மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே
நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : இராமச்சந்திரக் கவிராயர்(இப்பாடலுக்கு)
காலம் : 19 | 20 ம் நூற்றாண்டு.
பதம் பிரித்த பாடல்:
மேரு சாபமும் மேவுமே
மேவுமே உணவு ஆலமே
மேலவாம் அவன் ஆயமே
மேய் அனான் அடி சேருமே
முன்னோட்டம்:
சித்திரக் கவி என்றது ஏதாவது ஒரு சித்திரத்தின் (உருவப் படம்) வடிவிலேயே அமையுமாறு பாடல் எழுதும் திறமை. இந்த சித்திரக் கவியை எழுதியது இராமச் சந்திரக் கவிராயர்.
சித்திரக்கவி எந்த சித்திர வடிவத்தில் வேண்டுமானாலும் எழுதப் படலாம். இது நான்கு ஆரச் சக்கர வடிவில் எழுதப் பட்ட நான்காரச் சக்கரபந்தம் என்ற வடிவில் அமைந்தது.
நான்கு ஆரச் சக்கர வடிவ சித்திரக் கவி |
இந்தப் பாடலில் 32 எழுத்துக்கள் இருந்தாலும், உண்மையில் சித்திரக் கவி வடிவத்தில் பார்த்தால் 16 எழுத்துக்கள் மட்டுமே வரும். நடுவில் உள்ள எழுத்து எட்டு முறை பாடலில் வந்து எட்டு எழுத்துக்களாகும்; ஆரங்களில் இருக்கும் எழுத்துக்கள் எட்டும் இருமுறை வாசிக்கப்பட்டு பதினாறு எழுத்துக்களாகும்(அதாவது ஆரத்தில் மையத்தில் இருந்து வட்டத்திற்கு ஒரு முறையிலும், வட்டத்திலிருந்து மையத்திற்கு ஒரு முறையிலுமாக,ஒவ்வொரு ஆரத்தின் எழுத்துக்களும் இரண்டு முறை பாடலில் வரும்); சுற்று வட்டத்தில் அமைந்த எட்டு எழுத்துக்களும் ஒரு முறைதான் வரும்.
இவ்வித சித்திரக் கவி'ப் பாடல்கள் எழுத,செழுமையான மொழிப் பயிற்சியும் திறனும் வேண்டும்.
வியப்பூட்டும் வகையிலான வடிவமும், கருத்துப் பொருளும் அமைந்த சித்திரக் கவிப் பாடல்கள் நிறைய உள்ளன.
பொருள்:
மேரு சாபமும் மேவுமே-மேரு மலையானது சிவபெருமானுக்கு வில்லாகப் பொருந்துகிறது; மேவுமே உணவு ஆலமே- ஆலகால விடமானது அவனுக்கு உணவாகிறது; மேலவாம் அவன் ஆயமே - அவனது பரிவாரங்கள் மேலானவை
மேய் அனான் அடி சேருமே-அந்த மேன்மையான பெருமானின் அடிகளை பற்றுக் கோடாகக் கொண்டு சேருங்கள் !
டிட் பிட்ஸ்:
- சித்திர வடிவத்திற்கேற்ற விதிமுறைகளோடு, பாடல் சொற்களுக்குப் பொருளும் கருத்தும் இருக்க வேண்டுவதும் முக்கியம்
- அதையும் எண்ணும் போதுதான் சித்திரக் கவிதை எழுதுவதன் கடினமும், அதற்கான திறமையும் புரியவரும்.
13 | 365
அறியாத பல விசயங்கள் ஐயா...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி நண்பர் தனபாலன்.
Delete