தமிழ் இந்து பத்திரிகையில் அண்மையில் வந்த இந்தக் கட்டுரை நிறையச் சிந்திக்க வைத்தது.
அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, தன் மகளைப் பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்க வைத்தவர். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களும் பெற்ற மகளை எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்து தான் படித்த அரசுப் பள்ளியிலேயே சேர்த்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இன்றைய தமிழகத்தில் ஓரளவு படித்தவர்களாக இருப்பவர்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்து அறியும் போது அனைவரும் சொல்லி வைத்தாற் போல் ஆங்கில மொழி வழித் தனியார் பள்ளியில்தான் தத்தம் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.
எனது குழந்தையை தமிழ் வழிக் கல்வி வழியில்தான் படிக்கவைக்க வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன். இன்றைய சூழலில் தமிழ் வழிக் கல்வி எனில் அரசுப் பள்ளிகளைத் தவிர வேறு கதி இருப்பதாகத் தெரியவில்லை.
அவை ஏன் தரமற்றவையாகத் இன்றைய பெரும்பான்மை சமூகத்திற்குத் தோற்றம் தருகின்றன என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.
(நான் அரசு உதவி பெற்ற தமிழ் வழிக் கல்வி வழிதான் பணிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன்; கல்லூரியிலும் பின்னர் பட்டயக் கணக்காளருக்குப்(சிஏ) படிக்கையிலும் ஆங்கில வழியில் கற்ற எவரையும் விட எனது கல்விப் பயணம் சிறப்புடனும் பெருமையுடனும்தான் நடந்தேறியது. எனது தொழில் முறைக் கல்வியான பட்டயக் கணக்காளர் தேர்வில் மண்டல அளவில் தகுதி கூட என்னால் பெற முடிந்தது.