பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
நூல் : இரண்டாம் திருமுறை
ஆசிரியர் : திருஞானசம்பந்தர்
பதிகம் : திருவெண்காட்டுப் பதிகம்(048)
பாடல் எண் : 08
பதம் பிரித்த பாடல்:
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்து அன்று அருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
முக்கிய சொற்கள்:
பண் - இசை ; இன்மொழியாள்-இனிய மொழியை உடையவள் ; உன்மத்தம்- பித்துக்குளித்தனம் ; உரம்-மார்பு ; கண்-கண்கள் ; கருமஞ்ஞை-நீல மயில் ; பொழில் - நீர்ப் பொய்கை,வீழ்ச்சி ; வரி வண்டு - நீர்ச் சோலைகளில் திகழும் ஒரு வகை வண்டு ; முரல் - இசை பாடுவது
கருத்து:
இசையுடன் கூடிய பண்கள் போன்ற பேச்சை உடைய இனிய மொழியினளாகிய தேவி, அச்சப் படத்தக்க வகையில், கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த, பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்து அடக்கிய பின், அவனுக்கே அருள் செய்தவனாகிய சிவபெருமான் இருந்து அருள் பாலிக்கும் கோவிலைக் கொண்டும்; பல கண்கள் நிரம்பிய தோகைகளை உடைய நீல மயில்கள் நடனமாடும் இடமாகவும்;(கடற்கரைக்கு அருகில் இருக்கும் காரணத்தால்) கடல் முழங்கவும், வானளவிற்கு பொங்கிப் பெருகும் பொழிலில், வரி வண்டுகள் இசைபாடவும் திருவெண்காடு விளங்குகின்றது.
டிட்பிட்ஸ்:
- இந்தப் பாடல் அமைந்த பதிகம் திருவெண்காட்டுப் பதிகம்
- இப்பதிகத்தை பக்தியோடு ஓதி அம்மையப்பனை வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் தவறாது கிடைக்கும் என்பது நம்பிக்கை
- பேயடையா பிரிவு எய்தும் என்று ஒரு பாடல் இந்தப் பதிகத்தில் இருக்கிறது.அதில் மகப்பேறும், மற்ற எல்லா செல்வங்களும் தவறாது வாய்க்கும்,சிறிதும் ஐயம் வேண்டாம்' என்று டிக்ளேர் செய்கிறார் சம்பந்தர்.
10 | 365
மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி தனபாலன்..
ReplyDeleteநாளொரு பாடல் பதிவுகள் அனைத்திற்கும் முதல் பின்னூட்டம் உங்களுடையதாகவே இருக்கிறது. :))