மெட்ராசுபேப்பர் (madraspaper.com) (இணைய) வார இதழுக்காக எழுதிய கட்டுரை.
முக்கியக் குறிப்பு : இதில் உள்ளது கட்டுரையின் முழுவடிவம். இதழில் வெளிவந்த போது, இதழ் தேவைகளுக்கேற்ப சிறிது சுருக்கப்பட்ட வடிவம் வெளிவந்தது. அது இதழின், இதழாசிரியரின் உரிமையும் கூட.
கட்டுரை அதன் முழுவடிவில் இங்கு சேமிக்கப்படுகிறது, படிக்கக் கிடைக்கிறது.
சிங்கப்பூர் !
இந்தச் சொல்லைக் கேட்டவுடன் உங்களுக்குத் தோன்றுவது என்ன?
பெரும்பாலும் பலரும் சொல்லுவது, ஓ, பிரமாதமான நாடு, பிரமாதமான நகரம்! என்பது. இன்னும் சிலர், ஓ, லீ க்வான் யூ என்ற பிரமாதமான பிரதமர் இருந்தாரே, அவர் ஆண்ட நாடா' என்பார்கள். மேலும் விவரமறிந்த சிலர், ‘சுமார் 240 சதுர மைல்கள் பரப்பளவே கொண்ட நாடு அது; இப்போதைய மக்கள் தொகை சுமார் ஐந்தரை மில்லியன் (55 லட்சம்); தமிழ், மலாய், சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் தொடர்பு, நிருவாக, வணிக மொழியாகவும் கொண்டிருக்கிறது; சீன சிங்கப்பூரியர்கள் 74 சதம், மலாய் சிங்கப்பூரியர்கள் 14 சதவிகதம், தமிழ் சிங்கப்பூரியர்கள் 11 சதவிகிதம் கொண்டது; 95 சதவிகதம் படிப்பறிவு கொண்ட நாடு ; தேசிய உற்பத்தி (2103’ல் சுமார் 339 பில்லியன் டாலரும் ( சுமார் 3,39,000 * 75 = 25,42,000 கோடி ரூபாய்கள்!), தேசிய ஆண்டு தனிநபர் வருமானம் சுமார் 62,500 டாலர்கள் ( சுமார் நாற்பத்து ஏழு லட்சம் இந்திய ரூபாய்கள்); மக்களின் சராசரி ஆயுள் சுமார் 84.50 ஆண்டுகள்; ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமா் 4.1 சதவிகிதம் ; ஆண்டு பணவீக்கம் 5.2 சதவிகிதம் கொண்ட நாடு ' என்றெல்லாம் புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவார்கள்.