சிவம் என்னும் தத்துவத் தோற்றுவாய்
பழந்தமிழர் வாழ்வில் லிங்க வழிபாடு இருந்திருக்கிறது என்பதற்கு தனியான சான்றுகள் தேவையில்லை;இன்னும் சொல்லப்போனால் ஆப்பிரிக்கா,சீனம்,ஆஸ்திரேலியாவின் அகழ்வுகளின் போதும்,சிந்து,மொஹஞ்சதாரோ அகழ்வுகளின் போதும் லிங்க வடிவம் மற்றும் யோக வடிவங்களும் (அகழ்வுப்பொருள் எண் 420)கிடைத்திருப்பதற்கான சான்றுகள் இருப்பதும் காணக்கிடைப்பதே.இந்த யோகிகளின் வடிவம் யோகிகளின் தலைவனாக பழந்தமிழ் நாட்டில் அறியப்படும் சிவனின் வடிவமே என கற்கால இந்திய ஆய்வில் ஈடுபட்ட ‘ஸ்டெல்லா க்ராம்ரிஷ்’ என்ற பெண்மணியின் நூற்கருத்துக்கள் சொல்வதும் சிந்திக்க வேண்டுவது.
எனில் சிவத்துக்கான தோற்றுவாய்க் காலம் என்ன?
தொல்காப்பிய மொழி விதிகள் சகர மெய்யோடு இகரமும்(ச்+இ) சேர்ந்து சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடாது எனச் சொல்லவில்லை.
இரண்டாவதாக அகத்தியரின் மாணாக்கர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் கழாரம்பர்
“தமிழ்,சிவம் இனிமை என்னும் தனிப் பொருளாம்”
எனச் சொல்லும் கூற்று,தமிழ் என்ற சொல்லுக்கே,சிவம்,இனிமை என இரு பொருள் இருக்க வாய்ப்பிருப்பதைக் குறிக்கிறது.விளக்கத் தேவையின்றி இது தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட அல்லது தொல்காப்பிய காலமே.
இன்னோரு தொல்காப்பிய பாயிரக் குறிப்பு நாவலந்தேயத்தை
“செந்தமிழ் இயற்கை சிவனிய நிலம்”
எனக் குறிப்பிடுகிறது.
லிங்கம் என்ற சொல்லுக்கு குறியீடு என்று பொருள்;சிவலிங்கம் என்பது சிவம் என்னும் தத்துவத்தை குறிக்கும் குறியீடு (‘குறி’ அல்ல) எனப் பொருள்படும்.
பண்டைத்தமிழர் கடவுட்கொள்கை சிவம் என்னும் தத்துவத்திற்கு பால்வேறுபாடு கூட(gender) குறிப்பிடவில்லை.திருமந்திரம் சதாசிவம் என்றே குறிக்கிறது.சிவம் என்னும் தத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய,அனைத்தினுக்கும் புறத்துமாயிருக்கிற ஒரு தத்துவமாகவே தமிழர் கடவுட் கொள்கை அறிவுறுத்துகிறது.
திருமந்திரத்தின் காலம்
இன்னும் வட்டெழுத்துக்காலத் தமிழ் மொழி 16 உயிரும் 35 மெய்யும் ஆக 51 எழுத்துக்களைக் கொண்டது என்பது மொழியியல் ஆய்வறிஞர்களின் துணிபு.
இந்த வட்டெழுத்துக் காலம் தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்டது.
திருமந்திரத்தில் திருமூலர்
“ஆறிருபத்து நாலஞ்செழுத் தஞ்சையும்
வேறுருவாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே”
என்கிறார்.
இது 35 விளைந்து கிடக்கும் மெய்யெழுத்துகளுள்(ஆறு+இருபத்து நான்கு+ஐந்து) மலம்(அறியாமை) நீக்கும் சிவாயநம என்ற சொல்லைத் தேறிக் கூறுமின் கூறக்கூடிய குறைகள் ஏதும் இருக்காது எனச் சொல்வது திருமந்திரத்தின் காலம் பற்றிய சர்ச்சைகளுக்கு முடிவு கூறுவது.
எனவே தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்ட நூலாகவே திருமந்திரம் இருந்திருக்க வேண்டும் என்பதும்,அக்காலத்திலேயே சிவ வழிபாடு இருந்தது என்பதும் தெளிவு.
மேற்குறிப்பிட்ட இரு விளக்கங்கள் தொல்காப்பிய காலத்துக்கு முன்னரே சிவம் என்னும் தத்துவம் மற்றும் லிங்க வழிபாடு தமிழகத்தில்,தென்னாட்டில் இருந்தது என்பதற்கும்,ஏதோ காரணம் பற்றி தொல்காப்பியத்திற்கு முன்னைய அருந்தமிழ் தத்துவ நூல்கள் கிடைக்கப்பெறவில்லை(இக்காரணம் பின்னர் ஆராயப்படும்) என்பதும் அறியப்படும்.
ஆரியர் வருகை:
1.ஆரியர்கள் என்று வரலாற்றால் குறிக்கப்படுபவர்கள் இன்றைய ஈரானிய நிலப்பகுதிகளில் இருந்து இந்தியப்பகுதிகளுக்குள் நுழைந்தவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
2.இவர்கள் நாவலந்தேயத்தில் வாழ்ந்த மக்களுடன் ஒப்பிடும்போது அதிக உயரமாகவும்,வெம்மை கலந்த சிவந்த நிறம் கொண்டவர்களாகவும்,ஆடல்,பாடல் திறன் மிக்கவர்களாகவும் விளங்கியவர்கள்.
3.இவர்கள் வந்த காலம் தென்பகுதியைக் கடல் கொண்ட காலமாகவே இருக்க முடியும்;இந்த கடல் கோள் தென்பகுதி நிலத்தைப் நீரால் பிறித்தும் வடபகுதி நிலத்தை நிலத்தால் இணைத்ததுமான மாறுதல்களைச் செய்திருக்க வேண்டும்,எனவேதான் இந்தியப் பகுதிகளுக்குள் நுழைய மத்தியக் கீழ் நாட்டு நிலப்பகுதியிலிருந்து நிலப் பாதை இந்த இயற்கை மாறுபாடுகளால் நேர்ந்திருக்க வேண்டும்.
4.இவர்கள் வந்த காலத்தில் நாவலந்தேயம் பரவலாக தமிழ் பேசும் தமிழர்களால் நிறைந்து தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது.
5.இவர்களது தோற்றப் பொலிவாலும்,ஆடல் பாடல் திறனாலும் கவரப்பட்ட நாவலந்தேய மன்னர்கள் இவர்களுக்கு பல சலுகைகளை செய்யத் தலைப்பட்டார்கள்.
6.இவர்களின் வழிபாடு முறை தீ வேள்வி வளர்த்து அதில் மிருகங்கள் பலி கொடுத்து அக்னியையும்,இந்திரனையும் வழிபடும் முறையே.ருத்ரன் என்னும் ஒரு உருவகத்தை அழிவின் தேவதையாக குறிப்பிட்ட இவர்கள் அந்த உருவகம் சிவந்த நிறமுடைய,கோபாவேசத்துடன் கூடிய அழிவின் நாயகன் என்ற குறிப்பை முன்வைத்தனர்.இது வழிவழியாக நாவலந்தேயத்திலேயே சிறப்புற வாழ்ந்த மக்களின் வழிபாட்டும் முறையை விட தங்கள் வேள்வி வழிபாடு உயர்ந்தது,சிறந்தது என்ற தன்னை மேற்படுத்திக்கொள்ளும் செயலால்,இந்த ருத்ரன் என்னும் அழிவு வடிவத்தை,அன்பால் குறிப்பிடப்படும்,அன்பின் வடிவாகவே அறியப்பட்ட சிவத்தின் மீது ஏற்றினர்.
இந்த வேறுபாடு கொலை வேள்வி வழிபாட்டு முறைகளை அன்பின் வழி வாழ்வு முறை கொண்ட தமிழர்கள் ஏற்காததாலேயே ஆரியர்கள் சிவம் என்னும் தத்துவத்தையும்,அத்தத்துவம் கொண்டிருக்கும் ஆழ்ந்த தத்துவப் புதையல்களையும் அழித்தொழிக்கும் முறைகளை,மன்னர்களிடம் ஏற்படுத்திக் கொண்ட செல்வாக்கின் மூலம் செயற்படுத்தத் தலைப்பட்டனர்.
இந்த செயல்கள் ரிக் வேதத்தின்(வடமொழியின் முதல் நூல் ரிக் என்பதை அறிக..ரிக் தொடர்ந்த எல்லா வடமொழி நூல்களும் ஆரியர்கள் நாவலந்தேயத்திற்குள் நுழைந்த பிறகே ஆக்கப்பட்டன;வாழ்வு தேடி இடம் பெயரும் ஒரு இனத்தவராக வந்த அவர்களுடன் எந்த தத்துவ சாரங்களும் அற நூல்களும் உடன்வர வில்லை;அவை(ரிக்,யஜுர்,சாம,அதர்வண) கூறும் செய்திகளை-contents- வைத்தே இந்தக் கூற்றுகளை அறியலாம்.) 2’ம் மண்டலம் 20’ம் பண்ணில் சொல்லப்பட்டுள்ள 6 மற்றும் 7’ம் பாடல்களில் உள்ளன.அவை சொல்வதாவது:
‘அரிய காரியங்களை முடிப்பவனும்,மிகப்புகழ் பெற்ற இந்திரன் ஆரியமகனை உயர்த்துகிறான்;வலிமையும் ஆற்றலும் வெற்றியும் உடையோனாய் அருவருக்கப்படும் தாசனை(தமிழர்கள்) தலை கவிழச் செய்கிறான்’
மேலும் ரிக் 5’ம் மண்டலம் 10’ம் பண், 7’ம் மண்டலம் 21’ம் பண்,96 ஆவது பண்,99’ம் மண்டலம் 3’ம் பண் ஆகிய பாடல்கள் தமக்கு வலிமை கூடும் பொருட்டு அளவற்ற விலங்குகளைக் கொன்று நிணம்,நெய்,சோமச்சாறு சொரிந்து செய்யப்பட்ட தீ வேள்விகளையும்,தாஸரஞ்சப் போரில்,சுதாஸை எதிர்த்த ஆரியரல்லாத விஷானிகள் சிவாக்கள் என்பவர்களை இந்திரன் துணை கொண்டு வென்றதாகவும் பொருள்படும் குறிப்புகள் கிடைக்கின்றன.
மேலும் சிவ வழிபாடு செய்தவர்கள் சிஸனதேவர்கள் எனவும்,சிவாக்கள் எனவும் இழிவாகக் கூறி கொலை,தீ வேள்வி செய்யாத,அதை ஏற்காத மக்களை,ருத்திரனைப் போற்றாதவர்களை தீயிட்டு அழித்த வரலாறுகளை இவை பேசுகின்றன.இவை ரிக் ‘சிவம்’ என்ற தத்துவத்தை இழிவாகவே பேசுகிறது என்பதற்கான சான்றுகள்.
ஆரிய/தமிழர்கள் உடன்படிக்கைகள்:
ஆளும் மன்னவர்களிடம் தங்களுக்கிருந்த செல்வாக்கினாலும்,பலத்தாலும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் விந்தியமலைக்குத் தெற்கே துரத்தப்பட்டனர்;அந்தப் பகுதி தெக்கணம் என அழைக்கப்பட்டது;ஆரியவர்த்தம் என்றழைக்கப்படும் ‘இந்துஸ்தானம்’ என்ற நாட்டுப் பகுதி வரையறுக்கப்பட்டு இதன் தெற்கெல்லையாக விந்திய மலைப்பகுதி வரையறுக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கை பற்றிய செய்திகள் ‘போதாயன சூத்திரம்’ என்னும் வடமொழி நூலின் ஆமத்ஸ்தம்பத்தில் பேசப்படுகின்றன.
ஆயினும் இதன் பின்னரும் இந்த உடன்படிக்கைகள் மீறப்பட்டு பற்பல காலங்களில் தென்னாடு நோக்கி அவர்கள் கூட்டமாக (பிரகச்சரணர்(எல்லோருக்கும் முதலில் வந்தவர்),அஷ்ட சகஸ்ரம்(எண்ணாயிரம் பேர்) நகர்ந்ததும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது.
ருத்ரன்,ருத்ர சிவனான கதை:
ருத்ரன் என்னும் கொடும் தேவதையை ரிக்’ல் குறிப்பிட்ட வடமொழி ஆரியர்கள் பின்னர் இயற்றப்பட்ட யஜுர்,சாமம்,அதர்வண’த்தில் ருத்ரனுடன் சிவன் என்னும் சொல்லையும் சேர்த்து ருத்ரசிவன் என்றாக்கிக் கொண்டனர்;இது தென்னாட்டில் சிவம் என்னும் தத்துவத்துக்கிருந்த அழித்தொழிக்க முடியாத நன்மதிப்பை தான் வழிபடும் ருத்ரன் என்னும் பிரதிமைக்கு ஏற்றும் ஆரியரது முயற்சியே இந்த ருத்ரன் ருத்ரசிவனான கதை.
இதற்கான சில தரவுகள் பின்வருவன,மஹாதேவ் சக்ரவர்த்தி எழுதிய The Concept of Rudra-Siva through Ages என்ற புத்தகத்திலிருந்து.(ரிக்’ன் மண்டல/பண்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)
In Rgveda,Rudra is described as fierce^1 and
destructive like a terrible wild beast ^2,swift ^3,the red boar of the sky
^4,the cow-slayer ^5,the man-slayer ^6,the lord of animal sacrifices ^7,the
father of Rudras or Marats ^8 and who bears swift arrows and strong bow
^8.
He is also identified with Agni ^9.
No distinct
cosmical functions are ascribed to him ^10,
He is,
in the vague & uncertain anthropomorphic form, of the dreadful &
destructive powers of nature-of forests, lighting and forest fires
^11.
1- Rig II.33.9
2- Rig II.33.11
3- Rig I-114.4
4- Rig I-114.5
5/6- Rig I-114.10
7- Rig I-43.4
8- Rig I-114,II.33
9- Rig II-33.10
10- Rig VII-46.1
11- TAG Rao,in Elements of Hindu Iconography
இவ்விதமாக ரிக்’ல் கீழ் நிலையான பயப்படுத்தும் தேவதையாக உருவகிக்கப்பட்ட ருத்ரன்,வரலாற்று நிலையில் மிகப்பின்னால் உள்ள உபநிடதங்களில்(ப்ரஹதாரண்யக,ஐத்ரேய,சாண்டோக்ய உபநிடதங்கள்) ருத்ர-சிவனாக மாற்றம் பெற்று அனைத்துக் கடவுளர்க்கும் மேலான கடவுளாக,உருவற்ற ‘பிரம்மம்’ ஆக,வேதங்களை உருவாக்கித்தந்தவனாக ‘உருமாற்றம்’ அடைகிறான்.
இதற்கான காரணம் எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடியதே.ஒரு பகுதியின் உயர்ந்த சிறந்த ஒரு பொருளை,தத்துவத்தை தமது உடமையாக அறிவிப்பதன் மூலம் அப்பொருளை,தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர் யாமே என்ற மயக்கறிவைத் தோற்றுவிப்பதே நோக்கம் என்பதை யாரும் அறியலாம்.
தமிழர்களின் கடவுட் கொள்கையில் அன்பின் வழியாகி அனைத்தினுக்கும் உள்ளாகவும்-புறமாகவும் உள்ள, லிங்க வடிவில் வழிபடு காலமே அறியப்பட முடியாத அளவு தொண்மையுடைய,ஆரியர்கள் வருகைக்கு பன்னெடுங்காலம் முன்னரே தமிழர் தொழுதேத்திய சிவம் என்னும் தத்துவம்,வடமொழியர்களின் ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேத மற்றும் அதற்குப் பின் வந்த உபநிடத காலத்தாலெயே ஏற்றம் பெற்றது என்பது,குருடர்கள் யானையைத் தடவி விளக்கம் சொல்வதற்கொப்பானது.
டிஸ்கி 1: இதை எழுதுவதற்கான காரணம் பண்டைத் தமிழரின் கடவுட் தத்துவம் எவ்வளவு உயர்ந்தது ,தமிழரின் உயர்ந்த சிந்தனை வளம் எத்தகையது என்பதை இப்போதைய தலைமுறை இளையர்களுக்கும்,இன்றைய பட்டப்படிப்பாளர்களும் அறிய வேண்டும் என்ற காரணம் பற்றியே.இன்றைய பிராமணர்கள் என்றறியப்படும் வகுப்பினரின் மேல் எனக்கு எந்தவித முன்கருத்தோ,துவேஷமோ இல்லை.
டிஸ்கி 2: இன்றைய தமிழகத்தின் 'திராவிட' அரசியலும்,பண்டைத்தமிழரின் அன்பு நெறியும் முற்றிலும் இருவேறு திசையில் இருப்பன.பண்டைய தமிழரிலும் அந்தணர் என்னும் வகுப்போர் இருந்தனர்;அவர்கள் தமிழரின் ஒரு பிரிவினரே;அவர்களுக்கும் வடதிசையிலிருந்து வந்த ஆரியருக்கும்-அவர்கள் வந்தேறிய அக்காலத்தில்-ஏதும் தொடர்பிருக்கமுடியும் எனக் கருதுவதும் முட்டாள்தனமானது.தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ‘அந்தணர் என்போர் அறவோர்' எனவே குறிக்கிறார்,அந்தணர் என்போர் ஆரியர் என்று அல்ல !
-இன்னும் வரும்