MadrasPaper இதழில் கடந்த 52 வாரங்களாக நான் எழுதி வந்த உயிருக்கு நேர் தொடர் வரும் புதன்கிழமை வெளியாகப் போகும் இதழுடன் நிறைவடைகிறது. அதற்காக எழுதிய ஒரு நிறைவுரை இது.
கடைசிக் கட்டுரையை அலங்கரிப்பது யார், என்ன என்ற விவரங்களை இதழ் வெளிவருகின்ற புதன்கிழமையன்று வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
o O o
உயிருக்கு நேர் : ஒரு நிறைவுரை:
உயிருக்கு நேர் தொடரைத் திட்டமிட்டது சரியாக ஓராண்டுக்கு முன்னர். Madras Paper இதழின் ஆசிரியரும், எனது இனிய நண்பருமான திருமிகு.பா.இராகவன், எனது வரலாறு முக்கியம் தொடருக்குப் பின்னர் இன்னொரு தொடர் முயற்சி செய்யலாம் என்று சொல்லி, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழுக்கு மாபெரும் தொண்டு செய்த 52 தமிழறிஞர்களின் வாழ்வையும், ஆக்கங்களையும் ஆவணப்படுத்தும் தொடரைப் பற்றிய எண்ணத்தைச் சொன்னபோது, எனக்கு முதலில் சிறிது மலைப்பு ஏற்பட்டது. காரணம் இருநூறு ஆண்டுகளின் வரலாறு ஒழுங்காகக் கிடைக்குமா என்ற கவலை.
விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய போது, அந்தக் கவலை கூடியது. பின்னர் பல தமிழ்த் தளங்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் தொகுப்பு வரிசை நூல்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூல்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனங்களின் வெளியீட்டு நூல்கள் என்று பல தளங்களில் இருந்து செய்திகளைச் சேகரிக்க வேண்டியிருந்தது. ஒரு தமிழறிஞரின் வாழ்வையும், பங்களிப்பையும் பற்றிய சுருக்கமான கட்டுரையை ஆக்க, அந்த அறிஞரின் வரலாறையும், ஆக்கங்களையும் பற்றி அகன்று படித்தறிய வேண்டியிருந்தது. விக்கி தளங்கள் படைப்புகளின் பட்டியலுக்குப் பெருமளவு உதவினாலும், அவற்றைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. மயிலை சிவ.முத்து போன்ற சில அறிஞர்களைப் பற்றிய செய்திகள், நூல்கள் எதுவுமே கிடைக்கவில்லை. இந்த எல்லாப் பொருதங்களுக்கு இடையிலும் ஒவ்வொரு வாரமும் இந்தக் கட்டுரையை எழுதிய அனுபவம் எனக்கு அளித்த உளமகிழ்வை என்னால் சொல்லிப் புரியவைக்க முடியாது.
இன்று தமிழைப் படிக்கவும், தமிழறிஞர்களைப் பற்றிப் படிக்கவும் ஆர்வமிருக்கும் வாசகர்கள் குறைவு என்பதை அறிவேன். ஆனால் கடந்த இருநூறாண்டுகளில் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களின் வரலாற்றை எவராவது தேட முயன்றால், இந்தத் தொகுப்பு அவர்களுக்கு அளிக்கப்போகும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் எழுத்தில் சொல்லி விடமுடியாது. அப்படித் தேடும் ஒரே ஒரு வாசகருக்கு இந்தத் தொகுப்பு கிடைத்து அதை அவர் படித்தாலும் போதும், எனது வாழ்வு முழுமை பெறும். இந்தப் பணி என்னைப் பொறுத்தவரை ஒரு மகத்தான பணி. இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திய களத்தை அமைத்துக் கொடுத்த அருமை நண்பரும், எழுத்தாளருமான பா.ரா'வுக்கு என்றென்றும் நன்றி.
தெ.பொ.மீ, வா.செ.கு போன்ற சில கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் இத்தொடரில் விடுபட்டிருக்கிறார்கள்; டி.கே.சி கூட. இத்தொடரைத் திட்டமிட்ட போது, நான் வைத்துக் கொண்ட அளவுகோல், தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும் தனது ஆக்கங்களின் மூலம் அந்த அறிஞர்கள் அறித்த பங்களிப்பு என்ன என்பது. டிகேசி சிலம்புச்செல்வர்தான்; வட்டத்தொட்டி கண்ட மாபெரும் தமிழிலக்கிய இரசிகன்தான்; ஆனால் அவர் எழுதியளித்த ஆக்கங்கள் மொழிக்கு, இலக்கியத்துக்கு ஒப்பீட்டளவில் குறைவு; அதனாலேயே டி.கே.சி போன்றவர்களைத் தள்ள வேண்டியிருந்தது. வா.செ.கு'வும் தமிழறிஞர் என்பதை விட கல்வியாளர் என்ற வகையில் பொருந்துவதால் விடுபட்டார். தெ.பொ.மீ'யைத் தவறவிட்டிருக்கக் கூடாதுதான். ஆனால் 52 வாரங்கள், 52 அறிஞர்கள் என்ற திட்டவரையறை அளித்த கோடு அது. இந்தத் தொகுப்பு நூல் வடிவம் பெற்றால் அதில் தெ.பொ.மீயும் இருப்பார் என்ற ஒன்றைத்தான் இப்போது என்னால் சொல்ல முடிகிறது.
இத்தொகுப்பு நூலாகும் போது, அதன் விவரங்களை அளிக்கிறேன். ஒரே தொகுதியாக அதனைப் படிக்க விருப்புடன் இருக்கும் அத்தனை வாசகர்களுக்கும் எனது அன்புத் தழுவல்கள்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தமிழால் இணைவோம்; தமிழோடிணைவோம்.
வெல்க தமிழ்.
#உயிருக்குநேர்
No comments:
Post a Comment