காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம்
சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும்
நூல்: நீதி நெறி விளக்கம்
ஆசிரியர்:குமரகுருபரர்
பாடல் எண்:52
பதம் பிரித்த பாடல்:
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின்
மூலம் அறிந்து விளைவு அறிந்து- மேலும் தாம்
சூழ்வன சூழாது துணைமை வலி தெரிந்து
ஆள்வினை ஆளப்படும்
முக்கிய சொற்கள்:
மூலம்- வேர்,காரணம்,நோக்கம்
வலி-வலிமை,திறமை
ஆள்வினை-முயற்சி
ஆளப்படும்-செய்யப்படும்
கருத்துரை:
நாம் ஒரு காரியத்தை முயற்சிக்கையில்,அக் காரியத்தின் நோக்கம் மற்றும் பயன் ஆகிய இரண்டையும் ஆராய்து,அக் காரியத்தை முடிக்க ஏதுவான நேரம் எது என்று ஆராய்ந்து, அதனை செய்து முடிக்க வல்ல இடம் எது என்பதையும் ஆய்ந்து தேர்ந்து, அவ்வினையைச் செய்வதற்கான துணையாக வருபவர்களின் திறமையும் வலிமையையும் ஆராய்ந்து, அக்காரியம் செய்ய முயற்சிக்கையில் நிகழக் கூடிய சுற்றுப் புற சூழலையும்,மக்களையும் ஆராய்ந்து, பிறகு முயற்சி செய்தால்,அந்த முயற்சியானது தடைகளின்றி நிறைவேறும்.
டிட் பிட்ஸ்:
பொதுவாக விணை செய்யும் முறைக்கு இந்தப் பாடல் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப் பட்டாலும், போர் செய்யும் சூழலில் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய விதயங்களைக் குறிப்பிடும் பாடல் இது.
காலம் அறிந்து என்ற பொருள்,தனக்கு உகந்த காலம் என்பதோடு,அவ்வினையை எவரிடம் அல்லது எவரை வைத்து முடிக்கப் போகிறோமோ அவருடைய சூழல் என்ன என்பதையும் ஆராய வேண்டும்.
இடம்-வினை முடிக்க வேண்டிய இடத்தை முடிவு செய்வது இரண்டாவதாக முக்கியமான செயல்.
சூழ்வன சூழாது- நமது வினைக்கு ஊறு விளைவுக்கும் காரணிகள் ஏதும் சூழ நேருமா என்பதை ஆராய வேண்டுவதும் இன்றியமையாதது.
துணைமை வலி- தமது துணைவர்கள் மற்றும் தனது எதிரில் நிற்பவர்களின் வலிமையும் எடை போட்டுப் பார்க்க வேண்டிய தேவையை வலியுறுத்துவது.
மூலம்- அவ்வினை செய்வதற்குரிய நோக்கம் சரியானதா என்பதை ஆராய வேண்டும் என்ற கருத்து
ஆகிய அனைத்தையும் ஒரு வினை செய்யப் புகுமுன் ஆராய வேண்டும் என்பது விளக்கம்.
3 | 365
அருமையான கருத்துக்கள்.... நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன்..
ReplyDelete