விளக்கிப் பாடுகிறார்.
பொருள்:
வேதங்கள்,சாத்திர நூல்களை இறைவனை அடைவதற்கும், பக்தி செய்வதற்கும் வழியாக அறிவித்து ஒயாமல் அவற்றை ஓதிக் கொண்டிருக்கும் சட்டநாத பட்டரே, உடல் நோயினால், மூச்சு கெட்டு, இரைப்பு நோய் வந்து இதயம் பலவீனமான நிலையில், வியர்வை பொங்கிப் பெருகும் போது, நீங்கள் படிக்கின்ற வேதங்கள் வந்து உங்களுக்கு உதவுமோ? ஒரு மாத்திரை கால அளவாவது, உங்கள் உடல்,எண்ணம்,சிந்தனை,மனத்தின் உள்ளே நோக்கி, சிந்தித்து, உயிரின் நிலையைப் பற்றி அறிய முயற்சித்தால்,சாத்திரங்களைக் கட்டிக் கொண்டு அழ வேண்டாம்; உடலை நோய்கள் தீண்டா ; உள்ளிருக்கும் சக்தி நிலை, பிறவாப் பெருநிலையை வழங்கி உங்களை உயர்த்தும்.
டிட்பிட்ஸ்:
- திருமந்திரமும் சரி,சிவ்வாக்கியர் போன்ற யோக சித்தர்களின் பாடல்களும் சரி, அவற்றின் உபதேசம் உடலைச் சரியான வழியில் பேணுதல், உடலை உறுதி செய்வதன் மூலம், உயிருடன் தொடர்பு கொள்ளும் நிலையை அடைதல் ஆகியவற்றைப் பற்றியே பெருமளவு பேசுகின்றன.
- யோக நிலையில் மூப்பு,நோய், நரை, திரை ஆகிய உடலுக்கு நேரக் கூடிய தீங்குகளைத் தடுக்கும் வழியறிந்து, அவற்றைப் பழகி,அனுபவித்து, அந்த நிலையை அடைய முடியும் என்றே அறிவித்துச் சென்றிருக்கின்றனர்.
- பயிற்சிகளின் மூலம் அந்த நிலையை உடல் அடையும் போது, உயிர் அல்லது ஆன்மா அல்லது சூட்சும சிந்தனையின் மூலத்தையும் தொடர்பு கொண்டு அதனை செயல்பட வைக்க முடியும் என்பதும் ஒரு இணை நிகழ்வாக-By Product-யோக நிலையில் கிடைக்கிறது.
- இந்தப் பாடலில் வேர்த்து இரைப்பு வந்த போது' என்ற சொற்றொடரில் குறிக்கும் நோய், இந்நாளைய இதய நோயான, ஹார்ட் அட்டாக்கின், அறிகுறிகளைக் குறிப்பதைக் கவனிக்கலாம்..
- முக்தி நிலை பற்றிப் பேசும் போது உடலும் நோய்கள் அணுகாது நிற்கும் என்று சொல்வதையும் கவனித்துப் பாருங்கள்...
- உடல் இறைவன் குடியிருக்கும் கோயில் என்று திருமூலர் குறித்த காரணமும், அதன் கருத்தும் இந்தப் பாடலிலும் உள்ளது.
16 | 365
சிறப்பான பகிர்வுக்கு நன்றி சார்...
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDelete