உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.
நூல் : பத்தாம் திருமுறை | திருமந்திரம்
ஆசிரியர் : திருமூலர்
தந்திரம் : இரண்டாம் தந்திரம்
பாடல் எண் : 18
உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெட
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடை கல்வி இலாரே
முக்கிய சொற்கள்:
வினை- நல்வினை, தீவினைப் பயன்கள்
ஆடார் - தீர்த்தமாடுதலைச் செய்யாதவர்
பொருள்:
வஞ்ச மனம் படைத்த, கல்வி அறிவு அற்ற அறிவிலிகள், தேசத்தில் பல்வேறு இடங்களுக்கு, மேடும் பள்ளமுமான இடங்களுக்கு அலைந்து திரிந்து, கோவில்களுக்குத், தீர்த்தமாடுதலை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்கிறார்கள்; அது போன்ற அறிவிலிகள், தத்தமது உள்ளத்தை நல்ல சிந்தனைகளாலும், அறிவாலும் நிரப்பினால், உள்ளத்தின் உள்ளேயே அந்த நற்பண்புகள், தீர்த்தங்கள் போலத் திகழும்; அத்தகைய நற்பண்புகள் நிரம்பிய மனமாகிய தீர்த்தங்களில் மூழ்குதலைப் பயிலும் போது, நமது வினைப் பயன்கள் ஒழிந்து (நாம் பிறவாப் பெருநிலையை அடைவோம்.) நல் நிலையை அடைவோம்.
டிட்பிட்ஸ்:
- உள்ளத்தின் உள்ளே தீர்த்தங்கள் உள்ளன் என்றது சிந்திக்கத் தக்கது.நற்பண்புகள் நிரம்பிய அறிவுடையோரின் உள்ளம் அல்லது சிந்தனை நல்ல தீர்த்தங்களை ஒத்தது. புனிதத் தீர்த்தங்களில் மூழ்கி எழுவது போல, நல் மனத்தில் மூழ்கி எழும் போது நற் சிந்தனைகள் எழும்.
- மெள்ளக் குடைந்து நீராடச் செல்வதும் யோசிக்க வேண்டியது. தூய நீர்த் தடாகங்களில் நீந்தித் திளைத்து நீராடும் போது உடலானது, சொல்ல இயலாத புத்துணர்வு பெறுகிறது; நற் சிந்தனைகள் நிரம்பிய உள்ளத்தை சிந்தனைகள் குடையும் போது, சிந்திப்பவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களைச் சுற்றியிருப்போரும் அந்த நல்ல சிந்தனைகளால் நன்மை அடைகின்றனர்.
- தீர்த்தங்கள் குளிப்பவரைக்கு உடல் தூய்மையை மட்டும் அளிக்கும்; உள்ளத் தீர்த்தமாடல், சிந்தனைத் தூய்மையையும் அதன் மூலம் நல்வாழ்வையும், அவர்களைச் சார்ந்த நல்ல சூழலையும் தருகிறது.
- தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு என்றது வள்ளுவர் வாக்கு. மேலும் மேலும் கற்பதற்கு ஏற்ற அளவு அறிவானது விரிவு பெருகிறது; விசாலமடைகிறது. எனவேதான் மெள்ளக் குடைந்து, நின்று , ஆடார் என்ற வார்த்தைகளை வைத்திருக்கிறார் தீருமூலர். அறிவுத் தீர்த்தமாடல் நிதானமாக, ஆழ்ந்து, பலமுறை நிகழும் போது அதனால் கிடைக்கும் பயனும் அளப்பரியது.
15 | 365
அருமையான விளக்கம் சார்... மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி நண்பர் தனபாலன்
Delete