சுட்ட பழம்... |
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
நூல்:மூதுரை
ஆசிரியர்:ஔவையார்
பாடல் எண்:1
பதம் பிரித்த பாடல்:
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கொல் என வேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
முக்கிய சொற்கள்:
நன்றி-உதவி,நன்றி
செய்தக்கால்- செய்வதால்,செய்யும் பொழுது
தருங்கொல்-திரும்பக் கிடைப்பது,தருவது
தளரா-சோர்வில்லாது
தெங்கு-தென்னை
தாள்-அடி
கே.பி.எஸ்...ஔவையாக |
கருத்து:
ஒருவருக்கு ஒரு உதவி செய்யும் போது,அந்த உதவிக்குக் கைம்மாறாக,பதிலாக,உதவி பெறுபவர் எப்போது திரும்ப உதவி செய்வார் என்ற எண்ணத்திலேயே,சந்தேகத்திலேயே நாம் அந்த உதவியை அவருக்குச் செய்யக் கூடாது; எப்போதும் நின்று,சோர்வில்லாது வளரும் தென்னை மரமானது,தன் வேர்களின் மூலம் தான் எடுத்துக் கொண்டு வளர்ந்த நீரை,தன்னுடைய தலை வழியாக இனிமையான இளநீராக தான் தருவதைப் போல,உதவி செய்ய வேண்டும்.
டிட் பிட்ஸ்:
தென்னை தளராது பிறருக்கு பயனாய் தன்னுடைய இருப்பை அமைத்துக் கொள்வதைப் போல,நாமும் பிறருக்கு உதவிகரமாய் வாழ வேண்டும் என்பது குறிப்பால் சொல்லும் பொருள்.
ஒருவற்கு என்ற சொல்,நற்குணமுடைய ஒருவருக்கு என்ற குறிப்பையும் தருகிறது;நற்குணம் என்பது பெற்ற உதவியை மறக்காதிருப்பதும்,செய்தவருக்கு உதவி தேவைப்படும் காலத்தில்,அவர் கேட்காத நிலையிலும் தானே முன்வந்து அவர்களுக்கு உதவி செய்வது என்பதும் குறிப்பால் விளக்கப்படுகிறது.
4 | 365
அருமை... பாராட்டுக்கள்...
ReplyDeleteநன்றி…
நன்றி தனபாலன்..
ReplyDeleteஓ! சூப்பர்!! “நாளொரு பாடல்” புது செக்ஷன். இப்பதான் பார்க்கிறேன். தொடருங்கள். நன்றி.
ReplyDeleteவாங்க மைனர்..ரொம்ப நாளாச்சு உங்களைப் பதிவுப் பக்கத்தில் பார்த்து..
Deleteதொடர்ந்து பார்த்து,படித்து கருத்து சொல்லுங்கள்..சும்மா வருகைக் கையொப்பம் வைக்கக் கூடாது,தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்டசபைக்குப் போவது மாதிரி !